பதிமூன்று மோதிரங்கள்
“இசூமியின் நறுமணம்” என்ற சிறுகதையின் வாயிலாக தமிழ் இலக்கியபரப்பில் தனக்கென தனி கதைசொல்லும் முறையை வகுத்துக்கொண்டவர் ரா.செந்தில்குமார். பணிநிமித்தம் காரணமாக டோக்கியோவில் கடந்த இருபத்தி மூன்று ஆண்டுகளாக வசித்து வருகிறார், தன் வாழ்வின் முக்கிய விகிதத்தை ஜப்பானில் கழித்துள்ளதால் இவரை தமிழில் எழுதும் ஜப்பானிய எழுத்தாளர் என்றே என்ன தோன்றுகிறது, அவரின் கதைகளும் அதையே முன்வைக்கின்றன.
‘பதிமூன்று மோதிரங்கள்’ இவரின் இரண்டாவது சிறுகதை தொகுப்பு, பதினோரு கதைகள் கொண்டது. இவரது முதல் சிறுகதைத்தொகுப்பில் ஜப்பான் வாழ்வு சார்ந்த கதைகள் அதிகம் இடம்பெற்றிந்தன, இந்த தொகுப்பில் ஜப்பானை தாண்டி தாய்லாந்து, ஆசிரியரின் பூர்விகம், அவரின் பால்யத்தின் நினைவுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய கதைகள் அதிகம் உள்ளன.
புலம்பெயர்வு வாழ்வு சிலருக்கு வரமாக அமைந்தாலும் பலருக்கு சாபமாகவே உள்ளது. வேலைக்காக தாய்நிலத்திலிருந்து இடம்பெயர்ந்த பாண்டியனின் இடர்களை “பதிமூன்று மோதிரங்கள்” என்ற சிறுகதை சுட்டிக்காட்டுகிறது. அது தனிமனித சிக்கல்களை பேசுவதைத் தாண்டி, ஆண்டியென் பூர்வகுடி இயற்றிய குடிபெயர்ந்தவர்களுக்கான தேசியகீததுடன் இணைந்துகொள்வதினால் குடிபெயர்ந்த மனிதர்களின் தனிமையையும் ஆராய்கிறது.
நாம் இதுவரை கேளிக்கையின் கண்கள் கொண்டு மட்டுமே பார்க்கும் தாய்லாந்து போன்ற தேசத்தையும், அங்கிருக்கும் பெண்களின் வாழ்வையும் புராணத்துடனும், மர்மத்துடனும் அணுகுகிறது இந்திர தேசம் என்ற சிறுகதை.
இந்த தொகுப்பில் உள்ள நிவிக்குட்டியின் டெடிபியர் கதை என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. ஒரு தந்தையின் வாழ்வில் அன்றாடம் நிகழும் சிறுநிகழ்வு பெரிய சிக்கலை எவ்வாறு அவனுக்கு அளிக்கின்றது என்பதை இந்த கதை முன்வைக்கிறது. அடம்பிடிக்கும் செல்ல குழந்தைக்காக ஓர் தந்தை எந்த நிலைவரை செல்கிறான் என்பதை தமிழில் பேசிய சிறந்த கதை இது என எண்ணுகிறேன். ஒண்ணுமில்லாத ஒரு பலூன் ஊதி ஊதி பெரிதானதும் மீண்டும், பெரிதாக்க முயன்று அது வெடிக்கும் போது ஏற்படும் வெறுமை உணர்வையும் இந்த கதையின் வாசிப்பனுபவம் எனக்களித்தது.
