“அப்பா, வெளியில உட்கார வேண்டாம், இன்னும் பனி முழுதாக விடவில்லை, உடம்புக்கு ஆகாது.” என்றாள் சுமி. நான் வீட்டு வாசலில் போர்ச் எனப்படும் திறந்த இடத்தில் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தேன். ஹிந்து பேப்பர் மட்டும் கையில் இருந்திருந்தால் இது அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ பே ஏரியாவில் புறநகர் என்பதை மறந்திருப்பேன். நேற்றே நான் வாசல் வராந்தா என்று சொன்னதை, சுமி போர்ச் என்று திருத்தினாள். இன்னும் சாலைகளின் பெயர்கள், கடைகளின் பெயர்கள் நினைவில் பதியவில்லை. சுமி சொன்ன ஐம்பது டிகிரி என்பது சென்டி கிரேடில் எவ்வளவு என்று மனக் கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறேன்.
மார்ச் மாத காலையில் குளிர் அதிகம் தான். சுமி வசந்த காலம் ஆரம்பிக்க இன்னும் ஒரு மாதம் ஆகும், அதனால் ஸ்வெட்டர் எல்லாம் கொண்டு வரும்படி சொல்லி இருந்தாள். என் மனைவி ரமா ஸ்வெட்டர், ஷால், கம்பளிக் கையுறை எல்லாம் நிறையவே அணிந்து கொண்டு வீட்டுக்கு உள்ளேயே இருந்தாள். ஹீட்டர் போதவில்லை என்று கூடவே புகார்.
பல வருடங்களுக்குப் பிறகு அமெரிக்கா வந்திருக்கிறோம். பதினாறு மணி நேரத்தில் நேரடியாக ஒரே விமானத்தில் வந்து இறங்க முடிவது ஆச்சரியம்தான். பிறந்த பேரக் குழந்தையை பார்த்துக் கொள்ள உதவிக்கு வரும் வழக்கமான இந்தியப் பெற்றோர்கள் போல நாங்கள் வரவில்லை. சுமிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வயது முப்பதுக்கு மேல் ஆகி விட்டது. அவள் கல்லூரிப் படிப்பை இந்தியாவில் முடித்துக் கொண்டு , இரண்டு வருடம் வேலை செய்து, பிறகு மேல் படிப்புக்கு அமெரிக்கா வந்து ஆறு வருடங்களுக்கு மேல் ஆகிறது. முதல் இரண்டு வருடம் முதுகலைப் பட்டத்துக்குப் படித்துக் கொண்டிருந்தாள். அதுவும் முழு ஸ்காலர்ஷிப் கிடைத்தது, செலவு அதிகம் இல்லை. படித்து முடித்த போது பட்டமளிப்பு விழாவுக்கு வருவதாக இருந்தோம். ஆனால் ரமாவுக்கு பாஸ்போர்ட் காலாவதி ஆகி இருந்தது. பாஸ்போர்ட், விசா எல்லாம் கிடைக்க சில மாதங்கள் ஆகும் போல இருந்தது. முன்கூட்டியே சரியாக திட்டம் போடாததால் வர முடியவில்லை. சுமி அனுப்பிய படங்களும் வீடியோவும் பார்த்து மகிழ்ந்து கொண்டோம்.
அப்போதே ஒரு வேலை கிடைத்தவுடன், கல்யாணத்துக்கு பையன் பார்க்கலாம் என்று ரமாவும் நானும் பேசிக் கொண்டோம். ரமா உறவினர்கள் நண்பர்களிடம் ஜாதகம் கொடுக்க ஆரம்பித்தாள். ஆனால் திடீரென்று சுமி பி.எச்.டி சேருவதாக சொன்னாள். அது முடிய சுமார் நான்கு வருடங்கள் ஆகுமாம். வயதாகிக் கொண்டே போகிறது என்று எங்களுக்குத் தான் கவலை. சுமியிடம் கல்யாணப் பேச்சை எடுத்தாலே கோபித்துக் கொண்டாள்.
“எல்லோரையும் மாதிரி படிப்பு, வேலை, உடனே கல்யாணம், பிறகு குழந்தை என்று மாட்டிக் கொள்ள மாட்டேன். இது என்னுடைய வாழ்க்கை, என்னை முடிவு செய்ய விடுங்கள்.” என்றாள். என்னுடைய சம வயதுடைய நண்பர்களுக்கும் இதேதான் பிரச்சனை. பையன்கள் ஒருவாறாக கல்யாணத்துக்கு ஒத்துக் கொள்கிறார்கள், பெண் பிள்ளைகள் தான் அடம். பெற்றோர்கள் கல்யாணத்துக்கு பையன் பார்ப்பது எல்லாம் பழங்கால பழக்கம் ஆகி விட்டது. பெரும்பாலும் அவர்களே பார்த்துப் பழகி விருப்பப்பட்டால் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஒரு முறை சுமி டிசம்பரில் விடுமுறைக்கு வந்த போது ,ரமா விடாமல் கல்யாணத்தைப் பற்றி பேசினாள். நீயே பார்த்துக் கொள். நம்மவங்களாக இருக்க வேண்டும் , நல்ல குடும்பமாக இருக்க வேண்டும் என்ற அளவுக்கு சுமிக்கு அறிவுரை கொடுத்தாள். சுமி அது என்ன நம்மவங்க என்று வாதம் ஆரம்பித்து, முற்றிப்போய், அதற்குப் பிறகு அவள் இந்தியா வரவில்லை. அவ்வப்போது ஃபோனில் பேசுவதோடு சரி. நடுவில் கொரோனா வந்து நாங்கள் பயணம் செய்யவில்லை. கல்யாணப் பேச்சும் நின்றது.
