ஸ்ரீஷங்கர் கவிதைகள்

அங்கே

1
வீசும் கொண்டலின் ஸ்ருதியில் ஓர்ந்த
சோளக் கதிர்கள் அசைய
குறுக்கே
நீந்தி திசை கடக்கின்றன வண்ணத்திகள்
மாலைப்பனியின் விரல்கள்
அவன் உடுப்பை விலக்கி
உடலுள் ஆழ நுழைகின்றன
சுவாசத்தில் பச்சைமணம்
நீலச்சாம்பல் விதானத்தின்கீழ்
அமர்ந்திருக்க
வரப்பைப் போர்த்தியிருக்கின்றன புற்கள்
அதன் மேற்பரப்புத் தண்மையில்
தியானம் வாழ்கிறது
மெல்ல
எங்கிருந்தோ
ஒருவேளை
உலகின் புலனாகா விளிம்பின்
குரல் வழியா
எதன் ஆன்மாவிலிருந்து
தனியான அச் சடங்கிசை துலங்குகிறது
படர்ந்து விரிகிற
அதன்வழியே
சமன்பாடற்ற பாய்வொன்று நிலவி
ததும்புகிறது

2
தலைமாட்டிலிருந்து
சிறு புழுக்கத்தோடு வீசுகிற சணல் வாடையின்மேல்
படிகிறது
கீழப்படலின் முனகல்
தூர மலைத்தொடர்களின்கீழ் சலனிக்கும்
மரங்கள்
தம் உச்சி வரை கருமைகொண்டிருக்க
மிதக்கும் நிலவிலிருந்து உதிர்கிறது
ஓர் விசனம்
விரிகிற இரவு மலரின் இதழ்களை வருடுகிற
காற்றென
மெல்ல
சிலும்புகிறான் ஒருவன்
குளிர் தூண்டும்
ஏகாந்தத்தின் பாடல்
முடிவதாயில்லை

3
வேவு பார்ப்பதென ஊர்கிறது
விசும்பில் நிழலொன்று
உறைந்த குன்றுகளுக்கு அப்பால்
கலைகிற பிறை
வறண்ட உதடுகளை
காற்று ஒற்றிச் செல்ல
ஒருவேளை
ஆடுகளிள் மிழற்றும் ஒலிப்பு
அகண்ட நிலவெளி மத்தியில் அமர்ந்திருக்கிற
கொடாப்பு
கனிவுகொண்ட ஓர் ஆன்மா
அதன் கண்களிலிருந்து
தடுத்து நிறுத்தயியலாதவாறு மோனம் வழிகையில்
இரவுப் பறவையொன்றின் பாய்வு
அடியாழத்தில்
ஓர் மென்நடுக்கம் கிளைக்கிறது
அனைத்தையும்
விழுங்கியபடி

4
யதேச்சையாக
பளீரென்றிருந்த நீலத்துக்குக் கீழே
ஊர்கிற
மேகத்துண்டு ஒன்றைக் காணநேர்ந்தது
அப்போது
அதனருகே மிதந்துசெல்லும்
பறவையோடு
கடந்துவந்தவை பற்றிய
அவற்றின்
உரையாடலைக் கேட்கமுடிந்தது

5
அந்த முற்றத்தில்
வட்டமாக அமர்ந்திருக்கிறோம்
மெல்லிய இருள் நுழைய
குடிசைப்புற்களின் ஈரப்பதத்தை அறிந்திருந்தோம்
குதிரைவாலிச் சோறும் கருவாடும்
வெதுவெதுப்பில் மணந்து பரவுகின்றன
அப்போது
சிறார்களாகிய நாங்கள்
எங்களுக்குள்
சிறிதே நகைத்துக் கொள்கிறோம்
தூறல் தெறித்தது
அந்தியை முகர்ந்த கால்நடைகள்
ஊர் நுழைந்தன
இந்நேரம்
உதிர்கிற அம் மண்சுவரோரம்
குணப்படுத்த இயலா மலரொன்று
யாவற்றையும்
தலைநீட்டி பார்த்தபடி
நிற்க
காலங்களை
எரிகிற காண்டாவிளக்கின் சுடர்
அலைக்கிறது

