பேய்க் காமம் : லாவண்யா சுந்தரராஜன்

பேய்க் காதலால் உறங்காத கடந்த மூன்று முழுநாட்கள். இப்போது நான்காவது இரவு, பெங்களூரிலிருந்து கன்னூர் செல்லும் ரயிலில் குளிருட்டப்பட்ட இரண்டாவது வகுப்புப் பயணப் பெட்டியை அடைந்தபோது, அங்கே எனது படுக்கையில் இளம் தம்பதியர் அமர்ந்திருந்தார்கள். இரவு மணி ஒன்பது பத்தாகியிருந்தது. ஆனால் என்னால் ஒரு நிமிடம் கூட உட்கார்ந்திருக்க முடியாது போலிருந்தது. தலைக்குள் இரவு சுழன்று இன்றைய காலைக்குள் நுழைந்தது. 

காலையில் அலுவலகம் சென்றதிலிருந்து ஒருவழியாக செயல்படத் தொடங்கிய மின்தும்பியின் செயல்பாடுகள் அனைத்தையும் என்னுடன் பணிபுரியும் சக பணியாளனுக்கு விலக்குவதிலேயே சென்றது. மாலையானால் என் நேரத்தைத் திருடும் மெய்நிகர் சந்திப்புகள். ஒரு சந்திப்பு முடிந்து அடுத்தது ஆரம்பிக்கும் முன்னர் சாமர்த்தியமாக மூன்றே நிமிடத்தில் இரவுணவை முடித்துக் கொண்டேன். பயணத்தைக் காரணம் காட்டி கடைசி அரைமணி நேரம் சந்திப்பு கழுத்தறுப்பிலிருந்து தப்பித்துக் கொண்டேன். மெட்ரோவில் பயணிக்கும்போது, இணைப்பில் இணையலாம் என்று நப்பாசை இருந்தது. ஆனால் மெட்ரோ பெட்டி நிரம்பிய கூட்டம். ஒருவழியாக ரயில் ஏறியதும் களைப்பு என்னைப் பிடுங்கியது. என் படுக்கை மீது ஜோடியாக அமர்ந்திருந்தவர்களைப் பார்க்க உள்ளூர எரிச்சல் வந்தது. அவர்களிடம் நான் உடனடியாக உறங்க வேண்டும் என்று சொன்னதும் அமர்ந்திருந்தவர்கள் இருவரும் மேல் படுக்கைக்கு ஏறிச் சென்று அமர்ந்து கொண்டனர். 

மேல் படுக்கையின் அதிர்வுகளைப் பார்த்த போது கணவன் படுக்கையில் பக்கவாட்டிலிருக்கும் சரிந்து காலை ஒருக்களித்து நீட்டி அமர, அவது மனைவி(அப்படித் தானிருக்க வேண்டும்) அவனது தொடையிலிருந்து தொடங்கி உடல் குறுக்கி அமர்ந்திருக்க வேண்டும். பாவம் அவர்கள் என்னால் அசௌகரியம். ஆனால் மனமோ வினோதமாய் அது அவர்களுக்கு சௌகரியமாகவே இருக்குமென்று வக்கிரமாக நினைத்தது. படுத்ததும் உறங்கிப் போனேன். இத்தனைக்கும் பக்கத்துப் படுக்கைகளில் சில பெண்களும் ஆண்களும் பேசி கும்மாளம் அடித்ததில் எப்படித் தூங்கினேன் என்று நள்ளிரவில் விழித்தபோது ஆச்சரியமாக இருந்தது. சில வருடங்களுக்கு முன்னர் சென்னை விமான நிலையத்திலிருந்து வெளிவந்த போது வாகனங்கள் வெளியேற வைத்திருக்கும் தடுத்து நெறிபடுத்தும் வழியடைப்புத்  தட்டிக்கு பின்னால் தன்னை மறந்து யாரோ ஒரு பெண் உறங்கியது இப்போது நினைவுக்கு வந்தது. அப்போது அவளைப் பார்க்க வியப்பாக இருந்தது, தன்னிலை மறந்து ஒரு பெண்ணால் எப்படி உறங்க முடியும்? இப்போது புரிகிறது பெருங்காமம் கொண்ட பெண்ணால் அப்படி உறங்க முடியும்.  

