/

நாவல் உருவாக்கம் : பி.கே.பாலகிருஷ்ணன்

தமிழில் : அழகிய மணவாளன்

குறிப்பு: இந்த கட்டுரையில் பயன்படுத்தப்படும் ‘மேதமை’ என்ற சொல்லுக்கு சமானமான ஆங்கிலச்சொல் மேற்கில் கலை சார்ந்த விவாதங்களில் பயன்படுத்தப்படும் ‘ஜீனியஸ் (Genius)’ என்ற கருதுகோள். ஜீனியஸ் என்பதை கலைஞனின் திறன், நிபுணத்துவம் போன்றவற்றிற்கெல்லாம் அப்பால் அவனில் இயல்பாகவே உள்ள படைப்பூக்கம் (Creative Giftedness) என்று வரையறுக்கலாம். 

இந்தியாவில் ‘நாவல்’ இன்னும் அவ்வளவாக வளர்ச்சியடையாத ஒரு துறை. நம் பிராந்திய மொழிகளில் நல்ல நாவலாசிரியர்களும், நல்ல நாவல்களும் இல்லவே இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் உலகத்தரம் வாய்ந்த முதன்மையான நாவலாசிரியர்களும், முதன்மையான நாவல்களும் நம்மிடம் இல்லை. இலக்கியம் கையாளும் நுட்பமான உணர்வுநிலைகளை, இலக்கியத்தின் கதைத்தொழில்நுட்பத்தை உதாரணங்களுடன் விளக்கவேண்டும் என்றால் நாம் மேற்கத்திய இலக்கியத்தைத்தான் நாட வேண்டும், அதுதான் நமக்கு ஒரே வழி. ஆனால் மேற்கத்திய இலக்கியம் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு உள்ள மொழிசார்ந்த தடையால் அணுக முடியாததாக இருக்கிறது. இவற்றிற்கெல்லாம் விதிவிலக்கான இந்திய நாவல் என்ற நிலையில்தான் ஆரோக்கிய நிகேதனம் நாவலை நான் அணுகுகிறேன்.

நல்ல கலைப்படைப்பு நம்மை ஈர்ப்பதற்கு முக்கியமான காரணம் அதன் மறைபிரதிதான். மறைபிரதி என்றால் என்ன என்பதை சுருக்கமாக சொல்ல முடியாது. விரிவாகவும் விளக்க முடியாது. அது நம்மால் எளிதாக வரையறுத்துவிட முடியாத மிக நுட்பமான ஒரு அனுபவம். வேண்டுமென்றால் ‘என்றென்றைக்குமான விளங்கிக்கொள்ளமுடியாமை’ என்று நாம் அதற்கு பெயரிடலாம். சிறந்த சிற்பமோ, ஓவியமோ தன் ஒட்டுமொத்தமான அழகையும் உள்ளார்ந்த அர்த்தங்களையும் முழுமையாக ஒரே காட்சியில் யாருக்கும் வெளிப்படுத்துவதில்லை அல்லவா? நல்ல கலைப்படைப்பு என்பது நுட்பங்களின், அழகுகளின், அர்த்தங்களின் அட்சயபாத்திரம். நூற்றாண்டுகளாக கலைப்படைப்பின் வசீகரம் அதே நுண்மையுடன் நிலைநிற்கிறது. ஒரே பார்வையாளன் ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அவன் புத்தம் புதியது என உணர்வெழுச்சி அடைவான். ஏறக்குறைய நம்மில் பலருக்கும் பரிச்சயமான உதாரணம் இசை கேட்கும் அனுபவம்.

மொழியை ஊடகமாகக்கொண்ட இலக்கியத்தின் நிலைநிற்கும் ஆற்றல், நுட்பமான மறைபிரதிகளை உருவாக்கும் திறன் போன்றவற்றை சிற்பம், ஓவியம், இசை முதலான மற்ற கலைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அந்த அம்சங்களில் (நிலைநிற்கும் ஆற்றல், மறைபிரதி) இலக்கியம் தரத்தில் குறைந்தது என்றுதான் சொல்லவேண்டும். அபூர்வமாகத்தான் இலக்கியப்படைப்பின் வெற்றி மற்ற கலைப்படைப்புகளின் வெற்றிக்கு நிகராக நிற்கமுடிகிறது. அதனால் நல்ல இலக்கியம் என்பது மனிதனின் ஒட்டுமொத்த கலைப்படைப்புகளின் வரிசையில் மிகப்பெரிய வெற்றியாகவும் ஆகிவிடுகிறது. ‘இதிகாசங்கள்’ மனிதனின் கலாபூர்வமான சாதனைகள். சாதாரணமாக, இலக்கியம் அதிகமும் வெற்றியடைவது கவிதையில்தான். ஆனால், மற்ற இலக்கிய வடிவங்களைவிட சமகால சமூகத்தை வசீகரிக்கும் ஆற்றல் கொண்டது நாவல்தான், அரசியல்ரீதியான ஜனநாயகம் மட்டுமல்ல கலாசார ரீதியான ஜனநாயகத்தின் யுகமான இன்று இலக்கியப்படைப்பு என்றால் அது ஒட்டுமொத்தமாக நாவல்தான். ஆனால் கலையை இயக்கும் பொதுவான விதிகளை வைத்துப்பார்த்தால் மற்ற இலக்கிய வடிவங்களைவிட அதிகமான நெருக்கடிகள் நாவலுக்கு இருக்கின்றன. (சமகால புகழ், விற்று பணமாக ஆகவேண்டிய நிர்பந்தம் போன்றவற்றை நான் நெருக்கடிகளின் பட்டியலில் சேர்க்கவில்லை.)

அருவமான ஒரு தரிசனத்திற்கு திட்டவட்டமான வடிவத்தை அளிக்கும் யத்தனம்தான் சிறந்த கலை. மின்னல் போல, ஒருமை கொண்ட ஒரு தரிசனத்தால் தூண்டப்பெறாத எந்தப் படைப்பும் சிறந்த கலைப்படைப்பாக ஆவதில்லை. நாவல் கையாளும் பரப்பு மிகப்பெரியது, அது வடிவமற்ற வடிவம் கொண்டது. அதனால், ஒருமைத்தன்மை கொண்ட தரிசனத்திற்கு முழுமையாக ஆட்பட முடியாதபடி நாவல் தனக்கே ஆன தடைகள் கொண்டது. மற்ற இலக்கிய வடிவங்களுக்கு எளிதாகக் கைகூடும் ஒருமையை நாவலில் அவ்வளவு எளிதில் கொண்டுவந்துவிடமுடியாது. ஒரு நாவல் பல மறைபிரதிகளை கொண்ட கலைப்படைப்பாக ஆகவோ அல்லது மீண்டும் மீண்டும் வாசிக்கும்படியான கலைரீதியான தகுதிக்கு உயரவோ பல தடைகளை கடக்க வேண்டும்.

இதை இன்னும் தெளிவாக விளக்க ஒரு எளிய விஷயத்தை எடுத்துக்கொள்வோம். கடந்த 6 நூற்றாண்டுகளாக உலக மொழிகளில் வெளிவந்த நாவல்கள் எண்ணிக்கையிலும், அளவிலும் மனிதன் மொழியை கையாளத் தொடங்கி இன்றுவரை படைத்த மற்ற இலக்கியப் படைப்புகளைக் காட்டிலும் பல மடங்கு அதிகம். ஆனால் செவ்வியல் தகுதியை அடைந்த இலக்கியப்படைப்புகளின் வரிசையில் நாவல்கள் எண்ணிக்கையில் மிகமிகக்குறைவுதான். அதற்காக நாவலாசிரியர்கள் மற்ற இலக்கிய வடிவங்களில் புழங்கிய கலைஞர்களைவிட மேதமை குறைந்தவர்கள் என்று சொல்லமுடியுமா என்ன? சாமானிய தளத்தில் ஒட்டுமொத்தமான ஏற்பை எளிதில் அடைய சாத்தியமான நாவலுக்கு அந்தக் காரணத்தினாலேயே நல்ல கலைப்படைப்பு என்ற சிறப்புத்தகுதியை அடைவது அவ்வளவு கஷ்டமானதாக ஆகிவிடுகிறது.