6
கவையில் அமர்ந்து
தலை சுழற்றிக்கொண்டிருக்கும் ஓர் பறவையை
இவ்வேளை
யூகிக்கமுடிகிறது
தத்தி
அதன் கண்கள்மீது முத்தமிடுகிறேன்
மரங்கள் குளுமையில் திளைக்கின்றனவா
என்றொரு வினா
இலைகளில் அமர்ந்திருந்த துளிகள்
ஆவியாகியிருக்கவில்லை
குன்றுகள் நீலச்சுவரில் சாய்த்திருக்கின்றன
வயலோர மரத்தொட்டில்களுக்கு குழந்தைகள் அழைக்கின்றன
நதியெனப் பிரவகிக்கும்
சூளைப்புகை படர்ந்து கரைகிறது
சாட்சிக்கு
யாரையும் அழைக்கமுடியாது
மெளனப்பரப்பில்
வண்ணங்களின் தணிந்த குரல்
மரித்த வாசகங்கள்
தியானம் வழியும் ஓர் தொங்கல்
என் மொழி வளர்கிறது
நீர் லில்லிகள் படர்த்தும் நரகப் பனிப்பொழிவு
செல்லவேண்டிய இடம் என்று எதுவும் கொண்டிராததுபோல
ஓர் நடை
உதிரும் துளிகள் பெருகி
என் வாழ்நிலம்
மூழ்கும்

விடியலுக்கு முன்

புத்தம் மிளிரும் சாமந்திபோல
இருந்திருக்கலாம்
மெய்யெங்கும் நுழையும்
அதிகாலை மார்கழிப் பனியென
தனிமையான பாதையோர உறக்க விருப்பத்திற்கு
சிறுநிழலெனவும்
பிணைத்துக்கொண்ட உடல்
அகலாத
வேட்கைசூழ் விலங்காக
தெய்வதம் நிலவும் பாசுர அண்மையென
வளையிலிருந்து
சோம்பல் விடுத்தெழும் பிராணியின் நாவில்
முதல் உணவின் சுவையென
தாழிடாத கதவுச் சிறுவிலக்கத்தில் கசிகிற
வெளிச்சம்போலவும்
அது இருந்திருக்கலாம்
இப்படியே
பெருகும் நீட்சியை
ஒட்டடை படிந்த நிகழ் என்றோ
திரும்பிய காலத்தின் சுணக்கம் என்பதாகவோ
சட்டென
ஓர் காக்கை சொல்லிவிடலாம்

சிறுமி

கதவுகளுக்கு வெளியேயிருந்து ஓர் அழைப்பு
செவிமடுக்கையில்
மெல்ல
சாம்பார்நிறக்கோளம் என்ற
ஒலிப்பு
எழுந்து வருகிறேன்
மழைப்பருவ காலை அவிழத் தொடங்குகிறது
நிறங்கள் மெல்ல விழிக்கின்றன
அல்லது
துலக்கம்கொள்கிற நீர்வண்ணச் சித்திரவெளி
அதில்
தூர அமர்ந்திருக்கும் கற்திண்டின்மேல்
மௌனமாக
தன்னை இருத்திக்கொண்டிருக்கிறாள் ஓர் சிறுமி
அத் தோற்றம்
அலங்காரமா துயரா
சலசலக்கிற அருகாமை ஓடைக்கரையிலிருந்து
நாரையின் கரகரத்த சொல்
சிதற
கலங்கலாக
தவளைகள் எழும்பிக் கரைகின்றன
அவள்
முன்னே தெரிவதையா அல்லது
அப்பால்
சிருஷ்டிகரமாவதைப் பார்த்துக்கொண்டா
இருக்கிறாள்
கண் மலர்கள் இமைத்தபடி
நெடுங்காலமாக

ஸ்ரீஷங்கர்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பிறந்தவர். "பொயட்ரி" சிறுபத்திரிகையின் ஆசிரியர். தொலைவற்ற கடலின் குரல், திருமார்புவல்லி, துறைமுகங்களின் நகரம் என மூன்று கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன.

2 Comments

  1. யதேச்சையாக
    பளீரென்றிருந்த நீலத்துக்குக் கீழே
    ஊர்கிற
    மேகத்துண்டு ஒன்றைக் காணநேர்ந்தது
    அப்போது
    அதனருகே மிதந்துசெல்லும்
    பறவையோடு
    கடந்துவந்தவை பற்றிய
    அவற்றின்
    உரையாடலைக் கேட்கமுடிந்தது

    கவிதைகள் பெரும்பாலும் என்னை ஈர்ப்பவை சங்கரின் கவிதைகள் நன்றாக இருக்கின்றன எளிய வார்த்தைகளால் பல தளங்ங்களையும் உச்சங்களையும் தொட்டன சமீபத்தில் படித்த கவிதைகளில் உங்களுடையது மிகச் சிறப்பு நன்றி

உரையாடலுக்கு

Your email address will not be published.