தீயின் ஒலி : சியாம்

“நிர்வாண ஜ்வாலைகள் தடை அகன்று நடனமிடுகின்றன
ஜன்னல் இடைவெளிகளில் நுழைந்து
கைகளை அசைக்கின்றன
நிர்வாண ஜ்வாலைகளை உளவு பார்ப்பது
ஒரு பாவச் செயல்
தடையற்ற தீயின் பேச்சை ஒட்டுக் கேட்பது
ஒரு பாவச் செயல்
நான் அந்த பேச்சிலிருந்துதான் தப்பித்து ஓடுகிறேன்
மனிதனுடைய பேச்சுக்கு முன்பாகவே
பூமியில் ஒலித்த தீயின் பேச்சிலிருந்து”

அன்னா ஸ்விர்

இன்று நாவலை மீண்டும் எழுதத் துவங்கவேண்டும் என்ற உறுதியுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தேன். பிரகாசம் பராஜ்(barrage) சாலையில் நுழைகையில் அருகிருந்த ரயில் பாலத்தில் ரயில் பிளிறலுடன் நுழைந்தது. பராஜுக்கு வலப்பக்கம் பச்சயத்துடன் மதகுகளை முட்டிப் பின்வாங்கிக்கொண்டிருந்த கிருஷ்ணா நதி இடப்பக்கம் மிக சன்னமாக இரயிலை பிரதிபலித்தபடி கிடந்தது. அந்தி ஒளியில் பவானித் தீவிலிருந்து கடைசி மிதவையில் கைகளை நதியில் அலைந்தவாறே வெளியேறுபவர்களின் நிழல் அசைவுகள். வலையிலிருந்து ஈரம் சொட்ட நடந்து செல்பவரின் அருகே பைக்கை நிறுத்தினேன். நடைபாதையில் ஏதுவான இடத்தை தேர்ந்து ஒரு வில்லாளியின் தோரணையுடன் அவர் வலையை தோள்வரை தூக்கி நதியில் எறிந்தார். பாம்பிற்கே உரிய துரிதத்துடன் வலை காற்றிலேயே முழுவதுமாக விரிந்து அதன் உருள்கட்டைகள் சுவரில் மோத நீரில் விழுந்தது. மகுடி ஊதுவது போல ஒரு பீடியை எடுத்து அவர் வாயில் வைத்துக்கொண்டார், அதன் புகைகேற்ப வலை அசைவதாய் ஒரு பிரமை. நான் பணிபுரியும் தொழிற்சாலையின் புட்டுக்குழாய் போன்ற சிம்னிகளிலிருந்து புகை ரேகைத்தடம் போல வெளியில் பதிந்திருந்தது. பராஜின் இரண்டு தூண்கள் விளிம்புகளாய் நின்று, அந்த மொத்தக் காட்சியையும் ஒரு நீர்வண்ண ஓவியமாய் உறையவைத்தது. பவானித் தீவின் கூர்முனையில் ஏகாந்தமாக நிற்கும் அந்த எருமையின் பார்வை இத்தனை அசைவுகளைக் கடந்தும் சரியாக என் கண்கள் மேல் நிலைத்திருந்தது. என் நாவலின் எல்லா சொற்கள் மீதும் மௌனம் மீதும் தடுமாற்றங்கள் மீதும் எருமைக் கண்களின் மினுமினுப்பை நான் உணர்ந்திருக்கிறேன். பைக்கை எடுத்துக்கொண்டு பிரகாசம் பராஜை தாண்டும்பொழுது ஒரு எக்காளத்தை கேட்டேன், அது ரயிலினுடையது என்று சமாதானம் செய்துகொண்டேன்.

