நவீன இலக்கியத்தின் நகர்வு (பகுதி -1) : ஸ்ரீ அரவிந்தர்

ஸ்ரீ அரவிந்தர் அவர் நடத்திய ஆரிய இதழில் 15/1/1919 அன்று வெளியிட்ட ஆங்கிலக் கட்டுரையின் மொழிபெயர்ப்பு. தற்போது ‘The future poetry’ என்ற தொகுப்பு நூலில் உள்ளது. 

நவீனமயமான மனதின் முழுமையான கற்பனையின் சுய வெளிப்பாட்டை கொண்ட நவீன கவிதை, பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியையும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியையும் சேர்ந்த எழுத்தாளர்களுடன் தொடங்குகிறது. இந்த பரந்தகன்ற ஆற்றொழுக்கின் சுதந்திரமான, விசைகொண்ட, அதே நேரத்தில் குறுகலான ஊற்றுமூலங்கள் இங்கே உள்ளன. நம்மால், இக்காலகட்டத்தில் ஆரம்பகால மனப்போக்குகளை(tendencies) காண முடியும். அடுத்தடுத்த தசாப்தங்களில் அவை அர்த்தம் சார்ந்த வளர்ச்சியையும் வடிவ மாற்றங்களையும் அடைந்தன. அவற்றின் தேடுதல் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் முன்பில்லாத நுண்ணிய தீவிரத்தையும், செம்மையையும் பல்வேறுபட்ட உத்வேகங்களையும்(motives) அடைந்துள்ளது. ஏதோ ஒரு இறுதி மறை உண்மையை கண்டடைவதற்கான பதற்றத்தையும், இதுவரை கற்பனை செய்யப்படாத கூற்றைக் கண்டடைவதற்கான பதற்றத்தையும் இந்த மனப்போக்குகளில் காணமுடிகிறது. அதோடு இதுவரை கவிதை செய்த எல்லாவற்றையும் கடந்து செல்வதற்கான பதற்றத்தையும் அது அடைந்துள்ளது. 

இயல்பாகவே இம்முயற்சி தயக்கத்திலோ, மிகை நிலையிலோ, சரிவிலோ அல்லது சுய மீறலிலோ(self-exceeding) முடிய வேண்டிய ஒன்று. தொடர்ந்து ஆழமாக விரிவடையும் அறிவும், கற்பனையின் ஆர்வமும் மானுட சிந்தனையிலும் அறிவியலிலும் உள்ளது போலவே இலக்கியத்திலும் உருவெடுக்கிறது. இங்கு கண்டடைவதற்கான வேட்கை உருவாகிறது. முடிவிலாத புதிய உண்மையின் பன்முக சாத்தியக்கூறுகளை நோக்கி விரிந்த அறிவின் கண் உருவெடுக்கிறது. 

மறுமலர்ச்சி(Renaissance) என்பது ஆன்மா வியப்பிற்கும் ஆர்வத்திற்கும் சிந்தனைக்கும் விழித்தெழுந்துகொள்வதாகும்; வாழ்க்கையின், மனதின் மேற்பரப்பில் உள்ள அற்புதமானவற்றையும் சுவாரஸ்யமானவற்றையும் கண்டடைவதாகும். ஆனால் நவீனயுகத்தின் முழுமை என்பது தெளிந்த அறிவுத்திறன், பரந்துபட்ட ஆர்வத்தை நோக்கி  விழித்தெழுவதாக இருந்துள்ளது. ஆழமாக சென்று இயற்கை, மனிதன் மற்றும் பிரபஞ்சத்தின் உண்மையை அறிவதற்கும் அடைவதற்குமான மறுக்கமுடியாத தேவையாகவே இருந்துள்ளது. அந்த உண்மை என்பது அவற்றின் வெளிப்புறமான உண்மையும் அவற்றின் தோற்றத்திற்கு கீழ் ஒளிந்துள்ள புதிரும் சேர்ந்ததே. 

