மதிப்பு பாராட்டல்
நம்மை சுற்றி எப்போதும் இருப்பவற்றிற்கு சரியான கவனமளிப்பதில் நாம் போதாமையோடே இருக்கிறோம். இந்த குறைபாடே நம்மை மகிழ்ச்சியின்மைக்கு இட்டுச்செல்கிறது. நம் கண் முன்னேயே இருப்பவற்றின் மதிப்பை கவனிக்கத்தவறி, எங்கோ இருக்கும் அவசியமற்ற ஒன்றின் மீதான கற்பனையான ஈர்ப்பிற்கு இறையாகி, அதற்காக ஏங்கி துயருறுகிறோம்.
பொதுவாக எல்லாவற்றிற்கும் பழகிப்போய்விடுவதையே நாம் இயல்பாகக் கொண்டிருக்கிறோம். எதையும் பழக்கமாக்கிக்கொள்ளும் (habituation) கலையில் நமக்கிருக்கும் அபாரமான தேர்ச்சியே இச்சிக்கலுக்கு காரணம். குறிப்பிட்ட சில செயல்பாடுகளில் நம் செய்கை தனிச்சையாகிவிடுவதையே நாம் ‘பழக்கம்’ என்கிறோம். சொல்லப்போனால், அன்றாட வாழ்க்கையில் இந்த பழக்கமாக்கிக்கொள்ளல் நமக்கு பல நன்மைகளை அளிக்கிறது.
கார் ஓட்ட கற்றுக்கொண்ட புதிதில், நம்மை சுற்றி இருக்கும் எல்லாவற்றின் மீதும் நாம் அதீத கவனத்தை கொண்டிருப்போம். இருக்கையில் அமர்ந்து வண்டியை இயக்கத்தொடங்கியதுமே நம் பிரக்ஞை அச்சூழலில் இருக்கும் ஒளியையும், சப்தங்களையும், சிறு அசைவுகளையும்கூட மிகக்கவனமாக கூர்ந்து விசாரிக்கத் தொடங்கிவிடும். ஒரு இரும்புப்பெட்டகத்தை நம் உடலின் நீட்சியாக்கிக்கொண்டு இந்த உலகத்தையே வலம்வரப்போகும் நம்பமுடியாத இவ்வியக்கதின்மேல் இயல்பாகவே நமக்கொரு அதீத தற்காப்புணர்வும் தொற்றிக்கொண்டுவிடும். ஆரம்பத்தில் ஒவ்வொருமுறை காரை இயக்கும்போதும் நம் ஒட்டுமொத்த நரம்புமண்டலமும் பரிசோதனைகுள்ளாவதை நாம் உணர்வோம். இருந்தும், தொடர் பயிற்சிக்குப்பின்பு, ஒரு கட்டத்தில் இவ்விழிப்புநிலை படிப்படியாக சமாதானப்பட்டு -திருப்பத்தில் மேற்கொள்ளும் சமிக்கைகளாகட்டும், கியர்களை மாற்றுவதாகட்டும்- ஒரு தூலமற்ற உடன்படிக்கைக்கு இசைந்தபடி இயங்கத் தொடங்கிவிடும். அப்போது நம் உடல்முடுக்கம் யாவும் பிரக்ஞையற்று அரங்கேறிக் கொண்டிருக்கும். சில குறிப்பிட்ட விஷயங்களைத் தவிர்த்து நம் கவனம் வேறு எதற்குள்ளும் சிக்காது. இப்படி வருடகால பழக்கத்திற்கு பின்பு, செங்குத்துப் பாதைகளையும் வளைவான திருப்பங்களையும் கொண்ட மலைப்பயணத்தின் போதுகூட நாம் இயல்பாக அமர்ந்தபடி இயற்கையின் பேரழகையும் வனப்பையும் உட்செரித்து வாழ்வின் அர்த்தத்தைப்பற்றி அகத்தினுள் விசாரம் செய்தபடியே முன்னேற பழகியிருப்போம்.
