”கண் தெரியாதவனிடம் வெளிச்சத்தை பற்றி சொல்வதுபோல பொருளற்றது” என்ற நெறியற்ற பழமொழி பைபிளில் உண்டு. குரூரமான உவமை. அந்த உவமை அரசியல்சரியானது அல்ல(politically incorrect), அந்த உவமை கவித்துவமான போதாமையும் (poetically inefficient) கொண்டது. ஒருவனின் எப்போதாவது உள்ள நிலையை என்றென்றைக்குமான நிலையாக, அந்த நிலையை அவனின் அடையாளமாக மதிப்பிடுவது பெரிய குற்றம். உண்ணும்போதும் உறங்கும்போதும் கேட்கும்போதும் தொடும்போதும் அவன் கண் தெரியாதவன் அல்ல. கண் தவிர்த்த பிற புலன்கள் பிராயசித்தம் செய்வதுபோல மேலும் ஆற்றலுடன் அவனில் இன்னும் தீவிரமாக செயல்படுகின்றன. ’ எந்த ஒருவனும் முழுக்கமுழுக்க அவன் அல்ல’ என்பது அடிப்படையான உண்மை. வெளிச்சத்தின் பல வரையறைகளில் ஒன்று மட்டும், அதன் நேரடியான அர்த்தம் மட்டும் அவனுக்கு பிடி கிடைக்காமலாகிறது. வெளிச்சம் சில சந்தர்ப்பங்களில் மட்டும் தான் வெறும் வெளிச்சம். மற்ற எல்லா வெளிச்சங்களும் அவனுக்கு நல்ல பரிச்சயம். ” வெளிச்சம் துன்பம் நிறைந்தல்லவா, இருள் அல்லவா நிம்மதி” என்ற முரண்பாட்டில் கவிஞர் அக்கித்தம் உத்தேசித்த வெளிச்சத்தையோ, ’இருளும் மெல்ல வெளிச்சமாக வரும்’ என்ற சொற்றொடரில் குமாரன் ஆசான் உத்தேசித்த வெளிச்சத்தையோ, காந்தியின் இறந்ததும் ” அந்த வெளிச்சம் அணைந்துவிட்டது” என்று நேரு சொன்னதன் வெளிச்சத்தையோ காண கூடுதலான கற்பனை உள்ள அவனுக்கு எந்த தடையும் இல்லை. ( Differentially able என்று சொல்லி காலம் அவனிடம் மன்னிப்பு கேட்கிறது ) நான் வாசிக்கும் பைபிள் நீங்கள் வாசிக்கும் பைபிளை விட பொருளார்ந்தது, பெரியது என்கிறார் ஹெலன் கெல்லர். பாத்துமாவின் ஆடு நாவலில் ” என் ஆடு பிரசவிக்கட்டும், நான் காட்டுகிறேன் ” என்று பாத்துமா சொன்னபோது ’ஆடு பிரவித்ததும் அவள் காட்டப்போவது என்ன?’ என்று எண்ணி பஷீர் சிரித்தது பார்வையின் நேரடி பொருளை எண்ணித்தான். குறியீட்டு ரீதியான எழுத்துமுறை, ஒரே வரியில் பல வரையறைகள், குறைத்துக்கூறுதலில்(understatement) தன் இயல்பான மேதமையின் தனித்தன்மைகளை வெளிப்படுத்துதல் போன்ற காரணங்களால் நாம் கண்ணால் பார்க்கும் அளவைவிட ’பெரிய’ படைப்பை கச்சிதமான மெலிந்த உடலமைப்பு கொண்ட பஷீரால் எழுதமுடிந்தது. (”மதிலுகள்” நாவலில் பஷீர் சுதந்திர போராட்டத்தின் கதையை 55 பக்கங்களாக சுருக்கினார். தகழி சிவசங்கரப்பிள்ளை எழுதியிருந்தால் குறைந்தபட்சம் 700 பக்கங்களாவது ஆகியிருக்கும்) ”வெளிச்சத்திற்கு எவ்வளவு வெளிச்சம்” என்று பஷீரியன் கதாப்பாத்திரம் ஆச்சர்யப்படும்போது வெளிச்சத்திற்கு எத்தனை வெளிச்சங்கள் என்ற வியப்பும் இருக்கிறது, அதில் ஞானோதயத்தின் வெளிச்சமும் உண்டு. வெளிச்சத்தை போன்றது தான் இருளும். ’இருளும் மெல்ல வெளிச்சமாக வரும்’ ’ நானும் இருட்டில் முனகுகிறேன்’ இவற்றிலெல்லாம் உள்ள இருட்டு நேரடி அர்த்தத்தில் மட்டுமே உள்ளது என்று நினைப்பவர்கள் கவிதைக்கு வெளியே இருக்கிறார்கள். நேரடியாக உள்ளதை தவிர்த்து பிற எதையும் பார்க்க முடியாதவர்கள் நிலையான, ஆபத்தான குறுட்டுத்தன்மையில் இருக்கிறார்கள். மதத்தீவிரவாதிகளும், தீவிரமான பகுத்தறிவாளர்களும் ’literalism’ என்ற நேரடிப்பொருளில் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய குணப்படுத்த முடியாத நோயின் இரைகள். நாவலாசிரியர் சி.வி.