அசாதாரணமான மேதமை கொண்ட கலைஞர்களின் தொடர்ச்சியான, பிரக்ஞாபூர்வமான முயற்சியால் அபூர்வமாக நல்ல கலைப்படைப்பாக ஆக தகுதிகொண்ட நாவல்களை எழுத முடிந்திருக்கிறது. இம்மாதிரியான நல்ல நாவல்கள் வடிவத்தில், இயல்பில், கதைத்தொழில்நுட்பத்தில், சிக்கல்தன்மையில் இதிகாசங்களுக்கு நிகரானவை. ‘போரும் அமைதியும்’ அதை நாவல் என்று சொல்வதைவிட இதிகாசம் என்றுதான் சொல்லவேண்டும். நாவலாசிரியனின் இயல்பான மேதமை, அவனது கதைத்தொழில்நுட்ப பயிற்சி இரண்டிற்குமான விகிதம் பற்றி, அவை இரண்டிற்குமான தொடர்பைப் பற்றி அறுதியாக வரையறுத்து ஒன்றும் சொல்லிவிடமுடியாது. காரணம், நாவலின் சிக்கல்தன்மைதான்.

தல்ஸ்தோய்

எந்தக் கலைஞனுக்கும் முக்கியமான மூலதனம் என்பது அவனுக்கு இயல்பாகவே இருக்கும் மேதமை. அது அவனுக்கு பிறப்பிலேயே வாய்ப்பது. அவ்வாறு பிறப்பிலேயே மேதமை கொண்ட ஒருவன் கதைத்தொழில்நுட்பத்தில் தேர்ச்சியை அடையும்போதுதான் நல்ல கலைப்படைப்பு உருவாகிறது. எந்த கலைப்படைப்பையும் அதை படைத்த கலைஞனின் இயல்பான மேதமை, கதைத்தொழில்நுட்ப பயிற்சி இவை இரண்டின் விளைவு என்று சொல்லிவிடலாம். பெரும்பாலான கலைஞர்களின் வாழ்க்கையில் இந்த இரண்டு அம்சங்களும் பிரிக்க முடியாதபடி ஒன்றாகத்தான் இயங்குகின்றன. ஆனால் இவை இரண்டையும் ஆராய்ந்து பார்த்தால் அவை தனி இயல்புகளைக் கொண்ட இரண்டு தனித்தனி விஷயங்கள் என்று தெரியவரும்.

இயல்பான மேதமை இல்லாத ஒருவன் கலைப்படைப்பாக்கத்தில் எப்படி இயங்கினாலும் ஒரு பலனும் கிடைப்பதில்லை. சிற்பம், இசை போன்ற கலைகளில் இயல்பான மேதைமை இல்லாத ஒருவனால் நுழையக்கூட முடியாது, அவனுக்கு அவை எப்போதும் அடைத்தே கிடக்கும் கதவைப்போல. ஆனால் இலக்கியத்தில் மட்டும் யார் வேண்டுமானாலும் நுழையலாம், கதவு திறந்தே இருக்கிறது. அவ்வாறு இயல்பான மேதமை இல்லாதவர்கள் தங்கள் அறிவுத்தகுதி, உழைக்கும் பழக்கம், சாமர்த்தியம் போன்றவற்றால் ஒரு எல்லைவரை இலக்கியத்தில் வெற்றிபெறவும் முடியும். பொதுவாகவே இலக்கியத்திற்கு உள்ள ‘எல்லாவருக்கும் திறந்தே இருக்கும் கதவு’ என்ற பலவீனம் வெளிப்படுவது நாவல் என்ற வடிவத்தில்தான். ஒரு கலைஞனின் இயல்பான மேதமை, அவனது கதைத்தொழில்நுட்ப தேர்ச்சி (Craftsmanship) இவை இரண்டின் அடிப்படையில் நாவல் என்ற இலக்கிய வடிவத்தை அணுகினால் அதன் பல தனித்தன்மைகளை நம்மால் ஆராயமுடியும்.

ஒரு கலைஞனின் இயல்பான மேதமையை நம்மால் வரையறுத்துவிட முடியாது. எனினும் பல கலைஞர்களின் இயல்பான மேதமை பற்றிய சில தெளிவில்லாத புரிதல்கள் நம் மனதில் இருக்கிறது. உதாரணமாக, கவிஞன் அல்லது நாடக ஆசிரியரின் இயல்பான மேதமை பற்றி (திட்டவட்டமாக இல்லை என்றாலும்) பிழையில்லாத சில புரிதல்கள் நமக்கு இருக்கிறது. இல்லை என்றாலும் புரிதலை எளிதாக உருவாக்க முடியும்.

ஆனால் நாவலைப் பொறுத்தவரை நாவலாசிரியரின் இயல்பான மேதைமை சார்ந்த எந்தப் புரிதலும் நமக்கு இல்லை, அவ்வாறான புரிதலை நம்மால் உருவாக்கிக் கொள்ளவும் முடியாது. யோசித்துப்பார்த்தால், எல்லா கலைவடிவங்களிலும் மேதைமை கொண்ட ஒருவர்தான் நாவலாசிரியர் என்று தோன்றும். நாவல் என்பது சிற்பம், நாடகம், ஓவியம், கவிதை என எல்லா கலைகளின் சாத்தியங்களையும் கையாளும் ஒரு இலக்கியவடிவம்தான். அப்படிப் பார்த்தால், நாவலாசிரியர் என்பவர் எல்லா கலைகளிலும் மேதமை கொண்ட ஒரு சகலகலா வல்லவன்தான் என்ற முடிவுக்கு சென்று சேருவோம். இந்த முடிவு பிழையானது என்று நமக்கே தெரியும். இது ஒரு இக்கட்டான நிலை. நாவலாசிரியரின் இயல்பான மேதைமை பற்றி, அந்த மேதைமையின் இயல்புகளைப் பற்றி நம்மால் ஒன்றுமே நிர்ணயிக்க முடியாது. இந்த நிலைக்குக் காரணம் நாவலின் வடிவமற்ற வடிவமும், நாவல் கட்டுப்பட்டே ஆகவேண்டிய யதார்த்தவாத அழகியலின் நிபந்தனைகளும்தான். அதனால், ஒரு இலக்கிய வாசகனுக்கு நாவலாசிரியனின் இயல்பான மேதைமையை விட, கதைத்தொழில்நுட்பத்தில் பயிற்சி மட்டும்தான் முக்கியமானது என்று தோன்றுகிறது. நுண்ணுணர்வும், தன்முனைப்பும், அறிவுத்தகுதியும் உள்ள ஒருவர் கதைத்தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டு அதில் பயிற்சியும் இருந்தால் மிக எளிதாக நாவல் எனும் இலக்கிய வடிவத்தை கையாளலாம் என்றும், வெற்றிகரமான நாவலை எளிதாக எழுதிவிடலாம் என்றும் தோன்றிவிடுகிறது.

