/

உஸ்தாத் : சுகுமாரன்

அன்றைய நாள் முழுமையடைவதற்குள் வழக்கத்துக்கு மாறான ஏதோ ஒன்று நிகழப்போவதை உணர்ந்த உஸ்தாத் வழக்கத்துக்கு முன்பே விழித்துக் கொண்டார். கம்பளி ரஜாயை ஓரமாகத் தள்ளி விட்டு எழுந்து கட்டிலிலேயே உட்கார்ந்தார். ‘யா அல்லா’ என்று உச்சரித்தார். உள்ளங்கைகளால் முகத்தை வருடிக் கொண்டார். லேசாக வாயைத் திறந்து தாடியைச் சொறிந்து கொண்டார். ‘தாடியை ஒழுங்குபடுத்த நாளாகி விட்டது’ முணுமுணுத்தபடி சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தார். ஃபஜர் தொழுகைக்கு இன்னும் நேரமிருந்தது. மின் விசிறியின் பிரமாணம் தப்பாத குமுக்குச் சப்தமும் ரீங்காரமும் அந்த இருளில் எப்போதையும் விட இப்போது உரக்கக் கேட்பது போலிருந்தது. தூரத்தில் ஓடும் கங்கை நீரில் மிதக்கும் மீன்பிடிப் படகிலிருந்து வந்த பாடலின் மெல்லிய ஓசையும் கேட்பது போலவும் இருந்தது. அந்த ஒலியை மறைப்பதுபோல கல் தரையில் உருண்டு நெருங்கும் சைக்கிள் ரிக்ஷாவின் நறநறப்பும் கேட்டது.

‘மகாதேவும் இன்று சீக்கிரமே வந்து விட்டான்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டே உஸ்தாத் எழுந்தார். விளக்கைப் போட்டுப் படுக்கையின் தலை மாட்டில் துழாவினார். தலையணைக்கடியிலிருந்த பீடிக் கட்டையும் தீப்பெட்டியையும் எடுத்துக் கொண்டு மறுபடியும் கட்டிலில் உட்கார்ந்தார். கட்டிலிருந்து ஒரு பீடியை உருவி அதன் முனையால் தீப்பெட்டி மேல் இரண்டு மூன்று முறை தட்டினார். அதை எடுத்து உதடுகளுக்கிடையில் கவ்வினார். பிறகு அதை எடுத்துக் கட்டுக்குள்ளேயே சொருகினார். பீடிக் கட்டையும் தீப்பெட்டியையும் மறுபடியும் தலையணைக்கடியிலேயே வைத்து விட்டு எழுந்தார். நடந்து முன்னறைக்கு வந்து வாசற் கதவைப் பார்த்து ‘ இதோ வந்து விடுகிறேன்’ என்று சொல்லி விட்டுக் குளியலறையை நோக்கி நடந்தார். வெளியிலிருந்து ரிக்ஷாவின் மணி சரி என்று பதில் சொன்னது.

உறையில் உறங்கும் வாத்தியத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வாசலைத் திறந்து படிகளிறங்கித் தெருவில் கால் வைத்தபோது குளிர் காற்றில் பாங்கு ஒலித்தது. உஸ்தாத் ஒரு வினாடி நின்றார். மனதுக்குள் மண்டியிட்டுத் தொழுதார். குல்லாவைச் சரி செய்து கொண்டு ரிக்ஷாவின் இரும்புச் சட்டத்தைப் பிடித்து ஏறவிருந்தபோதுதான் வந்திருப்பது மகாதேவல்ல என்பதைக் கவனித்தார். சட்டென்று காலைக் கீழிறக்கி வைத்தார். இவன் ஆளே புதிதாக இருக்கிறான். இருட்டில் அடையாளம் தெரியவில்லை. புத்து இல்லையா? யார் இவன்?

‘அரே பேட்டா, நீ யார்? மகாதேவ் எங்கே? ‘’ என்று கேட்டார்.

‘’ பேஜார் ஆகாதீர்கள், சாகிப், மஹிபாய்தான் என்னை அனுப்பினான்? அவசர வேலையாக ராம் நகர் போயிருக்கிறான். நேற்று இரவே என்னிடம் ரிக்ஷாவைக் கொடுத்து காலையில் உங்களை மந்திருக்கு அழைத்துப் போகச் சொல்லியிருந்தான். அதனால்தான் வந்தேன்’’

வாசலில் அரவம் கேட்டு உஸ்தாத் வீட்டு முற்றத்து விளக்கு பளிச்சிட்டது. உள்ளேயிருந்து நசீமின் குரல் வந்தது.

‘பாபா, என்னாயிற்று?’’ என்ற கேள்வியைத் தொடர்ந்து தாழ்ப்பாள் விலகும் ஓசை கேட்டது.

‘’ இல்லை, பேட்டா, ஒன்றுமில்லை. நீ கதவைத் திறக்க வேண்டாம். ரிக்ஷா வந்து விட்டது. நான் போகிறேன்’’ என்று ரிக்ஷாவில் ஏறிக் கொண்டார்.

அந்த வெளிச்சத்தில் புதியவனின் உருவம் தெளிவாகப் புலப்பட்டது. கறுத்த உருவம். கம்பளி ஸ்வெட்டர் போட்டிருந்தான். தலையில் கம்பளிக் குல்லாய். வெளிச்சத்தில் கண்கள் திராட்சைக் குண்டுகளாக மின்னின. கம்பளிச் சட்டைக்குள்ளே மார்புப் பகுதியில் ஒரு புல்லாங்குழலைச் சொருகி வைத்திருப்பது கண்ணில் பட்டது. புன்னகைத்தபடியே இருக்கையில் உட்கார்ந்தார். ‘’பேட்டா, போகலாம்’’ என்றார்.