ராமன்பிள்ளையின் கதாப்பாத்திரம் ‘இருளா என்னை விழுங்கு’ என்று சொல்வது தன்னால் கிரகித்துக்கொள்ள முடியும் ஒரே இருட்டு அல்லது ஒரே வெளிச்சம். இருளில் நிற்பவன் ’நான் இருளில் இருக்கிறேன்’ என்று சொன்னால் நாம் வெளிச்சத்துடன் செல்லலாம். வெளிச்சத்தில் நிற்கும் ஒருவன் தான் இருட்டில் இருப்பதாக சொன்னால் நாம் எந்த வெளிச்சத்துடன் செல்ல முடியும்? அவன் நிற்பது பிறிதொரு இருட்டில். அந்த வெளிச்சம் ஊதினால் அணையும் வெளிச்சம் அல்ல. குமாரன் ஆசானின் ’ இருளும் மெல்ல வெளிச்சமாக வரும்’ என்ற வரியில் அந்த இருட்டின் வெளிச்சம் உண்டு. இந்த வரி அதிகரித்தபடியே இருக்கும் வெளிச்சத்தின் உறைவிடத்தை, அணையாவிளக்கை சுட்டுகிறது. ”ஆதியில் இருளாக இருந்தது” என்று பைபிளின் genesisல் விவரிக்கப்பட்டிருக்கிறது. அது மொழிக்கு முன்புள்ள, கடவுளுக்கு முன்புள்ள, பெயரிடப்படுவதற்கு முன்புள்ள இருட்டு. அறியாமைக்கும் அறிதலுக்கும் முன்புள்ள இருட்டு. சமீபகால சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தியாவில் முழுக்க முழுக்க இருட்டுதான் என்று நம்மால் சொல்லிவிட முடியும். அதில் வெளிச்சம் எப்போது வரும்? அல்லது ஒரு முறை கூட வெளிச்சமே வராமல் ஆகிவிடுமோ? வெளிச்சத்தின் இருட்டின் புழக்கம் சார்ந்த வேறுபாடுகளை மட்டும் கவனத்திற்கு கொண்டு வந்தாலே கவிதை வாசிக்க பழகுபவனை கவிதையை நோக்கி கொண்டு வர முடியும். நாம் புழக்கத்தில் உள்ள சொற்களில் அதிகபடியான குறியீட்டுத்தன்மைகொண்டவை அவை.
2.
வெளிச்சத்தின் நிறம் (சிலசமயம்) ஒப்புநோக்க வெள்ளை. இருட்டின் நிறம் (சில சமயம் ) ஒப்புநோக்க கறுப்பு. ஆனால் அதிகாரம் கொண்ட வெள்ளையர்கள் வெள்ளைநிறத்தை வெளிச்சத்தில் நிறமாக ஆக்கினார்கள். வெளிச்சத்துடன் தொடர்புடைய எல்லா ஏற்புகளையும் வெள்ளைநிறம் பிரதிநிதித்துவப்படுத்தியது. ’கருப்பு’ இருட்டுடன் தொடர்புடைய எல்லா மறுப்புகளின் பிரதிநிதியாக ஆகியது. அமைதியும் சமாதானமும் வெள்ளைப்புறாக்களை பறக்கவிட்டன. நிராசையும், கோபமும் கருப்புகொடி காட்டின. காலப்போக்கில் வெள்ளைநிறத்திற்கு ‘நல்ல’என்ற நிகரற்ற அறிமுகம் கிடைத்தது. கருப்புநிறத்திற்கு ’கெட்ட’ என்ற பிறிதொன்றில்லாத அறிமுகம். துர்மந்திரவாதம் பிளாக் மேஜிக்காக ஆகியது. கருப்பு பணமும், கருப்பு சந்தையும், கரிந்த திரியும், கரியிலையும் கருப்பின் அழகை கெடுத்தன (காய்ந்து சருகாக ஆன இலையை மலையாளத்தில் கரியிலை என்று சொல்வார்கள்). அறியாமைக்கும் விளக்கமுடியாமைக்கும் கருப்புநிறம். தொன்மங்களில் ’கருப்பான புகை’ ஆபத்திற்கான அறிகுறி. வெள்ளைப்புகை எதிர்பார்ப்பை சுட்டிக்காட்டியது. வெள்ளைநிறம் எல்லாவகையான வெளிச்சங்களின் பிரதிநிதியாகவும் ஆகியது, கருப்பு எல்லா குற்றங்களின் எடையையும் சுமந்தது. வெள்ளையானவன் கருப்பானவனை பண்படாதவனாக ஆக்கினான். அடிமையாக்கினான். விலங்கிற்கும் மனிதனுக்கும் இடையே உள்ள கண்ணியாக ஆக்கினான். எல்லாவிதமான அழுக்குகளையும் அவனை சுமக்க வைத்தான். இருட்டில் மாட்டிக் கொண்டவனின், வழி தவறியவனின், எதிர்பார்ப்பற்றவனின் வலியை கருப்புநிறம் சுமந்தது. வெளுத்தவன் வெளிச்சத்தை சென்றடைந்தவனின், பாதை தெளிந்தவனின், வலி நீங்கியவனின், எல்லாவகையான அதிர்ஷ்டங்களும் கொண்டவனின் உரிமையாளனாக ஆனான். உலகம் அவனின் உரிமையாகியது. ஆப்பிரிக்க கவிஞர் பெர்னாட் டாடி(Bernard Binlin Dadie) கசப்பை உரசிப்பார்த்து