லைஃபர் : ஜனார்த்தனன் இளங்கோ

அரசவால் ஈபிடிப்பான்

அப்போது எனக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கும். ஒருநாள் இரவு எங்கள் வீட்டின் கழிவறையில் குருவிக்குஞ்சு ஒன்று தவறுதலாக விழுந்துவிட்டிருந்தது. சத்தம் கேட்கவும் அப்பாதான் கழிவறைக்குள் சென்று எட்டிப்பார்த்தார். அங்கு குருவி விழுந்து கிடப்பதைப் பார்த்தவுடன் எதைப் பற்றியும் யோசிக்காமல் கழிவறைக் குழியில் இருந்து தன் கையால் அதை வெளியே எடுத்துவிட்டு எங்கள் எல்லோரையும் அழைத்தார். விளையாடிக் கொண்டிருந்த நானும் என் தம்பியும் ஓடிச் சென்று எட்டிப் பார்த்தோம். நீட்டிய அவருடைய உள்ளங்கையில் ஈரமான சதைத்துண்டு போன்ற ஏதோவொன்று அசைந்தது. என் நியாபகத்தில் ஒரு பறவையை அவ்வளவு அருகில் அப்போது தான் முதல் முதலாகப் பார்த்தேன். அப்பா அதன்பிறகு வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டுவரச் சொல்லி நன்றாக அதைத் துடைத்துவிட்டார். பின்னர் தன் கழுத்தில் கிடந்த மெலிதான துண்டைக் கொண்டு அதன் ஈரத்தை ஒத்தியெடுத்தார். வெப்பமூட்டுவதற்காக சமயலறைக்குச் சென்று நெருப்பின் மேலே தன் உள்ளங்கையில் அதைப் பொத்தியவாறு நீட்டினார். அதன் உடலில் இருந்த இறகுகள் சிலிர்த்து சிறுசிறு முட்கள் போல நீட்டிகொண்டது. குருவியை சமயலறைக்குள் எடுத்துச் சென்றது அம்மாவிற்கு பிடிக்கவில்லை என்றாலும் அப்பாவிடம் அவர் ஒன்றும் சொல்லவில்லை. ஈரம் நன்றாக உலர்ந்ததும் அப்பா தன் துண்டால் அதைப்போர்த்தி ஒரு அட்டைபெட்டிக்குள் வைத்தார். இந்த சந்தடிகளைப் பார்த்துவிட்டு பாட்டி தான் படுத்திருந்த கட்டிலில் இருந்து எழுந்துவந்து அட்டைப்பெட்டிக்குள் எட்டிப் பார்த்தார். பின் கொல்லைக்கு சென்று தன்வாயிலிருந்த வெற்றிலையை துப்பிவிட்டு வந்து பூனை கொண்டு போகப் போகிறது என்றார். 

அப்போதெல்லாம் எங்கள் வீட்டிற்கு பூனைகள் அடிக்கடி வந்து சென்றுகொண்டிருந்தது. அன்றிரவே அப்பா  எங்கிருந்தோ தேடிப்பிடித்து ஒரு பெரிய மரக்கூண்டை வாங்கிவந்துவிட்டார். அவ்வளவு பெரிதான அந்த மரக்கூண்டிற்குள் அந்தக் குருவியை பத்திரமாக எடுத்து வைத்தார். நானும் தம்பியும் சிறிது சிறிதான இரண்டு கின்னங்களில் தனித்தனியே நீரும் உடைந்த ரொட்டித்துகள்களையும் அதற்கு அருகில் கொண்டுவந்து வைத்தோம். அது என்ன செய்கிறதென்று பார்ப்பதற்காக கூண்டிற்கு அருகிலேயே அமர்ந்து கொண்டோம். நீண்டநேரம் கடந்து விட்டிருந்தது. எனினும் கின்னத்தில் இருந்தவற்றை அது பொருட்படுத்துவது போலத் தெரியவில்லை. அதன் ஊதா நிற ஈர்க்குச்சி கால்கள் மட்டும் அவ்வப்போது லேசாக ஆடிக்கொண்டிருந்தது. தூங்குவதற்கு நேரமாகிவிட்டதென்று அம்மா எங்களை அங்கிருந்து இழுத்துச்சென்றார். நாளை பறக்கத் துவங்கிவிடுமா என்று நான் கேட்டதற்கு அம்மா என்னைப் பார்த்து சிரித்தார். அடுத்தநாள் காலையில் பார்த்தபோது அது ஒருவாறு வலுபெற்று கூண்டுக்குள் நகர ஆரம்பித்திருந்தது. வீட்டில் அந்த கூண்டை எந்த இடத்தில் தொங்கவிடுவது என்று நானும் என் தம்பியும் எங்களுக்குள் நீண்ட நேரம் விவாதித்துக்கொண்டோம். கடைசியாக வாசலில் தொங்கவிடலாம் என்று முடிவு செய்து கொண்டு பள்ளிக்குச் சென்றோம். நாங்கள் பள்ளியில் இருந்து மாலை திரும்பிவந்து பார்த்தபோது கூண்டு காலியாக இருந்தது. அப்பா குருவியை அதனுடைய கூட்டிற்கே சென்று விட்டுவிட்டதாக பாட்டி சொன்னார். அந்த மரக்கூண்டு அதன்பிறகு வெகுநாட்கள்வரை வாசலில் இருந்த பரண்மேல் காலியாகக் கிடந்தது. அதற்குள் இருந்த ஒட்டடை மட்டும் அவ்வப்போது காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. பின்னொருநாள் அந்தக்கூண்டும் அங்கிருந்து காணாமல் போனது.

