குறுங்கதைகள் : கார்த்திக் பாலசுப்பிரமணியன்

ஒழுங்கு

    வீட்டின் கழிவறையிலிருந்த எல்.இ.டி. பல்ப் பழுதாகி ஒரு வாரத்துக்கும் மேலாகிவிட்டது. இதோ மாற்றிவிடலாம், அதோ மாற்றிவிடலாம் என்று நினைத்துக்கொண்டே மறந்தாகிவிட்டது. செல்போன்களின் பின்புறம் டார்ச் இருப்பதன் பிரதிபலனால் ஒரு வாரத்துக்குத் தாக்குப் பிடிக்க முடிந்தது. இந்த முறை சுதா என்னைப் பிடி பிடியென பிடித்துக்கொண்டாள். கையோடு போய் ஒன்றுக்கு இரண்டாக எல்.இ.டி. பல்பை வாங்கி வரச் சொல்லிவிட்டாள். அவள் சண்டைபோட்டுக் கத்திக்கொண்டிருக்கும்போது கவனித்தேன், அவள் தன் போனை சார்ஜில் போட்டிருந்தாள். காரணம் விளங்கிவிட்டது. மறு பேச்சு பேசாமல் டிசர்ட்டுக்கு மாறி வெளியே கிளம்பிவிட்டேன்.

    வீட்டிலிருந்து முந்நூறு மீட்டர் தொலைவிலிருக்கிறது ராதா எலக்ட்ரிக்கல்ஸ். ஜெயின் ஒருவர் தன் குடும்பத்தோடு அக்கடையை நடத்துகிறார். அவருடைய வீடு கடைக்குப் பின்புறம் அப்படியே சேர்ந்தபடி இருக்கும். கடையில் வேலை பார்ப்பவர்கள்கூட அண்ணன் தம்பிகள் போலதான் இருப்பார்கள். தேவைக்கு அதிகமாக ஒரு வார்த்தை பேச மாட்டார்கள். வந்த வேலை முடிந்தால் கிளம்பிவிட வேண்டும்.

    எப்போதும் அக்கடைக்கு ஆட்கள் வந்து போய்க்கொண்டு இருப்பார்கள். அங்கு வேலை பார்ப்பவர்கள் யாரும் ஒரு நிமிடம் அமர்ந்து பார்த்ததில்லை. எதிரேயிருக்கும் டீ கடைக்கு வரும்போதெல்லாம் இக்கடையை கவனித்துக்கொண்டே இருப்பேன். பத்து பேர் ஒரே சமயத்தில் வந்தாலும் யாருமே ஐந்து நிமிடத்துக்கு மேல் நிற்கத் தேவையிருக்காது. சட் சட்டென வேண்டியதைக் கொடுத்து அனுப்பிக்கொண்டே இருப்பார்கள். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஒரு எலக்ட்ரிக்கல் கடை அவ்வளவு ஒழுங்கோடு கச்சிதமாக அடுக்கி வைக்கப்பட்டு இதற்கு முன்போ பின்போ பார்த்தது இல்லை. கடை பிரதான சாலையின் மேல் இருக்கிறது. இருந்தும் எந்தப் பொருளின் மீதும் தூசு படிந்து பார்த்தது இல்லை. ஒரு மருந்துக் கடையில் பெயர் போட்டு பெட்டி பெட்டியாக அடைத்து வைத்திருப்பதைப் போல இங்கே பல்புகள், லைட்கள், எக்ஸ்டன்ஷன் கார்டுகள், எமர்ஜென்சி லைட்டுகள், வித விதமான பேட்டரிகள், கையலக பேன்களிலிருந்து சீலிங் பேன்கள் வரை எல்லாப் பொருட்களும் அதனதன் இடத்தில் தங்களைக் கச்சிதமாகப் பொருத்திக்கொண்டு அமர்ந்திருக்கும். ஒரு பொருள் தலையையோ காலையோ நீட்டட்டடுமே! நீட்டாது. அவ்வளவு சமத்து.

    இந்தச் சமத்துதான் எனக்கு ஆவதில்லை. அதன் பொருட்டே அந்தக் கடைக்குப் போவதைத் தள்ளிப் போட்டுக்கொண்டு வந்தேனோ என்னவோ? ஒரு முந்நூறு மீட்டர் நடப்பதற்குள் ஓராயிரம் யோசனைகள். பேசாமல், இந்தக் கடைக்குப் பதிலாக சிவன் கோவில் பக்கம் இருக்கும் இன்னொரு கடைக்குப் போனால் என்ன? அதற்கு வண்டியை எடுத்துக்கொண்டு வந்திருக்க வேண்டும். வீட்டிலிருந்து எப்படியும் இரண்டு கிலோ மீட்டராவது இருக்கும். வீராவேசமாக நடந்து வந்துவிட்டேன்.