அதாவது தொடர் செயல்பாடுகளில் எது பிரதானமானது, எது அவசியமற்றது என்று நம் அனுபவத்தின் அடிப்படையில் பகுத்துக்கொள்வது. முக்கியத்துவம் வாய்ந்தவற்றுக்கு மட்டுமேயான இக்கவனக்குவிப்பு கார் ஓட்டுவதைப்போன்ற இன்னபிற அன்றாட செயல்பாடுகளுக்கும் நிச்சயம் பயனளிக்கிறது. எனினும், துரதிர்ஷ்டவசமாக, நமக்கு பரிச்சயமாய் இருப்பினும், வாழ்வின் சில முக்கியத்துவம் வாய்ந்த அடிப்படை உணர்வுகளுக்கும் இப்படியான கவனமிழப்பு ஏற்பட்டுவிடுகிறது. நமக்குள் கடலளவு விரியக்கூடிய பிரமாண்டங்களை நாம் பொருட்படுத்தத் தவறிவிடும் அபாயம் நிகழ்ந்துவிடுகிறது.
வாழ்வை குறுக்கி முடக்கிவிடக்கூடிய இந்த சிக்கலிலிருந்து நம்மை கலையால் காப்பாற்றமுடியும். பழக்கத்தால் ஏற்படும் கவனமிழப்புகளுக்கு எதிராக செயல்பட்டு, கலை நமது ஆன்மாவின் விழுமியங்களை மிகச்சரியாகவும் துல்லியமாகவும் மதிப்பிட வழிவகுக்கிறது. அது நமக்கான சமநிலையை மீட்டெடுக்க உதவுகிறது.
அமெரிக்காவில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுள் மிகச்சாதாரனமான ஒன்று பீர் டின்கள் (beer cans). இருப்பினும் சிலர் மட்டுமே அதனுடைய தோற்றத்தில் தனிக்கவனம் செலுத்தியிருப்பார்கள். ஆனால், 1960 ஆம் ஆண்டில், அமெரிக்க கலைஞர் ஜாஸ்பர் ஜான்ஸ் (Jasper Johns) கலையின் துணைகொண்டு, அவற்றைப் புதிதாக பார்க்கும் வகையில் மறுவடிவமைப்பு செய்தார். அவர் பீர் டின்களின் இரண்டு மாதிரிகளை வெண்கலத்தில் உருவாக்கினார். அவை இரண்டிலும் அந்த நிறுவனத்தின் பெயரை (Ballantine Ale) வரைந்து(வண்ணமடித்து), அவற்றை ஒரு சிறிய அடித்தளத்தில் நெருக்கமாக வைத்தார்.
அது வடிவமைக்கப்பட்டிருக்கும் விதம், ஒரு கலைக் காட்சி கூடத்திலோ, ஒரு புகைப்படத்திலோ அவற்றை கூர்ந்து பார்ப்பதற்கு இணையான கவனம் நம்மில் உண்டாவதை உறுதிசெய்கின்றன. அந்த நிறுவன முத்திரையின் நீள்வட்ட வடிவத்தின் நேர்த்தியையும், ஒவ்வொரு டின் உருளையின் அளவையும், அவை கவர்ச்சிகரமாக வடிவமைக்கப்பட்டிருப்பதையும் உணர்ந்து, அதன்மேல் நாம் வழக்கத்தை விட அதிகமான கவனத்தை செலுத்துகிறோம். அவை கனமான விலையுயர்ந்த உலோகத்தினால் உருவாக்கப்பட்டிருப்பது, அதன் தனித்துவத்திற்கும் விநோதத்தன்மைக்கும் புதுக்கவனம் செலுத்தத் தூண்டுகிறது. கிட்டத்தட்ட நாம் இதுபோன்ற டின்களையே பார்த்ததில்லை என்பதுபோல புதிதாய் பார்க்குமளவிற்கு நம் கண்ணோட்டம் மாறிவிடுகிறது.
ஒரு செவ்வாய் கிரகவாசி தவறிப்போய் பூமிக்கு இறங்கிவிடும்பட்சத்தில், அவன் இங்கிருக்கும் எதற்கும் பழக்கமற்று எல்லாவற்றையும் புதிதாகவும் ஆர்வத்துடனும் காண்பதைப்போல நாம் இவ்வுலகை காண்பதை தான் இந்த படைப்பு அறிவுறுத்துகிறது. அதாவது, பழக்கத்தின் சுழலில் நழுவி மறைந்துவிடக்கூடிய நமது குழந்தைப்பருவத்துக் கண்களை தக்கவைத்துக்கொள்ள கலை வழிவகுக்கிறது.