*

நான் விப்ரோ மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கிய சில வருடங்களில் பெங்களுருவிற்கு இடமாற்றலாகியிருந்தேன். அந்த நிறுவனத்தில் பெருமரங்கள் சூழ்ந்த எலெக்ட்ரானிக் சிட்டி கிளையில் மனித வள மேம்பாட்டுத் துறையின் மூலம் நிறைய சுற்றுசூழல் சார்ந்த முன்னெடுப்புகள் விமரிசையாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. உதாரணமாக ஒவ்வொரு அலுவலகக் கட்டிடத்தைச் சேர்ந்த தோட்டத்தை பல்வேறு பகுதிகளாகப் பிரித்து அங்கு பூச்செடிகள், மரக்கன்றுகள் ஆகியவற்றை நட்டு பராமரிக்கும் பொறுப்பை அந்த கட்டிடத்தில் பணிபுரியும் குழுக்களுக்கென ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒதுக்கியிருந்தார்கள். நேர்த்தியாக இன்-செய்யப்பட்ட சட்டைகளிலும், கோட்டுகளிலும் கழுத்தில் தொங்கும் அடையாள அட்டை பளபளக்க அவர்கள் பூச்செடிகளுக்கு நீரூற்றுவதையும், களைக்கொத்திகளை மண்ணில் பாய்ச்சுவதையும் அடிக்கடி காண முடிந்தது. அதுபோக தாவரவியளாலரைக் கொண்டு நிறுவனத்தின் தோட்டத்தில் உள்ள மரங்களை, வண்ணத்துப் பூச்சிகளை எல்லோருக்கும் சுற்றிக்காட்டினார்கள். விலங்கியலாளர் தலைமையில் சிறுசிறு குழுக்களை கப்பன் பார்க்கில் உள்ள எறும்புகளைக் காண கூட்டிச் சென்றனர். இப்படி எதாவது  ஒரு நிகழ்ச்சி அங்கு தொடர்ச்சியாக நடந்துகொண்டிருந்தது. 

இதன் ஒரு பகுதியாக பறவைகளைப் பார்ப்பது குறித்த அறிமுக வகுப்புகள் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான் அதற்கான அறிவிப்பைப் பார்த்ததும் ஆர்வத்தோடு பதிவு செய்திருந்தேன். பறவைகளின் உலகை புதியவர்களுக்கு முறையாக அறிமுகப் படுத்தவேண்டும் என்கிற பயிற்றுனரின் மெய்யான அக்கறை அதன் திட்டவரைவிலேயே தெளிவாகத் தெரிந்தது. வெள்ளிக்கிழமை ஒரு வகுப்பறைப் பயிற்சியும் அதைத்தொடர்ந்து சனிக்கிழமை அதிகாலை களப்பயிற்சி என மொத்தம் மூன்று வாரங்கள் அவர் திட்டமிட்டிருந்தார். அதில் முதல் நாள் வகுப்பறைப் பயிற்சியில் அடுத்த நாள் காணப்போகும் பறவைகளைப் பற்றிய புகைப்படங்களில் தொடங்கி அவற்றின் உருவ அமைப்பு, ஒலியெழுப்பும் விதம், வாழிடம் என்று அதுதொடர்பான எல்லா தகவல்களையும் முதலில் பயிற்றுனர் எங்களுக்கு விரிவாகத் தந்துவிடுவார். அந்த தகவல்களை அசைபோட்டபடி அடுத்தநாள் அதிகாலையில் அவர் தெரிவுசெய்த களத்திற்கு அப்பறவைகளை நேரில் காண்பதற்காச் செல்வோம். அதுபோல் இந்த மூன்று வாரங்களையும் முதல் வாரம் தோட்டத்து(backyard) பறவைகளுக்கும், இரண்டாவது வாரம் நீர்நிலைப் பறவைகளுக்கும், கடைசி வாரம் காட்டில் வாழும் பறவைகளுக்கும் என்று பறவைகளின் பலதரப்பட்ட வாழிடங்களை உள்ளடக்குவதாக  அமைத்திருந்தார்.

