கொரோனாவும் கவிதையும்- கல்பற்றா நாராயணன்

தமிழில்- அழகிய மணவாளன்

கொரோனா ஊரடங்கின்போதுதான் ஓரான் பாமுக்கைபோல, ஜெயமோகனைப்போல நானும் முழுநேர எழுத்தாளராக ஆனேன். பயணத்திலிருந்து, மேடைப்பேச்சிலிருந்து, உறவினர் வீடுகளிலிருந்து, ஆஸ்பத்திரிக்கு விசாரிக்கச்செல்வதிலிருந்து, கல்யாணங்களிலிருந்து, மரணங்களிலிருந்து, நண்பர்களிலிருந்து, நகரத்தின் இன்பங்களிலிருந்து, தவிர்க்கவே முடியாத கண்டிப்பாக சென்றே ஆகவேண்டிய இடங்களிலிருந்து நான் விடுதலை அடைந்தேன். வாசிப்பு,  யோசனை, எழுத்து இவை மட்டுமாக நான். நான் நடப்பதுகூட எழுதிக்கொண்டிருக்கும் அடுத்த கட்டுரைக்கோ, அடுத்த கவிதைக்கோ, நாவலின் அடுத்த அத்தியாயத்திற்கோதான். உண்டதும் உறங்கியதும் என்னில் உள்ள எழுத்தாளனுக்காக மட்டும்தான். என் நலம்விரும்பியும், என்னை கடுமையாக அறிவுறுத்தக்கூடியவனுமான ஒரு கலாரசிகனை(Connosieur) போல கொரோனா நான் வெளியே போகவில்லை என்பதை எப்போதும் உறுதிபடுத்திக்கொண்டது. நான் எழுதுகிறேன் என்பதை உறுதிபடுத்திக்கொண்டது.

காட்சி படிமமாக ஆக, பொருட்கள் குறியீடுகளாக ஆக, சம்பவங்கள் கதைத் தன்மையை அடைய,கைவிடப்பட்ட நினைவுகள் இருளில் இருந்து விடுபட்டு அவை வெளிப்படத்தேவையான சாவதானமான காலத்தை இந்த நோய்த்தொற்று அளித்தது. கைப்பற்றப்பட்டவர்களை மட்டுமல்ல, தன்னால் கைப்பற்ற முடியாதவர்களையும் பாதித்தது இந்த நோய் அளித்த தனிமை. தனிமையை விழைந்தவர்களுக்கு அது வரப்பிரசாதமாக ஆனது. ஊர்வசி அளித்த சாபத்தை செய்நன்றியாக எண்ணிக்கொள்ளும் அர்ஜுனனின் நிலையை யாரும் தனிக்காவியமாக எழுதியிருக்கிறார்களா என்று தெரியவில்லை (இந்திரலோகம் சென்ற அர்ஜுனனை ஊர்வசி விழைகிறாள். அவன் அவளை ஏற்றுக்கொள்ளாததால் ”நீ ஒரு வருடம் ஆணிலியாக இருப்பாய்” என்ற சாபத்தை அளிக்கிறது. வனவாசகாலத்தில் இறுதியில் பாண்டவர்கள் ஒவ்வொருவரும் அவர்களை யாரும் கண்டுபிடித்துவிட முடியாதபடி தங்களது அசல் ஆளுமையை மறைத்துக்கொண்டு மாறுவேடத்தில்  இருக்கவேண்டும். அந்த சமயத்தில் அர்ஜுனனுக்கு தன்னை உருமாற்றிக்கொள்ள ஊர்வசியின் சாபம் உதவியாக இருந்தது) ஆனால் கொரோனா போல முன்பு மனிதனுக்கு கிடைத்த வேறெந்த சாபமும் இவ்வளவு பயனுள்ளதாக இருந்ததில்லை. பாப்லோ நெருதா என்னை மகிழ்ச்சியுடன் வாசிக்கத்தொடங்கினார்.

When I lived amongst the roots

They pleased me more than flowers did;

And when I spoke to a stone

It rang like a bell.

It is so long, the spring

Which goes on all winter.

Time lost its shoes

A year is four centuries.

