புனைவுகள் ஒரு சமூகத்தின் பண்பாட்டை, வாழ்க்கை முறையைக் கதாசிரியரின் வார்த்தைகளில் வாசகனுக்குக் கடத்துபவையாகவும் அறியாத சூழலொன்றை அறியவைப்பனவாகவும் அமைகின்றன. இலங்கையில் இஸ்லாமியர்களின் வாழ்க்கை முறை அவர்களின் மதம் சார்ந்து வேறுபட்ட போதிலும் இனம் சார்ந்து அவர்கள் வாழும் இடத்தை அண்மித்த இனத்தின் சாயலின் பாதிப்புக்களை உள்வாங்கியதாக அமைந்திருக்கக் காணலாம். பெரும்பாலும் அரபுப் பதங்களின் நெருக்கத்தில் இஸ்லாமிய மொழியின் கூறுகள் வசீகரிக்கத்தக்கனவாக அமைந்தாலும் அச் சொற்களின் புதிய அறிமுகம் கிட்டும் முதல் வாசகன் வாசிப்பின் போது சில திணறல்களை அடையக் கூடும். இவ்விடத்திலேயே கதையை நிகழ்த்தும் கதாசிரியன் அக்கதையின் சொல்முறையினூடாக வாசகனைக் கவர்ந்து தன்னோடு சேர்த்து அழைத்துச் செல்ல வேண்டியவனாகிறான். ‘அகாலத்தில் கரைந்த நிழல்’ தொகுதியினூடாக ஜிஃப்ரி ஹாசன் செய்வது அதுவே.
இத் தொகுப்பின் முதல் கதை ஒத்திகைக்கான இடம். பெற்றோர் தம் ஆசைகளைப் பிள்ளைகளிடம் திணிப்பதையும், சமய நம்பிக்கைகளையும் அது சென்று சேரும் புள்ளி குறித்த ஆபத்தையும் வலி தோயப் பதிவு செய்கிறது இக்கதை. மீரான் காக்கா அறியாமை நிறைந்த மனிதர். இறை மீதான விசுவாசம், அவர் ஒரு மௌலவி ஆவதற்கான சந்தர்ப்பங்கள் அவருக்குக் கிடைக்காமை தன் ஆசையைப் பையன் மீது சுமத்துகிறது. நிறைவேறாத தங்கள் ஆசைகளைப் பிள்ளைகளிடம் சுமத்துவதில் எந்த வர்க்கத்திலும் தந்தையர் குறைந்தவர்கள் இல்லைப் போலும். பெற்றவர்கள் தமது ஆசைகளைப் பிள்ளைகளிடம் திணிப்பதனால் அவர்களது வாழ்வு சிதைந்து போவதற்கான மோசமான முன்னுதாரணமாக இக்கதையில் சாஹிதின் பாத்திரத்தைக் கருதலாம். ஒவ்வொரு தடவையும் மதராஸாவில் சாஹித் கொண்டு சொல்லப்படுகின்ற போது, அவனது மறுப்பினை ஒரு தந்தையாக மீரான் காக்கா புரிந்து கொள்கிறாரா? அவர் புரிந்து கொள்ளவில்லையெனும்போது ஒரு தடவை அவன் தாயிடம் முறையிடுகிறான். தாய் அதனை ஒரு தகவலாகத் தந்தையிடம் கடத்தியதோடு சரி. இஸ்லாமியப் பெண்களுக்குக் குடும்பத்தில் இருக்கின்ற மரியாதை அவ்வளவு தான் என்ற மட்டில் அவளும் தான் என்ன செய்ய முடியும்? எனினும் சாஹித் குறித்து அந்தத் தாயிடம் எந்த ஒரு நெகிழ்வும் தோன்றாமலிருப்பது ஒரு நெருடலைத் தருகிறது. அவனுக்கு நெருக்கடி கொடுக்கின்ற மீரான் காக்காவுக்கே அவன் காணாமல் போன பிறகு அவனுக்கு ஏற்பட்ட அதே உள நெருக்குதல் ஏற்படுகிறது. அது அவனைக் காணாமல் போகச் செய்த தன் ஆசை மீதான குற்ற உணர்வாகக் கூட இருக்கலாம். தாய் எனும் பாத்திரத்திற்கு ஏற்பட்ட நெருக்கடி இங்கு சொல்லப்படாமல் விட்டாலும் அது இன்னும் துயர் தருவதாக