அந்தக் குடைவரை கோவில் ஒரு பார் கோட் பட்டை போல மலைச்சரிவில் ஒட்டப்பட்டிருந்தது. பல கண்கள்கொண்ட ஜந்துவின் தசைநார் உருகி வற்றிய மண்டை ஓடு போன்ற அமைப்பு. சமண பௌத்த வைணவ மந்திரங்களின் சிறகடிப்புக்கு பின்பான மௌனம் அதன் மேல் நித்யமாய் கவிழ்ந்திருந்தது. ஒருநாள் அக்கோவிலின் இரண்டாவது தளத்தில் நின்றுகொண்டிருக்கையில் நாவலின் முதல் வரி பீஜமாக எழுந்தது, ‘ஆதியில் அழகு இருந்தது, தீயின் வடிவில்.’ இன்றுவரை அந்நாவல் எங்கு துவங்கியது என்பதை சரியாக உணரமுடியவில்லை. அது கோவிலின் இரண்டாவது தளத்தில் ஒரு நொடிப்பொழுதில் மின்னலாய் விழுந்தது, அதே நேரத்தில் என் அணுவின் முதல் இதழ் குறுகுறுப்புடன் திறந்துகொண்டதிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு இதழாய் ஆயிரமிதழ்களாக விரிந்தது. நாவலின் முக்கியமான தருணங்கள் எல்லாம் இந்தக் கோவிலின் பொக்கைகள் எனக்கு அளித்தவை, ஒவ்வொரு தூணும் என்னுடன் நாவலை பகிர்ந்துகொண்டு ஒராக்கில் போல உரையாடியிருக்கிறது. ஒவ்வொரு நாசிகையின் பார்வையும் என் முதுகில் ஊர்வதை உணர்ந்திருக்கிறேன். அதே கோவில்தான் பல நேரங்களில் நாவலை தூக்கியெறியவும் கட்டாயப்படுத்தியது.

சிகரட் துணுக்குகளை காலால் தட்டிவிட்டு, கோவிலின் அடித்தளத்திற்குள் நுழையும்போதே சூரியன் சோபை குறையத் துவங்கிவிட்டிருந்தது. மழைநீர் தேங்கிய கல்தரையின் குளிர் மூளை வரை சென்று முட்டி நகக்கணுக்கள் இடையே வழிந்தோடியது. அக்குளிரில் காலம் ஸ்படிகவெளியாய் சமைந்து நிற்க, துடுப்பு போல வெளித்திரையை உந்திச் சலனப்படுத்தி நகர்ந்துகொண்டிருந்தேன். முழு இருளில் தொட்டு மட்டுமே உணர முடிந்த தூண்களில் கால எறும்புகள் கல்துகள்களை சுமந்து செல்லும் வரித்தடங்கள். ஒவ்வொரு காலடிக்கும் நீர் அலையாகி சுவர்களை மோதி திரும்புவதை இருள் மிகத் துல்லியமாக உணரவைத்தது. இரு தூண்களுக்கிடையில் உள்ள படுகை போன்ற இடைவெளியில் அமர்ந்துகொண்டேன். மொத்தமாகவே புதிதாக எழுதத் துவங்கிய நாவல் சரியாக அதே இடத்தில் வந்து நின்றிருந்தது. முதல் வரைவை வாசித்த நண்பன், ‘கலைஞர்கள், சராசரி மனிதர்களைவிட சற்று வித்தியாசமானவர்கள்தான். ஆனால் இந்த அளவுக்கு கிடையாது.’ என்று எந்த இடத்தை சொன்னானோ அதே இடத்திற்கு.

‘நமக்கிடையில் ஒருபொழுதும் நிர்வாணம் நுழையவே முடியாது என்று அவன் சொல்வதை புரிந்துக்கொள்ள முடியாத சுபா அவன் மேல் விரவிக் கிடக்கும்போது, கட்டிலின் கால்கள் அரூபமான மூன்றாவது நபரின் எடையை சுமக்கும்போது, அவனது உதடுகள் உச்சாடனத்தை சொல்லிக்கொண்டே இருக்கின்றன, ஒரு இரங்கற் பிராத்தனையைப் போல. அவளது கழுத்துச்சங்கிலியின் வெள்ளி டாலர் நாவில் ருசியாக பதியமிடப்படுகையில் அவனது உதடுகள் அசைந்துகொண்டே இருக்கின்றன. பொசுங்கும் மீசை ரோமங்களை அவளது இடக்காது ஒற்றியெடுக்கும்போது உதடுகள் முணுமுணுத்துக் கொண்டே இருக்கின்றன, அவள் விருட்டென பிரிந்தெழுந்து அவசரமாக உடைகளை சுற்றுவதை கூட அறியவில்லை அவன் உதடுகள். அவனது உயிரின் ஒரு துளியைக் கூட பெறாத சுபா நீங்கிய மெத்தையில் அவளது வயிறு அழுந்திய பள்ளத்தில் அவனது உயிர் வழிந்து அல்லியாக மலர்கிறது.’

