பிறங்கடை
செம்பரல்கள் பரப்பிய நீள் வழி நெடுகிலும்
வடலிகள் வாசம் பரப்பி நின்றன
வேனிற்கால சூட்டால்
நிரம்பி வழிந்த சோழப்பேரேரியின்
மதகின் இருப்புக் கதவிடுக்கில்
உறுமிக் கொண்டிருந்தது காற்று
சிற்பப் பொந்துகளில்
நீரை விழுங்கியதைப் போல்
குனுகிக் கொண்டிருந்தன புறாக்கள்
முன்னங்கால்களை யிழந்த
சுடுமண் குதிரையின் மேலமர்ந்து
‘ரிட்டி டிட்டி உய்…’
‘ரிட்டி டிட்டி உய்…’
எனக் கத்தியது ஆக்காட்டிக் குருவி
பாப்பார வீரனின்
சுருட்டையெடுத்துப் பற்ற வைத்தேன்
கமழும் புகையில் மூப்பனின் வாசம்.
தேறல்
கொள்ளிடத்து நீரெடுத்து
மகாமுனியில் கலந்து
பருகத் தயாரானோம்
சாந்து மெழுகிய நத்தையை
ஒரு வாய் ஊட்டிவிட்டு
இப்ப இழு என்றான்
சம்புகன்
நெடும்பனையிலிருந்து கீழிறங்கிய உடும்பை
குத்தி மல்லாத்தி
துவட்டிக் கொண்டு வந்து பரிமாறி
காரத்தோடு கன்னத்தில் முத்தமிட்டான்
ஏகலைவன்
சுட்டப் பன்றியின் தோல் சுரண்டிய
கொட்டாங்குச்சியில்
பூவரச இலை போட்டு
நெய்யொழுக வாரை எடுத்து வந்து
செம்மயா இருக்குன்டா
தின்னுப் பாரென்ற
நந்தனிடத்தில்
கள்ளுண்டு களிகொண்ட ஒளவையை
இட்டு வரப் பணித்து
உண்டாட்டை முடித்திருந்தோம்
நெடும்பனையின் உச்சியில்
சம்புகனின் தலை
கள்ளுக் கலயத்தில் ஏகலைவனின் கட்டைவிரல்
பன்றியின் வார்களில்
நந்தனின் சாம்பல்
தெளிந்தெழுந்த ஒளவை,
‘தேட்கடுப்பு அன்ன நாட்படு தேறல்’ என்றாள்.
வினையன்
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் வினையன். பணி நிமித்தமாகச் சென்னையில் வசிக்கிறார். மருதம் கலைக்குழுவை நடத்தும் இவர், தொல்லிசை மீதான ஈர்ப்பில் இசைக் கருவிகளையும் சேகரித்து வருகிறார். மணல்வீடு வெளியீடாக 2016ல் வந்த 'எறவானம்' இவரது முதல் கவிதை நூல். 2022ல் நீலம் வெளியீடாக இரண்டாவது கவிதை நூல் 'எச்சிக்கொள்ளி' வந்தது.