ரிக்ஷா நகரத் தொடங்கியதும் ‘’ உன் பெயர் என்ன? ” என்றார். பெடலை மிதிக்கும் விசைக்கிடையில் சொன்னான் ‘’ கன்னையா, கன்னையா சௌத்ரி’’.

‘’ உனக்கு பாலாஜி மந்திர் எங்கே இருக்கிறதென்று தெரியுமா?’’

‘’ இது என்ன கேள்வி சாகிப், நான் கங்கைக் கரையில் பிறந்து வளர்ந்தவன் . இந்த பனாரசில் எனக்குத் தெரியாத மூலை இனி கண்டு பிடித்தால்தான் உண்டு’’ என்றான் கன்னையா.

‘’புதிய ஆளாக இருக்கிறாயே என்று கேட்டேன்’’ என்ற உஸ்தாத் ஒலியெழாமல் சிரித்தார். கல் தரையில் ரிக்ஷாவை ஓட்டும் திணறலில் பெரிதாக மூச்சு விட்டுக் கொண்டே ‘’ மகிபாய் உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறான். அவன் என்னுடைய சொந்தக்காரன் தான். மைத்துனன் முறை வேண்டும். உங்களைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தால் அவனுக்கு ஒரு நாக்குப் போதாது சாகிப். அப்படிச் சொல்வான்’’ என்றான்.

உஸ்தாத் இந்த முறை உரக்கவே சிரித்தார். ஹராகா சராயைத் தாண்டி பிரதான சாலையை அடையும் வரை அந்தச் சிரிப்பு நீண்டது. மகாதேவுக்கு அவரைப் பற்றிச் சொல்ல நிறையவே இருக்கும் என்பது உஸ்தாதுக்கும் தெரியும். எத்தனை வருடங்களாக அவருக்கு ரிக்ஷா ஓட்டுகிறான். கச்சேரிக்காக வெளியூர் செல்லும் நாட்கள் தவிர வாராணசியில் இருக்கும் நாட்களில் புத்துவின் ரிக்ஷாதான் அவருடைய பயண ஊர்தி. உலகத்தின் ஏதேதோ மூலை முடுக்கிலிருந்தெல்லாம் ஆட்கள் உஸ்தாதைப் பார்க்கப் பறந்து வருகிறார்கள். கப்பல் மாதிரியும் தேர் மாதிரியும் கார்களில் வருகிறார்கள். ஆனால் அவர் ஆசைப்பட்டுப் பயணம் செய்வது தன்னுடைய லொடுக்கு வண்டியில்தான். அதில் அவனுக்கு கர்வம் அதிகமாகவே இருந்தது.

அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பு அவரை பாலாஜி மந்திருக்கு அழைத்துச் செல்ல வாசலில் ஆஜராகி விடுவான். பகலில் நகரத்துக்குள்ளே போக வேண்டுமென்றாலும் வந்து விடுவான். உஸ்தாத் இருக்கும் நாட்களில் பெனியா பார்க்குக்கு முன்னால் வண்டியைப் போட்டிருப்பான். தெரு முழுக்க அடைத்துக் கிடக்கும் மின்சாதன விற்பனைக் கடைகளுக்கும் எந்திர உறுப்புகள் விற்கும் கடைகளுக்கும் பிளாஸ்டிக் உருப்படிகளை வியாபாரம் செய்யும் மொத்த விற்பனைக் கிடங்குகளுக்கும் சரக்கேற்றி இறக்குவான். உஸ்தாதின் சவாரி என்றால் வண்டியைத் துடைத்துச் சுத்தமாக்கி ஊதுபத்தி கொளுத்தி ஹாண்டிலில் சொருகி வைப்பான். சில நாட்களில் செவ்வந்திப் பூமாலைகளையும் தொங்கவிட்டு வாசலுக்குக் கொண்டு வந்து நிறுத்துவான். அந்த நாட்கள் வாராணசியின் விசேஷ நாட்களாக இருக்கும்.

‘’அரே மகாதேவ், நானென்ன மாப்பிள்ளை ஊர்வலமா போகப் போகிறேன் இப்படி அலங்காரம் செய்ய? ‘’ என்று உஸ்தாத் பலமுறை கேட்டுமிருக்கிறார்.

‘’ மாப்பிள்ளை ஊர்வலமில்லை உஸ்தாத். ராஜாவின் நகர்வலம். நீங்கள் எங்கள் மகாராஜா இல்லையா? ’’ என்று ஒவ்வொரு முறையும் அவனிடமிருந்து பதில் வரும்.

பிரதான சாலையில் ஓடத் தொடங்கியதும் ரிக்ஷாவின் குலுக்கம் குறைந்தது. உஸ்தாத் கண்களை மூடிக் கொண்டார். பூங்காவுக்குள்ளே மரக்கிளைகளிருந்து கிளிகள் சிறகடிப்பதையும் கீச்சிடுவதையும் கேட்டுக் கொண்டிருந்தார். கொஞ்சம் கழித்து வீதிப் பசுக்கள் நடக்கும் குளம்படிச் சத்தங்கள் .’ ராம் ராம் சத்யஹே’ என்ற உச்சாடனம். வாகனம் முன் நகர நகர சுற்றிலுமிருந்து எழும் வினோதமான ஒலிகளில் உஸ்தாதின் புலன் குவிந்தது. உலகமே ஒலியால் உண்டானதுதான். நாதங்கள், லயங்கள். ஓயாத ஒலிகள். ஒலியின் அதிர்வுகள். எல்லாம் எல்லா நாளும் கேட்பவைதான். எல்லா நொடியும் கேட்பவைதாம். ஆனாலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் எப்படிப் புதிதாகவே ஒலிக்கின்றன? இவற்றையெல்லாம் மீறி இதோ கங்கையின் சுவாசம் ஒலிக்கிறதே? மா கங்கா’ என்று பெருமூச்சு விட்டார் உஸ்தாத்.

