கு.அ.தமிழ்மொழி கவிதைகள்

01

கோடை ஒரு நதியைப் போல வழிகிறது

நிலமெங்கும் பரிதியின் தங்க ரேகைகள் உடைந்து சிதறுகின்றன

சின்னஞ்சிறிய படகுகளில்

மிதந்து வரும் எறும்புகள்

சின்னஞ்சிறிய கால்களால்

அவற்றைத் தொட்டுச் சுவைக்கின்றன

இந்த மஞ்சள் எனக்கும் தித்திக்கிறது

02

நெருப்பின் முடிவை தற்செயலாகச் சந்தித்தேன்

அது ஒரு நிறத்தில் பெயரில் இருந்தது

பேருந்தில் என்னுடன் பயணித்து வீட்டிற்குள் நுழைந்து

அடுப்படியில் அங்குமிங்கும் பறந்து விளையாடியது

கைகளில் அதை எடுத்து கம்பளிப்பூச்சி ஊர்ந்த இடத்தில் கொஞ்சம் பூசினேன்

அப்படிச் செய்தது ஓவியம் வரைந்து வண்ணமடித்தது போல் இருந்தது

நான் அதற்குச் சாம்பல் எனப் பெயரிட்டேன் 

நகர்ந்து சென்று என் புத்தக அடுக்கின் மூலையில் ஒளிந்து என்னைப் பார்த்தது

புரூனோவும் அப்படித்தான் பார்ப்பான்

அதை எடுத்து புரூனோவின் ஒளிப்படத்தில் அருகில் மாட்டினேன்

அது அவனை முன்பே தெரிந்ததுபோல் சிரித்துத் தலையை வருடிக் கொடுத்தது

அவனும் அதை ஏற்றுக்கொண்டு கைகொடுத்தான்

நான் மட்டும் ஒருமுறை அழுதுகொண்டேன்.

03

அந்த மலைக்கும்

இந்தக் கடலுக்கும்                          

இடையே  இருக்கிறேன்

எனக்கு இரண்டும் ஒன்றுதான்

மலை, எனக்குக்

கடலைச் சிறியதாய்க் காட்டுகிறது

கடல், எனக்கு

மலையைச் சின்னதாய்க் காட்டுகிறது

ஒரு நாள் சாயங்காலம்

பறவை ஒன்று வேகமாக வந்து

கடலில் அலகை நுழைத்து

மலையை நோக்கி இரையைக் கவ்விப் பறந்தது

நான் பார்த்தேன்

அதன் அலகில் மீன் குஞ்சு

தூரத்தில் மலை

கீழே கடல்

கு.அ.தமிழ்மொழி

கு.அ.தமிழ்மொழி கவிஞர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர். புதுச்சேரியைச் சேர்ந்த இவர் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.

3 Comments

  1. இருகவிதைகள். கவன ஈர்ப்பு கொண்ட கவிதைகள மிக்க மகிழ்ச்சி நன்றி.

  2. அதற்குச் சாம்பல் எனப் பெயரிட்டேன்

    நகர்ந்து சென்று என் புத்தக அடுக்கின் மூலையில் ஒளிந்து என்னைப் பார்த்தது

    புரூனோவும் அப்படித்தான் பார்ப்பான்

    அதை எடுத்து புரூனோவின் ஒளிப்படத்தில் அருகில் மாட்டினேன்

    அது அவனை முன்பே தெரிந்ததுபோல் சிரித்துத் தலையை வருடிக் கொடுத்தது

    அவனும் அதை ஏற்றுக்கொண்டு கைகொடுத்தான்

    நான் மட்டும் ஒருமுறை அழுதுகொண்டேன்.

    அருமை வாழ்த்துகள் கவிஞரே

உரையாடலுக்கு

Your email address will not be published.