/

கலையே உளசிகிச்சையாய் (பகுதி 8) : அலான் டி பாட்டன் & ஜான் ஆர்ம்ஸ்டிராங்க்

தமிழில் : தென்னவன் சந்துரு

ஒருவர் எப்படிப்பட்ட கலையை உருவாக்க வேண்டும்?

ஒருவர் எப்படியான கலையை உருவாக்க வேண்டும்? – இந்த கேள்வியே நமக்கு விசித்திரமானதாக தோன்றுகிறது. ஏனென்றால் கலைஞன் அல்லாத ஒருவர் இக்கேள்வியை எழுப்புவதை நாம் விரும்புவதில்லை. ஒரு கலைஞன், தான் என்ன செய்யவேண்டும் என்பதை அவனே தீர்மானிப்பான் என்றும்,  அது அவனே முழுமையாய் அறிந்திருக்காத ஒரு வழிமுறையின் விளைவாய் உதிக்கிறது என்றும் நம்புகிறோம்.

மேலான கலைகளின் மீதாக கட்டமைக்க்கப்படும் அதீத மதிப்பே அதை மர்மமானதாக ஆக்கிவிடுவதோடு அவற்றிற்கு வெளியில் இருக்கும் ஒரு நபர் அதை அணுக முயற்சிக்கவோ, தலையிடவோ கூடாத படிக்கு மாற்றிவிடுகிறது. இதனால் ஒருவர் கலைஞனிடம் தன் கோரிக்கைகளையும், வழிகாட்டல்களையும் முன்வைப்பதில் உருவாகிவிடும் தயக்கம், கலையின் உண்மையான ஆற்றலையும் மதிப்பையும் பலவீனப்படுத்துகிறது. ‘கலை எதற்காக’ எனும் கேள்வியை அர்த்தப்படுத்துவதில் நமக்கு உள்ளூர இருக்கும் அச்சத்தைதான் இவை பிரதிபலிக்கின்றன. 

கலையிலிருந்து நமக்கு என்ன வேண்டும் என்று தெளிவாக தெரியாத காரணத்தினால், அதிலிருந்து குறிப்பிட்ட விஷயங்களை கேட்டுப்பெறுவதற்கான நம்பிக்கை நமக்கு எழுவதில்லை. மாறாக நமக்கு தேவையான அடிப்படை விஷயங்கள் யாவும் கலைஞனின் முறைப்படுத்தப்படாத மர்மமான உந்துதலிலிருந்தே பூர்த்தியாகிவிடும் என்றும் நம்புகிறோம். இத்தகைய இடர்ப்பாடு என்றைக்குமான விதியாக இருந்ததில்லை.

வரலாற்றில் நீண்ட காலத்திற்கு, மதங்களும் அரசாங்கங்களும் கலையை தனிநபரின் ஆளுமைகளையும், பொது வாழ்வின் அடிப்படைகளையும் உருவாக்கி நெறிப்படுத்தும் முக்கிய சக்தியாகவே கருதின. எனவே எப்படிப்பட்ட கலை உருவாக்கப்பட வேண்டும் என்பது வெறும் தனிப்பட்ட உத்வேகத்தால் வழிநடத்தப்படுவதாக குறுக்கிக்கொள்ளாமல், பரந்த அரசியல் நலன்களை முன்வைத்தே அது அமையவேண்டும் என்றும் நம்பினர். மதங்களும் அரசாங்கங்களும் அவற்றின் புரிதலின்படி ஒரு தனிமனிதனுக்கும் (ஆன்மாவிற்கும்) சமூகத்திற்குமான தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக கலையை இயக்க விரும்பின. தியாகம் மற்றும் மீட்பின் மதிப்புகளை நோக்கி மக்களை வழிநடத்தும் வகையில் கலைப்படைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்றோ அல்லது உடலுழைப்பிற்கான மரியாதையையும் முதலாளித்துவத்திற்கான எதிர்ப்பையும் ஊக்குவிக்க வேண்டும் என்றோ எண்ணின.

