எட்டு மணிக்கு ஆட்டோ வந்துவிடும். அதற்குள் கிளம்பவேண்டும் என்பதால் ஆறுமணியிலிருந்தே ஆயத்தமானாள் சிவகாமி. காபி நிரப்பிய பிளாஸ்க், சோறு சாம்பார் கூட்டுடன் கேரியர், தண்ணீர் டப்பா, போர்வை, துண்டு எப்போதும் எடுத்துக் கொள்ளும் மஞ்சள் பை எல்லாவற்றையும் இரண்டு கட்டைப் பைகளில் பலநாள் பழக்கத்தில் லாவகமாக அடுக்கினாள். இதையெல்லாம்விட உடைகள் மாற்றி முகம் திருத்திக் கொள்வதில் மட்டும் சற்று கூடுதல் கவனம் எடுத்துக் கொண்டாள். சிவகாமியின் கணவன் சுப்பையாவும் அவரின் தம்பி சங்கரும் முகம் மட்டும் கழுவிக்கொண்டு உடை மாற்றிக் கொண்டார்கள்.
ஆட்டோக்காரர் செல்வா சொன்ன நேரத்திற்கு வந்தார். சற்று பெரிதான வடிவில் மூன்றுபேர் மென்னிருக்கையிலும் கூடுதலாக மூன்றுபேர் மரப்பலகையில் அமர்வதற்கு ஏதுவாகவும் அமைந்த வண்டி.
பைகள் இரண்டையும் ஆட்டோவின் பின்பக்கம் வைத்தபின் சிவகாமி முதலில் ஏறிக்கொண்டாள். அடுத்ததாக சுப்பையாவும் மூன்றாவதாக சங்கரும் ஏறிக்கொண்டதும் செல்வா ஆட்டோவை இயக்கினார். டீசல் வண்டி என்பதால் சற்று திணறி உலுக்கிக் கொண்டு நகர்ந்தது. ஊரின் ஒழுங்கைகளை சீரமைத்து செம்மண் கொட்டி உருவாக்கப்பட்ட சாலை. முண்டு ஜல்லிகள் சிதறிக் கிடந்தன. மழையில் நீர் ஓடி உருவான அழுத்தமான தடங்களாக சாலையின் ஓரப் பிளவுகள் சிவந்து கிடந்தன. ஆட்டோ ஆடியும் குலுங்கியும் சென்றது.
“முன்னாடியே கேக்க நெனைச்சேன். உங்க ஊருக்குள்ள கிடக்குற ரோடு மட்டும் ஏன் இவ்வளவு மோசமாயிருக்கு. ஒன்றரை கிலோமீட்டருக்கு அப்புறம் இருக்கிறதெல்லாம் நீட்டா இருக்குதே..” செல்வம் குறிப்பாக யாரிடமுமில்லாமல் பொதுவாகக் கேட்டான்.
காலை வெயில் எழுந்து இளம் புற்களை மென்மையாக வருடிக் கொண்டிருந்தது. வெயில்பட்டதால் புற்களின் நீர்மை உலரும் வாசம் மிதமாக பரவியிருந்தது. சங்கரின் பார்வை ஒளிரும் புல் நுனிகளின் மேல் தாவித்தாவி படர்ந்து கொண்டிருந்தது. யார் பதில் சொல்வது என்ற யோசனையால் ஆட்டோவினுள் மௌனம் நிலவியது. செல்வம் திரும்பி சுப்பையாவை நோக்கினான். தளர்வாக பின்னோக்கி சாயந்தமர்ந்திருந்த சுப்பையா சற்று நிமிர்ந்தமர்ந்தார்.
“இந்த ரோடு எங்கவூரு காண்ட்ராக்டர் சுந்தரம் போட்டது. மத்த ஊருக்காரங்கன்னா ஏன்டா இப்படிக் கெடக்குன்னு போயி கேக்கலாம். இவரு உள்ளூருக்குள்ளே இருக்காரு. எந்திரிச்சா அவரு மொகத்துலதான் முழிக்கனும். ஏதாவது கேட்டு கர்புர்னு திரிஞ்சா நிம்மதியிருக்காதுல்ல. அதோட இவரு நம்பி வேலைய ஒப்படைச்சவன் இவரை ஏமாத்திட்டதா அவரு பொண்டாட்டி கரைஞ்சுகிட்டுக் கெடக்குது..”.
பதிலை ஆமோதிப்பதாக செல்வம் தலையாட்டினான்.
சாலையின் இரண்டு பக்கமும் முள் புதர்களே வேலியென மாறியிருக்க உள்ளே சீனக்கருவேலங்கள் பரவியிருந்தன. ஒன்றிரண்டு மாமரங்களும் சில முந்திரிகளும் பெரும்பிரயத்தனங்களுடன் தங்கள் கிளைகளை மேல்நோக்கி நீட்டிக் கொண்டிருந்தன. முன்பெல்லாம் ராமுப்பிள்ளையின் இக்கொல்லைகளில் மஞ்சள் சிவப்பு பச்சை என பலவித வண்ணங்களில் முந்திரி காய்த்துத் தொங்கும். எத்தனை முந்திரிப் பழங்களை வேண்டுமானாலும் பறித்துக் கொள்ளலாம் ஆனால் கொட்டைகளை அங்கிருக்கும் பிரம்புக் கூடையில் போட்டுவிட வேண்டும். காலை நேரங்கள் தித்திப்பும் காரமுமாய் வாயில் முந்திரிச்சாறு வழிந்த தினங்கள் அவை. அப்போது கொல்லைக்குள் சிறிதாய் முளைக்கும்போதே முள்செடிகளை பிடுங்கி ஓரிடத்தில் குவித்துவைத்து சில நாட்களுக்குப்பின் காய்ந்த அவற்றை கொளுத்துவதை பிள்ளைகளெல்லாம் விளையாட்டாய் செய்வார்கள்.
வண்டி பெரிய குலுக்கலுடன் ரயில் தண்டவாளத்தைக் கடந்தபோது சங்கரின் நினைவு அறுந்தது. அதன்பின் வண்டி அலுங்காமல் ஓடத் தொடங்கியது. அதற்காகவே காத்திருத்தாற்போல் சிவகாமி “பாட்டைப் போடுங்கண்ணே..” என்று கூறினாள்.
சங்கர் வியப்புடன் அண்ணியின் முகத்தை நோக்கினான். சுப்பையாவின் முகத்திலும் சிறு ஆர்வம் மிளிர்ந்தது. செல்வம் தன் திறன்பேசியை இயக்கினான்.
“நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்…
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்..”
திறன்பேசியுடன் இணைப்பிலிருந்த ஒலிபெருக்கியில் பாடல் இனிமையாய் ஒலித்தது.
“இந்தப் பாட்டு வேண்டாம்னே.. பழைய பாட்டுகளா போடுங்க..” என்று சிவகாமி உரத்துக் கூறினாள்.
“எம்ஜியார் தத்துவப் பாட்டு போடவாம்மா..”