இப்போது திடீரென்று ஃபோன் செய்து எங்களை வரச் சொன்னாள். கோபியைக் காணவில்லையாம் , தனியாக இருக்க பயமாக இருக்கிறதாம். கோபி என்பது அவள் வளர்த்து வந்த பூனை. ஆறு மாதங்களாகத்தான் அவள் கூட இருக்கிறது. அந்தப் பெயரை ‘கோபி மஞ்சூரியன்’ என்று சொல்லுவோமே அதில் வரும் கோபி மாதிரி உச்சரித்தாள். ஃபோனிலேயே அழுதாள்.
“என்னுடைய கோபி பாவம், ரொம்ப நல்லவன். அவனுக்கு வீட்டுக்கு வெளியே தனியாக போக பழக்கம் இல்லை. ஏதாவது தெருப் பூனை இல்லை நாய் கடிச்சுக் கொதறிடும். “ என்றாள்.
ரமா உடனே “ அதென்ன கோபி அப்படின்னு பேர் வெச்சுருக்க ?” என்றாள்.
சுமி “ உதவிக்கு கூப்பிட்டா, இப்படி அக்கறை இல்லாமல் குறுக்குக் கேள்வி கேக்குறீங்க, அப்பா கிட்ட குடுங்க. “ என்றாள்.
நான் உடனே கிளம்பி வருவதாகச் சொல்லி சமாதானப் படுத்தினேன். எங்களை இதுவரை வரச் சொல்லிக் கூப்பிட்டதில்லை. என்னிடம் பேசும் போது அவளுக்கு வீட்டில் தனியாக இருக்கப் பிடிக்கவில்லை என்று மறுபடியும் சொன்னாள்.
கடைசியாக “ கோபி சின்ன குட்டியாக இருக்கும் போது வெள்ளை நிறத்தில் சுருண்டு படுத்திருக்கும் போது பார்க்க காலிஃப்ளவர் மாதிரி இருந்தான். “ என்றாள்.
நான் “ அப்படியா நல்ல பெயர்.” என்பதற்குள் ஸ்பீக்கரில் கேட்டுக் கொண்டிருந்த ரமா “ நாம கோபின்னு சொல்ல மாட்டோமே, யார் பேரு வெச்சது ?” என்று ஆரம்பிக்க, சுமி தொடர்பைத் துண்டித்தாள்.
இப்படியாக நாங்கள் காணாமல் போன கோபி என்ற பூனையைத் தேடி கொடுக்கவும், இத்தனை வருடங்கள் தனியாக இருந்து வந்த சுமிக்கு துணையாகவும் வந்து சேர்ந்தோம். ரமா மகிழ்ந்து போய் உறவினர்கள் நண்பர்கள் எல்லோரிடமும் அமெரிக்கா போய் சில மாதங்கள் இருக்கப் போவதாக சொல்லிக் கொண்டாள்.