மூன்றாம் நள்ளிரவு, முதல் நாள் இரவுக்குள் நுழைந்து நான் மங்களூரிலிருந்து கிளம்பி வந்ததை வேடிக்கைப் பார்த்தது. அப்போதைய என் அதிர்ஷ்டத்துக்கு எனக்கு கிடைத்த படுக்கை மேலடுக்கு படுக்கை. கீழடுக்கில் சற்று நேரம் அமரலாம் ஆனால் எனக்கு நேர்கீழே படுக்க வேண்டிய பருமனான பெண்மணி தனது தொப்பையை விட இருமடங்கு பெரிய பையில் என்னத்தையோ மூட்டை போல் திணித்து வைத்திருந்தது. நான் அமர வேண்டிய இடத்தில் திவ்யமாக அமர்ந்திருந்தது. அது மட்டுமில்லாமல் நான் வந்து அமரக் காத்திருக்கிறேன் என்னிடம் பெட்டி கைப்பை சுமையிருக்கிறது என்று தெரிந்தும் தெரியாதவள் போல் எதிரிலிருந்தவனோடு எனக்குப் புரியாத பாஷையில் பேசிக் கொண்டிருந்தாள். “மன்னிக்கவும்” என்று பேசிக் கொண்டிருந்தவளை அழைத்ததும் என்ன என்பது போல ஏறிட்டாள். அமர வேண்டுமென்றதும் பையை எடுத்து நடுப்பலகையில் வைத்து விட்டு தனது கால்களை நீட்டிப் படுத்துக் கொண்டாள். வெறுப்போடு பார்த்த நான் படுக்கையின் கீழே எனது சுமையை இறக்கி வைத்து விட்டுத் தடுமாறி ஏறி மேலடுக்கில் படுத்துக் கொண்டேன். பெரும்பாலும் பயணத்தின்போது எனக்கு உறக்கம் வருவதில்லை. நகர்ந்து கொண்டேயிருக்கும் எதுவும் எப்படி நிம்மதி தர முடியும். படுத்ததும் அலுவலகத்தில் பாகம் பாகமாக பிரிந்து கிடக்கும் இரண்டு மின்தும்பிகளின் நினைவு வந்தது. 

அறிவாளிகள் பாகங்களை பிரித்தனுப்பும்போது  இடது இறக்கைகள் நான்கையும் முதல் பெட்டியிலும், வலது இறக்கைகள் அடுத்த பெட்டியிலும் வந்தது. நல்லவேளை கண்கள், கால்கள் எல்லாம் வெவ்வேறு பெட்டியில் மாறவில்லை. பாகங்கள் எல்லாம் சரியாக வந்து சேர்ந்திருக்குமா என்ற கவலையாக இருந்தது. பெட்டியை அனுப்பத் தயார் செய்து அது வந்து சேர மூன்று மாத காலங்கள் ஆகிவிட்டது. அதற்குள் தும்பியின் பாகங்கள் சலிப்படைந்திருக்கக்கூடும். அதற்கு உயிரில்லை முழுதாக கட்டமைக்கப்படாமல் பாகம் பாகமாக இருந்தது. ஆனாலும் அட்டைப் பெட்டியில்  மூன்று மாதம் அடைத்து வைத்தால் மின்தும்பி கோபமுற்றிருக்க வேண்டும். அதுவே எனக்கு அடுத்த இரண்டு நாட்களின் சாபமிட்ட இரவுகளை பரிசளித்தது. என்னை கீழடுக்கு படுக்கையில் அமரக் கூட அனுமதிக்காத அந்தப் பெண் தன்னோடு வந்திருந்த தடியனோடு ஓயாது பேசிக் கொண்டிருந்தாள். பேரிளம் பெண்ணுக்கு கீழடுக்குப் படுக்கையை விட்டுத் தராத கீழ்த்தரமானவன் அந்தப் பெண்ணோடு என்ன பாஷை என்று என்னால் அறிய முடியாத ஒன்றில் பேசியது நள்ளிரவு தாண்டியும் தொணதொணப்பானது. அந்தப் பாரமான பெண்மணி இரவு விளக்கு அணைக்காமல் ஆராஜகமாக உறங்கிக் கொண்டிருந்தாள். விளக்கை அணைக்க சொல்லிக் கேட்ட போது விளக்கெரியவில்லை அவளால் மூச்சு விடமுடியாது என்று சொல்லி மின் தும்பியின் சாபமாக அவள் வாய் மலர்ந்தாள். உறங்காமல் புரளப் புரள ரயில் கடக்கும் கொடுமையான எல்லா ஊரிலும் எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்தனர். சபிக்கப்பட்ட நான் என்ன செய்வேன்? கண்களை மலர்த்தி விளக்கிலெரியும் ஒளியைப் பார்த்துக் கொண்டே படுத்திருந்தேன்.

