
வெற்றி.. வெற்றி..
*
வெற்றிக் குதிரையில் பாய்ந்தபடி
நடு மைதானத்தில்
மட்டையை வான்நோக்கிக் குத்துகிறான்
இன்றைய நாயகன்
ஆர்ப்பரிக்கும் கூட்டம்
அலையென எழுகிறது
பொங்கும் வெள்ளத்தின் நடுவில்
குமிழென மிதக்கிறான்
எதிரணியின் ஆதரவாளன் ஒருவன்
முதலில் திகைத்த அவன்
அத்தனை பெரிய மகிழ்ச்சியின்
ஈரம் தீண்ட
அதோ
உடைந்து புன்னகைத்துவிட்டான்
அது
வெற்றியின் மகிழ்ச்சி அல்ல
மகிழ்ச்சியின் வெற்றி
பொங்கும் நீலத்திரையில்
இப்போது மிளிர்வது
ஒரு மலர்
ஒரு நண்பன்
*
ஒரு நண்பனைப் போல் இருந்தது
எனக்காக காத்திருந்த உணவு
என்னை நலம் பெறச்செய்வதும்
உயிர்பிப்பதுமாய் இருக்கிறது
அதன் பிரார்த்தனை
நானாக வேண்டியவைகைளை
நானாக மாற்றும்படி நிகழ்கிறது
அதன் உரையாடல்
நீண்ட பயணத்திலும்
நினைவில் என்னைச்
சுமந்து வந்திருக்கும்
அதன் கண்களில் இன்னும்
காதலின் ஒளி
பொறுமையோடிருக்கிறது
என்னை உண்ணக் காத்திருக்கும்
யாருடையதோ பசி
வெறுமனே நிரப்பாமல்
பூக்கச் செய்துவிடும்
கருணையின் ருசி
எனது வானம்
*
நேரப் பருந்து
சுற்றுகிறது
நான் அதைக் காணவில்லை
அதனால்
நானங்கு இல்லை
முயலென ஆகும்முன்
நானொரு புல்
உலகை ஆளும் தோரணையில்
சூடி நின்றிருக்கிறேன்
சூரியனை
துளியாகி ஒளியாகி
நானே
சூரியன் ஆகும் காலமும் வந்தது
தீராத காதலால்
மீண்டும் விழுந்தேன்
பொத்தென
இப்போது நானிலமெங்கும்
துள்ளிக் குதித்தோடும்
சூரியன் நான்
இந்த பூமிதான்
என் வானம்

ஆனந்த் குமார்
கோவையில் வசித்துவரும் ஆனந்த் குமார், தொடர்ச்சியாக கவிதைகள் எழுதிவருகிறார். ஆவணப்படங்கள், குறும்படங்கள், புகைப்படங்கள் எடுப்பதிலும் முனைப்போடு இயங்கிவருகிறார். ‘டிப் டிப் டிப்’ என்ற கவிதைத்தொகுப்பின் ஆசிரியர்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.




