எழுதினார் ” என்னை கருப்பாக ஆக்கியதற்காக நான் உங்களுக்கு நன்றி சொல்கிறேன் . எல்லாவகையான சங்கடங்களின் சுமைதூக்கியாக ஆக்கியதற்காக, பூமியின் பாரத்தை தலையில் வைத்து தந்ததற்காக. வெள்ளை விசேஷமான நாட்களின் நிறம். கருப்பு தினசரிவாழ்க்கையின் அல்லல்களின் நிறம். எடை சுமப்பதற்காக மட்டும் படைக்கப்பட்ட இந்த தலையை நினைத்து நான் எனக்குள் மகிழ்கிறேன். சுட்டுப்பொசுங்கும் இடங்களில் ஓடுவதற்கு ஏதுவான இந்த கால்களை எண்ணி நான் உங்களுக்கு நன்றி சொல்கிறேன். என் கரிய நீண்ட கைகளுக்காக உங்களுக்கு நன்றி சொல்கிறேன். உலகில் பரவியிருக்கும் இருட்டு வழியாக என் புன்னகை பகலை உருவாக்கிறது. கடவுளே நன்றி என்னை கருப்பாக ஆக்கியதற்காக”. அவர்கள் வாழ்ந்த இடம் இருண்ட கண்டமாக ஆனது. வெள்ளையர்கள் அதிகாரத்தை கைவிட்ட பிறகும் வெள்ளை நிறம் அதிகாரத்திலிருந்து வெளியேறவில்லை ஆப்பிரிக்காவில் மட்டுமல்ல இந்தியாவிலும்.
உண்மையில் வெள்ளையும் கருப்பும் பரஸ்பரம் உரையாடிக் கொள்ளும் இரண்டு அடிப்படையான நிறங்கள்(complimentary). மொழியியலாளர் சசூர்(Ferdinand de Saussure) வழியாக பார்த்தால் தன்னிச்சையான இரண்டு சொற்கள். வெள்ளையை கருப்பிலும், கருப்பை வெள்ளையிலும் தான் எழுத வேண்டும். இரண்டின் அழகும் நிகரற்றது என்பது வரிக்குதிரையின் தெய்வத்திற்குகூட தெரியும். நிறங்கள் என்ற அடிப்படையில் வேறுபட்ட ஆனாலும் நிகரற்ற அழகுகொண்ட நிறங்கள். தும்பப்பூவிற்கும் மல்லிகைக்கும் அழகுள்ளதுபோல கருங்குவளைக்கும் குயிலுக்கும் கூந்தலுக்கும் மீசைக்கும் யானைக்கும் அழகுண்டு (கருப்புநிறத்திற்கு அழகில்லையென்றால் ஹேர்டையிங் நிறுவனங்கள் எதுவுமே செயல்படமுடியாது). பர்தா என்ற கருதுகோள் மீது எனக்கு துளிகூட விருப்பமில்லையென்றாலும் கருப்பான புர்க்காவிற்கு எவ்வளவு அழகு (புர்காவின் அழகுதான் மாதவிக்குட்டியை இஸ்லாம் மதத்தை நோக்கி ஈர்த்த பல காரணங்களில் ஒன்று என்று எனக்கு தோன்றுகிறது. தனிமையும், அழகும் நிறைந்த ஒரு குடிலில், கடவுளின் அரவணைப்பில் மட்டும் வாழ அவர் விழைந்திருக்கலாம். பிறர் பார்ப்பதைவிட ‘நுண்விவரணைகளை’ காணக்கூடிய உயிர்துடிப்பு கொண்ட கலைஞனை பொறுத்தவரை இந்த உலகில் முக்கியத்துவம் இல்லாத பொருள் என ஒன்றுகூட இல்லை. அந்த உலகில் அவன் வாழ்கிறான் என்பதை மறக்கவேண்டாம்). நடைமுறை உலகில் கருப்பிற்கும் வெள்ளைக்குமான அதிகப்படியான சுட்டுதல்கள் அறிதலின் பகுதியாக ஆவதற்கு முன்புள்ள ஒரு வெள்ளைநிற குழந்தை இப்படி சொல்கிறது “ கருப்பான குழந்தைகள் அதிர்ஷ்டசாலிகள். சேறு பட்டால் வெளியே தெரிவதில்லை, குளிக்கத்தேவையில்லை. அவர்களை அழுக்காக்கவே முடியாது, எப்போதுமே விளையாடலாம்.” குழந்தைகளில் கருத்ததோ, வெளுத்தோ அல்ல. குழந்தைகளில் விரூபிகள் இல்லை என்று தஸ்தாயெவ்ஸ்கி சொன்னது இந்த நிறசுட்டுதலையும் சேர்ந்துதான். இருக்கும் சொற்களிலே கருப்பும், வெள்ளையும்தான் அதிக எடையில்லாத சொற்கள், குழந்தைப்பருவத்தில். தனிமனிதனின் குழந்தைப்பருவத்திலும், சமூகத்தின் குழந்தைப்பருவத்திலும். பின்பு அவை அதிக எடையை சுமக்க ஆரம்பித்தன. எதிர்ப்புணர்வும் பற்றும் போல, இரவுபகல் போல, இன்பதுன்பம் போல, ஒன்றின்மீது பிறிதொன்று படுத்துக்கிடக்கும் கரையும் கடலும்போல இருளும் வெளிச்சமும் ஒன்றையொன்று வளர்க்கிறது என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.