இரண்டாம் நாள் காலையில் பெங்களூரில் இறங்கியபோது பூங்கா நகரின் தற்காலம் ஈட்டிக் கொடுத்த வெம்மையை மீறி சில்லிப்பு கொஞ்சம் மீதமிருந்தது. மரங்கள் மெல்ல தனது பசுமைக்குத் திரும்ப இருந்தன, இளஞ்சிவப்பு வசந்தராணி மலர்களும், நீல ஜாக்ரண்டா மலர்களும் பெங்களூருக்கு வண்ணம் பூசி வசந்தத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தன. நான் மெட்ரோ ஏறி அமர்ந்தேன். வீட்டுக்கு அருகே இறங்க இன்னும் ஐம்பது நிமிடங்களாவது ஆகும். இரவில் உறங்காமல் களைத்த கண்களை சிறிது நேரம் மூடினால் மூளைக்குள் காபடியாட்டம் நடந்தது. பொறுக்க முடியாமல் மறுபடி விழித்துக் கொண்டேன். கையிலிருந்த புத்தகத்தை வாசித்துப் பார்த்தேன் இரண்டு மூன்று பக்கத்துக்கு மேல் வாசிக்க முடியவில்லை. சிலப்பதிகார வகுப்பின் பதிவுகளை எடுத்து என் காதுக்கு மட்டும் கேட்கும்படி வைத்துக் கொண்டேன். கோவலன் கொலையுறுவதற்கு முந்தைய பகுதிகளை மிகவும் லயித்துச் சொல்லிக் கொண்டிருந்தார் ஆசிரியர். கண்ணகியை நினைத்துப் பாவமாக இருந்தது. உடன் பயணித்த ஒருத்தி சிலப்பதிகாரம் என்பதைப் பார்த்து விட்டு நீங்கள் தமிழாசிரியரா என்று கேட்டாள். பதில் சொல்லாமல் முறைத்தேன். அவள் கூடத்தான் கையில் யோகப் பயிற்சி செய்யும் விரிப்பு வைத்திருந்தாள் நான் நீங்கள் யோகப் பயிற்சியாளாரா என்று கேட்க முடியுமா விவஸ்தை கெட்ட பெண்கள். சிலப்பதிகாரத்தை சற்று நிறுத்தி வைத்தேன். கோவலன் கொலையுறுவதை யோக புண்ணியவதி ஒருநாள் தள்ளிப் போட்டாள். எரிச்சலுற்று வெளியில் பார்க்கத் தொடங்கினேன் பொன்கொன்றை தலையோடு ஒரு மரம் கடந்து பின்னோக்கிச் சென்றது. மரத்தை மேல் பார்க்காமல் அதன் பறந்து விரிந்த குடைக் கிளைகளை நேர்கோணத்தில் பார்ப்பது பயங்கர அழகு. இளஞ்சிவப்பு வாகைப் பூக்கள் அலங்கரித்த பசுங்கிளைகளும் வேகமாய் என் யோசனைக்கு தலையசைத்து பின்னகர்ந்தது. மேலும் பல மரங்கள் பறவைகள் எல்லாம் இன்பமாய்க் கடந்தன. நான் மட்டுமே இந்த பேய்க் காதலால் அவதியுற்று இருக்கிறேன். பகலும் இரவும் ஊர் முழுவதும் அதனதன் வேலையைப் பார்த்துக் கொண்டு ஆர்பாட்டமாய் வாழ்கிறது. இந்த வெறுப்பு நீங்கும் முன் எனது நிலையம் வந்தது. இறங்கி நடந்து வீடு வந்தடைந்தேன். வீட்டை சுத்தம் செய்து தரச் சொல்லி பணியாளனை வரச் சொல்லி விட்டு எனது அடுக்கத்தை அடைந்து கதவைத் திறந்தேன். விரிந்த வீடு என்னை எப்போதும் போல சோபையாக வரவேற்றது. படுக்கையைக் கண்டதும் அலுவலகம் கிளம்பும் வரை படுத்து உறங்கலாம், ஆனால் வீட்டை தூய்மை செய்ய வேண்டும் மாதக்கணக்காய் பூட்டியிருந்த வீடு. உறக்கத்தை ஒத்தி வைத்துப் பணியாளன் வேலை செய்யும் நேரம் கொடுமையாக என் முன் நீண்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் அலுவலகம் கிளம்ப வேண்டும் பசியும் எடுக்கிறது என்ற அலுப்புணர்வுகள் என்னை ஒட்டிக் கொண்டன.