நம்மை சுற்றி இருக்கும் உலகை ஒரு குழந்தையின் கண்களோடு எப்படி நாம் இன்னும் கூர்மையாக அவதானிக்கலாம் என்பதைத்தான் ஜான்ஸ் (Johns) நமக்கு கற்றுத்தருகிறார். இந்த குறிப்பிட்ட நிகழ்வு, முதலில் நமக்கு சாதாரணமாக தோன்றினாலும், அது நமக்கானதொரு திறப்பை தன்னுள் கொண்டுள்ளது. இந்த பீர் டின்களின் வடிவ நேர்த்தியும் அதன் தன்மையும் நாம் மதிப்பு பாராட்ட கற்றுக்கொள்ளும்போது அதன் தொடர்ச்சியாக நம் அன்றாடத்திலுள்ள பொருட்களையும் ஆர்வத்தோடு கவனிக்கத்தொடங்கிவிடுகிறோம். இந்த முன்னேற்றம் இன்னும் ஒருபடி மேலே போய் நாம் எதிர்கொள்ளும் பொருட்களைத்தாண்டி, நிகழ்வுகளையும், நம் மனநிலைகளையும், நம்முன் இருக்கும் மனிதர்களையும் நாம் இன்னும் சரியாக கவனிக்கத்தொடங்குகிறோம் – அதன் சாரத்தை சிறுக விழுங்கி நமக்கான கலைக்கண்கள் மெல்ல படர்ந்து விரியத் தொடங்குகிறது.
அன்றாடத்தில் பயன்படுத்தும் பீர் டின்களைப்போன்ற பொருட்களைத்தாண்டி பொதுவாகவே இயற்கைக்கும்கூட நாம் சரியாக எதிர்வினை செலுத்துவதில்லை. நாம் தினம் கடந்து செல்லும் தெருவிலுள்ள கட்டிடங்களையும், நம் வழி வரும் காற்றையும், மேலே மிதக்கும் மேகக்கூட்டத்தையும், பக்கத்து மரத்தில் அமர்ந்து கூவும் பறவைகளின் இனிய குரலையும், அமைதியாய் பறந்து செல்லும் வண்ணத்துப்பூச்சிகளையும்கூட சரிவர கவனிப்பதில்லை. இவ்வளவு ஏன் நம் குழந்தைகளின் முகத்தில் பொழியும் மகிழ்ச்சிக்கும், நமது நண்பர்களுக்கும், நம் அறையின் வடிவத்திற்கும், நம் துணைவரின் முகத்தில் மலரும் பாவத்திற்கும்கூட பொதுவாக நாம் ஒரு தட்டையான, பழகி புளித்துப்போனவற்றிற்கு கொடுக்கும் எதிர்வினையையே அளிக்கிறோம்.
நாம் இவற்றை கொஞ்சமாக கவனிப்பதற்கான காரணம் நாம் அவற்றை ஏற்கனவே போதுமான அளவு பார்த்துவிட்டோம் என்ற முன்முடிவுதான். மிகச்சரியாக இந்த முன்முடிவுகளோடுதான் கலை பெருமையுடன் போர் புரிகிறது. இதனால், நாம் இழந்துவிடக்கூடியவற்றின் அடிப்படைகளை அஸ்திவாரமாகக்கொண்டே கலை பரிணமிக்கிறது.
ஜாஸ்பர் ஜான்ஸின் டின்களைப் போலவே, ஆங்கில கலைஞரான பென் நிக்கல்சனின் (English artist Ben Nicholson) படைப்பான ‘1943’ (ஓவியம்) – எளிய விஷயங்களில் பிரகாசிக்கும் அடிப்படை இன்பங்களை பறைசாற்றும் எடுத்துக்காட்டாக சொல்லலாம்.
