“ஏ.வி.மணிகண்டன், பெங்களூரைச் சேர்ந்த ஒரு புகைப்பட கலைஞர். அவருடைய புகைப்படங்களுக்கு எழுத்தாளர்கள் விஷால் ராஜா, ஜனார்த்தனன் இளங்கோ மற்றும் திரை இயக்குநர் பிரசாத் முருகேசன் ஆகியோர் எழுதிய குறிப்புகளின் தொகுப்பு கீழே.”
000
வாசல்கள். முடிவற்ற வாசல்கள். அவை திறந்துக் கொண்டேச் செல்கின்றன. இதில் எந்த வாசல் நம்மை அழைத்துச் செல்ல போகிறது –தற்காலிகத்திலிருந்து நிரந்தரத்துக்கு? அன்றாடத்திலிந்து புனிதத்துக்கு? தெரியாது. எது நம்மை தூய்மைப்படுத்தப் போகிறது? தெரியாது. எது நம்மை முழுமையடையச் செய்யும் இறுதி வாசல்? தெரியாது. எனினும் உட்சென்றவாறிருக்கிறோம். வெளியேறியவாறிருக்கிறோம்.
வாசல் இருபுறமும் திறந்தேயிருக்கிறது. ஒருவன் வீட்டினுள் நுழைகிறான் – ஏதேதோ ரகசியங்களோடு. ஒருவன் வீட்டைவிட்டு வெளியேறுகிறான் – ஏதேதோ புரிதல்களோடு. கோயிலினுள்ளும் நுழைகிறோம்; வெளியேறுகிறோம். ஒவ்வொரு பருவத்துக்கும் ஒவ்வொரு வாசல். எந்த வாசலுக்குள்ளும் ஒருவன் நுழைந்தபிறகும், அதை கடந்தபிறகும் அவன் அதே மனிதனாக இருப்பதில்லை. நதியில் மூழ்கி எழுபவன் என.
இந்த வாசல்கள் வெட்டவெளியில் நிறுவப்பட்டிருக்கின்றன. ஷிண்டோ மதச் சின்னம் போல. ஒரு நவீன நகரத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் இவை ஓர் அழகியல் நிறைவுக்காக கட்டப்பட்டிருக்கும். அலங்கார வளைவுகளாக கூட கற்பனை செய்யப்பட்டிருக்கலாம். மாலை வேளைகளில் குழந்தைகள் இனியக் கூச்சல்களோடு அங்கே ஓடி பிடித்து விளையாடுவார்கள். நம்மைச் சுற்றி இப்படிதான் என்னென்னவோ பொருட்கள் எப்படியெப்படியோ உருமாறி வந்திருக்கின்றன. அழகு நிலைய வாசல்களில் புத்தர் தியானத்தில் அமர்ந்திருக்கிறார். ஆனால் ஒரு கலைஞனின் கண்கள் எப்படியோ அந்த உருமாற்றத்தினடியே உள்ள அடிப்படை நியதியினை கண்டடைந்துவிடுகின்றன. அல்லது எல்லா உருமாற்றங்களிலும் அவை அடிப்படை நியதினையே தேடுகின்றன.
இப்பட்டத்தில் ஒரு புறம் வாசல்கள். மறுபுறம் தலைக்கு மேல் வட்டமிடும் பறவைகள். நடுவே மிதக்கும் பலூனுடன் ஒரு மனிதன். களைத்திருக்கிறானா? நிறைந்திருக்கிறானா? பறவைகள் என்ன பாடுகின்றன அவனிடம்? அலல்து விடைபெறுகின்றவனா? தாமஸ் டிரான்ஸ்டிரோமர் சொல்கிறார் – “உனக்குள்ளே கவிந்த மாடங்கள் ஒன்றன்பின் ஒன்றாக முடிவற்று திறந்தபடியுள்ளன”. ஆமாம். வெளியே மட்டும் அல்ல. அவன் அகத்திலும் இதே போல வாசல்களின் வரிசை உண்டு. அவன் உட்புகுந்து உட்புகுந்து வெளியேற வேண்டிய வாசல்கள். டிரான்ஸ்டிரோமர் மேலும் சொல்கிறார் – “மனிதனாக இருப்பதற்கு நீ அவமானப்பட வேண்டியதில்லை. பெருமிதம் கொள்! நீ எப்போதுமே முழுமையடைய மாட்டாய். ஆனால் அது அப்படிதான் இருக்க வேண்டும்”.
-விஷால் ராஜா
“திருவருட்செல்வி” நூல் ஆசிரியர்
000
ஏ.வி.மணிகண்டனின் படங்களில் பார்வையாளனை அசத்துகிற முனைப்பில்லை. மௌனமாகவே அவை எதையோ கடத்துகின்றன. அதனாலேயே அவற்றை மதிப்பிடுவது என்பது ஒருவகையில் உரையாடலாக மாறிவிடுகிறது. அந்த அடிப்படையில் “அஹிர் பைரவ்” தொகுப்பில் உள்ள இப்படம் என்னை ஏன் ஈர்க்கிறது என நானே கேட்டுப் பார்க்கிறேன்.
ஒரு திரைக் கலைஞனாக இப்படத்தின் கம்போசிஷன் என்னை முதலில் வசீகரிக்கிறது. வடிவரீதியாக ஒரு சீர்மை அதில் அமைந்துள்ளது. சதுரக் கண்ணாடிகள். நீள்சதுர சுவர்கள். சாலை வளைவுகள். வளையங்கள். இப்படி பல வடிவங்கள் ஒருமையுடன் பதிவாகியுள்ளன. ஒரு கியூபிச பாணி ஓவியம் போல ஜியோமெட்ரிக்கல் வடிவங்களின் சேர்க்கை இருக்கிறது.