3.
மோசஸ் தன் பெட்டகத்திலிருந்து இரண்டு பறவைகளை வெளியே விட்டார். காகத்தையும் புறாவையும். காகம் திரும்பிவரவில்லை, புறா தன் அலகில் ஆலிவ் இலைகளுடன் திரும்பவந்தது. (வெள்ளைபுறாவும், ஆலீவ் இலையும் அத்துடன் குறியீடுகளாக ஆகிவிட்டன). வெள்ளைபுறாவின் அலகில் உள்ள ஆலிவ் இலை மோசஸிடம் ”அந்த நீண்ட இரவு முடிந்துவிட்டிருக்கிறது” என்று சொன்னது ( மொழிக்கு முன்பு உள்ள தொடர்புறுத்துதல் (pre Babelian Language) திரைமொழியில் மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது என்று திரைவிமர்சகர்கள் சொல்கிறார்கள். ஒருவகையில் எல்லா கலைவடிவங்களும் இன்னும் பொருத்தமான மொழிநிலையை மீட்டெடுக்கக்கூடிய முயற்சிகள்தான். கலைப்படைப்புகளில் உருவாகிவந்த படிமங்களும், குறியீடுகளும், குறியீட்டுரீதியான அனுபவங்களும் அதைத்தான் காட்டுகின்றன, இந்த கட்டுரையில் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட நேரடியான பொருள்கொள்தலில்(‘Literalism’) இருந்து விடுதலை எல்லா கலைவடிவங்களிலும் நிகழ்ந்திருக்கிறது). இந்த இரண்டு பறவைகளைப்பற்றிய கதை இரவுபகலைப்பற்றி உருவகக்கதையாக இருக்கலாம், பிரளயத்தின் இருட்டிற்கு பிறகு உலகம் புலர்ந்ததன் கதை. அதிகாலையில் பறவைகள் மரங்களிலிருந்தும், கோழிகள் முற்றத்திலிருந்தும் ’உலகம் மீண்டும் உயிர்துடிப்பை அடைந்துவிட்டது’ என்பதை அறிவிக்கின்றன. ஓடும் நதிகூட பொழுது புலர்ந்துவிட்டதன் பரவசம்தான். பொழுதுவிடிந்தால் போதும் என்று நோயாளிகள் காத்திருப்பது பகல் என்ற அபயத்தை. புலரும்போது பல பாதைகளை தெளிவாகக்காணமுடிவதுபோல பல வழிகள் துலக்கமாகின்றன. விடிந்தால் போதும் என்று யோசித்த கடினமான மழைக்கால இரவுகளில் ஒன்றின் கற்பனைதான் பைபிளில் உள்ள நோஹாவின் கதையா(The story of noah and the ark)?