தற்போது, இதைக் கடந்து செல்லும் ஒன்றாக மாறும் நம்பிக்கையை அளிக்கிறது. நவீன யுகத்தை அல்லாமல் புதிய ப்யூட்டரிஸ்(futurist) யுகத்தைக் கொண்டுவரக்கூடியதாக இருக்கிறது. அதில் பகுத்தறிவுக்கும் விமர்சிக்கும் அறிவுக்கும் பதிலாக உள்ளுணர்வே வழிநடத்தும். உண்மைக்கான நீண்ட தேடல் பொருண்மையின் செயல்பாடுகளையும் மனதின் அசைவுகளையும் ஆழமாக விசாரித்துச்செல்லுதல் ஆக இருந்தது. இப்போது அது அவற்றைக் கடந்துச் செல்லத் தொடங்குகிறது; அல்லது அவற்றின் பார்வையின் தீவிரத்தினாலும் உணர்வின் தீவிரத்தினாலும் ஆன்மாவின் உண்மைகளை நோக்கிச் செல்கிறது. மறுமலர்ச்சியின் ஆன்மா(soul) என்பது வாழ்வை காதலிப்பதாகவும் அறிவில் பயிற்சி அற்றதாகவும் இருந்தது. ஆனால், நவீன ஆன்மாவுடைய இருப்பின் அவசியம் என்பது அறிவிற்காக முனைப்புடன் ஈடுபடுவது. நவீன ஆன்மா இந்த தெளிவான விசாலமான, நுட்பமான, நடைமுறை உண்மையால் ஈர்க்கப்பட்டது. நவீன யுகத்தில் கவிதை இந்த பெரும் தாக்கத்தின் வழித்தடத்தையே அறிவுபூர்வமாகவும் கற்பனாபூர்வமாகவும் பின்தொடர்ந்திருக்கிறது.

ஐரோப்பிய இலக்கியம்(Continental Literature) ஆங்கில கவிதையை விட இந்நகர்வை முழுமையாகவும் வலுவாகவும் வெளிப்படுத்துகிறது. டியூட்டோனிய(Teutonic) தேசங்களில், தொடக்கத்தில் அப்பாலைத் தத்துவத்தை(transcendental philosophy) பின்னணியாக கொண்ட ஜெர்மானியர்களின் அறிவுசார்ந்த மற்றும் கற்பனாவாத இலக்கியம்; இறுதியில், அறிவுசார்ந்த அல்லது புலன்சார்ந்த யதார்த்தவாதம் மற்றும் உணர்ச்சிபூர்வமான மறைவாதம் அல்லது உளம்சார்ந்த மறைவாதம் என்று வெளித்தோற்றத்துக்கு எதிர் எதிராக தெரியும் ஸ்கான்டினேவிய மற்றும் பெல்ஜிய எழுத்தாளர்களின் இலக்கியம்; லத்தீனியர்கள் மத்தியில் ரூசோ (Rousseau), சடோப்ரியான்(Chateaubriand), செனியர்(Chénier), ஹியூகோ(Hugo) போன்றவர்களின் இலக்கியம்; இவை ஐரோப்பிய இலக்கியத்தின் பாதையைப் பற்றியத் தெளிவானப் பார்வையை அளிக்கின்றன. 

ஆங்கில கவிதையில் இது குழப்பமாகவே உள்ளது, படைப்புகளை ஒட்டு மொத்தமாக பார்க்கையில் அவற்றின் தூண்டுதல் தெளிவற்றும் நிச்சயமற்றும் இருக்கிறது. தனிப்பட்ட கவிஞர்களின் மகத்துவம் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக கீழான செயல்திறனே இருக்கிறது. ஆனால் தொடக்கத்திலும் இறுதியிலும் அது ஒரு உச்சப் புள்ளியை கொண்டுள்ளது; அறிவுத்திறன் மற்றும் புலனுணர்வை கடந்து பார்வையை எடுத்துச் செல்லுதலே அந்த உச்சப் புள்ளி. அதி கலாபூர்வமான ஐரோப்பிய கவிதை இதை செய்யவில்லை.

இயற்கை பற்றிய மாற்றமடைந்த பார்வையை கொண்ட கண் விழிப்படைதல், கூடுதல் கச்சிதமானதும் நெருக்கமானதுமான காட்சிப்படுத்தலுக்காக(visualization) கற்பனை விழிப்படைதல், அணுக்கமான ஆன்மீக பரிமாற்றத்துக்காக ஆன்மா விழிப்படைதல் ஆகியவை முதலாவதாக தனித்துவத்தோடு எழுந்து வரும் புதிய விசைகள். இயற்கையின் விவரங்களையும் காட்சிகளையும் சப்தங்களையும் பொருட்களையும் மனப்பதிவுகளையும் கற்பனாபூர்வமாக, உன்னிப்பாக ஆராயும் வகையில், கலாபூர்வமாக, புரிந்துகொள்ளும்வகையில் பார்ப்பது என்பது நவீன கலை மற்றும் கவிதையின் பண்பியல்பு. எந்த மனப்போக்கு அறிவியலின் அவதானிக்கும் கண்ணையும் ஆராயும் கண்ணையும் அளவிடமுடியாத வளர்ச்சியை அடையச் செய்ததோ அந்த மனப்போக்கின் கவித்துமான முகம் தான் இது. 

