/

பேசும் மௌனம் : லாவண்யா சுந்தரராஜன்

புதிய கவிஞர்கள் வெளியிடும் முதல் தொகுப்புகளை தேடி தேடி வாங்கி வாசிப்பதில் எனக்கு அலாதியான பிரியம் உண்டு. அவற்றில் அபூர்வமான வாசிப்பனுபவத்தை தரக்கூடிய சில கவிதைகளை வாசிக்கச் சந்தர்ப்பம் கிடைக்கும். அந்தச் சில கவிதைகளை கண்டிபிடிக்க, ஒவ்வொரு வருடமும் புத்தகக் கண்காட்சிக்குச் செல்லும்போது ஒருநாளை இதற்காக ஒதுக்கிவிடுவேன். வாங்கிய தொகுப்புக்களை ரயிலில் வீடு திரும்பும்போது படித்து விடுவது வழமை. அவ்வாறு படிக்கக் கிடைத்த தொகுப்புதான் கௌரி ப்ரியாவின் ‘ஆழியின் மகரந்தம்’. சந்தேகமின்றி இத்தொகுப்பிலுள்ள கவிதைகளில் பாதிக்கும் மேல் மிகச் சிறந்த வாசிப்பனுபவத்தைக் கொடுக்கின்றன என்று துணிந்து கூறுவேன்.

கவிதையில் காட்சிப் படிமங்கள் அந்தக் கவிதையை நீண்ட நாள் உயிர்படையச் செய்பவையாக அமையும், குறுந்தொகையில் பல பாடல்கள் அப்படிப்பட்டன. கௌரியில் கவிதையில் கடல் அலைகள் ஒரு கணம் உறைந்து நாகலிங்கப் பூவின் மடலாகிறது (ஆழியின் மகரந்தம்), சலவைத் தொழிலாளியில் சலவை இயந்திரம் கப்பலாகிறது, அது நேர்த்திச் செய்யும் புடவைக் கடலாகிறது, அதில் சேர்க்கப்படும் நெருப்புத் துண்டங்கள் குட்டிக்குட்டிச் சூரியன்களாகின்றன (கப்பல்), சிலந்தி வலை ஒளிர் கோணமாகிறது (அடுத்த முகம்), வாழைப்பூ மடல் படகாகிறது(செப்பு நிறத்திலொறு) நீர் வளையங்கள் திருவிழாச் சுற்று மிட்டாய்களாகின்றன (இறுமுனைகளின் இடையில் சுழல்வது).

“கிணற்று நீரில் கவிழ்ந்திருக்கும்

பவளமல்லியின் பிம்ப முகம்

பூவினுடையதா

நீரினுடையதா?

மலரே

அது ஒளியுனுடையது”

மேலே சொன்ன வரிகள் ‘உடையது கேட்பின்’ என்ற கவிதையின் தொடக்கப் பத்தி. இந்தக் காட்சிப்படிமங்கள் கலையின் உச்சமாக மாறுவதற்கு இவர் கவிதைகள் இடம் தந்திருக்கின்றன. ‘வெனிற்சுடர்கள்’ கடற்கரையில் மக்காசோளத்தைச் சூடக்கும் போது வெளியாகும் தீப்பொறிகளை “தகிக்கும் தங்கச் சுடர்களாக” காட்சியை வாசிப்போர்க்கு நுட்பமாகக் கடத்தும் அபாரமான கவிதை. அதே போல வெயிலில் சிலந்தி வலையை வெண்பட்டாகக் கண்பதும் அதில் செம்பருத்தியின் பழுத்த சிற்றிலைத் தீபச்சுடர் போல ஒளிர்வது ஒரு குறும்படம் போல விரிகிறது. காட்சிச் சித்திரங்கள் இல்லாத கவிதைகளை இந்தத் தொகுப்பில் தேடி எடுத்துவிடலாம். இவை உயிரற்ற விஷயங்களில் தொடங்கி உயிருள்ள சிலவற்றையும் தொட்டு மீள்கிறது. அவை பால்ய நினைவுகளை மீட்டுப் புலன் உணர்வுகளை மீட்டி இன்னும் பற்பலவாகி விஸ்வரூபமெடுக்கின்றன. காட்சிப் படிமத்தில் ஒன்று “பிறந்த நாள் விழாவிலிருந்து விரைந்து வெளியேறும் பணிப் பெண்ணின் கண்களென” என்று உணர்வுத் தளத்தில் வந்து முடியுமிடம் மிகச் சிறந்த வாசிப்பனுபவத்தைக் கொடுக்கிறது. இந்தக் காட்சி உவமை நான்கு சக்கர வாகனத்தில் தெரியாமல் நுழைந்து விட்டப் பட்டாம்பூச்சியின் வெளியே தருணத்தோடு ஒப்பிட்டு இருப்பதே அந்தக் கவிதையின் சிறப்பு. ஆனால் சில கவிதைகளில் காட்சிகளை உணர்வோடு இணைக்காமல் விட்டிருப்பது அதைப் பலகீனப்படுத்திருகிறது என்பதையும் சேர்த்தே சொல்ல வேண்டும்.

