/

எம். டி. ராமநாதனின் விளம்ப காலம் : ஷங்கர்ராமசுப்ரமணியன்

வெறும் மூன்று பூக்கள் பூப்பதற்கு இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வைக்கும் எனது ‘டெசர்ட் ரோஸ்’ செடி அந்தக் காத்திருப்புக்கு முழுவதும் தகுதிகொண்டது. செவ்வரளியின் சாயலையொத்த பூதான் டெசர்ட் ரோஸ். என்றாலும் அதன் இளஞ்சிவப்பு, விளிம்பில் இழையாய் இருக்கும் ரத்தச்சிவப்பு, வெளிக்கோடுகள் துல்லியப்படாது வெளியோடு உருமயங்கும் தன்மை ஆகிய அம்சங்கள் டெசர்ட் ரோஸ்க்கு கூடுதல் வசீகரத்தைத் தருவதாக உள்ளது. சுற்றுக்கோடுகள் (contour) கூர்மையாகத் துடிக்காமல் வெளியோடு கோடுகள் மயங்கும் கூழாங்கல்லைப் போன்ற கலையில் கூடுதலாக அடைக்கலத்தை உணர்கிறேன். 

செய்நேர்த்தி, உள்ளடக்கம், கருத்து, மொழி, வடிவம் ஆகியவற்றின் கோடுகள் மங்கி மிருதுவாகி மயங்கும் ஒரு பாழ் வசீகர அனுபவத்தை தன் சிறுகதைகளின் வழியாகத் தந்ததனாலேயே, இன்றைக்கும் நம் மொழியின் அழியாத நினைவாக மௌனி இருக்கிறார். 

காலஞ்சென்ற கர்நாடக இசைக் கலைஞர்களில் மேதையென்று அறியப்படுபவரான எம். டி. ராமநாதன் பாடிய ‘மோக்ஷமு கலதா’ என்ற தியாகையர் இயற்றிய தெலுங்கு கீர்த்தனையைக் கேட்கும்போது, ஒரு வார்த்தைகூட புரியாவிட்டாலும், அந்தகாரத் தனிமையின் இருட்டிலிருந்து பிரார்த்தனை போல இரைஞ்சும் ஒருவனின் ரகசிய அழுகையை அடையாளம் காணமுடிகிறது.

விளம்ப காலம் என்றழைக்கப்படும் நிதான ஸ்திதியில், பாதாள சுருதி என்று கேலிசெய்யப்பட்ட தணிந்த ஸ்தாயியில், நின்று நிலைத்து அதையே தனது ஆளுமையின் அடையாளமாக்கிய எம். டி. ராமநாதனின் வாழ்க்கை வரலாற்றுப் பின்னணியில் மலையாளத்தில் பி. ரவிகுமாரால் எழுதப்பட்ட ‘எம். டி. ராமநாதன்’ என்ற நெடுங்கவிதை கொடுப்பது, நாம் முற்றாக இந்த நூற்றாண்டில் தொலைத்த ‘நிதான காலம்’ கொடுக்கும் இருட்டும், வெளிச்சமும் கோடுகள் அழிந்து மறையும் அனுபவம்தான். 

நசிகேதன், எம்.டி. ராமநாதன் என்ற இரண்டு நீள்கவிதைகளை மட்டுமே எழுதிய பி. ரவிகுமார் அபூர்வமான கவிஞர் என்கிறார் சுகுமாரன். நசிகேதனை சுகுமாரன் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

தமிழின் படைப்புமேதைகளில் ஒருவரும் திருவனந்தபுரத்தில் வாழ்ந்து மறைந்தவருமான நகுலனால் தாக்கம் பெற்றவர் ரவிகுமார் என்பது எம்.டி. ராமநாதன் என்ற இந்த நீள்கவிதையின் வாசிப்பனுபவத்தில் துலக்கமாகத் தெரிகிறது. படிமம், அலங்காரம் ஏதுமற்ற சாதாரண உரைநடை மொழியில் சுரீர் அனுபவத்தைத் தரவல்ல நகுலனின் சாயல்களை ‘எம். டி. ராமநாதன்’ நீள்கவிதையில் ஒருவர் கனமாக உணரமுடியும்.