    கடைக்குப் பக்கத்தில் வந்ததுமே பார்த்தேன். வழக்கம்போல ஆட்கள் வரிசையாக நின்றார்கள். எதிரே இருந்த கடையில் ஒரு டீ சொன்னேன். அங்கிருந்து பத்தடியில் கடை. எதற்காக இப்படி விலகி நிற்க வேண்டும். என்னவோ பகையான பங்காளி வீட்டில் விருந்துக்கு வந்தவனைப் போல இவ்வளவு தயங்கி நிற்க என்ன காரணம்? அதை யோசித்துக்கொண்டே டீயை வாங்கிக் குடித்தேன். நான் செய்வது எனக்கே அபத்தமாகத் தெரிந்தது.

    எனக்குத் தெரிந்து யாருமே இவ்வளவு ஒழுங்கு இல்லை. அப்பா பலகார ருசி வகைகளில் மட்டும் வக்கணையாக இருப்பார். ஒரு முறை டீ வைத்துவிட்டு திரும்ப அதைச் சூடு பண்ணிக் கொடுத்தால் பிடிக்காது. பால் மாறினால்கூட கண்டுபிடித்து விடுவார். அவருமேகூட இவ்வளவு ஒழுங்கு கிடையாது. பெரியப்பா பையன் ஆனந்த் அண்ணன் ரொம்பவும் டீக்காக உடையணிவார். அவர் வீட்டில் ஒரு பொருள் வைத்த இடத்தில் இருக்காது. என்னால் இவ்வளவு ஒழுங்கைக் கடைபிடிக்கும் யாரையும் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. டீயின் கடைசிச் சொட்டை குடித்து முடித்ததும் ஒரே ஒரு பிம்பம் மனத்துக்குள் எழுந்து வந்தது. காந்தி. ஒரு வேளை அவர் லண்டனில் பாரிஸ்டருக்குப் படிக்காமல் ஒரு எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தியிருந்தால் அந்தக் கடை இது போலத்தான் இருந்திருக்கும்.

    அதற்குமேல் அங்கே தாமதிக்க ஏதுமில்லை. இரண்டு எல்.இ.டி. பல்புகள் கண்களில் எரிந்தன. ராதா எலக்ட்ரிக்கல்ஸ் முன்னே போய் நின்றேன். எனக்கு முன் ஆறு பேர் நின்றுகொண்டிருந்தனர். நான் பின்னால் நின்றபடி, அந்தக் கடையில் ஒழுக்கக் குறைவாக ஏதாவது கண்ணுக்குத் தட்டுப்படுகிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தேன். சரியாக வைக்கப்படாத ஒரு பொருளோ, மெல்லிய நூலாம்படையோ, டேபிள் மேல் தூசோ – எதாவது ஒன்று கண்ணில்பட்டுவிட்டால் அன்றைய நாளுக்கு எனக்குப் போதும்.

    “சார் உங்கலுக்கு?” என்று கொச்சைத் தமிழில் கேட்டான் கடை பையன்.

    கடையை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த நான் சட்டென அந்தக் கேள்வியில் திடுக்கிட்டுப் போனேன். ஒரு நிமிடம் என்ன வாங்க வந்தேன் என்பதை மறந்துவிட்டேன். அப்படியே மலைத்துப்போய் நின்றேன்.

    “சார், சார்” என்று மறுபடியும் என்னைக் கேட்டான்.

    இந்த முறை சுதாரித்துக்கொண்டு, “இரண்டு எல்.இ.டி. பல்பு வேணும். சைட்ல இரண்டு பக்கம் புரஜக்‌ஷன் இருக்கிற மாடல்” என்றேன்.

    கிராம்ப்ட்டன் பல்புகள் இரண்டை எடுத்து வைத்தான். “ஒன்னு நூர் ரூபா சார்” என்றான். இதற்கு ஐந்து நொடிகள்கூட ஆகியிருக்காது.

    நான் அவனையும் அந்தக் கடையையும் பார்த்துக்கொண்டிருந்தேன். ஏதாவது ஒரு குறை காண வேண்டும் எனக்கு. பெட்டியிலிருந்து பல்பை எடுத்து கறுப்பு மார்க்கரால் அதன் மேல் அன்றைய தேதியை எழுத ஆரம்பித்தான். அச்சடித்தால் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது. என்னால் அதற்கு மேல் அங்கே நிற்க முடியவில்லை.