பிரச்சாரம் அல்லது பரப்புரை என்னும் வார்த்தைகள் இன்று அகராதியிலேயே நஞ்சூறியவையாக குறிப்பிடப்படுமளவிற்கு மாறிவிட்ட நிலையில், மதங்களும் அரசாங்கங்களும் அதை எந்த சஞ்சலமும் இல்லாமல் உபயோகித்துவந்தன. அவர்களைப் பொறுத்தவரை, கலை என்பது உலகின் மிக முக்கியமான கருத்துக்களுக்கான பிரச்சார (propaganda) கருவியாகவே இருந்தது. வேன் ஐக்-கின் (van Eyck) ‘Ghent Altarpiece'(1)-ஐ எடுத்துக் கொள்ளலாம். கீழ் பகுதியின் மத்தியிலுள்ள பலிபீடத்தில் ஒரு ஆட்டுக்குட்டி சித்தரிக்கப்பட்டுள்ளது. அதன் இரத்தம் ஒரு தங்கக் கோப்பையில் வடிகிறது; இடதுபுறத்தில் உள்ள இருவர் ஒரு மரச் சிலுவையையும், ஈட்டியையும், முள் கிரீடத்தையும்  வைத்திருக்கின்றனர். மேலே, சூரியனின் மையத்தில், ஒரு புறா இறக்கைகளை விரித்தபடி காட்சியளிக்கிறது. பலபேர் தீவிரமாக சிந்தித்து தொகுத்த கருத்துக்களுக்கு வேன் ஐக் ஒரு அசாதாரணமான காட்சி  சித்தரிப்பை உருவாக்கி அளித்தார்.

கலையின் பேசுபொருளை கலைஞர்களே தேர்ந்தெடுக்காத போதும் அது மகத்தானதாவே இருக்கிறது. Jan and Hubert van Eyck, Ghent Altarpiece or The Adoration of the Mystic Lamb, 1423-32.

அவர் வாழ்ந்த சமூகம் இவ்வளவு நுட்ப்பத்தை கோரியிருக்கவில்லை. வர்ணத்தைக்கொண்டு உண்மையான இரத்தத்தை உணரச்செய்ததிலும், நிறமியிலிருந்து (pigment) துயரத்தை தூண்டுவதிலும் அவருக்கிருந்த திறனைத்தாண்டி, வான் ஐக் ஒரு தத்துவஞானியாகவோ இறையியலாளராகவோ இருந்திருக்க வேண்டும். இது அவரது படைப்பாற்றலுக்கான சான்றாக இன்றும் நிலைத்திருக்கிறது. அதன் உட்கருத்துக்களுக்காக அல்லாமல் அக்கருத்துக்களை காட்சிப்படுத்தியதற்காகவும் அதை அவர் வழங்கிய விதத்திற்காகவும் இன்றளவும் போற்றப்படுகிறார்.

மதங்களும்  அரசாங்கங்களும் (குறிப்பாக கத்தோலிக்கமும் கம்யூனிசமும்) குறிப்பிட்ட நோக்கத்திற்காக கலையை பயன்படுத்தும் செயல்பாட்டில் இருந்த நம்பிக்கையை இழக்கச்செய்ததோடு, அப்படி செய்வதில் இருந்த மதிப்பையும்  இழிவுபடுத்திவிட்டது. இந்த களங்கம் கொடுங்கோலர்களும் சர்வாதிகாரிகளும் தங்களது சுயபெருமிதத்திற்காக அதை உபயோகித்ததனால்தான் ஏற்பட்டது. ஆனால், குறிப்பிட்ட நோக்கத்திற்காக கலையை பயன்படுத்துவது என்பது உண்மையில் அவ்வளவு மோசமான யோசனை அல்ல. ஒரு கலைப்படைப்பிற்கான நோக்கம் ஒரு கலைஞனின் சுய கற்பனைக்கப்பாற்பட்டு, பார்வையாளர்களின் ஆன்மாவிற்காகவும், அச்சமூகத்தின் தேவைகளை பிரதிபலிக்கும் வகையிலும்கூட அமையமுடியும். இந்த தருணத்தில் நம்மை தொடர்ந்து அலைக்கழிக்கக்கூடிய ஒரு கேள்வி எழுகிறது. இந்த தேர்வினை-கலைக்கான நோக்கத்தை- யார் முடிவு செய்வது? நான் அதை ஏற்றுக்கொள்ளாதபோது என்ன நடக்கும்? ஒருவேளை நான் அதற்காக சிறையில் அடைக்கப்படுவேனா? 

