/

கவிதையின் தேசிய வளர்ச்சி : ஸ்ரீஅரவிந்தர்

தமிழில் : சியாம்

ஸ்ரீஅரவிந்தர் 15/5/1918 இல் தனது ஆரிய இதழில் எழுதிய கட்டுரை இங்கு மொழிபெயர்த்து தரப்பட்டுள்ளது. ‘The future poetry’ என்ற தொகுப்பில் உள்ளது.

ஒரு கவிஞனின் படைப்பு அவனையும் அவன் காலகட்டத்தையும் மட்டுமே சார்ந்தது அல்ல. அது அவனுடைய தேசத்தின் மன நிலையை சார்ந்தது; அவனுக்காக உருவாக்கக் கூடிய ஆன்மீக, அறிவுசார், அழகியல் மரபையும் சூழலையும் சார்ந்தது. அவன் இந்த நிபந்தனையால் முழுவதுமாக கட்டுப்பட்டிருக்கிறான் என்றோ கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்றோ புரிந்துக்கொள்ள கூடாது. அல்லது, அவன் தன்னை தேசியமனதின் குரலாக கருத வேண்டும் என்றோ, தேசத்தின் கடந்தகால மரபால் கட்டுண்டவன் என்றோ, தானே ஒரு பாதையை உருவாக்குவதில் இருந்து தடை செய்யப்பட்டவன் எனறோ புரிந்துக்கொள்ள கூடாது.

ஐயர்லாந்து அல்லது இந்தியா போல, தற்சமயத்தில் இடர்பாடுகளுக்கு இடையே வலுவான சுய பிரக்ஞைக்கு திரும்பி வரும் நாடுகளில் இந்த தேசியவாதம்(nationalism) உயிர்ப்புள்ள கருத்தாக, ஆற்றல்மிக்க உத்வேகமாக(motive) இருக்கலாம். எல்லா தனிப்பட்ட நபர்களிலும் பொதுவான நெருக்கமான தாக்கத்தை செலுத்தக்கூடிய உயிர்ப்பான கூட்டு வாழ்க்கை கொண்டிருந்த நாடுகளில் அல்லது தேசிய கலாச்சாரம் மற்றும் மரபின் தீவிரமான உணர்வை போற்றிப் பேணிய நாடுகளில் மரபின் நிலையான கூறுகள் கவிஞர்களின் மனதில் மிகவும் பிரக்ஞாபூர்வமான தாக்கத்தை செலுத்தக்கூடும். அது வலுவற்ற ஆன்மாக்களுக்கு உதவுகிறது. அதே நேரத்தில் கட்டுப்படுத்தவும் செய்கிறது. ஆனால் அது ஒரு மேதைக்கு, வடிவத்தின் நீடித்த அழகையும் நிறைவளிக்கும் முழுமையையும் அளிக்கிறது. ஆனால், மகத்தான கவிதையின் பிறப்பிற்கு இது ஒரு அத்தியாவசியமான நிபந்தனை கிடையாது. கவிஞன் தன்னை கொண்டே படைக்கிறான். மேலும் அவன் தனது படைப்பில் அழகியல்விதியை  நிறைவு செய்யும் பட்சத்தில், தன் ஆன்மாவின் உயிர்துடிப்பை  எந்த தடையுமின்றி பின்தொடரும் உரிமை அவனுக்கு உள்ளது என்பதை நாம் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தனது காலகட்டத்தின், தேசத்தின் புறவய வடிவங்கள் அவனுக்கு அவனது தொடக்கப் புள்ளியையும் சில கருக்களையும்(materials) மட்டுமே அளிக்கிறது. அது, அவன் தனது கவித்துவ ஆன்மாவின்(poetic spirit) தடையற்ற இயக்கத்திற்கு கண்டடையும் வெளியை கல்வியின் மூலமும், உப நினைவின்(subconcious) மூலமும், தன்னிச்சையான சூழல் அழுத்தத்தாலும் ஓரளவு வரை தீர்மானிக்கிறது. 