இருந்திருக்கும். அந்தப் பாத்திரத்திற்கும் சிறிதளவேனும் வீச்சைக் கொடுத்திருக்கலாம் எனத் தோன்றுவது தவிர இக்கதையின் அழுத்தமான கரு சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதிலும் தங்கைப்பாத்திரம் வெகு துல்லியமாகத் தன் கடமையைச் செய்கிறது. துள்ளலோடு தந்தைக்கு செய்தி கூறுவதுடன், துயரத்தோடு அண்ணன் மீதேறிய ஜின்னை நினைத்து அஞ்சுகிறது. சாஹித்தினதும், மீரான் காக்காவினதும் உளச்சிதைவின் பின் அந்தக் குடும்பத்தின் நிலை மனக் கொந்தளிப்பை ஏற்படுத்துவதைத் தவிர்க்க இயலவில்லை. ஆசைகள் எவ்வாறு மனச்சிதைவை ஏற்படுத்துகின்றன என்பதை ஆன்மீக நாட்டத்தைக் கருவாக்கி அவலச்சுவை கொண்ட படைப்பாக்கியிருக்கிறார் ஜிஃப்ரி ஹாசன்.
மரணத்திற்குக் காத்திருக்கும் ஒருவரை இறைவனிடம் அழைத்துச் செல்வதற்கு ஓதப்படும் குர் ஆன் மாமாவின் நெற்றிப் பொட்டில் சுடக் காத்திருக்கும் துப்பாக்கி போல அவரை அச்சத்தில் ஆழ்த்துகிறது. மரணம் என்பது இயல்பான உறக்கம் போல மணக்குச்சிகளின் வாசனையோடு நிகழ வேண்டும். அவ்வாறே ரூஹின் யாத்திரையில் மாமாவுக்கு நிகழ்கிறது. அவரது மரணத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முந்திய ஒரு இரவில் கேட்கின்ற மையத்துக் கூச்சல் அசாதாரணமான ஒரு மரண வீட்டின் சலனத்தைக் கதைசொல்லியின் மனதில் ஏற்படுத்தி விடுகிறது. கதைசொல்லி எவ்வளவு அறிவார்ந்தவனாக இருப்பினும் அவன் மனதில் உள்ளார்ந்த சில நம்பிக்கைகள் வேரூன்றி இருக்கின்றன. அவனது மனது பக்குல் ஒன்றின் கூவலை எதிர்பார்த்திருக்கிறது. அவருக்கு குர் ஆன் ஓதி மரணபயத்தை ஏற்படுத்தக் கூடாது எனும் விழிப்பு அவனிடம் இருந்தாலும் பக்குல் ஒன்று உறுதியாய் அந்தத் தீர்க்கதரிசனத்தை நல்கும் என எதிர்பார்க்கிறானா? காலமாறுதலில் சந்தூக்கு தூக்குபவர்கள் வாகனத்தில் ஏற்றலாம் எனும் எண்ணத்தையும், மையத்தினைக் கொஞ்ச நேரமாவது உறவுகளிடம் தங்க வைக்கலாம் எனவும் எண்ணும் கதைசொல்லி இஸ்லாமிய நடைமுறைகளில் நாகரீகத்திற்கேற்ப கொஞ்சம் மாற்றத்தைக் கொண்டு வர நினைக்கிறான். எனினும், அவனது ஆழ்மனம் மத நம்பிக்கைகளில் வேரூன்றியிருப்பது அந்தப் பக்குல் கூவுவதை அவன் எதிர்பார்ப்பதிலிருந்து புரிகிறது. அந்த முரண், கதையின் முடிவு வரை கதைசொல்லியிடமிருந்து விலகுவதேயில்லை. அதன் விளைவு தான் பேரன் யாழ்ப்பாணத்திலிருந்து திரும்பி வந்து ‘வாப்பா’ என அழும் போது அது பக்குலின் குரலாக எதிர்ப்படுவதன் காரணமா? மனதின் முரண்கள் எத்தனை விதமாய் வெளிப்படுகின்றன. மரணத்தை எதிர்நோக்கும் ஒரு இஸ்லாமியரின் சடங்குகள் இக்கதையில் அற்புதமாய்ச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.