மோஸஸ் அனுப்பிய காகம் எங்கு சென்றது? இருட்டின் ஆதிக்கம் கொண்ட பரலோகத்திற்கா? (அந்தபக்கத்தை இருட்டு என்று நாம் உருவகிக்கிறோம். இருட்டுவதற்குள் கூடணைவதற்கான பதற்றம் நம்மைவிட புராதானமானது, ஆழமானது). மரணத்திற்கும் காகத்திற்கான உறவில், அந்த உறவிற்கான காரணங்களில், மோஸஸிடமிருந்து அது எங்கு சென்றுசேர்ந்தது என்பதைப்பற்றிய தடயம் ஏதாவது இருக்கிறதா? இவ்வளவு காலம் கடந்துவிட்டபின்பும், நம் வீட்டை சுற்றி நம்முடன் வாழ்ந்தும் காகம் நம்முடன் ஒத்துழைப்பதில்லை. காட்டுச்செடிகளான கோதுமையும் நெல்லும் தேயிலையும் காப்பியும் காட்டுவிலங்குகளான நாயும் பசுவும் ஆடும் எருமையும் கழுதையும் குதிரையும் நமக்கு பழக்கப்பட்டதாக ஆன பின்பும் காகம் நமக்கு பழக்கமானதாக ஆகவில்லை. மரணத்தை மனிதனால் பழக்கப்படுத்த (domesticate) முடியவில்லை, அதேபோல மனிதனின் எய்தமுடியாமையில் காகமும் இருக்கிறது என்பதால்தான் மரணத்துடன் காகத்தை நாம் தொடர்புபடுத்துகிறோம். அதற்கு வேறு ஒரு காரணம்- காகம் இரவின், ரகசியத்தன்மையின் நிறம் என்பதும்தான். ஒரு துண்டு இருட்டுதான் காகம். புலர்ந்தபிறகு இருட்டு காகத்தில் மிச்சமிருக்கிறது. காகத்தை ” கூரிருட்டின் செல்லமகள்” என்கிறார் வைலோப்பிள்ளி.
தனக்குள்ளே பண்படாத, பழக்கப்படுத்துவதை விரும்பாத அமைதியின்மையின் இயல்புகளுடன் நெருக்கமானது என்பதால்தான் முழுமையாக பழக்கப்படுத்திவிடமுடியாத யானையும் (சஹ்யனின் மகன்) காகமும் வைலோப்பிள்ளியின் கவிதைகளில் இடம்பெறுவதற்கு காரணம். திருமணம் ஆனதும் வீட்டுவிலங்காக ஆக மறுத்து ஆசிரியர்களுக்கான குடியிருப்பில் தனிமையில் வாழ்ந்தவர் வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனோன். தன் கவிதையில் அவரிடம் அவர் மனைவி “ அவ்வளவு அக்கறையாக நீங்கள் ஏன் காகத்திற்கு உணவூட்டுகிறீர்கள்? ” என்று கேட்பதாக உருவகிக்கிறார். தொடர்ந்து “ நான் ஒரு காகமாக வந்தால் நீங்கள் எனக்கு அன்புடன் உணவூட்டுவீர்களா?” என்று கேட்டுவிட்டு “ இல்லை, அப்போதும் நீங்கள் என்னை விரட்டி அடிப்பீர்கள்” என்று தானே பதில்சொல்லிக்கொள்வதாக உருவகிக்கிறார். தஸ்தாயெவ்ஸ்கிக்கும், காஃப்காவிற்கும், சாமுவெல் பெக்கெட்டிற்கும்(Samuel beckett) உள்ள இருட்டு மீதான சார்பின் மலையாள பிரதிநிதி வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனோன். இருட்டில் ஒவ்வொருவரும் தனியர்கள், வெளிச்சத்தில் சிலரைத்தவிர யாரும் தனியானவர்கள் அல்ல. அவர்களில் இருட்டு காகத்தில் என்பதுபோல புலராமல் மிச்சமிருக்கிறது. எப்போதும் தூய வெள்ளைநிற உடையில் இருக்கும் கவிஞர் ஜி.சங்கரகுறூப்பிடம் கவிதையில் கொஞ்சம் கசப்பை சேர்க்க வைலோப்பிள்ளி சொல்கிறார். சுவைகளின் இருட்டு கசப்பு. ரகசியத்தன்மை இல்லாத, பகல்வெளிச்சம் போன்ற எந்த உட்சிக்கல்களும் இல்லாத மனம்கொண்டவர்களின் கவிதைகள் மேல் வைலோப்பிள்ளிக்கு எந்த ஆர்வமும் அக்கறையும் இல்லை. ‘ கொஞ்சம் கண்ணீர் கலக்காத வாழ்க்கைப்பலகாரம் எதற்கு?’ என்று சொல்லும் இடச்சேரி, வைலோப்பிள்ளிக்கு மிகமிக பிடித்தமான கவிஞர். பெயர்போல, பலசந்தர்ப்பங்களில் வகித்த பொறுப்புகள்போல, இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையேயான மத்தியஸ்தனாக கவிதையிலும் இடச்சேரி இருந்தார்.
இருட்டின் பின்னணியில் உள்ள வெளிச்சத்தில்தான் உண்மை இருக்கிறது என்பதை நன்றாக அறிந்தவர் கவிஞர் இடச்சேரி. ஒரு கவிதையில் அம்மா மகனிடம் போர்த்திக்கொள்வதற்கான புதுபோர்வை கேட்கிறார், வாங்கிக்கொண்டு வரும்போது அவள் மண்ணை போர்த்தியபடி படுத்திருக்கிறாள். மகன் ‘ஒரு கூம்பாரம் மண்ணை போர்த்திக்கொண்டு கிடக்கிறாள், அடைக்கமுடியாத கடன்தான் என் வாழ்க்கை’ என்கிறான்.