இதன் மூலம் நான் ‘மனிதன் மற்றும் அவன் சூழல்'(man and his milieu) கோட்பாட்டுடன் உடன்பட வேண்டும் என்று சொல்லவில்லை. அதே போல, ஒரு மனிதனையும் அவனது படைப்பையும் உருவாக்கிய முன்னோடிகளையும், சூழ்நிலைகளையும், தாக்கங்களையும் ஆராயும் படி சொல்லும் ‘வரலாற்று விமர்சன’ பார்வையுடன்(historical school of criticism) உடன்பட வேண்டும் என்றும் நான் சொல்லவில்லை. இந்த விரிவான அறிவியல்பூர்வ ஆய்விலிருந்தே அவனது கவிதையைப் பற்றிய சரியான மதிப்பீடு கிடைக்கும் என்று வரலாற்று விமர்சன பார்வை உத்தேசிக்கிறது. ஆனால் இந்த வழிமுறையின் மூலம் அவனுடைய சரியான ‘வரலாற்று உளவவியல்’ புரிதல் கிடைக்காது. ஏனெனில், அவனுக்கு முன்னாலோ, அவனைச் சுற்றியிருந்தோ அவனுள் ஒருபோதும் நுழையாதவற்றை, நாம் மிக எளிதாக அவனுக்குள்ளும் அவனது படைப்புக்குள்ளும் வாசிக்க நேரலாம். நமது சுதந்திரமான நேரடி மனப்பதிவை மூட்டமாக்கும் வகையில் தற்செயலானவற்றை அவசியமற்றவற்றை கொண்டுவந்தால், கண்டிப்பாக சரியான கவிதை மதிப்பீட்டை உருவாக்க முடியாது. மாறாக இதற்கு நேரெதிரானதே ரசனையின்(appreciation) உண்மையான வழிமுறை. கவிஞனை பற்றியும் கவிதையை பற்றியும் முக்கியமாக தெரிந்துக் கொள்ள வேண்டியவற்றுக்காக நாம் நேரடியாக கவிஞனிடம் கவிதையிடம் வரவேண்டும். உண்மையான அழகியல் அல்லது கவித்துவத்திற்கு தேவையான எல்லாவற்றையும் இவ்விடத்திலிருந்தே நாம் அடைய முடியும். அதன் பிறகு நமக்கு விருப்பம் இருந்தால் சிறு விளக்கத்திற்காக வேறு எங்கேனும் செல்லலாம். அல்லது நமது அறிவியல்பூர்வ வரலாற்றுப்பூர்வ ஆவலை நிறைவு செய்துகொள்வதற்காக அலைந்து திரிந்து தேடலாம். இந்த இயல்பான நெறிமுறையில் தற்செயலானவை சரியான இடத்தில் பொருந்தும். மேலும் இதன்மூலம் கவிதையின் ரசனை கலக்கம் அடையாமல், உயிர்துடிப்புடன் புத்தம்புதிதாக இருக்கும். ஆனாலும் வரலாற்று விமர்சனத்தில், அதன் புறவயமான போலியான வழிமுறையைத் தாண்டிய உண்மையும் உள்ளது. கவிதையின் ரசனைக்கு இல்லையெனினும், ஒரு கவிஞனை பற்றியும், அவனது படைப்பை பற்றியும் நமது அறிவுத்திறன் சார்ந்த மதிப்பீட்டிற்கு உதவக்கூடிய முக்கியமான அடிப்படைகளைப் பெறுவதில் வரலாற்று விமர்சனம் உதவிகரமாக இருக்கிறது. 