    மிகச் சரியாக என் போன் அடித்தது. அதை எடுத்து காதில் வைத்துக்கொண்டு வெளியே வந்தேன். சிவன் கோவில் பக்கக் கடையை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

    O

    அழைப்பு

      பல்ராமை சுடுகாட்டில் எரித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிய அன்றைய இரவுதான் இது ஆரம்பித்தது. பல்ராம் என்னுடைய பள்ளிக்கால நண்பன். பள்ளியில் படித்தவர்களில் என்னுடன் தொடர்பிலிருந்த வெகு சிலரில் பல்ராமும் ஒருவன். படிக்கிற காலத்தில் வகுப்பில் முதல் மாணவன். பெயர்பெற்ற கல்லூரியில் படித்தான். எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. எங்கே தவறினான் என்று தெரியவில்லை. மெது மெதுவாக தன்னைச் சுற்றிக் கடன்களை வளர்த்துக்கொண்டான். சின்னதும் பெரியதுமாக, அவனைத் தெரிந்தவர்கள் அனைவரிடமும் கடன் வாங்கி வைத்திருந்தான். அவனுக்கு மொத்தக் கடன் நாற்பது லட்சம் இருக்கலாம் என்றும் பணம் எதையும் அவனிடம் கொடுத்துவிடாமல் சூதானமாக இருக்க வேண்டும் என்றும் அம்மா சொல்லியபோது ஏற்கெனவே கிட்டத்தட்ட இரண்டு லட்சம் கடன் கொடுத்திருந்தேன். அதன் பிறகுதான் அவனுக்குக் கொடுப்பதை நிறுத்திக்கொண்டேன். தொழில் செய்கிறான், பூ ஏலம் எடுக்கிறான், எப்படியாவது எழுந்து வந்துவிடுவான் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். கடைசி வரை அவன் எழவே இல்லை.

      களைத்து வீடு திரும்பிய அன்றைய இரவு அவனைப் பற்றி நினைத்துக்கொண்டே பச்சைத் தண்ணீரில் வெந்நீர் விட்டு விளாவி வெதுவெதுப்பான நீரில் குளித்துக்கொண்டிருந்தேன். ஹாலில் போன் அடித்தது. தொடர்ந்து அடித்துக்கொண்டே இருந்தது. தலையைக்கூடத் துவட்டிக்கொள்ளாமல் துண்டை மட்டும் இடுப்பில் சுற்றிக்கொண்டு போனை எடுத்துப் பார்த்தேன். அதில் அழைப்பே வரவில்லை. ஆனால், எனக்கு வெகு துல்லியமாக அழைப்பு கேட்டது. இதுதான் முதல் சம்பவம்.

      அதன் பிறகு அடிக்கடி இப்படி நிகழ ஆரம்பித்தது. போன் அடிப்பது நன்றாகக் கேட்கும். அது என்னுடைய மொபைலிலிருந்து வரும் சத்தமேதான். தேடி எடுக்கப் போனால் அழைப்பே வந்திருக்காது. சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, போனை சார்ஜரில் போட்டுவிட்டு சோபாவில் உட்காரும்போது, அசந்து தூங்கிக் கொண்டிருக்கும்போது என்று அடிக்கடி இந்தப் பிரச்சினை ஏற்பட்டது. ஒரு முறை பைக்கில் வந்துகொண்டிருக்கும்போது இப்படித்தான் போன் அடிக்கும் சத்தம் கேட்டது. விடாமல் தொடர்ந்து அடித்துக்கொண்டேயிருந்தது. யாரோ என்னவோ என்று சிக்னலைத் தாண்டி வண்டியை ஓரம்கட்டி எடுத்துப் பார்த்தால், அழைப்பே இல்லை.

      ஆரம்பத்தில் வெறும் மனப் பிரமையாக இருக்கும் என்று கடந்துசெல்லத்தான் முயற்சித்தேன். ஆனால், அது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. வராத அழைப்புக்காக அடித்துப் பிடித்து எடுத்து ஏமாறுவது ஒரு பக்கம் பிரச்சினையைக் கொடுத்தது. மறு பக்கம் எனக்கு வந்த முக்கியமான அழைப்புகளை அவை என்னுடைய கற்பனையான அழைப்புகள் என்று நினைத்து கவனிக்காமல் விட்டுவிடுவது அதைவிட பெரிய சிக்கல்களில் கொண்டு போய் நிறுத்தியது.