இருட்டில் பயணம் செய்வதற்கான பரவசத்தை ” இந்த தாழ்வான நிலத்தில் தேர்சக்கரத்தை செலுத்த எனக்கு அவ்வளவு விரும்பம்” என்று சத்திய வாக்குமூலம் போல சொல்கிறார் இடச்சேரி. சொந்த மகனின் மரணம் தந்த இருட்டையும் பூஜைக்கான மலராக ஆக்கினார் இடச்சேரி. ‘குரூரமே, நீ எவ்வளவு சாஸ்வதமான உண்மை, கருணையுடன் நான் மலர்களை தூவுகிறேன் கருணைமயமான ஞானமே………’ கல்கத்தா தீசிஸின் பின்னணியில் மார்க்ஸிசத்தின் வெளிச்சத்தைவிட இருட்டுதான் நல்லது என்று கவிஞர் அக்கித்தம் உணர்ந்துகொண்டார். ‘ வெளிச்சம் துயரம் நிறைந்ததல்லவா, இருட்டு அல்லவா மகிழ்ச்சியை அளிக்கிறது’ அறிவொளிக்காலத்தின் (enlightment) விளைவாக உண்டான இந்த பெருவெளிச்சம் நிழலை உருவாக்கியது, ரஷ்யாவில் குளக்குகளை இல்லாமலாக்கியது(De-Cossackization) , அதிகவெளிச்சம் கொண்ட அறைகளை உருவாக்கியது (Concentration Camps), எண்ணிலடங்காத கொலைகளை நிகழ்த்தியது. இது ஒரேவழி என்று சொன்னவர்கள் அலமாரிகளில் புத்தகங்கள் மட்டுமல்ல, மண்டையோடுகளையும் அடுக்கிவைத்தார்கள். இடாலோ கால்வினோ சொன்னதுபோல மார்க்ஸியம் என்பது நாம் இருக்கும் நரகத்தைப்பற்றிய தீவிரமான, ஒட்டுமொத்தமான அறிதலாக இருக்கலாம் (The awareness of the hell that we are in). ஆனால் அது கொலை செய்வதற்கு தேவையான வெளிச்சத்தையும் காட்டியது.
புராதானமான காலத்தில் சொர்க்கம் முழுக்க வெளிச்சமாக இருக்கும் என்றும், நரகம்முழுக்க முழுக்க இருட்டாக இருக்கும் என்று நாம் உருவகித்திருந்தோம். ஆனால், காலத்தின் சுழற்சியுடன் நம் கற்பிதங்களும் மாறுகின்றன. நரகத்திற்கு கண்சிமிட்டாத வெளிச்சம் என்று concentration campல் இருந்தவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். நீங்கள் எவ்வளவுதூரம் சுதந்திரமற்றவர்கள் என்று எப்போதுமே உங்களை உணர்த்திக்கொண்டிருக்க வேண்டாமா? தனிமைச்சிறைகளில் அந்த தனிமையை எப்போதும் உணர்த்த அணையாத விளக்கு வேண்டும். அணையா விளக்கு அபயத்தின் குறியீடு மட்டுமல்ல இன்று. அச்சத்தின் குறியீடு. ‘ கருணையின் வடிவான இருள் வந்தது’ என்று கவிஞன் சொல்வதில் இருட்டில் உள்ள அடைக்கலமும் சுட்டக்காட்டப்படுகிறது. வெளிச்சத்தில் இருக்கும் அளவுக்கு சுதந்திரமின்மை இருட்டிற்கு இல்லை. நம் கற்பனைக்காற்றில் பறக்கும் விமானங்களுக்கான விமானநிலையம்தான் இருட்டு. இருட்டுதான் வெளிச்சமாகிறது, வெளிச்சம் இருளாகி விடுகிறது. பிரிட்டீஷ் ஆளும் இந்தியாவின் நரகம் இருட்டானது, சர்வாதிகார சக்திகள் ஆளக்கூடிய எதிர்கால இந்தியாவின் நரகத்தில் பரிபூர்ணமான வெளிச்சம் இருக்கும். இருட்டின் சிறுநிழலைக்கூட சகித்துக்கொள்ளமுடியாத குரூரமான வெளிச்சம். ‘ காகத்தின் கால்நிழல்கூட இல்லாத ஒரிடம்’ என்கிறார் கடம்மனிட்டா ராமகிருஷ்ணன். அன்று இருட்டு, வெளிச்சம் இன்று அனுபவிக்கும் ஒப்புதல்களை அனைத்தையும் பெற்றிருக்கலாம். நிழலை இருப்பு இருட்டுடன்தான் என்று அன்று புரிந்துகொள்ளப்படலாம். ‘ எல்லா அம்மாக்களும் வெள்ளையானவர்கள்/ என் அம்மா கருப்பு அல்லவா’ என்பதுதான் விவேகத்தின் தன்னுரை.
4.