மேலும் பரப்புரை என்பதையே நாம் ‘வலுக்கட்டாயப்படுத்தும்‘ நம்பிக்கைகளுடன் பிணைத்து புரிந்துகொள்கிறோம். ஆனால் நம் முன்னோர்களின் தியாகங்களால் உருவாகிய இன்றைய தாராளமய சமூகம் என்பது சுயஒப்புதலால் ஆனது. பெரிய லட்சியங்களைக்கொண்ட அமைப்பாக இருந்தாலும் சரி, அரசியல் கட்சியானாலும் சரி அவை தங்களது லட்சியங்களையும், கொள்கைகளையும் மக்களிடம் கொண்டுசென்று அவர்களை இணங்கச்செய்து, போதுமான அளவு ஏற்பையும் வாக்கையும் ஈட்டி வெற்றிபெற வேண்டும்.

இருபதாம் நூற்றாண்டில் ஆலயங்களுக்குச்செல்லும் குழுக்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டிருக்கக்கூடிய சரிவு உறுதிப்படுத்துவது இதைத்தான். பல்லாண்டுகாலமாக செயல்படும் செல்வச்செழிப்பான, மதிப்புமிக்க நிறுவனமாக இருப்பினும், அவை தங்களது போதனைகளை மக்களிடம் திணிப்பதற்கு கனவு மட்டுமே காண முடியும். ஜனநாயகம் மற்றும் சந்தை பொருளாதாரம் சார்ந்த நாட்டில், கல்வி வளங்களை கைக்கொண்ட கத்தோலிக்க தேவாலயங்கள்கூட இச்சிக்கலைத்தான் எதிர்கொள்கின்றன.

இங்கே ஒப்புதலை முழுமையாகக் கட்டாயப்படுத்தக்கூடிய எந்த வழிமுறையும் இல்லை. எனவே, கலைக்கான நோக்கத்தை பரிந்துரைப்பதற்கும் அதை வலுக்கட்டாயமாக திணிப்பதற்கும் இன்றளவில் எந்த தொடர்பும் இல்லை. ஒரு அரசு அடக்குமுறையை பிரயோகித்து கட்டாயப்படுத்துவதற்கு இன்றளவில் வாய்ப்பில்லை. அதுபோல ஒரு கலைஞன் எங்கிருந்தோ மின்னல்வெட்டி உள்ளெழும் ஊக்கத்திற்காக காத்திருக்க வேண்டிய தேவையும் இல்லை.

நாம் ஒரு நம்பிக்கையை முன்னெடுக்கலாம் – சில முக்கியமான, நல்ல விஷயங்களை கலையில் வெளிப்படுத்தலாம், பரப்புரை செய்யலாம். ஒரு கத்தோலிக்க திருச்சபையோ அல்லது கம்யூனிஸ்ட் அரசோ கொடுத்த கூர்மையான வரையறைகளுக்கு நிகரான கருப்பொருளை அளிக்கும் ஒரு கட்டமைப்பை கற்பனை செய்யலாம் – ஆனால் இவ்வமைப்புகள் முற்றிலும் வேறுபட்ட நோக்கங்களை அடைவதில் கவனம் செலுத்தும். மேலும் எந்த வற்புறுத்தலும் அதில் இருக்கப்போவதில்லை.

ஒரு தாராளவாத சமூகத்தில் கலைக்கான நோக்கம் தனி மனிதர்களுக்கு ஆறுதல் அளிப்பதிலும், சுய புரிதலை மேம்படுத்துவதிலும், நிறைவிற்கான தேடலை விழைவதிலும் செயல்படலாம். விரிவுரைக்கப்பட்ட ஏழு அடிப்படைக் கருப்பொருள்களிலிருந்து இவ்வமைப்பு கலைக்கான நோக்கத்தை அடையாளப்படுத்தலாம் –  1. நினைவுகூர்தல், 2. நம்பிக்கையளித்தல், 3. துயரை பிரதிபளித்து நம் வேதனைகளுக்கு கண்ணியமளித்தல், 4. மறுசமநிலைப்படுத்தி வழிகாட்டுதல், 5. சுய அறிதலை மேம்படுத்தி வெளிப்படுத்த உதவுதல், 6. எல்லைகளை விரிவுபடுத்துதல் மற்றும் 7. பாராட்டுதலை ஊக்குவித்தல்.