ஒரு நாவலாசிரியன் அவன் மனதில் இருக்கும் கருவிற்கு ஒரு வடிவத்தை அளிப்பது முதல் பிழைகளைத் திருத்தி நாவல் வெளிவருவது வரை உள்ள அவனது படைப்புச்செயல்பாட்டை ஆராய்ந்தால் இலக்கியத்தில் கதைத்தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை தெளிவாகக் காணமுடியும். நமக்கு கிடைக்கும் நாவல்களில் பெரும்பாலானவை பணம், புகழ் என்ற இரண்டு வலுவான தூண்டுதல்களால், நுண்ணுணர்வுள்ள திறமையான நபர்கள் உருவாக்கும் கதைத்தொழில்நுட்பத்தின் வெளிப்பாடுகள் என்றுதான் சொல்லமுடியும். (இந்த காரணத்தால் அவை நல்ல நாவல்களாக இருக்க வாய்ப்பில்லை என்று நான் சொல்லவில்லை).

ஆனால், இயல்பான மேதமை கொண்ட கலைஞன் ஒருவனின் மூச்சை சுவாசிக்கும் நாவல் மற்ற கலை வடிவங்களைப்போல பல அர்த்தங்களுக்கும் மறைபிரதிகளுக்கும் தகுதிகொண்ட ஒரு கலைப்படைப்பாக ஆகிவிடுகிறது. இயல்பான மேதைமை கொண்ட கலைஞனால் வெற்றிகரமாக படைக்கப்பட்ட நாவல்கள் தனித்தன்மையானவை. அதனால், மற்ற நாவல்களுடன் ஒப்பிடுவதைவிட அவற்றை இதிகாசங்களுடன் மட்டும்தான் ஒப்பிடமுடியும். ஆரோக்கிய நிகேதனம் நாவல் பற்றிய நமது ஆய்வில் அந்த நாவலாசிரியரின் இயல்பான மேதைமை, கதைத்தொழில்நுட்ப பயிற்சி இவற்றுடன் தொடர்புடைய சில அடிப்படையான கருத்துக்களை நாம் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டும்.

கலைஞனின் அகம் சார்ந்த தூண்டுதலால் படைக்கப்படும் நாவல் கண்டிப்பாக வெற்றி பெற்ற நாவலாக ஆக வேண்டும் என்ற அவசியம் எதுவும் இல்லை. மகத்துவத்தின் பொன் இழைகள் பாதி மட்டுமே மின்னக்கூடிய, நாவல் என்ற ஒட்டுமொத்த வடிவத்தில் தோல்வியடைந்த பல நாவல்களை நாம் உதாரணங்களாகக் காட்ட முடியும். மேதைமை கொண்ட நாவல்கள் பாதி வெற்றிபெற்ற குறைப்பிரசவங்களாக ஆனதற்கான காரணம் நாவலுக்குத் தேவையான கதைத்தொழில்நுட்பத் தேர்ச்சியை அவை அடையவில்லை என்பதுதான். இயல்பான மேதமையும், ஆற்றலும் கொண்ட ஒரு கலைமனதை அசாதாரணமான கதைத்தொழில்நுட்ப பயிற்சியால் மட்டும்தான் நாவலின் சிக்கலான வடிவத்திற்கு பழக்க முடியும். இலக்கியத்தின் கதைத்தொழில்நுட்ப பயிற்சியும் இசை, சிற்பம் போன்ற மற்ற கலைகளின் தொழில்நுட்ப பயிற்சிக்கும் இடையே பல வித்தியாசங்கள் இருக்கின்றன.

எல்லா கலைஞர்களாலும் நாவலின் தனித்தன்மை கொண்ட கதைத்தொழில்நுட்பத்தில் தேர்ச்சி அடைய முடிவதில்லை. அப்படி வெற்றிகரமாக கதைத்தொழில்நுட்பத்தில் தேர்ச்சி அடைந்த கலைஞர்கள் தாங்கள் எழுதிய எல்லா நாவலிலும் அவ்வாறு தேர்ச்சி அடைவார்கள் என்று சொல்ல முடியாது. கதைத்தொழில்நுட்பத்தில் நல்ல தேர்ச்சியை அடையும்போது மட்டும்தான் மகத்தான கலைகளின் வரிசையில் இடம்பெறக்கூடிய நாவல் பிறக்கிறது. அம்மாதிரியான நாவல்களின் தனித்தன்மை என்பது மறைபிரதி மட்டுமல்ல. அந்த நாவல்கள் வடிவம் போன்ற கதைத்தொழில்நுட்பத்தில் எல்லா அம்சங்களிலும் முழுமையை நெருங்கியிருக்கும். அதாவது, அந்த நாவலில் உள்ள வெவ்வேறான உணர்வுநிலைகளும் வடிவமும் ஒத்திசைந்து ஒரு ஒருமையை அவற்றில் காணமுடியும் என்று சொல்லலாம்.pride வேறுவேறு இயல்புகளைக்கொண்ட மேடம் போவரி (Madame Bovary), பிரைட் அன்ட் ப்ரஜுடீஸ் (Pride and Prejudice), போரும் அமைதியும், கரமசோவ் சகோதரர்கள் இவையெல்லாம் ஒரே போல சிறந்த நாவல்களாக ஆனதற்கான ரகசியம் இதுதான்.

இயல்பான மேதைமை, கதைத்தொழில்நுட்பத்தில் தேர்ச்சி இவை இரண்டிற்குமான அபூர்வமான இணைப்பு கைகூடி வருவது இரண்டு சந்தர்ப்பங்களில் மட்டும்தான். ஒவ்வொரு கலைஞனின் ஆளுமையும் மற்ற ஆளுமைகளைவிட தனித்தன்மையானது, வேறுபட்டது. தன் கலையின் தனித்தன்மைகள் பற்றி, அதன் எல்லைகள் பற்றி தானே சுயமாக அறிவது என்பது கலைஞனின் வாழ்க்கையில் மிகமிக முக்கியமான சம்பவம். ஒரு கலைஞனுக்கு இயல்பாகவே கைகூடும் சில விஷயங்கள் இருக்கின்றன. அவனது கலைப்பயணத்தை கட்டுப்படுத்தும் சில கடினமான எல்லைகளும் இருக்கின்றன. தனக்கு இயல்பாக கைகூடும் அம்சங்கள், தன் எல்லைகள் இவை இரண்டையும் கடக்கும் கலைஞன் எல்லை மீறுகிறான். நாவலாசிரியர்கள் விஷயத்தில் இந்த எல்லைமீறல் என்ற அம்சம் விசேஷமான முக்கியத்துவம் கொண்டது. ‘பிரைட் அன்ட் ப்ரிஜுடீஸ்’ நாவலை பல ஆண்டுகள் கையில் வைத்து கிட்டத்தட்ட சிற்பம்போல செதுக்கிய ஜேன் ஆஸ்டினும், மேடம் போவாரி நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் தேய்த்து தேய்த்து பளபளக்க வைத்த ஃப்ளோபர்ட்டும் (Gustave Flaubert), போரும் அமைதியும் நாவலுக்கு ஐந்து வருடம் தவமிருந்த தல்ஸ்தோயும் தங்கள் மேதமையின் ஆற்றலையும் பலவீனங்களையும் தெளிவாகவே கண்டவர்கள்.