பெண்கள் மீதான வன்முறை தனியே ஆண்களால் மட்டும் கட்டமைக்கப்படுவதில்லை. அது சமூகத்தினால் கட்டமைக்கப்படுகிறது. அதிலும் சமூகத்திலுள்ள பெண்களுக்கும் அதில் பாதிப்பங்கு இருக்கிறது. இஸ்லாமியப் பெண்கள் ஒடுக்கப்படும் ஒரு சந்தியை அகாலத்தில் கரைந்த நிழல்களில் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஜிஃப்ரி ஹாசன். இஸ்லாமிய பெண்கள் பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்வது, அவர்களது பொருளாதாரத்தை உயர்த்தினாலும், அவர்களது வருமானத்தை உறிஞ்சவென்றே ஒரு கூட்டம் வீடுகளில் காத்திருக்கிறது. இங்கும் மாமி உழைத்துக் கொட்டிய காசை உறிஞ்சிய போதிலும் அவளது வீடு மட்டும் கட்டி முடிக்கப்படாமல் அரையும் குறையுமாக நிற்கிறது, அவளது வாழ்வைப் போல. முதல் திருமணத்தின் முறிவு என்பது நிகழும் போது பெண் சமூகத்தினால் பெறுமதி இழக்கச் செய்யப்படுகிறாள். அது ஒரு குறையென அவளை ஒட்டிக் கொள்கிறது. விளைவாக ஐம்பது வயதுக்கு கிழவனுக்கு அவள் மணம் பேசப்படுவது பற்றி அவளது குடும்பத்திற்கு எந்தக் கவலையும் இருக்கப் போவதில்லை. மனதுருகும் சில ஆன்மாக்கள் இருப்பினும், அவற்றின் ஆதங்கம் அக்குடும்பங்களில் செல்லுபடியற்றதாகின்றது. மனம் ஒப்பாவிடினும், பெண் சேர்ந்து வாழ வேண்டும் இல்லாவிடில் நட்டம் அவளுக்குத்தான் எனப் போதிக்கிறது சமூகம். அவனோ, அவளோ இணையாத வாழ்வில் தொடர்ந்து நீடித்து என்ன ஆகப் போகிறது என்பது விவாகரத்தில் கொண்டு சென்று நிறுத்துகிறது. மூன்றாவது கணவனைப் பற்றி விசாரிப்பதற்கென்ன இருக்கிறது. அவள் ஏற்கனவே குறையுற்றவள். பெட்ரோல்மக்ஸும், சைக்கிளும் அவன் வரையில் ஒரு இலாபம். திருமணத்தின் பேரில் இனாமாகக் கிடைத்தவற்றைத் தூக்கிக் கொண்டு போனவனை ஒரு திருடன் எனும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அவள் மூன்றாவது வாழ்க்கைக்கும் தகுதியற்றவள் என்பதாகத் தீர்ப்பிடுகிறது சமூகம். அவளுக்கான ஒரு நல்லவனைத் தேர்ந்தெடுப்பதில் தவறிழைத்தவர்களுக்கு இத் தீர்ப்பிடுவதில் என்ன தகுதி இருந்து விடப் போகிறது. மாமி கடைசியில் தன் அழகைக் குலைத்துப் போடுகிறாள். அணுகியவர்களை விரட்ட அவளுக்கு வேறெந்த வழியும் இல்லை. அதுவும் முடியாக் கணத்தில் தன் உடலுக்குள் ஜின்னுக்கு அவள் இடம் கொடுக்கிறாள். ஜின் ஒன்றும் பொல்லாததல்ல. கெட்ட ஆண்களை எதிர்த்து நிற்பது. இரவை ஊடறுத்து அழும் அவளது உண்மைக்குரலுக்கு ஜின்னும் கூட இரக்கம் கொள்ளாமல் போகுமா? இஸ்லாமியப் பெண்கள் எதிர்கொள்ள நேர்கின்ற அவல நிலையொன்றை அகாலத்தில் கரைந்த நிழலுக்குள் அற்புதமான சித்திரமாக்கியுள்ளார் ஜிப்ரி.
