/

மூன்று தொடக்கங்களும் கவிதை இயந்திரமும் : மேத்யூ ஸேப்ருடர்

தமிழில் : நவீன் சங்கு

கவிதையைப் பற்றி அமெரிக்க கவிஞர் மேத்யூ ஸேப்ருடர்(Matthew Zapruder) எழுதிய “Why Poetry” என்ற நூலின் முதல் அத்தியாயம் இங்கு மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

நான் சிறுவனாக இருந்த போது என்னிடம், “எதிர்காலத்தில் நீ ஒரு கவிஞனாக வருவாய்” என்று யாராவது சொல்லியிருந்தால் நான் திகைத்துப் போயிருப்பேன். அச்சமயம் கவிதையைப் பற்றி, கவிதை வாசிப்பைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் இருந்தேன். கவிஞனாகவே ஒருவன் வாழ முடியும் என்பதை நான் கற்பனைகூட செய்ததில்லை. கவிதை என்பது பள்ளிக்கூடத்தோடு மட்டும் சம்பந்தப்பட்ட ஒரு சுவாரஸ்யமற்ற பழைய விஷயம் என்று எண்ணியிருந்தேன். பின்னாளில் கவிதை என் வாழ்வின் மையமாக மாறும் என்று அப்போது நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை. 

1985 ஆம் வருடம் நான் மேரிலாண்ட் உயர்நிலைப் பள்ளியின் கடைசி ஆண்டில் படித்துக்கொண்டிருந்தேன். அது ஒரு வசந்த காலம், காதல் உணர்ச்சிகளின் பருவம். அன்று ஆங்கில வகுப்பு. அச்சமூட்டக்கூடிய கவிதைப் பாடம் நடந்துகொண்டிருந்த நேரம். எங்கள் ஆசிரியர் ஒரு பட்டியலை கொடுத்தார். அதிலிருந்து மாணவர்கள் நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு கவிஞரை தேர்வு செய்து, அவரைப்பற்றி ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுத வேண்டும். ஆண் என்றும் பெண் என்றும் உறுதியாகச் சொல்லிவிட முடியாத ஏடென்(W. H. Auden) என்ற பெயருடைய கவிஞரை எதனாலோ நான் தேர்வு செய்தேன். ஒருவேளை அவர் பெயர் அகரவரிசையின் காரணமாக பட்டியலின் துவக்கத்திலேயே இருந்தபடியால் நான் அப்படி செய்திருக்கக்கூடும். 

அவருடைய ஒரு புத்தகத்தை நூலகத்திலிருந்து பெற்றுக் கொண்டு, அதிலுள்ள கவிதைகளை வாசிக்க ஆரம்பித்தேன். அவற்றை நான் விரும்புவதற்கு அச்சமயம் எந்தவொரு காரணமும் இருக்கவில்லை: எந்தவொரு குறிப்பிட்ட கலைதிறனும் இல்லாத மாணவன் நான்; பள்ளியில் இயங்கிய இலக்கிய இதழில் பணியாற்றவில்லை, அதில் எழுதும் வழக்கமும் என்னிடம் இல்லை. முகூர்த்தமாக கொள்ளத்தக்க எதுவும் அந்த தருணத்தில் இருக்கவில்லை. அந்த புத்தகத்தை திறந்த நியாபகம்கூட இல்லை. இருந்தும் அதிலுள்ள Musée des Beaux Arts என்ற கவிதையின் முதல் சில வரிகளை வாசித்தது இன்றுவரை எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. 

துயரத்தை பற்றி அவர்கள் சொன்ன எதுவும் தவறில்லை
பழைய மேதைகள் : எவ்வளவு தீர்க்கமாக புரிந்துகொண்டிருக்கிறார்கள்
அதன் மனித நிலையை : அது நிகழ்ந்து கொண்டிருக்கிறது
வேறு யாரோ ஒருவர் உண்ணும்போதோ சாளரத்தைத் திறக்கும்போதோ அல்லது

சலிப்பாக நடந்து போகும்போதோ

அதை வாசித்த நொடியிலேயே எனக்கு பொறிதட்டியது. நான் உடனடியாக அனைத்தையும் புரிந்து கொண்டேன் என்று சொல்ல முடியாது , ஆனால் இன்னதென்று விரல் நீட்டி சுட்ட முடியாத முக்கியமான ஒரு அர்த்தம் அந்த கவிதையில் இருப்பதாக உணர்ந்தேன்.

அந்தக் கவிதை எப்படி அசலான துன்பம் உணர்ச்சிகரமாக இல்லாமல், மிக சாதாரணமாக அன்றாட வாழ்க்கையில் வேறு யாரோ ஒருவர் உண்ணும்போதோ, சாளரத்தைத் திறக்கும்போதோ நிகழ்கிறது என்று சொல்கிறது. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் அது துன்பம் பற்றி பேசவில்லை, மாறாக எப்படி மனிதர்கள் தங்கள் தினசரி நிகழ்வுகளில், சலிப்பாக நடந்து போகும்போதும் துன்பம் நிகழ்ந்து கொண்டிருப்பதை உணராமல் இருக்கிறார்கள் என்று சொல்கிறது. இந்த கவிதையுடன் என்னால் தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தது; அதில் சொல்லப்பட்டது சரி என்றே தோன்றியது. பெரும்பாலான இளைஞர்களுக்கு போலவே எனக்கும் அது உண்மைதான் என தெரிந்தது. 