காட்சிப் படிமங்கள் போலவே கௌரி ப்ரியா தேர்ந்தெடுக்கும் உவமைகள் அபாரமானவை. நிலத்திலிருந்து விமானம் எழும்பும் போது சாய்வாய்த் தெரியும் கோணத்தைப் பூங்காச் சறுக்குமரத்தோடு செய்யும் ஒப்பீடு வியக்க வைக்கிறது. நோய் மிகுந்துப் பிளவுண்ட உதடுகளைப் பன்னீர்ப் பூவின் பிளந்த இதழோடு ஒப்பிடுவது அதே போலத் தான். இசைக் குறிப்புகள் கொண்ட பழங்காகிதம் தரையில் புரளும் தீக்கோழிச் சிறகுக்கு உவமையாவதும் அவ்விதமே. தாவித் தாவி இடமாறும் லேசர் ஒளிவட்டத்தின் தவளை ஆவாதும் அவ்வாறே. குளத்தில் சருக்கும் ஆமை, பாலே நடனக்கலைஞருக்கு நிலை உயர்வதும் அதே போலத் தான். ஆனால், உவமையின் உச்சமென்பது மேலே குறிப்பிட்ட பணிப்பெண் விரைந்து வெளியேறும் காட்சியும், இந்த வரிக்குக் கீழே கொடுக்கப்பட்டிக்கும் உவமையுமே ஆகும்.

“விளையாடும் பிள்ளையை

வீட்டுக்கு இழுப்பது போல

இதழ்கள் இணையும் முனைகளை

இறுபுறமும் இழுப்பது வலிந்து சிலர் புரியும்

வெற்று நகை.”

கள்ளமில்லா ஒன்றை அதிமிஞ்சிய பாவனையோடு இணைத்திருக்கும் கவித்திறன் தொடக் கடினமான உயரம். கௌரிக்கு அது அசாதாரணமாகக் கைகூடுகிறது. கவிதைச் சிறுதெரிப்பாகத் தொடங்கிப் பிரண்மாண்டமாக வளர்வது அலாதியான வாசிப்பனுபவத்தைக் கொடுக்கும். அது போன்ற கவிதை ‘பியானோ கட்டைகளில் மீதேறிச் செல்லும் வெயில்’ மிகச் சிறிய காட்சியாய் அங்காடிப் பொருட்களின் ஒட்டியிருக்கும் கருப்பு வெள்ளைப் பட்டைக் குறியீடுகளில் மீது மேவும் செங்கதிர் கிளர்த்திய கற்பனா ஊக்கம் பியானோ கட்டைகளில் மீதேறிச் சதுரங்கக் கட்டங்கள் வழியே ஊர்ந்து வரிகுதிரைகளைக் கடந்து நரைக் கூடிய அத்தையின் தலைப் பின்னலில் ஊஞ்சல் ஆடிவிட்டு

“இரவு பகல்

இரவு பகலை

உருவித் தைத்து

காலத்தைக் கம்பளிமாக்கி”

என்கிற போது பிரம்மாண்ட உருகொள்கிறது. இப்போது கருப்பு வெள்ளைப் பட்டையில் மேவும் செங்கதிர் மினுமினுப்புச் சூரியக் கதிர்களாக வளர்ந்து வாசகரிடம் வந்தடைகிறது. அதோடு நில்லாமல் நிலவின் இருண்டு வெளுக்கும் குணத்துக்குப் பின்னால் சென்று நிறைவு கொள்கிறது.