வெள்ளி இரவு முதல் நாள் வகுப்பறைப் பயிற்சி முடிந்து அலுவலக கட்டிடத்திலிருந்து வெளிவரும்போதே அங்குள்ள மரங்களில், செடிகளில் அப்போது தெரிந்துகொண்ட பறவை ஏதேனும் தென்படுகிறதா என்று  பார்க்கத் தொடங்கியிருந்தேன். அடுத்தநாள் அதிகாலையிலேயே லால்பாக்கிற்கு சென்றோம். நகரத்திற்கு நடுவில் சிறு காட்டைப்போல அமைந்திருக்கும் பெரிய பூங்கா அது. அந்த அதிகாலைக் குளிரில் வியர்வை வேண்டி நிறைய பேர் ஓடவும் நடக்கவும் செய்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு நடுவில் சம்பந்தமே இல்லாமல் நாங்கள் குழுவாக மரங்களைப் பார்த்துப் பார்த்து நோட்டு புத்தகங்களில் பறவைகளைப் பற்றிய குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்தோம்.  பொதுவாக காட்டு விலங்குகளைப் போல பெரும்பாலான பறவைகளும் அதிகாலையில் தான் அதிகமும் கூட்டை விட்டு வெளியே வருகிறது. வெயிலின் வெம்மை ஏறத் தொடங்கும் முன்பு தத்தம் இடத்திற்கு திரும்பிச் சென்றுவிடுகிறது. கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் நம் வகுப்பில் உள்ள அனைவரது முகத்தையும் நம்மை அறியாமலேயே கூர்ந்து நோக்குவோம் இல்லையா? அவர்களின் நடை, உடை பாவனை என எல்லாவற்றையும் ஆர்வத்தோடு கவனிப்போம் இல்லையா? அவர்களுள் நாம் அனுக்கமாக உணரும் ஒவ்வொருவரின் பெயரையும் கூடுதல் சிரத்தையெடுத்து நினைவில் வைத்துக்கொள்வோம் இல்லையா? அதைப்போலவே அன்றைய தினம் அங்கு என்னைச் சூழ்ந்திருக்கும் அத்தனை பறவைகளையும் தேடித்தேடி பார்ப்பதுமாக தெரிந்துகொள்வதுமாக இருந்தேன். 

துவக்கத்தில் எந்த ஒரு பறவையையும் பார்த்தவுடன் அது இன்ன பறவை என்று சரியாக அடையாளம் காண்பது கடினம். இருப்பினும் வெளித்தோற்றத்திற்கு அடியில் நம்மைச் சுற்றி அவ்வளவு வகையான  பறவைகளின் இருப்பையும் ஒரு வெடிப்புபோல நாம் உள்ளூர உணர்வதே ஒரு பிரம்மிப்பூட்டும் அனுபவம். Men In Black திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். ஏஜென்ட்-கே தன்னிடமிருந்து அழிக்கப்பட்ட வேற்றுகிரகவாசிகளைப் பற்றிய ஞாபகங்கள் எல்லாம் தனக்கு திரும்பக் கிடைக்கும் பொருட்டு அதற்காக இயக்கப்பட்ட இயந்திரத்தில் அமர்ந்து வெளியேறியிருப்பார். கலைந்த தலையோடு அவர் கட்டிடத்தை விட்டு வெளியேறி வீதியில் நின்றபடி போவோர் வருவோரை கவனிப்பர். எதிரே ஒருவர் பொருட்களை தள்ளிக்கொண்டு போகும் வண்டிக்குள்ளிருந்து ஒரு வேற்றுகிரக ஜீவராசி அவரை எட்டிப் பார்த்துவிட்டு தலையை உள்ளிழுத்துக் கொள்ளும். அவரைத் தாண்டிச் செல்லும் ஒருவருடைய பின்புறத்தில் கால்சட்டையிலிருந்து ஒரு வால்நுனி நெளியும். அவர் அடியெடுத்து வைக்கப் போகும் போது ஷூவுக்கடியில் ஒரு ஜீவராசி தாண்டிச் சென்று அவருக்கு நன்றி சொல்லும். இவ்விதம் தன்னைச் சுற்றியுள்ளவற்றிற்கு பின்னால் பொதிந்திருக்கும் வேற்றிகிரகவாசிகள் ஒவ்வொன்றும் அவர் கண்ணுக்கு புலப்படத் துவங்கும். அதன்பிறகு அவர் வானத்தை அன்னார்ந்து பார்ப்பார். புகைமூட்டமான நியூயார்க் நகர வானம் தெளிவடைந்து நட்சத்திரங்களாய் ஒளிர்விடும்.