பழைய காலகட்டத்தின் கவிதை இயற்கை மீது அரிதாகவே புறவயமான பார்வையை செலுத்தி இருக்கிறது. பேசுபொருளுக்கு பின்னணியையும் அலங்கார அமைப்பையும் வண்ணமயமான தோற்றத்தையும் அளிப்பதற்காக கவிதை, வாழ்வு அல்லது சிந்தனையிலிருந்து தனது பார்வையை சற்று விலக்கி ஓரக்கண்ணால் இயற்கையை பார்க்கிறது. கவிதை, மனித சிந்தனையை அல்லது நிகழ்கணத்தின் மனநிலையை செழிப்புறச்செய்யவே அவ்வாறு செய்கிறது; இயற்கை அழகில் கற்பனையும் புலனுணர்வும் சாதாரணமாக ஈடுபடுவதற்காகவே அவ்வாறு செய்கிறது. ஆனால் பெரும்பாலும், இயற்கையை அணுக்கமாக அகவயமாக (subjective) அணுகுவது என்பதே இல்லை அல்லது அரிதாகவும் குறுகிய அளவிலுமே உள்ளது. பேரளவில் பார்க்கையில், இயற்கையின் அகவயமான வாழ்க்கை உடனடி பரிமாற்றத்துடன்(immediate communion) உணரப்படவில்லை. மாறாக தொன்மங்கள் மூலமாகவும் தெய்வீக ஆளுமைகளின் படிமங்கள் மூலமாகவும் உணரப்பட்டுள்ளது. 

நவீன கவிதை, நமது மனநிலையில் நிகழ்ந்த பெரும் மாற்றத்திற்கும் நகர்வுக்கும் நமது கற்பனைசார் அனுபவத்தில் நிகழ்ந்த விரிவடைதலுக்கும் பிரதிநிதியாகிறது. தற்போது ஒரு கவிஞனுக்கு இயற்கை என்பது சுதந்திரமான இருப்பாகவும் தன்னை விஞ்சிய அல்லது தனக்கு ஈடான ஒரு சக்தி தன்னுடன் வாழ்வதாகவும் இருக்கிறது அல்லது தன் இருப்பை அணைத்து ஆதிக்கம் செலுத்தும் ஒன்றாக இருக்கிறது. இயற்கையைப் பற்றிய புறவயமான பார்வையும் விளக்கங்களும் கூட தற்போது மேம்பட்டுள்ளன. அது புறவயத்தன்மையைக் கடந்து செல்லும்போது நமக்கு புதிய பார்வையை கொண்டுவந்துள்ளது.  உயிரோட்டமுள்ள குறிப்புணர்த்துகிற(suggestive) காட்சி மூலம், புறவயத் தோற்றத்தில் மறைந்திருக்கும் பண்புக்கூறுகளை வெளிப்படுத்தும் கற்பனை மறுகட்டமைப்பு மூலம், ஊடுருவிச்செல்லும் மனப்பதிவு மூலம் அது புறவயம் வழியாக உள் செல்கிறது. பொருண்மையான இயற்கையை காட்சிப்படுத்தாமல், கற்பனாபூர்வ பார்வையின் வழியாக மீளுருவாக்கம் செய்கிறது1. இந்த உருவாக்கத்தின் மூலம் இயற்கையின் அக உண்மைக்கு மிக அருகில் செல்கிறது.

