தூண்டில் புழு : கா. சிவா

    இளங்குமரன்னு பேரு வச்ச தாத்தனுக்கு அப்ப ரொம்ப சந்தோசமா இருந்திருக்கும். ஆனா நாப்பத்தஞ்சு வயசிலேர்ந்து அம்பத்தஞ்சு வயசு வரைக்கும் பத்து வருசம் சாவ எதிர் பார்த்து ஏங்கிட்டிருப்பேன்னு அவரு எதிர் பார்த்திருக்க மாட்டாரு. அவரென்ன நானே எதிர் பாக்கலையே…

       தளம் போட்ட வீட்டுக்குள்ள வடக்குப் பக்கம் இருக்குற அறையிலதான் எட்டு வருசமா கெடந்தேன். எத்தனை விதமான வைத்தியங்க இருக்குதுன்னு தெரிஞ்சிக்க தீரா வியாதிக்காரனாலதான் முடியும். தீந்துட்டா அத்தோட நிறுத்திடுவாங்களே. ரோதனை தீராதப்பதானே அடுத்து அடுத்துன்னு எழுபது வருசமா பாக்கிறவர்றலேர்ந்து இப்பதான் கத்துக்க ஆரப்பிக்கிறவன் வரைக்கும் கூப்பிட்டு காட்டவேண்டியிருக்குது. ஆனா ஒரு கட்டத்துல வீட்ல இருக்கிறவங்களுக்கு சலிப்பு வந்திடுச்சு. எனக்கும் இந்த வலி மட்டுந்தான் என்னோட நிரந்தரமான துணையின்னு நம்பிக்கை வந்திடுச்சு. வாழ்க்கையில இப்படி எது மேலயாவது நம்பிக்கை வர இத்தன பாடுபட வேண்டியிருக்குது.

       வலி தைக்கிறப்ப என்னையும் அறியாம  ஸ்ஸ்ஸப்ப்பான்னு சத்தமும் வேதன முனகலும் தன்னிச்சையா வெளியாக ஆரம்பிச்சதும் பொண்டாட்டிகளால அத தாங்க முடியல. என்னைய தூக்கியாந்து சீமை ஓடு வேய்ஞ்ச இந்த தாழ்வாரத்துல போட்டுட்டாங்க. ரெண்டு பக்கமும் திறந்த மாதிரி இருக்கிறதால காத்தோ வெக்கையோ குளிரோ ரொம்ப நல்லா வரும். வெளிய எதையாவது பாத்துக்கிட்டும் கெடக்கலாம். முன்னாடி இங்கினதான் எருமைகளையும் பசுக்களையும் கட்டியிருப்போம். ம்ம் எல்லாம் எப்பவோ போன பிறவியில நடந்தா மாதிரி தோணுது. அந்த செவத்துல மாட்டியிருக்கிற ரெண்டு பொண்டாட்டிகளுக்கு நடுவுல நான் இருக்குற கருப்பு வெள்ளை படம் கூட ரொம்பக் காலத்துக்கு முன்னாடி உள்ளதுன்னு தோனுது. படம் எடுத்தவன் கண்ண நல்லா தொறங்கன்னு சொன்னதால  மூனு பேரு கண்ணும் மொறைச்சபடி இருக்கு. ரொம்ப நேரத்துக்கு அதப் பாத்தபடிதான் நேரத்த நகத்துறேன்.  கருப்பா மசண்ட மாதிரி எருமை வரும், அதுமேல கையில நீளமான கயத்தோட தாட்டியா எமன் வருவான்னு சொன்னானுங்க. மேயப்போற எருமைகள நெதமும் பாக்குறேன். ஆனா  எமனத்தான் காணோம்.