பாப்லோ நெருதா

1934ல் பீகாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை ஒட்டி  காந்தி ” தீண்டாமைக்காக கடவுள் கொடுத்த தண்டனைதான் இது” என்று எழுதினார். வாழ்க்கையின் நிரந்தரமின்மையை இந்த அளவுக்கு உணர்த்திய வேறொரு பேரழிவையும் காந்தி தன் வாழ்நாளில் அதுவரை கண்டதில்லை. எந்த அடிப்படையும் இல்லாத தீண்டாமை போன்ற பாகுபாட்டை  மனிதன் தொடர்ந்து கடைபிடிப்பது ஏன்? முடிந்தவரை பரஸ்பரம் உதவிசெய்து வாழும்படி கடவுள் நம்மிடம் சொல்கிறார். அதை செவிகூருங்கள் என்றார் காந்தி (’கடவுள்’- ஒரு விஷயத்தை  கற்பனையில் நிகழ்த்திப்பார்ப்பதற்கு  பலகாலமாக உள்ள வழக்கம். வெளிச்சம் தேவைப்படுபவர்களுக்கு அளிக்கப்படும் விளக்கல்லவா தெய்வம்). ” இது அனைத்தும்  கர்மவினையால் நிகழ்ந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள். இதை சொல்பவர்கள், அதை ஆமோதிப்பவர்கள் எந்த தீயசெயலின் (கர்மவினையின்) விளைவாக இது நிகழ்ந்தது என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும்” என்று காந்தி எழுதுகிறார். காந்தி எந்தவகையிலும் நியாயப்படுத்தமுடியாத குற்றமாக தீண்டாமையைத்தான் நினைக்கிறார். கர்மவினை போன்ற மதம்சார்ந்த கருதுகோள்களை அரசியல்காரணங்களுக்காக காந்தி உருமாற்றினார்.

கொரோனா எந்த தீயசெயலின் விளைவு என்று காந்திய வழிமுறையில் நாம் ஆராய்ந்து பார்க்கலாம். நோய்த்தொற்று உருவாக்கிய சூழலை கற்பனைசெய்து பாருங்கள், அதற்காக கிடைத்த தண்டனை வழியாக அதை புரிந்துகொள்ள முயற்சிக்கலாம். பெண்களிடம் அல்லது அவர்களுக்கு நிகரான புறக்கணிப்பை அனுபவித்தவர்களிடம் நாம் காட்டிய பாகுபாட்டின் விளைவுதான் கொரோனா என்று நமக்கு புரியவரும். பொதுமுடக்க காலத்தில் பெண்களைப்போல ஆண்களும் வீடுகளில் சிறையிடப்பட்டார்கள். அசௌகரியமான வடிவில் என்றாலும் ஆணும் பெண்ணும் நிகராக ஆகும்நிலை நோய்த்தொற்று காலத்தில் வந்தது. அவர்கள் எதிர்கொள்ளும் சூழல் ஒரேபோன்றதாக ஆனது. பலகாலமாக தாங்கள் அனுபவிக்கும் சுதந்திரமின்மையை ஆண்கள் கொஞ்சம்கூட சகித்துக்கொள்ளமுடியாமல் தவிப்பதை கண்டு பெண்கள் ரசித்தனர். எங்கும் கட்டுப்பாடுகள். இதுவரை ஆண்கள் வழியாக அல்லாமல் தங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு கிடைக்காத  பெண்கள், மனித நிலையை பிரதிநிதித்துவப்படுத்த நிகரான தகுதி தங்களுக்கு உண்டு என்பதை கண்டுகொண்டனர். கைவிடப்பட்டதன்மையின் இந்த நிகர்நிலையால் மனித இருப்பை ஆண்களைப்போல பெண்களாலும் பிரதிநிதித்துவப்படுத்த முடிந்தது. கொரோனாவுக்கு பாலின பாகுபாடு இல்லை. கவிதைக்கும் அது இல்லை என்பது இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு புரிந்தது. புதியதாக உருவாகிவந்த இந்த பருவத்தில் பெண்கள் இன்னும் தளிர்த்தனர். பெண் எழுத்தாளர்கள் முன்பு எப்போது  இவ்வளவு கற்பனைகொண்டவர்களாக வெளிப்பட்டதில்லை. பெண்கள் குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால், சிறுபான்மை சமூக பெண்கள் கொரோனா காலத்தில் நிறைய எழுதினார்கள். கவிதை என்ற ஊடகத்தின் தனித்தன்மை கவிதை எழுதுபவள்(எழுதுபவன்) தன் சுயத்தை வெளிப்படுத்தாமல் அதனால் செயல்படமுடியாது என்பதுதான். கவிதை வழியாக மனித இருப்பின் பிரதிநிதிகளாக உயர்வதன் உவகைதான் அவர்களை எழுதவைக்கிறது. கதையில், நாவலில் நீங்கள் முகமுடி அணியலாம், கவிதையில் அது சாத்தியமில்லை. மாத்ருபூமி வாரப்பதிப்பில் சிறுவர்களுக்கான பகுதியில் ஹரிதா எச்.தாஸ் என்ற சிறுமியின் ‘முகமுடிக்கு உள்ளில்’ என்ற கவிதையில் இந்த வரிகளை பாருங்கள்

