/

அதீதன் கவிதைகள்

1)மௌனத்தின் பேரிசை

காட்டுச்சேவலாய் உருமாறிய ஒருத்தி
தேவதையின் தோற்றத்தில் மற்றொருத்தி
பழுப்புநிறப் பட்டாம்பூச்சியைத் தலையில் சூடியவளோடு
கானகச் செடிகளை உடலில் போர்த்தியவளும்
நட்சத்திரங்களை ஆடையாய் மாற்றிக்கொண்டவளுடன்
புலியின் கோடுகளைக் களவாடி அணிந்தவளும்
அணிவகுத்து நின்றிட
கடைசியில் வந்தவளுக்கோ மயிலின் சாயல்

நடனம் ஆடுபவர்கள் ஒவ்வொருவராய்
பலவண்ணங்களில் அலங்கரிக்கப்பட்ட விளக்குகள் ஜொலிக்கும்
அரங்கத்திற்கு வருகின்றனர்

பார்வையாளர்களால் நிரம்பியிருந்த கூடத்தில்
மேடைக்கு வராத ஒருத்தியை
தேடியலைந்திடும்
தனித்து விடப்பட்டவனின் கண்கள்
காற்றில் மிதந்தபடி மையத்தில் வந்திறங்கிய
மஞ்சள்நிறப் பறவையொன்றின்
விழிகளைச் சந்தித்த மாத்திரத்தில்
பாடல் ஒலிக்கத்தொடங்குகிறது

அரங்கேறும் நடனத்தில் மெய்மறந்த யாவரும்
மின்மினிகளாய் ஒளிர்ந்திட
வின்னில் பறக்கத் தொடங்கிய பறவையை
கைக்கொள்ளும் பேராசையில்
அகிலத்தைத் தலைகீழாய்த் திருப்பியவனின் கால்கள்
அந்தரத்தினில் துள்ளிட
மூக்கும், அலகும், உரசிடும் தருணத்தில்
நிரம்பிப் படர்கிறது மௌனத்தின் பேரிசை.

2)மாற்றங்களின் உரு

மீண்டும் மொழிந்திட விரும்பாத
சொல்லொன்றை
அதரங்களின் வழியே ஏவியதும்
ஒன்றிலிருந்து பலவென
பிளவுண்ட அணுக்களின் வெடிப்பினைப் போன்று
சிதறிப் போனவன்
மீள்வருகையில் அமைதியின் நறுமலரினை ஏந்தி வருகிறான்
காய்ந்த சருகுகளின் மீது நடக்கையில்
கேட்டிடும் சலசலப்புகளைப் போலொரு
மெல்லிய ஒலிதான் எனினும்
யுகயுகமாய்ச் சங்கினுள் அடைபட்ட
மூச்சின் விடுபடலினை எதிரொலிக்கும் பேரோலமாய்
காதுகளுக்குள் நுழைந்து
இன்னும் கோர்க்கப்படாத சிம்ஃப்னியாய் வெளியேறுகிறது
இதழ் திறக்காமல் பேசும் குரல்
வார்த்தைகளைச் சேமிக்கத் தெரிந்த ஒருவனிடமிருந்து
கடன்பெற்று வந்தவைகளெல்லாம்
ஒவ்வொன்றாய் மரிப்பதைப் பார்த்தும்
மௌனித்திருக்கும் துறவியின் கோலம் பூண்டு
நகர்ந்திடும் காலத்தினுள்
தன்னைச் செலுத்திக் கொண்டவனின் மேனிக்கு
இடம்மாறியிருக்கின்றன ஏழுவண்ணங்கள்
ஒட்டடை படிந்த அறையினுள் நுழைகையில்
சிலந்தியாய் மாறிய பழங்கால நினைவுகளை
கனவெனக் காண்கின்றவன்
விழுங்கியவைகளை உமிழ்வதான பாவனையில்
முனுமுத்திடுகையில் சின்னஞ்சிறு பூச்சிகளாய்
வந்து விழுந்திடும் எழுத்துகளின்
வரிசையைப் பின் தொடர்ந்து செல்கையில்
தொல்கதையொன்றின் எச்சங்களைக்
கண்டடையக் கூடும்..

3) பறவையின் பெயர் கவிதை

நித்தம் நித்தம் வந்து போகிற வழியில்
பாடிக்கொண்டிருக்கும் பறவையை
நின்று பார்க்கக் கிடைத்தது
ஒரு சந்தர்ப்பம்

செவிக்குள் விழுந்திட்டு
மூளையின் அடுக்குகளை முட்டி நிற்கும்
இசையின் மேல்நோக்கிய பயணம்
மரணக்கிணற்று சர்க்கஸ்காரனின் மோட்டார் சைக்கிளாய்
நிற்காமல் சுழன்று கொண்டிருக்கிறது
ஒலிவந்த திசை நோக்கித் திரும்புகையில்
கொட்டப்பட்டிருக்கும்
சரளைக் கற்களுடனான நேசத்தின் முத்தத்தில்
பித்தேறி முன்னேற மறுக்கின்றன
செருப்பணியாத கால்கள்

உச்சிக்கிளையில் தனித்திருக்கும் அதன் கண்கள்
எங்கோ பார்த்துக்கொண்டிருக்க
குரல் மட்டும் தனக்கானதாய் உணரும்
யாரும் அதனை அடையாளம் காணக்கூடும்

வரிகளேதும் இல்லாதபோதும்
சதா இசைத்துக்கொண்டே இருக்கும்
ஸ்வரத்திற்கேற்ப வார்த்தைகளை நிரப்புகையில்
புதிதாய் பிறந்த பாடலுக்குள்
வந்தமர்கிற புள்ளுக்கு
கவிதை என்று பெயர்…

அதீதன்

மதுரையில் வசித்து வரும் அதீதன் பல்வேறு இதழ்களில் கவிதைகளும், சிறுகதைகளும் எழுதி வருகிறார். இவரது "தற்கொலைகள் அவசியமானவை" "மேதகு அதிகாரி" ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகளும், "செல்லம்மா" என்கிற நாவலும் வெளிவந்திருக்கின்றன.

உரையாடலுக்கு

Your email address will not be published.