முழுமையை இலக்காகக் கொண்ட பிற வடிவங்களைப் போலவே கவிதையிலும் இரண்டு கூறுகள் உள்ளன. அது சாசுவத உண்மை(eternal truth substance) மற்றும் போதாமைகளையும் தற்செயல்களையும் கொண்டு வரக்கூடிய கால கட்டம் சார்ந்த கூறு(time element). இவற்றில் சாசுவத உண்மையே எப்போதும் பொருட்படுத்தப்படக்கூடியது. அதுவே நமது இறுதியான ரசனையை, நமது முழுமையான மதிப்பீட்டை-அதாவது கவிதைக்கான நமது அடிப்படையான எதிர்வினையை- தீர்மானிப்பதாக இருக்க வேண்டும். உண்மை மற்றும் அழகின் சாசுவத ஆன்மாவை(spirit) அழகின் அலகிலா வேறுபாடுகளின் மூலம், சொல்லை தனது கருவியாகக் கொண்டு வெளிப்படுத்தும் ஆன்மாவே(soul) கவிஞன். இது, அதே ஆன்மாவை(spirit) தேடும் அதற்கு எதிர்வினையாற்றும் ஆன்மாவுக்கு(soul) ஒப்பானதே. இந்த எதிர்வினையை அதன் தூய்மையான, நேரடியான உயர்ந்த விழிப்பு நிலையில் நாம் பெறும்போது நமது கவிதை ரசனையின் இயல்திறன்(faculty) நிச்சயமானதாகவும் தீவிரமானதாகவும் மாறுகிறது. இதை, நம்மிடம் உள்ள படைப்பின் அழகை ரசிக்கும் தற்சார்பற்ற (impersonal) ரசிகன், கவிஞனிடம் உள்ள தற்சார்பு அற்ற படைப்பாளிக்கும், அழகை மொழியாக்குபவருக்கும் ஆற்றும் எதிர்வினை என்று சொல்லலாம். இது தன்னை கவிஞனின் ஆளுமை(personality) மூலம் வெளிப்படுத்திக்கொள்ள நினைக்கும் அழகின் அசலான தற்சார்பற்ற ஆன்மாவே(impersonal spirit)தவிர, தனக்கான சொல்லை கண்டடையும், தன் தூண்டுதலின் உச்சத் தருணங்களில் அவனிலிருந்து படைத்துக் கொள்வதுபோலத் தெரியும் அவனது தனிப்பட்ட அறிவு கிடையாது. இந்த தற்சார்பு இன்மை, தனது வெளிப்பாட்டை தேடும் படைப்புக் கருத்தையும், அழகின் உத்வேகத்தையும் மட்டுமே சார்ந்துள்ளது. அதன் ஒரே ஒரு நோக்கம் முழுமையான வெளிப்பாட்டையும், தவிர்க்கவியலா சொல்லையும் சந்தத்தையும் கண்டடைவதே. ஏனையவை எல்லாம் இந்த அடிப்படை முயற்சியின் துணைபுரிகிற தற்செயலான அடிநிலை பொருட்களும் நடத்திச்செல்லும் ஊடகமும் ஆகும்.     

இருப்பினும் கவிஞனின் ஆளுமையும் வாசகனின் ஆளுமையும் இருக்கவே செய்கின்றன. இவை இரண்டுக்கும் இடையில் உள்ள ஒற்றுமை அல்லது முரண்பாடு கவிஞனுக்கும் அவனது வாசகனுக்கும் இடையில் உள்ள தொடர்பை தீர்மானிக்கிறது. அத்தொடர்பிலிருந்தே நமது ரசனையிலும் மதிப்பீட்டிலும் உள்ள தனிப்பட்டவை எதுவாகினும் வருகிறது. இந்தத் தனிப்பட்ட, காலகட்டம் சார்ந்த கூறில் எப்போதும் தற்செயலானவையும் இருக்கிறது. இந்த தற்செயல் நமது மதிப்பீட்டை உருவாக்கிக் கொள்வதில் உதவிகரமாக இல்லாமல் எல்லைக்குட்படுத்துவதாகவும், விலகிச் செல்லவைப்பதாகவும் இருக்கிறது. இது நாம் சமகாலக் கவிதைகளை மதிப்பிட முயலும்போது எந்த அளவு குறிக்கிடுகிறது என்பதைக் காணலாம். இது தொடர்ந்து நிகழக்கூடியதே. ரசனையில் உறுதியும் நுண்ணறிவும் கொண்ட விமர்சகர்கள் கூட, அவர்களின் சமகாலத்தவர்களைப் பற்றி பாதகமாகவோ சாதகமாகவோ ஒரு முடிவுக்கு வரநேரும்போது மிகத் தவறான மதிப்பீடுகளை செய்யவே வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் காலகட்டம் மற்றும் உளநிலை சூழல் சார்ந்த தற்செயலான தாக்கங்கள் இங்கு அளவுக்கதிகமான ஆதிக்கத்தை செலுத்துகின்றன. இந்த தற்செயல்கள் நமது பார்வையைத் திரிக்கின்றன அல்லது வேறு வண்ணம் பூசுகின்றன. ஆனால் இந்த குறிக்கீட்டைக் கடந்தும், எப்போதும் நமது தற்கால ஆளுமைக்கு அடிப்படையான அதிக மதிப்புள்ள பொருட்படுத்தவேண்டிய ஏதோ ஒன்று இருக்கிறது. நாம் எல்லோரும், முழுமையடையாத இயல்பை மேம்படுத்தி வாழ்வின் ஆன்மாவுடன்(spirit) அதன் பல்வேறுபட்ட வெளிப்பாடுகள் மூலம் வெவ்வேறு வழிகளில் ஒன்றிணைய முயலும் ஆன்மாக்கள்(souls). இந்திய யோகத்தில் அதிகாரம் என்று ஒரு கோட்பாடு உள்ளது. அது மனிதனின் உடனடி ஆற்றலுக்குள் இருக்கக்கூடிய ஒன்று. அது தனது பண்பியல்புகளின் மூலம் யோகத்தில் ஒரு மனிதனுக்கு சரியான பாதையை தீர்மானிக்கிறது. அதுவே அவனது சரியான வழி. ஏனெனில் அதுவே அவனுக்கு தனிப்பட்ட முறையில் உதவிகரமானது. ஆக, நமது எல்லா செயல்களிலும் அதிகாரம் என்ற கோட்பாடு இருக்கிறது. அதையே நாம் கவிதையில் ரசிக்க வேண்டும். இன்னும் மேலாக, நாம் கவிதையை ரசிக்க வேண்டிய வழிமுறை அதுவே.                              