நவீன மனநிலையின் குறிப்பிடத்தக்க திருப்புமுனை என்பது இயற்கையை நேரடியாக அகவயமாக அணுகுதல் ஆகும். இந்த அணுகுமுறை இரண்டு பக்கங்களிலிருந்து வருகிறது, அவை தொடர்ந்து ஒன்றை ஒன்று சந்தித்துக்கொள்கின்றன; மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையில் அனுபவ பிணைப்பை உருவாக்குகின்றன. இதுவே உலகளாவிய ஆன்மாவுக்கு எதிர்வினையாற்றும் நவீன வழிமுறை. ஒரு பக்கத்தில், இயற்கையை அதன் மனப்பதிவுகள் மனநிலைகள்  உணர்ச்சிகள் ஆகியவற்றை பல குறியீடுகளில் வெளிப்படுத்தக்கூடிய ஒரு பேருயிராக, இருப்பாக, சான்னித்யமாக(Presence) கொள்ளும் அகவயமான உணர்வு; இது இயற்கையின் புறவய வெளிப்பாடுகளில் கவனம் செலுத்தக்கூடியது. மற்றொரு பக்கத்தில் நுட்பமான மனித எதிர்வினை உள்ளது; அது தனிப்பட்ட மனித ஆளுமையின் ஆன்மாவையும் மனதையும் உணர்வுபூர்வமான இருப்பையும் கண்ணுக்கு புலப்படுகிற உணரப்படக்கூடிய பிரபஞ்சத்தின் ஆன்மாவுடனும் மனதுடனும் வாழ்வுடனும் உடலுடனும் தொடர்புறுத்துவதற்கும் ஒத்திசையவைப்பதற்குமான முயற்சி. சாதாரணமாக கற்பனை, அறிவுத்திறன் மற்றும் புலன் உணர்வு மூலமாக இந்த அணுகுமுறை உருவாக்கப்படுகிறது. ஆனால் இந்த கருவிகளின் மூலம் நெருக்கமான ஆன்மீக தொடர்பை அடைவதற்கான முயற்சியும் நடக்கிறது. அதில், மனித ஆன்மாவால்(Spirit) இயற்கையை அணைக்கும்(embrace) முயற்சி இல்லை, ஆயினும் இயற்கையில் உள்ள ஆன்மீக சான்னித்தியதுடன்(Presence) மனிதனின் ஆன்மீக ஆன்மாவை(soul) ஒத்திசையவைப்பதற்கான ஒன்றிணைப்பதற்கான முயற்சி இருக்கிறது.

மனிதனை, தன்னைப் பற்றியும் இந்த கால இட ஊடுபாவுகளில் உள்ள மனிதனைப் பற்றியும் அவனது நிகழ்காலம் கடந்த காலம் எதிர்காலம் என்று சொல்லப்படுவை பற்றியும் விழிப்படையச் செய்வதை நவீன கவிதை உலகளவில் தொடர்ந்து வலியுறுத்துகிறது; அது அனுபவத்தின் மற்றொரு விரிவடைதல். மனித இனத்தின் தோற்றுவாய், பழமை, வரலாறு, தற்போதைய வளர்ச்சி, அதன் பொருண்மையான இருப்பு, உளவியல்ரீதியான இருப்பு, சமூகவியல் இருப்பு, அதன் எதிர்காலத்தைப் பற்றிய இலட்சிய ஊகங்கள் மற்றும் நடைமுறை எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை ஒருபக்கம் சிந்தனையும் அறிவியலும் மகத்தான முறையில் நுட்பமாக விசாரணை செய்கிறது. இந்த அறிவுசார்ந்த இயக்கத்திற்கு இணையாக மறுபக்கம் கவிதையில் கற்பனைசார்ந்த இயக்கம் இருக்கிறது. 

விக்டர் ஹியூகோ

இதற்கு முன்பு, பொதுவாக மனித மனம் இந்த திசைகளில் தொலைதூரம் சென்றதில்லை. அதன் தத்துவம் ஊகத்தின் அடிப்படையிலும் மீபொருண்மை சார்ந்தும் இருந்தது. அதன் அறிவியல் மேலோட்டமான நேர்வுகளை(phenomenon) ஆராய்வதாய் இருந்தது. கடந்தகாலத்தைப் பற்றிய அதன் பார்வை உலகளாவியதாக இல்லாமல் தொன்மம் சார்ந்ததாக மரபு சார்ந்ததாக தேசியம் சார்ந்ததாக இருந்தது. நிகழ்காலத்தை பற்றிய அதன் பார்வை அகவயமான ஆழமான புரிதலாக இல்லாமல் புறவய நோக்காக இருந்தது. அதற்கு எதிர்காலத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு என்று ஏதும் இல்லை. நவீன மனதின் தொடர் விரிவடைதல், எல்லைக்குட்படுத்தும் பல தடைகளை தகர்த்துள்ளது. பரந்துபட்ட புறவய அறிவு, வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கும் நுட்பமான அகவயத்தன்மை, கடந்த காலம் நிகழ் காலம் எதிர்காலம் ஆகியவற்றில் உயிரோட்டத்துடன் வாழ்தல் ஆகியவை நவீன மனதின் வலுவான கண்டடைவுகள். இந்த மாற்றத்தின் பிரதிபலிப்புகளை, நாம் நவீன கவிதையின் பன்முகம்கொண்ட ஆர்வங்களிலும் நுண்ணிய செம்மையாக்கலிலும் நுட்பமான தேடல்களிலும் பெரிதான வேறுபட்ட பார்வைகளிலும் ஆழமான அகவிசாரத்திலும் காணலாம்.