இருளின் வேறு வேறு சாயல்களை எம். டி. ராமநாதனின் வாழ்க்கை சரிதத்திலிருந்து படைத்திருக்கும் பி. ரவிகுமாரின் நெடுங்கவிதை, எம்.டி.ராமநாதனின் குருவாக இருந்து, உடலும் உள்ளமுமாக கலந்தவருமான டைகர் வரதாச்சாரியின் இறுதி நிமிடங்களில் தொடங்குகிறது. வெளியிலுள்ள காட்சிகள் மங்கி உள்ளே எல்லாம் தெளிவாக வரதாச்சாரிக்குத் தெரிவதாகச்சொல்கிறார். 

மாணவன் ராமநாதன் அவர் கையைப் பிடித்து ‘எது வந்தாலும் எது போனாலும் உன்னை நான் விடமாட்டேன்’ என்று பாடும்போது வரதாச்சாரியின் கைகள் குளிரத்தொடங்குகின்றன.   

வரதாச்சாரியாருக்கும் எம். டி. ராமநாதனுக்குமான ஆசிரிய – மாணவ உறவு கடவுளுக்கும் பக்தனுக்குமான உறவைப்போலத் தோன்றுகிறது. பக்தனுக்குக் கடவுள் தேவையாக இருப்பதைவிட, கடவுளுக்கு கூடுதலாக பக்தன் பற்றுக்கோடாக இருக்கிறான். ஒருகட்டத்தில் கடவுளும் பக்தனும் வெளிக்கோடுகள் மயங்கி முயங்கும் அனுபவமும் சாத்தியமாகிறது. நாயகி பாவத்தை வைத்திருந்த எம். டி. ராமநாதனை, இறந்தபின்னும் கிருஷ்ணனாக குரு வரதாச்சாரியார் தொடர்ந்திருக்கிறார். 

பி. ரவிகுமாரின் இந்த நெடுங்கவிதை வழியாக அடையாறும் ஆலமரமும் அதன் மாலைவேளையும் அழியாத பண்பை அடைந்துள்ளன. நாரணோ ஜெயராமனின் புதுக்கவிதை வழியாக ‘அடையாற்றுப் பறவையாக’ நிலைபெற்ற ஜே. கிருஷ்ணமூர்த்தியும் அடையாறோடும் ஆலமரத்தோடும் நமக்கு ஞாபகத்துக்கு வருகிறார். 

அடையாறு, கிராமமாக இருந்த காலத்தில் இளைஞன் ராமநாதனைத் தேடி தந்தையார் தேவேச பாகவதர் கையில் ராந்தல் விளக்குடன் வரதாச்சாரியின் இடத்துக்கு வருகிறார். வரதாச்சாரியின் பாடலில் ராமநாதன் இல்லாமல் போகிறான். 

மிகவும் அபூர்வமான கணம் ஒன்றை பி. ரவிகுமார் படம்பிடிக்கிறார்.  குரு வரதாச்சாரியாரின் மாறுகண், ராமநாதனுக்கும் ஒரு தருணத்தில் வந்துவிடுகிறது. வரதாச்சாரியார் சொல்கிறார். ‘என் பாட்டைத் திருடறான்/என் உள்ளத்தைத் திருடறான்/என்னையே திருடறான்’ என்கிறார். 

குரு – ஆசிரியர், தாய் – மகன், தாம்பத்யம், நட்பு, காதல், பக்தி என ஏற்படும் உறவுகளின் அதீத நிலையான, பிரேமையில் உடல் லட்சணமே பரிமாறப்படும் அபூர்வகணம் அது. ‘வரத தாசன்’ என்றே அவர் கையெழுத்தை இட்டிருக்கிறார்.

