/

இந்தியாவில் மறுமலர்ச்சி – பகுதி 4 : ஸ்ரீ அரவிந்தர்

தமிழில் : சியாம்

இந்த கட்டுரைத் தொடரின் முந்தைய பகுதிகள்:
பகுதி-1
பகுதி-2
பகுதி-3

இந்தியாவின் மறுமலர்ச்சி என்பது இன்னமும் தீர்மானிக்கப்படாமல் தன்னைத் தானே தீர்மானித்துக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. ‘மறுமலர்ச்சி’ என்ற சொல் பொருள்படுவது போல இந்தியாவின் ஆன்மா புதிய ஆற்றலாக, அதன் உள்ளார்ந்த பண்டைய ஆன்மாவின் புதிய வடிவாக, பிரக்ஞா புராணியாக மறுபிறப்பு எடுப்பதாக இருந்தால் அதன் ஆன்மீக உத்வேகத்தின் தாக்கத்தை நமது வாழ்வின் எல்லா தளங்களிலும் வலியுறுத்துவதாக இருக்கும். ஆனால் நாம் இன்னமும் இங்கு புரிந்துகொள்ளமுடியாத எச்சங்களைக் காண விதிக்கப்பட்டுள்ளோம்.  சிலசமயம் நம்முடைய கலை இலக்கியங்களில் ஆன்மீகம் என்று நாம் எதை உத்தேசிக்கிறோம் என்ற கேள்வியை எதிர்கொள்கிறோம். கலையும் கவிதையும் இதனால் எவ்வாறு மேம்படும் என்றும், அரசியல் அல்லது சமூகம் சார்ந்த நடைமுறை பிரச்சனைகள் இதனால் எப்படி தீரும் என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது. மதமும் ஆன்மீகமும் நடைமுறையான அறிவார்ந்த செயல்பாடிற்கு சம்பந்தம் இல்லாத மாறுபட்ட  விஷயங்கள் என்றும், அவற்றிற்கு தனித்தனியான கோட்பாடுகள் தேவை என்று கருதும் ஐரோப்பிய சிந்தனை இங்கு எதிரொலிக்கப்படுகிறது. இதனால் நாம் இந்தியாவை நடைமுறை மற்றும் செயலூக்கத்திலிருந்து விலக்கி மீபொருண்மை நோக்கி நகர்த்தி, பகுத்தறிவற்ற மதத்தின் விளைவான தெளிவற்ற கோட்பாட்டை வேரூன்றச் செய்கிறோம் என்னும் ஐயம் எழுகிறது. அதோடு நவீன உலகின் தாக்கத்திற்கு மத்தியில் பிழைத்துக்கொள்ளக் கூடிய ஆற்றல்மிக்க ஒருங்கமைந்த தேசமாக இருக்கத் தேவையான  பகுத்தறிவின் பாதையிலிருந்து இந்தியாவை திசைதிருப்புகிறோம் என்ற சந்தேகமும் நமக்கு வரலாம். ஆகையால் ஆன்மீகத்தால் வழிநடத்தப்படும் மறுமலர்ச்சி என்பதன் மூலம் நாம் என்ன உத்தேசிக்கிறோம் என்பதை முதலில் தெளிவுபடுத்தவேண்டும்.                  