அந்த கவிதையில் சொல்லப்பட்ட பழைய மேதைகள் யார் என்று அப்போது எனக்கு தெரியவில்லை. நிச்சயமாக அவர்கள் வயதானவர்கள், கற்று தேர்ந்தவர்கள்; எனவே நீண்ட காலமாக அவர்கள் விஷயங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள், அல்லது அவர்கள் அதுபோல நினைத்தார்கள் என நினைத்தேன். கவிதையில் கூறப்பட்டப்படி, அவர்கள் சொன்னவை ஒருபோதும் தவறாகப் போய்விடவில்லை, குறைந்தபட்சம் துன்பம் பற்றிய விஷயத்தில். (அப்படியானால் அவர்கள் சொன்னவை இப்போது தவறாகிவிட்டதா? அல்லது இப்போது அவர்கள் இல்லையா?).

ஏடென் ஓவியர்கள் பற்றி பேசுகிறார் என பிற்காலத்தில் தான் தெரிந்து கொண்டேன் , குறிப்பாக புரூகல்(Bruegel) பற்றி. ஆனால் முதல் முறையாக “பழைய மேதைகள்” என்ற வார்த்தையை வாசித்தபோது வேறொரு எண்ணம் மனதில் தோன்றியது. அதாவது ஒரு காலத்தில் எல்லாம் தெரிந்த, விஷயங்களை கட்டுப்படுத்தக்கூடியவர்கள் இருந்தார்கள், ஆனால் இப்போது இல்லை. இந்த உணர்வு சிறுவனாக இருந்து இளைஞனாக மாறும் வயதடைவினால் தோன்றுவது என நினைக்கிறேன். அதாவது நம் பெற்றோர்களும், ஆசிரியர்களும் கடவுளோ அல்லது மேதைகளோ அல்ல என்னும் கொடூரமான, தவிர்க்க முடியாத உண்மையை அறிந்துகொள்ளும் திறப்பு.

இந்தக் கவிதை துன்பத்தை எந்த உணர்ச்சியையும் கலக்காமல், ஒருவகை விலகலுடன் பொதுமைப்படுத்தி சிந்திக்கிறது. இந்த சிந்தனை சுவாரஸ்யமாகவும் சில நேரங்களில் சற்று சிக்கலாகவும் உள்ளது. எனினும் இந்த கவிதையில் என்ன நிகழ்கிறது என்பதை புரிந்து கொள்ள கவனமான மனதும் , ஆங்கில மொழித் திறனும் தவிர வேறொன்றும் தேவையில்லை. இது நன்றாக எழுதப்பட்டுள்ள ஒரு கவிதை. இதைச் சத்தமாக வாசிக்கும் போது அதன் இசைத்தன்மை அழகாக உள்ளது, இருந்தாலும் குறிப்பிட்டு சொல்லும்படியான சிறப்பம்சமோ, தெளிவான வடிவமைப்போ, கவித்துவமான மொழியோ இதில் இல்லை. அதுபோல ஒரு நல்ல உரைநடையிலிருந்து மேலதிகமாக கவிதைக்கென பிரத்யோகமான எந்தவித ஓசைநயமும் இதில் இல்லை. 

 எல்லாவற்றிற்கும் மேலாக , என்னை மிக அதிகமாக கவர்ந்தது, இன்னும் கவர்ந்து கொண்டிருப்பது, கவிதை ஆரம்பிக்கும் விதம்தான். அது கவிதையின் தொடக்கத்திலேயே, முதல் வாக்கியத்தின் பொருளைக் கூறுவதில் ஏற்பட்ட தாமதத்தில் இருந்து தொடங்குகிறது. “துயரம்” என்ற வார்த்தை (அதன் கருத்தும்) முதலில் வருகிறது, அடுத்ததாக வரும் “அவர்கள் சொன்ன எதுவும் தவறில்லை” என்னும் வரியில் அவர்கள் யார் என்று அறிய சிறிது நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.​​​​ பழைய மேதைகள் கவிதையில் நுழையும் போது, அது பிரமாண்டமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது, குறிப்பாக வரி இடைவேளைக்குப் பிறகு வருவதால் கொஞ்சம் நாடகமயமாகவும் இருக்கிறது.முதல் வரியின் முடிவில் இருந்து இரண்டாவது வரியின் ஆரம்பத்திற்குப் பார்வையை நகர்த்தி, மீதமுள்ள வாக்கியம் என்ன என்பதை அறிய ஒரு சிறிய நிமிடம் காத்திருக்க வேண்டும். அவர்கள் யார்? என்ற வாக்கியம் ஏறக்குறைய விவிலியம் போல தொன்மையானதாக தோன்றுகிறது. இதனால் சொல்லப்படும் விஷயத்தைப் பற்றி ஒரு சிறப்பான உணர்வு என்னுள் ஏற்படுகிறது, அது மிகவும் தீவிரமானதாகவும், விசேஷமான சத்தியங்களுடன் தொடர்புடையதாகவும் தோன்றுகிறது.

ஏடன் எழுதிய மற்ற கவிதைகளும் எனக்கு பிடித்திருந்தன, உதாரணமாக “ஒரு தாலாட்டு,” என்ற கவிதை, “வேலையின் ஓசை அடங்கியது  / இன்னொரு நாள் மேற்கேறி சென்றது / இருள் போர்த்தி வந்தது,” என்று தொடங்குகிறது. ஒரு நாளின் முடிவை, அதாவது  சூரிய அஸ்தமனத்தை, இருளின் வருகையை விவரிக்கும் இந்த கவிதை ஒரே நேரத்தில் அழகாகவும் , துயரமாகவும் இருந்தது. அவ்விதமாக, அந்த நேரத்தை எனது குடும்பத்தின் வீட்டில் நீண்ட பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில், பள்ளிக்குப் பிறகு, உணவு சாப்பிடுவதற்குமுன், என் அப்பா வீடு திரும்புவதை எதிர்பார்த்து காத்திருப்பதிலிருந்து அறிந்தேன்.

ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக எனக்கு பிடித்தமான கவிதை என்றால் “Musée des Beaux Arts” தான். இந்தக் கவிதையை நான் இன்னும் நேசிக்கிறேன். அதில் ஒரு கொடூரமான நகைச்சுவை உள்ளது. மக்கள் துன்பப்படும் பொழுது, “நாய்கள் தங்கள் நாய் வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டு போகின்றன,  அடிமை வாகனத்தின் குதிரை / ஒரு மரத்தில் அதன் பின்புறத்தை உரசுகிறது.” என்று அதைப் பற்றி சொல்ல சற்றே வருத்தம்தான், இருந்தும் பதினாறு வயதான எனக்கு அது பெரிதும் பிடித்திருந்தது. இந்த கவிதை, இகாரஸ்(Icarus) விழுந்து போனதை சித்தரிக்கும் ஓவியத்தை விவரிக்கிறது. கவிதையின் இறுதி எனக்கு இன்னும் உண்மையான அச்சத்தை உண்டாக்குகிறது. மெழுகு சிறகுகளுடன் இருந்த சிறுவன் தனது தந்தையின் எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் சூரியனுக்கு மிக அருகில் பறந்து, நீரில் விழுந்து விடுகிறான், ஆனால் யாரும் உண்மையில் கவலைப்படுவதில்லை:

. . . அந்த விலைமதிப்புள்ள மென்மையான கப்பல் நிச்சயம் கண்டிருக்கும் அந்த
அற்புதமான ஒன்றை, வானத்தில் இருந்து விழுந்த சிறுவனை,
எனினும் அது செல்லவேண்டிய இடத்தை நோக்கி அமைதியாகச் சென்றது.”

தந்தையின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்திய அந்த சிறுவனில் என்னை அடையாளம் கண்டுகொண்டேன், அனுடைய துயரத்தினால் உண்மையில் எவருக்கும் பின்விளைவுகள் எதுவுமில்லை. அந்த விலையுயர்ந்த மென்மையான கப்பலாக நான் உணர்ந்தேன். அல்லது இந்த இரண்டாகவோ, அல்லது வேறு ஏதாவதாகவோ. எனக்கு உண்மையில் நினைவில் இல்லை. ஆனால் அனைவரையும் ஏமாற்றமடையச் செய்திடுவேன் என்கிற பயத்தில் வாழ்ந்த பதற்றமான கிராமத்து சிறுவனான எனக்கு, இந்த உலகம் திடீரென பெரியதாகவும், விசித்திரமாகவும், உண்மையானதாகத் தோன்றும் முரண்பாடுகளால் நிரம்பியதாகவும் மாறிவிட்டது.

நான் இந்த உணர்வை விரும்பினேன், மேலும் ஆசிரியர்கள் அல்லது புத்தகங்களின் உதவியின்றி நானே அந்த கவிதையை யோசித்துப் பார்த்தேன்.  உண்மையில், அது ஒரு ஆய்வு கட்டுரை எனக் கருதப்பட்டாலும், நான் முழுமையாக என் புத்தியிலிருந்து எழுதினேன், அதற்காக நான் கொஞ்சம் கடிந்து கொள்ளப்பட்டேன். இதை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம், இது ஒரு நீடித்த வெளிப்பாடு அல்ல. பல வருடங்கள் நான் கவிதைகளை முழுமையாக மறந்து விட்டேன். ஆனால், ஒரு சிறு தருணத்திற்காகவேனும், எந்தவித துணையுமின்றி, நேரடியாகக் கவிதையுடன் தொடர்பில் இருக்க முடியும் என்ற தகவலை நான் பெற்றதாக நினைக்கிறேன்.

இது தற்செயலாக நான் பெற்ற பரிசு, ஏனென்றால் நான் தயாராக இருந்தபோது, ​​சரியான நேரத்தில், சரியான கவிதையை சந்திக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. என் உள்ளின் ஆழத்தில், கவிதை மட்டுமே செய்யக்கூடிய ஒன்றை, ஒரு கவிதை மட்டுமே கொண்டு வரக்கூடிய பொருளும் உணர்ச்சியும் உண்டு என்பதை உணர்ந்தேன்.

இப்போது நினைத்துப் பார்க்கையில், மறந்துபோன ஒரு காலம் நினைவிற்கு வருகிறது. ஏடனை படிக்கும் முன்பே, எனக்கு கவிதையுடன் ஒரு ஆழ்ந்த மற்றும் தனிப்பட்ட அனுபவம் இருந்தது. அது 1972 ஆம் ஆண்டு, வாஷிங்டன் டி.சி.யில் , நான் முதலாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது ஏற்பட்டது. வீட்டின் அருகில் இருந்த ஓய்ஸ்டர் ஆரம்பப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். ஓய்ஸ்டர் ஒரு இரு மொழிப் பள்ளி,அதாவது நாங்கள் கையால் பொருட்களின் படங்களை (வாத்து, வீடு, கடல்) பிடித்து காட்டி ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழியில் சீராகப் பேசினோம்.

