
ஒரு சந்தேகம்
அம்மா அகத்தே
உறங்குகிறாள்
குழந்தை வெளியே
விளையாடுகிறான்
கதவை சரியாக தாழிடாமல்
இவளோ
சோபாவிலேயே கண்ணயர்ந்துவிட்டாள்
சரியான நேரம் பார்த்து
வீட்டிற்குள் புகுந்துவிட்டது
அந்த காற்று
யாரும் கவனிக்கவில்லை எனினும்
கத்தையிலிருந்து வெளி நீண்டிருந்த
ஒற்றைக்காகிதம் மட்டும்
பார்த்து விட்டது
கொஞ்ச நேரம் பதட்டமாகி
எல்லோரையும் அழைத்தது
பின் அதுவும்
அமைதியாகிவிட்டது
எதுவும் தொலையவில்லை
யாரும் வந்துபோன
தடையமுமில்லை
விழித்துப் பார்த்தவளுக்கோ
புரியாமல் ஒரு சந்தேகம்
எழுந்தமர்ந்தவள்
எடுத்துப் பார்க்கிறாள்
நுனி வளைத்திருந்த
வெள்ளை காகிதத்தை
அதில்
ஒரு சொல் கூட இல்லை
அது என்ன சந்தேகமென
இதுவரை அவளுக்குப்
புரியவேயில்லை
OOO
கவனி
நிழல்பட தளரும்
தளிர் நான்
என்னை கொஞ்சம்
உயர்த்திப்பிடி நிலமே
மழைத்திடும் எந்த தாகமும் காண
இன்னும் என்னை
எரி வெயிலே
நாவை அறுத்தெறி செவியே
என்னைச் சொல்லாதே குரலே
மனதே ஆகு விரலே
காலை விட்டு சிறிது தூரம்
கூட்டிச்செல் வழியே
உடலே
உதறு என்னை
ஒரு பொருக்கும் மிச்சமில்லாமல்
கைகளைத் தட்டு
மலரென மாறி
விரி என் குடையே
கீழ் வந்து சேர் உலகே
தொடாமல்
பார் என்னை
காற்றே
ஒளித்தூணில் படர்ந்தேரும்
தூசு நான்
மெல்ல
இன்னும் மெல்ல
காற்றே
வீசாதே
வெறுமனே கவனி
OOO
கேட்பதை நிறுத்தியவன்
சுவற்றில் காதை வைத்து
கேட்டுக்கொண்டிருக்கிறது
காற்று
மேலும் மேலும்
கேட்பதை நிறுத்தியவன்
உள்ளே இருப்பதை அறிந்தால்
அவன்
இதயத்தின் வேர்கள்
சிலிர்க்கும்படி
கனி ஒன்றை
உதிர்க்கிறது
OOO
புற்களின் கூட்டத்தில்
ஒரு தலைவன்
எழுந்து நின்று
வாசித்துக்காட்டுகிறான்
காற்றைப் பற்றிய
ஒரு கவிதையை
“இவ்வளவு
உணர்ச்சிவசப்பட வேண்டிய
அவசியம் என்ன “
முதுகில் துளியைச் சுமந்து
குனிந்து கிடக்கும் புற்கள்
கேட்கின்றன
முதுகின் சுமையை
கீழே தள்ளத்தான்
ரொம்ப நேராமாய்
கைகளைத் தேடுகிறது
காற்று

ஆனந்த் குமார்
கோவையில் வசித்துவரும் ஆனந்த் குமார், தொடர்ச்சியாக கவிதைகள் எழுதிவருகிறார். ஆவணப்படங்கள், குறும்படங்கள், புகைப்படங்கள் எடுப்பதிலும் முனைப்போடு இயங்கிவருகிறார். ‘டிப் டிப் டிப்’ என்ற கவிதைத்தொகுப்பின் ஆசிரியர்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