ஆன்மீகத்தால் வழிநடத்தப்படும் மறுமலர்ச்சி என்று சொல்வதன் மூலம் நாம் என்ன சொல்லவரவில்லை என்பதை முதலில் தெளிவாக்கிக் கொள்ளலாம். உலக வாழ்க்கையை முக்கியமற்றது என்றும், நாம் எல்லோரும் கூடிய விரைவில் துறவிகளாக வேண்டும் இதற்கு அர்த்தமில்லை. அதுபோல, சமூக வாழ்க்கையை துறவுக்கான தயார்படுத்துதலாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றோ, நம் தனிவாழ்க்கையை ஒட்டுமொத்த மனித முன்னேற்றத்திற்கு தொடர்பற்ற இலட்சியங்களை கொண்டதாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றோ இதற்கு அர்த்தமில்லை என்பதும் தெளிவு. பழங்கால சமூகங்கள் முயற்சித்தது போல ஒட்டுமொத்த தேச இருப்பையும்(being) ஒரு சில குறிப்பிட்ட மறுக்கமுடியாத நம்பிக்கைகளுக்குள்(dogma), மதங்களுக்குள் பொருத்துவது ஆன்மீகம் ஆகாது. பழைய மனப்பழக்கத்தின் ஆதிக்கத்தால் பலரது மனங்களில் இப்படியானக் கருத்து இன்னமும் பதிந்திருக்கிறது. பலதரப்பட்ட மத நிலைபாடுகளைக் கொண்ட ஒரு தேசத்தில் இதுபோன்றவொரு முயற்சியே  சாத்தியமற்றது. எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தைவிடவும் ஆன்மீகம் விசாலமானது. ஆன்மீகத்தின் உயர் கருத்துக்களில் ஒரு மகத்தான மதம் கூட உலகளாவிய மதத்தின் ஒரு கிளையாகத்தான் ஆகமுடியும். இவ்வாறு ஒரு உலகளாவிய மதத்தின் கிளையாவதன் மூலம் நாம் வருங்கால மனிதனின் சாசுவத்திற்கான, தெய்வீகத்திற்கான, மகத்தான சுயத்திற்கான, ஒற்றுமையின் மூலத்திற்கான தேடலை புரிந்துகொள்வோம். தெய்வீகமான, சாசுவதமான மதிப்பீடுகளுடன் தனி மனித வாழ்வின் மதிப்பீடுகள் நெருங்குவதையும் நாம் புரிந்துகொள்வோம். 

இரண்டாவதாக மனித வாழ்வின் மகத்தான இலக்குகள், நவீன உலகின் பிரச்சனைகள், மனித செயல்பாடு, முன்னேற்றம், விரிவாக்கம், ஆற்றல், ஒளி, நிறைவு ஆகியவற்றுக்கான மனித ஆன்மாவின் விருப்பம் போன்றவற்றை விலக்கிவைத்தலைப் பற்றியும் நாம் இங்கு உத்தேசிக்கவில்லை. மனம்(mind) அற்ற ஆன்மா, உடலற்ற ஆன்மா போன்றவை மனிதனுக்கு உரித்தானது அல்ல. ஆகையால் மனித ஆன்மீகம் என்பது மனதையோ, வாழ்வையோ, உடலையோ பழிக்கக் கூடாது; அதோடு இந்த மூன்றையும் தாழ்ந்த நிலையில் வைக்காமல் உயர்ந்த நிலையில் வைக்க வேண்டும். இவையெல்லாம் மனித-ஆன்மாவின் இருப்புக்கான கருவிகளாக இருப்பதால் இவற்றை உள்ளார்ந்த முக்கியத்துவம் கொண்டவையாகக் கருதவேண்டும். பழைய ஹெலனிய அல்லது நவீன அறிவியல் சிந்தனையைப் போல பண்டைய இந்திய கலாச்சாரமும் இந்த மூன்றின் வளமைக்கும் வலுவான முன்னேற்றத்திற்கும் மதிப்பளிப்பதாகவே இருந்தது. ஆனால் நவீன அறிவியல் சிந்தனைக்கு கூடுதலாக வேறொரு இலக்கும் இருந்தது: பகுத்தறிவின் செயல்பாட்டிற்கு, அறிவியல் மற்றும் தத்துவத்திற்கு, அழகியல் நிறைவுக்கு, கலைகளுக்கு, உடலின்  நலம் மற்றும் வலிமைக்கு, பொருளியல் நன்னிலைக்கு, ராணுவ அரசியல் சமூக திறனுக்கு என இந்த மூன்றிற்கும் நிறைவளிக்கக்கூடிய எல்லாவற்றிற்கும் அது முழு சுதந்திரத்தையும் அளித்தது. இதே இலக்கை மகத்தான புதிய கருத்துக்களின் தாக்கங்களின் ஊடாக  இந்தியாவும் புதிய வழிகளில் உறுதியாக தேடிச் செல்வாள். ஆன்மீகம் என்பது சிலவற்றை  விலக்குவதாக இருக்கவேண்டியதில்லை; நிறைநிலையில் அது எல்லாவற்றையும் உள்ளடக்கியதாகவே இருக்கும்.