எவை, பண்பு நயமற்றவை காட்டுமிராண்டித்தனமானவை என்று பழைய செவ்வியலால் அல்லது குறைவுபட்ட மனநிலையால் புறக்கணித்து ஒதுக்கப்பட்டனவோ அவற்றின் மீதான கவித்துவமான கற்பனாவாத மதிப்பீடு உருவாகிறது. ஒரு தேசத்தின் மனிதன், ஒரு வகைமையின் மனிதன் என்று இல்லாமல் மொத்தமாக மனிதன் என்ற வகையில் அவன் மேல் தோன்றும் உலகளாவிய ஆர்வமானது அந்த மதிப்பீட்டின் உருவிலேயே தோன்றுகிறது. அந்த உலகளாவிய ஆர்வம் நிகழ்காலத்துடன் தனக்கு உள்ள வேறுபாட்டால், பரிச்சியமற்றவற்றையும் கவர்ச்சியானவற்றையும் தேடிச் சென்றது. அதன் கற்பனை தொன்மையை நோக்கியும் காட்டுமிராண்டித்தன்மையை நோக்கியும் இடைக்கால மனிதனை(mediaeval man) நோக்கியும் ஈர்க்கப்பட்டது. வண்ணம் பூசப்பட்ட கவர்ச்சியின் ஊடாக அதுவரை பார்க்கப்பட்ட கிழக்கை(Orient) நோக்கியும் கடந்தகாலத்தின் இடிபாடுகளை நோக்கியும் விவசாசியின், குற்றவாளியின் வாழ்வை நோக்கியும் மரபுகளின் மாறுவேடமணியாமல் இயற்கைக்கு அணுக்கமாக உள்ள மனிதனை நோக்கியும் செயற்கையான கலாச்சாரத்தால் கள்ளமடையாத மனிதனை நோக்கியும் மரபுக்கு எதிராக புரட்சி செய்யும் மனிதனை நோக்கியும் ஈர்க்கப்பட்டது. இயற்கையின் காட்டியல்பின்(wild) மீது பிரம்மாண்டம் மீது உள்ள விருப்பம் போலவே மானுடத்தின் இந்த வினோதமான சுவாரஸ்யமான கூறுகளின் மீதும் விருப்பம் உள்ளது. 

ஒரு பக்கத்தில் உணர்ச்சிபூர்வ அல்லது தத்துவார்த்த இயற்கைவாதம்(Naturalism) மற்றொரு பக்கத்தில் ஜொலிக்கும் கற்பனாவாதம், மேலோட்டமான இடைக்காலத்துவம்(mediaevalism), ஹெலனிசம், கற்பனையானவற்றின் இயற்கையை மீறியவற்றின் மீதான ஆர்வம், அப்பாலைத் தத்துவம்(transcendalism) இவையே முக்கியமான ஆக்கப் பண்புகளாக இருக்கின்றன. இவையே அற்புதமான குழப்பக்கூடிய அளவு சிக்கலான அதே நேரம் முழுமைபெறாத இலக்கியத்தை உருவாக்குகிறது. ரூசோ, சடோப்ரியான்-இல் தொடங்கி கதே, ஷிலர்(Schiller), ஹைன(Heine), வேட்ஸ்வொர்த், பைரன், கீட்ஸ், ஷெல்லி, ஹியூகோ வரையிலாக அது நீள்கிறது. அதில் பெரும்பகுதி தவறாக புரிந்துகொள்ளப்பட்டவை, மேலோட்டமானவை, நிச்சியமற்றவை என்று இப்போது நம்மால் பார்க்க முடிகிறது. அது, சடோப்ரியான் மற்றும் பைரன் போல செயற்கையானது ஒருவிதமான பாவனையும் பாசாங்கும் கொண்டது. பிரெஞ்சு கற்பனாவாதிகள் போல வெறும் விசித்திரமாக அதிக வண்ணமிடப்பட்டதாக இருந்தது. 