ஜேன் ஆஸ்டின்

சாமானிய தளத்தில் எளிதாகப் பிடிகிடைக்கக்கூடிய ஒரு விஷயத்தை கலைப்படைப்பில் கையாளும்போது சிக்கலான விஷயமாக ஆகிவிடுகிறது. அதற்கு என்ன காரணம்? கலையும் அந்த விஷயமும் கொண்ட விசேஷமான இணைப்பு காரணமாக இருக்கலாம். அந்நிலையில் கலைஞன் பரிதாபத்திற்கு உரியவனாக ஆகிவிடுகிறான். எல்லையில்லாத பொறுமையுடன், குன்றாத ஆவேசத்துடன், முழுமைக்கு குறைந்த ஒன்றுடனும் திருப்தியடைவதில்லை என்ற பிடிவாதத்துடன், கலைஞன், தன் நாவலிலேயே தவம் இருக்கிறான். அவனைப் பொறுத்தவரை நாவல் பிரசுரமாவது, அது சார்ந்த நெருக்கடிகள் போன்றவையெல்லாம் பிரச்னைகளே அல்ல. அவனது பதற்றம் என்பது கலையில் தன் ஆன்மா முழுமையாக வெளிப்பட வேண்டும், அதற்கான தடைகள் இவற்றைப்பற்றிதான். தன் ஆன்மா கலையில் வெளிப்பட்டுவிட்டால் கிடைக்கும் மனநிறைவு மட்டும்தான் அவனது ஒரே எதிர்பார்ப்பு. நாவல் உருவாக்கம் என்ற இந்த அபூர்வமான செயல்பாட்டிற்கு உதாரணமாக ஆகக்கூடிய ஒரே ஒரு இந்திய நாவல் ‘ஆரோக்கிய நிகேதனம்’ மட்டும்தான். பல அர்த்த அடுக்குகளும் மறைபிரதிகளும் கொண்ட, கொஞ்சம்கூட குன்றாத கம்பீரம் நிறைந்த, தன் எல்லைக்குள் நின்றுகொண்டு அதன் ஒவ்வொரு பகுதியிலும் வடிவ முழுமை கொண்ட நாவல்தான் ஆரோக்கிய நிகேதனம். இப்படிச் சொல்வது கொஞ்சம் மிகையானதுதான். அதை நான் அறிவேன்.

ஆரோக்கிய நிகேதனம் நாவலின் கரு அந்த நாவலாசிரியருக்கு எப்போது எந்த வடிவத்தில் தோன்றியது என்று நமக்குத் தெரியாது. விளைவை எதிர்பாராத செயல் வழியாக அல்லது ஞானயோகம் வழியாக ஆன்மீகமான முழுமையை அடைய முடியும் என்பது நம் மரபில் உள்ள தரிசனம். இந்த ஆன்மீகமான முழுமை சார்ந்த தரிசனத்தை ஒரு பெரிய ஆளுமையின் வாழ்க்கை வழியாக சித்தரிக்கவேண்டும் என்ற உந்துதல் நாவலாசிரியருக்கு இருந்திருக்கலாம். வேண்டுமென்றால் அந்த உந்துதலை இந்த நாவலின் விதை என்று சொல்லலாம்.

வேறு ஒரு வகையில் பார்த்தால் நாவலாசிரியருக்கு கண்டுகொள்ளமுடியாதபடி மாறிக்கொண்டிருக்கும் கிராமத்தின் வாழ்க்கையை கலையில் கொண்டுவரவேண்டும் என்று தோன்றியிருக்கலாம். இந்த நாவல் விதைக்கப்பட்டது எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், ஜீவன் மஷாயின் சித்திரத்தை எழுத ஆரம்பித்தவுடன் ஒரு புதிய போதமும், ஆவேசமும், இதுவரை இல்லாத நிறைவின்மையும் நாவலாசிரியரை பீடித்துவிட்டது என்பது உறுதி. ‘ஆரோக்கிய நிகேதனம்’ என்பது கொஞ்சம்கூட ஈர்ப்பை ஏற்படுத்தாத சாதாரண தலைப்பு. அதிலிருந்து தொடங்கி நாவலின் சாவதானமான அறிமுகப்பகுதி முதல் மஷாய் சமாதியாகும் இறுதிகட்டம் வரை ஒவ்வொரு தருணத்திலும் முழுக்கவனம் செலுத்தி எழுதப்பட்ட நாவல்தான் இன்று நாம் வாசிக்கும் ஆரோக்கிய நிகேதனம். நாவலாசிரியரின் பிரத்யேகமான கவனமும், அவரது சிந்தையும் தொடாத ஒரு வார்த்தைகூட இந்த நாவலில் இல்லை என்று மலையாள மொழிபெயர்ப்பை மட்டுமே கவனமாக வாசித்த எனக்கு தோன்றுகிறது. தாராசங்கர் பானர்ஜியின் கைவினைத்திறனுக்கு நிகரான நுண்மையான அதேசமயம் விமர்சனாபூர்வமான கதைத்தொழில்நுட்பத் தேர்ச்சியை நாவல் என்ற இலக்கிய வடிவத்தில் ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக ஆராய வேண்டும்.

முன்பே சுட்டிக்காட்ட மட்டுமே செய்த ஒரு கருத்தை இன்னும் கொஞ்சம் தெளிவாக்கினால் நான் சொல்லவரும் விஷயம் மேலும் புரிந்துகொள்ளும்படியாக ஆகும் என நினைக்கிறேன். இயல்பான மேதமை கொண்ட ஒரு நாவலாசிரியரைப் பொறுத்தவரை அவரது எந்த நாவலாக இருந்தாலும் அந்த நாவலின் முதல் வடிவம் (First- draft) மிக முக்கியமானது. இந்த முதல்-வடிவம் நாம் வாசிக்கும் இறுதி வடிவத்தின் தூரத்து சாயல்கூட இல்லாத ஒன்றாக இருக்கலாம். அந்த முதல் வடிவம் பெரும்பாலும் வடிவமற்றதாக, தன்னிச்சையானதாக இருக்கும். ஆனால், நாவலாசிரியருக்கு இயல்பான மேதமை உண்டு என்றால் நாவல் தொண்ணூறு சதவிகிதம் தயாராகிவிட்டது எனலாம். படைப்புச் செயல்பாட்டில் இயல்பான மேதமை என்பது பிரசவ வலி எடுப்பது போல. அது வெற்றிகரமானதாக இருந்தால் பின் கதைத்தொழில்நுட்பப் பயிற்சி என்ற தவம் ஆரம்பிக்கிறது. நாவலின் அத்தியாயங்களை மாற்றி எழுதலாம். சம்பவங்களின் வரிசையை, இணைப்பை பலமுறை மாற்றலாம். ஒரு நாவலாசிரியர் தான் கையாளும் நாவலின் வடிவம் பற்றிய நல்ல அறிதலுடன் எழுதத்தொடங்கினால் (அந்த நாவல் ஆசிரியரின் கலைமனதிற்கு இணக்கமானதாக இருத்தால்) அவருக்கு அந்த படைப்பின் முழுமை மட்டுமே மனதில் இருக்கும். அதை இலக்காகக்கொண்டு கடினமாக உழைக்க ஆரம்பிப்பார்.

ஒரு மகத்தான நாவல் உருவாக்கம் என்பது பிரசவத்திலிருந்து வெளிவரும் குழந்தை போல என்பதைவிட முட்டையிலிருந்து கோழிக்குஞ்சு வெளிவருவது போல என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். முதல் வடிவம் என்ற முட்டையின் மேல் நீண்ட காலம் அடைகாத்துதான் நாவலாசிரியர் நாவலின் இறுதி வடிவத்தை அடைகிறார். வாசகனாக நாம் காணும் நாவலின் இறுதி வடிவத்தில் நாவலாசிரியரின் இயல்பான மேதமையை நேரடியாக காணமுடியாது. அந்த இயல்பான மேதமை என்பது மரத்தின் வேர் போல, கிளைகளைப் போல. நன்கு திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்ட கதைத்தொழில்நுட்ப தேர்ச்சி என்ற இலைப்பரப்பால் அந்தக் கிளைகள் மூடி மறைக்கப்பட்டுவிடும். பிழைகள் நீக்கப்பட்ட நல்ல நாவலை மேலோட்டமாகப் பார்த்தால், அதில் 75 சதவிகிதம் போதபூர்வமான உழைப்பு தேவைப்படும் கதைத்தொழில்நுட்ப தேர்ச்சியைத்தான் நம்மால் காணமுடியும். கதைத்தொழில்நுட்பத்தை அறியாத, அதை முயற்சித்துப் பார்க்கும் ஆற்றல் இல்லாத நாவலாசிரியரால் (அவருக்கு இயல்பான மேதமை உண்டு என்றாலும்) நல்ல நாவலை எழுத முடியாது. அவர் எழுதிய நாவல்களுக்கு வேறு ஏதாவது சிறப்பம்சங்கள் இருக்கலாம்.