சோம்பலைப் பின் தள்ளி அலுப்பை அணிந்து கொண்டு பதினோரு மணியளவில் அலுவலகத்தை அடைந்ததும் தும்பியின் பாகங்களைக் காணக் கண்கள் ஏங்கின. ஆனால் சக பணியாளர் தோழன் பெட்டியுள் அனுப்பப்பட்ட பொருட்களை அனுப்புநர் முன்னமே எங்களிடம் கொடுத்திருந்த பட்டியலோடு ஒப்பிட்டுப் பார்த்த பின்னரே அதை எடுத்து உபயோகிக்க வேண்டும் என்றார். பட்டியலை சரிப் பார்க்க பகல் பொழுதில் பாதி கழிந்தது. நண்பர்கள் மதிய உணவுக்கு அழைத்தார்கள். தும்பியின் பாகங்கள் ஆவலோடு என் இருக்கைக்கு அருகே வைத்து எடுப்பார் தொடுப்பார் யாரோ என்று ஏங்கிப் பார்த்ததை எதிர் கொள்ள முடியாமல் தலை தாழ்த்திக் கொண்டேன். உணவில் கவனமே செலுத்த முடியவில்லை. விரைந்து கொறித்துவிட்டு மேசையின் மீதிருந்த தும்பியின் பாகங்களை ஒவ்வொன்றாக இணைத்தேன். உடலோடு அதன் தலையைப் பொருத்தினேன். கண்களை மாட்டினேன். வாலைப் பூட்டினேன். கால்களைக் கட்டினேன். இறக்கைகளை உடம்போடு ஒட்டினேன். இனி உயிரூட்ட வேண்டியது மட்டுமே மிச்சம். மின்சார இணைப்பைக் கொடுத்ததும் விழிகளை உருட்டி தனது உயிரூட்டத்தை நிறுப்பித்தது தும்பி. நான் மெல்ல பறக்கத் தொடங்கினேன். கால்களை அசைக்கச் சொன்னேன் அசைத்தது. வாலை ஆட்டிக் காட்டச் சொன்னேன் செய்தது. ஆனால் என்ன செய்தும் இறக்கை விரிக்க  முடியவில்லை. எல்லா பரிசோதனைகளும் தும்பி நல்ல ஆரோக்கியமாக இருப்பதையே காட்டியது அதன் இறக்கைக்கு என்ன ஆயிற்று என்பதை யூகிக்க முடியவில்லை. என்னென்னவோ சொல்லிப் பார்த்தேன், அது இறக்கை விரிக்க எல்லா முயற்சியும் செய்தது ஆனால் முடியவில்லை. தும்பியை அனுப்பியவர்கள் பூமியின் மறுபுறத்தில் இருந்தனர். அந்த நேரம் அவர்களது அதிகாலை. இன்னும் நான்கு மணி நேரம் என்ன செய்வது என்று புரியாமல் நானும் தும்பியும் மட்டும் விழி பிதுங்கிக் கொண்டிருந்தோம். சக பணியாளர்கள் ஒருவர் பின் ஒருவராக கிளம்பிச் சென்று விட்டனர். மொத்த அலுவலகத்துள் என் மூச்சின் ஒலியும் தும்பியின் கண்ணசைவுகளும் தவிர  வேறு எதுவுமில்லை. ஒருவழியாக பூமியின் அடுத்த பக்கம் நன்கு புலர்ந்து இரண்டு மூன்று மணி நேரம் ஆனது. சரியான நேரத்தில் மெய்நிகர் இணைப்பில் இணைந்து தும்பியைக் காட்டியபோது தும்பியின் இறக்கை இரண்டும் பிரிந்து கிடக்கிறது பார், அதை ஒட்டும் பசையிருக்குமே அதை எடுத்து நுனிப் பகுதியை மட்டும் லேசாக ஒட்டினால் தும்பியின் இறக்கை விரியும் என்றார் பூமியின் பகல் பகுதியில் இருக்கும் நண்பர். தும்பியின் பாகங்கள் வந்த பெட்டியில் சல்லடையிட்டு கூடத் தேடிப் பார்த்தேன் அப்படியான பசை எதுவுமே இல்லை. நண்பரிடம் கேட்ட போது அப்படி பசை கிடைக்காத போது குண்டூசி வைத்து இணைத்தாலும் தும்பி இறக்கை இயங்குமென்றார். அப்போது இங்கே இரவு ஒன்பது மணி. இன்னொரு மெய்நிகர் இணைப்பில் பகிரப்படும் தகவல்களை வேறு கேட்ட வேண்டிய கட்டாயம். கேட்டால் மட்டும் போதும் பேசத் தேவையில்லை. அதனால் இணைப்பில் இணைந்து விட்டு தும்பியை இணைக்கும் குண்டூசியைத் தேட தும்பியைப் பையில் வைத்து மறைத்து எடுத்துக் கொண்டு கே ஆர் புரத்தில் இருக்கும் அங்காடித் தெருவுக்கு சென்றேன். அது மிக மெல்லிய குண்டூசியாக இருக்க வேண்டும் ஆகவே தும்பியை கடையில் காட்டி வாங்கினால் தானே சரியாக வரும் கடிகார கடையில் கிடைக்கலாம்.