காலையில் நாங்கள் வகுப்பறைக்குள் நுழையும் போது , அது பிரகாசமாக இருக்கும் , மத்தியானத்தில் சூரியன் கட்டிடத்தின் மறுபுறம் இருப்பதால் எங்கள் அறை இருட்டாகவும் சோகமாகவும் மாறிவிடும். அங்கு மிகப் பெரியது, லாங்ஃபெலோவின் **The Song of Hiawatha** என்ற புத்தகம். பெரிய அலங்கார எழுத்துக்களுடன் மற்றும் வண்ணமயமான ஓவியங்களுடன் இருந்தது. நான் ஜன்னலின் அருகே சென்று அதைப் படிப்பதை நேசித்தேன். நிறைய முறை, ஆசிரியர் பேசும் போதே நான் எழுந்து, அங்கே சென்று உலாவித் திரிந்தேன். இந்த செயல் எனக்குப் பொருந்தாதது. ஏனெனில் நான் ஒரு கீழ்ப்படியும் மூத்த குழந்தை, தவறுகள் செய்ய கூடுமோ என்ற பயம் எனக்கு எப்போதும் இருந்தது.

எங்கள் வகுப்பறை ஜன்னல்கள் கிழக்கு நோக்கி, ராக் க்ரீக் பார்க் நேரடியாக இருந்தது, அது காடுகளின் நீட்சியாக விரிந்து நகரின் நடுவே ஓடியது. ஜன்னலுக்குப் பக்கத்தில் நின்று புத்தகத்தைப் பிடித்துக் கொண்டு, மிகப் பெரிய கல் பாலங்கள் , மரங்கள் மற்றும் நதிகளைக் கொண்ட பெரிய பூங்காவை மிக அருகில் இருந்து அறிந்து கொண்டேன்.

கிட்ஷே குமி கடலோரங்களில்,  
பெரிய கடல் நீரின் ஒளியில்,
நோகோமிஸ் என்ற பெண்ணின் குடிசை இருந்தது,  
சந்திரனின் மகள் நோகோமிஸ்.  
அதற்குப் பின்னால் இருண்ட காடு எழுந்தது,  
கரிய, சோகமான பைன் மரங்கள் உயர்ந்தன,  
முளைத்துள்ள கொண்களுடன் இருந்த பைன் மரங்கள்; 
விதைகள் தாங்கிய ஃபிர் மரங்களும் இருந்தன
அதற்குப் பின்னால் பிரகாசமான நீர் மோதியது,  
தெளிந்த, சூரிய ஒளியுடன் மோதியது,  
பெரிய கடல் நீர் பிரகாசத்தோடு மோதியது
.

இந்த கவிதையை வாசிக்கும்போது அதன் வன்முறையான பழங்குடி தன்மையாலும் , செவ்விந்தியர்களின் சிந்தனை மற்றும் பேச்சு பற்றிய கற்பனையும் எனக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. மேலும் இந்த கவிதை வெளிப்படையான விஷயங்களைச் சொல்லும் விதத்திலும் கொஞ்சம்  சிறுபிள்ளைத்தனமாக தோன்றுகிறது. நாங்கள் சுப்பீரியர் என்று அழைத்த ஏரியை, ஒஜிப்வே பழங்குடியினர் கிச்சிகாமி என்று அழைத்த ஏரியை, அவர் “பெரிய கடல் நீர்” என்று அழைக்கும் விதம் எனக்கு இன்னும் பிடிக்கிறது என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும். இது மிகவும் பழக்கமான ஒன்று எதிர்பாராத விதத்தில் சொல்லப்பட்டால், அது நமக்கு மீண்டும் புதிதாக மாறிவிடும் என்பதற்கு ஒரு உதாரணம்.

இது இன்னும் புனிதமாகவும் நன்றாகவும் ஒலிக்கிறது. அதை உரக்கச் சொல்லும்போது, அந்த காலத்தில் இருந்த உணர்வையே இப்போதும் உணர்கிறேன், அதாவது வார்த்தைகளின் அடிப்படை சக்தியை. காடு, பைன் மரங்கள், செவ்விந்தியர்கள், தண்ணீர், தண்ணீர், தண்ணீர். ஒலிகளின் தன்மையில் தான் பொருள் இருப்பதாகத் தெரிகிறது. ராபர்ட் பிராஸ்ட் எழுதியது: “ஒலியின் அரூபமான உணர்வுகளை பெறுவதற்கு சிறந்த இடம், வார்த்தைகளைத் துண்டிக்கக் கூடிய கதவுக்குப் பின்னால் இருந்து வரும் குரல்கள் தான்”. இது என் பெற்றோர் வேறொரு அறையில் அல்லது கீழ் தளத்தில் பேசிக் கொள்வதை நினைக்க வைக்கிறது. ஒரு தெளிவான வார்த்தையை கூட கேட்காமல், அந்த முணுமுணுப்புகளிலும் வீட்டின் மனநிலையைப் பற்றிய மிகவும் முக்கியமான தகவல்கள் இருந்தன.

ஒரு குழந்தையாக, ஜன்னல் அருகே நின்று, சுவரின் மறுபக்கத்தில் பெரிய பூங்கா, பெரிய மரங்கள் மற்றும் தலைநகரம் தலைநகர் நகரம் குறுக்கே உருவாகுவதற்கு முந்தைய காலத்திலேயே ஆழமான பள்ளத்தை வெட்டிய ஆறு இருந்தது என்று அறிந்திருந்தேன். கவிதையின் முழு அமைப்பும் என் மீது செயல்பட்டது, எங்களுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே இங்கு இருந்த பழைய நிலத்தைப் பற்றிய உண்மை, ஒரு மகத்தான, கம்பீரமான சக்தியை உணர உதவியது.