எல்லா மனிதர்களின் மனங்களிலும் அவரவர் சார்ந்த நியாயங்கள் ஓடிக் கொண்டிருக்கும். கறுப்பு வெள்ளை கதையில் அனீதின் குடும்பம் பற்றிய பிரமிப்பு கதைசொல்லியின் மனதில் ஆரம்பத்தில் தொற்றிய விதத்திற்கும், இறுதியில் நேர் எதிர்விதமாய் ஆகி விடுவதற்குமான இடைவெளி எவ்வளவு? ஒரு வாரத்திற்கும் மிஞ்சிய அறிமுகத்தில் உம்மாவின் வெளி அழகும், அவள் மீதான கவர்ச்சியும், சஹானா மீதான ஈர்ப்பும் கதைசொல்லிக்கு வாப்பாவின் கருமை நிறத்தைப் போலவே அவரது உள்ளமும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. அவரது நண்டுக்கண்கள் ஏற்படுத்தும் ஒருவித அசூயை அவனிடம் அந்த நினைவிற்குத் தூபம் போடுகிறது. நாள்கள் கரையக் கரைய அவர் மீதான அபிப்பிராய மாற்றம் ஒரு அணில் மீது அவர் காட்டும் நேசத்தினூடு வெளிப்படுகிறது. அந்தக் கணத்தில் அவரது தவிப்பினாலான அன்பு ஒரு பிராணிக்குக் கிடைக்கும் போது உறவுகளுக்கு மட்டும் கிடைக்காமல் போகுமா? ஐந்து வருடம் பேச்சற்று இருப்பதற்குக் காரணம் அவரென்றால் அந்தக் குடும்பத்திற்கான நிதி உதவியிலிருந்தும் அவர் பற்றறுத்துப் போயிருக்கலாம். அடுத்த மனித உயிர்கள் மீதான இரக்கமும், கரிசனையும் சமூகத்தின் பார்வைக்கு விஷமாகத்தான் தோன்றுகிறதா? சமூகமென்பது பெரும் நோய் காவி இல்லையா? அதன் ஊசி வார்த்தைகளைப் பொறுக்கித் தன்னையும் குத்திக் கொண்டு, குடும்பத்தையும் குத்திய பேதைமை உம்மாவின் மீதே இருக்கிறது. இதைக் கதைசொல்லி புரிந்து கொள்ளும் தருணம் அற்புதமானது. அதனையே கறுப்பு வெள்ளையாக அவன் உருவகித்துக் கொள்கிறான். இக்கதையில் அனீத் எனும் பாத்திரம் தந்தைமையை உணர்ந்து கொண்ட அதே சமயம், தோற்றத்தில் உம்மாவை ஒத்ததாக இருக்கக் கூடும். மேலும் இக்கதையில் விபரிக்கப்படும் சுன்னத்துக் கல்யாணச் சடங்குகள் இஸ்லாமிய வாழ்நெறி ஒன்றை ஏனையோருக்குச் சுவைபட எடுத்துக் காட்டுவதாக அமைகின்றன.