மனித இருப்பைப் பற்றிய ஆன்மீக பார்வைக்கும் லௌகீக பார்வைக்கும் பெரும் வேறுபாடு உள்ளது. மனிதனுடைய மனமும், உடலும் இறுதியான இலக்கு இல்லையென்றும், அவை அவனது இலக்கை அடையும் வழிகள் மட்டுமே என்றும் ஆன்மீகம் கருதுகிறது. இன்னும் சொல்லப்போனால் அவை இலக்கை அடைவதற்கான அறுதியான உயர்வான வழிகள் இல்ல என்ற நிலைபாட்டையும் அது கொண்டிருக்கிறது; அதோடு ஆன்மீகம் இவற்றை அவனது ஒட்டுமொத்த இருப்பாக அன்றி புறவயமான காரணிகளாகத்தான் பார்க்கிறது; அது மனித எல்லைக்குட்பட்டவற்றுக்கு பின்னால் உள்ள முடிவிலியை காண்கிறது; அத்துடன் அந்த முடிவிலியின் மதிப்பையும் தீர்மானிக்கிறது. மேலும் ஆன்மீகமானது மனிதனை உலகை கடந்தும் வெளிப்படையாக இருப்பவற்றை கடந்தும் உண்மையை காண்ச் செய்கிறது. அதோடு மனிதனின் அக உலகத்தையும் காண்கிறது. மனிதனுக்குள் இருப்பவற்றுள் மிகவும் முக்கியமான நிலையில் அவன் ஆன்மீகத்தை வைக்கிறது. அவனுள் இருக்கும் ஏனையவை எல்லாமும் இந்த ஆன்மீகத்தை வெளிக்கொணர்ந்து வெளிப்படுத்த ஏதோ ஒரு வழியில் முயலவேண்டும். மனிதன் எப்பொழுதும் கண்டுணர முயல வேண்டிய நிலையில் உலகில் உள்ள ஆன்மாவை, அதன் தெய்வீகத்தை அது வைக்கிறது. இது ஒட்டுமொத்தமாக நமது சராசரி பார்வையை மாற்றுகிறது. மனித வாழ்வின் எல்லா இலக்குகளையும் தக்கவைத்தவாறே அவற்றுக்கு புதிய பொருளையும் திசையையும் அளிக்கிறது.