வீட்டுக்கு அருகே இருந்த மரம் இலைகள் எல்லாம் உதிர்ந்திருந்தாலும், கிளைகள் முழுவதும் மொக்குகள் வந்திருந்தன. ஒரு மாதத்தில் மரம் முழுவதும் மலர்களாக இருக்குமாம். நான் உள்ளே எழுந்து வந்தேன். ஹாலில் பெரிய சோபாவில் -இல்லை, சுமி சொல்லிக் கொடுத்தபடி கவுச்சில் உட்கார்ந்து கொண்டு பெரிய டீவி திரையில் வீட்டில் இருந்து கொண்டு வந்த துப்பாக்கியால் பள்ளியில் ஆசிரியர்களை சுட்ட பதின்ம வயது பையனைப் பற்றிய செய்தியை பதினேழாவது முறையாக பார்த்தேன். பள்ளிக் கட்டித்தையும், துப்பாக்கி ஒலியையும், அந்தப் பையனின் படத்தையும், வெளியே ஓடி வரும் மாணவர்களையும் மறுபடியும் மறுபடியும் காண்பித்தார்கள். ஜெட்லாக் கண்ட நேரத்தில் தூக்கத்தை கெடுக்கிறது. ரமா தூங்கிக் கொண்டிருந்தாள். இன்று காலை மூன்று மணியிலிருந்து டீவியில் ஒலி இல்லாமல் இந்தச் செய்தியை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
இங்கே கார் இல்லாமல் வெளியே எங்கும் பொடி நடையாக போக முடியாது. குளிர் மட்டும் இல்லை, பெரிய சாலைகளில் பல இடங்களில் நடந்து செல்ல சரியான நடை பாதையும் கிடையாது. நம்முடைய காய்கறி வாங்க வேண்டுமானால் இந்தியக் கடைக்கு காரில்தான் போக வேண்டும். அங்கே கூடவே சமோசா பஜ்ஜி ஏதாவது கிடைக்கும். பக்கத்தில் நடக்கும் தூரத்தில் ஒரு சூப்பர் மார்கெட், ஆனால் அங்கே கத்தரிக்காய் வெண்டைக்காய் என்று நம்முடைய காய்கறிகள் கிடைக்காது, அதனால் சுமிக்கு முடிந்த போது காரில் சென்று காய்கறி வாங்கி வந்தோம். நாங்கள் இருந்த காலனியிலேயே காலையும் மாலையும் ஒரு மணி நேரம் நடந்து விட்டு வந்தேன். காலனி என்று சொல்லக் கூடாது, என்க்ளேவ் என்று திருத்தினாள் சுமி. என் வயது இந்தியர்கள் யாரையும் இன்னும் பார்க்கவில்லை. பக்கத்து வீட்டில் ஒரு பருத்த பெண் தன் மகனுடன் இருந்தாள். நட்பாகப் புன்னகைத்துப் பேசினாள். அவள் பேசுவது ஆங்கிலம் தான் ஆனாலும் பாதி புரியவில்ல,நிறைய யூகிக்க வேண்டி இருந்தது. அவள் கணவனுடன் சேர்ந்து இல்லை போல என்று ரமா கேட்க, சுமி அந்த மாதிரி வம்பெல்லாம் இங்கே ஆரம்பிக்காதே என்று எச்சரித்தாள். என்னையும் அவளிடம் பேச்சு வேண்டாம் என்றாள். அதனால் காலையிலும் மாலையிலும் பார்க்கும்போது கையை உயர்த்தி ஒரு ஹாய் சொல்லுவதுடன் சரி.
ரமா “ இங்கே என்னென்ன தமிழ் சானல்கள் டீவியில் வரும் ? “ என்று கேட்டாள்.
அதற்கு சுமி “ இங்கே என்க்ளேவிலேயே பகவத் கீதை, நாராயணீயம் வகுப்புகள் தினமும் உண்டு , நான் உங்கள கூட்டிட்டு போய் அறிமுகம் செஞ்சு வைக்கறேன். “ என்றாள்.
ரமாவுக்கு அதெல்லாம் அவ்வளவாக ஆர்வம் இல்லை. இந்தியாவில் உறவினர்களையும் நண்பர்களையும் வாட்சப்பில் அழைத்துப் பேசினாள். ஆனால் அதுவும் நேர வித்தியாசத்தால் அதிகம் முடியவில்லை. அதனால் நாங்கள் மூன்று பேரும் வலுக்கட்டாயமாக உட்கார்ந்து பேச ஆரம்பித்தோம்.
வந்ததிலிருந்து சுமி கோபி பற்றி நிறைய சொன்னாள். கோபி சின்ன குட்டியாக இருந்தபோது ஒரு பார்க்கில் பார்த்தாளாம். யாரோ விட்டுப் போயிருந்திருக்க வேண்டும். அவளைப் பார்த்தவுடன் அருகே வந்து காலைச் சுற்றி வந்து கூப்பிட்டதாம். பெரிய கண்கள் விரித்து அது கூப்பிட்ட அழகில் மயங்கி சுமி அதை அப்படியே வாரி எடுத்து அணைத்துக் கொண்டாளாம். அந்தப் படத்தைக் காண்பித்தாள். சுமியின் கையில் நிஜமாகவே பெரிய கண்களுடன், சிவந்த காதுகளுடன் கோபியும், பெரிய சிரிப்புடன் சுமியுமாக அந்த மகிழ்ச்சிக் கணம் அருமையாக படத்தில் வந்திருந்தது.
நான் “ அது அம்மாவைத் தேடவில்லையா ?” என்றேன்.
சுமி “ அது இல்லை, அவன் என்று சொல்லுங்கள்.” என்று திருத்தினாள்.
“ நான், ரமா இந்தப் படம் மிக அழகாக இருக்கிறது பார்.” என்று காண்பிக்க, வாங்கிப் பார்த்து விட்டு ரமா “ யார் இந்தப் படம் எடுத்தது ? என்றாள்.
சுமி “ இந்த அம்மா எப்பவும் இப்படித்தான், நாம ஒண்ணு சொன்னா கேள்வி இன்னொன்று கேட்பாங்க. “ என்று எழுந்து போனாள்.