வடிவங்களும் கோணங்களும் நிறங்களும் படிமமாகிக் கவிதைகள் விரியும் பரப்புளவைக் கூட்டுகின்றன. அவை வடிவக் கணித்திலும் கோண அளவுகளிலும் நிறங்களின் அவை காட்டும் அர்த்தங்கள் இவரது கவிதையில் ஊன்றி நிலைக் கொள்ளும் போது நவரச உணர்வுகளாய், சொல்ல முடியாமல் தகிக்கும் மௌனத்தை மொழிபெயர்ப்பவையாய், குற்ற உணர்வைத் தாழ்வுணர்வை மடை மாற்றுபவையாய், அழகியல் வர்ணப்பாய் இன்னும் பற்பலவாய் மாற்றம் கொள்கின்றன அவற்றில் ஒன்று.

“வட்டத்தின் வெளியே

நின்று பார்த்தால்

மதுரக் காதலுறு

மணப்பெண்ணின்

மயிர்க்கூச்சம்

வட்டத்தின் உள் நின்று

வெறித்தால் அது

போதையுற்றவனின்

பிறழ்நிலையிற் பொறிந்த

ப்ரெய்லிக் காகிதம்”

மேல் சொன்ன வரிகள் மேலோட்டமான வாசிக்கச் சாதாரணமா இருப்பது போல ஏமாற்றும். ஆனால் மாபெரும் வாழ்க்கைத் தத்துவத்தை உள்ளே வெளியே என்று பிரித்துக் காட்டும். இதைக் காதலின் பருவநிலைகளாகவும் அதில் பெண்ணின் வலிகளைப் பேசும் சித்திரமாகவும் வாசிக்கவும் இடம் தரும். வண்ணங்கள் குறிப்பாக நீல வண்ணம் இவரது மொத்தக் கவிதைபரப்பையும் நீர்வண்ணக் கலவையாக அலங்கரிக்கிறது. வண்ணங்கள் மீது உணர்ச்சி ஏற்ற முடியுமா? ஓவியத்தில் அதற்குச் சாத்தியமுண்டு ஆனால் அதைக் கௌரி கவிதைகளில் செய்து காட்டியிருப்பது பாராட்டுக்குரியது.

“சாலையின் ஒருபுறத்தில்

வானம் கலந்த

பாசி சதுப்பு நீர்

மறுபுறத்தில் நெடிதுயர்ந்த

கட்டடத்துக் கண்ணாடிகள்

இரண்டிலும் ஒன்றே போன்ற

கோலிகுண்டுப் பசுநீல

நிறம்”

பெண்கள் எழுதும் கவிதையில் தன்னையே அறியாமல் பெண்ணியக் கருத்துகள் வந்துவிடுகின்றன. மேலே குறிப்பிட்ட வரிகளைத் தொடக்கப் பத்தியாகக் கொண்ட ‘ஒன்று’ கவிதைச் செதுக்குவது அன்றாடப் பயணக்காட்சி. ஒரே பாதையில் பயணிக்கும் இருவர் ஒன்றாகப் பயணத்தாலும் ஒரே காட்சியைக் காண முடியாது.

இரண்டுபுறத்திலும் காட்சிகள் வேறு ஆனால் அவை மேவும் நிறம் ஒன்று. எளிமையான இந்த வரிகள் ஒளித்து வைத்திருப்பது அள்ள அள்ளக் குறையாத ஆழமான கருத்துகளை. இவ்விடத்தில் ஒன்றாய்ப் பயணிக்கு இருவர் ஒன்றாகத் தான் பயணிக்கின்றார்களா என்ற கேள்வியும் ஒன்றாகத் தான் பயணக்க வேண்டுமென்ற கட்டாயமும் இட்டுச் செல்லும் இடம் மீளா முடியாத சுழல்.

சுழல் உருவாகப் பல காரணம் உண்டு அதைப் பேசும் கவிதை ‘ ஒரு சுழலின் கதை’ என்ற கவிதையில் சொல்லப்பட்டிருக்கும் பல்வேறு வட்டங்கள் அன்றாடச் சலிப்பைப் பிரதியெடுக்கிறது. கூடவே அடங்கிய குரலில் பெண்ணியம் பேசுகிறது. நீலச்சுடர், நீல அனிச்சம், நீலக் கதவுகள் இந்தக் கவிதைகளில் ‘உருவற்ற அதிர்வுகளால் சபிக்கப்பட்ட உணரியாகி’ நீலம் பரித்த பெண்ணின் நிறமாய் வெளிப்படுகிறது. அந்த நீலப் பெண் ரட்சகியாகவும் ராட்சசியாகவும் ஒரே சேர இருப்பதே பெண்மையின் முரண்பாடு. பெரும்பாலான கவிதைகளில் இவர் காட்டும் பெண்கள் தனக்குள் எழும் எல்லாவித உணர்ச்சிகளையும் நொறுக்கி சேமியா உப்புமாவாக்கிச் சேர்த்து விழுங்கிவிடுவதற்குப் பின்வரும் வரிகள் காரணமாக இருக்கலாம்.