நாம் பொதுவாக உடலின் நலத்தையையும் ஆற்றலையும் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறோம். ஆனால் இவ்விதம் ஏன் செய்கிறோம்? உடலிற்காகவே இதைச் செய்கிறோம் என்பது சாதாரண பதிலாக இருக்கும். இதற்கான மதிப்பு உண்டு தான். ஏனெனில் நமது அறிவார்ந்த உணர்ச்சிபூர்வ நிறைவுக்கு நமது நீண்ட ஆயுள் ஒரு வலுவான அடித்தளம். ஆனால், இந்த பொருண்மையும்(உடலும்) ஆன்மாவின் வெளிப்பாடு தான். முழுமையான மனித வாழ்வினுடைய தர்மத்தின் ஒரு அங்கம் என்ற வகையில் அதன் நிறைவுக்கு மதிப்பு உண்டு. தெய்வீக சுயத்தின் கண்டடைதலுக்கும் வெளிப்பாட்டிற்கும் இட்டுச்செல்லும் எல்லா உயர்ந்த செயல்களுக்கும் உடல் அடித்தளமாக இருப்பதால் நாம் அதை குறிக்கோளாக கொண்டிருக்கிறோம். சரீரம் கலு தர்ம சாதனம்(शरीरमाद्यं खलु धर्मसाधनम्) என்பது பழைய சமஸ்கிருத கூற்று. நமது உடலும் தர்மத்தை நிறைவுசெய்வதற்கான ஒரு வழி. மனிதன் அவனது உயிர்ப்பையும் நிறைவையும் உணர்வதற்காக வேண்டி நமது உளரீதியான, உணர்ச்சிபூர்வமான அழகியல் அம்சங்கள் மேம்பட வேண்டும் என்பது ஒரு சராசரியான பார்வை. ஏனென்றால் இவை எல்லாமும் ஆன்மாவின் வெளிப்பாடுகள், இவை அவனுள் தெய்வீக மதிப்பீடுகளை தேடுகின்றன. இவற்றின் வளர்ச்சியால் நுண்மையான நெகிழ்வால், அதன் ஆற்றலாலும் தீவிரத்தாலும் உலகில் உள்ள தெய்வீக மெய்மைக்கு அணுக்கமாக அவனால் செல்ல முடியும். அவனது ஒட்டுமொத்த வாழ்வையும் அதற்கு ஏற்றபடி ஒத்திசைந்ததாக மாற்றிக்கொள்ள முடியும். சராசரியான பார்வையின்படி ஒழுக்கம் என்பது நன்கு முறைப்படுத்தப்பட்ட தனிநபர் மற்றும் சமூக நெறிமுறைகள் தான். சக மனிதர்களுடன் அறிவார்ந்த அனுதாபமுடைய சுய கட்டுப்பாடுடன் கூடிய நடத்தைக்கு அது சமூகத்தை இட்டுச்செல்லும். ஆனால் ஆன்மீக நோக்கில் தர்மம் என்பது இதற்கும் மேலானது. நமது இருப்பில் சாராம்சமான ஒரு வளர்ச்சியே நமது தெய்வீக சுயத்தின் வளர்ச்சிக்கான வழி. இது கடவுளின் இயல்பை நோக்கி வளர்தலின் ஒரு படிநிலை.