“ஏண்ணே… போன வாரம் போட்டது மாதிரி போடுங்களேன்…”
“ஓஓ காதல் பாடல்களா… ஏற்ர ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி கேக்கராங்களா அதான் மறந்திடுச்சு” என்று சொல்லியபடியே பாடலை மாற்றினார்.
“தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் நான் சிவந்தேன்…”
டிஎம்எஸ் சுசிலா குரலில் எம்ஜியாரும் சரோஜா தேவியும் பாடினர்.
சிவகாமி ஒரு கணத்திற்குள் முப்பதாண்டிற்குமுன் நாட்டு ஓடு வேய்ந்த தன் வீட்டு அடுப்படியில் நின்றாள். முற்றத்தில் சுப்பையாவும் அவன் நெருங்கிய உறவினர் சிலரும் இருந்தார்கள். பக்கத்து வீட்டு கமலா இவளின் கையை அழுத்திப் பிடித்து வெளியே அழைத்து வந்தாள். சுப்பையா அருகிலிருந்த உற்ற நண்பன் கணேசனிடம் எதையோ பேசி அதற்கென மலர்ந்த முகத்துடன் திரும்பி இவளைப் பார்த்தான். இவளின் தலைக்குப் பின்னிருந்து படர்ந்த சூரியவொளி அவன் மார்பில் படவும் வெள்ளைச் சட்டை மஞ்சளாக ஒளிர்ந்தது. இவள் முகத்தைக் கண்டு புன்னகை உறைய சில கணங்கள் அப்படியே மெய் மறந்திருந்தான். இவளும் அவன் பார்வையில் கோர்த்துக் கொண்டு சில கணங்கள் அப்படியே நின்றாள். கமலா செல்லமாக தோளில் இடித்த பின்தான் சுதாரித்து தலை குனிந்தாள். மறு பேச்சே இல்லை. திருமணம் அப்போதே நிச்சயமானது. அக்கணத்தை எண்ணி பல்லாயிரம் முறை மெய் சிலிர்த்திருக்கிறாள். அவன் விழிகளில் அப்போது தெரிந்ததென்ன. இவள்தான் இவளேதான் என்றா. இத்தனை அழகான முகமா என்றா. இவளின்றி என் வாழ்வில்லை என்ற உறுதியா. உலகத்தில் இவள் மட்டும் போதும் என்ற துணிவா… எண்ண எண்ண மனதில் தித்திப்பு மிகுந்து கொண்டேயிருந்தது. யாரிடமும் பகிராததால் குறையாமலும் நீடித்தது. திருமணமாகி இத்தனை ஆண்டுகளில் அக்கணத்தைப் பற்றி அவரிடம் கேட்டதேயில்லை. அவர் அப்படியொன்றுமில்லை என கூறிவிட்டால் இவளுக்குள் ஊறிக் கொண்டிருக்கும் இனிமையை அது அடைத்துவிடக் கூடும் என்ற அச்சம் உள்ளுக்குள் சிறு முள்முனையளவு இருந்தது. இவருடனான வாழ்வின் பேரிடர்களையெல்லாம் அப்போது துளிர்த்த இனிமையைக் கொண்டே கடந்து வந்திருக்கிறாள். இப்போதும் அந்த சிலிர்ப்பு தோன்றியது. அதிலேயே அமிழ்ந்திருக்க உள்ளம் விழைந்தது.
“ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை … “
சுப்பையாவின் மனம் அவர் பள்ளியில் பனிரெண்டாவது பயின்ற காலத்திற்குள் சென்று காலூன்றியது. பள்ளியில் பெண்களுக்கான சீருடையான இளஞ்சிவப்பு நிற பாவாடை தாவணியும் வெண்ணிற ஜாக்கெட்டும் அணிந்திருந்த ஆனந்தி அத்தனை வசீகரமாய் இருந்தாள். சுவரோரமாக அமர்ந்து, ஜன்னலை நோக்கி வருவதும் விலகுவதுமாயிருந்த செம்பருத்தியை பார்த்துக் கொண்டிருந்தாள். அன்று காலை இடைவேளை நேரத்தில் எதேச்சையாக இவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை. முன்மதிய வெயில் எதன்மீதோ பட்டு பிரதிபலித்து ஆனந்தியின் முகத்தில் பக்கவாட்டில் கன்னத்திலிருந்து பின்னந்தலைவரை படர்ந்தது. நிலவினைப் போல பிரகாசமாய் ஒளிர்ந்தாள். ஆனந்தி அதை அறியவில்லை. ஆனால் அவளது மேனியில் ஒவ்வொரு மென்சிகையிலும் தன்னிச்சையாக ஒரு சிலிர்ப்பு தோன்றி பரவியதை மிக அணுக்கத்திலென இவன் கண்டான். சுப்பையாவின் மனம் பரவசத்தில் துள்ளியது. அவ்வொளி கோணம் மாறும்முன் மனதினுள் அக்காட்சியை நிறைத்துக் கொள்ளவென துடிப்பெழுந்தது. மிகக் குறுகிய நேரமே உள்ளதென்பதே பதட்டத்தையும் பெரும் ஏக்கத்தையும் ஒருசேர எழுப்பியது. பார்த்துக் கொண்டிருக்கவே சட்டென அவ்வொளி வேறொரு திசைக்கு மாறித் தாவியது. பெரும் இழப்புணர்வு தோன்ற இவன் விழிகளில் கண்ணீர் கசிந்தது. அப்போதே இவன் மட்டுமே கண்ட அரிய காட்சியென ஒரு பிரமிப்பும் பெருமிதமும் தோன்றியது. அதுவரை அவள்மேல் கொண்டிருந்த விடலைப்பருவ உணர்வுகள் அத்தனையும் பொடிந்து உதிர்ந்தன. மனதில் பதிந்த அக்காட்சியை அப்படியே உள்ளாழத்தில் பொதிந்து கொண்டான். முன்புபோல் அதன் பிறகு அவளைப் பார்க்க ஆவல் எழவில்லை. இன்றுவரை தினமும் ஒருகணமேனும் அக்காட்சியை நினைவில் மீட்டி சிலிர்த்துக் கொள்வான். இப்போதும் அவ்வொளி படர்ந்ததை அவள் முகம் ஒளிர்ந்ததை அத்தனை மென் சிகைகள் சிலிர்த்ததை துல்லியமாக கண்டான்.
சங்கர் வியப்புடன் அண்ணியின் முகத்தை நோக்கினான். சுப்பையாவின் முகத்திலும் சிறு ஆர்வம் மிளிர்ந்தது. செல்வம் தன் திறன்பேசியை இயக்கினான்.
வெளியே, ஆண்டுதோறும் சித்திரை மாதம் பனிரெண்டைய்யனார் திருவிழா நடைபெறும் மண்டபம் புழுதியுடனும் வெயிலுடனும் புழுங்கிக் கொண்டிருந்தது. மண்டபத்தின் மையத்தில் ஒரு வெள்ளாடு தன் குறுவாலை ஆட்டி ஈயோட்டிக் கொண்டிருந்தது.
“பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா…
கோயில் கொண்ட சிலையா கொத்து மலர்க்கொடியா ஹோய்…”
அடுத்த பாடல் ஒரு மாயம்போல சங்கரை அவனது தனிப்பட்ட காலத்திற்குள் கொண்டு நுழைத்தது. அலுவலகத்தில் சேர்ந்த முதல் நாள் அந்தக் குரலைக் கேட்டான். இவன் பணியில் சேர்ந்து கொள்ளும் கடிதத்தை உயரதிகாரியிடம் கொடுத்து அவர் கடிதத்தை வாசித்துக் கொண்டிருந்த தருணம்.
“சார், ஒங்கள செகரெட்டரி அவசரமா கூப்பிடறார்…” என ஒலித்தது. ஒரு பெண் குரல் இத்தனை இனிமையுடன் இருக்க முடியுமா என திகைத்து அக்குரலுக்கான முகத்தை பார்க்க மனம் துடித்தது. திரும்பும்முன் “இதோ வர்றேன் சுந்தரி” என அதிகாரியின் கரகரக் குரல் ஒலித்தது. முதல் சந்திப்பிலேயே தன் ஆவலாதியை அவர் முன் காட்டிவிடக் கூடாது என உள்மனம் கட்டளையிட திரும்பாமல் ஒதுங்கி அவருக்கு வழிவிட்டான். அவள் செயலாளரின் தனி உதவியாளராக இருக்கக்கூடும்.
ஒரு வாரத்திற்கு பிறகே செயலாளரைக் காண்பதற்கான அவசியம் ஏற்பட்டது. உள்ளம் குறுகுறுக்கச் சென்றான். அவர் அறைக்கு வெளியே தோள்வரையே படரும் சிகையுடன் கருப்பு நிறத்தில் வசீகரமற்ற ஒரு பெண் அமர்ந்திருந்தாள். அவள் இல்லையே என்ற ஏக்கத்துடன் ‘மேடம்…’ என்றழைத்தான். விழிகளை நிமிர்த்தி இவனை நோக்கியவளிடம் தன் பெயரையும் பதவியையும் கூறி செயலாளரைக் காணவேண்டும் எனக் கூறினான்.
“உள்ள ஒருத்தர் இருக்காரு. அவர் வந்த பிறகு நீங்க போகலாம். உக்காருங்க…” என எதிரிலிருந்த இருக்கையை கைகாட்டினாள். அதே தித்திப்பான குரல். இவன் மனம் வியப்பும் அதிர்ச்சியும் கலந்து தவித்தது. அழகான பெயரும் இனிய குரலுமாக இருப்பவள் அழகான தோற்றத்திலும் இருக்கவேண்டுமென கட்டாயமில்லையே என மனக் கலக்கத்தை தெளிவிக்க முயன்றான். அதன்பின் செயலாளர் அறைக்கு செல்வதை அதிகப்பட்சமாக தவிர்க்க முயன்றான் என்றாலும் வாரம் இருமுறையேனும் செல்ல வேண்டியிருந்தது. இவன் மனம் கற்பனித்துக் கொண்டதுபோல அவள் இல்லாததற்கு அவள் காரணமில்லையே என்பதுபோல ஏதேதோ காரணங்களை அடுக்கி மனதை தேற்றினான். சில வாரங்களிலேயே பெயரையும் குரலையும் முகத்தையும் இயைந்ததாக மனம் மாற்றிக் கொண்டது. அந்த கருநிற பருக்களால் மேடுபள்ளங்களான அம்முகத்திலும் ஒரு வசீகரத்தைக் கண்டுகொண்டான். அதன்பின் அவளிடம் ஒருவித பிரியம் தோன்றிவிட்டது. இப்போது அம்முகமும் குரலும் நினைவில் எழுந்து மனதில் ஒருவித இனிமை நிறைந்தது.
எட்டுப் பாடல்கள் ஒலித்து முடித்தபோது ஆட்டோ புதுவயல், கண்டனூர், அழகாபுரி, கோட்டையூர் கடந்து ஸ்ரீராம்நகரை கடந்து காரைக்குடியை அடைந்தது. அழகப்பா கல்லூரி சாலைக்குள் திரும்பாமல் நேராகச் சென்று எம்.எம். மருத்துவமனைக்குள் நுழைந்து நின்றது. ஆட்டோ நின்று பாடலை நிறுத்திய பின்தான் மூவரும் உள்ளிருந்து மீண்டு வெளியே பார்த்தார்கள். சிவகாமி ஐநூறு ரூபாயுடன் ஒரு மடித்த பேப்பரை செல்வத்திடம் நீட்டினாள்.
“வரும்போது இதுல எழுதியிருக்கிற சாமான்கள வாங்கிட்டு வந்திருங்க. நொறுக்குத் தீனின்னு போட்டிருக்கு. அதுக்கு கடுக்குன இல்லாம லேசா மெல்றாப்புல உள்ளதா பாத்து வாங்கிக்கங்க..” எனக் கூறவும் செல்வம் தலையாட்டினான்.
சங்கர் வேகமாக இறங்கி வழிவிட மெதுவாக சுப்பையாவும் தொடர்ந்து சிவகாமியும் இறங்கி மருத்துவமனைக்குள் சென்றார்கள். சங்கர் பைகளை தூக்கிக் கொண்டு வரவேற்பறையைக் கடந்து உள்ளே சென்றான். காரிடாரில் ஓரமாக போடப்பட்டிருந்த பலர் அமரும்படியான இரும்பு நாற்காலித் தொகுப்பில் சுப்பையா அமர்ந்திருந்த இடத்திற்கருகில் வைத்தான்.
சிவகாமி அருகில் மூடியிருந்த அறைக் கதவைத் திறந்து உள்ளே சென்றாள். அங்கு அமர்ந்திருந்த செவிலி “எத்தனையாவது டோக்கன்மா..” எனக் கேட்க “பன்னெண்டும்மா” என்றாள்.
“ஓடிக்கிட்டிருக்குது, அரைமணி நேரமாகும். ஒக்காருங்க..” என்ற பதிலை கேட்டவுடன் வெளியே வந்தாள்.
இவளைப் பார்த்துக்கொண்டிருந்த சுப்பையாவின் அருகில் அமர்ந்தவள் அவரைப் பார்க்காமலேயே “இன்னும் அரைமணி நேரம் ஆகுமாம்” என்றாள். தள்ளி நின்ற ரமா அருகில் வந்து “எத்தினாவது டோக்கன்மா..” என்று கேட்டார்.
“பன்னெண்டுக்கா… ஒங்களுக்கு”
“பதினொன்னு”
“இன்னும் அரைமணி நேரமாகுமாமே…”
“வாரத்துல ஒருநாப் பொழுது இங்கேயே கழியிது…”
அவர்கள் தொடர்ந்து பேச ஆரம்பித்தார்கள்.