சரி, ஆரோக்கிய நிகேதனம் நாவலுக்கு வருவோம். இந்த நாவலில் கலையின் அடிப்படைக் கருதுகோள் ஒன்றை தெளிவாகவே காணமுடியும். ஆரோக்கிய நிகேதனம் நாவல் முக்கியமாக ஜீவன் மஷாய் என்ற வைத்தியரின் வாழ்க்கை. மேலும் இந்த நாவல் இந்தியாவின் கிராமம் ஒன்று மாற்றத்திற்கு உள்ளாவதன் உயிர்துடிப்புள்ள சித்திரத்தை காட்டுவதால் ஒரு இதிகாசமும்கூட. இலக்கிய வாசகனின் தொடர்ச்சியான கவனத்தைப் பொறுத்து இந்த நாவல் இன்னும் பல அர்த்தங்களை அளிக்க முடியும். இப்படி எல்லா விஷயங்களையும் நாவலாசிரியர் ஒரே வீச்சில் எப்படி சாதித்தார் என்று கேள்விக்கு அவரது இயல்பான படைப்பூக்கம் முழுமையாக தூண்டப்பட்ட நிலையில் படைக்கப்பட்ட நாவல் இது என்பதுதான் பதில். இந்த நாவலுடன் தொடர்புடைய, நாவலாசிரியர் விசேஷமாக ஆர்வம்காட்டிய மற்றொரு கலை சார்ந்த கருதுகோளை அடுத்ததாக பார்ப்போம். வியக்கவைக்கும் போதத்துடன் தாராசங்கர் பானர்ஜி அந்தக் கருதுகோளை நாவலில் பயன்படுத்தியிருக்கிறார்.

ஒரு இலக்கியப் படைப்பில் சமூகத்தை சித்தரிக்க ஒரே நல்ல வழிமுறை – ஒரு தனிமனிதனை சித்தரிக்க வேண்டும். சமூகத்தை அப்படியே மறந்துவிட வேண்டும். தன் நாவலில் ஒரு சமூகத்தை சித்தரிக்க வேண்டும் என்ற பிரக்ஞையும், ஆவலும் நாவலாசிரியரை பாதிக்க ஆரம்பித்தால் அந்த நாவலில் சித்தரிக்கப்படும் தனிமனிதன் யதார்த்தமே அற்றவனாக இருப்பான். ஒரு நாவலில் தனிமனிதனின் சித்திரம் எவ்வளவுக்கு எவ்வளவு யதார்த்தமற்றதாக ஆகிறதோ, அந்த நாவலின் சமூகத்தை சித்தரிக்கும் திறன் அவ்வளவுக்கு அவ்வளவு குறைகிறது.

சமூகத்தின் படிநிலைகள், யானை, குதிரை என அனைத்தையும் சித்தரிக்கும் திறன் கொண்டவர்கள் என தங்களை சொல்லிக்கொள்ளும் நாவலாசிரியர்களால் மேலே சொன்ன கருதுகோளை இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு தனிமனிதனை உயிர்ப்புள்ள ஒருவனாக சித்தரிக்க வேண்டும் என்றால் மற்ற நபர்களிலிருந்து அவனை பிரிக்கும் தனியாளுமை சார்ந்த கூறுகளை அழுத்திக்காட்ட வேண்டும். அதாவது, சமூகத்திலிருந்து அந்தத் தனிமனிதனை பிரித்துக்காட்டும் தனித்தன்மைகள் இருக்க வேண்டும். ஒரு நாவலில் சமூகத்திலிருந்து தனிமனிதனை வேறுபடுத்தும் அம்சங்கள் எவ்வளவுதூரம் உயிர்த்துடிப்பாக இருக்கிறதோ அவ்வளவுதூரம் தனிமனிதனில் பிரதிபலிக்கும் சமூகம் துலங்கிவரும். ஜீவன் மஷாய் உட்பட ஆரோக்கிய நிகேதனம் நாவலில் ஒவ்வொரு கதாபாத்திரமும் இந்த சாரம்சமான கருதுகோளை அறிந்த (அல்லது இயல்பாகவே கைகூடிய) ஒரு கலைஞனின் படைப்பு.

இந்த நாவலில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் மேற்கு வங்காளத்திலுள்ள ஒரு கிராமத்தில் குறிப்பிட்ட காலகட்டத்தில் உண்மையாகவே வாழ்ந்திருந்தவர்கள்தான் என்று நூறு சதவிகிதம் வாசகனை நம்ப வைக்கும் அளவுக்கு உண்மைத்தன்மை கொண்டவர்கள். ஒவ்வொரு கதாபாத்திரமும் ஜீவன் மஷாய் என்ற மையக்கதாபாத்திரத்தின் தனித்தன்மையை மெருகேற்றுபவர்கள், அதன் வழியாக தங்கள் சொந்த ஆளுமையின் எல்லைகளை தாங்களே உணர்ந்தவர்கள். மேலும், இந்த நாவலில் தனிமனிதர்களை சித்தரிப்பதில் உள்ள பிரத்யேகமான கவனம் இதை ஒரு இதிகாசமாகவும் ஆக்குகிறது. ஆரோக்கிய நிகேதனம் நாவல் மாற்றத்திற்கு உள்ளாகும் ஒரு இந்திய கிராமத்தின் இதிகாசமும்கூட. இந்த நாவலை இந்தியாவின் எந்த பகுதியில் இருக்கும் எந்த ஒரு கிராமமாகவும் கற்பனை செய்யலாம், அவ்வளவு வலுவானது அதன் சித்தரிப்பு.

அடுத்து, மேலே குறிப்பிட்ட விஷயத்துடன் தொடர்புடைய இன்னொரு தனித்தன்மையை பார்க்கலாம். அது கதாபாத்திரங்களின் நம்பகத்தன்மை தொடர்பானது. நுண்ணுணர்வுள்ள நாவலாசிரியருக்கு இந்த விஷயம் மிக இயல்பாகவே கைகூடிவரும். ஆனால், ஆரோக்கிய நிகேதனம் நாவல் போல முழுமையான அளவில் அதை சாதிக்கத் தொடர்ச்சியான கவனமும், கதைத்தொழில்நுட்பத்தில் நல்ல பயிற்சியும் கண்டிப்பாக வேண்டும். ஒரு நாவலின் முக்கியமான அம்சம் கதாபாத்திரங்களுக்கும் நாவலின் சித்திரிப்புமுறைக்குமான தொடர்புதான். பல சந்தர்ப்பங்களில் நாவலாசிரியர் நேராக நாவலுக்குள் வந்து ஆசிரியர் கூற்றாக கதாபாத்திரத்திரங்களின் நடத்தைகளுக்கான, செயல்பாடுகளுக்கான உள்ளார்ந்த காரணங்களை விளக்க ஆரம்பித்துவிடுவார். கற்பனைத்திறன் குறைந்த நாவலாசிரியர்கள் ஏறக்குறைய ஆசிரியரின் சொற்களிலேயே கதாபாத்திரங்களின் இயல்புகளை விவரித்து கதாபாத்திரங்களின் செயல்களுக்கு தாங்களே பொறுப்பேற்றுக்கொள்கிறார்கள்.