வீட்டிற்கு செல்லவேண்டும்

உதிர்ந்துவிடாத காதுகளை கொஞ்சம்

தொட்டுப்பார்க்கவேண்டும்

வாயை நன்றாக திறந்து கொட்டாவி விடவேண்டும்

வாயை நீண்டி காறி எச்சில் துப்பவேண்டும்

பொதுமுடக்க காலத்தில் நான் நடந்து நடந்து ஒரு காட்சிக்கு சென்று சேர்ந்தேன். நிறைய பசும்புல் உள்ள இடத்தில் இறைச்சி மாடு ஒன்றை கட்டியிருக்கிறார்கள். செழிப்பான உணவுக்கு முன்னால் அது மிக உற்சாகமாக நின்றிருந்தது. காதுகள் மேல்நோக்கி விரிந்திருந்தன. வாலைக்கொஞ்சம் உயர்த்தி வைத்திருந்தது. நான் எண்ணிக்கொண்டேன், நான் நாளை திரும்பிவரும்போது அது அங்கே இருக்கப்போவதில்லை, அது எங்கேயும் இருக்கப்போவதில்லை. தேவயானியைப்போல நெஞ்சு உடையும்படி கூப்பிட்டால் குடலைப்பிளந்தபடி அது வெளிவரலாம்(மிருத்யு சஞ்சீவினி மந்திரத்தை அறிவதற்காக கசன் சுக்ரரிடம் மாணவனாக வந்துசேர்கிறான். அதை அறிந்த அரசன் அவனைக்கொல்ல சுக்ரரின் ஆசிரமத்திற்கு அரக்கர்களை அனுப்புகிறான். காட்டிற்கு விறகு சேகரிக்க சென்ற கசனை அரக்கர்கள் கொன்று அவன் உடலை துண்டுதுண்டாக் வெட்டி ஆசிரமத்திற்கு கொண்டுவருகிறார். அதை கூழ்போல திரவ வடிவம்கொண்டதாக ஆக்கி சுக்ரருக்கு குடிக்க கொடுக்கிறார்கள். வெளியே போய்வருவதாக சொன்ன கசன் வரவேண்டிய சமயம் ஆகியும் வராததால் கவலைகொண்ட தேவயானி அவனை அழைக்கிறாள். ஒரு பதிலும் இல்லை. கசனுக்கு ஏதோ ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்று உணர்ந்தவுடன் அவள் தொண்டை நரம்புகள் புடைக்க கசனை அழைக்கிறாள். கசன் சுக்கிரரின் குடலைப்பிளந்து வெளிவருகிறான்). மரணத்திற்கு மிகமிக அருகில் என்பதை அறியாமல் அவ்வளவு விழைவுடன், அந்த உன்மத்தத்தில் தன்னை மறந்து புல் தின்னும் அந்த இறைச்சிமாட்டின் மீது எனக்கு பொறாமை ஏற்பட்டது.

ஏன் ஆதாம்

ஞானத்தின் கனியை உண்டான்?

என்றென்றைக்குமான தவிப்பை பெற்றுக்கொண்டான்?

தன் எல்லையில் இல்லாத ஒன்றைப்பற்றியும்

இந்த மாட்டிற்கு எந்த பரிதவிப்பும் இல்லை.

அது அது மட்டுமாக.

இறக்கும்போதே அது இறக்கிறது.

அது போதும்தானே?