      ஸ்ஸ்ஸ் ச்சேசே..   கொஞ்ச நேரம் யோசிக்க கூடாதே. இந்த முதுகு வலிக்கு பொறுக்காது. அது மேலேயே கவனம் வைக்கனும்னு பிடிவாதம்.  கவனம் வேற பக்கம் போச்சுன்னா சுருக்குனு ஒரு குத்து. நடு மண்ட முடி நட்டுக்கிற மாதிரி ஒரு துடிப்பு ஒடம்பெல்லாம் ஓடும். ஒடனே இடுப்புல ஒரு வேதன பளிச்சுனு மின்னல் அடிக்கிற மாதிரி வந்திடும். புருசன் பொண்டாட்டி மாதிரி ரெண்டுக்கும் போட்டி. யாரு அதிகமா வலியக் கொடுக்கிறதுன்னு. அதுக போட்டிக்கு நான்தானா இரை. அதுகளுக்கு அடிபணிஞ்சிரக் கூடாதேன்னுதான் யோசனைய வேறு பக்கமா திருப்பறது.

   இது எப்படி ஆரம்பிச்சதுன்னு தெனம் பத்து தடவையாவது யோசன ஓடும். என்னையும் தேனப்பனையும் பிரிச்ச சுகந்திதான் மூலக்காரணம்னு தோனும். ஆனா ஆராஞ்சா அதுக்கு வாய்ப்பில்லையின்னும் தோனும். ஒன்னாம் வகுப்பிலேர்ந்து பக்கம்பக்ககத்துல ஒக்காந்து பத்தாம் வகுப்பு வரைக்கும் படிச்சு அதுக்குப் பின்னாடியும் ஊருக்குள்ளேயே வெவசாயம் பாத்துக்கிட்டு தினம் கதை பேசித் திரிஞ்ச எங்கள சுகந்திதானே பிரிச்சா.

   சுகந்தியோட புருசன் இவளக் கட்டிட்டு ஒரு வாரத்துக்குள்ள திருப்பூருக்குப் போனவன்தான். திரும்பவேயில்லை. அங்கேயே ஒரு குடும்பம் இருக்குன்னு பேச்சு.  அவ,  ஒடம்பு முடியாத மாமியார வச்சுக்கிட்டு அங்கயிங்க கெடக்கிற வய வேலைகளையும் கட்டட வேலைகளையும் பாத்துக்கிட்டு கஞ்சி குடிச்சிக்கிட்டு இருந்தா. கல்யாணமே வேண்டாம்னு சுத்திக்கிட்டு திரிஞ்ச தேனப்பன் ஆறு மாசமா அவ பின்னாடியே சுத்துனான்னு சம்மதிச்சிடறதா. அவனுக்கு கெடக்குறது ரெண்டு குழி நெலம். என்கிட்ட இருக்கிறது எம்மாமனாரோட சொத்தையும் சேத்து மூனு ஏக்கரு. அகலமா அமைஞ்ச கெணத்துல மோட்டார் போட்டு வருசமெல்லாம் வெவசாயம் பாக்குற என் ஆசைக்கு எத்தன பொம்பளைங்க ஒத்துக்கிறாங்க. ஒனக்கு மட்டும் என்ன அத்தன வைராக்கியம். எனக்கு ஒத்துக்கிட மாட்டேன்னா அப்படியே இருக்க வேண்டியதுதானே. அவன்  உருகிப் பேசுனவொடனே அப்படியே மயங்கிட்டியே. அதுக்கப்புறம் சேக்காளிகளுக்குள்ள அடிதடி வந்ததுக்கும் நீதானே காரணம்.

  ஆனா ஒன்னய அப்படியே சந்தோசமா விடுறதுக்கு என்னால முடியல. கூப்பிட்டா வர்றதுக்கு எத்தன பேரு இருந்தாலும் வீட்லயே ரெண்டு பொண்டாட்டிங்க இருந்தாலும் என்ன மதிக்காம அவங்கூட ஒறவாடுற ஒன் நெனப்புதான் மண்டைக்குள்ள வண்டு மாதிரி கொடாஞ்சுக்கிட்டே இருந்திச்சு.