நீலமுகச் சென்பகம்

பறவைகளைப் பார்க்கத் துவங்குகையில் அதன் கண், மூக்கு, கழுது வயிறு என அவற்றின் வண்ணங்களைக் கொண்டு முதல் கட்டமாக சில பறவைகளை எளிதாக அடையாளம் காணலாம். அதற்கு அடுத்தபடியாக நாம் பார்த்த பறவையின் உருவ அளவை பிற பறவைகளோடு இணைத்துச் சொல்வதும் அவசியமாகிறது. தையல்சிட்டை விட கொஞ்சம் பெரிது ஆனால் மைனாவை விட சிறியது என்று வண்ணத்தோடு அதன் தோற்ற அளவையும் துல்லியமாக வரையறுத்துச் சொல்லும்போது பிறரிடமிருந்து அது என்ன பறவை என்பதை கேட்டுத் தெரிந்துகொள்வது எளிதாகிறது. ஒப்புநோக்க பறவைகளை அதன் ஒலியைக் கொண்டு அடையாளம் காண்பது சுலபம். தனித்துத் தெரியும் குயிலோசையையும் மயிலோசையயையும் போல. அதுபோல மிகவும் தனித்துவமான ஒலியுடைய மேலும் சில பறவைகளை எங்கள் பயிற்றுனர் குறிப்பிட்டிருந்தார். ‘ஹூப் ஹூப்’ என்று அடித்தொண்டையிலிருந்து ஒலியெழுப்புவது செம்போத்து. ‘கொட்ரூ’ ‘கொட்ரூ’ என்று கீச்சுக்குரல் எழுப்புவது மீசைகொண்ட குக்குறுவான். மனிதர்களைப் போல சன்னமாக விசிலடிப்பது வண்ணாத்திக் குருவி. அக்காக்குயில் ‘brain fever’ என்பதுபோலச் சொல்லும். ஆள்காட்டிக் குருவியோ நம்மைப் பார்த்து ‘Did you do it?’ என்று தத்துவார்த்தமாக விசாரிக்கும். அதே சமயம் ஒரு பறவையின் ஒலியைக் கொண்டு அது அமர்ந்திருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதும் சவாலானது.

பறவை பார்ப்பதை அறிமுகம் செய்துகொண்ட பிறகு முதல் முறையாக விடுமுறையில் சொந்த ஊருக்குச் சென்றபோது முற்றிலும் புதுமையானவொரு அனுபவம் வாய்த்தது. நீண்ட காலமாக தூரப்பார்வை கொண்ட ஒருவர் ஒருநாள் தகுந்த கண்ணாடி அணிய ஆரம்பித்ததும் அவருடைய மொத்த வீடும் கூர்மையடைந்து வேறொன்றாக மாறிவிடுவதைப்போல பறவைகளைப் பற்றிய அறிமுகம் கிடைக்கப் பெற்றதும் என் வீட்டைச் சுற்றியுள்ள மொத்த இயற்கைச் சூழலும் எனக்கு பலமடங்கு துல்லியமாகிவிட்டிருந்தது. மாம்பழச்சிட்டு, கொண்டலாத்தி, வெள்ளைக்கண்ணி, நீலமுகச் செண்பகம், வெண்முதுகு சில்லை அரசவால் ஈபிடிப்பான் என்று நான் நினைத்தே பார்த்திராத ஏராளமான அழகிய பறவைகளை எங்கள் வீட்டைச்சுற்றிலும் பார்க்க முடிந்தது. அவற்றின் வருகையையும், அன்றாட அலுவல்களையும் ஆர்வத்தோடு பின்தொடர முடிந்தது.