நிக்கல்சன் (Nicholson) ஒரு குறிப்பிட்ட ஒத்திசைவைத்தேடி இந்த ஒழுங்கமைப்பில் ஈடுபட்டிருப்பதை கவனிக்கலாம். அவர் இந்த வடிவங்களை சரியாக அடுக்குவதிலும் மீண்டும் நுட்பமாக மறுசீரமைப்பு செய்வதிலும் தன் சீரிய கவனத்தை குவித்துள்ளார். ஜிக்சா (Jisaw puzzle) புதிரைப்போல வீட்டிலிருப்பவற்றை ஒழுங்குபடுத்திவைக்கும்போது நமக்கு ஒரு நிறைவு கிடைக்கிறது.
சின்னஞ்சிறு நிறைவுகளில் மகிழ்வுகாணும் ஆன்மாவின் வெளிப்பாடாக இந்த படைப்பை அணுகலாம். அவ்வப்போது புத்தக அலமாரியை குறிப்பிட்ட அடிப்படியில் ஒழுங்குபடுத்தி வைக்கும் வழக்கத்தையும், துணிகளை முறையாக அடுக்கி சீர்படுத்திவைப்பதை போன்ற நடைமுறை ஒழுக்கத்தின் நீட்சியாக இந்த படைப்பை வகுக்கலாம். இக்கலைப்படைப்பு இவ்வகையான தருணங்களையும், மனநிலைகளையும் மேலும் ஊக்குவித்து மேம்படுத்துவதன் மூலமாக மக்களிடத்தில் பெருமதிப்பையும் அடைகிறது.
இது பெருமிதமாக சொல்லப்படவில்லை, இது உண்மைக்கு கிடைக்கும் வெகுமதி. ஏனென்றால் நம் வாழ்வில் இதுபோன்ற நிறைவைத்தரும் விஷயங்கள் பொதுவாக சரியான கவனம் பெறுவதில்லை. நியாயமாக கொண்டாடப்படவேண்டிய இவை எதுவும் தத்துவத்தின் வரலாற்றில்கூட பெரிதாக குறிப்பிடப்படவில்லை. இவை ஒன்றும் அரிதானவை அல்ல. நம்மை உலுக்கும் அளவிற்கோ, நடகீயமாகவோ கூட இல்லை. ஆனால் இவை ஒரு அடிப்படை நெறியை பறைசாற்றுகின்றன.
நமது வாழ்க்கை பொதுவாக எப்படி நிகழ்கிறது என்பதை வைத்து பார்க்கும்போது இதுபோன்ற எளிமையான, நம்பகத்தன்மையுடைய, எந்த எதிர்பார்ப்புமற்ற நிறைவுகள் தான் நமக்கு தேவையாகவும், முக்கியமாகவும் இருக்கிறது. அதே நேரம், நாட்டு நலனிற்காகப் போராடுவதைவிடவும், எல்லோரிடமும் நல்லுறவை பேன முயற்சிப்பதைவிடவும், ஒரு நம்பகமான தொழிலாளியாக இருப்பதைவிடவும் நாம் பொருட்களை சீர்படுத்தி ஒழுங்கமைப்பதுதான் முக்கியமானது என்று இப்படைப்பு முன்வைக்கவில்லை. அது ஒரு எளிமையான விஷயத்தை எடுத்துரைக்கிறது. நாம் தவறவிடும் நம் திறனை அது அழகாக மீட்டு, நாம் நம்முடனும் மற்றவர்களோடும் எப்படி நிறைவாக வாழலாம் என்று பரிந்துரைக்கிறது.
பொதுவாக நாம் வசீகரம் என்று கருதும், நம்மை ஈர்க்கும் யாவும் வெகு தொலைவில் இருக்கின்றன. நாம் அறியாதவர்களது வீட்டின் சுற்றமும், நாம் கேள்விப்படும் ‘அலங்கார’ கூடுகைகலும்தான் நம்மை ஈர்க்கின்றன. தங்களது திறனை சாதுர்யமாக விற்று புகழையும் நிகர் மதிப்பையும் ஈட்டுவோரின் வாழ்வைத்தான் நாம் கனவு காண்கிறோம்.