காணாமல் போன கோபியைத் தேட என்ன செய்யலாம் என்று காலை உணவின் போது ஆலோசித்தோம். அக்கம் பக்கத்து வீடுகளிலும் , பூச்செடிகள் புதர்கள் என்று சுமியே தேடி விட்டாளாம். அண்டை வீட்டார்களிடமும் பார்த்தால் உடனே அழைக்கச் சொல்லி இருக்கிறாளாம்.
ரமா இப்போதுதான் இந்த விஷயத்துக்கு வந்தாள்.
“ பூனைக்கு இடம் வழி எல்லாம் நல்லாவே தெரியும்.”
“ இது பாவம் சின்னக் குட்டி , எதையாவது பார்த்து பயந்து போயிருக்கும். “ என்றாள் சுமி
“குட்டிக்கு கூட வழி எல்லாம் தெரியும் , அப்படி தவறிப் போயிருந்தா கூட தானாக வந்து விடும். “ என்றாள் ரமா
“உங்களுக்கு என்ன தெரியும் , நீங்க பூனை வளர்த்திருக்கிறீங்களா ?”
நான் இந்த உரையாடலை சுவாரசியமாக கவனித்துக் கொண்டிருந்தேன், எனக்கு பூனைகள் பற்றி ஒன்றும் தெரியாது.
“ஆமாண்டி, நான் எது சொன்னாலும் நீ கேட்க மாட்ட. உங்க தாத்தா வீட்டில நான் சின்ன வயசில நிறைய பூனை வளர்த்திருக்கேன். “
சுமி “ நிஜமாவா ? அம்மா, அப்ப உங்களுக்கும் இந்த மாதிரி பூனை காணாம போய் தேடின அனுபவம் இருக்குதா ?” என்றாள்.
“தானாக காணாம போகல. ஒரு தரம் தாய்ப் பூனை நாலு குட்டி போட்டுடிச்சி. தொல்லை தாங்க முடியல. ஒரு நாள் துணி அலமாரியைத் திறந்தா அதுக்கு பாட்டியுடைய பட்டுப் புடவைகளுக்கு அடியில பூனைக்குட்டி. அந்த அம்மா பூனை வேற தினம் இடம் மாத்தும். ஒரே இடத்துல இருந்தா பாதுகாப்பு இல்லன்னு பயம். இன்னொரு நாள், பாட்டி மளிகை சாமான் வெச்சிருக்கற ஸ்டோர் ரூமில பூனைக் குட்டிகள் சத்தம். அந்த அறைக்கு ஜன்னல் கூட கிடையாது. ரூம் கதவு திறந்திருக்கும் போது எப்படியோ உள்ளே கொண்டு வைத்திருக்கிறது. பாட்டிக்கு ஒரே கோபம். “
“ நாலு குட்டியா , என்ன கலர் ? “
“ஒண்ணு தேன் கலர், ஒண்ணு வெள்ளையில கருப்பு திட்டு, ஒண்ணு முழு கருப்பு, அந்தத் தேன் கலர் குட்டி தான் எனக்கு இஷ்டம், அதுவும் என்னைப் பார்த்து கிட்ட வரும். “
“அப்புறம் என்ன ஆச்சு ?”
“பாட்டி ஒரு நாள் வீட்டு வேலைக்காரம்மாவ பூனைக் குட்டிகள எடுத்துப் போய் எங்கயாவது தூரமாக கோண்டு போய் விட்டு விடச் சொன்னாங்க. “
“அய்யோ பாவம், என்ன கொடூரம் , தாயையும் குட்டிகளையும் அப்படி பிரிக்கலாமா ?”
“ நமக்கு தொந்தரவுன்னு வந்தால் என்ன வேணுமானாலும் செய்யலாம். “
“ என்ன நியாயம் இது, பாட்டி ரொம்ப நல்லவங்கன்னு நினைச்சிட்டிருந்தேன்.”
“ நல்லவங்கதான், ஆனால் பூனைத் தொல்லை தாங்க முடியல.“
”அப்புறம் என்ன ஆச்சு ?”
“ வேலைகாரம்மா ஒரு சாக்குப் பையில அந்தப் பூனைக்குட்டிகளை கட்டி எடுத்துட்டு பஸ்ஸில கொண்டு போய் எங்கேயோ விட்டுட்டாங்க.”
“பாவம் அந்தக் குட்டிகளும் தாயும், அப்பறம் என்ன ஆச்சு ?”
“ அம்மா பூனை எல்லா இடத்துலயும் தேடி அலைஞ்சுது, அதைப் பார்த்து உங்க பாட்டி வருத்தப் பட்டு, தாயையும் குழந்தைகளையும் இப்படி பிரிச்சுட்டேனே, இது பெரிய பாவம் அப்படின்னு அழுதாங்க. “
நாங்கள் மவுனமாக இருந்தோம்.
“அதே நாள் நடு ராத்திரியில ஒரே கலாட்டா, பூனை சத்தம், எழுந்து பார்த்தால் எல்லாக் குட்டிகளும் திரும்பி வந்திடுச்சுங்க. “
“ எப்படி வந்திச்சு, அதுவும் மூட்டையில கட்டி எடுத்துட்டு போனா எப்படி வழி தெரியும், அதுவும் பஸ்ஸுல எங்கயோ கொண்டு போனாங்கன்னு சொன்னீங்க ?”