அந்த இறைச்சி மாடு ஒரு படிமமாக ஆகிவிட்டது. ஒரு சாதாரண காட்சி அசாதாரணமான ஒரு படிமமாக உருமாறியிருக்கிறது. அதில் சாத்தியமான அர்த்தங்களை நான் திறந்துவைத்திருக்கிறேன். யார் எனக்கு உதவியது? சந்தேகமே இல்லை, கொரோனா தான், அது எனக்களித்த மரணம் பற்றிய அறிதலால், அந்த விஷேஷ தளத்தில் என்னால் அந்த கவிதைக்கு சென்றுசேர முடிந்தது.

ஒரு ஆப்பிரிக்க நாடோடிக்கதை. முன்பு யாருக்குமே மரணமில்லை. ஒரு நாள் மனிதனா, பாம்பா யார் அழிவின்மைக்கு தகுதியானவர்கள் என்று கடவுளுக்கு சந்தேகம் வருகிறது. அந்த சந்தேகத்தை போக்க கடவுள் பலநாட்கள் நிகழக்கூடிய ரொம்பதூரம் ஓடவேண்டிய ஒரு ஓட்டப்பந்தயத்தை ஏற்பாடு செய்கிறார். ஓடும்போது மனிதன் (ஆண்!) ஒரு பெண்ணைக் கண்டதும் ஓடுவதை தவிர்த்துவிட்டு அவள் பின்னால் போய்விடுகிறான். அடுத்த நாள் பந்தயத்திற்கு திரும்பிவந்தான். கடவுள் அவனை தடுத்து, நீ போட்டியில் தோற்றுவிட்டாய், பாம்புதான் மரணமில்லாமல் இருக்க தகுதியானது. நீ இறப்பாய் என்று சொல்லி மறைந்தார். ஒருவகையில் இந்த கதைக்கும் பைபிளின் ஆரம்பத்தில் உள்ள உயிர்கள் உருவான கதைக்கும்(book of genesis) தூரத்து உறவு இருக்கிறது. அவனை திசைதிருப்பியது அவள்தான்.

அழிவின்மையின் நந்தவனத்திலிருந்து, சொர்க்கத்திலிருந்து அவன் வெளியேற்றப்பட்டான். திசைமாறியதால் மனிதர்கள் மரணமுள்ளவர்களாக ஆனார்கள். பாம்போ, செடியோ, மரமோ, விலங்கோ அழிவின்மைகொண்டவை அல்ல. அவற்றிற்கும் இறப்பு உண்டு, ஆனால் இறக்கும் கணத்தில்தான். ஓடும்போது அவை ஓடுபவை மட்டும்தான், உண்ணும்போது அவை உண்பவை மட்டும்தான், உடலுறவு என்பது உடலுறவு மட்டும்தான். அவற்றை பொறுத்தவரை மரணம் என்பது வாழ்க்கையில் இல்லை. கடவுள் மனிதனைத்தவிர பிற எல்லா உயிரினங்களிலும் மரணத்தை முழுமையாக மறைத்து வைத்திருக்கிறார். கடவுள் மனிதனுக்கு மரணபயத்தை அளித்தார். மரணத்தின் ரகசியத்தை அளிக்கவில்லை. காதுகூர்ந்தால் மரணம் நெருங்கிக்கொண்டிருக்கும் குளம்போசையை அவனால் கேட்கமுடியும்.