ராமநாதனின் அந்தப் பிரேமையின் கண்ணீரில் வரதாச்சாரியார் இறந்தபின்னரும் நனைந்துகொண்டே இருக்கிறார். 

ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கையில் நடப்பதைப் போன்ற ஒரு அபூர்வ கணத்தையும் பி. ரவிகுமார் ஒரு கவிதையில் சேமித்துள்ளார். 

அப்போதும் வரதாச்சாரியாரின் வீட்டைச் சுற்றி இருள் சூழ்ந்திருக்கிறது. வரதாச்சாரி பைரவியில் உருகிக்கொண்டிருக்கிறார்.

ரிஷப

காந்தார

மத்தியம

நிஷாதங்கள்

கனல்கின்றன!

இடமும் காலமும் 

பெருந்துயரில்

உறைகின்றன.

ஆலாபனை நின்றுவிட்டது

இடமும் காலமும்

தோன்றின.

மூடிய வீட்டின் கதவு திறக்கிறது. மங்கிய வெளிச்சத்தில் வரதாச்சாரி அம்மணமாக நிற்கிறார். ராமகிருஷ்ண பரமஹம்சர் இரவுகளில் தனது பூஜை அறையில் நிஷ்டையில் அம்மணமாக நின்று ஆடுவதைப் பார்த்த அவரது சீடர்கள் சொன்ன அனுபவம் ஞாபகத்துக்கு வருகிறது. 

இன்னொரு கவிதையிலும் அந்த இருள் தொடர்கிறது. ராமநாதனே கண்ட பயங்கரக் காட்சியாக அது சொல்லப்படுகிறது. 

வரதாச்சாரிக்கு இசை உச்சபட்ச இன்பமாகவும் அதேவேளையில் தாங்கமுடியாத வலியாகவும் அனுபவமாகவும் ஆகும் காட்சி அது. யாருமே இல்லாத அறைக்குள் வரதாச்சாரி காதை இடதுகையால் வட்டம்பிடித்து எதையோ கேட்பதைப் போல  முகத்தை ஆட்டிக்கொண்டிருக்கிறார். முகம்கோண வலிப்பு வந்ததுபோல நெஞ்சைப் பிடித்துப் புரள்கிறார். மாணவன் ராமநாதன் என்ன ஆச்சு என்று பதறிக் கையைப் பிடிக்கிறான். வரதாச்சாரி சொல்கிறார்: 

என்ன குழந்தாய் 

பயந்துவிட்டாயா

நான் 

மன்னார்குடி சின்னப்பக்கிரிப் பிள்ளையோட

நாதஸ்வரம்

கேட்டிட்டிருந்தேன்.

என்கிறார். 

வரதாச்சாரி விதூர காலத்திலிருந்து மன்னார்குடி சின்னப்பக்கிரிப் பிள்ளையின் நாகசுரம் கேட்டுக்கொண்டிருந்தார். கீரவாணி கொடுத்த வலியில், ஆத்மவேதனையில் புரண்டுகொண்டிருந்தார். 

உடல் புணர்ச்சியில் கிடைக்கும் திளைப்புக்கு கொஞ்சம்போல இணைசொல்லக்கூடிய அனுபவத்தைத் தரும் இசை கொடுப்பது மகிழ்ச்சியா? வலியா? உடல் புணர்ச்சி தரும் அனுபவத்தை நாம் இன்பம் என்று உரைத்தாலும் வலி தொடர்பில்லாத புணர்ச்சி என்பது உண்டா?வலியையும் சேர்த்து இன்பமென்று நமக்கு உரைக்கப்பட்டிருக்கிறது, போல. 