மந்திர் வாசலில் வாத்தியத்துடன் இறங்கினார் உஸ்தாத். கன்னையாவைத் திரும்பிப் பார்த்தார். அவனுக்குப் புரிந்தது. ‘’ நீங்கள் வரும் வரைக்கும் நான் இங்கேதான் இருப்பேன். புத்து சொல்லியிருக்கிறான்.’’ என்றான். ரிக்ஷாவைத் தள்ளிக் கொண்டு சாலையின் மறு சிறகுக்கு நகர்ந்தான்.

மந்திர் வாசலில் நின்று நொடி நேரம் உள்ளே பார்த்துக் கண்களை மூடினார் உஸ்தாத். இன்னும் கருவறை திறக்கவில்லை. அவர் வராமல் கருவறை திறந்ததில்லை. அவர் வாத்தியம் வாசிக்காமல் பாலாஜியும் விழித்ததில்லை. உள்ளே நுழைந்தார். கால்களைக் கழுவி விட்டு சங்கீத மண்டபத்துக்குள் சென்று அமர்ந்தார். வாத்தியத்தை உறையிலிருந்து எடுத்தார். பத்தூரை எடுத்துக் நலியில் சொருகினார். கருவியை வாயில் வைத்து மூச்சைச் செலுத்தினார். உயிரின் முணுமுணுப்பில் ஆலயம் விழித்தது. பாலாஜி விழித்தார். சூரியன் கண் திறந்து உலகத்தைப் பார்த்தது. உஸ்தாத் மூடிய கண்களுக்குள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

000

‘’கண்ணை மூடி இசையை மட்டுமே பார். அதன் துடிப்பை மட்டுமே வாசி. நாபியிலிருந்தோ தொண்டையிலிருந்தோ வாசிக்காதே, உயிருக்குள்ளே ஓடுகிறதே கங்கை அதன் உச்சரிப்பைக் கேட்டு வாசி’’

மாமா அலிபக்ஸ் கான் சொன்னது கமருத்தீனின் நினைவில் இருந்தது. அவனுடைய நாளங்களுக்குள் கங்கையின் ஈரம் சொட்டிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு துளி விழும்போதும் உள்ளே ஏதோ கரைந்து கொண்டிருந்தது. ஏதோ விளைந்து கொண்டிருந்தது. இருள் முற்றி ஒளியாகிற புள்ளிக்கும் ஒளி ஜொலித்து இருளாகிற புள்ளிக்கும் இடையில் கமருத்தீன் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தான். ஏதோ ஒன்று இந்தப் புள்ளியிலிருந்து அந்தப் புள்ளிக்கும் மறுபடியும் இங்கிருந்து அங்குமாகத் தள்ளி விட்டுக் கொண்டிருந்தது.

மாமாவிடம் அதைச் சொன்னபோது அவனைக் கட்டிக் கொண்டார். தலையை வருடிக் கொடுத்து ‘’ அது அப்படித்தான். அதை வெளியே சொல்லாதே. சொல்ல நினைத்தாலும் முடியாது’’ என்றார். ஏன் சொல்லக் கூடாது என்று கேட்க நினைத்தான் கமருத்தீன். ஆனால் கேட்கவில்லை.

பாலாஜி மந்திரின் மண்டபத்தில் ஓயாமல் சாதகம் செய்தான். ஒலி துளித் துளியாகத் திரண்டு திரண்டு வெளிச்ச வெள்ளமாகப் பொங்கியது. அந்த வெள்ளத்தை வகிர்ந்து கொண்டு ஒரு கறுத்த நிறச் சிறுவன் தன்னை நோக்கி நடந்து வருவதைக் கமருத்தீன் மூடிய விழிகளுக்குள் பார்த்தான். அந்தச் சிறுவன் தன் முன்னால் மண்டியிட்டு அமர்ந்து கண்ணிமைக்காமல் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தான். சட்டென்று கண் விழித்தான். சிறுவனைக் காணவில்லை. கண்களைக் கசக்கிக் கொண்டு எழுந்து நின்றான். சொல்ல முடியாத அனுபவம்தான் என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

000

உஸ்தாத் கண் விழித்தார். அவர் உடல் நடுங்கியது. நீரில் விழுந்த ஆலிலைபோல உள்ளே உணர்வு வட்டமிட்டது. இன்று வழக்கமான நாளாக இல்லை. ஏதோ தடங்கல். வாசிப்பில் இதம் கூடவில்லை. புலன் நிலைகொள்ளவில்லை. பிடி நழுவிப் போகிறது.’ யா, குதா , என்ன ஆயிற்று, இப்படி ஆனதில்லையே’.

அன்றும் உஸ்தாதின் வாசிப்பைக் கேட்டு மந்திருக்கு வந்திருந்த எல்லாரும் கண்ணீர் கசியத்தான் நின்றார்கள். பரவசத்தில் பேச்சு வராமல் நெகிழ்ந்து மௌனமாகத்தான் இருந்தார்கள். அவர்களுக்கு அது போதும். ‘எனக்கு அது எப்படிப் போதும்?’ உஸ்தாத் குமைந்து கொண்டிருந்தபோதுதான் அதைக் கேட்டார். சுருதி சுத்தமான புல்லாங்குழல் நாதம். இதுவரை கேட்டிராத புத்திசை. எங்கிருந்து என்று தெரியவில்லை. ஆனால் அவரை நோக்கித்தான் வருகிறது. அவருக்காக மட்டுமே வாசிக்கப்படுகிறது. அதைக் கேட்கும்போது நாசியில் அப்போதுதான் பிறந்த பச்சிளம் சிசுவின் கர்ப்ப வாசனையையும் உணர்ந்தார். விஸ்தாரமான வாசிப்பல்ல. இடைவிட்ட வாசிப்பு. வெறும் ஆலாப்பின் எடுப்பு. துண்டு துண்டான வாசிப்பு. ஸ்வரங்கள் துல்லியமாகக் கேட்டன. ஆனால் எந்த ராகத்தின் தாதுக்கள் என்று பிடிபடவில்லை. உள்ளுக்குள் ஊறிக் கிடக்கும் அநாதியான ராகங்களின் ஸ்வரங்களைக் கலைத்துக் கலைத்து யோசித்தும் வசப்படவில்லை. உஸ்தாதின் கால்கள் தளர்ந்தன. சற்று நகர்ந்து மண்டபத்தின் விளிம்புக்கு வந்தார். நாளங்களுக்குள் அந்த ஒலிக் கீற்றின் கார்வை தொனித்துச் செவிக்குள் எதிரொலித்தது. சுற்றிலும் பார்வையை அலைய விட்டார்.

