வ.அதியமான் கவிதைகள்

1.நிலவின் கட்டிலில் படுக்க வருவதில்லை சூரியன்

பௌர்ணமி
என்பதும்
பூரண வெளிச்சம் தான்

ஆனாலும்
அது
மிக மிக கறாராய்
இரவில்
காட்ட வேண்டியவைகளை
மட்டுமே தான்
காட்டுகிறது

ரொம்பவும் ஒழுக்க சீலனாய்
உங்கள் கண்களும்
இரவில்
காண வேண்டியவைகளை
மட்டுமே தான்
காண்கின்றன

இராவெலாம் பொழிந்து கொண்டிருக்கும்
அத்தனை அத்தனை
பூரண வெளிச்சத்திலும்
ஒரே ஒரு துளி பகல்
உள்ளே நுழைய முடிவதில்லை

2.மந்திர மொழி

ததும்பி முட்டி நிற்கும்
உன் மூத்திரப் பைக்கு
அக்கணமே
ஒரு தொண்டை முளைக்கிறது
அத்தொண்டைக்கு
ஒரு குரல் முளைக்கிறது
அக்குரலுக்கு
ஒரு மொழி முளைக்கிறது

கடுநித்திரையிலிருந்து
உன்னை
உசுப்பி எழுப்பிவிடும்
அந்த
மந்திரப் பாடல்
உன் மூத்திரப்பையின் மொழியில்
மட்டுமே
எழுதப்பட்டிருக்கிறது

என் மூத்திரப் பையின்
மந்திர மொழியை
உனக்கு மட்டுமல்ல
யாருக்கும்
நான்
கற்றுத்தர மாட்டேன்

3. கொஞ்ச நேரத்திற்கு மட்டும்

என்றைக்குமான
அதே காற்றுதான்
கொஞ்ச நேரத்திற்கு மட்டும்
புயல்

என்றைக்குமான
அதே தண்ணீர்தான்
கொஞ்ச நேரத்திற்கு மட்டும்
பெருவெள்ளம்

என்றைக்குமான
அதே நெருப்புதான்
கொஞ்ச நேரத்திற்கு மட்டும்
காட்டுத் தீ

என்றைக்குமான
அதே மண்தான்
கொஞ்ச நேரத்திற்கு மட்டும்
நிலச் சரிவு

என்றைக்குமான
அதே வானம் தான்
கொஞ்ச நேரத்திற்கு மட்டும்
திறந்து மூடிக்கொள்ளும்
வாசல்

அவ்வளவு தான்
நீ பயப்படாதே

4. காணாமல் போகும் அந்த கணத்தில் முளைக்கும் நூறு கால்கள்

பைக் சாவி
இயர் போன்
பென்சில்
கைக் கடிகாரம்
ஏடிஎம் அட்டை
இன்னும்
இன்னும்

கை தவறி தொலைந்து
சில மணி நேரங்கள்
அல்லது
சில நாட்கள் கழித்து
மீண்டும்
என் கைக்கு கிடைத்துவிட்ட
அந்த
குட்டி குட்டிப் பொருட்களை எல்லாம்
ஒவ்வொன்றாய்
கையில் எடுத்து
முதல் வேலையாய்
இத்தனை நாட்களாய்
என் கண்களுக்கு தெரியாமல்
ரகசியமாய்
அவைகளுக்கு முளைத்திருக்கும்
நூறு கால்களையும்
ஒவ்வொன்றாய்
உடைத்து போடுகிறேன்

அடுத்து
இன்னும் ஒரு முறை கூட
தொலைந்து போகாமல்
என் கைகளிலேயே இருக்கும்
அப்பாவிக் குட்டிப் பொருட்களையும்
ஆய்வு செய்கிறேன்
ஒரே ஒரு கால் கூட
அவைகளுக்கு
முளைத்திருக்கவில்லையே?

ஆனாலும் நம்ப முடியவில்லை

இன்னும்
முளைக்காத கால்களை
எப்படி உடைத்துப் போடுவது என்று
எனக்கு தெரியவில்லை
உங்களில் யாருக்காவது
தெரியுமா?

5 புத்தன் என்பவன் ஆழங்களில் பதுங்கியிருக்கும் திருடனா?

எல்லா ஆழங்களிலும்
யாரோ ஒரு திருடன்
குந்தியிருந்து
உங்கள் வாய்களை
தைத்துவிடுகிறானா என்ன?

குட்டி டம்ளரோ
மகா நதியோ
கூடவே
நானும் ஒரு நாள்
தண்ணீருக்குள்
மூழ்கி
பார்த்துவிட வேண்டும்

கலகலவென
சிரித்துப் பேசிக் கொண்டிருந்த
அத்தனை நாணயங்களும்
தண்ணீருக்குள்
மூழ்கிவிடும் போதெல்லாம்
ஏன் இப்படி
ஊமைச் சாமிகளாகிவிடுகின்றன?

வ.அதியமான்

திருவண்ணாமலை அருகேயுள்ள வந்தவாசியில் வசித்து வருகிறார். குடைக்காவல் எனும் முதல் கவிதை தொகுப்பு சால்ட் பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது. இலக்கிய இதழ்களில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிறார்.

6 Comments

  1. மூத்திரத்தை மொழி அருமையான கவிதை மற்றவர்களும் சிறப்பாக வந்துள்ளன

    • மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்

  2. மிகவும் அற்புதமான கவிதைகள்.
    அற்புதமான வரிகள் பல கவிதைகளில்
    வாழ்த்துக்கள்.

    • உற்சாகமூட்டும் சொற்களுக்கு மிக்க நன்றி

  3. கொஞ்ச நேரம் மட்டும் தான் கவிதை அருமை. வாழ்க்கையே இப்படி கொஞ்சநேரங்களினாலானது தான் இல்லையா?. வாழ்த்துகள் சார்.

    • மிகவும் மகிழ்ச்சி

      தங்களின் மேலான ரசனைக்கு என் வாழ்த்துகள்

உரையாடலுக்கு

Your email address will not be published.