“சந்தோஷத்தை மெய்யாக உணரவே இயலாது. ஏனெனில் அந்த சந்தோஷத்தை நம் உடலால் தாங்க முடியாது, செத்துவிடுவோம்” என்கிறான் மிஷேல் பூக்கோ. 

வலியையும் வேதனையையும் நாம் தாங்க முடியவில்லை என்கிறோம். 

ஆனால் உண்மையில் தாங்கமுடியாத வலி சாவைத் தந்துவிடுவது. 

சாவதைப் போல, சற்றே சாவைத் தீண்டித் தீண்டிச் சுகிக்கும் துய்ப்பு நிகழ்வாக  கூடல்; சற்றே தூரத்தில் அதன் அனுபவச் சாயலைக் கொண்டு இசை; உள்ளது போல.

அதனால்தான் பெரும்பாலான மதங்கள், கட்டற்ற உடல் துய்ப்பை விலக்கி ஒதுக்கினாலும், இசையை ஒதுக்கவில்லை போல. 

மதத்துக்கு மூலம் வேண்டாம்; நிழல்கள் போதும்; புதிய அனுபவம் வேண்டாம்; நினைவுகள் போதும்.

000

இது இன்னொரு இருட்டு. விடிகாலைக்கு முன்னாலான இருட்டு. எம் டி ராமநாதன் பிறந்த கேரளத்தின் மஞ்ஞப்ரா அக்ரஹாரங்கள் மீது இன்னும் சற்று நேரத்தில் நீங்கப்போகும் இருட்டு.

ராமநாதன் சிறுவனாக ஆற்றுக்குப் போகிறான். ராமநாதனுடைய நிதான காலத்தில் அது ராமநாதனுடைய ஆறாக மாற்றம் அடைகிறது.

இங்கும் நிலத்தில் ஓடும் நீரும் ஆகாயத்தின் விரிவும் மயங்கிக் கலந்து ராமநாதன் ஆற்றில் திளைத்துக் கிடக்கிறான். ‘ராமநாதன் மெதுவான காலத்தில் ஒழுகுகிறான்’ என்கிறார் ரவிகுமார். காலங்கள் மயங்குகின்றன. இடம் மயங்குகிறது. 

மலின ஜென்மங்களிலிருந்து

விடுதலையில்லாமல்

காலத்தின் 

காணமுடியாத கிளைகளிலிருந்து

கருங்காகங்கள் 

பறந்திறங்குகின்றன.

எல்லாம் மயங்கிக் கிடக்கின்றன.

காலை தாண்டி, மதியவேளை தாண்டி, துயரத்தால் வாடும் மாலை நேரத்துக்குள் ராமநாதன் தன் ‘மெதுவான காலத்தில்’ நடக்கிறான். 

தனிமையிலிருந்து பொதுமையை, அநித்யத்திலிருந்து நித்தியத்தை,காலத்திலிருந்து காலாதீதத்தை, மனுஷத்துவத்திலிருந்து தெய்வீகத்தை, சாதாரணத்திலிருந்து மேன்மையை இப்படித்தான் இசை துள்ளித் துள்ளிக் கொத்தத் துடிக்கிறது போல. 

மெதுவான காலத்தில் நீளும் இரவு ராமநாதனின் கையெழுத்தையுடையது.

இசையும் அது தரும் பறத்தல் அனுபவமும் அதனாலேயே க்ஷணநேரங்களில் உணரும் துடிப்பாக அந்தரத்திலேயே உறைந்திருக்கிறது. 

ஜன்னல்களுடைய

மறையைத் தாண்டி

அந்த ஸ்வரங்கள்

அரச மரத்து இலைகளில்

கல்பாத்தியாற்றில்

சுடுகாட்டில்

காலங்களைத் தாண்டி

ஒழுகிக் கொண்டிருந்தன. 