குளிர்ந்திருண்ட இரவின் நிரந்தரமான கோரிக்கைதான் நெருப்பை பல வடிவங்களாக வளர்த்தது. ‘ ஒருமுறை ஒரே ஒரு தீக்குண்டத்தை சுற்றி/ ஒற்றை மோதிரம்போல தெளியும் முகங்களில் இருந்துதான்/ எல்லாம் எல்லாம் உயிர்கொண்டன’ என்று மேதில் ராதாகிருஷ்ணன் எழுதுகிறார். இரவில் நெருப்பை சூழ்ந்து அமர்ந்திருத்தலிருந்துதான் கதையும், கவிதையும், இசையும், நடனமும், தத்துவசிந்தனையும், வரலாறும், அறிவியலும் உருவெடுத்தது.
நெருப்பில் தெளியும் முகம்தான் என்னைப்பொறுத்தவரை மனிதன்.
இரவின் ஒருகீற்று வெளிச்சம் தீயாக இருந்தபோது
தெளிந்தன முகங்கள்
அர்த்தராத்திரியில் கூட்டமாக விரியும் சூரியகாந்திபூக்களைப் போல.
இமைமூடும் கணங்களில் மரணமும் வெளிச்சமும்
பரஸ்பரம் தங்களை மாற்றிக்கொள்ளும்போது
முகங்களில் ஒன்று பிறிதொன்றை கைப்பற்றிக்கொள்கிறது.
அந்த முகங்களிலிருந்துதான் கதைகள் தோன்றுகின்றன
எல்லா பேசுபொருள்களும், விவரணைகளும்.
தீ உள்ள படைப்புகளிலெல்லாம் இருள் பின்னணியில் இருக்கும், அதன் அழுத்தம் இருக்கும்.
அவல நகைச்சுவைக்கு மலையாளத்தின் முதல் அவதாரமான பஷீரின் ‘சப்தங்கள்’ நாவலை பாருங்கள். நகரவாழ்க்கையில், இரவின் இருட்டில் கேட்கும் சப்தங்கள்தான் சப்தங்கள். பகல்வெளிச்சத்தில் துலங்காத, தெளிவாக கேட்கமுடியாத சப்தங்கள். அது அன்றைய இந்தியாவின் இருட்டின் வெளிப்பாடு. சி.அய்யப்பனின், வி.பி.சிவகுமாரின் கதைகள்போல இருட்டின், தனிமையின் அழுத்தங்களால் உருவான கதைகள் மலையாளத்தில் அவ்வளவாக எழுதப்படவில்லை. காஃப்காவும் காம்யுவும் சார்த்தரும் மலையாளிகளுக்காக எளிமையான மன அமைப்புகொண்ட எம்.முகுந்தனிலும் காக்கநாடனிலும் உருவெடுத்தது நம்மில் கிளர்ச்சியை மட்டுமே ஏற்படுத்தியது. கோவிலனும், ஓ.வி.விஜயனும், ஆனந்தும், மாதவிக்குட்டியும், எம்.டி.வாசுதேவன் நாயரும், சக்கரியாவும், சி.ஆர்.பரமேஸ்வரனும் நம் வாழ்க்கையின் துளிவெளிச்சம்கூட நுழையமுடியாத இருட்டை அறிந்தவர்கள். இருட்டிலிருந்து மலையாளியை விலக்கிய பிரதானமான சக்தி முற்போக்கு இலக்கியம். சுரங்கத்தின் மறுமுனையில் ஒளி உண்டு என்று சொல்லி பரப்புவதுவழியாக எழுத்தின் ஆற்றலை கணிசமாக வலுவிழக்கச்செய்தவர்கள் அவர்கள். அதனால் மலையாளிகள் மகத்தான ஆசுவாசங்களையோ, பெரிய பதற்றங்களையோ கற்பனைசெய்யக்கூட முடியாதவர்களாக ஆகிவிட்டார்கள். அகஆழத்தை வெளிப்படுத்த முடியாதவர்களாக ஆகிவிட்டார்கள். உடலை மிகையாக அலங்கரிக்கும் பொருட்களை கூடுதலாக விற்கும் நாட்டின் பொய்முகத்திற்கு இணங்கும்படி எழுதப்படும் பலவீனமான, மேலோட்டமான இலக்கியம் நம் மொழியின் தலைவிதியாக ஆகியது. இங்கு இருட்டு இல்லாததால் அல்ல, இருட்டை அங்கீகரிக்காததால், எதிர்கொள்ளாததால் எதிர்ப்பார்ப்புகளால் அதனை எளிமைப்படுத்தியதால்தான் இப்படி நிகழ்ந்தது. ‘சொல்லாமல் விட்டால் அது இல்லாமலாவதில்லை’ என்ற அமைதியின்மை அனைவரிலும் எஞ்சியது.