பின்னர் வந்த விமர்சனம் அதில் உள்ள கலைத்துவமற்ற மன கிளர்ச்சியையும் வடிவத்தில் உள்ள உறுதியின்மையையும் அறிவுத்திறனற்ற ஆழமின்மையையும் வெறுமையையும் சமநிலையற்ற கற்பனையையும் குறையாக சுட்டிக்காட்டுகிறது. இருப்பினும் இந்த குறையுற்ற முகத்திற்கு பின்னால், புதிய உண்மை மற்றும் ஆற்றலின் பொருட்படுத்தத் தக்க விசை இருந்தது. மகத்தான பணி செய்யப்பட்டது; கற்பனையின் பார்வை பெரியளவில் விரிவாக்கப்பட்டது; பல புதிய உத்வேகங்கள் கொண்டுவரப்பட்டன, அவை பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியால் மிகுந்த கவனத்துடன் துல்லியத்துடன் மேம்படுத்தப்பட்டுன. ஆனால் அந்த மகத்தான பணி அதற்கே உண்டான முதிர்ச்சியின்மையுடன்(crudity) செய்யப்பட்டது. தன்னம்பிக்கை கொண்ட மேதைமை இன்றியும் பெரும் தூண்டுதலின்றியும் செய்யப்பட்டது. 

இந்த அடிப்படை மனப்போக்குகளிலிருந்து விலக்கிச் செல்லுதல் என்பது முதலில் கலாபூர்வமான செயல்முறை, வடிவம், சமநிலை மற்றும் வடிவமைப்பு, மொழியின் நுணுக்கமான அழகு, முழுமையான புதிய சந்தம் ஆகியவற்றில் அதிக கவனம் கொள்வதாக இருந்தது. உணர்ச்சித்தூண்டுதலுக்கு ஆட்படாமல்(unimpassioned) அல்லது கலாபூர்வமாக மட்டுமே உணர்ச்சித்தூண்டுதலுக்கு ஆட்பட்டு ஒரு காட்சியை, பொருளை, கருத்தை, உணர்வை மனிதனை இயற்கையை வரைவது அல்லது செதுக்குவது என்ற கருத்துருவே இந்தக் கலாபூர்வமான அறிவுசார்ந்த முயற்சியை வழிநடத்தியது. கலைக்காகவும் கவித்துவமான அறிவுசார்ந்த ஒரு நிறைவுக்காகவும் எல்லா துறைகளின் மீதும் விரிவான பாகுபாடற்ற தூண்டுதல் கொண்ட ஒரு சூழலையே அது தன்னைச் சுற்றி உருவாக்க முயல்கிறது. இந்த நம்பிக்கை ஏற்கனவே கதேவால் எதிர்பார்க்கப்பட்டதுதான். கண்டிப்பாக, தற்கால அறிவியல் வரலாறு மீதான கற்பனைசார்ந்த சிந்தனை உள்ளது. மனிதன், அவனது கடந்தகாலம் நிகழ்காலம், அவனது படைப்புகள், சூழல் மீதான ஆர்வம் உள்ளது. உணர்ச்சித்தூண்டுதலுக்கு ஆட்படாமல் இருத்தல், தன்னிலை சார்பின்மை(impersonal), விழிப்புநிலை, சந்தேகநோக்கு, சிந்திக்கும் தன்மை ஆகியவற்றுக்கான முயற்சி உள்ளது. 

ஆனால், கவிதையில் அது தனது விமர்சிக்கும் அறிவுத்திறனின் உணர்ச்சியற்ற துல்லியத்தை இழக்கிறது. மாறாக, கலாபூர்வமான வண்ணத்தையும் கற்பனையையும் எடுத்துக்கொள்கிறது. சந்தேகநோக்கு அல்லது நேர்மறையான சிந்தனையின் சூழலுக்கு மத்தியிலும் நாகரிகமற்ற, நாகரிகமான, பழைய, இடைக்கால, நவீன, மேற்கத்திய, கிழக்கத்திய மானுடத்தின் உளநிலைக்குள் நுழைய ஒரு முயற்சி நடைபெறுகிறது. அக உண்மையை கலாபூர்வமான வடிவில் மீள் உருவாக்கம் செய்வதற்கான முயற்சி; அதன் வெளிப்புற அமைப்பான மதங்களையும் தத்துவார்த்த கருத்துக்களையும் சமூகங்களையும் கலைகளையும் நினைவுச் சின்னங்களையும் கட்டமைப்புகளையும் மீள் உருவாக்கம் செய்வதற்கான முயற்சி; அதன் கடந்தகால அக மற்றும் புற வரலாறை பற்றியும் தற்கால சட்டகங்களை மனநிலைகளைப் பற்றியும் சிந்திப்பதற்கான முயற்சி உள்ளது. இந்த இயக்கமும் குறுகிய காலமே நீடித்தது, அதனிலிருந்து எழுந்த அமைப்புகள் அதற்கு எதிரான புரட்சியாக தோன்றினாலும் கூட அது அவ்வமைப்புகளுக்கு மாறியது. கலகத்தின் நிறத்தை பூசிக்கொண்டுள்ள வளர்ச்சியின் இந்த வெளிப்படையான முரண் என்பது எல்லா மனித பரிணாமங்களிலும் தொடர்ச்சியாக இருக்கக்கூடிய உளவியல்ரீதியான அம்சம்தான். 