இது தனிப்பட்ட ஆளுமை அல்லது காலகட்டம் சார்ந்த கூறின் தனிப்பட்ட அம்சம். ஆனால் இதைத் தாண்டி ஒரு பெரிய இயக்கமும் உண்டு. அதில் நாமும் கவிஞனும் அவனது கவிதையும் இருக்கிறோம். மானுடத்தின் பொது ஆன்மாவின் இந்த இயக்கமும், ஒரு தனிப்பட்ட ஆன்மாவின் இயக்கமும் ஒன்றே. இரண்டும் ஒரே இலக்கை கொண்டவை. கவிதையில் இது தன்னைத் தானே, புறவயத்திலிருந்து அகவயதிற்கு, அகவயத்திலிருந்து மிகவும் அகவயமான ஆன்மீகத்திற்கு என்று வளர்ச்சி அடைவதில் வெளிக்காட்டுகிறது. இந்த வளர்ச்சிப் பாதை பல வளைவுகளையும் திருப்பங்களையும் சுழற்சிகளையும் கொண்டது; கடந்தகால உத்வேகங்களுக்கு திரும்புவதையும், எதிர்கால உத்வேகங்களின் மீதான தவறான எதிர் பார்ப்புகளையும் கொண்டது. ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரு கட்டம் வரை, இது வளர்ச்சியும் மேம்படுதலுமே ஆகும். இது சுய-விஸ்தீரணம் மற்றும் சுய-கண்டடைவுக்கான தொடர் முயற்சி. இந்த வளர்ச்சியைப் பற்றிய தெளிவான சித்திரம் நமது கவிதை மதிப்பீட்டிலும் ரசனையிலும் உள்ள வரலாற்று கூறைப் பற்றி தெரிவிப்பதற்கு உதிவியாக இருக்கும். இது, மனித ஆன்மா மற்றும் நுண்ணிய பிரக்ஞையின் வளர்ச்சி. இவ்வளர்ச்சி கொண்டுவரும் பெரிய அனுபவத்தின் கோணத்திலிருந்து கவிதையை மதிப்பிடுவது எளிது. இந்த பொதுவான இயக்கம் வேறுபட்ட வடிவங்களில், வேறுபட்ட பாதைகளில், தேசங்களின் ஆன்மாக்கள் மூலமும் மனிதர்களின் ஆன்மாக்கள் மூலமும் தன்னை நடத்திக்கொள்வதை பார்க்க முடிகிறது. இவ்விதம் நடைபெறுவது பொதுவான பலவகை மனிதர்களின் ஆன்மாக்கள் மூலம் அல்ல; கலை வழியாக கவிதை வழியாக வலுவான சுய-வெளிப்பாட்டை அடைந்த மனிதர்களின் ஆன்மாக்கள் மூலம். மனதின் இந்த விஷயங்கள்(கலை மற்றும் கவிதை) அவ்வியக்கத்தை உருவாக்கவோ வெளிப்படுத்துவதோ இல்லை. அவை மனிதர்களின் மொத்த வாழக்கையாக கூட இல்லை, அவை வாழ்க்கையின் உச்ச புள்ளிகளை மட்டுமே பிரதிநிதிப்படுத்துகின்றன; இரண்டு அல்லது மூன்று மனிதர்களில் உள்ளார்ந்த ஆன்மீக விசையை மேம்படுத்தி இருக்கின்றன. இந்த சிலரில் நாம் அவ்வியக்கத்தின் ஏதோ ஒரு பாதையின் உள்ளார்ந்த பண்பியல்பையும் நோக்கத்தையும் காண முடியும்-அது கவிதை, கலை, மதம் மற்றும் ஆன்மீகப் பாதை என எந்தப் பாதையாக இருந்தாலும்.