      அப்படியொரு யோசனை வந்ததை என்னாலேயே நம்ப முடியல. அன்னைக்கி வெளுத்த வேட்டி சட்டையப் போட்டுக்கிட்டு தேனப்பன் பெரியகோட்டை பக்கமா போறதப் பாத்த அந்த நொடியில அந்த யோசன வந்திச்சி. அவன் போறான்னா ஒன்னையவும் வரச் சொல்லியிருப்பான்னு தோனுச்சு. ஒன் வீட்லேர்ந்து பெரியகோட்டை போறதுக்கு அந்த கருப்பன் புதரத் தாண்டித்தானே போகனும். ஆளு ஒசரத்துக்கும் மேல முள்ளும் கொடியுமா படர்ந்திருக்கிற புதருக்கு நடுவ மெத்துன்னு புல்தரை இருக்கிறது என்னை மாதிரி கொஞ்சப் பேருக்குத்தானே தெரியும். ஏற்கனவே பல தடவ அந்த எடத்த பயன்படுத்தியிருக்கேனே. ஒம்மேல ஒரு கண்ணு இருந்தாலும் அன்னைக்கி ஒம்மொகத்துல தெரிஞ்ச பூரிப்பு என் புத்திய அப்படியே கிறங்க வச்சிடுச்சு. அதுவரைக்கும் யாரையும் பலவந்தப்படுத்தாத என்னையவே அப்படி பண்ண வச்சிட்டியே பாவி. உச்சி வெயில் நேரங்கிறதால ஒரு புள்ள அந்தப் பக்கம் வரல. யாருக்கும் எதுவும் தெரியாதில்ல, பின்ன எதுக்கு நான் கெளம்பின பிறகு அங்கேயே நின்ன அரளிச்செடியிலேர்ந்து கொட்டைய புடுங்கி நசுக்கித் தின்ன. வேறெங்கேயாவது போயி கெடந்திருக்கலாம்ல.  இப்ப திரும்ப யாருமே அதுக்குள்ள போக முடியாத மாதிரி பண்ணிட்டியே.

  ஆனாலும் ஒரு புருசங்கூட வாழ்ந்திட்டு அப்புறம் தேனப்பனோடவும் கெடந்த பிறகும் புத்தம் புதுசா இருந்தியேடி. அத இன்னங்கூட மறக்க முடியல. ஒன்னய எரிச்ச மறுநாளு புதுவயல் வரைக்கும் போறதுக்காக தட்டு வண்டியில போனப்ப ஏதோ கல்லுல சோத்தாங்கை பக்க சக்கரம் டக்குனு ஏறியெறங்கினதுல அச்சாணி எகிறிப் போயிடுச்சு. அதனால சக்கரம் கழன்டு ஓட வண்டி பள்ளத்துக்குள்ள சரிஞ்சிடுச்சு. என்ன… வண்டிக்கு கீழ நான் கெடந்தேன். ஏதோ எசைக்கேடா முதுகுல பட்ட காயத்திலேர்ந்து மீள முடியாம ஆயிடுச்சு.

   ஊருக்குள்ள சொல்றானுங்க சுகந்தியோட ஆவிதான் என்னய விழ வச்சுதுன்னு.  நடந்த எதுவுமே தெரியாத சிலபேரு ஒன்னோட சாபந்தான் என்னய சாச்சிடுச்சுன்னு சொன்னானுங்க. இந்த சாதாரண விசயத்துக்கெல்லாம் சாபம் கொடுப்பாங்களாயென்ன. அப்படியே இருந்தாலும் ஒம்மாதிரி ஒருத்தி கொடுக்குற சாபம் பலிக்குமாயென்ன.

அடியேய் யாராவது வந்து பாக்குறாளுங்களா. ரெண்டு பேரும் உள்ளே என்னதான் பண்ணித் தின்பாளுகளோ. வலியில துடிக்கறானே கொஞ்ச நேரம் ஆறுதலா இருப்போம்னு இருக்காளுகளா. ஸ்ஸ்ஸசப்பா.. ம்ம்ம் ச்ச்சேசேய்.