அவனது உறுதியும் தன்முனைப்பும் மரணபயம்தான். ஓடும்போது அவன் ஓடுவது மட்டுமில்லை. உண்ணும்போது உண்பது மட்டுமில்லை. எதிலும் அவன் முழுமையாக மூழ்குவதில்லை. அவன் பணயம் வைக்கப்பட்டவன். நிற்பது நிகழ்காலத்தில் என்றாலும் காலை ஊன்றியிருப்பது இறந்தகாலத்திலோ,  எதிர்காலத்திலோ தான். அவனுக்கு மரணபயம் உண்டு, ஆனால் அவன் மரணத்தை அறிவதில்லை. மரணபயம் தன்னை மறைத்துக்கொள்ளும் விரும்பம்கொண்டது. மரணபயத்திலிருந்து மரணத்தை அறிபவன் என்ற பரிணாமத்தால்தான் சித்தார்த்தன் புத்தனாக ஆனான். மரணம்பற்றிய அறிதல் கவிதையாகவோ, தத்துவ சிந்தனையாகவோ மாறுகிறது. ” இந்த பேரழகியால் புழுக்கள் செழிப்பாக வளரப்போகின்றன” என்று வில்யம் ப்ளேக் எழுதுகிறார். ” பிறர் உனக்கு அறையை காலிசெய்து தந்ததுபோல நீ பிறருக்கு அறையை காலிசெய்து கொடு” என்கிறார் யூஜினியோ மொண்டேல் (Eugenio Montale). ” துளி முனகல்கூட இல்லாத மரணத்தின் கதையை யார் சொல்லமுடியும்? நிகழப்போவதை யாரால் திரைவிலக்கிக்காட்டமுடியும் என்று ஷெல்லி. மரணம் கொண்ட மனிதன் தன் சவத்தை மிதித்துச்செல்வது எந்த உயரத்திற்கு என்கிறார் நாலாப்பாடு நாராயண மேனோன். ” என்றும் கடல்கொள்ளும் பிறப்பு எனும் மணற்திட்டில் நான்” என்கிறார் ஆற்றூர் ரவிவர்மா. எல்லாமே மரணத்தை பற்றிய அறிதல் கொண்ட வரிகள். மரணபயத்தோடு அல்ல, மரணம் பற்றிய அறிதலுடன் சாக்ரடீஸ் விஷம் குடித்தார். மரணத்தை அறிந்தவனின் எண்ணங்கள்தான் தத்துவசிந்தனை என்கிறார்கள் ஹைடெகரும் நீட்சேவும் குமாரன் ஆசானும். கொரோனா மரணத்தை மிக நெருக்கமான யதார்த்தமாக ஆக்கியது. பலரில் அது மரணபயமாக ஆகியது. சிலரில் அது மரணம் சார்ந்த அறிதலாக, குறைந்தபட்சம் கலைப்படைப்புகளிலாவது வெளிப்பட்டது. கொரோனா காலத்தில் எழுதப்பட்ட கவிதைகளில் தத்துவார்த்தமானதன்மை கூடியிருப்பது அசாதாரணமான விஷயமல்ல.

கொரோனா விட்டுச்செல்வதில்லை, பலவிதமான தொந்தரவுகளாக அது தொடர்கிறது. அந்த நண்பரிடன் நான் எதையும் சொல்லைவில்லை. ஆனாலும் இரவில் ‘ தொந்தரவு போல பிரிந்துபோக மனமில்லாத நண்பனில்லை’ என்று எழுதிவைத்தேன். இந்த வரியை எழுதச்செய்தது என்னுள் உள்ள மரணபயமல்ல. நான் மரணபயத்திலிருந்து முழுமையாக மீண்டவன் இல்லை, அது தன் இருப்பை என்னிடம் தெரிவிப்பதுகூட இல்லை. ஆனால் என் கவிதையில் மரணம் சார்ந்த அறிதல்கள் வெளிப்படுகின்றன. கொரோனா காலத்தில் நான் எழுதிய கவிதைகளை இன்று திரும்பிப்பார்க்கும்போது அவற்றில் மரணம் பற்றிய அறிதலின் நிரந்தரமான இருப்பை உணரமுடிகிறது. காவல் என்ற கவிதை இப்படி தொடங்குகிறது:

உயிர் அளவுக்கு அதிக கவனமான

காவல்காரன் உண்டா?

ஒவ்வொரு மூலைக்கும் போய்

அது உடலைக்காத்தது

நேரா நேரத்திற்கு போகவில்லையென்றால்

உடலிலிருந்து கெடுமணம் வந்தது.

உயிர் எவ்வளவு அழுந்த அடைத்து வைத்திருந்திருக்கிறது

கெடுமணத்தின் ஊற்றை.

இன்னொரு கவிதை

மரணவீட்டில்

புலி வந்ததும்

இறந்தவனைத் தவிர பிற அனைவரும்

ஓடிப்போனார்கள்

புலி அவனை முகர்ந்து பார்த்தது

தைரியத்தின் மீது மதிப்பு தோன்றியிருக்கலாம்

தோளை கொஞ்சம் தட்டிவிட்டு திரும்பிச்சென்றுவிட்டது.