தேரில் வீற்றிருக்கும் சூரியபகவான் சிற்பம்

மேலைத் தத்துவம் இருப்பு குறித்த உண்மைகளை பகுத்தறிவினால் உணர்ச்சியற்ற வகையில் கையாள்கிறது. நாம் அறிவியல் முன்வைக்கும் உண்மைகளை(facts) உற்றுநோக்குவதின் மூலமோ, கருத்தாக்கங்களை விவாதிப்பதன் மூலமோ அல்லது இவை இரண்டையும் கலந்த வழிமுறையின் மூலமோ இருப்பு குறித்த உண்மைகளைப் பெறலாம். ஆனால் ஆன்மீக பார்வையில் இருப்பு குறித்த உண்மை என்பது பகுத்தறிவு மற்றும் அறிவியல் கண்டடைவுகள் மூலம் மட்டுமே அல்லாமல் உள்ளுணர்வு மற்றும் அகவய அனுபவத்தின் மூலம் கண்டடையப்பட வேண்டிய ஒன்று. தத்துவத்தின் பணி என்பது பலதரப்பட்ட அறிவு தரும் தகவல்களை எவற்றையும் விலக்காமல்  உச்சபட்ச உலகளாவிய உண்மையாக அவற்றை ஒருங்கமைப்பது. அதோடு  மனிதன் அவனுடைய ஆன்மீக மெய்மையை உணர்வதற்கும், தெய்வீக சுய இயல்பை நோக்கி அவன் வளர்வதற்கு அடித்தளம் அமைப்பதே அதன் உண்மையான மதிப்பு. உலகை பற்றிய ஒரு அறிவாக அறிவியல் மாறுகிறது. உலகின் ஆன்மா மீது ஒளி பாய்ச்சக் கூடியதாக அது இருக்கிறது. அது தன்னை பொருண்மை அறிவுக்குள் நடைமுறை பலன்களுக்குள் ஒடுக்கிக்கொள்வதாக இருக்க வேண்டியதில்லை. ஒரு ஆன்மீக கலாச்சாரம் புதிய துறைகளில் நிகழும் ஆராய்ச்சிக்கும், புதிய பழைய உளவியல் அறிவியலுக்கும் இடம் அளிப்பதாக இருக்கும். அழகியல் உணர்வை நிறைவு செய்கிற மனிதனின் இயற்கையின் படிமங்களை(images) உருவாக்குவது கலை மற்றும் கவிதையின் ஆரம்பகட்ட இலக்காக இருக்கிறது. மேலும் வாழ்க்கை குறித்து அறிவுத்திறனின் கருத்துக்களையும் கற்பனையின் எதிர்வினைகளையும் கலைநயத்துடன் பிரதிநிதிப்படுத்துவது(embody) அதன் இலக்காகும். ஆனால் ஒரு ஆன்மீக கலாச்சாரத்தில் அவற்றின் இலக்கு என்பது மனிதனில் இயற்கையில் மறைந்துள்ள மகத்தான விஷயங்களை, ஆழமான ஆன்மீக மற்றும் உலகளாவிய அழகை வெளிப்படுத்துவது ஆகும். மனித வாழ்வின் முதல் வடிவில் அரசியல் சமூகம் பொருளாதாரம் என்பவை மனிதன் கூட்டமாக வாழ்வதற்கு உற்பத்திசெய்வதற்கும், தங்கள் ஆசைகளை நிறைவு செய்து மகிழ்வதற்கும், உடல் மற்றும் உளவியல் திறனை மேம்படுத்துவதற்கும் உருவாக்கப்பட்ட அமைப்புகள். ஆனால் ஆன்மீக நோக்கம் அவற்றை இதற்கும் மேலான ஒன்றாக மாற்றுகிறது. முதலாவதாக, மனிதன் தனது உண்மையான சுயத்தை தெய்வீகத்தை தேடுவதற்கான அதுவாகவே ஆவதற்கான ஒரு வாழ்க்கைச் சட்டகத்தை அது உருவாக்குகிறது. இரண்டாவதாக, அவன் வாழ்வில் தெய்வீக நெறியை பிரதிநிதிப்படுத்துகிறது(embodiment). மூன்றாவதாக, மனித இனம் பரிணமிக்க முயலும் மனிதத்தின் தெய்வீக இயல்பினுடைய ஒளியை ஆற்றலை அமைதியை ஒற்றுமையை ஒத்திசைவை நோக்கிய ஒட்டுமொத்தமான முன்னகர்தலை அது உருவாக்குகிறது. மிகத் துல்லியமாக இதையே நாம் ஆன்மீக கலாச்சாரம் என்றும் வாழ்வில் ஆன்மீகத்தை பொருத்துதல் என்றும் உத்தேசிக்கிறோம்.