நம்பிக்கையின் ஒளிக்கும், நம்பிக்கையின்மையின் இருளுக்கும் இடையேயான இடைவெளியில் எழும் கேள்விகள் உறங்கும் சூஃபியின் இல்லம் எனும் கதை முழுவதும் இறைந்திருக்கின்றன. ஐநூறு ஆண்டு கால மரபு சந்ததி, சந்ததியாகத் தொடர்கின்றது. வண்டில் கட்டி சூஃபியின் கபூரடிக்குச் செல்லும் மரபு பெரியம்மா வாயிலாக அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகிறது. நாகரிகத்தின் வாயிலில் நிற்கின்றவர்களால் சிலவற்றை ஏற்க முடியாது. அதிலும் ராஃபி விஞ்ஞானமும், தத்துவமும் கற்ற அறிவாளி. ஞானியர் எனும் வகையில் சூஃபிகளையும், அவர்களது தேடல்களையும் ஏற்றுக் கொள்ளும் அவனால் அதற்கு மேல் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறது. ஆனாலும் நண்பனின் நம்பிக்கையை எவ்விதத்திலும் அவன் சிதைக்க முயலவில்லை. ஏளனப் புன்னகை கூடச் சிந்தி விடாத அளவிற்கு அவன் பண்பட்டவன். அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு எனும் அளவில் தனிமனித சுதந்திரத்தின் எல்லைகளை அறிந்தவன். கதைசொல்லிக்காகத் தான் நம்பாத விடயங்கள் எனினும் அவனுக்குத் துணையாக ஒரு புகைப்படக்காரனாகத் தன் உதவி நண்பனுக்கு அவசியம் என உணர்ந்து வருகிறான். அவன் மனம் ஈடுபடுவது மலைகளிலும், ஆறுகளிலும், காய்த்துத் தொங்கும் சூரங்கனிகளிலுமே. கதைசொல்லி நம்பிக்கைக்கும், நம்பிக்கையின்மைக்கும் இடையில் ஊசலாடுபவன். ஒரு ஆன்மிக உணர்வு அவனது மூளை நரம்புகளை உசுப்பி விட்டாலும் அது உண்மையா அல்லது பிரமையா என்று அவனும் ஒரு அறிவுஜீவிக்கான கேள்விகளைத் தனக்குள் அமைத்துக் கொள்கிறான். நம்பிக்கையின் பாற்பட்ட செயலாக அங்கு வரக்கூடிய ஆதிவாசிச் சிறுவர்களுக்கு பிஸ்கட் பொட்டலங்களோடு அவன் வந்திருந்தாலும் கேள்விகள் அவனை உசுப்பிக் கொண்டேயிருக்கின்றன. கடைசியில் நம்பிக்கை அற்றிருந்த நண்பனின் நம்பிக்கை ஒளி கதைசொல்லியின் மீது பரவசத்தை அள்ளி ஊற்றுகிறது. சூஃபியின் மந்திரங்கள் அரூபமாக உலவும் இக்கதையும் இஸ்லாமிய வழக்குகளைத் தத்ரூபமாகச் சித்தரிக்கிறது.