எனக்கான முதல் கவிதையாக யாவாத்தாவின் பாடல் இருந்தது. உங்களுக்கும் ஒருவேளை உங்களுக்கான கவிதைகள் இருக்கும். அப்படியானால், வாருங்கள், நீங்கள் மற்றும் நான், மாலை நிழல்கள் வானத்தில் பரவுகின்ற இடத்துக்கு செல்வோம். மஞ்சள் காடுகளில் இரண்டு பாதைகள் வெவ்வேறு திசைகளில் பிரிகின்றது. பொன்னான உலகங்களில் நான் பல பயணங்கள் மேற்கொண்டுள்ளேன். இதோ, யாருக்கும் தெரியாத ஆழமான ரகசியம். நான் டென்னஸ்ஸியிலே ஒரு ஜாடி வைத்தேன். நான் இசையமைப்பாளராக மாறும் பொழுது, எனக்காக சில இசையை உருவாக்குவேன். எனது வாழ்க்கை, குண்டுகள் நிறைந்த துப்பாக்கி போன்றது. இந்த மிதமான காற்றில் ஒரு ஆசீர்வாதம் உள்ளது. நான் என்னை கொண்டாடுகிறேன், எனது வாழ்க்கையை நான் பாடுகிறேன். என்னோடு சேர்ந்து நீங்களும் இந்த  வாழ்க்கையை கொண்டாட மாட்டீர்களா?

நான் என் இருபதுகளில் கவிதைகள்  எழுத ஆரம்பித்தபோது  எனக்கு கவிதைகள் பற்றிய பெரிய புரிதல் இல்லை. கல்லூரியில் ஆங்கிலம் என் முதன்மை பாடமாகவும் இல்லை, அமெரிக்க கவிதைகளை அவ்வளவாக  வாசித்திருக்கவில்லை.  கவிதையெழுத்து  ஒரே நேரத்தில் ஆச்சர்யத்தையும், நிலைகுலைவையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது. இதில் நிச்சயம் ஏதோ ஒரு அர்த்தம் உள்ளது என்பதை உள்ளூர உணர முடிந்தது. ஆனாலும் என் உணர்வுகள் குறித்து சந்தேகம் இருந்தது , நான் தவறான இடத்தில் தேடுகிறேனோ? மிக முக்கியமான ஒன்றை தவற விடுகிறேனோ? 

கவிஞர்கள் பிரதானமான  எண்ணங்களையும், கருத்துக்களையும்  கவிதையின் மொழியையும் பிற  நுட்பங்களையும் பயன்படுத்தி  அவற்றை  உரைநடையைவிட அழகாகவும் சிக்கலாகவும் சுருக்கமாகவும் வெளிப்படுத்துகிறார்கள் என்ற  மங்கலான மனப்பதிவு அந்த காலகட்டத்தில் எனக்கு இருந்தது. அதாவது மொழியின் அழகு, சிக்கல் அல்லது அதன்  உயர்ந்த பண்புகள் இவைதான்  எழுத்திற்கு   கவிதை என்ற அந்தஸ்தை அளிக்கிறது , அதை உரைநடையிலிருந்து  வேறுபடுத்திக்காட்டுகிறது என்று  எண்ணியிருந்தேன்.

நிறைய கவிதைகளை  எழுதவும் வாசிக்கவும் ஆரம்பித்த பிறகுதான் ‘கவிதை மொழி’ (Poetic language) என்றொரு விஷயம் உண்மையில் இல்லை என்பது எனக்குத் தெளிவாக தெரிந்தது. கவிதையில் புழங்கும் சொற்கள் பெரும்பாலும் எங்கும் காணக்கூடிய சொற்களே. கவிதை நமக்கு தெரிந்த, நாம் அடையாளம்காணக்கூடிய மொழியை புதுப்பிக்கிறது, அதை மீண்டும் உயிர்த்தெழச்செய்கிறது. கவிதையின் முதன்மையான ஆற்றலே இதுதான்.

நான் கவனித்த வரையில் கவிதையில் நிச்சயமாக சிந்தனைகள் உள்ளன. அவை சில நேரங்களில் முக்கியமாகவும் , முக்கியமற்றதாகவும் அல்லது குறைந்தபட்சம்  அதிக முக்கியத்துவம் இல்லாமலும் உள்ளது. கவிதையை நாம் விளக்க முற்படும்போது  அதில் வெளிப்பட்டுள்ள சிந்தனைகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்தால் அல்லது அதன் பேசுபொருளை விரிவாக விவரித்தால்  அதை  கவிதையின் மிகமிக முக்கியமான அம்சத்தை தவிர்த்துவிட்ட  குறுகலான  பார்வை என்றுதான் சொல்லமுடியும்.  கவிதை  முற்றிலும் வேறானது.  அது மனிதனில் புது விதமான அனுபவத்தை அல்லது மனநிலையை அல்லது சிந்திக்கும் விதத்தை உருவாக்குகிறது.

“நினைவில் கொள்க, கவிதை என்னதான் தகவல்களால் கோர்வை செய்யப்பட்ட மொழியில் இருந்தாலும், அது தகவல்களை சொல்வதற்கான மொழி விளையாட்டு அல்ல.” என்கிறார் விட்ஜென்ஸ்டைன். கவிதை வெறுமனே கருத்துகளையும் , அனுபவங்களையும்,  உணர்வுகளையும் அழகான மொழியில் சொல்வது அல்ல. அந்த வேலையை அதே அழகுடன் உரைநடை செய்துவிடும்.