பறவைகளைப் பார்த்தலில் தவிர்க்கவே முடியாத மற்றொரு அம்சம் பைனாகுலர். அது மொத்த அனுபவத்தையும் பறவைக்கு அனுக்கமான வேறொரு தளத்திற்கு கொண்டுசென்றுவிடும். பறவைகள் தாம் அமரும் பழக்கப்பட்ட சில இடங்களுக்கு வெளியேயுள்ள எந்த இடத்திலும் கூடுதல் எச்சரிக்கை உணர்வுடன் அமர்வது. அத்தகைய தருணங்களில் எந்த கணமும் பரந்தெழுவதற்குத் தேவையான முடுக்கத்தை அவற்றின் உடல் கூடுதலாகக் கொண்டிருப்பதைக் காணமுடியும். அத்தகைய முடுக்கமற்று இயல்பாக அமர்ந்திருக்கும் பறவையின் அருகாமை ஒரு பைனாகுலரின் துணையின்றி கிட்டாது. நாம் பைனாகுலரை கண்களில் பொருத்தி ஒரு பறவையைப் பார்க்கத் துவங்கிய அக்கணமே நம்முடைய பிரக்ஞை அதன் பருவுடலில் இருந்து பறந்தெழுந்து அந்தப் பறவைக்கு அருகில் சென்றுவிடுகிறது. அந்தப் பறவை ஒரு கிளையில் இருந்து நகர்ந்து பக்கத்து கிளையில் அமர்கிறது; நீங்களும் நகர்ந்து அதற்குப் பக்கத்தில் அமர்கிறீர்கள். காற்றில் அசையும் கிளையில் அந்தப் பறவையோடு சேர்ந்து நீங்களும் அசைகிறீர்கள். தத்துவ அறிஞர் நெஹாமஸ் ‘நெருக்கம் மனிதர்களிடையே அழகை வெளிக்கொணர்கிறது’ என்கிறார். பறவைகளின் அழகை வெளிக்கொணர்வதற்கான நெருக்கத்தை பைனாகுலரே வழங்க முடியும் என்று தோன்றுகிறது.

பறவைகளை பார்ப்பவர்களிடையே ‘லைஃபர்’ (lifer) என்றொரு உள்வட்டச் சொல் புழக்கத்தில் உண்டு. ஒருவர் நீண்ட காலமாக நேரில் காண விழையும் பறவைகளின் பட்டியலில் உள்ள ஒரு பறவையை அவர் காணநேரிடும் போது அது அவருடைய லைஃபர் என்று எங்கள் பயிற்றுனர் விளக்கினார். அதாவது வாழ்க்கையை நிறைவைடையச் செய்யும் ஒரு பறவையின் தரிசனம். பறவைகளைப் பார்க்கத் தொடங்கியிருக்கும் உங்களுக்கு நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு பறவையும் ஒரு லைஃபர் தான் என்று பயிற்றுனர் சிரித்துக் கொண்டே எங்களைப் பார்த்துச் சொன்னார். என்னுடைய அப்பாவின் உள்ளங்கையில் அசைந்த அந்த ஈரமான சிறுவுடல் என் ஞாபகத்தில் மின்னிச் சென்றது.

***

ஜனார்த்தனன் இளங்கோ

ஜனார்த்தனன் இளங்கோ, மென்பொருள் பொறியியலாளர். சொந்த ஊர் திருவாரூரைச் சேர்ந்த திருத்துறைப்பூண்டி. இலக்கியம் தவிர தத்துவம், கட்டிடக்கலை, பறவையியல் ஆகிய துறைகளில் ஆர்வமுண்டு.

7 Comments

  1. இவ்வளவு நாட்கள் நான் தேடிக்கொண்டிருந்த சப்தத்தை எழுப்பும் பறவை செம்போத்து என இன்று அறிந்தேன், நன்றி.

  2. மிகவும் அருமை ஜனா. நானே அந்த குறிப்பிட்ட குருவி பற்றி மறந்துவிட்டேன். உன் நினைவாற்றல் பிரமிக்க வைத்தது. அருமையான பதிவு. வாழ்த்துகள். மேலும் பாராட்டுக்கள்.

  3. சிறப்பு மொழி நடை , பறவைகளைப் பற்றிய விவரிப்பும். அவைகளின் குரல் பதிவும் அருமை. மேலும் எதிர் பார்க்கிறோம்.

  4. அருமை! தொடர்ந்து எழுதவும்!! மனதுக்கு பிடித்ததை செய்வதே ஆனந்தம்தான்!!!

  5. சிறப்பான அனுபவப் பதிவு. வாழ்த்துகள்

  6. நண்பா சூப்பர்… தரமான பதிவு…. உன் மனதில் இருந்த படைப்பை மிக alagu

  7. அருமை;
    அருகிலிருந்து பார்த்தது போல் அனுபவம் கிடைத்தது!

உரையாடலுக்கு

Your email address will not be published.