பிராகாரத்தில் கூட்டத்திலிருந்து விலகி அன்னியர்களாகப் பரவசத்துடன் நின்றிருந்தவர்களை உஸ்தாத் பார்த்தார். பழகிய முகங்கள். தொலைக் காட்சிக்காரர்கள். அவர்கள் வருவதாகக் கடிதம் எழுதியிருந்தது சட்டென்று பொறியில் தட்டியது. பிரெஞ்சுக்காரர்கள். பாரிஸில் கச்சேரி நடத்தப் போயிருந்தபோது அறிமுகமானவர்கள். நெருக்கமானவர்கள். அந்த நகரத்தில் நடந்த எல்லாக் கச்சேரிகளுக்கும் வந்து அவர் வாசிப்பதைப் படம் பிடித்தார்கள். மூன்று பேர் குழு. ஒரு ஒளிப்பதிவாளர், அவருடைய உதவியாளர். அவர்கள் இருவருக்கும் தலைமையானவராக இயக்குநர். மூன்று பேருக்குமே இசை தெரிந்திருந்தது. அதிலும் இயக்குநர் பெண் பாஸ்கலுக்கு இசையின் நாடி புரிந்திருந்தது. ஆங்கிலமும் அரைகுறையாக ஹிந்தியும் தெரிந்திருந்தது. உஸ்தாதையும் அவருடைய இசையையும் தெரிந்து வைத்திருந்தாள். அவள்தான் அந்த யோசனையைச் சொன்னாள்.

‘’ உஸ்தாத், உங்களைப் பற்றி ஒரு படம் எடுக்க விரும்புகிறேன். உங்கள் ஊரில் உங்களுடன் இருந்து எல்லாவற்றையும் படம் பிடிக்க ஆசை. ஒரு நாள் பொழுது விடிந்தது முதல் நீங்கள் படுக்கைக்குச் செல்வதுவரையான எல்லாவற்றையும் படம் பிடிக்க வேண்டும். உங்களுடன் பேசி நீங்கள் சொல்வதையெல்லாம் பதிவு செய்ய வேண்டும்.ஒன்றோ இரண்டோ நாட்கள் படப்பிடிப்பு இருக்கும். நீங்கள் ஒப்புக் கொண்டால் உங்களுக்கு வசதியான நாள் குறிப்பிட்டால் நாங்கள் பறந்து வந்து விடுவோம்’’.

சொன்னது போலப் பறந்து வந்திருக்கிறார்கள். ஆனால் சொன்னதற்கும் முன்பாக. வந்து இறங்கிய அன்றே உஸ்தாதுக்குத் தகவல் தெரிவித்தார்கள். வாராணசியில்தான் இருக்கிறார்கள். ஆனால் இரண்டு நாட்களுக்குப் பின்புதான் அவரைச் சந்திப்பார்கள். அதற்கு முன் ஊரில் உஸ்தாதின் காலடையாளங்களைப் பின் தொடர்ந்து போவார்கள். அது முடிந்ததும் அவரைப் பின் தொடர்வார்கள். அந்தத் திட்டத்தைத்தான் உஸ்தாத் மறந்து தொலைத்திருந்தார்.

பாரிசில் விமானம் ஏறுவதற்குச் சில நாட்களுக்கு முன்பே இதையெல்லாம் கடிதத்தில் எழுதியிருந்தாள் பாஸ்கல். ‘நான் தான் கவனத்தில் வைத்துக் கொள்ளவில்லை’. ஞாபக மறதி ஏற்படுத்திய உறுத்தலுக்கும் பெயரற்ற நாதம் தூண்டி விட்ட குறுகுறுப்புக்கும் இடையில் திணறினார் உஸ்தாத்.

பாஸ்கல் அவரை நெருங்கி வந்தாள். ‘நமஸ்தே’ என்று கைகளைக் குவித்தாள். உஸ்தாத் கூப்பிய கரங்களைக் பற்றிக் கண்ணில் ஒற்றிக் கொண்டார். ‘வா, குழந்தாய், சொன்னபடி வந்து விட்டாய். இந்தக் கிழவன் தான் உன் வருகையைப் பற்றி யோசிக்காமல் இருந்து விட்டேன். மன்னித்துக் கொள்’ என்றார்.

‘‘உஸ்தாத், நீங்கள் மன்னிப்புக் கேட்பதாவது. மனிதர்கள்தான் கடவுளைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். கடவுள் எப்போதாவதுதான் மனிதர்களைப் பற்றி யோசிக்க வேண்டும்’’ என்றாள். உடன் வந்தவர்களை சைகையில் அழைத்தாள். அருகில் வந்ததும் அவர்களை மறுபடியும் அறிமுகப் படுத்தினாள். அவர்களின் குவிந்த கைகளை ஆதுரத்துடன் பிடித்துக் குலுக்கினார் உஸ்தாத். பண்டா பக்கத்தில் வந்து செவ்வந்திப் பூ மாலைகளை நீட்டினார். பாஸ்கல் அதை வாங்கி முகர்ந்து பார்த்தாள். மற்றவர்கள் அதைத் திருப்பிப் பார்த்து கழுத்தில் மாட்டிக் கொண்டார்கள். பிராகாரத்தில் கூடியிருந்தவர்கள் அதை வேடிக்கை பார்த்துச் சிரித்தார்கள்.