தாராசங்கர் பானர்ஜி

நல்ல நாவலாசிரியர்கள் கதாபாத்திரங்கள் தாங்களாகவே இயங்கும்படி செய்து அந்தக் கதாபாத்திரங்களின் உள்ளார்ந்த இயல்புகளைப் பொறுத்து அவர்களை வளர விடுகிறார்கள். கதாபாத்திரங்கள் நேரடியாக பங்கெடுக்க வேண்டிய நிகழ்வுகளின் வழியாக, கதாபாத்திரங்கள் தங்களுக்குள்ளான உரையாடல் வழியாக செயல்பட்டும், எதிர்வினை ஆற்றியும் ஆளுமையையும், நம்பகத்தன்மையையும், உயிர்த்துடிப்பையும் அடைந்துவிட்டிருப்பார்கள். இந்த நாவலில் ஒரு கதாபாத்திரம் கூட நாவலாசிரியரின் வக்காலத்துடன் நம்முன் வருவதில்லை. ஆரோக்கிய நிகேதனம் நாவலில் உள்ள சிறிதும், பெரிதுமான எல்லா கதாபாத்திரங்களும் உண்மைத்தன்மையுடன் தங்களுக்கென்று சொந்தமாக ஆளுமை கொண்டவர்கள். ஒரு நாவலில் தனிமனிதனை நுட்பமாக சித்தரிப்பது வழியாக சமூகத்தின் அசலான சித்திரத்தை உருவாக்க முடியும். அந்தச் சித்திரத்தை உருவாக்க நல்ல கதாபாத்திரங்களை உருவாக்கும் கற்பனைத்திறன் கொண்ட நாவலாசிரியரால் மட்டுமே முடியும். அதாவது, இயல்பான மேதமை கொண்ட கலைஞனின் தீவிரமான கதைத்தொழில்நுட்பத்தேர்ச்சி வழியாக மட்டுமே நல்ல கதாபாத்திரங்களை உருவாக்க முடியும் என்று சொல்லலாம். நம் மனதிற்கு நெருக்கமான, உணர்வுபூர்வமான ஒரு நாவல் என்ற அடிப்படையான நிலையை ‘ஆரோக்கிய நிகேதனம்’ அடைந்திருப்பதற்கான காரணம் சமூகத்திற்கு பதிலாக தனிமனிதர்களை மையமாகக்கொண்டது என்பதால்தான். இந்த நாவல் தனிமனிதர்களை மையமாகக்கொண்டதால்தான் சமூகத்தின் ஒட்டுமொத்தமான சித்திரத்தையும் வெற்றிகரமாக அளிக்க முடிந்திருக்கிறது.

ஒரு நாவலாசிரியரின் கதைத்தொழில்நுட்பம் சார்ந்த சிக்கல்களில் முக்கியமானது விவரணைகள் கவனிக்கவும், இங்கே விவரணை என்ற சொல்லை ‘ஒரு சம்பவத்தை நாவலாசிரியர் தன்னுடைய மொழியில் விரிவாக விளக்குவது’ என்ற அர்த்தத்தில் நான் பயன்படுத்துகிறேன். ஒரு நாவலின் விவரணைகள் என்பவை நாவலாசிரியரின் இயல்பான மன அமைப்பிலிருந்து பிரித்தறிய முடியாத ஒன்றுதான். ஆனால், நாவலாசிரியரால் விவரணைகளை கதைத்தொழில்நுட்பம் சார்ந்த பிரச்னைகளில் ஒன்று என்ற கோணத்தில் மட்டும்தான் அணுகமுடியும். நாவலாசிரியர்கள் ஒவ்வொருவரும் அவர்களின் ஆற்றலைப் பொறுத்து பல்வேறு விதத்தில் இதை கையாள்கிறார்கள். வாசகனுக்கு நிகர்வாழ்க்கை அனுபவத்தை அளிப்பது, வாசகன் அந்த நிகர்வாழ்க்கை அனுபவத்திலிருந்து உருவாகிவரும் உணர்வுநிலைகளை அடைவது, இவை இரண்டும்தான் இலக்கியத்தின் முக்கியமான இலக்குகள். விவரணைகள் இல்லாமல் நாவல் எழுத எந்த நாவலாசிரியராலும் முடியாது. ஆனால், நிகர் வாழ்க்கை அனுபவத்தை அளிப்பதற்கு விவரணைகள் அவ்வளவாக பயன் அளிக்காது என்றுதான் தோன்றுகிறது. இங்கே இலக்கியம் பற்றி நான் சொற்பொழிவு ஆற்றுவதாக நினைத்துக்கொள்ள வேண்டாம். விவரணைகள் என்பவை நாவலாசிரியர் பிரக்ஞாபூர்வமாக கையாள வேண்டிய ஒரு பிரச்னைதான் என்று உறுதியாக சொல்லமுடியும். ஆரோக்கிய நிகேதனம் நாவலில் தாராசங்கர் பானர்ஜி விவரணைகளை கிட்டத்தட்ட வெற்றிகரமாக கையாண்டிருக்கிறார்.

நம் கண்முன்னே நடக்கும் நேர்க்காட்சிகளின் வழியாகத்தான் தாராசங்கர் பானர்ஜி நாவலின் கதையை சொல்ல ஆரம்பிக்கிறார். நாடகீயமான காட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக நெருக்கியபடி வந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றை ஒன்று இணைக்கும் ஆசிரியர் கூற்றுகள் மிகமிகக் குறைவாக பலசமயம் வாசகரின் கவனத்திலேயே படாதபடி மிகமிதமான மொழியில் சொல்லப்பட்டிருக்கும். இந்த வகையான கதைசொல்லும் பாணியை சினிமா உருவான பின்னர் மட்டுமே நாவலாசிரியர்களால் சோதித்துப்பார்க்க முடிந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நாவலின் கதைக்கட்டுமானத்தின் தனித்தன்மையை வைத்துப்பார்க்கும்போது மேலே குறிப்பிட்ட கதைசொல்லும் பாணியை அவ்வளவு எளிதாகக் கொண்டுவந்திருக்க முடியாது, எப்படிப்பட்ட கலைஞனாக இருந்தாலும் மிகவும் கஷ்டப்பட்டுத்தான் இம்மாதிரியான கதைசொல்லும் பாணியை இந்த நாவலில் பயன்படுத்தியிருக்க முடியும். ஏனென்றால் ஆரோக்கிய நிகேதனம் நாவலில் நிகழ்காலம் என்பது மிகமிகக் குறைவுதான். நேரடியான நிகழ்கால சம்பவங்களின் வழியாக கடந்தகால சம்பவங்களின் நினைவுகள் நடுநடுவே கலந்த இந்தக் கலவையான காலஅமைப்பை நேரடியான காட்சிகளின் ஒரு சங்கிலியாக மாற்றுவது என்பது கதைத்தொழில்நுட்பத்தை கையாளக்கூடிய ஆற்றல்கொண்ட ஒருவரால் மட்டுமே செய்யமுடியும். இந்த நாவலில் காலம் எப்படி கையாளப்பட்டிருக்கிறது என்பதை இன்னும் ஆராயவேண்டும்.