யுத்தம் தொடங்கிய காலத்திலிருந்த புலிகளுடன் முஸ்லிம்களும் இணைந்திருந்தமை, முடிவற்ற கண் கதையில் வெகு இயல்பாகச் சொல்லப்படுகிறது. அவர்களுக்கிடையிலிருந்த அன்னியோன்னியம் இறுதிக்காலத்தில் ஒருவரையொருவர் மோசமாய் எதிர்க்கிற அளவிற்கு வளர்ந்திருந்தாலும் இக்கதை அக்காலத்தை மையப்படுத்தி தமிழ் முஸ்லீம் உறவின் உறவுப்பின்னலை அசை போடுகிறது. பாத்திமா ராத்தா அவ்வூரில் செயற்பட்ட புலிகளுக்கு சாப்பாடு கொடுத்தவள். உணவுப்பண்டங்களைப் பரத்தி அவை விற்பனையாகாத போது ஏனைய விற்பனைப் பெண்களுக்கு அவற்றை இலவசமாகக் கொடுப்பவள். சிறுபிள்ளைகளுக்கு ஏதேனும் கொடுத்துவிட்டு நகர்பவள். அங்கு இராணுவம் இருந்திருந்தாலும் அவர்கள் உணவு கேட்டிருந்தால் கொடுத்துத்தானிருப்பாள். ஐயுறவால் அவளைத் தீயிலிடுவதற்கு இராணுவம் மட்டும் காரணமல்ல. அவள் உறவுக்குள்ளிருந்து விஷமாய் உருவெடுத்த காசிமும் அவன் மனைவியுமேமூல காரணர்கள். கடைசியில் அக்குடும்பம் மீது முடிவற்ற கண்ணாய்ப் படிந்து தீயின் நாக்குகளால் அவள் தாவுவது எத்தனை சந்ததிகளுக்குத் தொடரும்? இக்கதையில் அவள் முடிவை உணர்ந்து நெருப்புக்குள் தாவி அலையும் பூனை, சிறகுகளில் குஞ்சங்களாய்த் தீப்பற்ற சடசடத்துப் பறக்கும் வேப்பமரத்துப் பறவைகள், சட்டித் தலையுடனான அவளது காவலன் பைரவன் என அத்தனை விழிகளும் துடிக்கத்துடிக்க அவளது அயலவர் மூட்டி விட்ட நெருப்பில் வேகிறாள். அந்த நெருப்பிலும் வேகாமலிருந்தது அவளது முடிவற்ற கண்களே. இத்தொகுப்பின் இரண்டு கதைகளான முடிவற்ற கண் மற்றும் உறங்கும் சூஃபியின் இல்லம் ஆகியவை வாசிக்கும் போது அமானுஷ்ய உணர்வைத் தந்து போகின்றன.
அங்கக் குறைபாடுடையவர்கள் சமூகத்தினிடையே நடமாடும் போது அவர்களது குறையைச் சுட்டிக் கேலி செய்பவர்கள் எல்லா இடமும் இருப்பார்கள் போலும். அதிலும், அவர்களை ஏய்த்துப் பிழைப்பவர்கள், அங்கக் குறைபாட்டினால் தவிப்பவர்கள் மேலும் குன்றிப்போகும் விதமான கேலிகளை அவர்கள் மீது அள்ளி வீசுவதை நிஜத்தில் கூடக் காண முடியும். அவ்வாறானவர்களின் மொத்த உருவமாக இங்கு அனீபா வெளிப்படுகிறான். அலாவுதீன் ஊமையாக இருந்தாலும் அவனது மற்றத் திறன்கள் சிறப்பாக சற்று அதிகப்படியாகவே செயற்படுகின்றன. ஆனாலும், அவன் தந்தை அவனது குறையால் தான் குன்றியதுடன் அவன் ஆற்றலையே ஒடுங்கச் செய்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அவனை சமூகத்தோடு ஊடாட விடாமல் அவர் செய்த செயலே இறுதியில் அவனை எல்லோர் முன்பும் கேலிப்பொருளாக நிற்க வைக்கிறது. மனாஃப் சிறுவனாக இருந்தாலும் மனிதாபிமானம் மிக்கவன். அனீபாவால் மிக மோசமான கஞ்சாப் பழக்கத்திற்கு உட் படுத்தப்படும் அலாவுதீனின் சுருட்டு மீதான கடும் வெறுப்பை ஏனென்று அறிவதற்கு வந்த மனாஃபின் மீது அலாவுதீனின் அகநதி பெருக்கெடுத்தோடி வடிகிறது. அவனது தாளாத வேட்கையின் வடிகாலாக இருக்கின்ற மனாஃப் அவனை வெறுக்காதிருக்க வேண்டுமே என்றொரு அச்சம் கதையின் இறுதியில் தோன்றுவதைத் தவிர்க்க இயலவில்லை.