சுப்பையாவின் மனம் இதன் ஆணிவேருக்கான விதை விழுந்த இடத்தை நோக்கிச் சென்றது. கோயம்புத்தூரின் முதன்மையான பத்து தொழிற்சாலைகளில் இவன் பணிபுரிந்த நிறுவனமும் ஒன்று. ஏறக்குறைய நூறு துணை தொழிற்சாலைகளில் தயாராகும் தனித்தனிப் பாகங்களை ஒன்றிணைத்து பிரபலமான காரின் தொன்னூறு சதவீத பணிகளை முடித்து அந்நிறுவனத்திற்கு அனுப்புவது இந்நிறுவனத்தின் பணி. சுப்பையா கணக்கருக்கு உதவியாளனாக ஐந்து ஆண்டுகளும் கணக்கராக பத்து ஆண்டுகளும் பணி புரிந்த பின் கணிப்பொறி வந்தது. எல்லாமே ஒருவித அட்டவணைதான். பாகங்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருளை அனுப்புவதையும் நிறைவடைந்த பாகங்களை பெறுவதையும் சரியாக நிரப்பிவிட்டால் கூட்டலோ கழித்தலோ செய்து இருப்பு நிலையைக் காட்டிவிடும். அதில் உள்ளீடு செய்வது இவனுக்கு கடினமாக இருந்தது. தொகைகளை பதிவேற்ற ரமேஷ் என்ற இளைஞனை அமர்த்தியிருந்தனர். அதனைக் கண்காணிப்பது இவனது பணி. அன்று ரமேஷ் வீட்டில் ஏதோ முக்கிய வேலை என விடுப்பு எடுத்திருந்தான். எண்களைப் பார்த்து அடிப்பதுதானே இதிலென்ன சிரமம் என்ற எண்ணத்துடன் சுப்பையாவே எல்லா கணக்குகளையும் பதிவேற்றினார். ஒவ்வொரு விசையாக அழுத்தி இரண்டு மணி நேரத்தில் முடித்தார். கணினி வந்தபோது பழையவர்களை எல்லாம் கழித்துவிடுவார்கள் என்ற பேச்சு வந்ததில் இவருக்குள்ளும் அச்சம் தோன்றியிருந்தது. இளையவர்கள் பார்க்கும் வேலையை தன்னாலும் பார்க்க முடிகிறதே என அப்போது புதிதாகவொரு உவகை ஏற்பட்டது. மாலை வீட்டிற்கு திரும்பும்போது ஒருவித பரவசத்தில் மனம் தவித்தது. இதைக் கொண்டாட ஓர் துடிப்பு எழுந்து ஒவ்வொரு செல்லுக்கும் பரவியது. அந்த உயர்தரமான பார் வசதியுள்ள ஹோட்டலுக்குள் நுழைந்தான்.
அந்த அறை குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருந்தது. மூன்றுபேர் அமர்ந்து அருந்துவதற்கான இருக்கைகளுடன் வட்டமான மேசைகள் இடப்பட்டிருந்தன. அறை முழுக்க வெளிச்சம் சற்று குறைவாகவும் பாட்டில்கள் அடுக்கியிருந்த பகுதி வண்ணங்கள் ஒளிரவும் இருந்தது. இந்த இடத்திற்கு வருவதற்கான விழைவு ஏற்கனவே இருந்திருக்கும் போலும். ஏதோவோர் காரணம் கிடைத்தவுடன் நேராக மனம் இழுத்து வந்துவிட்டது. இரவு எட்டு மணிதான் என்பதால் சில மேசைகளில் மட்டுமே ஆட்கள் இருந்தார்கள்.
இதுவரை மது அருந்தியதில்லை. ஊரில் திருவிழாவின்போது இவன் வயசுக்காரர்கள் கள்ளருந்த இவனை அழைப்பார்கள். அப்பாவின் மரியாதைக்கு குந்தகம் விளையக்கூடாதென்ற எண்ணத்தில் மறுத்துவிடுவான். சிலமுறை அழைத்தவர்கள் பிறகு நல்லவர்கள் வரிசையில் இவனையும் சேர்த்துவிட்டு அழைப்பதை நிறுத்திக் கொண்டார்கள். இத்தனை வருடங்கள் பழகாமல் புதிதாக தொடங்குவதை ஏதோவொன்று தடுத்தது. ஊரிலேயே நல்லவர் என்ற அப்பாவின் பிம்பமா. மனைவி சிவகாமியையும் பிள்ளையையும் எதிர்கொள்வதற்கான வலிமையின்மையா, பொதுவாக தன்னைப்பற்றி புழங்கும் அடையாளம் சிதைவதில் விருப்பமின்மையா. எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அதை உடைத்துக் கடக்கிறேன். எதற்காகவும் என் மனதாழ விழைவை இனியும் ஒத்திப்போடப் போவதில்லை. அதன் விளைவுகள் என்னவாக ஆனாலும் சரி. இத்தனை தூரம் வந்த பிறகு பின்வாங்கப் போவதில்லை.
அருகில் வந்த பரிசாரகனிடம் “நான் இன்னைக்குதான் முதல் தடவ வர்றேன். லைட்டா ஏதாவது கொண்டு வா…” என்றார். அவன் கொண்டுவந்த கண்ணாடி குவளையை ஆசை பொங்கப் பார்த்தார். விழிகள் லேசாக கசிந்தது. எத்தனை வருட காத்திருப்பு. ஏழாம் வகுப்பு படிக்கும்போது சித்தப்பா அவர் நண்பர்களுடன் குடித்ததை பார்த்தான். என்னவொரு உற்சாகம் மகிழ்ச்சி சிரிப்பு திளைப்பு… அப்போதுதான் இவ்விழைவு முளைவிட்டிருக்க வேண்டும். கையில் எடுத்து உதட்டில் வைத்து சிறு மிடறு உறிஞ்சினான். புளிப்பு வாடையுடன் ஒருவித கசப்பாக இருந்தது. சட்டென அப்படியே முழுதாய் கவிழ்த்து ஒரே மூச்சில் உள்ளிறக்கினான்.
காலையில் கண்விழித்தபோது தன் படுக்கையறையில் இருந்தான். சுவர்கடிகாரம் பத்து மணியைக் காட்டியது. ஒரு திடுக்கிடல் எழுந்தது. சிவா என்றழைத்தான். சிவகாமி உள்ளே வந்தாள். அவள் முகத்தை கூர்ந்து பார்த்தான். எவ்வுணர்ச்சியையும் மிகையாகக் காட்டாமல் இயல்பாகவே இருந்தது.
“பத்து மணிவரைக்கும் ஏன் எழுப்பல…”
“நான் எப்ப உங்கள எழுப்பியிருக்கேன்…” என்ற எதிர்க் கேள்வியை சரிதானே என ஆமோதிப்பதாக தலையாட்டினான். எப்போதுமே காலை ஆறுமணிக்குள் எழுந்துவிடுவது இவன் வழக்கம். வேலை நாளோ விடுமுறை நாளோ இது மாறாது. மேல்நிலைப்பள்ளி காலத்தில் முதலில் அலாரம் வைத்து எழுந்தான். வழக்கம் தொடர்ந்தபோது அலாரம் அடிப்பதற்கு சில நிமிடங்கள் முன்னதாக விழிப்பு வந்துவிடும். எழுந்து அலாரம் அடிப்பதற்கு முன்னமே அதை நிறுத்தினான். பின் அலாரம் தேவைப்படவில்லை.
