ச.அர்ஜூன்ராச் கவிதைகள்

1
காலத்தின் இலை
~~
ஒரு இலை விழுவதைப்பார்த்து
ஒவ்வொரு இலையும்
விழுகிறது

காண காண
எல்லாம் ஓர் இலை

எப்போதும்
முப்போதும்
விழாத இலை

அது ஆதியுமின்றி அந்தமுமின்றி அந்தரத்திலேயே
நிகழ்த்திக்காட்டிக்கொண்டிருக்கிறது

ஒரு தொடக்கமும் இல்லை
ஒரு முடிவும் இல்லை என்பதான ஒரு விளையாட்டை.

===
2

அலுவலகம் போகும் வழியில்
வேடிக்கைச் சூழ ஓர் அதிகாரம்
ஒரு சாமானியத்தைப் பிறாண்டிகொண்டிருந்தது

அவகாசமே இல்லை
ஆயினும் பிறர்போலல்ல நான்

அறம் பொங்கியெழ
சில மணித்துளிகளே ஒதுக்கினேன்

இரண்டடி பின்னிட்டு வைத்துப்
பதுங்கும் ஒரு வெருகுப் பூனைக்கும்

வேட்டையைத் தாண்டி குதித்து மறையும்
ஒரு வீட்டுப் பூனைக்கும் மத்யில்

அந்தரத்தில் பாய்ந்தேன்
புலியாக.

===

3

எனது தீர்ப்பு ஆடிக்கொண்டே இருக்கிறது
~~

எனது ஆடும் நாற்காலியில்
என்னைச் சீராட்டிக்கொண்டே
என்னைப்பற்றி விசாரித்துக்கொண்டிருந்தேன்

ஏதோ சரியில்லாமை உறுத்த
சட்டென எழுந்தேன்

எனது காலி ஆடும் நாற்காலி முன் நின்றேன்

கை கட்டி
வாய்ப்பொத்தி
மணிக்கணக்காக…

===

4

எனக்காக நான் ஏதேனும் உதவுவது

ஏன் எனக்குப்படுவதே இல்லை ?

கடிகாரம் காலத்தை தட்டிக்கொடுத்துக்கொண்டிருக்கும் ஓசை நன்கு துலங்கத்தரும் வேளை

குழந்தையின் மடியில் சற்று
லேசாகத் தலைசாய்ந்திருந்தேன்

குழந்தை தூங்கிவிட்டபோதெல்லாம்
கைகள் தட்டிக்கொடுத்துக்கொண்டே இருந்து வந்த காரணத்தை
அப்போது நான் கண்டுபிடித்தேன்

===

5

மிக வசீகரமான ஒரு முதுகு
சாலையை வடமென பிடித்து
நளினமாக
ஸ்கூட்டியில் முன்னேறிச் செல்கிறது

அதற்கு திடுமென ரெண்டு எறும்புகள்
ஊர்வதுபோல சுளுசுளு வென்றிருக்கிறது

சற்றைக்கெல்லாம் வேகத்தினின் பின்வாங்கி
மெல்ல தலை வணைந்து
நிதானிப்பது போல் உருள்கிறது

அந்த முதுகில் வழுக்கி
மேம்பாலத்தில் ஏகி
சாலையைத்தாண்டி
சரியாக அந்தியைப் பிடித்து மறைகிறது
ஒரு துரிதமான ஹீரோ ஸ்ப்லென்டர்.

ச.அர்ஜூன்ராச்

சமகாலத்தில் பல்வேறு இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. "ராஜ Single " கவிதை தொகுப்பின் ஆசிரியர்.

4 Comments

  1. அதிகாரத்தின் மீது சில நொடிகள் புலியாகப் பாயும் கவிதை அருமை.

    ஆடும் நாற்காலி முன் கைகட்டி மணிக் கணக்காக நிற்பது வெற்று அதிகாரத்தின் முன் பணிவது போன்ற ஒரு புலிப் பாய்ச்சல் தான். ஆனால் தலைகீழாக தனக்குள் நடப்பது.

    கவிதைகள் அருமை.

  2. ஒரு இலை விழுவதைப்பார்த்து ஒவ்வொரு இலையும் விழுகிறது

    ஒரு தொடக்கமும் இல்லை ஒரு முடிவும் இல்லை என்பதான ஒரு விளையாட்டை.

    இந்த வரிகள் வேறொரு மனநிலையைத் தந்தது.

உரையாடலுக்கு

Your email address will not be published.