” இந்த இரவு என் அதிகபட்ச துயரத்தை எழுதுவதற்காக” என்று பாப்லோ நெருதா எழுதிய அந்த இரவு இன்று இரண்டு வருடம் நீளமானது. தலைசிறந்த கவிதைகளில் மரணத்தின் இருப்பும் உண்டு என்று நினைக்கிறேன். கவிதை எழுதுவதோ தத்துவசிந்தனை செய்வதோ மனிதன் அல்ல மர்த்யன்1 தான். கொரோனா காலத்தில் நான் எழுதிய கவிதைகள் மட்டுமல்ல, வாசித்த கவிதைகளும் மரணம் சார்ந்த அறிதலை இன்னும் நெருங்கி அறிவதாக இருந்திருக்கிறது.

கொரோனா காலத்தில் அந்த நோயையும் மரணத்தையும் இணைத்து ‘கண்களின் கொண்டாட்டம்’ என்ற கவிதையை எழுதினேன்.

மர்த்யனின் கண்களுக்கு இவ்வளவு

உயிர்த்துடிப்பு உண்டு என்பதை அறிய கொரோனா வரவேண்டியிருந்தது

உலகம் கண்திறந்துவிட்டதா?

கொரோனா காலத்தில் முகம் முகக்கவசத்தால் மறைக்கப்பட்டதும் உலகம் கண்களாக ஆனது. அனுமதிக்காவும் ஆணைக்காகவும் நாம் கண்களை பார்த்தோம். எக்ஸ்பிரஷனும் இம்பிரஷனும் உள்ள கண்களின் தனித்தன்மைகளை நாம் முதன்முறையாக கண்டுகொள்கிறோம். விரியவும் வாடவும் நனையவும் நிறையவும் கண்ணால்தான் முடியும். காதலும் பிணக்கமும் அன்பும் வெறுப்பும் கண்களில் அதிகம்.

கண்ணெழுதியதை வாசிக்கவும்

அதன் லிபி காலாதீதமானது

இடத்திற்கு அதீதமானது

கொரோனா என் கண்களை திறந்தது. ” ஐ ஸீ” என எந்த புலனை அடிப்படையாக வைத்து சொல்கிறோமோ அந்த கண்ணாக கொரோனா காலத்தில் கண் கண்டடையப்பட்டது.

உயிர் இவ்வளவு உயிர்த்தன்மையுடன் வேறெங்கும் இருப்பதில்லை

உயிர் முதலில் நுழைவது கண்கள் வழியாகத்தான்

விளக்குகளில் கடைசியாக அணையும் விளக்கும் கண்தான்.

 கண்களின் தனிச்சிறப்பை எழுதிய அழகான கவிதை என்று கொரோனாவை சொல்லலாம். எந்திர மனிதனுக்கு கண்கள் கிடைக்கும்வரை மனிதனின் மாண்பிற்கு எந்த அறைகூவலும் இல்லை என கொரோனா என்னிடம் கண்ணடித்து சொன்னது. சுயவெளிப்பாட்டு ஆற்றல்  அதிகமாக ஆன கொரோனா காலத்து கண்களுக்கு இன்னும் அறிவதற்கான, தன்னை அறிவிப்பதற்கான அதிகாரம் உண்டல்லவா. இந்த கட்டுரை எழுதும் நானும் கொரோனாவிடம் “ஐ ஸீ” என்று சொல்கிறேன்.

—————————————————————————   

  1. எல்லா உயிரினங்களுக்கும் மரணம் உண்டு, அவை அழியக்கூடியவை. மனிதனுக்கும் அதே நிலைதான். அதைக்குறிக்க மலையாளத்தில் மர்த்ய(மரணமுள்ள) என்ற சொல் உண்டு. ஆங்கிலத்தில் mortal என்ற சொல்லுக்கு நிகரான சொல். மனிதன் என்பது பொதுவான சொல். மனிதனை ’மர்த்யன் (மரணமுள்ளவன்)’ என்று அழைத்தால் ’ தற்காலிகமான இருப்பு கொண்டவன் ‘ ’அழியக்கூடியவன்’ என்ற தொனி உருவாகிறது.

ஈரோடு பெருந்துறையை சேர்ந்த அழகிய மணவாளன், கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். நாவல் கலை பற்றிய மலையாள நாவலாசிரியர் பி.கே.பாலகிருஷ்ணனின் விமர்சன நூலை "நாவலெனும் கலைநிகழ்வு" எனும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். இலக்கியத்திற்கு அப்பால் நிகழ்த்துகலையான கதகளியில் அவருக்கு ஆர்வமுண்டு.

2 Comments

உரையாடலுக்கு

Your email address will not be published.