   நான் எத்தனையோ பேரோட சொத்த புடுங்கியிருக்கேன். குறிப்பா சங்கரன். ரெண்டு வருசம் மழையில்லாம வெள்ளாம ஏமாத்துனதும் அவன் பொண்டாட்டியையும் அஞ்சு வயசு மகனையும் அப்பாகூட இங்க விட்டுட்டு வடநாட்டுக்கு எங்கேயோ பொழைக்கப் போனான். நாலு வருசத்துக்கப்புறம் திரும்பி வந்து பாக்கறப்ப அவன் நெலத்தச் சுத்தி கம்பிவேலி போட்டு உள்ளுக்குள்ளே தோண்டுன கெணத்து தண்ணியில வெள்ளாம அமோகமா நடக்குது. அவனுக்கு மொதல்ல ஆச்சரியம் வந்திச்சு. அப்புறம்தான் அந்த எடத்த எம்பேருக்கு அவங்கப்பா குடிபோதையில எழுதிக் கொடுத்திட்டாருன்னு அவனுக்குத் தெரிஞ்சது. அன்னைக்கே ஊரக் காலி பண்ணிக்கிட்டு குடும்பத்தோட கெளம்பி மெட்றாசுப் பக்கம் போயிட்டான். போறப்ப அவம் பொண்டாட்டியும் அவனும் கண்ணில தண்ணியோட என்னைய எரிக்கிற மாதிரி பாத்திட்டுப் போனாங்க. ஒரு வாரம் அந்தப் பார்வையோட சூடு என்ன தொந்தரவு பண்ணிச்சு.

         சில நாள்ல, என் கொல்லைக்கும் சுப்பனோட கொல்லைக்கும் நடுவுல இருந்த வரப்ப ஒரு ரெண்டடி வெளிய தள்ளி அவனோட கொல்லைப்பக்கம் வச்சேன். சர்வேயரையெல்லாம் கூட்டியாந்தாலும் எதுவும் பண்ண முடியாது. ரெண்டு நாளைக்குப் பிறகு கொல்லைப் பக்கம் வந்த  சுப்பன் பொண்டாட்டி நடந்தத தெரிஞ்சுக்கிட்டு ஒரு பார்வ பாத்தா பாரு. அப்ப சங்கரனோட பார்வைச்  சூடு எம்மனசிலேர்ந்து அணைஞ்சுடுச்சு.

  இப்படியேதான் ஒருத்தனோட குரோதத்த மறக்க இன்னொன்னப் பண்ணிட்டு போயிட்டே இருக்குற எனக்கு வேறெவனும் கொடுக்காத சாபத்தையா நீ கொடுத்திட்ட…

       தட்தட்தட்… சீமை ஓட்டின்மேல் தலைகீழாய் நடந்து திரியும் பல்லியின் சத்தம்தான். நான் மனசுக்குள்ள நெனைக்கிறத ஆமோதிக்குதா இல்ல மறுக்குதா..  தெனமும் ஜோடியா ஓடி திரியும். இப்ப அதைக் காணாம தேடுதோ. போன வாரம் தொரத்தி ஓடினப்ப ஓட்டோட விளிம்புல எப்படியோ மாட்டிக்கிட்டு வால் விழுந்திடுச்சு. இப்ப புது வாலோட மொனை கூர்மையா வெளியில நீட்டிக்கிட்டு இருக்குது. அப்படியே பல்லியப் பாத்துக்கிட்டிருந்தா பின் கழுத்துல ஒரு மரமரப்பு வந்திடுது. ச்சைய் இப்ப  கழுத்த திருப்பியே ஆகனும்…