ஊடகத்தின் ஆதிக்கம் பல்கிப்போன ஒரு சமூகத்தில் இப்படியான புரிதல் உருவாகிவிடுவது இயல்பானதே. பொதுவாகவே அவை நம் வாழ்நிலைக்கு எட்டாத பெரும் மோகங்களைத்தான் நம் கண்முன் ஓயாது நிறுத்தும். இந்த தூண்டுதல்களை உற்றுநோக்கியபடி ஒருவர் வாஞ்சையோடும் வலியோடும் எதிர்கொள்ளவேண்டிவரும். சமகால முதலாளித்துவம் முன்னிலைப்படுத்தும் பிரமாண்ட நுகர்விற்கான ஏக்கத்தை அணையாமல் காக்கவே வணிக விளம்பர சந்தை அயராது உழைக்கிறது. அவை நம் வாழ்வின் பெரும்பகுதியை எப்படி எவற்றுடன் கழிப்பதென, பலவற்றை திட்பமாகவும் பரிந்துரைக்கின்றன; நம் தொழில்சார் முன்னேற்றம் எப்படி அமையவேண்டும் என அவை வகுக்கின்றன; பொதுவாக நாம் எப்படியெல்லாம் நேரத்தை கழிக்கலாம் என்று அவையே முடிவுசெய்வது போல் தெரிகிறது. நம் விடுமுறை நாட்களைக்கூட எப்படி கழிக்கலாம் என்று அவையே அட்டவணையிடுகின்றன. சொல்லப்போனால் நம் காதல் உறவுகளில் நாம் செயல்படுவதையும், அவற்றை மேம்படுத்துவதையும்கூட விளம்பரச்சந்தைதான் கவனமாக எடுத்துரைக்கின்றன(மூக்கை நுழைக்கின்றன). அது நாம் அறிந்திராத, நம்மை பற்றி ஒருபோதும் அறிய முற்படாத மேட்டுக்குடிகளின் நிகழ்வுகளை நம்மை ஊன்றி கவனிக்க செய்கின்றன.
இவ்வாறாக வணிக ஊடகங்கள் நம் ஆன்மாவை குலைப்பதாக சாடும் அதே வேளையில், சிலநேரங்களில் அதற்கான மாற்று மருந்தையும் அவையே சந்தைப்படுத்துகின்றன என்பதையும் குறிப்பிடவேண்டும். தொடர் நிறைவின்மையால் சலிப்புற்ற நம் ஆன்மாவை மீட்டெடுக்கும் வலிமை கலையிடம் உள்ளது. நம் வண்ணமிழந்த வாழ்வை சுட்டிக்காட்டுவதோடு அவற்றிலிருந்து நாம் எப்படி அறிவுனர்ச்சியோடு வெளிவரலாம் என்பதையும் கலை எடுத்துரைக்கிறது. உதாரணமாக சார்டனின்(Chardin) ‘தேநீர் அருந்தும் பெண்’ ஓவியத்தை கவனிக்கலாம். அந்த ஓவியத்தில் இருப்பவரின் உடை சமகால வழக்கத்தை விட சற்று அலங்காரமாக இருக்கிறது. ஆனால் அந்த மேஜை, டீபாய், நாற்காலி, தேனீர் கோப்பை, சிறு கரண்டி என யாவும் ஒரு பழைய பொருள் விற்கும் கடையில்கூட கிடைப்பவைதான்.
ஒரு எளிமையான தருணம் அதன் அசலான மதிப்பிற்காக பாராட்டப்படுதல். Jean-Baptiste- Simeon Chardin. A Lady Taking Tea, 1735
அந்த அறை காரணமாகவே அப்படி எளிமையாய் சித்தரிக்கப்பட்டுள்ளது. அந்த எளிமைதான் அதற்கு ஒரு வசீகரத்தன்மையை அளிக்கிறது. சாதாரண பொருட்களோடான ஒரு இயல்பான நிகழ்வு நம் அழகுணர்ச்சியை தூண்டி கவர்ந்துவிடுகிறது. நாமும் வீட்டிற்குப்போய் இதைபோலொரு நிகர் வடிவத்தை உயிர்ப்பிக்க எண்ணச்செய்கிறது. இந்த வசீகரம் பொன்னைப்போல் மின்னும் பொய்யான இழைகளாலானதல்ல – இவ்வோவியம், நிஜத்தில் இல்லாத ஒன்றை நயமாக காட்சிப்படுத்தவில்லை. மாறாக சார்டன் (Chardin) தன்னளவில் அடக்கத்தை இயல்பாக வெளிப்படுத்தும் ஒரு தருணத்தின் மதிப்பை அடையாளம் கண்டுள்ளார். அவரது அதீதத் திறனை பயன்படுத்தி அதை நாமும் அனுபவிக்கச்செய்கிறார்.