“எதையும் பேசிவிட

இடையூறாகும்

எக்ஸ் க்ரோமோஸோம்களை

என் செய்வது?”

‘பிடிக்கிறது’, ‘கடல் சாரா நெய்தல்’ இந்தக் கவிதைகளில் இருப்புச் சகிப்புத்தன்மைச் சார்ந்த பெண்ணியப் பார்வை வெளிப்பாட்டாலும் இந்தக் கவிதைகளில் மேலெழுந்து வருவது இட நெருக்கடி. நகரப்புறத்தில் வாழும் வாழ்வியல் நெருக்கடிகளை முக்கியமாய் இட நெருக்கடியை ஞானகூத்தன் அடுக்கத்து வாசனையும் சத்தமும் சார்ந்தெழுதிய கவிதைகளில் வாசகர்க்குக் கடத்தியிருப்பார். அசோகமித்திரன் கதைகளிலும் சென்னை நகர நெருக்கடிச் சார்ந்த கவிதைகள் வரும். கௌரியின் கவிதைகள் சில அந்த முயற்சியை செய்கின்றன.

“ஒளிச்சேர்க்கைக்கு

சூரியனைக் கோராதவை.”

என்ற வரிகளில் நம்மை நம் சுயநலத்தைச் சுட்டி நகைக்கும். மூச்சு முட்டும் சிறிய வீடுகளில் பகலிலும் ஒளிரும் விளக்குகளும் அகப் புழுக்கத்துக்கு இணையான புறச்சூழலும் மின்விசிறியைச் சதாசர்வ காலம் நம்பும் அறைகளும், மாசுபட்ட காற்றும் அபாயகரமானவை. வீட்டைச் சுற்றி வலம் வரவே வழியற்ற அடுக்ககத்து வீடுகளில் பிடிக்கிறதோ இல்லையோ தொட்டிச் செடிகளை மட்டுமே பிடித்ததாய் வளர்க்க முடியும். இது நிதர்சனமென்றாலும் எந்த வடிவத்தில் மண்ணேற்றி வைத்தாலும் மண்ணே இல்லாமல் நீர் மட்டும் விட்டு வைத்தாலும் தொட்டிச் செடிகள் தன்னால் முடிந்த அளவுக்குத் தளிர் இலைகளை வளர்ந்தது நாம் வரும் போகும் போது ஆட்டிக் காட்டும். குவளையின் வடிவொத்தக் குறுகிய நீர்வெளியில் நீத்த விட்டாலும் அதைத் தனக்கான நெய்தலாக மாற்றிக் கொள்ளும் கடல் சாரா மீன்கள். இவை கௌரி ப்ரியா சில கவிதைகளுள் வரும் கதை பாத்திரங்கள்.

கவிதையில் பல வடிவங்கள் உள்ளன. நவீன கவிதைகள் வடிவங்களை உடைத்துப் பார்ப்பது. வித்தியாமான பல புது வடிவங்களை உருவாக்குவது. இவரது சில கவிதைகள் ஹைக்குக் கவிதைகள் ஒவ்வொரு வரியிலும் ஒன்றைச் சொல்லி ஒன்றாகப் படிக்கும் போது அது ஒரு காட்சியை உணர்வை நமக்குக் கடத்துவது போல இவரது சில கவிதைகள் ஒவ்வொரு பத்தியும் ஒரு காட்சியைச் சொல்லி இணைத்து ஒரு சித்திரமாகப் பார்க்கும் பொறுப்பை வாசகரிடம் விடுகிறது. ‘சிப்பியின் ஓட்டில்’, ‘நத்தையின் சிறகு’, ‘மீண்டும் 01, 02’ ‘இழைகள்’, ‘இலையுதிர் காலத்து’, ‘சுடர் ஆகுதல்’ போன்ற கவிதைகளில் ஒவ்வொரு பத்தியும் வெவ்வேறு காட்சி உணர்வுநிலையில் வருகிறது. ஒன்றாக வாசிக்கும் போது அது வேறொரு அனுபவத்துக்கு நம்மை இட்டுச் செல்கிறது. சில இவரது ஆபார கற்பனைத் திறனைக் காட்டுகின்றன. உதாரணத்துக்குக் கரிச்சான் வாலில் இருமுனையிலும் தேசிய விழாவில் விமானம் வண்ணப்புகை வருவது போல ஒரு சித்திரம் வரும் ‘பறவை’ கவிதையும், துணி உலர்த்தும் கிளிப்புகளைப் பறவையாகக் கற்பனை செய்வதை ‘வானுக்கு அருகில்’ என்ற கவிதையில் வருவதையும் சொல்லலாம்.