இந்த திருப்புமுனையில் அதன் கண்கூசச் செய்யும் அம்சத்தை பார்க்கலாம், யதார்த்தவாதத்தினுடைய தீவிரமான கொடி அசைப்பு. சாராம்சமாக யதார்த்தவாதம் என்பது மனிதனையும் அவனது உலகையும், உண்மையில் அவற்றில் திரைகளும் மாயைகளும் இல்லாதது போல காண முயல்வது. இது கற்பனை தன்னை நோக்கியே திரும்பிக்கொள்வதாகும். ஒரு பொருளுக்கு மேம்பட்ட வண்ணத்தை அளிக்கும் மனப்போக்கிலிருந்து, தனிப்பட்ட மாற்றத்தை அளிக்கும் மனப்போக்கிலிருந்து விலகிச் செல்ல முயல்கிறது. அறிவியல் அவதானத்தின் செயல்முறையாகவும் ஒருங்கிணைக்கப்பட்ட பகுப்பாய்வாகவும் காட்சியளிக்க கலை முயல்கிறது; கண்டிப்பாக, எப்பொழுதும் கலை தன்னை செயல்முறையிலேயே காட்டிக்கொடுத்துவிடுகிறது. அதன் இயல்பான நகர்வு, கடந்த காலத்திலிருந்து விலகி நிகழ்காலத்தின் மீதான அக்கறையை நோக்கியதாக இருக்கிறது. அது கடந்த காலத்தை கடுமையான வன்மையான உண்மையின் நேரடித்தன்மையுடன் பிரதிநிதிப்படுத்தவும் நிகழ் காலத்தை பிரதிநிதிப்படுத்துகையில் அதே கடுமையான வன்மையான உண்மைத்தன்மையுடன் செய்யவும் முற்படுகிறது. ஆனால் கடந்த காலத்தை இந்த விதமாக பிரதிநிதிப்படுத்துவது சாத்தியமில்லை. அது எப்பொழுதும் தன்னில் செயற்கை தன்மையை, விருப்பதிற்கு இணங்க கட்டமைக்கும் தன்மையை கொண்டிருக்கும். 

யதார்த்தவாதம் இயல்பாகவே நிகழ் காலத்தை களமாகக் கொள்ள விழைகிறது. நிகழ் காலத்தைப் பற்றிய உடனடித்தன்மையுடைய அவதானிப்பு நிகழ் காலத்தை துல்லியத்திற்குள் கொண்டு வரக்கூடிய ஒரே விஷயமாக மாற்றுகிறது. தனது தூண்டுதலை அறிவியலில் பெற்ற யதார்த்தவாதம், மனிதனின் வாழ்வையும் உளவியலையும் அறுவைக்கத்திக்கும் நுண்ணோக்கிக்கும் உட்படுத்துகிறது. முதல் புறவய பார்வையில் தெரிபவற்றை மிகைப்படுத்துகிறது; அவை மனிதனின் சிறுமையும் குறைகளும் அருவருப்பும் ஆரோக்யமின்மையும் ஆக இருக்கின்றன. சுலபமாக இவற்றை அவனது ஒட்டுமொத்தம் என்றோ அவனில் பெரும்பகுதி என்றோ எண்ணுகிறது. வாழ்வை ஒரு உளவியல்ரீதியான உடல்ரீதியான நோய் என்று கருதி நடத்துகிறது; இயற்கையில் முளைத்த ஒரு பூஞ்சையாக பாவிக்கிறது. கற்பனாவாதத் தாய் இறந்த பின் பிறக்கும் குழந்தை யதார்த்தவாதம்; அது போலி அறிவியல் அக்கறையால் நெறிகெட்டுச் சென்ற ஒன்று. இந்த உண்மையான பண்பை அது மேற்கொள்ளும் மிகைப்படுத்தலும் வற்புறுத்தலும் காட்டிக்கொடுக்கின்றன. கற்பனாவாதம் கூட விகாரத்திலும் நோய்மையிலும் இயல்புதிரிபிலும் கவனம் செலுத்தியது, ஆனால் அது கலாபூர்வமான விளைவுக்காகவே அவ்வாறு செய்தது, அதன் பிரகாசிக்கும் வண்ணங்களில் மேலுமொன்றை சேர்ப்பதற்காக. யதார்த்தவாதம், உண்மை மற்றும் அறிவியலின் விகிதத்திலேயே அவை சொல்லும் அதே உண்மைத் தகவல்களை(facts) வழங்க வலியுறுத்துகிறது; ஆனால் அறிவியலாக இல்லாமல் கலையாக. அது திட்டவட்டமான விளைவுகளை தேடுகிறது; நேரடி உண்மைத்தன்மையை அடைவதற்காக இயற்கை உண்மையின் இயல்புத்தன்மைகளை பொய்யாக்குகிறது. 