ஒரு கலைப் படைப்பு, இந்த வடிவங்களின் ஒழுங்குக்கு அப்பால், மேலதிகமாக வேறொன்றையும் கடத்த வேண்டியுள்ளது. அதுவே இந்த படத்தின் சப்ஜெக்ட் அல்லது நாயகன் என புரிந்துகொள்கிறேன். இந்த வடிவங்கள் நடுவே மிகச் சரியாக மையத்தில் நின்றுக் கொண்டிருக்கும் மனிதன் அவன். கைவிடப்பட்ட நகரத்தில் ஒரேயொரு மனிதனின் நிழலைத் தவிர வேறு யாருமே இல்லை. அந்த நிழலும் இந்த வடிவங்களின் சிறையில் சிக்கியிருக்கிறது. அந்த நிழலையும் கண்காணிப்பு காமிரா தீவிரமாக பரிசோதிக்கிறதோ என்ற அச்சமும் தோன்றுகிறது.
அந்த மனிதன் புகைப்படக் கலைஞனே என்பது தோற்றத்தில் தெரிகிறது. ஆனால் கலையில் பிரதிபலிக்கப்படும் நபர் உண்மையில் யார்? அது வெறுமனே கலைஞனா? இல்லைதானே. பார்வையாளனின் சுயம் தானே கலையில் பிரதிபலிக்கிறது. கலையே ஒரு நிழல்தானே. அப்படியென்றால் அந்த மனிதன் பார்வையாளன். நான். நீங்கள். நாம் எந்தெந்த ஒழுங்குகளுக்குள் சிக்கியிருக்கிறோம்? எப்படியெல்லாம் விடுதலைக்கு ஏங்குகிறோம்?
-பிரசாத் முருகேசன்
“கிடாரி”,”மத்தகம்” உள்ளிட்ட திரையாக்கங்களின் இயக்குநர்.
000
இன்றைய நவீன வாழ்க்கைமுறையில் மரபார்ந்த சடங்குகளுக்கு என்ன இடம் உள்ளது? அவை எப்படி பொருள்கொள்ளப்படுகிறது? நாம் நினைப்பது போல இந்த இரண்டும் உண்மையில் ஒன்றுக்கொன்று எதிரானவை இல்லையா? அவை மாற்றமடைவதும், வேறுவேறு வகையில் தொடர்ந்து நீடிப்பதும் எதற்காக? திருவையாறு தியாகராஜர் ஆராதனையின் உற்சவர் உலா வீதியின் இந்த புகைப்படம், இப்படியான கேள்விகளை நோக்கி நம்மை கொண்டுசெல்கிறது.
உற்சவர் ஒருவகையில் கருவறையை விட்டு வெளியேறி மனிதர்களை நோக்கி வீதிக்கு வருகின்ற கடவுள். கோவிலைப்போல வீதிக்கு தன்னளவில் எந்த புனிதமும் இல்லை. அங்கு உள்ளதெல்லாம் ஒன்றோடொன்று உரசி வண்ணமிழந்த வீடுகள் தான். அங்கு இவ்வாழ்வின் சகல எச்சங்களோடும் நாம் வியாபித்திருப்பதைக் காண பவனி வருகிறார் உற்சவர். நாமும் ஒரு எதிர்பாரா விருந்தினரின் வருகையைப் போல, சிறு துணுக்குறலோடு கைலியுடன் வந்து அவரை வாசலில் சந்திக்கிறோம். அல்லது வேறு வேலையாக அச்சமயம் வீதியில் சென்றுகொண்டிருக்க நேர்ந்தால், நாம் சுமந்து வந்த கைப்பையை பத்திரமாக கால்களை ஒட்டி அணைத்து வைத்துவிட்டு அவரை எதிர்கொள்கிறோம்.
தம்பூராவை மீட்டியபடி, தியாகராஜரின் கீர்த்தனை ஒன்று அங்கு அரூபமாக ஒலித்துக் கொண்டிருப்பதாய் தோன்றச் செய்கிறது அந்தக் கோலம். அந்த இசைக்கான எதிர்வினை போல தன் கைகளை கோர்த்தபடி சிரத்தையுடன் வாசல் தூணில் தலை சரித்து நிற்கிறார் அந்த முதிய பெண்மணி. அவருக்கு பின்னால் பாதி திறந்த கதவினுள், மனித வாழ்வின் ஒட்டுமொத்த துயரத்தையும் பிரதிநிதித்துவப் படுத்துவது போல உறைந்திருக்கிறது இருட்டு. அந்த கோலத்தில் இருந்து எழுந்து வரும் மீட்பின் நாதம் என்றைக்கும் அழியாதிருக்கட்டும்.
–ஜனார்த்தனன் இளங்கோ
கட்டுரையாளர்.
ஏ.வி.மணிகண்டனின் புகைப்பட நூல்களை இங்கே காணலாம். https://www.manikandanav.com/
ஏ.வி.மணிகண்டன் புகைப்படத் தொகுப்பு (1)
ஏ.வி.மணிகண்டன் புகைப்படத் தொகுப்பு (2)
ஏ.வி.மணிகண்டன் புகைப்படத் தொகுப்பு (3)