தகவல் சொல்வது கவிதையின் நோக்கம் இல்லையெனில் , கவிதையின் நோக்கம்தான் என்ன? அது உரைநடை செய்யாத எதை செய்கிறது? எதற்காக வாசகர்களும், எழுத்தாளர்களும் கவிதையை பேண முற்படுகிறோம்?

பலர்  கவிதை , நாவல் அல்லது நாடகம் என ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் மட்டும் வெளிப்படுதல் படைப்பு சாத்தியத்தை குறுக்குவதாக  நினைக்கிறார்கள். எல்லா வடிவங்களும் கலந்து எழுதுவது சமகால இலக்கியத்தின் போக்காக உள்ளது.  இருந்தாலும் கவிதை என்று வரும் போது அதை தனித்த ஒன்றாக அணுகுவதே சரியானது,  குறைந்தபட்சம் தற்காலிகமாகவாவது.  ஏனெனில் ஒரு படைப்பின் வடிவம் என்பது அதன்  நோக்கம் சார்ந்தது. ஒரு படைப்பாளி ஏன் குறிப்பிட்ட வடிவத்தை தேர்வு செய்கிறான்? ஒரு  இலக்கியப்படைப்பை  நாம் வாசிக்கும் வழிமுறையை அந்த  படைப்பாளி தேர்வுசெய்த வடிவம்  எவ்வாறு பாதிக்கிறது?

சாதாரணமாக ஒரு படைப்பை ஏன் வாசிக்கின்றோம் என நாம் சிந்திக்க தேவையில்லை. அதை வாசிக்கும்போது உடனடியாக உருவாகக்கூடிய உள்ளுணர்வு அது எப்படிப்பட்ட எழுத்து, அதை எவ்வாறு அணுக வேண்டும் என சொல்லிவிடுகிறது.  எந்த விளக்கமும் இல்லாமலே ஒரு செய்தித்தாள் வாசிப்பதற்கும் , நாவல் வாசிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் அறிவோம். நாவல்  கதாபாத்திரங்களையும் , சூழலையும் வைத்து  ஒரு கதையை சொல்கிறது.  தகவல்களை பகிர்வதற்கு பத்திரிக்கைகள் இருக்கின்றன. ‘கட்டுரை’ என்ற வடிவத்தை  ஒரு குறிப்பிட்ட  சிந்தனையை ஆழமாக ஆராயும், நம்மால் எளிதில் வகைப்படுத்திவிடமுடியாத முயற்சி என்று சொல்லலாம். தலையங்கம் அல்லது பிரசங்கம் நாம் எதை நம்ப வேண்டும், எதை செய்ய வேண்டும், செய்யக்கூடாது  என அறிவுறுத்தும் இயல்பு கொண்டது.  

கவிதை ஏன் எழுதப்படுகிறது? அது ஏன் இவ்வளவு புதிர்த்தன்மையுடன் உள்ளது? நாம் கவிதையில் என்ன எதிர்பார்க்க வேண்டும்? சந்தம், வடிவம், உருவகம், படிமம் இவையெல்லாம் ஏன் கவிதையில் பயன்படுத்தப்படுகிறது? ஒருவேளை இவையெல்லாம் கவிதையை அழகு படுத்துவதற்காகவா? கவிதை சொல்ல விரும்பும்  கருத்தை வாசகரிடம் இன்னும் வலுவாகவும், இன்னும் அழகாகவும் உணர்த்துவதற்காகவா? கவிதையின் நோக்கம்தான் என்ன? போன்ற கேள்விகளுக்கு யாரும் திட்ட வட்டமான பதிலை சொன்னதாக தெரியவில்லை.

என்னிடம் இது போன்ற கேள்விகள் கேட்கப்படும் போது, பால் வலேரி ( Paul Valéry 1871 – 1945) தனது “Poetry and Abstract Thought” என்ற நூலில் எழுதியது தான் நினைவுக்கு வரும். “கவிதை என்பது மொழி வழியாக  நம்மில் கவித்துவமான  மனநிலையை ஏற்படுத்தக்கூடிய  ஒரு வகையான இயந்திரம்”. வலேரியின் இந்த விளக்கம்தான் இதுவரை கவிதை பற்றி எழுதியவற்றில் மிகச் சரியான விளக்கமாக எனக்கு தோன்றுகிறது. வலேரியின் விளக்கம்:

”கவிதையை இயந்திரத்துடன் ஒப்பிடுவது, என்னுடைய இயந்திரத்தனமான அணுகுமுறை,  உங்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக இருக்கலாம். கவனியுங்கள்,  ஒரு எளிய கவிதை தன்னை உருவாக்கிக்கொள்ள வருடங்களை எடுத்துக் கொண்டிருக்கலாம், ஆனால் வாசக மனதில் சில நிமிடங்களில் அது தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. பல மாதங்களின் ஆராய்ச்சியால், பொறுமையால், பொறுமையின்மையால் திரண்டுவந்த கண்டடைதல்களை, தொடர்புகளை, உணர்வுநிலைகளை வாசகன் சில கணங்களில் அதிர்வுடன் பெற்றுக்கொள்கிறான். கவிதையனுபவம் கவிஞனின், வாசகனின் உள்ளத்தில் நிகழ்கிறது,  முதலில் கவிஞனில் அது நிகழ்கிறது. எழுதும்போது  அவன் அதை ஏதோ ஒன்றாக, சிறிய  இயந்திரமாக ஆக்குகிறான். அந்த இயந்திரம் வாசகனிடம் கண்டடைதல்களையும் , தொடர்புகளையும் , உணர்வுநிலைகளையும்  உருவாக்குகிறது.  கவிதை எதை நிகழ்த்தினாலும் அதை மீண்டும் மீண்டும் எத்தனைமுறை வேண்டுமானாலும் வாசகனிடம் நிகழ்த்த முடியும். 