பெட்டகங்கள், அழகிய சாளரங்களையுடைய வீடு, களவு, அம்மன் சிற்பம், உறுதுயர், சர்வம் சௌந்தர்யம், வஸ்திராபகரணம் ஆகிய கதைகள் எல்லாவற்றிலும் ஒரு பொதுத்தன்மை உள்ளது, கடந்த காலத்தில் பெரிதாய் வாழ்ந்து, நிகழ் காலத்தில் பெரும் வீழ்ச்சியை சந்தித்த தலைமுறையின் கதைகளாக இவை விரிகின்றது. இக்கதை மாந்தர்களின் வாழ்வையும், குணாதிசியங்களையும் ஓரளவு கணிக்கமுடிந்தாலும், கதையின் முடிவு எதிர்பாராத திருப்பத்தையே கொண்டுள்ளது. பெரும்பாலான இந்த கதைகளில் ஒரு மையப் பெண் கதாபாத்திரம் உள்ளது, அந்த பெண்ணே கதையின் நாதமாகவும் இயங்குகிறாள். அறியாத ஒன்றை அறியமுற்படுகிற சிறுவனின் தேடல் இத்தொகுப்பில் வெளிப்படுகின்றது, அதே நேரத்தில் கதை மாந்தர்கள் பலரும் அவர்கள் அறிந்த பெண்களை தாயின் ஸ்தானத்தில் வைத்துப்பார்க்கும் முதிர்ச்சி பெற்றவர்களாவும் உருமாற்றம் பெறுகின்றனர்.
ஜப்பானின் வாழ்வு பழக்கப்பட்டதாக இருந்தாலும், அந்நிலத்தின் இலக்கிய கலை கோட்பாடுகள் ஆசிரியரின் கதையோட்டத்தில் அதிகம் தாக்கம் செலுத்தவில்லை. மாறாக தஞ்சைநில கதைகளின் முன்னோடி தி.ஜானகிராமனின் தாக்கம் இந்த தொகுப்பில் உள்ள கதைகளில் இயல்பாக வெளிப்பட்டுள்ளது இத்தொகுப்பின் பலம் என்றே தோன்றுகிறது.
பதிமூன்று மோதிரங்கள்- யாவரும் பதிப்பகம்
இளம்பரிதி
‘வழி’ இணைய இதழின் ஆசிரியர். கட்டுரையாளர்.
சாம்பனின் பாடல்
சினிமாவில் ‘ஜம்ப் கட்’ என்றொரு உத்தி உண்டு. ஒரு காட்சியின் காலவெளியில் இருந்து அடுத்த காட்சிக்கு வேறொரு காலவெளி நோக்கி நொடியில் தாவுதலே ‘ஜம்ப் கட்’. எழுத்தாளர் தன்ராஜ் மணி அவர்களின் ‘சாம்பனின் பாடல்’ சிறுகதை தொகுப்பில் உள்ள பல கதைகளின் உன்னத தருணங்கள் அழகியல் காட்சி தாவல்களால் நிறைந்துள்ளன.
தொகுப்பின் தலைப்பாக உள்ள ‘சாம்பனின் பாடல்’ சிறுகதை, முதலில் கவிதை வடிவத்தில் துவங்கி பிறகு கதை வடிவத்துக்கு தாவுகிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக சாம்பன் நுழைகின்ற போர்க்களம், வானத்தை நோக்கி ஓங்கிய அவனது போர் வாள், அந்த வாளில் மின்னும் விசும்பின் ஒளி என விரியும் யுத்த காட்சிகள் பத்து பக்கங்களுக்கு மேல் கவிதை வரிகளாய் எழுதப்பட்டுள்ளது. வாசிப்பவர் மனதில் அவ்வரிகள் உணர்ச்சி பொங்கும் பெருநதியாய் பெருக்கெடுத்து ஓடக்கூடியவை. தளபதி சாம்பன் வீரச்சாவு அடைந்து மண்ணில் விதையாக விதைக்கப்பட்டு, பிறகு நடுகல் வடிவமாய் எழுந்து, குலசாமியாக பூசைகள் ஏற்று, எதிரிகள் மீண்டும் வர, நடுகல் பிடுங்கப்பட்டு மக்களுடன் பயணித்து, பல தலைமுறைகள் தாண்டி, ‘ஜம்ப் கட்’ வைத்து இன்றைய நவீன யுகத்துக்குள் கதையை நுழைத்த ஆசிரியரின் அபார கற்பனையும் கவிதை வீச்சும், சிறுகதை இலக்கியத்தில் ஒரு மகத்தான தருணமும் கலைவெற்றியும் ஆகும்.