“ஒட்டியவை போலிருக்கும்

பிஸ்கட்டுகளைப் பிரித்து

இடையிருக்கும் செம்மஞ்சள்

வட்டத்தை விழுங்கப் பின்

சிரித்தபடி செப்புகிறாள்

சூரியனை விழுங்கியதாக”

சிறுவர் சிறுமியர் வரும் எல்லாப் படைப்பும் நம்மைப் பால்ய நினைவுக்குள் இழுத்துச் செல்பவை. சிறார் உலகத்தை அவர்களில் அறியாமையைக் கள்ளமின்மையைச் சிறுகுறும்புகளைக் கவிதையில் பதிவு செய்யும் போது அது தன் போக்கில் பெருமுயற்சி எதுவும் செய்யாமலேயே கலையாகிவிடுகிறது. மேலே சொன்ன வரிகள் ‘சிறுமிகள் விழுங்கும் சூரியன்கள்’ என்ற கவிதையில் கௌரி காட்டும் குறும்புக்காரிச் சிறுமி. நம்மில் பலரும் ஏதாவது ஒரு பயணத்தில் அதே போலொரு குறுப்புக்காரியைக் கடந்திருப்போம். ‘மீட்சி’ கவிதை நோயுற்றக் குழந்தையொன்றின் மீட்சி அவன் சுழற்றும் சிலம்பம் சிலப்பும் காற்றின் ஒலியுடன் பதிவாகிறது. “பேசத் துவங்காத குழந்தையொன்று” வண்ணத்துப்பூச்சியைத் துரத்தும் காலணி எழும்பும் ஓசைக் கவிதையிலிருந்து எழுந்து வந்து நம் காதில் ஒலிக்கிறது. கூடவே பறக்கும் பாட்டாம் பூச்சியும் அதைத் துறத்தும் குழந்தையும் நம் கற்பனைக்கு வந்து புன்முறுவலிக்கச் செய்கின்றனர். சிறுமாயம் என்ற கவிதை நிகழ்த்தும் மாயஜாலம் அலாதியானது. சிறுமிகள் அணியும் சிவம்பு நிற சிறு மென் தகடு பதிக்கப்பட்ட உடையும் அது ஒளிப்பட்டு மினுக்குவதும் எல்லோரும் கண்டிருக்கும் காட்சி தான். அந்த மினுக்கத்தை கவிதையில் ஒரு குட்டிப் பால்வீதியாக்கும் மாயம், நொய்த் தொற்றின் பொருட்டுத் தற்காலிகமாய் வாழும் சிற்றறையைப் பிரபஞ்சப் பெருவெளியாக உருமாறிவிடுகிறது. கௌரியின் தங்கம்மா விரும்பியது அந்த மாற்றத்தைத் தானோ என்னவோ?

கவிஞருக்கும் அவரது மகளுக்கு இடையில் உதிக்கும் கவிதருணங்களை அழகியல் சித்திரங்களாக்கிக் அடுக்கி இருக்கிறார். ‘நாணற்காட்டின் மயில்பீலிகள்’ கவிஞரின் கவிதை ரசனைக்கு மேலும் எட்டடிப் பாய வைக்கும் தங்கம்மாவின் கற்பனை மகிழுந்தின் கண்ணாடித் துடைப்பானின் நடனம் உள்ளே ஒலிக்கும் பாடலுக்குத் தக்கதா அல்லது அதைப் பார்க்கும் தங்கம்மாவின் விழிகளும் சின்னற்சிறு கவிமனதுக்குமான இணைப்பா? ‘நத்தையின் சிறகு’ கவிதையில் தங்கம்மா கொண்டு வரும் பட்டாம்பூச்சி வடிவக் கிளிப் மேலும் அவள் வேனில் காலத்தில் குளத்தில் எரியச் சொல்லக் கூழாங்கல் எல்லாமே கவிதையில் விகாசத்தை அதிகரிக்கிறது.