நாவலில் காலத்தை கையாள்வதில் உள்ள சிக்கல்கள் மலையாளத்தின் புகழ்பெற்ற நாவலாசிரியர்களை கொஞ்சம்கூட தீண்டுவதில்லை. காலத்தை தங்கள் பேனா மையுடன் சேர்த்து கலக்கி நாவல் எழுதும் பலர் இருக்கிறார்கள். வாசகனில் காலம் கடந்துகொண்டிருக்கும் உணர்வை ஏற்படுத்துவது என்பது மேதமை கொண்ட நாவலாசிரியர்களைக்கூட கஷ்டப்படுத்தும் ஒரு பிரச்னை. நிலப்பிரபுத்துவ காலகட்டமும் முதலாளித்துவ காலகட்டமும் முடிந்து புரட்சி நடந்து கதாநாயகன் வெற்றிக்கொடி ஏற்றும் புரட்சிகரமான நாவல்களை எழுதும் நம் நாவலாசிரியர்களுக்கு காலம் கடந்துகொண்டிருக்கும் உணர்வை வாசகனுக்கு ஏற்படுத்துவது போன்றவை பிரச்னைக்குரிய விஷயமே இல்லை. நம் புகழ்பெற்ற நாவலாசிரியர்கள் அப்படி ஒன்றைப்பற்றிய பிரக்ஞையே இல்லாதவர்கள். நம் நாவலாசிரியர்கள் தங்கள் நாவல்களில் ஐம்பது, நூறு வருட கால இடைவெளியில் நடக்கும் சம்பவங்களை எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் ஒரே மூச்சில் எழுதித்தள்ளிவிடுவார்கள்.

ஆரோக்கிய நிகேதனம் நாவல் விவரிக்கும் சம்பவங்கள் ஏறக்குறைய அரை நூற்றாண்டு இடைவெளியில் நடந்தவை. அவற்றை நாம் ஒரு சில மணிநேரங்களில் வாசித்து முடித்துவிட முடியும். இந்த கால இடைவெளியில் கதாபாத்திரங்கள் வளர்ந்து இளைஞர்களாகவோ வயதானவர்களாகவோ ஆகிவிடுவார்கள். அவர்களின் வாழ்க்கைச்சூழலும் மாறியிருக்கும். வாழ்க்கையின் சலனங்களை திட்டவட்டமான வடிவில் சித்தரிக்கும் நாவலாசிரியர் காலம் கடந்துகொண்டிருப்பதன் கண்காணாத செயல்பாட்டை உணர்வாக வாசகனின் பிரக்ஞைக்கு செலுத்த வேண்டும். ஒரு காலகட்டம் முடிந்து அடுத்த காலகட்டத்திற்கும் இடையில் ‘*******’ இப்படி நட்சத்திரங்கள் போட்டு நிரப்புவது அல்லது ‘அவ்வாறாக காலம் கடந்து சென்றது’ என்ற ஒரு வசனத்தை மட்டும் எழுதி சில நாவலாசிரியர்கள் காலம் கடப்பதைக் காட்டுகிறார்கள். தன் வடிவத்தின் சின்ன எல்லைக்குள் நின்றுகொண்டு காலவுணர்வு போல கதைத்தொழில்நுட்பத்தின் மற்ற எல்லா நுண்மையான பிரச்னைகளையும் நன்றாகக் கையாண்ட வைக்கம் முகமது பஷீரை தவிர்த்துப்பார்த்தால் மலையாள நாவலாசிரியர்கள் அனைவரும் இந்த கால உணர்வை ‘***’ போட்டு நிரப்புபவர்கள் அல்லது ‘அவ்வாறாக காலம் கடந்தது’ என வசனம் எழுதுபவர்களும்தான் என்று தோன்றுகிறது.

இந்த விஷயத்தில் ‘போரும் அமைதியும்’ எழுதிய தல்ஸ்தோய்க்கு அந்த நாவலின் கதைக்களத்தின் மிக பிரம்மாண்டமான விரிவும், திட்டவட்ட தன்மையும் அதன் எல்லைக்குட்பட்ட கால அளவும் உதவியாக இருந்தது. ஆனால் அவர் பல்வேறு குடும்பங்களின் கதைகளை, வேறு வேறு பின்னணிகளில் நடக்கும் சம்பவங்களின் கதைகளை இடையிடையே கலந்து பிரக்ஞாபூர்வமாக கால உணர்வை உருவாக்கினார். ‘போரும் அமைதியும்’ நாவலை வாசிக்கும் வாசகனால் கண்களால் காணமுடியாத காலத்தின் கம்பீரமான, சாவகாசமான போக்கை உணர முடியும். ஃபாதர் ஸோசிமாவின் (Father Zosima) கதையும் மற்ற பிரதானமான சம்பவங்களின் வரிசையையும் இடைஇடைவிட்டு நெய்து சேர்த்துதான் கரமசோவ் சகோதரர்கள் நாவலில் தஸ்தாயெவ்ஸ்கி கால உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். புகழ்பெற்ற நாவல்கள் கால உணர்வை எவ்வாறு ஏற்படுத்தியிருக்கின்றன என்பது ஆராய வேண்டிய ஒரு தனித்தன்மையான விஷயம்.

தஸ்தாயெவ்ஸ்கி

ஆரோக்கிய நிகேதனம் நாவல் ஒரு 50, 60 வருடம் நடக்கும் சம்பவங்களில் ஒட்டுமொத்தம்தான் மஷாயின் முதிரா இளமைக்காலம் முதல் அவர் வயதாகி இறக்கும்வரை. இந்தக் கால எல்லைக்குள் ஜீவன் மஷாய்க்கு உண்டான வளர்ச்சியின், உருமாற்றங்களின் நம்பகத்தன்மையான ஒட்டுமொத்த சித்திரம் ஆரோக்கிய நிகேதனம் நாவலிலிருந்து கிடைக்கவும் செய்யும். இதில் பயன்படுத்தப்பட்ட ‘டெக்னிக்’கைப்பற்றிய போதத்தை ஒரு சராசரி வாசகனால் நாவலை வாசிக்கும்போது உணர முடியாது. சம்பவங்கள் நேரடியாக முறைப்படி அப்படியே அரங்கேறிக் கொண்டிருக்கின்றன என்ற உணர்வுதான் வாசகனுக்கு ஏற்படும். ஆரோக்கிய நிகேதனம் நாவலின் உயிர்த்துடிப்பான சம்பவங்கள் நடப்பது வெறும் ஆறு மாதங்களுக்கு உள்ளேதான் என்று சொன்னால் நுட்பமான வாசகர்களுக்குக்கூட ஆச்சர்யமாகத்தான் இருக்கும். மோத்தியின் வயதான தாயின் மரணம் எப்போது என்று ஜீவன் மஷாய் சொல்வதும் அதன்படியே ஆறுமாதம் முடிந்தபிறகு அவர் இறப்பதுமான அந்த குறுகிய காலத்திற்கு உள்ளேதான் இந்த நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆறு மாதங்களுக்குள்ளே நடக்கும் சம்பவங்களை மையமாகக்கொண்டு நாவல் முன்செல்லும். தொடர்ச்சியான நிகழ்கால சம்பங்களுக்கு இடையில், அதனுடன் உருகிச் சேர்ந்ததுபோன்ற கடந்தகால சம்பவங்களின் ஃபளாஷ் பேக். கடந்த கால சம்பவங்கள் பல வடிவங்களாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறாக நாவலின் கால அளவான அரை நூற்றாண்டு புத்துயிர்ப்புடன் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது.