000

பி. ரவிகுமாரின் கற்பனை உச்சமாக சஞ்சரிக்கும் கவிதையாக திருவனந்தபுரம் நவராத்திரி மண்டபத்தில் ராமநாதன் பாடும்  நிகழ்வைப் பற்றி எழுதப்பட்டது உள்ளது. பி. ரவிகுமார் எம். டி. ராமநாதன் வழியாகக் கடத்த விரும்பிய அனுபவத்தின் உச்சம் இதில் நிகழ்கிறது.

எம். டி. ராமநாதனின் மாயாமாளவ கௌளை, நவராத்திரி மண்டபத்தின் மரச்சட்டங்களை பாவங்களைச் சமன் செய்யும் நாதமாய், பச்சிலைகளைத் தெருவில் மேய்ந்துகொண்டிருக்கும் ஆடு ஒன்றை ஆட்கொள்கிறது. ஆடு, தன்னை மறந்து பத்மநாபஸ்வாமி கோவிலின் கல்படிகளில் ஏறுகிறது. நாதத்தில் அசைவற்று அங்கே படுத்துக்கொள்கிறது.

ஜன்மங்களாக சேர்த்துவைத்த பாவங்கள் அனைத்தும் அழிவதற்கு ராமநாதன் வேண்டிப் பாடுகிறார். ஆட்டின் நினைவில் காலத்தின் நினைவின் படிவங்கள் இற்று விழுகின்றன. பஞ்சபூதங்களின் கடம் உடைய, பாட்டு முடிகிறது. ஆடு சமாதியிலிருந்து விழித்து திரும்பத் தெருவில் இறங்கி மறைகிறது.

இந்த ஆடு யார்? 

இருட்டிலிருக்கும் நமது அபோதமா?நமது அஞ்ஞானமா? நமது மௌடீகமா? நமது தாமசமா? 

இருட்டுக்குள் தனது நிதானக் குரலால் ஒளியேற்ற முயலும் ராமநாதனின் வெளிச்சம் ஆட்டின் இதயத்தில் மூளையில் பிரக்ஞையில் ஆன்மாவில் நிறைந்து உண்மையின் தீவிர ஒளியில் லயிக்கிறது. க்ஷண வெளிச்சம்தான்.

ஆடு திரும்ப திருவனந்தபுரத்தின் கடைவீதியில் இறங்கிவிட்டிருக்கும்.

ராமநாதன்

பாடிக்கொண்டே இருந்தார்.

காலத்தின் பாதையில்

பின்னோக்கி நடந்துகொண்டே இருந்தார்.

நாத ரஹஸ்யத்தைத்தேடி

ஆதிமௌனத்தைத் தேடி.

பி. ரவிகுமார் எழுதிய எம். டி. ராமநாதன் நெடுங்கவிதை தரும் அனுபவம்,  நமது பிறப்புக்கு முன்னால், நமது சாவுக்கு அப்பால் உள்ள அனாதி இருட்டைக் காட்டமுயலும் அனுபவம். 

சென்ற நூற்றாண்டின் வேறு வேறு காலப்பகுதிகளில், சென்னை அடையாறு, கேரள அக்கிரஹாரம், மும்பை என வேறுவேறு இடங்கள், ஆளுமைகளின் தனி நினைவுகளாக, தனி இருட்டுகளாகத் தெரிந்தாலும் அதில் நம்மை இணைக்கும் பொது இருட்டு ஒன்றுள்ளது. அந்தப் பொது இருட்டின் வழி சுட்டப்படும் அநாதி இருட்டு ஒரேநேரத்தில் போதையாகவும் வலிநிறைந்த ஆனந்தமாகவும் மாறிவிடுகிறது.

ராமநாதனின் மரணத்துடன் இந்த நெடுங்கவிதை நிறைவடைகிறது.

மஞ்ஞப்றையிலுள்ள

அக்ரஹாரங்களும்

கிராமப் பாதைகளும்

கரும்பனைகளும்

ஆறும் 

ஆகாயமும் 

மறைகின்றன.