கண்கள் இருளுக்கு பழகியதும் துணியசைவுகள் என தூண்கள் இருளுக்குள் முண்டிக்கொண்டிருந்தன. வௌவால் விதானத்தில் முளைத்துள்ளதையும் தேரைகள் சத்தமிடாமல் மூலையில் ஒண்டிக்கொண்டிருப்பதையும் ஓரளவு
பார்க்கமுடிந்தது. ஒவ்வொரு படுகைகளிலும் ஆட்டுக்குடல் துண்டுகள் போல ஏதோ ஒன்று பரவிக்கிடப்பது நீரினுக்கடியில் என தெரிந்தது. நான் அமர்ந்திருக்கும் படுகையிலும் அதை தொட்டுணர முடிந்தது. அதை கண்களுக்கு நேராக தூக்கி பார்க்கையில் அதிலிருந்த திரவத்தின் முதல் சொட்டு தரையில் தேங்கிய நீரில் சொட்டிய அக்கணம் எல்லா வௌவால்களும் சிதறி ஒன்றுடன் ஒன்று மோதிப் பறந்தன. கூச்சல்களுடன் தாவிய தேரைகள் வௌவால்களின் சிறகுகளில் இடித்து வீழ்ந்தன. வௌவால்களின் கண்கள் நூறு மின்மினிகளாய் மண்டபத்தை சுற்றி அலைந்தன. தேரைகளின் ஈரப்பசையுள்ள நாவுகளின் குளிர்ச்சியை உணர்ந்ததும் எழுந்து ஓடத் துவங்கினேன். நீர் தூண்களில் பட்டுத் தெறித்து என் மேலேயே படிந்தது. நான் வெளி வந்ததும் அம்மண்டபம் மிக பௌவியமாக என்னைப் பார்த்தது, பேரிசையை நிகழ்த்திக் காட்டிய ஒரு இசை குழுமம் போல. சாலையில் அதி பயங்கர ஹாரனுடன் சென்ற வாகன ஒளி ஒரு நொடி மண்டபத்தின் பொக்கை கண்கள் வழியாக அதனுள் சென்றது. படுகைகளில் ஆணுறைகள் பரவிக் கிடந்தன. தரையெங்கும் தேங்கிக் கிடந்த விந்து தூண்களில் படிந்து வழிந்துக் கொண்டிருந்தது. சுபாவுடன் இருக்கையில் அவனது உதடுகள் பிதற்றிக்கொண்டிருந்தது என் காதில் விழுந்தது.

“என்
புழக்கடைப் பாத்தியில்
முளைவிட்டிருக்கும்
பசிய இலைகளாய்
ஒளிர்கிறது
காமம்”

முதல் தளத்திற்கு செல்லும் படிக்கட்டுகளுக்கு அருகில் விளக்கேற்ற வெட்டிய குழியில் மழைநீர்த் தேங்கி தலைப்பிரட்டைகள் மொய்த்துக்கொண்டிருந்தன. கால் பட்டு ஒரு கண்ணாடி புட்டி ஒவ்வொரு படியாக வெண்கல ஒலியுடன் உருண்டு அடித்தளத்திற்குள் இழுத்துச் செல்லப்படும் சத்தம் மட்டும் கேட்டது. பாதி தேய்ந்த நிலவில் தூண்கள் வரிசையாக நின்றுகொண்டிருந்தன. அவ்விடத்தை விட்டு வெளியேறத் தவித்து தூண்களில் முட்டிக்கொண்டிருந்தது, முடமான காலம் தனது இரும்பு ஊன்றுகோல்களை தரையில் தட்டித் தட்டி நடக்கும் சப்தம். இரண்டு தூண்கள் மொத்தமாக கரைந்துபோய் அவற்றின் போதிகை மற்றும் விதானத்தில் ஒட்டிக்கொண்டிருந்தது. தூண்களுக்கிடையே விஜயவாடாவின் மினுமினுப்பு. வாகனங்கள் ஒளிமட்டுமே ஆகி ஓடிக்கொண்டிருந்தன. கிருஷ்ணா அசைவே இன்றி அப்படியே தேங்கி நின்றுகொண்டிருந்தது. காற்று சுவர்களை உருக்கி கடல் பாசிப் படலம் போல ஆக்கி இருந்தது. நாவலின் முதல் பக்கத்தில் சேர்ப்பதற்காக மோனே எழுதிய கடிதத்தின் ஒரு வரி நெருடிக்கொண்டே இருந்தது. ‘அன்பிற்குரிய என் மனைவியின் இறந்த முகத்தை பார்த்துக்கொண்டிருக்கும்போது, தன்னிச்சையான எதிர்வினையால் அதிலுள்ள வண்ணங்களை முறைப்படி குறித்துக்கொண்டிருப்பதை ஒருநாள் நான் கண்டடைந்தேன்’