வீர யுகத்துக்கு கவிதை நடையும், நவீன யுகத்துக்கு உரைநடையும் சிறப்பாக பொருந்தியுள்ளது. பல்லாயிரம் வருடங்களாக தலைக்கு மேலே கோபுரங்களையும் கடவுளையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டு பழகிய மானுடத்தின் ஆழ்மனதுக்கு, இன்றைய நவீன உலகில் தலைக்கு மேலே அதிகரிக்கின்ற பைப்பாஸ் பாலங்களும், அதன் சாலைகளில் விரைந்தோடும் வாகனங்களும் தருகின்ற அதிர்வை படம்பிடித்து காண்பிக்கிறது ‘சாம்பனின் பாடல்’.
‘அமுதென்றும் நஞ்சென்றும் ஒன்று’ சிறுகதை நவீன காலத்துக்கும் பேலியோ காலத்துக்கும் தாவியபடி நகர்கிறது. வேட்டையில் கணவனை இழந்த பேலியோ காலத்து பெண்ணொருத்தி அவள் வயிற்றில் வளர்கின்ற சிசுவுக்காக ஒரு துண்டு மாமிசம் உண்பதையும் , நவீன பெண்ணொருத்தி திருமணத்துக்காக பேலியோ டயட் உணவுடன் போராடுவதையும் சித்தரிக்கிறது.
‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி’ அரூ இணைய இதழின் அறிவியல் புனைவு போட்டியில் முதல் பரிசை வென்ற சிறுகதை. எதிர்காலத்தில் பூமியை தாண்டி ‘மகிழம்’ எனும் கோள் ஒன்றை பெண் மைய சமூகம் ஆள்கிறது. புதுமைப் பெண்களால் புதியதோர் உலகம் செய்து, முற்றிலும் புதிய விதிகள் படைத்து, ‘மகிழம்’ கோளில் நிகழும் சம்பவங்களை சுவாரசியமாக நகர்த்தி, சிக்கலான அறிவியல் கதையை நம்பகத்தன்மையுடன் கட்டமைத்ததில் வெற்றி பெறுகிறார் ஆசிரியர். ‘அவன்’ சிறுகதையும் ஒரு அறிவியல் புனைவு கதையே. தன்ராஜ் மணியின் ஆரம்ப கால கதைகளில் ஆங்கில சொற்கள் அதிகம் தென்பட்டாலும், ‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி’ , மற்றும் சமீபத்தில் எழுதிய ‘கேளிர்’ அறிவியல் கதைகளில் தூய தமிழ் சொற்களும், அறிவியல் கதைகளுக்காக ஆசிரியர் உருவாக்குகின்ற புதிய தமிழ் சொற்களும் ஆரோக்கியமான வளர்ச்சியை காட்டுகிறது.
வடிவாய் நின் வலமார்பினில், கிரகணம், குளிர் உறையும் கனல், இவை மூன்றும் இந்திய நிலப்பரப்பில் மண்வாசனை வீச எழுதப்பட்டிருக்கிறது. காதல், நட்பு, அரசியல், வியாபாரம், துரோகம், வன்முறை, போதை பழக்கம், விரக்தி, நம்பிக்கை என்று பல புள்ளிகளை விரித்து சொல்லும் இக்கதைகள் நல்ல சிறுகதைக்கான அத்தனை அம்சங்களையும் கொண்டுள்ளன.
கிறிஸ்துமஸ் லைட்ஸ், அன்னை, அணங்கும் பிணியும் அன்றே, இந்த மூன்று கதைகளும் இங்கிலாந்து நிலப்பரப்பில் புலம் பெயர்ந்த ஒரு இந்திய மனம் சந்திக்கின்ற அனுபவங்களை பதிவு செய்கிறது.தன்ராஜ் மணியின் இந்த முதல் சிறுகதை தொகுப்பை வாசிக்கும்போது, பேலியோ காலத்தில் தொடங்கி, வீர யுகம் நுழைந்து, இந்திய மண்ணில் நீந்தி, ஐரோப்பிய மண்ணில் திரிந்து, பிறகு பூமியை தாண்டி வேற்று கோள் சென்று உலவி, பல அற்புத ‘ஜம்ப் கட்’ தரிசனங்களால் நமது வாசிப்பனுபவம் முழுமையடைகிறது.