அடையாறின்

மாலைப்பொழுதுகளும்

அரசமரங்களும்

தேவேச பாகவதரும்

பார்வதியக்காளும்

மறைகின்றன.

…..

இசையும்

வார்த்தையும்

பொருளும்

அலங்காரமும்

மறைகின்றன.

எல்லாம் ஓய்கிறது

காலாதீதமான

அந்த நாதம் மட்டும்

எல்லையற்று

அழிவற்று

ஆனந்தமாக

நிறைகிறது.

000

குழந்தையாக இருக்கும்போதே சாரீரமே வராது என்று புறக்கணிக்கப்பட்ட ராமநாதனின் இசைவாழ்க்கை முழுமையாக அவரை விமர்சனங்கள் துரத்தியிருக்கின்றன.

“வாழ்ந்த காலத்தில் ராமநாதன் போற்றப்பட்டதைக் காட்டிலும் விமர்சிக்கப்பட்டதே அதிகம். சங்கீதத்தால் வாழ்ந்தவராக மட்டுமேயிருந்தால் ஒருவேளை அவர் இந்த விமர்சனங்களுக்குச் செவிசாய்த்திருக்கக் கூடும். சங்கீதத்துக்காக வாழ்ந்தவர். எனவே விமர்சனங்களை, சரியாகச் சொன்னால் ஏளனங்களை, அவர் ஒருபோதும் பொருட்படுத்தவில்லை. தன்னுடைய கலை என்று நம்பிய ஒன்றை அடைவதற்கான நீண்ட பயணத்திலேயே அவரது சிந்தனையும் செயலும் ஆழ்ந்திருந்தன. பழைமைப் பிசுக்கேறிய சொற்கள் என்று தவிர்க்காமல் சொல்வதானால், அவரது வாழ்க்கை நாத யோகம், அவர் நாத யோகி.” என்று  இந்த மொழிபெயர்ப்பு நூலுக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிடுகிறார் சுகுமாரன்.

1984-ம் ஆண்டு மறைந்த எம்.டி. ராமநாதனின் வாழ்க்கை சரிதத்தை அடிப்படையாக கொண்டு பி. ரவிகுமார் 2004-ல் மலையாளத்தில் எழுதிய இந்த நெடுங்கவிதை உலக அளவிலேயே உள்ளடக்கத்தையொட்டி முன்னுதாரணம் அற்றது என்கிறார் சுகுமாரன்.

தமிழ் வாழ்க்கையோடும் தமிழ் நினைவோடும் தொடர்புடைய எம். டி. ராமநாதனின் ஆளுமைச் சித்திரத்தை வாழ்க்கைச் சம்பவங்களின் வழியாக ஒரு புராணிகமாக ரவிகுமார் வெற்றிகரமாக மாற்றியுள்ளார். கர்நாடக இசையில் மேலோட்டமான பரிச்சயம் கொண்ட என்னைப் போன்ற ஒரு கவிதை வாசகனையும் ரவிகுமாரின் புனைவும் காட்சிகளும் எம் டி ராமநாதனை அழியாத நினைவாகப் பதியவைத்துவிடுகிறது. மொழி, கருத்து, செய்தியின் அர்த்தத்திலிருந்து, இசை மேலே ஏறி, அர்த்தமற்ற, பொருளற்ற ஒரு வெளிக்குள் தள்ளுவதை ‘எம். டி. ராமநாதன்’ நெடுங்கவிதை வழியாகச் சாத்தியப்படுத்தியிருக்கிறார் பி. ரவிகுமார்.

பாலசரஸ்வதியின் வாழ்க்கை சரிதத்தை வரலாற்று நூலாக எழுதிய அவரது மருமகன் டக்ளஸ் நைட்டின் நூலுக்கு(பாலசரஸ்வதி : அவர் கலையும் வாழ்வும்- க்ரியா வெளியீடு, தமிழில் : அரவிந்தன்) இணையான வரலாற்று மதிப்புள்ள கவிதை நூல் இது. 