கவிதை உருவாக்ககூடிய இந்த ‘கவித்துவ  மனநிலை‘ கண்விழித்தபடியே காணும் கனவுநிலைக்கு நிகரானது. நம் பிரக்ஞை  இன்னும்  விழிப்பாக, இன்னும் மேலானதாக,  இன்னும் வெளிப்படையானதாக, உணர்வுப்பூர்வமானதாக இருக்கும் நிலை என்று அந்த மனநிலையை சொல்லலாம். வாசகன் கவிதையை வாசிக்கும்போது அல்லது கேட்கும்போது அதன் கண்டடைதல்களை, தொடர்புகளை, உணர்வுநிலைகளை வாசகமனதுடன்  ஒத்திசையவைப்பதன்  வழியாக  கவிதை கவித்துவமனநிலையை  அவனில் உருவாக்குகிறது.  

எமிலி டிக்கின்சன் கவிதை பற்றி தனது கடிதத்தில், “ஒரு புத்தக வாசிப்பனுபவம் எந்த நெருப்பாலும் அணைக்க முடியாத அளவுக்கு என் உடலில் உறைகுளிரை ஏற்படுத்தினால், எனக்கு தெரியும் அது கவிதை என.”  நேரடியாக என்னுடைய தலை துண்டாகக்கூடிய உணர்வை ஏற்படுத்தினால் அது கவிதை.  இந்த விதத்தில்தான் என்னால் கவிதையை புரிந்து கொள்ள முடிகிறது, அப்படி அல்லாத வேறேதும் வழிகள் உண்டா என்ன?

எனக்கு இந்த பதிலும் பிடித்திருக்கிறது. ஏனெனில் வலேரியின் விளக்கம் போலவே கவிதைக்கு மற்ற எழுத்துவடிவங்களுக்குமான வித்தியாசமாக சாதாரணமாக  சொல்லப்படும்- வரிகளை துண்டித்து எழுதுவது, சந்தம், படிமம் அல்லது  உருவகங்களை  பயன்படுத்துவது என்று சொல்லாமல், கவிதை உருவாக்ககூடிய தாக்கத்தைப் பற்றி பேசுகிறது. இந்த பதில் ஆர்வமூட்டுவதாகவும், யதார்த்தமான தனி அனுபவமாகவும் உள்ளது. 

டிக்கின்சன் ,வலேரி இருவரும் படைப்பு உருவாக்க கூடிய தாக்கத்திலிருந்து தான், அது கவிதையா இல்லையா என சொல்ல முடியும் என்கின்றனர். கவிதை எவ்வாறு “கவித்துவ மன நிலையை” உருவாக்குகிறது என்பதே இந்த புத்தகத்தின் மையக் கேள்வி.  அது கவிதையின் வடிவத்தின் மூலம் நிகழ்கிறது, அதுவே வாசகனின் மனதை வழிநடத்துகிறது. அது தொடர்புறுத்தல்களின் பாய்ச்சல்கள் மூலம் நிகழ்கிறது. மேலும் கவிதை, மொழியின் அடிப்படையான இயல்புகளையே  ஊடுருவி  அதை உயிர்த்தெழச் செய்து அதனுடன் விளையாடும் போது அது நிகழ்கிறது. 

மேத்யூ ஸேப்ருடர்

கவிதையின் இருப்பே மொழியின் பல்வேறு சாத்தியங்களுக்கு இடமளிப்பது தான். இந்த பண்புதான் கவிதையை மற்ற வடிவங்களிலிருந்து வேறுபடுத்துகிறது. கவிதைகள் மொழியின் உள்ளார்ந்த தற்காலிகத்தை, நிச்சயமின்மையை, நழுவல்களை அனுமதிக்கின்றன. மொழி  அர்த்தங்களை உருவாக்க  அது ஒலிக்கும் விதம், அதன் தோற்றம், உச்சரிக்கப்படும்போது அது உருவாக்கும் உணர்வு போன்ற  புறவயமான அம்சங்களுக்கும் கவிதை இடமளிக்கிறது.

மேலும், கவிதைகள் நாம் அவ்வளவாக பொருட்படுத்தப்படாத ஒரு விஷயத்தை நினைவூட்டுகின்றன: அவை நாம் மொழியின் அற்புதமான, அதே சமயம் நொய்மையானதன்மை வழியாகத்தான்  நாம் பிறருடனும், இந்த  உலகுடனும் தொடர்பு கொள்கிறோம்  என்பதை நினைவூட்டுகின்றன.  சாதாரண உரையாடலில் நம் தேவைக்காக  மொழியின் வசப்படாத தன்மையை, அதன் கணநேர மாற்றங்களை, அதன் தற்காலிகத்தன்மையை மட்டுப்படுத்துகிறோம். 