புரிந்துணர்வும், நல்லெண்ணங்களும் உள்ள உறவுகள் சில மனத்தால் நிலைகுலைந்து தடம் மாறி விடுவதற்கு நாம் தான் சில வேளைகளில் காரணமாகி விடுகிறோம். கல்விளக்கு கதையில் கதைசொல்லி தன்மீது பேதம் காட்டாது அன்பு காட்டிய நண்பனையே தன் செயல்களால் விரோதி ஆக்கி விடுகிறான். சரத் ஆனந்த தன் நண்பனுக்காகத் தன் இனத்தைச் சேர்ந்தோரையே எதிர்க்கத் துணிந்தவன். வெளிப்படையானவன். லுக்மிணியுடனான தனது காதலைக் கதைசொல்லியிடம் பகிர்ந்து மகிழ்ந்தவன். அவனுக்கு லுக்மிணியும், கதைசொல்லியும் செய்தது துரோகம் என்றல்லாமல் வேறு எப்படிக் கூற முடியும்? புத்தரின் கல்விளக்கு ஒளிர்ந்து கொண்டேயிருக்கிறது. சரத் ஆனந்தவிற்குத் தெரியாமல் வேறு வாயில்களால் லுக்மிணியோடு இவன் வெளியேறியது சரியான செயலா? குற்ற உணர்விற்கு அவன் முற்றிலும் தகுதியானவன். ஏற்கனவே இனமுறுகல் கொழுந்துவிட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில் இவ்வாறான செயல்கள் ஒட்டுமொத்தமாக எப்படிப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணரக்கூடிய நிலையிலிருந்தும் அதை ஏற்படுத்தக் கூடிய செயலில் அவன் ஈடுபட்டான் என்பதில் சற்று நம்பகத்தன்மை குறைவாக இருக்கிறதென்பதும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகிறது.
இளவயதில் சுறுசுறுப்பும், துறுதுறுப்பும் பற்றிக் கொள்ளும் போது வாசிக்கும் புத்தகங்கள் மனதில் சலசலப்பை ஏற்படுத்தி விடுகின்றன. அதுவே புரட்சி பற்றிய புத்தகமாயிருந்தால் அது ஏற்படுத்தும் தாக்கம் சொல்லுந்தரமன்று. சின்ன மீன்கள் கதையில் பொருளாதார நலிவிலிருந்து முன்னேற வேண்டிய நிலையிலிருக்கும் மொஹிதீன் அப் புரட்சி விதையை ஆழமாகப் பற்றிக் கொள்கிறான். அவனுக்குச் சூழ்நிலை வசதி செய்கிறது. அவன் சொல்வதைக் கேட்க சில மீன் குஞ்சுகள் காத்திருக்கின்றன. ஏனென்றால் அவன் ஆசிரியன். அவனது நண்பர்கள் யாரும் அவன் சொல்வதைக் கேட்கும் நிலையில் இல்லை. அவன் சொல்வதை நாலு பேர் கேட்கிற போது தான் அவனுக்குள்ளும் புரட்சி துளிர் விட்டு வளர்கிறது. முதலாவது கிளர்ச்சிப் பிரசுரம் அவனுக்குள்ளும் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது. காலப்போக்கில் அவன் படிக்கும் புத்தகங்களில் மாற்றம் ஏற்பட, ஏற்பட அவன் அதற்கேற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்கிறான். ஒரு கட்டத்தில் அவன் இவற்றையெல்லாம் துறந்து இயல்பு வாழ்க்கைக்குள் மறைகின்ற போது தன் சின்ன மீன்களைக் கை விட்டு விடுகிறான். ஆனால், அக்கருத்தை உணர்வுபூர்வமாகப் பற்றிக் கொண்ட ஏதேனுமொரு சின்ன மீன் புரட்சியைத் தொடங்கித் தன்னை ஒரு பொருட்டாகக் கொள்ளாமல் போகுமோ? அதுவே இறுதியில் நிகழ்கிறது. சிறு கேலி இழையோட யதார்த்தமான புரட்சியை சிறு நகை தவழும் முகத்துடன் வாசிக்க வைக்கிறது இக் கதை.
