/

ச. அர்ஜூன்ராச் கவிதைகள்

நடந்ததெல்லாம் ஒரு கெட்டக் கனவென
எடுத்துரைக்கும் எறும்பு


மிக அசதியோடு
என் கட்டையைச் சாய்த்தேன்

கட்டாந்தரையில்
முழுதாக விழுவதற்கு நொடி முன் தான் பார்த்தேன்
உடல் ஓர் எறும்பு மீதும் விழுவதை

மனங் கேளாது
படுத்த மாத்திரம் எழும்பி
அதைத் தேடினேன்

காணவில்லை

திடுமென
இல்லாமல் போன இடத்திலிருந்து
உயிர்த்தது எறும்பு

நடந்ததெல்லாம் ஒரு கெட்டக் கனவென
அது போய்க்கொண்டிருந்தது.

2.


சமரசம்

மரமொன்றில்
விறுவிறுவென ஏறிக்கொண்டிருந்த
எறும்பினூடாகப் போய்
உச்சிக்கிளையிடம் சேர்ந்தபின்
அதனிடம் கேட்டேன்

இங்கிருந்து இறங்கி போக
எத்தனைப் படிகள் ?

ஓ… அதுவா…

கண்மூடித்தனமாக
ஏறி ஏறி
ஏறி ஏறி
வந்து சேர்ந்தது
எத்தனை படிகளோ அத்தனை.

3.

வரவேற்பு


அலைகள் போல
ஒருவர் அறியாமல் ஒருவர்
போட்டிப் போட்டுக்கொள்கின்றனர் பிரதான சாலையில்

தன்னந்தனியான ஒவ்வொருவருக்கும் அப்போது
ஏதோ நுரைக்கிறது
ஏதோ வடிகிறது

திடுமென சாலை கிளை விட
பரஸ்பர முகமனோடு
முடிவின்றி முடிவுக்கு வருகிறது ஒரு போட்டி

அதிலொருவன் அவனுக்கேத் தெரியாமல்
யாருமற்ற நெடுஞ்சாலையோடு தொடர்ந்து பரவசமாக போட்டிபோடுகிறான்.

மின்னல் வேகத்தைக் குறைத்து
ஒரு சாம்பியன் போல
தனதூரின் திருப்பத்தில்
ஒரு சுழற் சுழன்று
நிதானிக்கிறான்.

கிளப்பிய புழுதி மேகமென கலைகிறது

கிராமத்து வெய்யில் சற்று வெளிச்சம் தணித்து மெல்ல மேவுகிறது

ஒரு பால்ய குயில் எழுப்புகிறது தனிச் சீழ்க்கை

சற்றைக்கெல்லாம்
பல பல வென இலைகளைத் தூவியது
ஊர் எல்லை மரம்.

ச.அர்ஜூன்ராச்

சமகாலத்தில் பல்வேறு இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. "ராஜ Single " கவிதை தொகுப்பின் ஆசிரியர்.

உரையாடலுக்கு

Your email address will not be published.