“தோல் புற்றினுள்

கெரட்டின் முத்துகள்

மார்பகப் புற்று நோய்க்குள்

ரோமானியப் பாலங்கள்”

நுண்ணோக்கிப் பிரபஞ்சம் என்ற கவிதையில் இடையில் வரும் வரிகள் இவை. கௌரி மருத்துவர் நோய்க் கூறு ஆராயும் பிரிவில் முதுகலைப் பெற்றவர். ஆகவே மருத்துவமும் அறிவியலும் துறைசார் அனுபவங்களும் கவிதைகளாக மாறும் போது அவை வாசிப்பவர்களுக்குக் கடத்தும் கவிதானுபவம் உணர்வுமயமானவை. ‘சினைப்பைக் குழாய் முனையில் நட்சத்திர விரல்கள்’ குறிப்பிட்டுச் சொல்லும் படியான ஒன்று. சுயத்தின் ரீங்காரம் – tinnitus கவிதையும் மருத்துவர் மட்டுமே எழுத முடிந்தக் கவிதை. காண்புறு ஒளியின் அலை நீளம் என்று சொல்லுமிடம், வாழைப்பூவின் உள்ளடுக்கு மஞ்சரியை நிறைமாதக் குழந்தையின் மீயொலிப் படத்தில் தெரியும் கைவிரல்களாகக் கண்ணுமிடம் அதீதமானது. இது போன்ற கவிதைகள் வருங்காலத்தில் இவரது தனித்துவ அடையாளமாக மாறும் எல்லாச் சாத்திய கூற்றையும் இந்தத் தொகுப்பில் மருத்துவத்துறை சார் அனுபவக் கவிதைகள் உறுதிப்படுத்துகின்றன.

“நடனவிருந்தில் குபுகுபுக்கும்

மனதில் ஒட்டாத

மேட்டிமையின்

நளினப் பெருக்கு

தரையில் ஒரு தவளையென

தாவித் தாவி

இடம் மாறும்

லேசர் ஒளிவட்டம்”

சிறுநகரத்திலிருந்து மெட்ரோ சிட்டிகளில் பணி நிமித்தம் வாழ நேரும் போது நகரம் கொடுக்கும் வியப்பும், சமூகச் சூழலுக்குக் கொடுக்கும் ஒவ்வாமையும் கிளர்த்துவது ஒருவித முரண். அதே போலக் குடும்பத்தலைவியாய் அதே சமயம் உயிரிய அலுவலராய்ச் சங்கமிக்கும் வேறுபாடுகள் எல்லாம் இவரது பாடுபொருளாகின்றன. இயற்கையைத் தாய்மையோடு பார்க்கும் கருணைக் கண்களும் கூடவே இயற்கையை வியக்கும் சிறுமியும் ஒருபட இருக்கின்றனர். இந்த முரண்களின் உச்சமென்பது சொகுசு வாழ்க்கையின் எல்லாக் கோணங்களிலும் இவர் கண்டெக்கும் நிறைவின்மையும் தாழ்வுணர்வும் அதை மீறி வெளியேறிப் பறக்கத் துடிக்கும் பேருவகையும் பல கவிதைகளில் வெளிப்படுகின்றன. அவை இவர் ஆசைப்படும் “ஆமையின் சிறகளாய்” கடலில் அடி ஆழத்தில் யார் கண்ணுக்குப் புலப்படாமல் கிடைக்கின்றன. வாடாமல்லியின் அடர் நிறம் பலர் கண்ணைப் பறித்தாலும் கௌரியின் கவிதைகள் தொட்டாற்சிணுங்கியின் மென் இளஞ்சிவப்பு நிறத்தைக் கையேந்திக் காட்டத் துடிக்கிறது.