அப்படித்  தும்பியை வெளியே எடுத்துச் செல்ல அலுவலகத்தில் நுழை வாயில் காட்டிச் செல்ல ஒரு கடவுச் சீட்டு வாங்க வேண்டும் அதை வழங்க அலுவலத்தில் யாருமில்லை அதனால் அப்படியே பையில் மறைத்து திருட்டுத்தனமாக அலுவலகத்திலிருந்து வெளியே வந்தேன். அங்காடித் தெருவில் கடிகாரக் கடையைத் தேடினேன் அங்கிருந்தவர்களைக் கேட்டபோது ஐந்து தெரு கடந்து போனால் ஒரு கடையிருப்பதாக சொன்னார்கள். ஐந்தாவது தெருவிலிருந்த அந்த கடை அடைக்கப்பட்டிருந்தது. அருகில் கேட்டபோது அந்த கடை ஒன்பது மணி மூடுவார்கள் நான் கொஞ்சம் தாமதமாக வந்து விட்டதாகச் சொன்னார்கள். இன்னும் இரண்டு தெரு தாண்டி வலதுபுற சந்தில் ஒரு வீட்டில் கடையுண்டு போய் பாருங்கள் என்று சொன்னார்கள் ஆனால் அதுவும் மூடியிருக்க வாய்ப்புண்டு என்றனர். காலையிலிருந்து நின்று கொண்டும், தும்பியின் நிலை கண்டு கையைப் பிசைந்து நடந்து கொண்டும் இருந்ததால் கால்கள் ஓய்வெடுக்கச் சொல்லி கெஞ்சின. ஆனாலும் உடலின் வலியை பூமியின் மறுபுறத்துக்கு அனுப்பி விட்டு விறு விறுவென்று இன்னும் இரண்டு தெரு தாண்டி நடந்தேன். நல்லவேளை அந்த கடை திருந்திருந்தது. ஆனால் அவரிடம் அத்தனை மெல்லிய குண்டூசி அந்த சமயம் இல்லை வேண்டுமானால் நாளை மாலைக்குள் ஏற்பாடு செய்கிறேன் என்றார். அவரிடம் இந்த இறக்கைகளை ஒட்டும் பசை எங்கே கிடைக்கும் என்று கேட்ட போது அது எஸ் பி சாலையில் கிடைக்கும் என்றார். எனக்கும் எஸ் பி சாலையின் கிடைக்கும் என்ற யோசனையிருந்தது. நாளை அங்கே தான் சென்று வாங்க வேண்டுமென்று யோசித்துக் கொண்டே அலுவலகம் அடைந்தேன். மெய்நிகர் இணைப்பில் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். அது பத்து மணிக்குத் தான் முடியும் அப்படியே மேசை மீது சரிந்து அமர்ந்து கணினியிலிருந்து வரும் சத்தத்தைக் கேட்டுக் கொண்டிருந்தேன். யோக நித்திரை பயிற்சியின் போது குரல்வழி கிடைக்கும் கட்டளைகளை கேட்டபடி பாதி உறங்கத்திலிருப்பது போலவே இருந்தது அந்த பதினைந்து நிமிடங்கள். பத்து மணிக்கு கிளம்பி மெட்ரோவில் பயணித்து வீட்டருகே பத்தரை மணிக்கு இறங்கினேன்.

இரவுணவு சாப்பிட்டிருக்கவில்லை. அந்த நேரத்தில் நான் பொதுவாக செல்லும் உணவகங்கள் எல்லாம் மூடியிருந்தது. இருந்த களைப்புக்கு உணவு வாங்கி உண்ணும் அளவுக்கு பொறுமையில்லை. ஒரு பெட்டிக் கடை போன்ற அமைப்பிலிருந்த அந்த இடத்தில் மூன்று நான்கு ஜோடிகள் நின்ற படி அரட்டையடித்து சிரித்துக் கொண்டு பழரசம் வாங்கி மெல்ல உறஞ்சிக் கொண்டிருந்தனர். ஒவ்வொர் முகத்தில் வேவ்வேறு விதமான சந்தோஷம். அந்த இடத்துக்குப் பொருந்தாத நான் எனது பழரச கோப்பைக்காக காத்திருந்தேன். பெங்களூர் இரவின் மெல்லிய குளிரிடையில் அதி தீவிர ஜில்லிடும் குளிர்ச்சியோடு எனது பழரச கோப்பை வந்தது. ஐஸ்கட்டிகள் வேண்டாம் என்று சொல்ல மறந்திருந்தேன். வேறு வழியின்று பற்களை கிடுக்கிக் கொண்டே அந்த பழரசத்தைக் குடித்து முடித்தேன். 