கலாகௌமுதி இதழில் இந்த நெடுங்கவிதை ஒரு தொடராக வெளிவந்திருக்கிறது. இதற்கு ஓவியர் நம்பூதிரி வரைந்த ஓவியங்களைப் பார்த்துக்கொண்டே கவிதையைப் படிப்பது தனியான அனுபவம். டைகர் வரதாச்சாரியாரின் முகத்தில் உள்ள கரிய இருட்டு உரைப்பது அனேகம். ஓவியர் நம்பூதிரி ராமநாதனை வரைந்திருக்கும் சித்திரங்கள் பி. ரவிகுமாரின் கவிதைக்கு ஒப்பான இன்னொரு அனுபவம்.

கவிஞர் மா. தக்ஷிணாமூர்த்தியின் மொழிபெயர்ப்பில் 2019-ல் தமிழில் வந்திருக்கும் இந்த நூல் வழியாக எனக்கு எம். டி. ராமநாதன் என்னும் பாடகர் நிரந்தர பொக்கிஷமாக, எங்களது வீட்டில் பூக்கும் அபூர்வ டெஸர்ட் ரோஸாகக் கிடைத்திருக்கிறார்.

தமிழில் கவிஞர்கள், வாசகர்கள் என பேதாபேதங்களைக் கற்பனை செய்துபார்க்கும் வசதிகூட இன்றைக்கும் உருவாகவில்லை. அந்த நிலையிலும், தமிழ் வாசகச் சூழலில் ‘எம். டி. ராமநாதன்’ என்ற இந்த நெடுங்கவிதை மொழிபெயர்ப்பு மிக அழுத்தமான அனுபவத்தை ஏற்படுத்த வல்லது என்று பரிந்துரைக்கிறேன். இதை மொழிபெயர்த்த கவிஞர் மா. தக்ஷிணாமூர்த்தியின் பணி வணங்கத்தக்கது.

எம்.டி. ராமநாதன்

பி. ரவிகுமார்

தமிழில் : மா. தக்ஷிணாமூர்த்தி

காலச்சுவடு பதிப்பகம்  

ஷங்கர்ராமசுப்ரமணியன், தமிழில் எழுதிவரும் கவிஞர், விமர்சகர். ‘இகவடை பரவடை, நிழல் அம்மா, ஆயிரம் சந்தோ‌ஷ இலைகள், கல் முதலை ஆமைகள் முதலிய கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. பிறக்கும்தோறும் கவிதை, நான் பிறந்த கவிதை, நினைவின் குற்றவாளி  ஆகிய கட்டுரைத் தொகுப்புகளையும்  எழுதியுள்ளார். விக்ரமாதித்யன் கவிதைகள் ,‘அருவம் உருவம்: நகுலன் 100’ உள்ளிட்ட தொகுப்பு நூல்களின் ஆசிரியர்.

தமிழ் விக்கியில் 

3 Comments

  1. மிக அருமையான நூல். பலமுறை விரும்பி வாசித்தது. ஒவ்வொரு முறையும் வாசித்த பின் கண்ணீர் துளிர்க்காமல் இருந்ததேயில்லை. அதன் ஆன்மாவை தொட்டுக்காட்டியுள்ளது இக்கட்டுரை.

  2. சிறப்பு இசையும் கவிதையும் இணையும் தருணம் அது காலாதீதமானது

    அற்புதமான மொழியால் கட்டிப் போட்டுவிட்டீர்கள். நன்றி

  3. அருமையான எழுத்துப்பதிவு ஒரு அற்புத மாமனிதரைப் பற்றி. மனம் நிறைகிறது. மகிழ்வுறுகிறோம்

    க.வானமாமலை
    திருவனந்தபுரம்.

உரையாடலுக்கு

Your email address will not be published.