    இந்தா வாசல்ல நின்னுகிட்டு என்னையவே பாத்துக்கிட்டு இருக்காளே மூத்தவ இவ எம்மேல எவ்வளவு பாசமா இருந்தா தெரியுமா. ஒனக்கெங்கே தெரியும். என்னாலேயே அறிஞ்சிக்கிட முடியலையே. அவளோட அன்பப் பத்தி முன்னமே புரிஞ்சிருந்தா மத்தவங்கள துன்பப்படுத்தி கெடைக்கிற சந்தோசத்த நோக்கி போயிருக்க மாட்டேன்னு இப்பக் கொஞ்சநாளா தோனுது. அவ என்மேல வெறுப்பக் காட்ட ஆரம்பிச்சப்பதான் எனக்கு அவளோட அன்பே புரிஞ்சது. வெயில் உச்சி மயிர பொசுக்குறப்பதானே நெழலோட குளுமை புரியிது. ஆனா அது முடிஞ்சு போனதுதான். திரும்பக் கெடைக்கும்னு நான் ஏங்கறது காலில்லாதவன் மலை உச்சிக்கு போகனும்னு நெனைக்கிற மாதிரிதான்னு எனக்கே புரியிது. அப்பயிருந்துதான் கடவுள்கிட்டு என் வேண்டுதல இன்னும் பலமா வைக்க ஆரம்பிச்சேன். போதுமடா சாமி… நான் பூமியில வாழ்ந்து அடைஞ்சதெல்லாம் போதும். நரகத்துக்கே என்னைய அனுப்பிடுன்னு.

    எம்மாமனாருக்கு மூனு புள்ளைங்க. மொத ரெண்டும் பொண்ணுங்க. மூனாவது பையன். மூத்த பெண்ண கட்டிக்கிட்டதே அவரோட சொத்துக்காகத்தான். ஆனா இன்னம் ரெண்டு பேரு இருக்கிறப்ப எப்படிக் கெடைக்கும். கல்யாணம் பண்ணி ஆறு மாசத்தில சின்னவளுக்கும் எனக்கும் தொடர்புன்னு ஒரு உல்டாவ ரகசியமா பெரியகோட்டை முக்குலயும் பெருந்தாக்குடி ஆலமரத்திடியிலயும் இருக்குற டீக்கடையில நிக்கிறவங்களுக்கு கசிய வச்சேன். சுத்து வட்டாரத்துல இருக்குற அத்தன ஆம்பளைங்களும் இந்தக் கடைகளுக்கு வருவாங்கள்ல. என்னய பத்தியும் ஒரு மாதிரியான ஆளுன்னு எல்லாருக்கும் தெரிஞ்சதால அத அப்படியே நம்பிட்டாங்க. ரெண்டு வருசத்துக்கு யாருமே பொண்ணு கேட்டு வரலை. அவளுக்கும் பல்லு கொஞ்சம் எடுப்பா கூம்புன மொகமா சட்டுனு ஒரு வயசானவ களை வந்திடுச்சு. மாப்பிள்ள வீட்டுக்காரங்க பொண்ணு கேட்டு வர்றதுதான் கௌரவம்னு பேசிக்கிட்டிருந்த மாமனாரும் ஒரு கட்டத்துல எறங்கிப்போயி ரெண்டு எடத்துல கேட்டாரு. ஒருத்தங்க வேற காரணம் சொன்னாங்க. இன்னொரு வீட்ல இப்படியாம்ல விசயம்னு போட்டு ஒடச்சிட்டாங்க.

    நான் வீட்ல ரொம்ப ஒழுக்கமானவனாத்தான் திரிஞ்சேன். மச்சினிச்சிய நிமிந்து கூட பாக்கமாட்டேன். அவகிட்ட அவசியமில்லாம ஒரு வார்த்தையும் பேசினதில்ல. அதனால அவங்க சொன்ன விசயத்தைக் கேட்டு பொண்ணு மேல பழி வந்திடுச்சுன்னுகூட அவரு கவலப்படலை. தங்கமான மாப்பிள்ளையப் பத்தி தப்பான அபிப்பிராயம் பரவிடுச்சேன்னு துடிச்சிட்டாரு. எப்படியாவது அதை சரி பண்ணனும் யோசிச்சு என் வீட்டுக்கு வந்தாரு. மாப்ள சின்னவளயும் நீங்களே கட்டிக்கிடுங்கன்னு சொன்னாரு. மூத்தவ உள்ளதான் இருந்தா. அய்யய்யோ என்னால முடியாதுன்னு இவ காதுக்கு கேக்குற அளவு சத்தத்தில கத்தினேன். அப்பா சொல்ற எதையோ மறுத்துப் பேசறனேன்னு இவளுக்கு வருத்தம். ஏங்க அப்பாவ எதுத்து பேசறீங்க. அவரு சொல்றதச் சரின்னு செய்யுங்க. அவரு நமக்கு கெடுதியா செய்யப் போறாருன்னு விசயம் தெரியாம வாய விட்டுட்டா.