இந்த பொதுவான வளர்ச்சி தனக்கேயான இயல்பான காலகட்டங்களை கொண்டது. தொல்லியலாளர்கள் கண்டு பிடித்த கற்காலம், வெண்கல காலம் மற்றும் ஏனைய காலங்களின் காலகட்டங்கள் எப்போதும்(பொதுவான வளர்ச்சியின் காலகட்டங்களுக்கு) இணையாக பொருந்தி இருப்பதாக இல்லை; எல்லா மனிதர்களுக்கும் ஒன்றாக இருப்பதில்லை. மேலதிகமாக, அந்தக் காலகட்டங்கள் கச்சிதமாக இதே வரிசைப் படி பின்தொடர்வதில்லை. அவ்வப்போது தலைகீழ் மாற்றங்கள், அசாதாரணமான எதிர்பார்ப்புகள், கட்டுமீறிய திரும்புதல்கள் நிகழ்கின்றன. உலகில் உள்ள ஆன்மா(spirit) தனது இயக்கத்தை பொருண்மையானவற்றைவிட, உளவியல் சார்ந்தவற்றில் சுதந்திரமாக மாற்றிக்கொள்கிறது. புறவயமாக கீழ் அடுக்கிலான வாழ்வை வாழ்ந்தாலும், இனத்தின் ஆன்மா உளவியல் மேம்பாட்டின் உயர்ந்த அடுக்கின் உத்வேகங்களை எதிர்பார்க்க முடியும். அப்படி அது மேம்பாட்டின் உயர்ந்த தளத்தை அடைந்தாலும், அது கடந்தகால உத்வேகத்திற்கும் கீழான உத்வேகத்திற்கும் திரும்பிச் செல்லலாம். அப்படி சென்று அதை திருத்தும்போது அல்லது விஸ்தரிக்கச்செய்யும்போது அல்லது மேலான ஊடகத்தின் உத்வேகத்தாலும் ஆற்றலாலும் செம்மைப்படுத்தும்போது அது எப்படி இயங்குகிறது என்று பார்க்கலாம். தான் செய்வதை பிரக்ஞாபூர்வமாக செய்யும் நம்மின் சிறுபகுதியான ஒன்றின் மேல், நாம் காணமுடியாத மறைபிரக்ஞை(subconscient) மற்றும் மீபிரக்ஞையின்(superconscient) இயல்புகளும் தாக்கங்களும் இயங்குகின்றன. ஒரு நாட்டின் சுய வெளிப்பாட்டிற்கான முயற்சியில், கடந்த கால சுயத்தின்(self) வளர்ச்சியின் எச்சங்கள் உதவிகரமாகவும் அதேசமயம் அதைக் கட்டுப்படுத்துவதாகவும் இருக்கின்றன.

ஆக, மக்கள் பெரும் உழைப்பைக் கோரக்கூடிய புறவய வாழ்க்கையை வாழ்ந்த கால கட்டத்தில் அவர்களின் சராசரி மனநிலை புறவயமாக இருந்த அந்த காலகட்டத்தில் இந்திய ஆன்மாவால் ஆன்மீக உத்வேகத்தை கைப்பற்ற முடிந்திருக்கிறது. மொழியாக்க மிகவும் கடினமான உச்ச கட்ட ஆன்மீக அனுபவங்களை வெளிப்படுத்துவதில் அது வெற்றி அடைந்திருக்கிறது. அதோடு அவற்றை பொருண்மையான எளிய வாழ்க்கைக்கு உரித்தான உருவகங்களில், படிமங்களில் வெளிப்படுத்தியிருக்கிறது. மிகவும் புறவயமான சடங்கு சார்ந்த மனநிலையானது பொருண்மைக்கு அப்பால் உள்ளவற்றை பொருண்மைக் குறியீடுகளாக மாற்றுகிறது. பிறகு தன்னுடைய குரலிலேயே துரிதமான கட்டவிழ்த்தலால் வேத உபநிடதங்களின் புனிதமான கவிதையை உருவாக்குகிறது. கிரேக்க ரோம கடந்த கால பின்புலத்தை தன் இரத்தத்தில் கொண்ட இத்தாலி, கத்தோலிக்க கிறித்துவத்தின் உத்வேகங்களை கைப்பற்றி கச்சிதமான உயர் கவித்துவ வெளிப்பாட்டை தாந்தேயில் அளித்திருக்கிறது. அப்போது ஜெர்மனிமயமான ஐரோப்பா தனது முதல்கட்ட சிந்தனைகளை தடுமாறுகிற குழந்தைத்தனமான கற்பனாவாத செய்யுளில் திக்கித் திக்கி சொல்லிக்கொண்டிருந்தது.           