இந்த நாவலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கதைத்தொழில்நுட்பம் சார்ந்த உத்திகள் விசித்திரமானவை, சாமார்த்தியமானவை. அதனால் வாசகர்களால் இந்த நாவல் பயன்படுத்தியிருக்கும் உத்திகளை அறியவே முடிவதில்லை. சம்பவங்கள் முதலில் இருந்து கடைசிவரை ஒரேபோல அப்படியே சென்றுகொண்டிருக்கிறது என்ற உணர்வுதான் வாசகனில் ஏற்படுகிறது. பதிமூன்று வயதில் கொழுத்த அழகியான மஞ்சரி, கடைசியாக நரைத்த தலையுடன், தளர்ந்த, வெறுக்கப்படும் ஒரு கிழவியாக அவள் ஆவது வரைக்குமான நீண்ட காலம் அதன் எல்லா சுவடுகளையும் வாசகனில் எஞ்ச வைத்து அவனது அனுபவ மண்டலத்தில் ஊடுருவுகிறது. இந்த ஒரு கதைத்தொழில்நுட்பத்திறன் மட்டுமே ஆரோக்கிய நிகேதனத்தை உலக நாவல்களில் குறிப்பிடத்தக்க நாவல் ஒன்றாக ஆக்கிவிட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

இன்னும் ஒரு விஷயத்தைப்பற்றி ஆராயவேண்டியிருக்கிறது – நாவலின் திட்டவட்டத்தன்மை பற்றி. மலையாள மொழிபெயர்ப்பில் ஆரோக்கிய நிகேதனம் பெரிய எழுத்துகளில் 530 பக்கங்கள் கொண்ட ஒன்று. ஆனால், நாவலை வாசித்து அதில் தோய்ந்திருக்கும் வாசகனுக்கு இன்னும் பெரிய ஒரு நாவலை வாசிக்கிறோம் என்ற உணர்வுதான் ஏற்படும் என்பது உறுதி. 19ம் நூற்றாண்டில்தான் ஆரோக்கிய நிகேதனம் நாவலை தாராசங்கர் பானர்ஜி எழுதியிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். சுமார் 2000, 3000 பக்கங்கள் எழுத வேண்டியிருந்திருக்கும். இந்த நாவலில் கதாபாத்திரங்களின் அளவு, நாடகீய சம்பவங்களின் அடர்த்தி, விரிவான பகைப்புலம், காலத்தின் நீளம் இவற்றையெல்லாம் வைத்துப்பார்த்தால், இந்த பிரம்மாண்டத்தை நம் அனுபவ மண்டலத்தில் கொஞ்சமும் குறையாமல் எஞ்சவிட்டு இவ்வளவு சின்ன வடிவத்தில் நாவலை நிறுத்த முடிந்திருப்பது, இந்த நாவலின் ஆற்றல் கொண்ட கதைத்தொழில்நுட்பத் தேர்ச்சியின் சான்று.

சமகால நாவல்களைப் பற்றிய அறிவார்ந்த இலக்கிய விமர்சனங்கள் தங்களின் மதிப்பீடுகளை, இலக்கியத்திற்கான தங்கள் அளவுகோல்களை முன்வைத்தன. எதிர்காலம் அந்த மதிப்பீடுகளை அப்படியே தலைகீழாக கவிழ்த்துப் போட்ட உதாரணங்களை இலக்கிய விமர்சனத்தின் வரலாற்றில் எளிதில் காணமுடியும். அந்த சமயத்தில் பிரபலமான இலக்கிய அளவுகோல்களை சமகால நாவல்களில் போட்டுப் பார்க்கக்கூடிய முயற்சி (யுகபுருஷர்கள் என்று கருதப்படும் விமர்சகர்களுக்குக் கூட) பல சந்தர்ப்பங்களில் பிழையான புரிதல்களுக்கு இட்டுச் செல்கிறது. நாவல் என்ற வடிவம் யதார்த்தவாதத்தின் விதிகளுக்கு கட்டுப்பட்டது. அதுதான் இந்த பிழைபட்ட புரிதல்களுக்கு பிரதானமான காரணம். நாவல் அதன் யதார்த்தவாதம் வழியாக நேரடியாகவோ மறைமுகமாகவோ சமகால சமூகத்தை சார்ந்திருக்கிறது. அந்த சமகால வாழ்க்கை பற்றிய சமகால பார்வைக்கோணம் இயல்பாகவே பிழைத்தோற்றங்கள் (fallacy) கொண்டது. அதில் இலக்கிய விமர்சகனும் சேர்ந்துவிடுகிறான்.

ரஷ்ய இலக்கிய விமர்சகர் பெலின்ஸ்கிக்கு (Vissarion Grigoryevich Belinsky) தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகளில் அவ்வளவு முக்கியமில்லாத ’பாவப்பட்டவர்கள் (Poor folks)’ நாவல் மிக முக்கியமான நாவலாக தோன்றியிருக்கிறது. ஆனால், தஸ்தாயெவ்ஸ்கியின் மிக முக்கியமான நாவல்களை அவர் மனப்பூர்வமாக வசைபாடியிருக்கிறார்! பால்ஸாக்கின் (Balzac) நாவல்களில் உள்ள சிறப்பம்சங்களை கண்டுகொள்ள முடியாத சாங்போ என்ற விமர்சகருக்கு ஸ்டெந்தால் (Stendhal) மகத்துவமான நாவலாசிரியர் என்பதில் சந்தேகமே இல்லை. இலக்கிய விமர்சனத்தின் சக்ரவர்த்திகள் என்று கருதப்படுபவர்களின் ‘பிழையான தீர்ப்புகள்’ இவை என்பதால் இன்றும் இந்தப் பிழைகள் பிரபலமானவை. ஆனால் நல்ல விமர்சகர்கள் தங்கள் சமகாலத்தில் வெளிவந்தவற்றில் சிறந்தது என்று சொன்ன இலக்கிய ஆக்கங்கள் பின்பு எதற்கும் தேறாத, வரலாற்று ஆர்வத்திற்காகக் கூட எஞ்சாமல் போய்விட்டிருக்கும். ஆனால், அம்மாதிரியான இலக்கிய விமர்சனங்கள் அவ்வளவாக இல்லை. ஏனெனில் ஒரு கலைப்படைப்பின் மரணத்திற்கு முன்னரே விமர்சன அபிப்பிராயங்களின் இறுதிச்சடங்குகள் முடிந்துவிட்டிருக்கும் என்பதால் அம்மாதிரியான விமர்சனங்கள் மிக வேகமாக மறக்கப்பட்டுவிடும். இந்தியாவின் சமகால சமூகத்தை பின்னணியாகக்கொண்ட சமகால நாவலுக்கு உலக இலக்கியத்தில் மறுக்கமுடியாத இடம் உண்டு என்று இலக்கிய விமர்சனத்தின் வரலாற்றை அறிந்த ஒருவன் தைரியமாக சொல்ல முடியாது. ஆனால், ஒரு நாவலாசிரியருக்குத் தேவையான இயல்பான மேதமைக்கும், அசாதாரணமான கதைத்தொழில்நுட்பத் தேர்ச்சிக்கும் நல்ல உதாரணம் ஆரோக்கிய நிகேதனம் நாவல் என்று தைரியமாக, பிழையாகிவிடும் என்ற பயம் இல்லாமல் யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.

ஈரோடு பெருந்துறையை சேர்ந்த அழகிய மணவாளன், கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். நாவல் கலை பற்றிய மலையாள நாவலாசிரியர் பி.கே.பாலகிருஷ்ணனின் விமர்சன நூலை "நாவலெனும் கலைநிகழ்வு" எனும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். இலக்கியத்திற்கு அப்பால் நிகழ்த்துகலையான கதகளியில் அவருக்கு ஆர்வமுண்டு.

3 Comments

  1. தெளிவான கட்டுரையாக உள்ளது,மூல ஆசிரியர்,அழகிய மணவாளன்,அகழ் ஆகியோருக்கு வாழ்த்துகள்.

  2. அர்த்தப்பாடு கொண்ட கட்டுரை. வெகுவாகப் பயனளித்தது.

உரையாடலுக்கு

Your email address will not be published.