  நான், இல்லம்மா எனக்கு விருப்பமே இல்லை. அது மாதிரி எண்ணம் எனக்கு இல்லவேயில்லை அப்படீன்னு சொன்னேன். இவ அவங்கப்பாவ பாக்குறா. அவரு மெதுவா விசயத்தச் சொன்னாரு. கேட்டதும்  துடிச்சிட்டா. மூஞ்சியெல்லாம் செவந்திடுச்சு. கண்ணு கலங்கி தண்ணி லேசா வழியது. உதடு துடிக்கிது. ஆனா எதுத்து ஒரு வார்த்த சொல்லமுடியல. அம்மாவா இருந்திருந்தா தலைமுடியப் பிடிச்சு என் வாழ்க்கைய பிச்சு என் இளையவளுக்குக் கொடுப்பீங்களான்னு தாண்டவம் ஆடியிருப்பா. அதோட நான் சம்மதம்னு சொல்லியிருந்தாலும் எம்மேல பாஞ்சிருப்பா. ரெண்டுமேயில்ல. நான் இவர்ட்ட பேசிட்டு சொல்றேன்பா அப்படீன்னு சொல்லி பச்சத்தண்ணிகூட குடுக்காம அவர அனுப்பிவிட்டுட்டு என் மொகத்தப் பாத்தா. நான் கடுப்பா விருப்பமே இல்லாதவனாட்டம் வச்சிருந்தேன். எதுவும் பேசாம போயிட்டா.

     ரெண்டு நாளைக்கப்புறம் என் மச்சான் வந்தான். நேரே அக்காக்கிட்டதான் பேசினான். ஒரு மணி நேரத்துக்குமேல காரசாரமா பேசின சத்தம் வெளிய கேட்டுச்சு. நான் காதுல விழாத மாதிரி கயித்துக் கட்டில்ல படுத்துகிட்டு வாசல்ல திரிஞ்ச கோழியையும் குஞ்சுகளையும் பாத்துக்கிட்டிருந்தேன்.

கொஞ்சம் நேரம் சும்மாதான் இருங்களேன். ஒங்களாலதானே வெளிய எங்கேயும் போகாம மொடங்கிக் கெடக்கேன். அப்புறமும் ஏன் சுருக்சுருக்குனு குத்திக்கிட்டே இருக்கீங்க. முதுகுல இருக்கிறவன்னு கூட தேவலாம்போல சொன்னாக் கொஞ்ச நேரம் கம்னு இருக்கான். இடுப்புல இருக்கவதான் அடங்கவே மாட்டேங்கறா…ஸ்ஸ்ஸப்பாஆஆ…

   பேச்சுக்கு நடுவுல எப்படி சமைச்சான்னு தெரியல, சாப்பிடக் கூப்பிட்டா. சாப்பிடறப்ப பேசல. ஒரு முடிவுக்கு வந்திட்டாங்கன்னு புரிஞ்சது. சாப்பிட்டுட்டு வெளியே கட்டில்ல வந்து ஒக்காந்ததும் மச்சான் ஆரம்பிச்சான்.. அத்தான் நான் பொண்டாட்டி புள்ளைகளோட புதுவயல்ல செட்டில் ஆயிட்டேன். அப்பாவுக்கும் வயசாயிடுச்சு. அவராலையும் முன்ன மாதிரி வெள்ளாம போட முடியல. நீங்களே எல்லா வயல்களையும் பாத்துக்கிடுங்கன்னு கொக்கி போட்டான்.