பொதுவாக எல்லா தேசமும் மக்களும் தனது இருப்பில் ஆன்மாவை கொண்டிருக்கின்றன அல்லது அதை வளர்த்துக் கொள்கின்றன; அவை மானுடத்தின் விசேஷமான ஆன்ம வடிவம் மற்றும் மானுட வளர்ச்சியின் பாதைகளை திருப்பங்களை தீர்மானிக்கும் இயல்பின் விதிகளை வளர்த்துக் கொள்கின்றன. தனது சூழலில் இருந்து அது எடுத்துக்கொள்ளும் எல்லாவற்றையும் இந்த ஆன்மாவில் ஒரு அங்கமாக இணைத்துக் கொள்ளவும் அவற்றை இந்த ஆன்ம வடிவத்தின் வஸ்துவாக உருமாற்றவும் முயல்கிறது. தனது இயல்பின் இவ்விதிக்கு பொருந்துவதாகவும் இவ்விதியால் கட்டுப்படுத்தப்படுவதாகவும் மாற்ற முயல்கிறது. அதன் எல்லா சுய வெளிப்பாடுகளும் அதற்கு ஒத்துப்போவதாக இருக்கிறது. அதன் கவிதை கலை மற்றும் சிந்தனை இந்த சுயத்தின் வெளிப்பாடுகளும் அது நோக்கிச் செல்லும் சுயத்தின் மகத்தான சாத்தியக்கூறுகளின் வெளிப்பாடுகளும் ஆகும். தனிப்பட்ட கவிஞனும் அவனது கவிதையும் இந்த இயக்கத்தின் ஒரு பகுதியே. தற்போதைய மனப்பாங்கினாலும் (temperament) தேசிய மனதின் புறவய வடிவங்களாலும் கவிஞனும் அவனது கவிதையும் எல்லைக்கு உட்படுத்தப்படவில்லை. இவற்றை மீறவும் செய்யலாம். ஒரு நட்சத்திரம் போல கவிஞனின் ஆன்மா இருக்கலாம் தூரத்தில் வதியலாம். அவனது படைப்பு தேசிய மனதின் எல்லைகளிலிருந்து மாறுபாடு என்று மட்டும் அல்லாமல் அவற்றுக்கு எதிரான புரட்சி என்று கூட தெரியலாம். ஆனால் அவனது ஆளுமையின் வேர்கள் தேசிய மனதின் ஆன்மாவிலேயே இருக்கின்றன. இந்த மாறுபாடும் புரட்சியுமே கூட மறைந்திருக்கின்ற அடக்கிவைக்கப்பட்ட ஏதோ ஒன்றை வெளிக்கொணர்வதற்கான முயற்சியகளே. அல்லது ஒட்டுமொத்த ஆன்மாவின் ரகசியத்தில் உள்ள ஒன்று தேசத்தின் ஆன்ம வடிவத்திற்குள் பீறிட்டு வழிய முயல்கிறது. ஆக, நாம் கவிதைக்கு புறம்பான விஷயங்களின் கோணத்திலிருந்து கவிதையைக் கவனித்து கவிதையின் தேசிய வளர்ச்சியையும், கவிஞனுக்கும் அவனது கவிதைக்கும் இருக்கும் தொடர்பையும் மதிப்பிடுவது பலனளிக்காது. மாறாக கவிதையை அதன் ஆன்மாவின், வடிவங்களின், உத்வேகங்களின் கோணத்தில் இருந்து கவனிப்பதே பலனளிப்பதாக இருக்கும்.

*

சியாம்

சியாம். சென்னையில் தனியார் நிறுவனத்தில் இயந்திர வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். இலக்கியத்துடன் கர்நாடக இசையிலும் ஆர்வம் உள்ளவர்.

1 Comment

உரையாடலுக்கு

Your email address will not be published.