மதத்தின் பேரிலான அடக்குமுறைகள், பெண்கள் மீது கொண்டுவரும் அழுத்தங்களின் ஒரு வடிவமாக வானொலி, தொலைக்காட்சி ஒரு கிராமத்தில் முற்றுமுழுதாக இல்லாமலாக்கப்படும் ஒரு சமூகக் கட்டமைப்பை பெருஞ்சலனம் கதையில் பார்க்கலாம். கதைசொல்லியின் கிராமத்தில் 1980 களில் இருந்த நிலையே கதைசொல்லி காணும் கிராமத்தில் 2010 இல் இருக்கிறதென்பது குறித்த சமூகத்தின் மீது பச்சாதாபத்துடன் கூடிய கோபத்தை ஏற்படுத்துகிறது. கதையின் போக்கில் நாகரிகம் அந்தக் கிராமத்தைத் தீண்டி முன் நகரும் வேளையில் அளவிறந்த வெறியாகி வளர்கிற மதப்பற்று அச்சமூகத்தை மேலும் மேலும் கீழே தள்ளுகிறது. இவ்வாறே அந்நிலை தொடருமெனில் வருங்காலத்தில் இக்கிராமம் 1970 களுக்கு முற்பட்ட நிலையையே அடைய முடியும். கதைசொல்லி போன்ற முற்போக்காளர்கள் அக்கிராமத்தை முன்னேற்றிவிடச் சிந்திக்கின்ற ஒவ்வொரு கணமும் அங்குள்ள சுயநலவாதிகளும், தம்மை முன்னிறுத்தும் மதவாதிகளும் இத்தகைய சீர்குலைவைச் செய்து கொண்டு தான் போவர். கடைசியில் பாதிக்கப்படப் போவது பள்ளிக்குட்டியும், மிர்தளாவும், மிதானாவுமே. ஆகக் கதையின் இறுதியில் பள்ளிக்குட்டியின் முடிவை விட அவ்வூர் இன்னும் சின்னாபின்னப்படப் போகிறது எனும் எண்ணம் ஏற்படுத்தும் சலனம் மிகப் பெரிது.
ஜிஃப்ரி ஹாசன்தன் கதைகளில் தனக்கு மிகவும் நெருக்கமான இஸ்லாமியக் கிராமங்களின் பின்னணியை மிகச் சிறப்பாக வெளிக் கொணர்ந்திருக்கிறார். அவரது கதைகூறுமுறை மிக இலகுவானது. வாசகன் மனதுக்குள் சட்டென்று உள்ளீர்க்கக் கூடியவகையில் அவரது கதைகள், உரையாடல்கள் அமைகின்றன. தன் வாழ்நிலை சார்ந்த இஸ்லாமியப் பின்னணியின் குடும்பச் சித்திரங்களை யாவரும் உணர்ந்து கொள்ளும் வகையில் ஜிஃப்ரி ஹாசன் படைத்திருப்பது ஈழத்துச் சிறுகதையாளர் மத்தியில் அவருக்குக் குறிப்பிட்டதோர் இடமுண்டு என்பதை மறுபடியும் உறுதி செய்கிறது.
தாட்சாயணி
ஈழத்தின் போர்க்காலச் சூழ்நிலையில் முகிழ்ந்த எழுத்தாளர்களில் ஒருவர். யுத்தச் சூழ்நிலையில் வாழ்ந்து அதன் வாழ்வியல் நெருக்கடிகளை இலக்கியமாக்கியிருப்பவர். ‘ஒரு மரணமும் சில மனிதர்களும்’, ‘இளவேனில் மீண்டும் வரும்’, ‘தூரப் போகும் நாரைகள்’, ‘அங்கயற்கண்ணியும் அவள் அழகிய உலகமும்’ ஆகிய சிறுகதைத்தொகுப்புகளின் ஆசிரியர்.