இவன் அறைக்குள் நுழையும்போதே இவனை மேலாளர் அழைப்பதாக சொன்னார்கள். அவர் கதவை லேசாக தட்டிவிட்டு நுழைந்தான். அமர்ந்திருந்தவர் எதிர் இருக்கையை சுட்டினார். இவன் அமர்ந்தபின்
“சுப்பு நேத்து நீங்க கொடுத்த பில்லுல தொன்னூத்தி ஒன்பதாயிரம் கூடுதலா இருந்திச்சி…”
இவன் அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தான்.
“தப்பா ஒன்னும் ஆயிடல. ரமேச காலையிலேயே வரச் சொல்லி புதுசா அடிச்சு சரியான பில்ல அனுப்பியாச்சு..” என்று கூறி சிறு தயக்கத்துடன் “இனி ரமேஷ் லீவுன்னா ஒருநாள் கழிச்சுகூட பில்லப் போட்டுக்கலாம் ஒன்னும் பிரச்சனையில்லை. ஒங்ககிட்ட சொல்லனுமேன்னுதான் கூப்டேன். ஒன்னும் தப்பா நெனைச்சுக்காதீங்க..” என்றார்.
கால்கள் லேசாக நடுங்க எழுந்தான். சுப்பையாவின் தன்முனைப்பின்மீது பேரெடை ஒன்று தாக்கி இனி எப்போதுமே மீட்க முடியாத குலைவை ஏற்படுத்தியது. எப்படி எங்கே தவறு நிகழ்ந்திருக்கும். ஒவ்வொரு எண்ணாகப் பார்த்துதானே அடித்தேன். இருக்கைக்கு சென்று அந்தப் பில்களை எடுத்துப் பார்த்தான். பத்துப் பக்கங்கள். எருமைகள் குளித்த குட்டைபோல மனம் கலங்கியிருந்தது. இப்படி நிகழ்ந்துவிட்டதே என்ற தோல்வியுணர்சியும் அவமானமும் ஏற்படுத்திய நிலைகுலைவுடன் கால்குலேட்டரைக் கொண்டு முழுவதையும் கூட்டியும் கழித்தும் பார்த்தான். இப்போது சரியான தொகை வந்தது. ஆனால் தவறு நிகழ்ந்ததெங்கே என அறியமுடியவில்லை. மனதில் பெரும் ஆவேசம் எழுந்தது. அதை அறிந்தே ஆகவேண்டும் என மீண்டும் மீண்டும் அப்பக்கங்களை பார்த்துக் கொண்டேயிருந்தான். கண்டறியமுடியவில்லை. வேறு வழிதெரியாமல் ரமேஷை அழைத்தான். அவனின் பார்வையில் கேலியிருக்கிறதா என நோக்கினார். அப்படியெதுவும் தெரியவில்லை. இல்லை கண்டிப்பாக உள்ளுக்குள் தோன்றும் கேலியை வெளித்தெரியாமல் மறைக்கவும் கற்றுள்ளானோ.
“இதுல தொன்னீத்தி ஒன்பதாயிரம் அதிகமாக் காட்டுதே, எங்கே தப்பாயிருக்குன்னு பாத்துச் சொல்லேன்..” என்றார்.
“ஓகே சார்..” என்று சொல்லியபடி வாங்கிச் சென்றவன் இரண்டு நிமிடத்தில் திரும்பி வத்தான்.
“சார் முதல் பக்கத்தில கடைசியா ஆயிரம் ரூபாய்க்கு பதிலா ஒரு லட்சம்னு அடிச்சிருக்கீங்க சார்..” எனக் காட்டினான்.
இவர் வாங்கிப் பார்த்தார். “அது ஆயிரம்தானே. ஒன்னு போட்டு மூனு ஜீரோக்கு அப்புறம் பைசாவுக்கு ரெண்டு ஜீரோ…”
“சார் அங்க புள்ளி வைக்காததுதான் தப்பாயிருக்கு. புள்ளி வைக்காததனாலதான் ஆயிரம் ரூபா லட்ச ரூபாயா மாறிடிச்சு…” இயல்பாக சிரித்தபடி நகர்ந்தான்.
ஆம் மெலிதாய் புன்னகைத்து நகர்ந்துவிடவேண்டிய அளவிற்கு மிகச்சிறிய விசயம்தான் என பிறகு பலமுறை தோன்றியிருக்கிறது. ஆனால் அப்போது பெரிதாக அவமானம் அடைந்துவிட்டதாக மனம் அடங்காமல் திமிறி துடித்தது. இத்தனை நாள் ஈட்டி காத்துவந்த மரியாதையை இழந்துவிட்டதாக மறுகியது. புயல் கடந்துபோன வாழைத்தோப்பென மனம் குலைந்துபோனது. தன் இருக்கையிலேயே உள்ளம் கொதிக்க அமர்ந்திருந்தவன் வெளியே வந்து வண்டியை எடுத்தான். மதுபானக் கடையின் முன் நின்றவுடன்தான் தன்னிச்சையாக அங்கு வந்திருப்பதை உணர்ந்தான்.
சுப்பையா ஒரு கசந்த புன்னகையுடன் சுவரில் மாட்டியிருந்த வாசகத்தின் மீது பார்வையை ஓட்டினார். “எப்போதும் உன்னைவிட்டு நீங்குவதுமில்லை. உன்னைக் கைவிடுவதுமில்லை”. இவரைக் கவனித்த சிவகாமி தனது வலதுகையை அவரது கோர்த்த கரங்களின் மீது வைத்து மென்மையாக அழுத்தினாள்.
சுப்பையா எப்போதும் வீட்டிற்கு திரும்பும் நேரம் கடந்ததுமே சிவகாமியின் மனதில் மெல்லிய பதட்டம் உருவாகி அதன் அளவு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும். அதற்கு மனதின் மற்றொரு முனை ஆற்றுப்படுத்தும் சொற்களை அடுக்கும். அச்சொற்கள் விளக்கிற்கு இடும் நெய்போல பதட்டத்தை ஊக்கி உயர்த்தும். மனதிற்குள் நிகழும் போராட்டம் உச்சத்தை அடையும் தருணத்தில் வண்டிச் சத்தம் கேட்டது. ஊரில் பெரும்பாலானவர்கள் வைத்திருக்கும் ஸ்பிலன்டர்தான் என்றாலும் இவர்களின் வண்டியின் சத்தத்தில் எழும் பிரத்யேகமான ஏதோ ஒன்றைக் கொண்டு இவளால் அறிந்துவிட முடிந்தது.