எளிதில் நாம் தவறிவிடக்கூடிய இயல்பான தருணங்களின் மதிப்பை அவதானிப்பதிலும் அவற்றை ஆற்றலோடு எடுத்துரைத்து நம்மையும் அவ்வாறு அணுகச்செய்வதிலும் கலையின் பங்கு அளப்பரியது. கலை நம்மை சுற்றி இருப்பவற்றிற்கு எப்படி சரியாக எதிர்வினையாற்றலாம்/அணுகலாம் என்பதை கற்பிக்கிறது. நிகழும் சூழலில் எப்படி அதற்கேற்ப சிறப்பான முடிவை எடுக்கலாம் என்பதை சொல்கிறது: நாம் விரும்பாத வேளையிலும், நடுவயதிற்கே உரித்தான சமநிலையின்மையின் போதும், நம்மை எரிச்சலூட்டும் துணையிடமும் நாம் எப்படி சரியாக வினையாற்ற முயலலாம் என்பதை கலை எடுத்துரைக்கிறது.
கலை, நம்மால் அடையமுடியாதவற்றிற்கான ஈர்ப்பை திணிப்பதில்லை. மாறாக, நாம் வேறுவழியின்றி ஏற்றுக்கொண்ட இவ்வாழ்வை, அதிலுள்ள நியாயமான, மதிப்புமிக்கவற்றை காண நம் கண்களை சீர்செய்கிறது.
***
முந்தைய பகுதிகள் : பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6
தென்னவன் சந்துரு
வங்கித் துறை ஊழியரான தென்னவன் சந்துரு கலை இலக்கியம் சார்ந்த கட்டுரைகளில் ஈடுபாடுடையவர். மொழிபெயர்ப்பாளர். நவீன தமிழ் இலக்கிய வாசிப்பில் ஆர்வம் கொண்டவர்.
கவிதை குழந்தையால் எழுத்தப்படுவது என்பது பிரபலமான வரி. இந்தக் கட்டுரை அதை இன்னும் அழுத்திச் சொல்கிறது.
இந்த கட்டுரைத் தொடரின் தொடக்க கட்டுரையில், ஏசுவை கையில் வைத்திருக்கும் மேரி சிற்பத்தை பற்றி பேசும் போது அந்த சிற்பத்தில் உள்ள அழகு இந்த யதார்த்த உலகில் இல்லை. அதுவே நம்மை ஈர்க்கிறது என்று சொல்லப்பட்டது. இக்கட்டுரையில், ‘கலை, நம்மால் அடையமுடியாதவற்றிற்கான ஈர்ப்பை திணிப்பதில்லை. மாறாக, நாம் வேறுவழியின்றி ஏற்றுக்கொண்ட இவ்வாழ்வை, அதிலுள்ள நியாயமான, மதிப்புமிக்கவற்றை காண நம் கண்களை சீர்செய்கிறது.’ என்கிறது.
இரண்டுமே உண்மை என்று தோன்றுகிறது. கலையை புற உலக பயன்பாட்டுடன் ஒன்றிணைத்து பேசும்பொழுது முழுமையான உண்மையை சொல்ல முடிவதில்லை என்று நினைக்கிறேன். புறவ உலக பயன்பாடு என்று சொல்லும்போது அதில் ‘யதாரத்தில் உள்ள மதிப்பை காணும் மனநிலையை அளிக்கிறது’ என்பதையும் சேர்க்க வேண்டும்.
Casper Friedrich க்கு பிறகு Duchamp வருகிறார். கலையை பற்றிய வரையறை மாறிக்கொண்டே இருக்கிறது. என்றுமுள்ள குணம் என்று ஒன்றை உறுதியாக சொல்லிவிட முடியுமா என்பது சந்தேகம்.