‘’ ஏற்கெனவே தெரிவித்தபடி இன்று முழுவதும் நாங்கள் உங்களுடனேயே இருப்போம். உங்களைக் காமிராவால் பின் தொடர்வோம். அதற்காக நீங்கள் உங்கள் அன்றாடக் கடமைகளை மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை. நாங்கள் இருப்பதையே நீங்கள் மறந்து விட வேண்டும் இந்த மந்திரில்தானே நீண்ட காலமாக வாசிக்கிறீர்கள். உங்கள் ஆரம்பக் காலப் பயிற்சிக் கூடமும் இதுதான் இல்லையா உஸ்தாத்?’’

இந்தச் சோக்ரி சகல முஸ்தீபுகளுடனும்தான் வந்திருக்கிறாள் என்று உஸ்தாதின் விழிகள் வியந்தன. ஆமோதிப்பாகத் தலையசைத்தார். அவள் தோள் மீது கைகளை வைத்து , ‘’உங்கள் படப்பிடிப்பின் இடையே நான் கழிப்பறைக்குப் போகவும் பீடி பிடிக்கவும் அனுமதி உண்டா?’’ என்று சிரித்துக் கொண்டே கேட்டார். பாஸ்கலின் தோழர்கள் புன்னகைத்தார்கள். அவள் மட்டும் குறுஞ் சிரிப்புடன் சொன்னாள்.

‘’ கழிவறைப் பக்கம் காமிராவைத் திருப்ப மாட்டோம். ஆனால் பீடி பிடிப்பதை நிச்சயம் சுருட்டிக் கொள்வோம்’’

உஸ்தாத் கொஞ்சம் முன் நகர்ந்து நின்று கருவறையைப் பார்த்து விழிகளை மூடித் திறந்தார். அப்போதும் அந்த நாதம் உட்செவியில் ஒலித்துக் கொண்டிருந்தது. பெருமூச்சுடன் பாஸ்கல் பக்கம் திரும்பி ‘போகலாம்’ என்பதாகத் தலையசைத்தார்.

வாசலில் அவர்கள் வந்து நின்றதைப் பார்த்ததும் கன்னையா ரிக்ஷாவிலிருந்து எழுந்து வந்தான். வாத்தியத்தை வாங்குவதற்காக உஸ்தாதை நோக்கிக் கை நீட்டினான். அவனிடம் அதை ஒப்படைக்கவிருந்த கணத்தில் பாஸ்கலும் சகபாடிகளும் வந்திருந்த வேன் பார்வையில் பட்டது. நீட்டிய கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டார். திரும்ப ரிக்ஷாவில் போவதா, இல்லை இவனை இங்கேயே விட்டு விட்டு அவர்களுடன் வேனில் போவதா என்று யோசித்தார். இவனைச் சொல்லி அனுப்புவதானால் கூலி கொடுக்கக் கையில் பைசா கிடையாது என்று யோசித்தார். பாஸ்கல் அதைப் புரிந்துகொண்டாள் போல.

‘’நான் தான் சொன்னேனே, உஸ்தாத், உங்கள் அன்றாட வழக்கத்தை எங்களுக்காக மாற்ற வேண்டாம். நீங்கள் ரிக்ஷாவிலேயே வரலாம். நாங்கள் அதையும் படம் பிடிக்க வேண்டுமே?’’

பாஸ்கல் சொன்னதைக் குறிப்பாக உணர்ந்த தோழர்கள் வேனை நோக்கி நடந்தார்கள். அவளும் வேகமாக நடந்து ஏறிக் கொண்டாள். வேன் நகர்ந்து ரிக்ஷாவுக்கு முன்னால் வந்து நின்றது. ஒளிப்பதிவாளர் அதன் பின் கதவைத் திறந்து காமிராவை ரிக்ஷாவை நோக்கி வைத்தார்,

கன்னையா ரிக்ஷாவின் ஹேண்டிலை நிலையாகப் பிடித்துக் கொண்டான். ஏறத் தொடங்கிய உஸ்தாத் ஏறாமல் வேனை நோக்கி நடந்தார். ஜன்னல் வழியாகப் பாஸ்கலிடம் ‘’ என் அரண்மனைக்குப் போகும் வழி தெரியுமா?’’ என்று கேட்டார்.

‘’கவலைப் படாதீர்கள் உஸ்தாத். வண்டி உள்ளூர் வண்டி. டிரைவரும் உள்ளூர். உஸ்தாதின் அரண்மனையைத் தெரியாத உள்ளூர்க்காரர்கள் யாராவது இருக்கிறார்களா என்ன ?’’

உஸ்தாத் சிரித்துக் கொண்டே திரும்ப வந்து ரிக்ஷாவில் ஏறிக் கொண்டார். கன்னைய்யா பெடலை மிதித்து வண்டியை முன்னே நகர்த்தியதும் வேனும் மெல்ல நகரத் தொடங்கியது.

000

ஹராகா சராய் பெயருக்குத்தான் தெரு. உண்மையில் கல்லி. இடுக்குச் சந்து . அதற்குள் ரிக்ஷா வருவதே பெரும் பாடு. வேன் எப்படி நுழையும்? பாஸ்கலும் நண்பர்களும் தெருமுனையிலேயே வேனை விட்டு இறங்கிக் கொண்டார்கள். கடைகள் திறந்திருந்தன. கடைச் சாமான்களை வாசலிலும் தெருவிலுமாக பரப்பி வைத்திருந்தார்கள். விருந்தாளிகள் அந்த கல்லியில் படப்பிடிப்புச் சாமக்கிரியைகளைச் சுமந்துகொண்டு அதி ஜாக்கிரதையாக நடந்தார்கள்.