வண்டியை சுற்றுச்சுவரை ஒட்டி நிறுத்தினார். அவர் முகத்தில் இவளைக் கண்டவுடன் மலரும் புன்னகை இல்லை. பூமியின் மீதே பிரக்ஞையின்றி வேறெதோ பரவசத்தில் திளைத்திருந்தது முகம். கலவியின் முடிவில் கொள்ளும் பரவசத்திற்கு நிகராகவா… இல்லையில்லை அதற்கும் மேலான நிலை. வண்டியிலிருந்து இறங்கியவரால் அடுத்த அடி எடுத்துவைக்க முடியவில்லை என்பதைக் கண்டதும் பெரும் திடுக்கிடல் தோன்ற சட்டென விழிகளில் நீர் திரண்டது. பின் பலமுறை யோசித்திருக்கிறாள் அப்போதே உள்மனம் நிகழவிருக்கும் அனைத்தையும் அறிந்துவிட்டதுபோலும் என.
தாங்கியபடி அழைத்துச் சென்று படுக்கையில் சாய்த்தாள். பாம்பு நுழைந்த வீட்டிற்குள் இருப்பதைப்போல உடல் விதிர்த்துக் கொண்டே இருந்தது. இரவு விழி மூடவேயில்லை.
பையன் சீனி இங்கில்லாமல் சென்னையில் எஸ்.ஆர்.எம் கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கிறான். அவன் இருந்திருந்தால் சூழ்நிலையை எதிர்கொள்வதில் சிக்கலாயிருக்கும். காலையில் பத்துமணிக்குதான் விழித்தார். எழுந்தவுடன் நடந்ததைப் பற்றி கேட்டால் அன்றைய நாள் வீணாய்ப் போய்விடக்கூடும், மாலை வந்தவுடன் கேட்டுக்கொள்ளலாம் என இருந்துவிட்டாள்.
சிவகாமியின் பெரியம்மா மகள் சாரதா அவள் கணவன் முதல்முறை குடித்துவிட்டு வந்தபோது ஊரைக்கூட்டி ஒப்பாரி வைத்துவிட்டாள். காலையில் அவன் விழிக்கையில் வீட்டில் கூடியிருத்த மொத்த சொந்தக்காரர்களும் அவனுக்கு அறிவுரை சொல்ல வெளியே சென்றவன் திரும்பவேயில்லை.
இத்தனை ஆண்டுகள் இல்லாமல் புதிதாக தொடங்கியுள்ளாரே, யாராவது வற்புறுத்தியிருப்பார்களோ. ஒருமுறை தொட்டால் விடாத சனியாயிற்றே இதனிடம் சென்று ஏன் மாட்டிக்கொண்டார் என குடியால் அழிந்து கொண்டிருக்கும் குடும்பங்களின் நிலையெல்லாம் நினைவிலெழ அன்று முழுவதும் ஒன்றுமே புரியாத திகைப்பில் ஆழ்ந்திருந்தாள். ஒருநாள் ஏதோ ஆசையில் செய்திருக்கக்கூடும். இது தொடராது என பிரார்த்தனை போல தனக்குள்ளே சொல்லிக்கொண்டே அவனை எதிர்பார்த்திருந்தாள்.
எப்போதும் விளக்கேற்றி தனித்த வேண்டுதலின்றி வணங்குவாள். இன்று கண்களில் நீர்வடிய சாமிப்படங்கள் அத்தனையையும் ஒவ்வொன்றாக விழிகளாலும் மனதாலும் தொட்டு பணிந்து வணங்கினாள். வெளியே சென்று நிற்க அச்சமாக இருந்தது. அவர் சிவா என அழைத்தபடி கதவைத் திறக்கும் கணத்தை எதிர்நோக்கி காத்திருந்தாள். கடிகாரத்தைப் பார்க்க எழுந்த துடிப்பை அடக்கியபடியே நேரம் மிகமிக மெதுவாக நகர்வதை உணர்ந்தபடி இருந்தாள். பலயுக காத்திருப்பிற்கு பிறகு வண்டி வரும் ஒலியையும் அதனை நிறுத்துவதையும் வெளிக்கதவை திறப்பதையும் மூச்சையடக்கி கேட்டுக்கொண்டிருந்தாள். இதயத்துடிப்பு அபாய அளவிற்குமேல் சென்றது. கடவுளே கடவுளே என மனம் உருகியது. கதவு உள்புறமாக திறக்க தலையை தொங்கப்போட்டபடி அடியே சிவா… என குழறலாக அழைத்தார். இவளின் அத்தனை எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் மட்டுமல்ல பதட்டமும் தரையில் விழுந்த கண்ணாடியென பொடிப்பொடியாக சிதற உள்ளிருந்து புதிதாய் எழுந்த துணிவுடன் எழுந்தாள். அப்படியெனில் இப்படித்தான் தொடரப்போகிறதென உணர்ந்திருந்தாளா. இவ்வளவு நேர வேண்டுதல் எல்லாம் நப்பாசைதானா. இவளால் அதைப்பற்றி தொடர்ந்து சிந்திக்க முடிந்ததில்லை. ஆற்றின் போக்கில் செல்லும் மீன் போல வாழ்வை எதிர்கொள்வதென தீர்மானித்துவிட்டாள். எந்தப் பெண்ணின் வாழ்க்கை அவள் எண்ணப்படி நடக்கிறது. கிடைக்கும் வாழ்விற்குள் அமைவதுதானே அவர்களின் நியதி. இப்படியே எண்ணங்களை அலையவிட்டபடி அன்றிரவும் உறங்கவில்லை. காலையில் இவள் முகத்தைக் கண்ட சுப்பையா “என்னாச்சு சிவா மொகமெல்லாம் வீங்கியிருக்கு…” என பரிவுடன் வினவினார். குரலில் ஒரு குற்றவுணர்ச்சியும் இருந்தது.
இவள் எதுவுமே கூறாமல் சமையலில் ஈடுபட்டிருந்தாள். தொடர்ந்து பேசினால் சச்சரவு ஆகக்கூடும் என பயந்தவர்போல வேறெதும் பேசாமல் கிளம்பிப் போனார். சிவகாமிக்கு வேலு சித்தப்பா கூறியதே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அவர் வீட்டிற்குள் நுழையும்போது ரேணு சித்திஓநாயின் முகம் கொண்டுவிடுவாள். இரவெல்லாம் பிலாக்கனம் ஓயாது. விடிகாலையில் அவள் எழும்போதே அவர் மேல் வசையை வீசியபடியே நீர் தெளித்து கோலமிடுவாள். அதைக் கேட்கும்போது இத்தனை அழகான விடியலில் எப்படி மனம் கொதிநிலையை அடைகிறது என சிவகாமிக்கு வியப்பாயிருக்கும். இத்தனைக்கும் சித்தப்பா சித்தியை ஒருவார்த்தை எதிர்த்தோ கடிந்தோ பேசுதில்லை. தொங்கப்போட்ட தலையில் அத்தனை வசைகளையும் ஏற்றுக் கொள்வார். மாட்டுவண்டி ஓட்டுவதால் உண்டான அசதிக்கென குடிப்பது தொடங்கியது அப்படியே தொடர்ந்துவிட்டது. பிறகு இவள் கூறும் வசவுகளை தாங்குவதற்காகவேணும் குடித்தாக வேண்டியதாகிவிட்டது.