வீடடைந்தபோது கைபேசியில் சாயுங்காலம் நான்கு மணியிலிருந்தே வீட்டுக்குப் போயாச்சா என்று கேள்வியை ஒருமணி நேரத்துக்கொரு தரம் அனுப்பியிருந்த கணவரின் அக்கறையான விசாரிப்புகள் கடும் துக்கத்தை ஏற்படுத்தின. எல்லை மீறிய கோபம் வந்தது. உடுப்பைக் கூட மாற்றாமல் படுக்கையில் போய் விழுந்தேன். இந்தத் தும்பியின் பாகங்களைப் பூட்டி இறக்கைகள் இயங்குகிறதா என்று பரிசோதித்து அனுப்பாத சக பணியாளன் மீது எரிச்சலோ கோபமோ என்னவென்றே சொல்லத் தெரியாத உணர்வு வந்தது. கூடவே நான் முன்பு வேலை செய்த நத்தைக்கு நடைபயிற்சி தரும் குழுவின் சக தோழன் வந்து இந்த குழுவிலிருந்த வரை உனக்கு நத்தை நகர்வது வரை சரிப் பார்த்து தருவோமே இங்கிருந்து குழு மாறினாயல்லவா நன்கு வேண்டும் என்பது போல ஒரு பார்வையை வீசி விட்டுப் போனதை நினைத்தேன். அந்தக் குழுவில் எனக்கு என்ன அங்கீகாரமிருந்தது. இதே போலத் தானே உழைப்பைக் கொட்டிக் கொடுத்தேன். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? என்னை அறியாமல் அழத் தொடங்கினேன். நாளைக்கு எஸ் பி சாலையில் தும்பியின் இறகுகளின் நுனிப்பகுதியை ஒட்டும் அந்த பசை கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்ற கவலையும், அப்படியே கிடைத்தாலும் அந்த பசை அமெரிக்க பசைக்கு இணையான தரமானதாக இருக்குமா என்ற கவலையும் சேர்ந்து பயம்புறுத்தியது. இது போன்ற பாகங்களை வாங்குவதற்கென்றே நத்தை ஒட்டும் குழுவில் ஒருவன் உண்டு. அவனிடம் பேசியபோது அவன் ஆயிரத்து சட்டதிட்டங்களைச் சொன்னான். இத்தனைக்கும் அவன் வீட்டுக்கு மிக அருகில் தான் எஸ் பி சாலையுண்டு. அவனால் தும்பிக்கு மெல்லிய குண்டூசியைப் பொருத்தித் தரவும் முடியும். அவன் அப்படி உதவினால் பசை தேடும் வேலைக்காக வீட்டிலிருந்து தொலைதூரத்தில் இருக்கும் அந்த மின்பாகங்கள் விற்கும் சந்தைக்குச் செல்ல வேண்டியதில்லை. மேலும் நத்தை குழுவினர் அடுத்த நாள் தங்களது கடும்பணிகளுக்கு இடையே மனதை உற்சாகப்படுத்திக் கொள்ள கேளிக்கை விடுதிக்குச் செல்லும் திட்டமிருந்தது. அதனால் அவன் எனக்கு எந்த உதவியும் செய்ய மாட்டான். என் குழுவில் இருப்பவர்களுக்கும் அந்த அழைப்பு இருந்தது. நான் எப்போதாவது தான் அலுவலகம் வருகிறேன் என்பதால் எனக்கு இந்தக் கேளிக்கை விருந்துகளுக்கு அழைப்பனுப்பப்படுவதில்லை. மேலும் நான் அலுவலகம் வருவதே தும்பிகளை இயங்கச் செய்யவே. எனக்கு இந்த கேளிக்கை விருந்தில் கலந்து கொள்ள நேரமில்லை என்றும் சொல்லியிருந்தேன். ஆனால் இந்தத் தும்பிகள் இயக்கத் தொடங்கியது அதை வைத்து வேலை வாங்க இருக்கும் சக பணியாளனும் நத்தை குழுவினரனோடு சேர்ந்து கேளிக்கை விருந்துக்கு செல்கிறான் என்ன தெரிந்ததும் என்ன பொறுப்பற்றதனம்  என்று தோன்றியது. அது மட்டுமில்லாமல் வந்த அன்றே தும்பிகள் இயங்கிவிடும். அதைச் சார்ந்த எல்லா செயல்பாடுகளையும் சம்மந்தப்பட்டவனுக்கு கற்று கொடுத்து விடுவேன் என்று நினைத்து மறுநாளே மங்களூர் திரும்ப பயண சீட்டை எடுத்து வைத்திருந்தோம். அதை ரத்து செய்யச் சொல்லி இரவு இரண்டரை மணிக்குக் கணவருக்கு தகவல் அனுப்பினேன். கூடவே அதற்கு அடுத்த நாள் பயணத்தைப் பதிவு செய்யவும் தகவலை அனுப்பி விட்டு மறுபடி வந்து படுத்தேன். தும்பி, நத்தை பணியாளர்கள் பசி எல்லாம் கலந்து இரண்டாம் இரவிலும் உறக்கத்தை விரட்டியிருந்தது.

மூன்றாம் நாள் மெட்ரோவில் ஏறி எஸ் பி சாலையை நோக்கிப் பயணித்தபோது, அந்த ஒரு மணி நேரத்துக்கு மேலான பயணத்தைக் கடக்க கையில் கொண்டு வந்திருந்த “தரித்திரம் பிடித்த விமானத்தின் கதை” புத்தகத்தைப் புரட்டினேன். ஏற்கனவே இந்த புத்தகத்தின் முதலிரண்டு கதைகளை வாசித்திருந்தேன். கதையின் ஒரு சில நிகழ்வுகளைத் தவிர மீதி எதுவுமே நினைவில் இல்லை. அவ்வளவு மேட்டிமைத் தனத்துடனும், இறுக்கத்துடனும் எழுதப்பட்ட கதைகளை வாசிக்க இது உகந்த நேரம் அதுவல்ல என்பது மூன்றாவது கதையின் மூன்றாம் பக்கத்தை மறுபடி வாசிக்கும்போது புரிந்தது. புத்தகத்தை மூடி வைத்தேன். வழக்கம் போல மரங்கள் பூக்குடைகளை காட்டி கொஞ்ச நேரம் என்னை மறக்கச் செய்தது. கே ஆர் புரம் தாண்டியதும் கட்டடங்களின் காடு தொடங்கியது. அதிலும் வண்ண வண்ணக் கண்ணாடிகள் இருந்தன. பூங்கா நகர் இப்போது குப்பைகளின் நகரமாக காரணம் நானும் தானே என்று என்னை நொந்தபடி கண்களை தாழ்த்திக் கொண்டேன். இந்திரா நகரின் மரப்பசுமை கொஞ்சம் கொஞ்சம் மிச்சமிருக்கிறது என்று யோசித்த போதே  ஹல்சூர் முருகன் கோவிலின் கோபுர கலசங்கள் மட்டும் தெரிந்தன. அதுவும் நொடியில் கடந்தது. பிறகு இரண்டு நிலையங்கள் கடந்து பூமியடியில் மெட்ரோ புதைய விரைந்தது. வெளியே எங்கும் குகையும் இருட்டும் வந்ததும் பார்க்க எதுவும் இல்லாதபோது நினைவு உள்ளுக்குள் திரும்பியது. பசை கிடைக்குமா என்ற எண்ணம் தோன்றியது. அது என்ன மாதிரியான பசை என்று நண்பன் அனுப்பிய புகைப்படம் தொலைபேசியில் எடுத்து நோக்கினேன் அது திறக்கவில்லை.