    அதுக்கென்ன மச்சான். மாமா கூப்பிடறப்ப போயி வேலைகளை செஞ்சு கொடுத்திட்டு வர்றேன்னு பதவிசா சொன்னேன்.

  இல்லத்தான். நெலத்த நீங்களே வச்சிக்கிடுங்க. வெள்ளாமையப் பாருங்கன்னு சொல்றேன். அப்பாகூட கலந்துக்கிட்டுதான் சொல்றேன்னு குழைஞ்சான். நான் ஒடனே கடுமையா மொகத்த வச்சிக்கிட்டு நெலத்தக் கொடுத்து என்னய வாங்கப் பாக்குறீங்க அப்படித்தானேன்னு சத்தமாச் சொல்லிட்டு வேகமா எந்திரிச்சேன். ஒடனே வேகமா வந்த இவ இவ்ளோ தூரம் சொல்றாங்க ரொம்பத்தான் வெடைக்கிறீங்க. சரீன்னு சொல்லுங்கன்னு சொன்னா. எல்லாத்தையும் ஒத்துக்கிட்டான்னு தெரிஞ்சதும் கொஞ்சம் பிலுப்புகிறமாதிரி சரி மூனு பேரும் சொல்றீங்க. சின்னவளோ ஊரோ நெலத்துக்காகத்தான் அவளைக் கட்டிக்கிட்டேன்னு நெனப்பாங்கள்லனு கேட்டேன்.

  இப்ப வெளிய சொல்லாம எழுதிடுவோம். பிற்பாடு தெரிஞ்சுகிடட்டும்னு சொன்னான். அப்போதும் விருப்பமே இல்லாமல் அவங்களோட நிர்பந்தத்துக்காகத்தான் சம்மதிக்கிற மாதிரி சரி செய்ங்கன்னு மெதுவாகச் சொன்னேன்.

       ரெண்டாவது கல்யாணம் நடந்த பிறகுதான் மூத்தவளுக்கு பொண்ணு பொறந்துச்சு. ரெண்டு வருசத்துக்கப்புறம் சின்னவ பையனப் பெத்தா. பிள்ளைங்க பொறந்து அதுகளா வளந்துச்சுங்க. நான்தான் வெள்ளாமையையும் வேற வேலைகள்லயும் மும்முரமா இருந்தேனே. ஆனா அடிபட்டு வீட்லேயே மொடங்கினபோதுதான் சொந்தக்காரங்களோட அனுசரன எவ்ளோ சந்தோசத்தத் தரும்னு தெரிஞ்சது. ஒவ்வொருத்தரும் வந்து நலம் விசாரிக்கிறப்ப கண்ல தண்ணி ஊறியூறி வழியிது. இனிமே நடக்கவே முடியாது எல்லாமே படுக்கையிலதான் சொன்னப்ப ஒரு நிம்மதியும் வந்த மாதிரி இருந்துச்சு. ஒன்ன அடைஞ்சதும் அடங்காம அடுத்த ஒன்னுக்காக ஓடிக்கிட்டேயிருக்குற, இல்லேன்னா கெடைக்காத ஒன்னுக்காக ஏங்கிட்டிருக்கிற வாழ்க்கை இனி இல்லைன்னு ஒரு ஆறுதல் தோனுச்சு..

    பொண்டாட்டிங்க ரெண்டு பேரும் நல்லவே கவனிச்சுக்கிட்டாங்க. அவங்களப் பொருத்த வரைக்கும் குடும்பத்துக்காக ஒழைச்ச ஆம்பள படுத்துட்டானேன்னு கவலை. ஊரு அதையிதைச் சொன்னப்பவும் பெருசா கருதாம அதை என்கிட்டையே சொல்லி ஆதங்கப்படுவாங்க.