மொழி கவிதையில் தன்னை வெளிப்படுவதற்காக காத்திருக்கிறது. மொழியின்  உள்ளார்ந்த ஆற்றலையும் சாத்தியங்களையும் கவிதை செயல்வடிவமாக ஆக்குகிறது. அர்த்த-உருவாக்கம் என்ற செயல்முறையில் உள்ள முரண்பாடுகளும், சாத்தியங்களும் முன்னிறுத்தப்பட்டு கொண்டாடப்படுகின்றன, பிற எழுத்துவடிவங்களில் மற்ற நோக்கங்களுக்காக இந்த கூறு வெளிப்படுத்தமுடியாமல் திசைதிருப்பப்படுகிறது.

மற்ற எழுத்து முறைகளுக்கு மாறாக , கவிதை தனது முதன்மை பணியாக சொல்லுக்கும் அது சுட்டும் பொருளுக்கும் இடையே உள்ள சிக்கலான உறவை வலியுறுத்தவும், நம்பவும், கொண்டாடவும் செய்கிறது. சாதாரணமாக கருத்துக்களை தெரியப்படுத்துவதற்கும், கதை சொல்வதற்கும் மொழியை  பயன்படுத்தும் போது அடைய முடியாத உண்மையை, நாம் மொழியின் அழகு மற்றும் அதன் அநிச்சய தன்மையை பின்பற்றும்போது அடைய முடியும்.

எவ்வளவு தான் முயற்சித்தாலும் சொற்களுக்கும் பொருளுக்கும் இடையே உள்ள உறவு துல்லியமற்றதாகவே உள்ளது. கவிதை மொழியின் இந்த வரம்பினை எடுத்துக்கொண்டு ஒரு சீர்மையை ஏற்படுத்த முயற்சிக்கிறது. ஆச்சர்யப்படுத்தும் வகையில் எப்படியோ நாம் சீரற்ற மொழியின் மூலம் தொடர்பு கொண்டு அர்த்தப் படுத்திக் கொள்கிறோம். கவிதையுடன் மொழிக்கும் அர்த்தத்துக்கும் இடையேயான உறவு தற்காலிகமான, மெலிதான, ஆர்வமூட்டும், உடையக்கூடிய, சீரற்ற  ஆனாலும் அதீத இன்பம் தரக்கூடியதாகவும் உள்ளது.  நமக்கும் மொழிக்குமான உறவிற்கான, நமக்கும் இவ்வுலகத்திற்குமான உறவிற்கான  உருவகமாக  கவிதைக்கும்  மொழிக்குமான உறவை, அது வழியாக மொழிக்கும் அர்த்தத்திற்கான உறவை சொல்லலாம். 

மனித இருப்பின்  இந்த நிலையை  நாம் ஒரேசமயம் உவகையாகவும், துக்கமாகவும் உணர்கிறோம்.  நாம் உள்ளுணர்வால் உணர்ந்த, ஆனால் முழுமையாக சொல்ல இயலாத நிலைக்கும் கவிதைக்குமான  உறவு, கவிதையெழுத்தை  ஒரு பிரார்த்தனையாக ஆக்குகிறது. இறைத்தன்மையை  முழுமையாக அறிந்துவிட முடியும் அல்லது தெரிந்து கொள்ள முடியும் என்ற தற்பாவனை இல்லாமலேயே, ஒருவரை  இறைத்தன்மையை நோக்கி  செலுத்தும்  குறையாத விசைதான் பிரார்த்தனை. 

கவிதையில் வெளிப்பட்டிருக்கும்  மொழியை கூர்ந்து வாசிக்கும் போது நம்  அன்றாட அறிதலுக்கு சிக்காத இவ்வுலகின்  யதார்த்தத்தை, முரண்பாட்டை, சிக்கலை, உறுதியின்மையை காண ஆரம்பிக்கிறோம். அந்த கணத்தில்  கவிதையில் உள்ள சொற்களும் எண்ணங்களும் தளர்ந்து விடுபட்டு, அவற்றை நாம்  புத்தம் புதிதாக அனுபவிக்கிறோம். 

கவிதையெழுத்தில் கதை சொல்வது , நீண்ட விளக்கங்களை எழுதுவது, தன்னை மறுக்கமுடியாதவனாக நிலைநிறுத்துவது  போன்ற பிற செயல்பாடுகளில்  தன்னை மூழ்கடித்துக்கொள்ளாத கவிஞனால் மட்டும்தான்  மொழியின் முழு ஆற்றலையும் கவிதையில் உயிர்த்தெழச்செய்ய முடியும். ஒரு எல்லைவரை கவிஞர்கள் அந்த செயல்பாடுகளை  செய்கிறார்கள், ஆனால் அவர்களால் கையாளமுடியும் எல்லைவரைதான் இது சாத்தியம். ஒருகட்டத்தில் கவிஞர்கள் அவற்றை துறக்க எப்போதும் தயாராகவே இருக்கிறார்கள். அசலான  ஒவ்வொரு கவிதையிலும்  அந்த துறத்திலின் சுதந்திரம் எங்காவது இருப்பதை காணலாம். மொழியை வெறும் பயன்பாட்டிலிருந்து விடுவித்து அதன் சாத்தியங்களை அடையும் பொருட்டு, மொழியின் வேறந்த நோக்கத்தையும்  நிராகரிக்க தயாராக இருக்கும் எழுத்தாளரே கவிஞராக மாறுகிறார்.

***

நவீன் சங்கு

சொந்த ஊர் சிவகங்கை. தற்போது கோவையில் மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார். இலக்கியம் தவிர தத்துவத்திலும், நுண்கலைகளிலும் ஆர்வம் உண்டு.

உரையாடலுக்கு

Your email address will not be published.