‘ போன வருடம் பாட்டியை வைத்திருந்த அதே இடத்தில் தான் இப்போது அம்மாவையும் வைத்திருக்கிறார்கள். அம்மா கடைசியாக அணிந்திருந்த முழங்காலுக்கு மேல் தூக்கிக்கொண்டு நிற்கும் ஊதா நைட்டியை யார் மாற்றினார்கள் என்று தெரியவில்லை. வருடத்துக்கு ஓரிரு முறை மட்டுமே அவள் மேல் படும் இந்த பட்டுச் சேலையுடன் அவள் அசௌகரியமாகவே படுத்திருக்கிறாள். வரவழைத்த துயர முகத்துடன் என் கைகளை ஏந்துபவர்கள் கேட்பது எல்லாம் அச்சில் வார்த்த கேள்விகள் தான்.

“ எப்படி ஆச்சு? ”
“ ரொம்பநாளா கிடப்புல தானே.”
“ எப்போ நடந்துச்சு? ”
“ பன்னீர் ரோஜா ருதுவாகும் சமயத்துல.”

நான் சொல்வது யாருக்கும் புரியவில்லை. புழக்கடை பன்னீர் ரோஜா ருதுவாகும் மணம் தான் இருமல்களுக்கிடையே அவள் நுகர்ந்த இறுதி மணம். முகலாயப் பேரரசிகள் போன்றவள் அவள். காளானை தலையில் கவிழ்த்தது போன்ற தலைமுடியுடன் பாவாடை சட்டை அணிந்து நிற்பதிலிருந்து என்னை வயிற்றில் சுமந்து நிற்கும் புகைப்படம் வரை அவளுடன் ரோஜா வந்துகொண்டே இருக்கிறது. ரோஜாவின் சான்னித்யத்திலேயே அவள் என்னை கருவுற்றாள் பெற்றெடுத்தாள் முலையூட்டினாள். நான் உறுதியுடன் சொல்கிறேன் பன்னீர் ரோஜா ருதுவாகும் கணத்திலேயே அவள் இறந்தாள். இன்னும் சரியாக சொல்லவேண்டுமெனில் எனக்குள் ஹம்சத்வனி காய்ச்சலாய் பரவிக்கொண்டிருக்கும்போது.

தெரு முனையிலிருந்து அவளுக்கு கோடி எடுக்கையில் ஹம்சத்வனி ஒரு வெள்ளை யானையாய் நிலமதிராமல் என்னிடம் வந்து துதிக்கையால் கோடி குடத்தை தாங்கிப் பிடித்துக்கொள்கிறது. அதன் காதுகளின் அசைவில் அவள் மேல் மொய்க்கும் ஈக்கள் பறந்தகல்கின்றன. அவளுக்கு துணிமாற்ற சேலையை உயர்த்திப் பிடிக்கையில் ஒரு முனையை பிடித்திருப்பது அதன் தாமரைத் துதிக்கை. எண்ணெய்யை அவள் நெற்றியில் தேய்த்த இடப் புறங்கையை ஒரு அன்னம் தலையால் நீவுகிறது. அலகுகளுக்கிடையே அது வைத்திருந்த அரிசையைத் தான் அவள் வாயில் இடுகிறேன். இடுகாடு செல்லும் வழிநெடுக சிவப்பு ரோஜாப் பூக்களுக்கிடையில் அன்னத்தின் இறகுகளும் கலந்தே கிடக்கின்றன. தீயூட்டுகையில் வெருண்ட குட்டிகளைத் தாய் அன்னங்கள் இறகுகளில் பொத்திக்கொள்கின்றன. அவள் மேலும் உள்ளும் தீ எரிந்துகொண்டிருக்கிறது. எல்லா அன்னங்களும் ஒன்றாக கூவுகின்றன, “ரகுநாயகா…”