இவற்றில் மூன்றாவதாக குறிப்பிடப்பட்டிருக்கும் பேசுபொருளை இங்கு கவனிக்கலாம். நம் கவலைகளுக்கு கண்ணியமானதொரு பிரதிபலிப்பை கண்டடைவதற்கான எதிர்பார்ப்பிற்கும், நாம் துயரின்போது தனித்துவிடப்பட்டதாக எண்ணும் வதையிலிருந்து மீண்டுவருவதற்கும் கலை உதவுகிறது என்று இதைச் சொல்லலாம். இந்த தேவை தற்போது கலையில் சரியாக கையாளப்படுவதில்லை. துயருறுதலின் மர்மத்தன்மை சார்ந்து ஒரு கத்தோலிக்க தேவாலயத்தால் அமைப்புரீதியாக இது முன்னெடுக்கப்படுவதற்கு நேர்மாறாக, தற்காலத்தில் ஒரு பெரும் அருங்காட்சியகத்தில் ஓரிரு கலைஞர்கள் மட்டும் பொருத்தமற்ற வகையில் இதை முயற்சிப்பதை கவனிக்கலாம். 

மத்திய கால தொடக்கத்தில் (Early Middle Ages) இறையியலாளர்கள், கர்த்தரின் வாழ்விலிருந்து ஐந்து துயர்மிகு பகுதிகளை எடுத்துக்கொண்டு அவ்வுணர்வை நமக் குள்ளும் உள்ளூர கடத்த அறிவாற்றலை செலவிட்டு மிகக்கவனமாக திட்டங்களை மேற்கொண்டனர். பிறகு கலைஞர்கள் அதே சாரத்தை ஒத்த படைப்புகளை உருவாக்க பணிக்கப்பட்டனர். அதில் முதலாவதாக ‘தோட்டப்பகுதியில் நிகழ்ந்த கடுந்துயர்’ (‘The Agony in the Garden’) – கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்படுவதற்கு முந்தைய தின அகோரத்தனிமையை விவரிக்கிறது. விடிந்ததும் ஒரு கொடூரமான ஆனால் தவிர்க்கமுடியாத கணம் காத்திருக்கிறது என்னும் பின்னணியில் ஒருவர் முற்றிலும் தனியாக இருக்கிறார் என்ற உணர்வும், பயங்கரமும் துக்கத்தின் ஒரு தனித்துவமான அம்சத்திற்கு முக்கியத்துவத்தையும், கவனத்தையும் வழங்குகிறது.

முன்தயாரிக்கப்பட்ட கருப்பொருளை எட்டியிருக்கும் கலைஞர். Paul Gauguin, Christ in the Garden of Olives, 1889

இப்படியான கலை, குறிப்பிட்ட அத்தருணங்களில் அதனால் இயன்றவரை நமக்கு பயன்தர முயன்றிருக்கிறது. கிரிஸ்துவ கலைத்திட்ட வரிசையில், அடுத்தபடியாக அது சித்தரிக்கும் இரண்டாவது துயர்மிகு தருணம் என்பது “முற்கிரீடம் பதித்தல்’. அது அவமானப்படுத்தலையும், மிகக் கொடூரமான கேலியையும் எடுத்துரைக்கிறது.

இத்துயர்களின் மர்மச்சுழலை தொகுத்து பார்க்கும்போது அவை துயர் பற்றிய ஒரு விரிவான உளவியல் பார்வையை அளிப்பதை கவனிக்கலாம். நம் வாழ்வில் வேதனைகளுக்குண்டான தவிர்க்கவியலாத இடத்தை சுட்டிக்காட்டுவதோடு நம் கையாளும் திறனையும் வலுப்படுத்துகிறது – இன்னலை எப்படி தாங்கிக்கொள்ளலாம் என்று எடுதுரைப்பதோடு, பரிவை உட்புகுத்தி பொதுவாக வேதனைகளின்மீது படிந்திருக்கும் களங்கத்தை விலக்குகிறது.

குறிப்பிட்டதொரு மத நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைந்திருப்பதால், இந்த சட்டகம் தற்போதைய மதச்சாற்பற்ற காலகட்டத்தில் தன் உயிர்ப்பை இழந்துவிட்டன. இருப்பினும் அவை நாம் கவனிக்கத்தவறிய முக்கியமானதொரு கருத்துருவிற்கு ஆக்கப்பூர்வமான தூண்டுதலாக இருக்கிறது. அதாவது வெளிப்படையாகவும், திட்டமிட்டும் நமது துயரங்களுக்கான அருமருந்தாய் கலையை பயன்படுத்துவது என்பதுதான் அது.