நாலு சக்கரம் இருந்தென்ன, என்னுடைய மூன்று சக்கரத்துக்கு ஈடு இல்லை என்ற அகங்காரத்தில் அதிகமாகக் குலுங்கிக் கொண்டு ரிக்ஷா வாசலுக்கு வந்து நின்றது. இறங்கி வாத்தியத்தை எடுத்த வாக்கில் வீட்டுக்குள் பார்த்து ‘’பேட்டா நசீம்’’ என்று குரல் கொடுத்தார் உஸ்தாத். உள்ளேயிருந்து ஆள் வருவதற்கான இடைப் பொழுதில் கன்னைய்யாவின் தோளைத் தட்டிச் சொன்னார்.

‘’இந்தக் கிழவனைப் பத்திரமாக அழைத்துச் சென்றதற்கும் அழைத்து வந்ததற்கும் ஷுக்ரியா. இரு, சாயாவைக் குடித்து விட்டு கூலியை வாங்கிக் கொண்டு போ. உன்னை அனுப்பிதற்காக மகாதேவுக்கு நன்றி சொன்னேன் என்று சொல்லு’’

நசீம் வருவதற்குள் படியேறி உள்ளே போனார். அதற்குள் வீட்டை அடைந்த பாஸ்கலையும் தோழர்களையும் வாசல் நிலைக்கு அந்தப் பக்கம் நின்று ‘’ வெல்கம் டு மை மேக்னிஃபிசண்ட் பேலஸ்’’ என்று வரவேற்றார். மூவரும் ஒரே அலைவரிசையில் தலையைக் குனிந்து வணங்கிப் படியேறினார்கள்.

அடுத்த அரை மணி நேரத்துக்கு அந்த அரண்மனை விருந்துச் சந்தடியால் குதூகலமாக இருந்தது. அறிமுகங்கள். உபசாரங்களில் அமளிப்பட்டது. எல்லாம் முடிந்ததும் உஸ்தாதும் படக் குழுவினருமாக தனித்திருந்தது. பாஸ்கல் வேலையில் இறங்கினாள். தோழர்கள் பரபரத்தார்கள். கூடத்தின் இரண்டு மூலைகளிலிருந்தும் விளக்குகள் ஒளி பொழிந்தன. சாதாரணமாக இருட்டில் விஸ்தாரமானதாகத் தோன்றும் கூடம் காமிராவையும் விளக்குகளையும் வைத்த பின்பு சின்னதாகத் தெரிந்தது. கூடத்தின் மையத்தில் விரித்த சிவப்புக் கம்பளத்தில் உஸ்தாத் உட்கார்ந்தார். நசீம் பாய் தபலாவுடன் அமர்ந்தான்.

‘’உஸ்தாத், இப்போது உங்கள் வாசிப்பை மட்டுமே படமாக்கப் போகிறேன். உங்களுக்குப் பிடித்ததைப் பிடித்த மாதிரி வாசிக்கலாம். ஒரு கலைஞனின் படைப்புக் கணங்களைப் பதிவு செய்வதுதான் என் நோக்கம்’’

காமிராவுக்குப் பின்னாலிருந்து உஸ்தாதைப் பார்த்துச் சொல்லி விட்டு ஒளிப்பதிவாளரின் தோளைத் தட்டினாள் பாஸ்கல். ஒளிப்பதிவாளரின் வலதுகைக் கட்டை விரல் அந்தரத்தில் உயர்ந்தது,

வாத்தியம் மிழற்றியது. உஸ்தாதின் செவிக்குள் அலையடித்துக் கொண்டிருந்த நாதம் வாத்தியத்தின் வழியாகப் பெருகி புறங்களைத் தழுவியது.

எங்கோ கண்காணாத் தொலைவிலிருந்து பறந்து வந்த செங்கிளுவை கங்கைக் கரையோர மரத்தின் கிளையில் அமர்ந்தது. சிறகடித்து எழுந்தது. மறுபடியும் கிளையில் அமர்ந்து நீரின் அலைக் குரலைக் கேட்டது. கண்களை மூடாமல் அசையாமல் இருந்தது. ராகம் பெருகி முதிர்ந்தபோது கைகளைத் தட்டுவதுபோலச் சிறகுகளைப் படபடத்தது. தலையைக் குனிந்து அலகால் மரக் கிளையில் தாள்மிட்டது. மீண்டும் அசைவற்றிருந்தது. ராகம் உச்சஸ்தாயியை எட்டியதும் சிறகை விரித்து எவ்வியது. அதன் நிழல் நீரின் மார்பில் படிந்தது. நிழலையும் அழைத்துக் கொண்டு வானில் உயர்ந்தது. உச்சியை நோக்கிப் பறந்தது. நிழல் பிரிந்த அந்தரத்தில் இரண்டு சிறகுகளையும் விரித்து மேலும் உயர்ந்தது. ராகத்தின் ஆனந்தக் கேவல் அதைப் பின் தொடர்ந்தது. விரிந்த ஆகாயத்தின் வெளிச்சத் திரளுக்குள் ஒரு புள்ளியாக அது மறைந்ததும் ராகம் முத்தாய்ப்பை எட்டியதும் ஓரே கணத்தில் நிகழ்ந்தன.

