ந.சிவநேசன் கவிதைகள்

போனால் போகிறதென
உதித்தப் பிறவிகள் நான்கு:

1
பிறவிப் பெருங்கடலின்
ஒரு துளித் தீர்த்தம்
செம்படவன் கைநிறை அலையில் சிதறும் உயிராகிக்
கலக்கிறது
தன்னைத் தானே எழுதிக் கொண்டிருப்பது
தன்னைத்தானே மலர்த்திக் கொண்டிருப்பது
தன்னைத்தானே உதிர்த்துக் கொண்டிருப்பது
தன்னைத்தானே மீன் பிடித்துக் கொண்டிருப்பது
தன்னைத்தானே நீரில் நழுவ விடுவது
தன்னைத்தானே
உப்புநீராக்கி முகம் சுளித்துத் துப்புவது
அரை பர்லாங்குத் தூரம் நீள்கிற கரை நோக்கி
வழிக்கிற துடுப்பில் ஆயுளைக் கரைத்துக் கொண்டிருப்பது
பிறவிப்பெருங்கடலின் ஒரு துளி தீர்த்தத்தில் துளசி கண்டு முகம் மலர்வது.

2
மீசை முளைத்தக் குழந்தையை
இடுப்பில் தூக்கிக் கொண்டு
வட்டாட்சியர் அலுவலகம் வந்திருந்தவள்
நேற்றும் சுமந்திருந்தாள்
முந்தாநாளும் சுமந்திருந்தாள்
போன பிறவியிலும் சுமந்திருந்தவள் போல
அதற்கு முந்தைய நாளும் சுமந்திருந்தாள்
யாவரின் கவலையும்
இப்பிறவியிலிருந்து
அக்குழந்தை
முதலில் அடுத்தப் பிறவிக்குள் நுழையுமா
அல்லது அவள் முதலில் மறுபிறவியில் ஏறிக்கொண்டு கை நீட்டுவாளா என்பது தான்
அப்புறம்
அதுவரை எந்த இடுப்பு
அவனைச் சுமந்திருக்கும்
என்பதுவும்.

3
நானொரு பனிபடர்ந்த மலையின் அடிவாரத்தில் நிற்கிறேன்
இக்ளூக்கள் அங்கொன்றும் இங்கொன்றும் தட்டுப்படுகின்றன
கர்ப்பகிரகமான அதற்குள் என்னை இணுக்கி உட்செலுத்துகிறேன்
உண்மையின் முன் மண்டியிடும் பொய்யாகி உடலைக் குறுக்கி
உறங்கி விழிக்கிறேன்
யாரோ ஒரு எஸ்கிமோ
தூயப் பனி உச்சியின் குருதியில் செய்த தேநீரைத் தருகிறான்
இக்கனவு என் போன பிறவியாக இருக்கலாம்
அடிக்கடி நிகழ்கிறது
இன்னொரு எஸ்கிமோ தம் இனக்குழுவின் அந்திப்பாடலுக்கு நடனமாட அழைக்கிறான்
அவர்கள் கைகளைக் கோர்த்து வட்டமாக நிற்கிறார்கள்
நான் சென்று பூர்த்தி செய்தால் பூரணம் நிகழுமெனில்
ஏனிப்படி மாற்றிச் சொன்னேன்?
நான் விவரித்த கனவுதான் நிஜம்
நான் விழித்துக் கொண்டிருக்கும் நிஜம் தான் கனவு.

4
‘ஜுன் 10லிருந்து ஜுன் 1க்கு செல்வது போல
ஜுன் 10லிருந்து ஜுன் 20க்கு போக முடியுமா?’ எனக் கேட்டான்

‘பின்னோக்கிச் செல்ல தோதான படகு இருப்பது போல
முன்னோக்கிச் செல்ல ஏதுமில்லையே. எதற்காக? ‘
என்றார்

‘ஒன்றுமில்லை ஜுன் 20ல் பூக்கவிருக்கிற பூவொன்றை இப்போதே கைகளில் ஏந்திக் கொள்ளலாம் போலிருக்கிறது’
என்றவனிடம்
‘கொய்யாமல் ஏந்திக் கொள்ளத் தெரிந்தால்
மலர்ந்த பூவை விட
மலர இருக்கிற பூவும்
மலர்ந்து முடித்தப் பூவுமே
மகா உன்னதமானவை’
என கொம்பை வளைத்துத் தந்தார்

எடை தாங்காமல் உடனே விடுவித்தவன்
மகரந்தத்துளிகளில்
கைகளை நனைத்துக் கொண்டான்.

000

ந.சிவநேசன்

சேலம் மாவட்டம், ஆரியபாளையத்தில் வசித்துவரும் ந.சிவநேசன் கவிதைகள், சிறுகதைகள் எழுதுவருகிறார்.  கானங்களின் மென்சிறை, இதங்களால் நிரம்பியவளின் முத்தச் சக்கரை, மீன்காட்டி விரல், ஃவரைகிறது தேனீ  ஆகிய நூல்களின் ஆசிரியர்.

1 Comment

உரையாடலுக்கு

Your email address will not be published.