பிறகு எப்படியோ விடுபட்டார். முன்னாடியே விட்டிருக்கலாமே என இவளுக்கு திருமணப் பேச்சு நடந்துகொண்டிருந்த சமயத்தில் வீட்டிற்கு வந்தபோது கேட்டாள். “அது சனி புடிக்கிற மாதிரிதான். இல்லேன்னா தொத்து வியாதின்னு சொல்லலாம். சாயந்திரம் அந்தநேரம் வந்திடுச்சின்னா அப்டியே தலைக்குள்ள ரீரீஈன்னு ஒரு சத்தம் கேக்க ஆரம்பிக்கும். கொஞ்சங்கொஞ்சமா அதிகமாயிக்கிட்டே போகும். வேலையில ஈடுபடவே முடியாது. பெரிய அரக்கனோட வாயிலேர்ந்து வர்ற ஓலம்போலக் கேக்கும். போயி வாங்கி ஒரு வாய் உள்ள போனாத்தான் லேசா கொறையும். நிறுத்தச் சொல்லி யாரு என்ன வார்த்த சொன்னாலும் காதுல நொழையவே நொழையாது. அது நல்லதில்லைன்னு அவனுக்குத் தெரியாதா… எப்பவாச்சும் அவனா முடிவு பண்ணி அந்தச் சத்தத்த பலமாசம் தைரியமா தாங்குனா விடுபடலாம். ஆனா ஆயிரத்துல இல்ல லட்சத்துல ஒருத்தனுக்குத்தான் அந்த தைரியம் வரும். இல்லேன்னா பெரிய வியாதி ஏதாச்சும் வந்தா விடுவானுங்க..” என்றார்.
இத்தனை ஆண்டுகள் மகிழ்சியாகத்தானே வைத்திருந்தார். இப்போது எப்படியோ தீதான வழிக்குள் நுழைந்திருக்கிறார். அவருக்குத் தெரியாத நன்மை தீமையையா பிறரால் விளக்கிவிட முடியும். அவராக திரும்பட்டும். அதுவரை அவரை கண்டித்து தினமும் வீட்டை நரகமாக்காமல் காலத்தின் மீது பாரத்தை போட்டுவிட்டு காத்திருக்க முடிவு செய்தாள் சிவகாமி.
“சுப்பையா வாங்க” என செவிலி அழைத்தார். சங்கரும் சிவகாமியும் எழுந்து சுப்பையாவையின் இருகைகளையும் பிடித்து உடன் நடந்தார்கள். அறை வாசலில் நின்ற செவிலி “கூட ஒருத்தர் மட்டும் வாங்க..” என்றாள். சிவகாமி சிறு தயக்கத்திற்கு பின் “நீங்களே போங்க…” என சங்கரைப் பார்த்துக் கூறினாள்.
சங்கர் டயாலிசஸ் செய்யும் அறைக்குள் முதல்முறையாக இப்போதுதான் நுழைகிறான். அந்த அறைக்குள் ஐந்து படுக்கைகள் இருந்தன. ஒவ்வொரு படுக்கையினருகிலும் பலவித வண்ணங்களில் ஒளிரும் சிறு குமிழ் விளக்குகள் அமைந்த இயந்திரம் நின்றது. இரண்டாவது படுக்கை மட்டும் காலியாக இருக்க மற்றவற்றில் மூன்றில் ஆண்களும் ஒன்றில் பெண்ணும் படுத்திருந்தனர். ஆண்களில் இரண்டு பேருக்கு கையிலும் ஒருவருக்கு கழுத்திலும் ரத்தம் வெளியேறும் டியூப் பொருத்தப்பட்ட ஊசி செருகியிருந்தது. அதேபோல பெண்ணின் இடது கையில் செருகியிருந்தது. ஒரு ஆணின் படுக்கையின் ஓரத்தில் ஒரு பெண் அமர்ந்திருக்க மற்ற இரு ஆண்களும் தனித்து படுத்திருந்தனர். பெண்ணின் படுக்கையின் ஓரத்தில் ஓர் ஆண் அமர்ந்து அவளின் கால்களை நீவிவிட்டார்.
சுப்பையா ஓரத்தில் இருந்த எடை பார்க்கும் கருவியில் ஏறி நிற்க செவிலி எடையைக் குறித்துக் கொண்டதும் காலியாக இருந்த படுக்கையை நோக்கி சென்றார். அவர் உடல் ஆட்டோவில் ஏறியபோது இருந்ததைவிட தளர்வுற்றிருந்தது. சங்கரின் கரங்களை பற்றியபடி நடந்து படுக்கையில் அமர்ந்தார். மெதுவாக சாய்ந்தபின் கால்களை தூக்க முயற்சித்தார். “சும்மா நிக்காம அவரு கால தூக்கி வைங்க..” எனறு செவிலி சங்கரை நோக்கி கூறியதும் இவன் அவர் காலைப் பிடித்து கட்டிலில் வைத்தான். சுப்பையா சட்டையைக் கழற்றி இவனிடம் அளித்தார். செவிலி ரத்த அழுத்தத்தை சரி பார்த்தாள். சுப்பையா ஆசுவாசத்துடன் சாய்ந்து படுத்திருந்த போதும் முகத்தில் இறுக்கத்துடன் ஓர் எதிர்பார்ப்பிருந்தது. செவிலி இயந்திரத்தில் செருகப்பட்டிருந்த ட்யூப்பில் இணைக்கப்பட்டிருந்த ஊசியை கையில் எடுத்துக் கொண்டு சுப்பையாவின் இடது கையை அழுத்திப் பிடித்து நரம்பைத் தேடினாள். அக்கையில் ஏற்கனவே ஊசி துளைத்த பல தடங்கள் இருந்தன. ஆனால் இப்போது புதிய இடம் தேடினாள். ஒரு நிமிடத்திற்குமேல் தேடி இடத்தைக் கணித்து ஊசியை செருகினாள். அப்போது சுப்பையாவின் முகம் வேதனையின் உச்சத்தை பிரதிபலித்தது. சில நிமிடங்கள் நீடித்த வேதனை ரத்தம் ஒரு ட்யூப் வழியாக சென்று அதிலிருந்த நீரை கீழே வைக்கப்பட்ட குடுவையில் உமிழ்ந்துவிட்டு இன்னொரு ட்யூப் வழியாக திரும்பி வந்து உள் நுழையத் தொடங்கியதும் குறைந்தது.
சங்கருக்கு அண்ணனின் வேதனையைக் காணச் சகிக்கவில்லை. அதைக் கண்ட செவிலி “நீங்க வெளில இருங்க. தேவையின்னா கூப்பிடுறேன்” என்றதும் வெளியே வந்து அமர்ந்தான்.
சிவகாமியின் அருகில் அமர்ந்திருந்த பெண்மணி “அஞ்சு வருசத்திலேயா இப்பிடி ஆயிடுச்சு. எம்வீட்டுக்காரரு முப்பது வருசமால்ல குடிக்கிறாரு..” என்று ஆச்சர்யப்பட்டாள்.