ஒரு காலத்தில் மொத்த இந்திய ஆன்மாவையும் திரையிட்டுமூட அச்சுறுத்திய ஐரோப்பிய கருத்தாக்கத்தின் ஆட்சியிலிருந்து வெளிவராதவர்களால் இந்தக் கருத்தை புரிந்துகொள்ள முடிவதில்லை. ஆனால் ஐரோப்பா தனது கருத்தாக்கத்தின் எல்லைகளை மீற முயற்சிசெய்கிறது, கீழை கருத்துக்களை தன்னில் கலந்து கொள்கிறது. வெறும் வடிவங்களை மட்டுமல்லாமல் சாராம்சமான கருத்துக்களையும் அது எடுத்துக்கொள்கிறது. கீழை கருத்துக்கள் மேலை சிந்தனைக்குள் கவிதைக்குள் கலைக்குள் வாழ்வை குறித்த கருத்துக்களில் சுதந்திரத்துடன் பாய்கிறது. அதன் பண்பாட்டை கவிழ்ப்பதற்காக அல்லாமல், அதிலுள்ள சிறந்தவற்றை உருமாற்றுவதற்காக அறிவொளிவூட்டுவதற்காக ஆற்றலளிப்பதற்காகவும் இந்த கீழைக்கருத்துகள் ஊடுருவுகிறது. மேலும் நெடுங்காலமாக மறுக்கப்பட்ட மறக்கப்பட்ட புதிய கூறுகளை சேர்ப்பதற்காகவும் கூட. நாம் இதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்: ஐரோப்பா புதிய ஒளியில் தன்னை விரிவுபடுத்திக்கொள்கிறது; ஆன்மாவின் உண்மைகளை கைப்பற்றி அனுமதித்து, மனிதனில் வாழ்வில் தெய்வீக மாற்றத்தை குறிக்கோளாகக் கொள்கிறது. நாமோ ஐரோப்பிய சிந்தனையும் வாழ்வும் தூக்கி எறிந்த உடைகளை எடுத்துக்கொள்கிறோம். ஐரோப்பாவின் பழைய சக்கரத் தடங்களை மிகவும் பிந்தி தொடர்கிறோம். அவள் நேற்று தூக்கியெறிந்தவற்றை இன்று எடுத்துக்கொள்கிறோம். நமது கலாச்சார சுதந்திரம் முடக்கப்படுவதற்கு ஐரோப்பாவை அனுமதிக்கக் கூடாது. அது இங்கு வரும் சமயத்தில் நாம் தொய்வுற்று இருந்தோம், அது போன்ற சமயம் எல்லா நாகரீகங்களுக்கும் வரலாம். அலங்காரத்திற்காக சொற்ப அளவு ஆன்மீகத்தை மதத்தை இந்தியத்துவத்தை வைத்துக்கொண்டு நமது ஆன்மீகத்தையும் கலாச்சாரத்தையும் கருத்துக்களையும் நிராகரித்து ஐரோப்பியமயமாக லோகாயுதமாக(materialise) வேண்டும் என்றில்லை. அது போல போரின் பெரும் அழிவுகள் குறிப்பது ஐரோப்பிய அறிவியலும் ஜனநாயகமும் முன்னேறவில்லை எனபதைத்தான். இந்தியா அவளது மத்தியகாலத்துக்கு செல்ல வேண்டும் என்பதோ, சீன/துர்க்கிய/திபெத்திய கலாச்சாரத்தை பிரதியெடுக்க வேண்டும் என்பதோ தேவையில்லை. இது போன்ற பொதுமைப்படுத்தல்கள் எல்லாமும் அவசரகதியில் தீர சிந்திக்காத அறியாமையின் பொய்மைகளே.

இந்தியாவும் ஐரோப்பாவும் தமது இலட்சியக் கருத்துக்களை சரியானபடி செயல்படுத்துதலில்(application) தவறு செய்திருக்கிறோம். ஆரோக்கியமற்ற மிகைப்படுத்தல்களுக்கு கொண்டுசெல்லப் பட்டிருக்கிறோம். இதில் ஐரோப்பா தனது பாடத்தை புரிந்துகொண்டாள், தன்னை சரிபடுத்திக்கொள்ள முயல்கிறாள். எனினும் அதற்காக அவள் தனது அறிவியலில் ஜனநாயகத்தில் உள்ள எந்த முன்னேற்றத்தையும் கைவிடவில்லை. அவற்றை சரியான திசையில் மேம்பட்ட வகையில் பிரயோகிக்கவும் நிறைவு செய்யவும் முயற்சிக்கிறாள். அவள் கீழை ஒளியை அனுமதிக்கிறாள் என்றாலும் அவளது சொந்த சிந்தனையின் வாழ்வியலின் அடிப்படையில் தான் அதை அனுமதிக்கிறாள். தனது வாழ்க்கை, அறிவியல் மற்றும் சமூகக்கருத்துக்களின் தனது சொந்த உண்மைகளை கைவிடாமல் தன்னை ஆன்மாவின் உண்மைக்கு திறந்துவைக்கிறாள். நாம் இந்திய ஆன்மாவையும் நவீன தாக்கங்களையும் கையாளும் போது நம்பிக்கையுடனும் சுதந்திரத்துடன் இருக்கவேண்டும். நம்மில் நடந்த தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும். முடிந்த அளவு நமது முன்னோர்களைவிடவும் அதிகம் ஆன்மீகத்துடன் இருக்கவும்  ஆன்மீகத்தை விசாலமான சுதந்திரமான தளங்களில் பொருத்தவும் வேண்டும். நமது சொந்த வாழ்வியல் முறை மற்றும் நமது ஆன்மீக நோக்கம் மற்றும் இலட்சியக் கருத்துக்களுடன் தன்வயப்படுத்தல் என்ற அடிப்படையில் மேலை அறிவியலை, பகுத்தறிவை, முன்னேற்றத்தை, முக்கியமான நவீன கருதுக்களை அனுமதிக்க வேண்டும். நம்மை வாழ்வின் துடிப்பிற்கு நடைமுறை செயல்பாட்டிற்கு மகத்தான நவீன பாய்ச்சலுக்கு திறந்துவைக்க வேண்டும். ஆனால் அதற்காக கடவுள்,மனிதன்,இயற்கை ஆகியவற்றின் மீதான நமது அடிப்படை பார்வையை கைவிடக்கூடாது. உண்மையில் இவற்றுக்கு மத்தியில் எந்த மோதலும் இல்லை. மாறாக தங்களது வளமான முழுமையான தனிசிறப்புகளை விழிக்கச் செய்ய இவை ஒன்றை ஒன்று நிரப்பிக் கொள்ள வேண்டியவை.