தொலைபேசியின் தொடர்பு அறுந்து போயிருந்தது. கடையருகே இப்படி தொடர்பு அறுந்து போனால் என்ன செய்வது என்ற பயம் தொற்றிக் கொண்டது. என்னை சோதனை செய்வதற்கென்று அடுத்து வரும் மூன்று நிலையங்கள் பூமிக்கடியில் இருந்தன. எஸ் பி சாலை செல்ல மெட்ரோ தடம் மாற வேண்டிய நிலையத்தில் இறங்கி அடுத்த தடத்தில் செல்லும் வண்டியில் மாறினேன். இன்னும் தொலைபேசியில் தொடர்பு இல்லாமலேயே இருந்தது. இறங்க வேண்டிய நிலையத்தில் இறங்கி வெளியே வந்ததும் முதல் வேலையாக பசை மற்றும் மெல்லிய குண்டூசி இரண்டையும் தரவிறக்கினேன். அங்கிருந்து எஸ் பி சாலை நோக்கி நடக்கத் தொடங்கினேன். வெளியே வந்ததும் கேட்ட போது இதே சாலை தான் செல்லுங்கள் என்று சொல்லியிருந்தார்கள். அதன் பிறகு கொஞ்ச தூரம் நடந்த பின்னர் மறுபடியும் கேட்டபோதும் அதே பதில் வந்தது. கொஞ்ச தூரம் நடந்து கேட்டு மறுபடி நடந்து என்று பத்து முறை விசாரித்தாலும் இதே சாலை தான் இன்னும் ஒரு கிலோ மீட்டர் நடக்க வேண்டுமென்றே சொன்னார்கள். சிக்பேட்டையிலிருந்து எஸ் பி ரோட் செல்லும் ஒரு கிலோ மீட்டர் என்பது மட்டும் வேறு மாதிரியான தூர அளவையில் அளக்கப்பட்டதோ என்று தோன்றியது அன்று. எஸ் பி ரோட் என்று பெயர்ப் பலகையை பார்த்ததும் அப்பாடா என்றிருந்தது ஆனால் அங்கே வித விதமான மின்சாரப் பொருட்கள் கிடைத்தன, தும்பி போன்ற மின்சார சாதனங்களுக்குரிய கடைக்கும் இன்னும் நடக்க வேண்டுமென்றார்கள். நடக்க நடக்க கடைகள் புதிது புதிதாக தெரிந்து கொண்டேயிருந்தன. நுண் மின் சாதனங்கள் கிடைக்கும் பிரத்தியேகக் கடை என்ற பலகையைப் பார்த்ததும் “கண்டேன் சீதையை” என்ற அனுமனில்  பேரார்வத்தோடு ஓடினேன். கடை நிறைந்திருந்தது. பசையின் புகைப்படத்தைக் காட்டினேன் இல்லை என்று உதட்டைப் பிதுக்கினார்கள். எங்கே கிடைக்குமென்று கேட்ட போது இன்னொரு கடைப் பெயரைச் சொன்னார்கள். அங்கே இன்னுமொன்று மேலும் இன்னொன்று என்று பல கடைகள் ஏறியிறங்கிய பின்னர் ஒரு கடையில் தாள் ஒட்டும் பசையிருக்கிறது என்றார்கள். அதன் பிறகு தான் குண்டூசியை காட்டியதும் நான் முதலில் சென்ற கடையின் பெயர் சொல்லி அங்கே கிடைக்குமென்றார்கள். வேகமாய் ஓடிச் சென்று அந்த கடையில் குண்டூசியை வாங்கினேன். அலுவலகம் சென்ற போது நத்தை குழுவும் இல்லாமல் முழு அலுவலகமும் பிணம் எரியும் சுடுகாடு போல தனித்திருந்தது. கைக்குழந்தைக்கு முதன் முதலில் நகம் வெட்டும் பயத்தோடு குண்டூசியால் தும்பியின் இறக்கை உடம்பில் ஒட்டும் பகுதியை பூமியின் அடுத்த பகுதியில் இருக்கும் குழு நண்பன் அனுப்பியது படத்திலிருப்பது போலவே இணைத்தேன்.  தும்பி மகிழ்ச்சியாய் இறக்கையை இயங்கத் தொடங்கியது. என்னுடைய வீட்டிலிருக்கும் தும்பி போல என்னுடைய எல்லா சொற்பேச்சையும் கேட்டது. அதற்குள்ளே மாலையாகியிருந்தது. மகிழ்ச்சியோடு வீடு திரும்பினேன். அதி மிஞ்சிய களைப்பும், தும்பி பறந்த போது கிடைத்த மகிழ்ச்சியும் போதையாகி இரவு முழுவதும் தூங்கவில்லை.