தூணில் ஒண்டிக்கிடந்த வோட்கா புட்டி அதிர்ந்து ததும்பி வோட்கா குபுகுபுவென வழியத் தொடங்கியது. அழுகிய முந்திரி மணத்திற்கு மண் கூடுகளை உடைத்துக்கொண்டு வண்டுகள் காற்றில் ரீங்கரித்தன. எல்லா தூண்களிலும் முத்து நீங்கிய மாதுளை ஓடு போல கூடுகள் அப்பிக்கிடந்தன. ஒவ்வொரு தூணாக சுழித்து அணைத்த வோட்காவில் கல் துகள் எண்ணெய் படலமாக மிதந்தலைந்தது. புட்டி தரையில் வட்டமாக சுழன்று சுழன்று என் கணுக்கால் வரை வோட்காவை பரப்பியது. நாசிகைகளிலிருந்து அருவியாய் வோட்காத் தாரைகள் கீழே வீழ்ந்தன. தரையிலிருந்து ஆவியாகி விதானத்தில் முட்டி மணி மணியாக சொட்டியது. துள்ளிக் கொண்டிருந்த புட்டியைத் எடுத்துக்கொண்டு மூன்றாவது தளம் நோக்கி வோட்கவை கிழித்துக்கொண்டு ஓடினேன். மூன்றாவது தளத்தின் ஒரு மூளையிலிருந்து மஞ்சள் ஒளி கசிந்துக்கொண்டிருந்தது. அவ்வொளியில் தரை முழுக்க கரப்பான்கள் முண்டிக்கொண்டிருந்தன. புட்டி பீறி அடித்து வோட்கா மஞ்சள் ஒளி நோக்கி தரையில் ஊர்ந்தது. அதன் மேல் பட்ட கரப்பான்கள் கவிழ்ந்து அவற்றிலிருந்து வெண் ரத்தம் வோட்கவுடன் கலந்து அந்த மூலையை நோக்கிச் சென்றது. காற்றில் பறந்த கரப்பான்களும் சிறகுகளை மூடி வோட்காவில் விழுந்து வெண்மையாக கரைந்தன. கால்கள் இழுபட அம்மூலையை நோக்கிச் சென்றேன். சுருள் பாம்பின் மேல் மல்லாந்து கிடந்த கரிய நெடிய உருவத்தின் தலை மாட்டில் மஞ்சள் சுடர்விளக்கு. சுவர் மூலையில் தொங்கிக்கொண்டிருந்த வௌவால்களை மலங்க மலங்க பார்க்கும் முழு விழிகள், கூர் நாசியும் கொழுவிய கன்னங்களும். வெண் திரவம் சுருள் பாம்பை முழுகடித்து அவ்வுருவத்தின் மேல் அலையடிப்பதை பாம்பு தன் ஏழு தலைகள் கொண்டு பார்த்துக்கொண்டிருந்தது. தலைமாட்டிலிருந்தொன்றும் கால்மாட்டிலிருந்தொன்றும் என இசைவற்ற உச்சாடனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மேலும் அலையடிக்கச் செய்தன. ஒலி அதிர்வினால் வௌவால்கள் சுவரிலிருந்து பிடியை விட்டு வெண் திரவத்தில் விழுந்து, நீந்தி அவ்வுருவத்தில் ஏறி சிறகை விரித்தன. சுடர் ஆடிக்கொண்டிருந்தது. வெண் திரவம் என் நெஞ்சு வரை வர பாதங்கள் தரையிலிருந்து விடுபட்டு மிதந்தன. உச்சாடனங்கள் மோதி எழுந்த கூட்டொலி மூளையின் ஒவ்வொரு கண்ணிகளையும் நொறுக்கத்துவங்கியது. கையில் துள்ளிக் கொண்டிருந்த புட்டியை அப்படியே அவ்வுருவத்தின் மேல் கவிழ்த்து விளக்கை தவ்வி எடுத்து அவ்வுருவின் நாபியில் வைத்தேன். கால் பாவாமல் படிக்கட்டு வரை நீந்தி வருகையில் ஒரு கொடி போல தீ நாபியிலிருந்து பற்றிக்கொண்டது. நான் தடுமாறி புல் தரைக்கு வருவதற்குள் கோவிலின் எல்லா தளத்திலும் நிர்வாண ஜ்வாலைகளின் தடை அற்ற நடனம் தொடங்கிவிட்டிருந்தது. மலைச் சரிவிலிருந்து கொட்டிக்கொண்டிருந்தது தீ அருவி. தீ, ஒரு சாவிக்கொத்து என கோவிலின் பொக்கைகளின் ஊடாக விரல்விட்டு பிடித்திருந்தது. விடியல் ஒளியில் வெண் புகை வானில் சுழன்றது. தீ கோவிலிலிருந்து வழிந்து புல் தரையில் பரவத் துவங்கியதும் ஓடிச் சென்று பைக்கில் ஏறி கொண்டேன்.