இந்தியா அவளாக இருப்பதின் மூலம் அவளது இயல்பை தொடர்வதின் மூலம் தன்னை மேம்படுத்திக்கொள்ளவும் மானுடத்திற்கு உதவவும் முடியும். இது குறுகிய குருட்டுத்தனமான எண்ணம் அல்ல. காலவோட்டத்தில் நம்மிடம் புதிதாக வருபவற்றை நிராகரிக்க வேண்டும் என்று பொருள் அல்ல. அது போன்ற ஒரு மனநிலை அறிவு ரீதியாக பொருளற்றது. பௌதீக ரீதியாக சாத்தியமற்றதும் ஆன்மீகமற்றதும் ஆகும். மனித சுய மேம்பாட்டிற்கான எந்த ஒளியையும் கூடுதல் பாதைகளையும் ஆன்மீகம் நிராகரிக்காது. நமது மையத்தை, நமது இருப்பின் சாராம்சத்தை, நமது உள்ளார்ந்த இயல்பை தக்கவைத்துக்கொண்டு  வளர்வதையே அது உத்தேசிக்கிறது. இந்திய மனதின் முக்கிய இடத்தை மதம் பெற்றிருந்தது. அதிக அளவிலான மதச்சார்பு இந்தியாவை வீணடித்துவிட்டது என்று சிலர் நம்மிடம் கூறியுள்ளார்கள். ஏனெனில் நாம் நமது மொத்த வாழ்வையும் மதமாக்கிக்கொண்டோம்.. நமது வீழ்ச்சியை பொருட்படுத்தத் தேவையில்லை. நாம் விழுந்து கிடக்கும் மண் புனிதமானது என்று நான் சொல்லமாட்டேன். நமது வீழ்ச்சி பொருட்படுத்த வேண்டியதே. மண்ணில் வீழ்ந்து கிடப்பது எந்த மனிதனுக்கும் தேசத்திற்கும் நல்லதல்ல. ஆனால் அதற்கு சொல்லப்படும் காரணம் உண்மையானதல்ல. பெரும்பாலான இந்தியர்கள் தங்களது மொத்த வாழ்வையும் உண்மையான அர்த்தத்தில் மதமாக மாற்றியிருப்பார்களானால் இப்போது நாம் இருக்கும் நிலையில் இருக்க மாட்டோம். அவர்களது பொது வாழ்க்கை மதமற்றதாக ஆணவம் நிறைந்ததாக லௌகீகமாக மாறியது தான் இன்றைய நிலைக்கு காரணம். ஒரு பக்கம் நாம் அதீத சடங்குகளுக்குள், விதிகளுக்குள் வழக்கங்களுக்குள், இயந்திரத்தனமான வழிபாட்டிற்குள் சென்றுவிட்டோம். மற்றொரு பக்கம் துறவை விலக்கக்கூடிய உலகத்திற்குள் சென்றுவிட்டோம்; சமூகத்திற்கு ஆன்மீக உறுதுணையாய், உயிரளிப்பவர்களாய் இருக்கவேண்டிய ரிஷிகளை இழந்தோம். ஆனால் இதற்கு வேராக இருப்பது ஆன்மீக மனோவேகம்(impulse) அருகுவதும், அறிவார்ந்த செயல்பாட்டிற்கான சுதந்திரம் வீழ்வதும், இலட்சியங்கள் குறைவதும் தான்.