“இவருக்கு சக்கர வியாதி ஏற்கனவே இருந்திச்சு. இதுவும் கூட சேர்ந்ததாலயோ என்னவோ இவ்ளோ சீக்கிரம் கிட்னி கெட்டுப்போச்சு…”
அப்பெண்மணி இருபக்கமும் பார்வையை ஓட்டி மருத்துவமனை ஆட்கள் இல்லாததை உறுதிபடுத்திக் கொண்டு “கொள்ளக் காசு புடுங்கிறானுங்களே செலவெல்லாம் எப்படி சமாளிக்கிறீங்க” என்று கேட்டார்.
“கோயம்புத்தூர் வீட்ட வாடகைக்கு விட்டுருக்கோம். பையன் வெளி நாட்ல இருந்து கொஞ்சம் அனுப்பறான். எப்படியோ போகுது…”
“ஆனா வலியில கஷ்டப்படுறத பாக்குறப்பதான் வேதனயாயிருக்கு…” என்று அந்த பெண்மணி தொடர்ந்தபோது
“ஆனாவொன்னு, இப்ப அவரு குடிக்கிறதில்லை. அதோடு நாள்பூரா கூடவும் இருக்காரு…” என்று சிவகாமி கூறியபோது அவள் முகத்தில் துயரத்தையும் மீறிய ஒரு நிறைவு ஒளிர்ந்ததை சங்கர் கண்டான்.
அப்போது செவிலி சிவகாமியை அழைத்தாள். முதலில் துண்டு எடுத்துச் சென்றாள். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு வந்தபோது மூக்கு சிவந்திருக்க விழிகளில் நீர் கோர்த்திருந்தது. சங்கர் முகத்தை கீழே தாழ்த்திக் கொண்டான்.
பத்து நிமிடங்களானபின் அப்பெண்மணியிடம் ஏதோ பேசினாள். மீண்டும் செவிலி அழைக்க பிளாஸ்க்கில் இருந்த வெந்நீரை ஆற்றி எடுத்துச் சென்றாள். திரும்பும்போது முன்புபோலவே நீர்சோர வந்தாள்.
அரைமணி நேரத்திற்குபின் இவளாகவே சென்றாள். நேரமாகியும் வராததால் சங்கர் சென்று பார்த்தபோது சுப்பையாவின் கால்களை பிடித்துவிட்டுக் கொண்டிருந்தாள்.
சங்கருக்கு கடைசியாக பார்த்த சுந்தரியின் கால் பாதங்கள் நினைவிலெழுந்தது. இவன் அலுவலகத்தில் சேர்ந்து மூன்று மாதங்கள்தான் ஆகியிருந்தது. மரணம் என்பது எத்தனை எளிதாக நிகழ்கிறது என்பதை வியப்பும் வெறுப்புமாய் எண்ணி பின்னர் பலநூறு முறை வருந்தியிருக்கிறான். ஆனால் சுந்தரி விபத்தில் இறந்த செய்தி கேட்டபோது கண்ணீர் வழியக் கதறினான். காலையில் அலுவலகம் வந்த பிறகுதான் சொன்னார்கள். அவள் வீட்டிற்கு சென்றவன் கண்ணாடிப் பெட்டியில் கிடத்தப்பட்டிருந்தவளின் முகத்தைப் பார்க்க தைரியமில்லாமல் விரல் கட்டப்பட்ட பாதங்களை மட்டும் சில விநாடிகள் பார்த்துவிட்டு உள்ளம் துடிக்க வெளியே வந்துவிட்டான். அச்சில விநாடி கண்டது இப்போதும் துல்லியமாகத் தெரிகிறது. எப்போதாவது கனவில் அப்பாதங்கள் தோன்றும்போது உடல் துடிக்க எழுவதுண்டு.
நான்கு மணி நேரத்திற்கு பிறகு சுப்பையாவை இருவரும் வெளியே அழைத்து வந்தார்கள். வராண்டாவின் கடைசியில் உணவுண்ணும் அறை இருந்தது. மதியவுணவு நேரம் கடந்துவிட்டதென்றாலும் கொண்டு வந்திருந்த சாப்பாட்டை சிவகாமி சுப்பையாவிற்கும் சங்கருக்கும் தட்டில் பரிமாறினாள். சங்கருக்கு சாப்பிட பிடிக்கவில்லை. சுப்பையாவின் வற்புறுத்தலால் சிறிதளவு மட்டும் சாப்பிட்டான். இருவருக்கும் பரிமாறியபின் ஒரு கிண்ணத்தில் சோறை போட்டு சாம்பாரை ஊற்றி அதிலேயே பொரியலையும் போட்டு பிசைந்து சிவகாமி உண்டாள்.
இவர்கள் சாப்பிட்டு முடிப்பதற்காக காத்திருந்ததுபோல “போகலாங்களா” எனக் கேட்டபடி அவ்வறைக்குள் வந்தார் செல்வம். பைகளை அவர் எடுத்துக்கொள்ள இவர்கள் இருவரும் சுப்பையாவை தொட்டு பிடித்தபடி சென்று ஆட்டோவில் ஏறினார்கள். மளிகை சாமான்களும் பால் பாக்கெட்டும் உள்ளே இருந்தது.
ஆட்டோ கிளம்பி மருத்துவமனையை விட்டு வெளியே வந்து சீரான சாலையை அடைந்தது.
“பாட்டுப் போடுங்கண்ணே. எம்ஜியார் வேண்டாம் சிவாஜியோட பாட்டு” சிவகாமியின் குரல் எழுந்தது. அப்போது மேற்கில் இறங்கி கொண்டிருக்கும் சூரியனின் கதிர்கள் எதிர் வரும் வாகனங்கள் குறுக்கிடுவதற்கேற்ப அவ்வப்போது தடைபட்டு சிவகாமியின் முகத்தை மினுங்க வைத்தது. வேதனையை தாங்கியிருந்த சுப்பையாவின் முகத்தில் மெல்லிய மலர்வு தொடங்கியது. துயரத்தால் மனம் இறுகியிருந்த சங்கரின் செவிகள் அப்பாடல் ஒலிக்கப்போகும் கணத்தை ஆவலுடன் எதிர் கூர்ந்தன.
***
கா. சிவா
விரிசல், மீச்சிறுதுளி, கரவுப்பழி ஆகிய மூன்று சிறுகதை தொகுப்புகளும் "கலைடாஸ்கோப்பினுள் ஓர் எறும்பு" எனும் கவிதைத் தொகுப்பும் "தண்தழல்" எனும் நாவலும் எழுதி வெளியிட்டுள்ளார்.
நன்றாகவே வந்திருக்கிறது . தொடர்ச்சியான கதை சொல்லல்கள் மூலமும் மொழியின் வலிமையும் வளமையும் கூடியுள்ளன
சொல்ல வந்ததை அருமையாக கடத்தியுள்ளீர்கள்..
மிக்க நன்றிங்க கலியபெருமாள்…