“எப்படி வழி தெரிஞ்சிதோ, எப்படி அவ்வளவு தூரம் ஓடி வந்துச்சுன்னு தெரியாது.”
“பிறகு என்ன செஞ்சீங்க ?”
“உங்க பாட்டி பாவம் இருந்துட்டு போகட்டும் அப்படின்னுட்டாங்க.”
“ஓகோ, உங்களுக்கும் அப்ப பூனையப் பிரிஞ்சா எப்படி இருக்கும்னு தெரியும். “
“ஆமாண்டி, அதனாலதான் நானும் வந்தேன், அப்படியே இத்தன நாளா எங்களப் பார்க்கக்கூட வராத பொண்ணு என்னதான் செஞ்சிட்டிருக்கா, எப்படி இருக்கான்னு பார்க்கவும் வந்தோம். “
சுமி எழுந்து உள்ளே சென்றாள்.
அன்று மாலையே பூனையைத் தேடும் வேலைகளை ஆரம்பித்தோம். சுமி ஒரு போஸ்டர் தயாரித்தாள். கோபியின் படமும் பெயரும் போட்டு, யாராவது பார்த்தால் தகவல் தெரிவிக்க தொடர்புக்கு சுமியின் மொபைல் எண்ணையும் கொடுத்து அந்த போஸ்டர் நன்றாக வடிவமைத்திருந்தாள். யாராவது பார்த்தால் அருகே போக வேண்டாம், பிடிக்க முயற்சிக்க வேண்டாம் என்ற கூடுதல் எச்சரிக்கையுடன். அதை காரில் போய் ஒரு கடையில், தண்ணீர் பட்டாலும் சேதமாகாத பிளாஸ்டிக் போன்ற காகிதத்தில் அய்ம்பது ப்ரின்ட் எடுத்தோம். அந்த போஸ்டர்களை எங்கள் என்க்ளேவிலும், உள்ளே வெளியே சாலைகளிலும் மரங்களில் கட்டினோம். கூடவே பக்கத்தில் இருக்கும் சூப்பர்மார்கெட்டிலும் போய் தகவல் பலகையில் போஸ்டரை பின் செய்தோம்.
எப்படியும் கோபி தானாக வந்து விடும் என்று ரமா சொன்னாள். அடுத்த நாள் யாரோ கோபியை எங்கள் என்க்ளேவுக்குள்ளேயே பார்த்ததாக தகவல் வந்தது. நாங்கள் எல்லோரும் உடனே அவசரம் அவசரமாக குல்லாய், கோட்டு கையுறை என்று அணிந்து கொண்டு தகவல் கொடுத்தவரைப் பார்க்கச் சென்றோம்.
அவர் ஒரு வயதான வெள்ளை அமெரிக்கர். அவரும் அவருடைய மனைவியும் மாலை வேளையில் போர்ச்சில் உட்கார்ந்து கொண்டிருந்தபோது கோபி இன்னொரு பூனையை பின் தொடர்ந்து கொண்டு போனதாகச் சொன்னார். பார்த்தால் ‘டேட்டிங்” மாதிரி இருந்தது என்றார் சிரித்துக் கொண்டே. அவர் தோட்டத்தில் எங்களை அழைத்துச் சென்று ஒரு இடத்தை காண்பித்து, இங்கேதான் கோபி அந்த இன்னொரு பூனையை துரத்திக் கொண்டிருந்தது என்றார்.
சற்று நேரம் அங்கேயே நின்று சுற்றிலும் பார்த்தோம். அதிகம் செடிகள் இல்லை. குச்சி குச்சியாக இலைகள் இல்லாமல் இருந்தன.
ரமா “ சுமி, நீ கோபிய கூப்பிடு. “ என்றாள். அதற்குள் நான் உரத்து “கோபி, கோபி” என்று குரல் கொடுத்தேன். வரவில்லை. ரமா “ உங்களைக் கூப்பிடச் சொன்னேனா, நீங்க சும்மா இருங்க, நீங்க கூப்பிட்டா வராது.” என்றாள். சற்று நேரம் காத்திருந்து பிறகு நாங்கள் அந்த வீட்டுக்காரரிடம் நன்றி சொல்லி கிளம்பினோம். அக்கம்பக்கத்து சாலைகளிலும் சற்று நடந்து சுமி கோபியை அழைத்தாள். ஒன்றும் பயனில்லை.
இரவு உணவின்போது கோபியை பற்றிதான் பேச்சு. சுமி அது எப்படி விளையாடும், பாசமாக காலைச் சுற்றி வந்து கூப்பிடும், எப்படி முகத்தை தேய்த்துக் கொள்ளும், என்று நிறைய சொன்னாள்.
“அப்படிப் பழகினதுதான் உனக்கு இன்னொரு ஜீவனோட உறவு அப்படின்னா என்னன்னு புரிஞ்சிதாக்கும். “
“போம்மா, நீங்க எல்லாரும் இல்லையா ?”