      இதிலிருந்து விடுபடுவதற்கான சில வழிகளை நானே என்னளவில் முயன்றேன். மொபைலின் அழைப்பு ஒலியை மாற்றினேன். பெரிய பலனில்லை. போனை வைபரேஷனில் வைத்துப் பார்த்தேன். அதுவும் சேர்த்து என்னைக் குழப்பிவிட்டதுதான் மிச்சம். மற்றவர்கள் உடனிருக்கும்போது இது நிகழ்வதே இல்லை. நான் தனியாக இருக்கும்போது மட்டும்தான் இப்படி நடக்கிறது என்பதைக் கண்டறிந்தேன். அதிலிருந்த ஒரே லாபம் எனக்கு உண்மையான அழைப்பு வரும்போது சுற்றியிருப்பவர்களின் முகக்குறிப்பை வைத்துப் புரிந்துகொண்டேன்.

      இன்னொரு விசயமும் சொல்ல மறந்துவிட்டேன். அன்று பல்ராம் பற்றிய செய்தியைக் கேள்விப்பட்டு வேக வேகமாக வண்டியைக் கிளப்பிக்கொண்டு போகும்போது வழியில் நாய் ஒன்று குறுக்கே வர அப்படியே வண்டியிலிருந்து கீழே விழுந்துவிட்டேன். பெரிய அடி இல்லை என்றாலும் தலை சட்டென்று தரையில் மோதி மீண்டது. அந்த விபத்துக்கும் இந்தத் தொல்லைக்கும் ஏதாவது நேரடித் தொடர்பு இருக்கக்கூடுமோ என்ற யோசனை வேறு ஓடுகிறது.

      பேசாமல் யாராவது ஒரு டாக்டரிம் போய்ப் பார்க்கலாம் என்றால், அதிலும் இ.என்.டி-யிடம் போவதா, தலை அடிபட்டதால் நியூரோவா அல்லது இதற்கு சைக்கியாட்டிரிஸ்ட் யாரையாவது பார்க்க வேண்டுமா என்ற குழப்பம். அதே நேரத்தில் இப்படியான சிறிய பிரச்சினைகளுக்கு மருந்துகள் எடுப்பது மேலதிக குழப்பத்தில் கொண்டுபோய்விட்டால் என்ன செய்வது?

      இது போன்ற மனக் குழப்பங்களுக்குக் கொடுக்கப்படும் பெரும்பாலான மருந்துகள் புத்தியை மழுங்கடிக்கும் வேலையைத்தான் செய்கின்றன என்று மெடிக்கல் ரெப் நண்பன் ஒருவன் எப்போதோ ஒரு சமயத்தில் சொல்லிய செய்தி வேறு இப்போது சரியாக எழுந்து வந்து தொலைக்கிறது. என்னுடைய வேலைக்கு புத்தி கூர்மையாக இருக்க வேண்டும். எண்களோடுதான் வேலை. ஒரு கமாவையோ புள்ளியையோ மாற்றி வைத்தாலும் கதை முடிந்தது.

      நாளாக நாளாக மேலும் சில புதிய குழப்பங்கள் சேர்ந்துகொண்டன. அதிலும் முக்கியமாக காலக் குழப்பம். எது முதலில் நடந்தது எது பின்னர் நடந்தது என்பது என்னைக் குழப்பியது. அன்றுகூட போன் அடிப்பது பற்றிய பிரமை முதலில் வந்து அதன் பிறகு வண்டியிலிருந்து விழுந்தேனா அல்லது வண்டியிலிருந்து விழுந்த பின்பிருந்து இந்த அழைப்புகள் பற்றிய பிரமை பிடிக்க ஆரம்பித்ததா என்று குழப்பமாக இருக்கிறது.

      மேலே சொன்னதில்கூட எதையெல்லாம் வரிசைக் கிரமமாகச் சரியாகச் சொன்னேன் என்று தெரியவில்லை. இதை இப்போதே திரும்பச் சொல்லச் சொன்னால் மேலே சொன்ன அதே வரிசையில் என்னால் திரும்பச் சொல்ல முடியும் என்ற நம்பிக்கை இல்லை. இதெல்லாவற்றையும் என்னை அழைக்கழிக்கும் விசயம் ஒன்று உள்ளது. அன்று அவனுடைய இறப்புக்குப் பிறகு அழைப்பைத் தவறவிடுவது பற்றிய குழப்பம் ஆரம்பித்ததா அல்லது நான் தவறவிட்ட அவனுடைய அழைப்புக்குப் பிறகு அவன் இறந்துபோனானா?

      O

      கார்த்திக் பாலசுப்ரமணியன்

      சென்னையில் வசித்துவரும் கார்த்திக் பாலசுப்ரமணியன், புனைவு பரப்பிலும், விமர்சன பரப்பிலும் தொடர்ந்து இயங்கிவருகிறார். டொரினா என்ற சிறுகதைத் தொகுப்பும், ‘நட்சத்திர வாசிகள்’ என்ற நாவலையும் வெளியிட்டுள்ளார்.

      உரையாடலுக்கு

      Your email address will not be published.