ந.பெரியசாமி கவிதைகள்

1
குயில் மொழி
*
குயிலை
மொழியில் கூவச் செய்தல்
அத்தனைப் பொருத்தப்பாடாய்
இருந்து விடுவதில்லை
பூங்காவில்
கூவி முடித்த கணத்தில்
அமைதியை நிரப்பும்
கூவாத கூவல்…

2.
அன்பின் வேர்
*

புரிந்துகொள்ள இயலாதுன்னால்
எனதன்பின் வேர் முடிச்சை
ஒருபோதும்.

நிலம் அடையா
மழைக்கு ஒப்பானது ஆச்சரியப்படுத்துவதற்காக
சொல்லப்படுவதில்லை
உண்மையை
உணரும் கணம்
மனவெளியில்
அன்பின் ஊற்றை பருகுவாய்.
சிறகுகள் முளைக்கும்
காணாததை இனி காண்பாய்
உணராததை மேலும் உணருவாய்
அறியாததை அறிவாய்
உன் மீதே உனக்கு
காதல் பிறக்கும்
உன்னுள் வளர்ந்தது
கனியச் செய்யும்
உன்மேல் வைக்கப்படும் பிரியத்தின்
தூய்மையை அறிவாய்
அன்றெனை இழந்திருக்க
ஏது பயன்.

3
காத்திருப்பு
*
அதிகாலை குளிரில்
சுருண்டு கிடத்தல் சுகம்
அப்பப்போ வரும் வெய்யிலில்
உடலை காய வைப்பதில்
உருக்கொள்ளும் மகிழ்ச்சி
பெய்யும் மழை
பெரும்பாலான நாள்கள்
முத்துகளாக பூத்திருக்கும்
பனி

கம்பளி போர்த்தியும்
சுவெட்டர் அணிந்தும்
பரபரப்பாக வேலைக்கு
இயங்கும் மக்கள் பார்க்க
பரவசம் உருக்கொள்ளும்
தலைவன் வாழும் ஒசூரில்
தனித்து வாழ்ந்து
கண்டு களிப்படைந்த காலமது
என்றினி வருமோ
ஏக்கத்தில் தலைவி.
*

4.
ஒளி தூரம்
*

துயர்களில் உழன்றவனின்
கண்ணில்
பட்டது சிறு ஒளி
நம்பிக்கையின் ததும்பலில்
அவசரமாக அடைய நினைத்து
ஓடத் தொடங்கினான்
முன்னால் ஊர்ந்துகொண்டிருந்தது
நத்தை.

5.
தரு
*
கசந்த விதைகொண்டு
சிதைந்த நிலத்தில் விளைவித்த
காதல் மரத்தின்
சிறு நிழல் பறவை.

ந.பெரியசாமி

தமிழில் எழுதிவரும் கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர். ஐந்து கவிதைத்தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து கவிதைகள், நூல் விமர்சனங்கள், கட்டுரைகள் எழுதி வருகிறார். 2004-ல் முதல் கவிதைத்தொகுப்பான 'நதிச்சிறை' வெளிவந்தது. ஐந்து கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். 2021-ல் 'கடைசி பெஞ்ச்' என்ற கவிதை தொகுப்பு வெளிவந்தது. ஆங்கிலத்தில் மலர்விழியும், தெலுங்கில் ரகுபதியும் இத்தொகுப்பை மொழியாக்கம் செய்துள்ளனர்.

3 Comments

  1. ஐந்து கவிதைகளில் அன்பின் வேர், காத்திருப்பு எனக்கான வரிகளாய் தோழர்🦋💃

  2. சிறப்பாக உள்ளது சகோதரரே. வாழ்த்துகள். கவர்ந்தது “அன்பின் வேர்” வரிகள்…

உரையாடலுக்கு

Your email address will not be published.