“ இருக்கறதுனாலதான் இவ்வளவு வருஷம் கழிச்சு பார்க்கறோம்.”
பேச்சு அப்படியே நின்றது.
மறு நாள் சுமி கோபியைப் பற்றி இன்னும் நிறைய கதைகள் சொன்னாள். ஒரு நாள் அது ஒரு எலியை அடித்து, பாதிக் குற்றுயிராக வீட்டுக்குள் கொண்டு வந்து சுமி அருகில் போட்டு விட்டதாம். அவள் முகத்தை பார்த்து பெருமிதமாக வேறு விதமாக சத்தம் போட்டதாம்.
ரமா “ அது உன்னுடைய பூனை உனக்கு பரிசு கொண்டு வந்து தந்திருக்கிறது. நம்ம கிட்ட அன்பு அதிகமானால் பரிசு தரும். “ என்றாள்.
“பரிசா ? நான் கூட கோபி என்ன சொல்ல வரான்னு புரியாம, அவனை திட்டி, வெளிய துரத்தினேன். பிறகு கார்பெட் சுத்தம் செய்ய அரை நாள் ஆச்சு. “
“திட்டக் கூடாது, அதுதான் அதுகள் அன்பு காட்டும் வழி. நிதானமா இப்படிச் செய்யக் கூடாதுன்னு சொன்னா புரிஞ்சுக்கும். “
“சொன்ன புரியுமா ?” என்றேன்.
“ நல்லாவே புரியும். ஒரு தடவ, கவுச்சில கால் நகத்தை வெச்சு பிராண்டி கிழிச்சுட்டான், நான் நல்லா திட்டி அடி குடுத்தேன், பிறகு அப்படி செய்யல.”
“ அய்யோ பாவம், அதுங்களுக்கு கால் நகத்த அப்பப்ப கூர்மையா வெச்சுக்க அந்த மாதிரி செய்யும். அதுக்காகவே ஒரு மர போர்டு வெக்கணும். “
“எனக்கு தெரியாம போயிடுச்சே, அந்த மாதிரி நான் கவனிச்சுக்கலன்னு கோவிச்சுக்கிட்டு போயிட்டானா ?” என்றாள் சுமி.
“என்னது நம்ம கிட்ட கோவிச்சுக்குமா ? நாம தானே அதுக்கு சாப்பாடு எல்லாம் குடுக்குறது? “ என்றேன்.
ரமா “ சாப்பாடு போட்டால் மட்டும் போதுமா ? நாய்தான் அந்த மாதிரி நெனெச்சுக்கிட்டு மரியாதையா இருக்கும். பூனை அப்படி இல்லை. அது தான்தான் எஜமானன், நம்ம மேல கருணை கொண்டு நம்ம வீட்டுல வந்து இருக்கறதா நெனச்சுக்கும். அதனால அது தன் இஷ்டத்துக்குதான் என்ன வேணுமானலும் செய்யும். “ என்றாள்.
“ அது எப்படி பூனைக்கு இவ்வளவு உணர்ச்சிகள் உண்டா! “ என்றேன்.
ரமா “ பூனைகளுக்கு நம்மை மாதிரி நுட்பமாக உணர்ச்சிகள் உண்டு, உதாரணமா கோபம் மட்டும் இல்லை, அதுங்களுக்கு சீற்றம், வருத்தம், எரிச்சல்,சிணுக்கம், பிணக்கம் அப்படின்னு நிறைய வகை உண்டு.”
சுமி “ ஆமாம், காணாம போவதற்கு முன்னாடி ஒரு வாரம் கோபிக்கு மூடு சரி இல்ல, கிட்ட போனாலே ஒரு மாதிரி உர்ருனு இருந்தான். “
ரமா திடீரென்று “ பூனைகளுக்கு பொறாமை கூட உண்டு. “ என்றாள்.
“பொறாமையா, எதைப் பார்த்து பூனைக்கு பொறாமை ?” என்றேன்.
“ எங்க வீட்டுல யாராவது குழந்தைங்க வந்தா , நாங்க யாரும் குழந்தையை எடுத்து கொஞ்சினால், பூனைக்கு கோபம் வந்து விடும் , உடனே கிட்ட வந்து தன்னையும் எடுத்துக்கச் சொல்லும், கோச்சுக்கிட்டு வீட்டை விட்டு போயிடும். “
“ இங்க ஏதாவது குழந்தை வந்துச்சா ?” என்றேன்.
சுமி பதில் சொல்லாமல் எழுந்து ஜன்னல் அருகே போய் நின்று கொண்டு வெளியே வானத்தைப் பார்த்தாள்.
ரமா தொடர்ந்து “ கோபி ஆண் பூனைதானே ? “ என்றாள்.
சுமி “ ஆமாம், ஏன் கேட்கிற ? “
“இல்ல சும்மாதான் கேட்டேன், என்ன வயசு இருக்கும் ?” என்றாள் ரமா.