மறுநாள் அலுவலகம் அடைந்த போது முதல் நாள் கேளிக்கை விருந்து சென்ற களைப்பு நீங்காத காரணத்தை குழுவில் எல்லோரும் மதியம் தான் வருவார்கள் என்று அறிவிப்பு வந்திருந்தது. யாருக்காகத் தும்பியை தயார் செய்திருந்தேனோ அந்த தடியனும் பண்ணிரெண்டு மணிக்குதான் வருவேன் என்றான். அவன் வந்ததும் அவனுக்குத் தும்பியை செயல்படுத்தும் மென்பொருளை நிறுவி அதன் செயல்பாடுகள் தும்பிக்கு கட்டளைகள் இடும் வழிமுறைகள, அது நாம் எதிர்பார்க்கும் விதத்தில் தான் செயல்படுகிறதா என்பதை ஆராயப் பதிவு செய்ய வேண்டிய குறிப்பறிக்கைகளை எப்படி எடுப்பது போன்ற பல்வேறு பணிக் குறிப்புகளைச் சொல்லிக் கொடுக்க மாலை வரை ஆகிவிட்டது. இப்படி பொறுப்பில்லாத சக பணியாளர்களை எப்படியோ போகட்டும் என்று பிறர் விட்டுச் செல்வதுபோல என்னால் ஏன் இருக்க முடியவில்லை. தும்பியை கட்டமைப்பதே  அவன் வேலைதான். ஆனால் பாவம் இப்போது தான் கல்லூரியிலிருந்து வந்து பணிக்கு சேர்ந்திருக்கிறான். பணி அனுபவம் கிடையாது. மேலும் தும்பி போன்ற மென் உயிரை அழுத்திப் பிடித்தால் கூட அது உயிரை விட்டு விடுமே. மூன்று மாத காலம் தவமிருந்து கிடைத்த தும்பியாண்டவன். அவரை எப்படி இந்த கத்துக்குட்டி கட்டமைக்கட்டும் என்று விட்டுச் செல்ல முடியும். இது ஆயிற்று தும்பி தயார். அதன் செயல்பாடுகளை அவன் துல்லியமாக குறிப்பெடுக்கிறான். எப்படி செயல்படுத்துவது என்பதையும் சில நாட்களாக நான் சொல்லச் சொல்ல குறிப்புகளைத் தயார் செய்திருக்கிறான். இனி இவன் பாடு தும்பியின் பாடு என்று நினைத்துக் கொண்டே தான் அன்று மெட்ரோ ஏறினேன். மூன்று இரவு மூன்று பகல் முழுவதும் தூக்காதவிடாத பேய்க் காமம் தான் எனது படுக்கையில் அமர்ந்திருந்த இளம்தம்பதிகளைப் பார்த்தும் எனக்கு உறங்க வேண்டுமென்று சொல்ல வைத்தது. நல்லவேளை அன்று அந்த தம்பதியர் என்னை எந்த சாபமும் இடவில்லை என்றே நினைக்கிறேன் இல்லையென்றால் நள்ளிரவு தாண்டியும் தொடர்ந்த பாட்டும் குத்தும் இவர்கள் எல்லாம் ஏன் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்கின்றார்கள் என்ற பதட்டத்தை ஏற்படுத்தவில்லை. அன்று நான் கொன்னூர் துஞ்சியிருக்கும்போது நானும் துஞ்சிய நாள். விழித்த போது மங்களூரில் வெள்ளிக் கிழமை எனக்காக பணிகளோடு காத்திருந்தது.     

லாவண்யா சுந்தரராஜன்

லாவண்யா சுந்தரராஜன், அறிதலின் தீ, நீர்கோல வாழ்வை நச்சி, இரவைப் பருகும் பறவை, புறாக்களை எனக்குப் படிப்பதில்லை புத்தகங்களின் ஆசிரியர். கவிதைகள் சிறுகதைகள் தொடர்ச்சியாக எழுதிவருகிறார். சிற்றில் இலக்கிய குழுமத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர்.

1 Comment

  1. வழக்கம்போல தங்களின் மொழியும் நடையும் சிறப்பு. கதை கவனம் பெற மறுக்கிறது அழுத்தமாக சொல்லவில்லயோ என எண்ண வைக்கிறது. தங்களின் கதைகளை விரும்பி படிப்பவன் இந்த கதை ஈர்க்கவில்லை.. நன்றி.

உரையாடலுக்கு

Your email address will not be published.