மனிதமனம் கொஞ்சம்கூட எளிமையானது அல்ல. ஸ்டீவன் பிங்கர் (Steven pinker) தன் ‘சித்திரவதைகளின் வரலாற்றில்’ என்ற நூலில் சில ஆய்வுகளை மேற்கோள்காட்டுகிறார். ஒருவர் ” யாரையும் கொல்லவில்லை. ஆனால் பலரின் இறப்புச்செய்தியை வாசித்து மகிழ்ச்சியடைந்திருக்கிறேன்” என்கிறார். ஒரு ஆராய்ச்சியாளர் தான் நடத்திய கள ஆய்வை அடிப்படையாக வைத்து ‘ நான் ஆய்வுசெய்த நபர்களில் எழுபது சதவிகிதம் பேர் கடந்த ஒரு வருட கால இடைவெளியில் யாரையாவது ஒருதடவையாவது கொல்லவிழைந்தவர்கள். கள ஆய்வில் கலந்துகொண்ட இளம்பெண் ஒருத்தி இந்த முடிவுக்கு இப்படி எதிர்வினையாற்றுகிறாள்: “ யாரையும் கொல்ல விழையவில்லை என்று சொன்ன முப்பது சதவிகிதமும் பொய்சொல்கிறார்கள்”. மாண்பான நபர்கள் கொலையை கனவுகாண்கிறார்கள், அப்படி அல்லாதவர்கள் அதை நிகழ்த்துகிறார்கள். பிறர் இறக்கும்போது அடக்கமுடியாத கிளர்ச்சியை(thrill) அடையும் ஒருவன் சொந்த தந்தையின் இறப்புசடங்கில் கலந்துகொள்ளாமல் பின்வாங்குகிறான். ஓப்பன்ஹைமரின் குற்றவுணர்வு அணுஆயுதத்தை உருவாக்கும்போது தான் அனுபவித்த கிளர்ச்சி எவ்வளவு அபாயகரமாகமானது என்பதாலும் இருக்கலாம். நாவலும் சினிமாவும் தரும், கிரைம் திரில்லர் நாவல்கள் தரும் ’த்ரிலுக்கான’ காரணம் நம் ஆழத்தில் உள்ள குற்ற இயல்பின் வெளிப்பாடல்ல என்று சொல்லமுடியாது. ‘ஈடிபஸ் ரெக்ஸ்’ ஒரு துப்பறியும் கதை என்கிறார் போர்ஹே. துப்பறிபவன் ’குற்றவாளி நான்தான்’ என்று கண்டடையும் முதல் துப்பறியும் கதை அது. எல்லா மனிதனிலும் உள்ள இருட்டின், உச்சபட்சமான வெளிச்சத்தின் காரணத்தை கண்டடைய முயன்ற ஃப்ராய்டிற்கு சோஃபோக்ளிஸின் ’ஈடிபஸ் ரெக்ஸ்’ வசீகரிமானதாக இருந்ததற்கு காரணமும் அதுவாக இருக்கலாம். குமாரன் ஆசானின் லீலாவின் கணவன் எதிர்பாராதவிதமாக இறந்தபோது ‘ சிலர் அமங்கலங்களை காணமுடியும், சிலர் அமங்கலங்களை விதைக்க முடியும்’ என்று லீலா வருத்தப்படுகிறாள். ‘இறந்தவர்களை பார்த்து அதற்கு காரணம் நான்தான் என்ற எண்ணம் எழாத யாராவது ஒருவர் உண்டா?’ என்று பாலாமணியம்மா வருந்துகிறார். எல்லா மரணங்களும் அந்த மரணம் நிகழ்ந்தேறவேண்டும் என்று விழையும் குறைந்தபட்சமாக ஒரே ஒரு நபரின் விழைவாக இருக்கலாம். ஒரு விண்ணப்பமாவது கிடைக்கவில்லையென்றால் கடவுளால் அந்த நடவடிக்கையை எடுக்கமுடியுமா? மகிழ்ச்சி வெள்ளையானது என்பதால் அது வெள்ளை காகிதத்தில் மறைந்திருக்கும் என்கிறார் மந்தர்லாண்ட்(Henry de Montherland). Happiness writes white, it is invisible in the page. வெள்ளைநிறம் கருப்பு சமதளத்தை விழைகிறது. கருப்பு வெள்ளை சமதளத்தை. ‘” என்றும் கடல்கொள்ளும் பிறப்பு எனும் மணற்திட்டில் நான்” என்ற துயரம் ஆழத்தில் எங்காவது சுரக்காதவர்களை கவிஞர்கள் என்று சொல்லமுடியாது. வெண்மை எவ்வளவு அருவருப்பானது? நன்னம்பிக்கை அவ்வளவு பொய்மையானது இல்லையா?
ஈரோடு பெருந்துறையை சேர்ந்த அழகிய மணவாளன், கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். நாவல் கலை பற்றிய மலையாள நாவலாசிரியர் பி.கே.பாலகிருஷ்ணனின் விமர்சன நூலை "நாவலெனும் கலைநிகழ்வு" எனும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். இலக்கியத்திற்கு அப்பால் நிகழ்த்துகலையான கதகளியில் அவருக்கு ஆர்வமுண்டு.