“ ஏழு எட்டு மாதம் மாசம் இருக்கும், நான் வீட்டுக்கு எடுத்து வந்த போது இரண்டு மாசம் இருந்திருக்கும். “
“இந்த வயசுதான் அதுங்களுக்கு மனுஷங்களுக்கு டீன் ஏஜ் மாதிரி. “
“ அதனால, நீ என்ன சொல்ல வர ? “ என்று சுமி சொல்லி என்று முடிப்பதற்குள் அவள் குரல் சற்று தேய்ந்தது.
அடுத்த நாள் மறுபடியும் அக்கம் பக்கத்தில் நடந்து கோபியைத் தேடினோம். ரமா சுமிதான் கூப்பிட வேண்டும் என்று சொன்னாள். நாங்கள் சுற்றி விட்டு வீட்டுக்கு வந்த போது ஜன்னல் அருகே புதரில் ஏதோ ஒளிந்து இருந்த மாதிரி தோன்றியது. ஆனால் அருகே செல்வதற்குள் ஓடி விட்டது. அது பூனையா என்று கூட சரியாக பார்க்க முடியவில்லை. சுமி அங்கே வேறு சில பிராணிகளும் உண்டு, இரவில் வரும் என்றாள்.
“ஓரு வேளை கோபி இங்கதான் பக்கத்துல இருந்துக்கிட்டு சாப்பாடு தேடி வருதோ என்னவோ “ என்றேன்.
சுமி திடீரென்று துள்ளி எழுந்து, “ராத்திரி வந்தா கண்டுபிடிச்சிரலாம்.” என்று லாப்டாப்பை எடுத்து வந்தாள். அதில் வீட்டு வாசலில் இருக்கும் செக்யூரிடி காமிராவின் வீடியோ பதிவுகளைக் காண்பித்தாள். அந்த வீடியோவை டீ வியில் போட்டு பெரிதாகப் பார்த்தோம். முதலில் ஒன்றும் இல்லை. சுமி தான் பொறுமையாக தேடினாள். முதல் நாள் இரவில் காலை மூன்று மணிக்கு நிழல் போல ஏதோ தெரிந்தது. அருகில் வந்தது பூனை தான்.
சுமி “ அப்பா, கோபிக்கு ஒண்ணும் ஆகல, வழி தவறிப் போகல, நம்ம வீட்டையும் மறக்கல. “ என்றாள்.
அன்று இரவு வாசலில் கோபிக்கு உணவும் தண்ணீரும் வைத்தோம். இரவு பனிரெண்டு மணி வரை விளக்குகளை அணைத்து விட்டு காமிராவில் பார்த்துக் கொண்டிருந்தோம். பிறகு உறங்கி விட்டோம். காலையில் எழுந்து பார்த்தால், உணவு காலி, தண்ணீரும் குடித்திருந்தது. வீடியோவைப் பார்த்ததில் விடியற் காலையில் மறுபடியும் கோபி வந்து சென்றிருப்பது தெரிந்தது.
அன்றைக்கு மறுபடியும் கோபியைத் தேடி வீட்டுக்குப் பக்கத்திலேயே அலைந்தோம். ரமா சுமியையே அழைக்கச் சொன்னாள். கிடைக்கவில்லை. இரவு கோபிக்கு உணவும் தண்ணீரும் எடுத்து வாசலில் வைத்தோம்.
ரமா “ சுமி, இன்னைக்கு உன்னுடைய படுக்கை அறையில ஜன்னல் எல்லாம் திரை போடாமல் திறந்து வெச்சுட்டுத் தூங்கு. “ என்றாள்.
“சே, அதெல்லாம் முடியாது, இங்க வீட்டுக்கெல்லாம் காம்பவுண்டு கூட இல்லை, கண்ணாடி ஜன்னல், வெளியிலிருந்து பார்த்தால் தெரியும். ”
“ சரி, அப்படியானா திரைச்சீலைய ஒரு பக்கமாவது கொஞ்சம் திறந்து வை.”
“ஏன், ராத்திரி கோபி வந்து ஜன்னல் வழியா பார்க்குமா ?”
“ நான் சொல்லுறபடி செய். “ என்றாள் ரமா.
மறு நாள் காலை பூனையின் குரலுக்குத்தான் எழுந்தோம். வாசலிலேயே கோபி காத்திருந்தது. சுமி ஓடிச் சென்று கதவைத் திறந்தவுடன் அவள் மேல் பாய்ந்து ஏறி முகத்தோடு தன் முகத்தை தேய்த்துக் கொண்டது. கீழே விட்டால் சுமியின் காலைச் சுற்றி வாலை செங்குத்தாக தூக்கிக் கொண்டு உரசியது. சுமி கோபியை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு நிறைய பேசினாள்
“ எங்கடா போயிட்ட ? உனக்கு பயமா இருக்கலயா ? சாப்பாட்டுக்கு என்ன செஞ்ச ?” என்று நிறையக் கேட்டாள்.