மனிதத்துயர்களை பிரதிபலிப்பதையே கலையின் முக்கிய அம்சமாக கொண்டதொரு மதசார்பற்ற உலகை கற்பனை செய்து பார்க்கலாம். இக்கருப்பொருள் உளவியல்ரீதியாக மேம்பட்ட பொருள்கொண்டதாகவும் முக்கியமானதாகவும் படலாம். ஜான் வேன் ஜக் கிற்கு அன்றைய கத்தோலிக்க தேவாலயங்கள் உருவாக்கிக்கொடுத்த இறையியல் வழிமுறைகளைப்போல. நாம் எதிர்கொள்ளும் சில இன்றியமையாத துயர்களை எடுத்துக்கொள்வோம்: அன்பைப்பெறுவதில் நமக்குள்ள இயலாமை, பண வரவுசெலவுகளைச்சுற்றி நமக்கேற்படும் பதற்றம், குடும்ப உறவுகளுள் உள்ள மகிழ்ச்சியின்மை, நம் மன அமைதியை குலைக்கும் வேலைச்சூழல், வளரிளம்பருவத்திற்கேயுரிய நிச்சயமின்மைகள், நடுவயதில் எழும் வருத்தங்கள், ஒருவருடைய சுயதர்மத்திற்கு முன்னெழும் வேதனையும் நிறைவேறாதா லட்சியங்களும என இவையெல்லம் நாம் பொதுவாக எதிர்கொள்ளும் இன்றியமையாத துயர்கள்.

உறவுச்சிக்கலினால் எழும் வேதனைகள் என்பது இந்த காலகட்டத்தின் நோய்மை. இருப்பினும் ஆச்சர்யகரமாக ஒருசில படைப்புகள் இவற்றை கருப்பொருளாய் கொண்டுள்ளன. எனவே ஒருத்திட்டத்தின்வழி ஒரு கலைஞருக்கு அளிக்கப்படும் கருப்பொருள் ஒன்றை பின்வருவாறு கற்பனை செய்யலாம்: 

ஏராளமான இணையர்களின் வலிமிகு முரண்பாடுகள்/மோதல்கள் இரவுணவின்போதே வெளிப்படுகின்றன. மோதலுக்கான தொடக்கம் மிகச்சாதாரணமான விஷயத்திலிருந்தே எழுகிறது. உங்களது நாள் எப்படி இருந்தது?” என்று ஒருவர் கேட்கும் தொனியிலிருந்து அது கிண்டலாகவோ, சந்தேக நோக்கத்துடனோ எழுப்பப்பட்டதாக மற்றொருவர் உணரும்போது/எண்ணும்போது அது பெரிதாகிவிடுகிறது. ஒருவர் எதோ கடுமையாக சொல்லிவிட மற்றொருவர் வெறுமையாகவும் பரிதாபமாகவும் உணரநேரிடுகிறது. கடுஞ்சொல்லை வெளிப்படுத்தியவர் உணர்வெழுச்சியோடு இருக்கிறார், அதேநேரத்தில்  தன்னை விகாரமாகவும் உணர்கிறார் (எனக்கு ஏன் இப்படி நிகழவேண்டும்? என்று நினைக்கிறார்). ஒரு சிறு மனசுழற்சி ஏற்படுகிறது, ‘நான் உன்னை வெறுக்கிறேன்’; ‘நான் என்னையே வெறுக்கிறேன்’; ‘என்னையே நான் வெறுக்குமளவிற்கு மாற்றியதற்காக உன்னை வெறுக்கிறேன்’.

அடிமனதில் அவர்கள் ஒன்றாய் மகிழ்ச்சியாயிருக்க விரக்தியோடு ஏங்குவதை குறிப்புணர்த்தும்/வெளிப்படுத்தும் கலைப்படைப்பை எதிர்பார்க்கிறோம். அந்த மேஜை நுண் அழகோடு காட்சியளிக்கலாம். ஒருவர் தான் எந்த தவறும் செய்யவில்லை என்று நினைக்க மற்றொருவர் அழுதுகொண்டிருக்கிறார். அவர்கள் நன்மனிதர்களே. நாம் அவர்களை கண்டிக்கப்போவதில்லை. அவர்கள் விருப்பத்திற்குரியவர்களாகவே இருக்கவேண்டும். அவர்கள் உண்மையில் ஒரு கடினமான சிக்கலை எதிர்கொள்கிறார்கள். அவர்களது வேதனைக்கு கண்ணியமும், இந்த விஷச்சுழலிலிருந்தும், தனிமையிலிருந்தும் விடுதலையளிக்க ஒரு கலைப்படைப்பால் முடியுமா? 