   ஆனா பொண்ணுக்கு மாப்பிள்ளை கெடைக்காம தடுமாறுனப்ப நான் செஞ்ச காரியங்களாலதான் லேசா நெனைக்க ஆரம்பிச்சு பெருசா வளந்திடுச்சு. அத அவங்க என்ன கவனிக்கிற மொறையிலேயே நான் ஒணந்துக்கிட்டேன். ஒரு வழியா வெளியூர் மாப்பிள்ளை ஒன்னு அமைஞ்சது. ஆனா நாலு வருசமா புள்ளையில்லை. அது இவங்களோட ஆங்காரத்த தூண்டி விட்டுடுச்சு. அதோட பையனுக்கும் படிப்பு ஒழுங்கா வரல. எப்படியோ முடிச்சு வேலை வாங்க படாதபாடு படறான். அதுக்கும் நான்தான் காரணம்னா என்னதான் பண்றது.

   ஒவ்வொரு நாளு முழிக்கிறப்பவும் இன்னொரு நாள் வேதனப்பட்டாகனும்னு மலைப்பா இருக்கு. கண்ணு தொறந்தவுடனேயே யப்பா சாமி என்னயக் கொண்டு போயிடுய்யான்னு கண்ணீர் வழிய வேண்டிக்கிறேன். ஆனா அவன் மனசெறங்க மாட்டேங்குறான்.

என்னாச்சு மூத்தவ மொகத்துல லேசா மலர்ச்சி தெரியிது. இப்படிப் பாத்து பல வருசங்களாச்சே. உள்ளே வந்து ஏங்க நம்ம பொண்ணு போன் பண்ணாங்க. நாள் தள்ளிப் போச்சுன்னு டாக்டரப் பாத்தாங்களாம். அவரும் மூனு மாசம்னு கன்பார்ம் பண்ணிட்டாராம்.

மூத்தவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இளையவளும் முகம் பூரிக்க வந்தாள். இப்பதாங்க பையன் போன் பண்ணினான். ரொம்ப நாளா எதிர் பாத்துக்கிட்டிருந்த பெரிய கம்பெனியிலேர்ந்து  ஒடனே வேலையில சேரனும்னு மெயில் வந்திருக்காம். இனி எங்க தம்பி பொண்ணையே கல்யாணம் பண்ணிடலாங்கன்னு சொன்னா.

        இப்படிப் சந்தோசமா இருக்குற பொண்டாட்டிகளோட இன்னும் பல வருசம் வாழலாம். பேரன் பேத்திகள கையில எடுத்துக் கொஞ்சினா இந்த வலிகளெல்லாம் இருக்கிற எடம் தெரியாம ஒளிஞ்சிக்காது. அய்யா கடவுளே என்னோட வேண்டுதல நெறவேத்தாம இருந்ததுக்கு ரொம்ப நன்றிய்யா… நன்றி… என்றபடி மகிழ்ச்சி பொங்க பொண்டாட்டிகளின் முகங்களைப் பார்த்தேன்.  அவங்களுக்கு பின்னாடி செவத்துல மாட்டியிருக்குற படத்துல தெரியிற என் கண்ணு அந்தச் சங்கரனோட கண்ணு மாதிரித் தெரியிதே. மூத்தவ கண்ணு எப்படி சுகந்தியோட கண்ணாட்டம் இருக்கு.  சுப்பன் பொண்டாட்டி கண்ணுல்ல இளையவ கண்ணாத் தெரியிது. கண்ணக் நல்லா மூடிட்டு தெறந்து பாக்கலாம். ஆங் இப்ப தெரியல. ஏதோ மனக் கொழப்பம் அதான் அப்படித் தெரிஞ்சிருக்கு. இப்ப, வேறெதோ தெரியிதே.  கசங்கலாக தெரியறது எருமையா… அதுமேல… அதுமேல நீளக் கயிறை பிடிச்சு அமர்ந்திருக்கறது…

கா. சிவா

விரிசல், மீச்சிறுதுளி, கரவுப்பழி ஆகிய மூன்று சிறுகதை தொகுப்புகளும் "கலைடாஸ்கோப்பினுள் ஓர் எறும்பு" எனும் கவிதைத் தொகுப்பும் "தண்தழல்" எனும் நாவலும் எழுதி வெளியிட்டுள்ளார்.

தமிழ்விக்கியில்

உரையாடலுக்கு

Your email address will not be published.