/

ஆனந்த் குமார் கவிதைகள்

வால்குட்டி 

வாலாட்டி வாலாட்டி
தானாடியது நாய்க்குட்டி 
முதுகாட்டி உடம்பாட்டி
வாலாகியது நாய்க்குட்டி

தான் சொல்லவருவதை விட
வால் மிக 
மெதுவாக ஆடுவதாய்
நாய்க்குட்டி எண்ணியது

அது ஓடுகிறது
அறையெங்கும் நிறைத்து

“நீயாக்கும் நானாக்கும்..”
என்மீது பாய்கிறது 
“அதுவாக்கும் இதுவாக்கும்..”
எல்லாவற்றிலும்
முட்டுகிறது

என்னையும் கொஞ்ச மறந்து
துள்ளித் துள்ளி
பறக்கிறது
தன்னையும் யாதென 
மறந்துவிட்ட நாய்க்குட்டி

(சிம்பாவிற்கு..)

000

உலகைச் சுழியில் இழுக்கும் வீடு

வட்டமிட்டு அமர்ந்தபடி
விளையாடிக்கொண்டிருந்தனர்
வீட்டின் நடுவே 
குழந்தைகள்

நடுவில் புகுந்து
எட்டிப் பார்த்தது
பால்கனி வழி நுழைந்திருந்த
பாக்குமர நிழல் 

நேரம் செல்ல
பெரியவர்கள் அழைக்கிறார்கள்
எழுந்து செல்கிறார்கள் குழந்தைகள்

எழுந்து செல்ல
எழுந்து செல்ல 
விடுவிக்கப்படும் விளையாட்டு
சோகமானது முதலில்

தனியே
நிழற்காற்றில் சொக்கி
அப்படியே
உறங்கி வருகிறது அதற்கு

சுற்றமே துயரமே
அமைதியாகுங்கள்
நிறைய நிறைய குழந்தைகள்
விட்டுச்சென்ற
நிறைய நிறைய அமைதியில்
உறங்கத் துவங்குகிறது
என் வீடு

கலைந்த கோலத்தில்
ஒரு விளையாட்டு
கண்ணயரும் வீடு
பாக்குமர நிழலொன்று
படுத்துறங்கும் வீடு

000

சென்றவர்
சரியாக மூடாத
வெளி கேட்டின் இடைவெளி
ஒரு பாதையை
அடைத்து விட்டது

ஒரு பக்க கேட்டின் நுனியில்
வந்து நின்ற
எறும்பின் பாலம்
மறைந்து விட்டது

சரிந்துவிட்ட எண்ணைக் குப்பியென
வீணாகிறது
எனது வீட்டின் நிறைவு

சேர்கிறது எறும்புகளின் குழப்பம்
என்னவென தெரியாது
ஸ்தம்பிக்கத் துவங்குகிறது
உலகம்

ஓடிச்சென்று நானந்த
காயத்தை சரிசெய்தேன்

யாருமறியாமல் இந்த
உலகை இயல்புசெய்தேன்

000

மதுரமயம்

வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு
வழி தவறி வந்துவிட்டது
பள்ளிக்குச் செல்லவேண்டிய
குட்டி டப்பா

எட்டுபேர் சுற்றியிருந்து
இறுக்கமான தமது
உணவுகளை திறக்கையில்,
பரிசுப்பெட்டியிலிருந்து
நாய்குட்டிகளென எட்டிப்பார்த்தன
குட்டி டப்பாவிற்குள்ளிருந்து
இரண்டு
சக்கோ பிஸ்கட்டுகள்

“எனக்கு எனக்கு” என
எல்லோரும் கொஞ்ச விரும்பும்
இரண்டு மதுரப் பொதிகள்

இரண்டை எட்டாய்ப்
பிரிப்பது எளிதெனத்தான்
உடைத்தேன் ஒன்றை

பொடிந்து கைநிறைத்தன
பல்லாயிரம் கோடித் துகள்கள்
 
சுற்றிப் புவி நிறைத்து
கொஞ்சமே கொஞ்சம் 
மனிதர்கள்

ஆனந்த் குமார்

கோவையில் வசித்துவரும் ஆனந்த் குமார், தொடர்ச்சியாக கவிதைகள் எழுதிவருகிறார். ஆவணப்படங்கள், குறும்படங்கள், புகைப்படங்கள் எடுப்பதிலும் முனைப்போடு இயங்கிவருகிறார். ‘டிப் டிப் டிப்’ என்ற கவிதைத்தொகுப்பின் ஆசிரியர்.

உரையாடலுக்கு

Your email address will not be published.