(சாம்பனின் பாடல் – பதாகை & யாவரும் வெளியீடு)
வெற்றி ராஜா
கட்டுரையாளர்
பயணக் கதை
யுவன் சந்திரசேகரின் “பயணக் கதை” நாவல் 2011ம் ஆண்டில் காலச்சுவடு வெளியீடாக வந்து அதே ஆண்டில் கனடா இலக்கியத் தோட்ட விருதையும் பெற்றது. பொதுவாக யுவனின் எழுத்தை இப்படி விவரிக்கலாம். ஒரு குழந்தை இலக்கற்று அலைவதைப்போல, மனதில் எண்ணங்கள் எந்தவித தர்க்க ஒழுங்குமின்றி கட்டற்று வெளிப்பட்டு, தொடர்பற்ற சங்கிலிகளை உருவாக்கிக்கொண்டே செல்வதையும், வாழ்க்கையும் அதே ஒழுங்கின்மையோடு இருப்பதையும் புனைவில் ஆராயும் எழுத்து. வாழ்வின், எண்ணங்களின் சாத்தியங்கள் யதார்த்தத்திலும் கற்பனையிலும் கச்சா வடிவில் எப்படித் தோன்றுகின்றனவோ அப்படியே புனைவிலும் பதிவுசெய்வதை தன் எழுத்து வடிவமாக அவர் கொண்டுள்ளார். இந்த சரடின் தொடர்ச்சியில் வந்த மற்றுமொரு நாவலே “பயணக்கதை”.
சுற்றுப்பயணம் செல்லும் மூன்று நண்பர்களையும், பயணத்தின் போது அவர்கள் ஒவ்வொருவரும் சொல்லும் புனைகதை தொகுப்பையும் பற்றியது தான் இந்த நாவல். முன்னுரையிலிருந்தே கதை தொடங்கிவிடுகிறது. கதை ஏற்கனவே தொடங்கிவிட்டிருக்கிறது என்பது புரியும்போது நமக்கொரு சிறு பதற்றம் எழுகிறது. நாம் சரியாகத்தான் படிக்கிறோமோ, ஏதும் தொடர்ச்சியை விட்டுவிட்டோமா என்றெல்லாம்கூட தோன்றுகிறது. அந்த இடத்தில் யுவனே தோன்றி ஆற்றுப்படுத்துகிறார் – தொடர்பில்லாமல் இன்னொரு புதிய கதையை சொல்வதன் வழியே. தொடர்ச்சியே தேவை இல்லை என்ற ஆறுதல் வருகிறது.
உண்மையில் இந்த புத்தகத்தை எங்கிருந்து வேண்டுமானாலும் வாசிக்கத் தொடங்கலாம். பின்னிருந்து முன்னதாக, ஐம்பது பக்கம் முன்னும் பின்னுமாக, ஏன் தலைகீழாகக் கூட படிக்கலாமென்றே தோன்றுகிறது. எண்ணற்ற கதைகள் துப்பாக்கி முனையிலிருந்து வெளிவருவதுபோல வழிந்து நிரம்பிக்கொண்டே இருந்தாலும், யுவனின் நடை, கதை சொல்லும் விதம், நகைச்சுவை ஆற்றல், குறிப்பாக வாழ்க்கையின் அவலங்களை அவர் தொட்டுச்செல்லும் உத்தி ஆகியவை நம்மை ஈர்ப்பதோடு ஆழ்ந்து சிந்திக்கவும் திகைத்துப்போகவும் வைக்கின்றன. தத்துவம் பேசிக்கொண்டிருக்கும் பெரியவர்களை அருகிலிருந்து பார்க்கும் ஒரு துடுக்கான சிறுவனின் கண்வழியே இந்த கதைகள் நிகழ்வதால், ஒரு சின்ன பொறுப்பற்றத்தனமும் அதன் விடுதலையும் கிடைக்கின்றன.