கூடத்தில் தூசி விழுந்தாலும் முழக்கமாக எதிரொலிக்கும் அமைதி நிலவியது. உஸ்தாத் வாத்தியத்தை எடுத்து மடிமீது வைத்துக் கொண்டார். குல்லாயைக் கழற்றி தலையைக் கோதிக் கொண்டார். அவர் கண்கள் ததும்பியிருந்தன. ‘யா, அல்லாஹ்’ என்று பெருமூச்சு விட்டார். பாஸ்கலும் மற்றவர்களும் மூச்சடக்கி நின்றிருந்தார்கள்.

தபலாவைக் கம்பளத்தின் ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு எழுந்தான் நசீம். மௌனம் விலகியது. பாஸ்கல் கைகளைத் தட்டிச் சிரித்தாள். தோழர்களும் கரகோஷம் எழுப்பினார்கள். உஸ்தாத் கனிவுடன் வலது கையை உயர்த்தி சலாம் இட்டார்.

‘’உங்கள் வாசிப்பில் இதுவரைக்கும் கேட்டிராத சங்கதி’’ என்றாள் பாஸ்கல்.

‘’நானே முதல் முறையாக இப்போதுதான் வாசிக்கிறேன். நானும் இன்றுவரை அறிந்திராத ராகம்’’ என்றார் உஸ்தாத்.

‘’நாங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள்’’

‘’ நானும்தான். எனக்கே தெரியாத ஒன்றை எனக்குள் இன்று கண்டு பிடித்திருக்கிறேனே’’

பீடியைப் பற்றவைத்து ஆசுவாசமாகப் புகை விட்டார் உஸ்தாத். காலையில் அரூபமாக மனதில் கிடந்த அந்த நாதம் இப்போது சர்வ லட்சணங்களுடன் உயிர் பெற்றுக் கண்முன்னே நடமாடிக் கொண்டிருந்தது. அந்த நிறைவு முகத்தில் மின்னியது. விளக்குகள் அணைந்த பின்னும் அவர் முகம் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

நசீம் எழுந்து வெளியே போய்ச் சில நிமிடங்களுக்குப் பிறகு திரும்பி வந்தான்.
‘’பாபா, உங்களை அழைத்து வந்த ரிக்ஷாவாலாவைக் காணவில்லையே’’ என்றான்.

‘’ தெருமுனையில் இருப்பான் பார்’’

‘’அங்கேயும் பார்த்தேன். காணவில்லை. வழக்கமாகப் மகாதேவ் ரிக்ஷாவை நிறுத்தும் பூங்கா முன்னாலும் இல்லை. கூலி கூட வாங்காமல் போய் விட்டானே?’’

உஸ்தாதுக்கு ஏதோ பிடிபட்டது. அவன் சவாரி வந்தவன் இல்லையா? முகம் பரவசத்தாலோ , திகைப்பாலோ துடித்தது. துடிப்பை மறைத்துக் கொண்டு ‘’வருவான், அவனுக்குத்தான் வீடு தெரியுமே? இல்லையென்றால் மகாதேவ் வந்ததும் விசாரிக்கலாம்’’ என்றார். ஆனாலும் உறுத்தலாக இருந்தது.

அன்றைய படப்பிடிப்பைப் பாஸ்கல் அந்த மத்தியானத்துடன் நிறுத்திக் கொண்டாள்.

‘’ ஆன்மாவுக்குப் பசியாற்றிய வாசிப்புக்குப் பிறகு உங்களைத் தொந்தரவு செய்ய மனம் வரவில்லை. இன்றைய மிச்சத்தையும் சேர்த்து நாளைக்கு உங்களை இரண்டு மடங்கு வேலை வாங்கி விடுவேன், உஸ்தாத், ஜாக்கிரதை’’ என்று சிரித்தாள்.

‘’இன் ஷா அல்லாஹ் ‘’ என்று கைகளை விரித்து உயர்த்தினார் உஸ்தாத்.

000

நிறைவில் தளும்பிக் கொண்டிருந்த உஸ்தாதுக்கு அன்றைய இரவில் தூக்கம் பிடிக்கவில்லை. முற் பகலில் வாசித்த சங்கீத உருப்படி அலகு அலகாக மனதில் ஒலித்துக் கொண்டிருந்தது. நாதமும் சுருதியும் வாதி விவாதிகளும் ஸ்தாயியும் தன்னிச்சையாக எழுந்து முழுமையைக் காட்டின. அந்த உயிர் வடிவை வாத்தியத்தின் பிடியாக மாற்றிக் கொண்டிருந்தார் . அவர் முன்னால் கன்னைய்யா உட்கார்ந்து வாஹ் வாஹ் என்று தலையை ஆட்டி ரசித்துக் கொண்டிருந்தான். மன ஒத்திகை முற்றுப் பெற்றபோது வாசலில் ரிக்ஷாவின் மணி ஒலித்தது. உஸ்தாத் படுக்கையை விட்டு எழுந்தார். விளக்கைப் போட்டார். காலைக் கடன்களை முடித்தார். அன்றைய பயணத்துக்கும் தயாரானார். பாஸ்கலும் குழுவிரும் மந்திரில் காத்திருப்பார்கள்.

வாத்தியத்துடன் வெளியில் வந்ததும் மகாதேவிடம் கேட்டார். ‘’ நீ நேற்றைக்கு வரவில்லை. சரி, நீ அனுப்பின ஆள் கூலி கூட வாங்காமல் போய் விட்டான். அவனைப் பார்த்தாயா?’’

‘’நான் வரவில்லை என்பது சரிதான் சாகிப். ஆனால் நான் யாரையும் அனுப்பவில்லையே?’’ மகாதேவ் கலவரமாகச் சொன்னான்.

‘’ நீ அனுப்பின ஆள்… ஹாங்… பெயர் கன்னைய்யா… வந்தானே, மந்திருக்கு அவன் தான் அழைத்துப் போனான். திரும்பக் கொண்டு வந்து விட்டாதும் அவன் தான். ஆனால் கூலியை வாங்க நிற்காமல் போய்விட்டான். உன் மைத்துனன் என்று சொன்னானே?’’