கோபியும் ஏதோ பதில் சொல்லுவது போல குரல் கொடுத்தது. அன்றைக்கு முழுவதும் சுமியும் கோபியும் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தார்கள்.
ராத்திரி ஆன போது கோபி சுமியுடன் அவளுடைய படுக்கையில்தான் தூங்குவேன் என்று அடம் பிடித்தது.
“இது என்ன புதுப் பழக்கம் ? எப்பவுமே தூங்க கோபிக்குன்னு தனியா கம்பளி எல்லாம் போட்டு ஒரு பெட்டி வெச்சுருக்கேன்.” என்றாள் சுமி.
ரமா என்னிடம் “ வீட்டுக்கு வந்திருந்தது குழந்தை இல்லை. “ என்றாள். எனக்கு புரியவில்லை.
இரவு படுத்துக் கொள்ளும் போது “ கதவு ஜன்னல் எல்லாம் சரியாகப் பூட்டி இருக்குதா ? மறுபடியும் கோபி ஓடிப் போயிடப் போகுது “ என்றேன்.
“ இல்ல, இப்ப ஓடிப் போகாது. “ என்றாள் ரமா.
அன்று இரவு நான் நிம்மதியாகத் தூங்கினேன். ரமா மட்டும் சரியாக தூங்கவில்லை, புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள்.
காலையில் எழுந்தவுடன் “ வட இந்தியனாக இருந்தாலும் பரவா இல்லை, ஜாதகம் எல்லாம் பார்க்க வேண்டாம், சுமிக்கு பிடிச்சிருந்தா சீக்கிரமே கல்யாணம் செஞ்சுடலாம். “ என்றாள்.
தருணாதித்தன்
தருணாதித்தன் என்ற புனை பெயரில் எழுதும் ஸ்ரீ கிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. பெங்களூரில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானியாகவும், பின்னாளில் பன்னாட்டு நிறுவனத்தில் வாகன மென்பொருள் துறையில் பணியாற்றினார். தருணாதித்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பு “ மாயக்குல்” எழுத்து பிரசுரத்தால் ( ஸீரோ டிகிரி) இப்போது வெளியிடப் பட்டிருக்கிறது.
Story with snippets of at least three generations. Reading the Hindu is so 70/80s. Visiting US for no purpose is 50s and of course the pet cat gen ! As usual the expected last para punch did not disappoint.
மிக அற்புதமான கதை.. வாழ்த்துக்கள் ஸ்ரீ க்ருஷ்ணன்
Tharunadhithan(Srikrishnan),
Nice story with sweet ending. Liked it very much for the story telling and details of lifestyle and life in US of a present generation younster . Also interesting to know a cats behaviour and the efforts to bring Gopi and the reason of Gopi’s leaving and coming back was sweet and cute.😀
பூனை க்கும் பொறாமை வருமா அவ்வ். நல்ல கதை..
அமெரிக்கா ஆத்துல எப்படி போரடிக்கும் என்று சொல்லி மாமக்கள் மாமிய விட மண்டு என்று சொல்லாமல் சொல்லி அடிகோடிட்டு காட்டியதற்கு கண்டனம். ஆனால் அவங்க பொண்ணு ஒரு பையனதான் தேர்ந்து எடுத்து இருப்பது சந்தோஷம்..
Superb. Meticulous in defining the thought process. Best wishes. I wish that you should not have told us that Gopi is a cat, till they land in US. Thanks.
Very nice Krishnan story telling is good in simple language liked it the most
Enjoyed the story! Cat psychology well explained….Can’t wait for the next
Last para punch lovely! Congrats Srikrishnan.
Your last US trip was not in vain!!
பூனையை மையமாக வைத்து ஒரு அருமையான,யதார்த்தமான கதை. படிக்க,படிக்க சுவாரசியம்.
மேலும், மேலும் எழுதுக!
சோபனா ஸ்ரீராம்
Very nice story Tharunadityan.
Fantastic narrative style that transports the reader to the location instantly.
I am able to perfectly understand the Cat’s behaviour having read the book “Living with a Lama” supposedly narrated by the Lama, Lobsang Rampa’s pet cat and written by him.
The motherly intuition that Rama exhibits in suggesting an immediate marriage for her daughter at the end of the story is superbly subtle.
Nice work and looking forward to more👏🏻👏🏻👍🏻
ஒரு பூனையை மையமாக வைத்துக் கொண்டு என்ன ஒரு அருமையான கதையை கிருஷ்ணன் நீங்கள் எழுதி இருக்கிறீர்கள் அருமை ,அருமையிலும் அருமை ஒவ்வொரு கதாபாத்திரத்தின்உணர்ச்சிகளையும் வெகு நன்றாக விவரித்து இருக்கிறீர்கள் அந்த தாயாரின் உணர்ச்சிகளை என்னால் நன்கு உணர முடிகிறது கடைசி முடிவும் மிகவும் நன்றாக இருக்கிறது கச்சிதமாக முடித்திருக்கிறீர்கள் மேலும் உங்கள் கதைகளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்
Nice story