பிரதிக்குள் விளையாட்டுத்தனம் நடந்தபடி இருக்கிறது. இந்த நாவலில் கூடவே வரும் கதை சொல்லி பாராட்டையும், விமர்சனத்தையும் தானே முன்வைக்கிறார். எழுதும் எதையும் அவருக்கு வீணடிக்கக்கூட தோன்றுவதில்லை. எழுதிவிட்டு இது சரியாக அமையவில்லை என்று அவரே சொல்லிவிடுகிறார். நாம் படித்து அசந்து போகும் ஒரு பத்திக்குக்கீழே, இது ஒரு செவ்வியலில் இடம்பெறும் அளவிற்குத் தகுதி வாய்ந்தது என்றும் குறிப்பிட்டுவிடுகிறார். சில நேரங்களில் நாம் யோசிப்பதை அறிந்து கொண்டவராக, இந்த பத்திக்கு லாஜிக் தேவையில்லை என்பதே என் எண்ணம் என்றும் சொல்லிச்செல்கிறார். இவற்றையெல்லாம் அழகிய விளையாட்டுக்கள் என்றோ ஏமாற்று வேலைகள் என்றோ அவரவர் விருப்பப்படி சொல்லலாம் போல.
அதே வேளையில் இவற்றையெல்லாம் தாண்டி கதைக்குள் கதை, தொடர்பற்ற கதைகள், கதைசொல்லியின் பார்வை என அடுக்கிக்கொண்டே செல்வது, நம்மை பல நேரங்களில் அனாதரவற்று வெளியே தள்ளிவிடுகின்றன என்பதையும் குறிப்பிட்டாகவேண்டும். வாழ்க்கையின் அத்தனை ஒழுங்கின்மையும் அதே வடிவில் கலைத்து போட்டு ஆராயப்படுகிறது. ஒழுங்கின்மைக்குள் ஏதேனும் ஒழுங்கு இருக்கமுடியுமா என்ற தேடலில் நாமும் இனைந்து பயனிக்கிறோம். குறைந்தபட்சம் ஒரு சரடு கிடைத்துவிடும் என்று அது முன்னேறுகிறது. ஆனால் அந்த பயணம் இலக்கற்றதாகவும் நோக்கமற்றதாகவும் மட்டும் இருந்தால் பரவாயில்லை. சற்று பாசாங்கானதாகவும் மாறுவதால் எது சுவாரஸ்யமாக இருந்ததோ அதுவே எல்லை மீறி சோர்வூட்டுவதாகவும் மாறுகிறது.
இந்த நாவலை மூன்று பிரிவுகளாக வகுக்கலாம். மூன்று நண்பர்கள் பயணம் செல்கிறார்கள்; மூன்று கதை ஊற்றுகள் புலப்படுகின்றன. புலனின்பம், உணர்ச்சி, அறிவு ஆகிய மூன்று நிலைகள் விவாதிக்கப்படுகின்றன. முன்னுரையிலேயே இந்த மூன்று பார்வைகளையும் ஆசிரியரே முன்வைக்கிறார், 1.இஸ்மாயில் கதாபாத்திரத்தின் தர்க்கப் பார்வை, 2. சுகவனத்தின் தரிசனம், 3.கிருஷ்ணனின் இரண்டுக்கும் இடைப்பட்ட முன்முடிவுகளை தவிர்க்க நினைக்கும் அல்லது போதாமையினால் முடிவெடுக்கமுடியாத தன்மை. இந்த மூன்று நிலைகளின் மோதலே கதையாக இருக்கிறது.
எண்ணற்ற கதைகள் அவற்றின் மூட்டம் காரணமாகவே கனவு போல வந்து மறைந்தாலும், இக்கதைகளில் வரும் அவலச்சித்திரங்கள் மனதில் ஆழமாக பதிந்துவிடுகின்றன. வாழ்க்கையில் திடீரென்று அதிர்ஷ்டத்தின் முகம் கொண்டு தோன்றும் ஒன்று எதிர்பாராத விதமாக தலைகீழாக மாறிவிடுவதை யுவன் கச்சிதமாக பதிவுசெய்துவிடுகிறார். இவையே என் மனதிற்கு மிகவும் நெருக்கமான பகுதிகள். பல்வேறு கதைதொகுப்பிற்கிடையில், அவை சாதாரணமாக எந்த அழுத்தமும் இன்றி வந்து செல்வது திகைப்பூட்டுகிறது. விடுவிக்கவும் செய்கிறது.
தென்னவன் சந்துரு
மொழிபெயர்ப்பாளர்