வேறொரு அர்த்தத்தில் நம்மிடம் அதிக அளவு மதம் இருந்தது தான். ஆனால் இந்த அர்த்தத்தை அளிக்கும் ஆங்கில வார்த்தை நம்பிக்கைகள்(creeds),சடங்குகள், கடவுள்-பற்று என பலவற்றையும் உள்ளடக்குவதாக இருக்கிறது; இதற்கு இந்திய இணை ஒன்றில்லை. ஆனால் நம்முடைய ஆன்மீகத்தை அதன் முழுமையான நிலையில் பின்தொடர்வது என்றும், உச்சபட்ச சுயத்தை அறிந்து, வாழ்வை அதன் எல்லா அங்கங்களிலும் தெய்வீக நிலைக்கு உயர்த்துவது என்றும் சொல்வோமானால், ஆன்மிகம் நம்மிடையே அவ்வளவு அதிகமாக இல்லை என்பது தெளிவு. இன்னும் அதிகமாக இந்தியாவின் இலட்சியக் கருத்தை பழிப்பது இதற்கு சரியான தீர்வு இல்லை. அதன் பழைய வளமான நிலைக்கு செல்வதும் அதற்கு இன்னும் விரிவான வாய்ப்பளிப்பதும் தான் சரியான வழி. இந்த திசையை நோக்கிதான் மேலை தத்துவத்தின் கவிதையும் கலையும் இப்போது திரும்பத் தொடங்குகிறது. அரசியல் மற்றும் சமூக கருத்துக்களில் கூட இந்த உண்மையின் மங்கலான ஒளி விழத் தொடங்கியுள்ளது. ஞானத்திற்கும், இலட்சியக் கருத்துக்களின் பிரக்ஞாப்பூர்வ செயல்பாட்டிற்குமான(application) சாவி இந்தியாவிடம் உள்ளது. முன்பு இந்த செயல்பாட்டிற்கு இருளாக எது இருந்ததோ அதை இப்போது அவள் ஒளியூட்டலாம். பழைய வழிமுறைகளில் எது தவறாகவும் கோணலாகவும் இருந்ததோ அதை இப்போது அவள் சரிசெய்து கொள்ளலாம். முன்பு ஆன்மீக இலட்சியக் கருத்தின் புறவய வளர்ச்சியை தடுப்பதற்காக அவள் இட்ட வேலியை,  அவளது விரிவாக்கத்திற்காக தற்போது அவள் தகர்க்கலாம். தனது ஆன்மாவிற்கென சுதந்திரமான வெளியை, பரந்தகன்ற பறத்தலை அவள் அளிக்கலாம். மானுடம் தடுமாற்றத்தோடு போராடிக்கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்மானமான புதிய திருப்பங்களை அவள் கொடுக்கவேண்டுமென்றால் அதற்கான தீர்வுகளின் குறிப்பு(clue) அவளது பண்டைய ஞானத்தில் இருக்கிறது. உருவாகிவரும் அவளுடைய இந்த மறுமலர்ச்சியில் அவள் உயரத்திற்கு செல்கிறாளா இல்லையா என்பது அவளது விதியைப் பொருத்தது.

***

சியாம்

சியாம். சென்னையில் தனியார் நிறுவனத்தில் இயந்திர வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். இலக்கியத்துடன் கர்நாடக இசையிலும் ஆர்வம் உள்ளவர்.

உரையாடலுக்கு

Your email address will not be published.