‘’சாகிப், நான் யாரையும் அனுப்பவில்லை. முதலில் எனக்கு மைத்துனர்களே கிடையாது. மச்சினிகள்தான் உண்டு. அவர்கள் யாருக்கும் ரிக்ஷா ஓட்டிப் பழக்கமுமில்லை. அதுமட்டுமில்லாமல் நான் என் ரிக்ஷாவை யாருக்கும் கொடுப்பதில்லை. நேற்று ராம் நகருக்குக் கூட ரிக்ஷாவில்தானே போனேன்’’

உஸ்தாதுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. இவன் ஆளை அனுப்பவில்லை என்றாள் வந்தது யார்? இந்த ரிக்ஷா இல்லையென்றால் நான் போனது எதில்? எல்லாம் கனவா? ஆனால் பாஸ்கலும் அவளுடன் வந்தவர்களும் எல்லாவற்றையும் பார்த்திருந்தார்களே? அது கனவும் இல்லையே?

‘’ ஆனால் இதே ரிக்ஷாவில்தான் வந்தான். இதே ரிக்ஷாவில்தான் நானும் போனேன்’’ என்ற உஸ்தாத் ஒரு வினாடி கண்களை மூடி யோசித்தார். உள்ளுக்குள் ஒரு குரல் அழைப்பதைக் கேட்டார் உஸ்தாத். மாமா அலி பக்ஷ் கானின் குரல். ‘’ அது அப்படித்தான். அதை வெளியே சொல்லாதே. சொல்ல நினைத்தாலும் முடியாது’’.

பிறகு கண்களை மலரத் திறந்து ‘’யா, அல்லாஹ்’’ என்று புன்னகையுடன் சட்டத்தைப் பிடித்து வண்டியில் ஏறி உட்கார்ந்தார். புத்து முன் பக்கம் ஏறி பெடலை மிதித்தான். சற்று நகர்ந்ததும் பின்னால் திரும்பி அவரை உற்றுப் பார்த்தான். உஸ்தாதின் முகம் கங்கை வெள்ளத்தில் தெரியும் புலரிச் சூரியனைப் போலத் தெரிந்தது.

000

கங்கைத் திருவிழாவில் உஸ்தாதின் கச்சேரி முடிந்தது. தசாஸ்வமேத காட் முழுவதும் ஆட்கள் நெருக்கியடித்து உட்கார்ந்திருந்து கேட்டார்கள். கங்கையின் அலைகளும் அலைகளில் மிதந்த அகல் விளக்குகளின் சுடர்களும் மரக் கிளைகளில் இருப்புக் கொள்ளாமல் தவ்விய நாடோடிப் பறவைகளும் கிளிகளும் நட்சத்திரங்களும் சிலிர்த்துக் கொண்டு கேட்டன. அவர் விஸ்தாரமாக வாசித்த ராகத்தின் பெயரைக் கேட்டார்கள்.

‘’இதுவரை யாரும் கேட்காத ராகமாக இருக்கிறதே, உங்கள் கண்டுபிடிப்பா?’’

‘’இல்லை. நான் அதன் கண்டுபிடிப்பு ‘’ என்றார் உஸ்தாத்.

‘’அதற்குப் பெயரில்லையா?’’

கறுத்து மெலிந்த உருவத்தை புலனுக்கு அப்பால் பார்த்துக் கொண்டே ‘’ அந்த ராகத்தின் பெயர் கன்னையரா’’ என்றார் கான் சாகிப்.

000

சுகுமாரன்

தமிழில் எழுதி வரும் கவிஞர். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய விமர்சகர், கட்டுரையாளர். இதழாசிரியராகவும் தொலைக்காட்சி செய்தி ஆசிரியராகவும் பணியாற்றினார். சுகுமாரன் தமிழ்ப்புதுக்கவிதையின் முதன்மை ஆளுமைகளில் ஒருவராக கருதப்படுகிறார்.

தமிழ்விக்கியில் 

7 Comments

  1. அருமை. பிரவாகமாக பொங்கும் கங்கையைப் போல் இசையின் நாதத்தை அப்படியே எழுத்தில் இசைத்துள்ளார். 🙏🙏🙏

  2. அற்புதம்.. அற்புதம்.. சொல்ல வார்த்தைகள் இல்லை அதை சொல்லவும் முடியாது.. உஸ்தாத் பிஸ்மில்லா கானை நினைவுப்படுத்தியது.

  3. அற்புதமான கதை. .உஸ்தாத் பிஸ்மில்லா கானின் ஷெனாய் வாசிப்பைக் கேட்டுத்தான் காசி விஸ்வநாதரே துயிரலழுவார் என்பார்கள். அது நினைவுக்கு வந்தது. அருமை.. கதையே இசையால் நிரம்பி வழிகிறது.

  4. அபாரமான நடை மற்றும் நெகிழ்ச்சியான அனுபவம்..

  5. கங்கையின் பிரவாகத்தை கண் கொள்ளாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

    இசையின் பிரவாகத்தை கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

    உள் ஒளியின் பிரவாகத்தை உணர்ந்து கொண்டே இருக்கலாம்.

    அது அப்படித்தான் வார்த்தைகளில் சொல்ல முடியாத அனுபவம்.

  6. அற்புதம்! உஸ்தாத்தின் இசையை நேரில் கேட்பதைப் போல பரவசநிலையை அடைந்தேன்..
    இசையெனும் பெருவெள்ளம் ஒவ்வொரு இதயத்திலும் பாய்ந்து அவர்தம் எண்ணங்களை சீராக்கட்டும்.

உரையாடலுக்கு

Your email address will not be published.