“மௌனம் என்பது பேசாது இருப்பதல்ல

எவருக்கும் கேட்காமல்

பேசிக் கொண்டிருப்பது”

என்று சொல்லும் கௌரியின் குரல் வன ருத்திராட்சத்தின் கதைகள் தொகுப்புக் கவிதைகளில் வேறு விதமாக ஒலிக்கிறது. கனவில் வன ருத்தாரச்சம் ஆலகால நீல மலையாகித் தத்தோம் தகிதோம் என்று தாண்டவமாடுகிறது. அட்டை உறிஞ்சி விழ்ந்திட்ட இடத்தில் உறையும் ரத்தத்தின் வடிவெடுக்கிறது, பெண்ணையின் வெவ்வெறு பருவத்தில் திடுக்கிடும் தருணங்களின் முன்னும் பின்னுமான முகங்களாகிறது. திணை மயக்கியச் சிறுமியின் ஓவியமாகிறது. கடலும் வனமும் பிறழ்ந்து இறுதியில்

“அலை பிளந்தொழு

மரம் எழுந்து

கடலில் விதைகளை

உதிர்த்தது”

கௌரியின் கவிதையில் சில படிமங்கள் மீண்டும் மீண்டும் வருகின்றன; வாழைப்பூ , அதன் மடல்களைச் செப்புப் படகு என்று சொல்லும் படிமம், அயன் பெட்டியைப் படகு, கப்பல் என்றாக்கும் படிமம், புடவைக் கடலாகும் படிமம், சிறகு, காய்ந்த இலைகளை இசைக்குறிப்புகளாக(பறவை காட்சிக் கூடம், அந்தி) பார்க்கும் படிமம். நீலம் பல இடங்களில் வருகிறது. கவிதையில் ஒரே விஷயத்தை வேறு விதமாக எழுதும் போது இரண்டுமே பலமுறை சொல்லிய பாவனைக்குள் சென்று விடுகிறது. இந்தக் கவிதையைப் பார்க்கச் சொன்னேன், இந்தக் கவிதைக்குச் சொல்லி வைத்தேன் போன்றவை கவிதையின் அழகைக் குலைக்கின்றன. சில கவிதைகளில் சொல்லாமலே புரியும் விஷயத்தை வாசகர்க்கு வலிந்து சொல்வது போல இருப்பதால் அது கவிதையை வாசக மனதுள் வளரும் வாய்ப்பை இழக்கின்றன. சில சொற்கள் புரிந்து கொள்ள முடியாதவையாக இருக்கின்றன. அறிவியல், மருத்துவம் சார்ந்த கலைசொற்களுக்கு அடிக்குறிப்பு இட்டது போல ஓங்கில் குஞ்சு, ஓரகாமி போன்ற வார்த்தைகளுக்கு அடிக்குறிப்பைச் சேர்க்க அடுத்தப் பதிப்பில் முயற்சி செய்யலாம். இந்த பத்தியில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் அனைத்துமே கௌரி எழுதிக் காட்டியிருக்கும் கவிதை உலகுக்கு முன் மிக மிக அற்பமானவை.

ஆழியின் மகரந்தம் தொகுப்பின் ஒவ்வொரு கவிதையை புரட்டும் போதும் காட்சி ஊடகத்தின் முன் அமர்ந்து சின்ன சின்ன காணொளியைப் பார்ப்பது போலவே உள்ளது. இந்த தொகுப்பு என்னைப் பொருத்தவரை வாசகரின் மனக் கண்களுக்கு விஷுவல் டிரீட் என்று சொல்வதில் கொஞ்சமும் மிகையில்லை. பல்வேறு விதவிதமான உணர்வுகளைக் கடத்தும் இந்தக் கவிதைகளில் எதையும் அளவுக்கு மீறாமல் செய்யும் கைப்பக்குவம் கௌரிக்கு தனது முதல் தொகுப்பிலேயே கைகூடியிருக்கிறது. தொகுப்பில் குறிப்பிட்டுச் சொல்லும்படி பல கவிதைகள் இருக்கின்றன. நிச்சயம் வாசிக்கபட வேண்டிய தொகுப்பு. இந்தத் தொகுப்பு பலரையும் சென்றடைய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.

***

லாவண்யா சுந்தரராஜன்

லாவண்யா சுந்தரராஜன், அறிதலின் தீ, நீர்கோல வாழ்வை நச்சி, இரவைப் பருகும் பறவை, புறாக்களை எனக்குப் படிப்பதில்லை புத்தகங்களின் ஆசிரியர். கவிதைகள் சிறுகதைகள் தொடர்ச்சியாக எழுதிவருகிறார். சிற்றில் இலக்கிய குழுமத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர்.

1 Comment

  1. நல்லகவிதை நூலை அறிமுகப்படுத்திய தற்கு நன்றி

உரையாடலுக்கு

Your email address will not be published.