புகை மண்டலத்தில் பிரகாசம் பராஜ் மொத்தமாக மூடப்பட்டிருந்தது. மேகத்திரளுக்கிடையே மலையுச்சி சர்ச்சு கோபுரங்களென பராஜின் தூண்கள் மூட்டமாகத் வெளித்தெரிந்தன. பவானித் தீவை மூழ்கடித்து கிருஷ்ணா ஓடிக்கொண்டிருந்தது; தீப் பிழம்பாக, இல்லை தீயாகவே. அழுகிய முந்திரியின் மணம் வயிற்றை பிரட்ட பைக்கிலிருந்து சரிந்து விழுந்தேன். ரத்தம் பராஜின் நடைப் பாதை வரை வழிந்து தீயில் சொட்டியது. மதகுகள் முனகித் திறந்து தீ வலப்பக்கம் பாய்ந்து ரயில் பாலம் வரை சுழித்தோடியது. சுள்ளிகள் வெந்து உடையும் ஒலியுடன் பராஜ் உடைந்துக் கொண்டிருந்தது. கண் பார்ப்பதெல்லாம் தீயின் அடவுகளே என்றாகி நின்றது. சுழன்றாடும் தீயின் விரல்நுனிகள் நாவலில் அவன் அந்தக் கவிதையை எழுதும் கணத்தை தொட்டு விரித்தன.

ஜ்வாலைகளின் அன்னையே,
வேட்டைக்கு சென்ற ஆடவர்கள்
பனித்திரள்களில் நித்திரை கொள்கிறார்கள்.
நீ தீயை அணையாமல் செய்திருக்கிறாய்!
ஈர இலைகளுக்கு மத்தியில் எரியை
இழுக்கும் கோணல் விரல்கள்
ஜ்வாலைகளின் அன்னையே
நீ தீயை அணையாமல் செய்திருக்கிறாய்!
இளம் மனைவிகள் துயின்றுவிட்டனர்
ஈர கூந்தலுடன் அழுதவாறே
ஜ்வாலைகளின் அன்னையே!
காளையர்கள் கனமான ஈட்டிகளை ஏந்தி
இருளில் பதுங்கிச் சென்றுவிட்டனர்.
ஜ்வாலைகளின் அன்னையே
தீயை அணையாமல் செய்தவள் நீ!
நான் நிர்கதியானவன்
அவர்கள் என்னையும் அவர்களுடன் கூட்டிச் சென்றிருக்கலாமே!

நான் மெல்ல எழுந்துச் சென்று பராஜின் நடை பாதையை ஒட்டி நிற்கையில், பவானித் தீவின் முழுகாத முனையில் அந்த எருமை நின்றுகொண்டிருந்தது. மெளனமாக நீரில் பாய்வது போல தீயை கிழித்துக்கொண்டு பாய்ந்தது. நான் ஒரு வலையை வீசும் லாவகத்துடன் என்னைத் தூக்கி நதியில் வீசினேன். அந்தர கணத்தில் நாவலின் முதல் வரி நினைவுக்கு வந்தது, “ ஆதியில் அழகு இருந்தது, தீயின் வடிவில். அதைப் பார்க்கும் இரு ஜோடிக் கண்களும் இருந்தன. ”

கவிதைகள்:
Anna swir இன் I am afraid of fire கவிதை
ஷங்கர் ராம சுப்ரமண்யனின் இலைகள் கவிதை
William Carlos Williams இன் The crude lament கவிதை

சியாம்

சியாம். சென்னையில் தனியார் நிறுவனத்தில் இயந்திர வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். இலக்கியத்துடன் கர்நாடக இசையிலும் ஆர்வம் உள்ளவர்.

உரையாடலுக்கு

Your email address will not be published.