இந்த கருப்பொருளைக்கொண்டு படைப்புகளை உருவாக்கும்படி இப்புத்தகத்திற்க்காக பணிக்கப்பட்டது. ஜெஸ்சிகா டாட் ஹார்ப்பர் (Jessica Todd Harper) எடுத்த புகைப்படம் மேற்கூறிய விவரணைகளின் சாரத்தை சரியாக பிரதிபலிப்பதாக படுகிறது. கண்டிப்பாக இதைவிட இன்னும் சிறப்பாக எவ்வளவோ வழிகளிலும் இந்த சவால் கையாளப்பட்டிருக்கலாம். ஒரு கலைக்கூடம் முழுவதும் வைக்குமளவிற்குகூட – ‘தோட்டப்பகுதியில் நிகழ்ந்த கடுந்துயர்’ (‘The Agony in the Garden’) கருத்துருவை வெளிப்படுத்திய ஏராளமான படைப்புகளைப்போல.

கிருஸ்து காலகட்டதிற்கு பிறகான ஒரு புதிய கலை உச்சத்தை கற்பனை செய்தல். Jessica Todd Harper, The Agony in the Kitchen, 2012

கலை நம் உளவியல் தேவைகளை பூர்த்திசெய்ய தொடங்க்குவதற்கான ஒரு முன்னெடுப்பே இது. அதாவது கலைக்கான கருப்பொருளை மாற்றி வடிவமைக்கும் அமைப்பை உருவாக்குவதற்கான மாற்று சிந்தனை – நூற்றாண்டுகளாக இறையியலுக்கும் அரசதிகாரங்களின் கருப்பொருளுக்கும் கலை சேவை செய்ததைப்போல/ பங்காற்றியதைப்போல.

கலையை ஒரு கலைஞனின் முறைப்படாத கற்பனையின் விளைகனிக்கு அப்பாலும் நாம் பொருட்படுத்த துணியவேண்டும். கலைப்படைப்புகளை முறைப்படுத்தி அவற்றை நேரடியாக நமக்கு உதவும் வகையில் மாற்றியமைக்கவேண்டும். நாம் ஒரு சுய புரிதலை அடையவும், மன்னித்தலை நினைவுகூரவும், காதல்வயப்படவும் அவை துணைபுரிய அனுமதிக்க வேண்டும். அதற்கும் மேலாக சிக்கல்களை எதிர்கொள்ளும் மனிதஇனத்திற்கும் அதன் இடர்பாடுகளை தாங்கி நிற்கும் உலகிற்கும் உணர்வுக்கூர்மையை அளிக்க கலை வித்திடலாம்.

கலை பணிவோடு தனித்திருப்பதற்கு மாறாக இந்த உத்தி கலைசெயல்பாடுகளுக்கான மைய இடத்தை/ நடைமுறை முக்கியத்துவத்தை அளிக்கும். கலை இதை பலவேளைகளில் உரிமைகோரினாலும் நிதர்சனத்தில் அரிதாகவே நிகழ்கிறது. கலை என்னுள் முறையிடவில்லை (அ) புரியவில்லை என்பதல்ல உண்மை. நமக்கு அவசியமான உதவி தேவைப்படும்போது வழக்கமாக நாம் கலையை நோக்கி திரும்புவதில்லை. நமது உதடுகள் பேசத் தயங்கும் உணர்வுகளைக்கூட நமது செயல்கள் காட்டிக் கொடுத்துவிடுகின்றன. கலை மிகவும் சக்திவாய்ந்ததாக நம் தனி வாழ்விலும் கூட்டு வாழ்விலும் பங்காற்றவேண்டும் என்றும், இன்னும் அதிகமான விளைவுகளை அது ஏற்படுத்த வேண்டும் என்றும் நாம் விரும்பினால், இந்த புதிய உத்தியை நாம் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

முந்தைய பகுதிகள் : பகுதி-1 பகுதி-2  பகுதி-3  பகுதி-4  பகுதி-5 பகுதி-6 பகுதி-7

தென்னவன் சந்துரு

வங்கித் துறை ஊழியரான தென்னவன் சந்துரு கலை இலக்கியம் சார்ந்த கட்டுரைகளில் ஈடுபாடுடையவர். மொழிபெயர்ப்பாளர். நவீன தமிழ் இலக்கிய வாசிப்பில் ஆர்வம் கொண்டவர்.

உரையாடலுக்கு

Your email address will not be published.