அதே நகர்வில், மனித வாழ்க்கை மற்றும் இயல்பின் ஒரு பகுதியான இலட்சியத்தின் உண்மை மதிப்பை பொய்யாக்குகிறது. மனிதனில் உள்ள இலட்சியவாதத்தை அவனது அன்றாட சிறுமை அளவிற்கு கொண்டுவருகிறது. சராசரி மானுடத்தின் ஒரு சரடாக இலட்சியவாதத்தை காட்டும் முயற்சியில் அதை பாவனையாக மாயத்தோற்றமாக மாற்றுகிறது. நேரடி உண்மைத்தன்மையின் எல்லைகளை கடந்த விழைவுகளிலும் சுய மீறலின் விஷயங்களை நோக்கிய நமது முயற்சியிலும் தான் இலட்சியவாதத்தின் உண்மை இருக்கிறது, கணநேர தோல்வியில் அல்ல; ஆனால், கலையில் இலட்சியவாதக்கூறு வருவதற்கான நியாயத்தை யதார்த்தவாதம் நிராகரிக்கிறது. யதார்த்தவாதம் அது நிராகரிக்கும் பக்கம், அது அடைய முயற்சிக்கும் பக்கம் இரண்டிலுமே, கற்பனாவாதம் உட்படுத்தப்படும் குற்றச்சாட்டிற்கு தானும் உட்படுவதாகவே இருக்கிறது. அதன் கருத்து மற்றும் செயல்முறை இரண்டையும் பின்தொடர்ந்து வரும் பொய்மையே அது இடறிக்கொள்ளும் கல்லாக இருக்கிறது. 

இருப்பினும் இந்த இயக்கம் அதன் முதிர்ச்சியின்மைகளை கடந்து புதியக் கூறுகளை உத்வேகங்களை கொண்டுவந்துள்ளது. புனைவிலும் உரைநடை நாடகத்திலும் பொருட்படுத்தக்கப் பணியை செய்திருக்கிறது. கவிதையிலும் புதிய த்வனிகளையும் ஆற்றலைகளையும் கொண்டுவந்துள்ளது. கவிதையின் சுவாசம் என்பது புறவய யதார்த்தத்தை மீறிச்செல்லுதல், கவிதையின் இந்த ஆன்மாவை மரிக்கச் செய்யாமல் கவிதையில் அதனால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. யதார்த்தவாதம் இன்னும் நம்முடன் இருக்கிறது, ஆனால் அதினிலிருந்து பரிணமித்த மற்றொரு படைப்பூக்க ஆற்றலின் தோற்றம், யதார்த்தவாதத்தின் மறைவை அறிவிக்கிறது.

ஆசிரியர் அடிக்குறிப்பு:

  1. நான் இங்கு மேற்கத்திய இலக்கியம் பற்றி பேசுகிறேன். கிழக்கத்திய கலையும் கவிதையும் இந்த அணுக்கமான கற்பனாபூர்வ பார்வையை வேறுவிதத்தில் ஏற்கனவே எதிர்பார்த்திருந்தது.  

சியாம்

சியாம். சென்னையில் தனியார் நிறுவனத்தில் இயந்திர வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். இலக்கியத்துடன் கர்நாடக இசையிலும் ஆர்வம் உள்ளவர்.

உரையாடலுக்கு

Your email address will not be published.