/

அகழ் : நூல் அறிமுகங்கள்

காதுகள் : எம்.வி.வெங்கட்ராம்

எம்.வி.வெங்கட்ராமின் “காதுகள்” நாவல் பற்றி பேசும்போது கோபிகிருஷ்ணனும் நகுலனும் இயல்பாக நினைவில் வருகிறார்கள். மூவருமே தம்முள்ளே கேட்கும் குரல்களால் யதார்த்தம் துண்டுகளாகி அலைவதை எழுதியவர்கள். “உள்ளிருந்து சில குரல்கள்” என்பதுதானே கோபிகிருஷ்ணனின் நாவல் தலைப்பு. நகுலன் தன்னுள் கேட்கும் குரலோடு, ஒரு சாய்வு நாற்காலியில் உட்காந்து விசாரம் மேற்கொள்கிறார். அது தனிமனிதனின் தத்தளிப்பு. பைத்தியம். கோபிகிருஷ்ணனோ பைத்தியக்கார விடுதியில் சேர்க்கப்படுகிறார். அவருடைய பைத்தியம் சமூகத்தின் பைத்தியமாகிவிடுகிறது. எம்.வி.வியிடம் அது கடவுள்களின் பைத்தியமாகிறது.

யதார்த்தம் என்பது ஒரு பிராந்தியம் என்றால் நம் மூளை அதை வரைபடமாக மட்டுமே அறிய முடியும். உண்மையான பிராந்தியம் நம் அறிதலுக்கு வெளியேதான் இருக்கிறது. அதனால்தான் நம்முடைய அறைக்குள்ளேயே திடீரென்று நமக்கு தெரியாத ஒரு பொருள் வந்து மோதுகிறது. நம் மூளைக்குள் அதுவரை தெரியாத ஒரு எண்ணம் பிறப்பது போல. “காதுகள்” நாவல் ஒரு மனிதனின் மன வரைபடம் சிதைவதையே பிரதானமாக சித்தரிக்கிறது.  புறவுலகத்துக்கும் அகவுலகத்துகுமான இணைப்பு முறிவதை விவரிக்கிறது. அகவுலகமே ஒவ்வொரு அடுக்காக கலைவதை காட்சிப்படுத்துகிறது. ஆனால் அதை வெறும் உளவியல் சிக்கலாக குறுக்காமல் ஓர் ஆன்மீக போராட்டமாக மாற்றுகிறது. சிதறல்களை குறைப்பாடாக இல்லாமல், வெளிப்பாடாக மாற்றுகிறது.

உடனடி பார்வையில், ஒரு மத நம்பிக்கை கதை போல தோன்றும்படிக்கு நாவல் எழுதப்பட்டிருக்கிறது. நாவலின் முடிவில் மகாலிங்கம் கடவுளிடம் முறையிடுவதும் அதன் தொடர்ச்சியாக அவன் மகள் உயிராபத்திலிருந்து மீள்வதும் அந்த எண்ணத்தை ஊர்ஜிதப்படுத்துவது போலவும் காட்சியளிக்கின்றன. ஆனால் இவையெல்லாம் தோற்றங்கள்தாம். இணையான வேறு தோற்றங்களும் வருகின்றன. தெய்வங்கள் கேலிச் சித்திரங்களாக்கப்படுகின்றன. காளியும், முருகனும், ராமனும், கறுப்பனும் வரம் அருள்பவர்களாகவோ அல்லது காத்தருள்பவர்களாகவோ இல்லாமல் அலைமோதுபவர்களாக இருக்கிறார்கள்.  ஒரு வினோத கேலிக்கூத்தில் பங்கேற்கிறார்கள்.

இந்த நாவல் தாமஸ குணத்துக்கும் சத்துவ குணத்துக்குமான மோதல் என எம்.வி.வி குறிப்பிடுகிறார். தாமஸ குணத்தின் மூர்க்கத்துடன் காளி மகாலிங்கத்தை ஆக்கிரமிக்கத் துடிக்கிறாள். அவன் சத்துவ குணத்தின் தெய்வமான முருகனை நாடுகிறான். அலங்கார ரூபினி, திருவோட்டு சித்தன் எனும் இந்த முரண்பாடு நாவலின் இழைகளில் முக்கியமானது. புலன்களின் தவிப்பு, அதை கடக்க விழையும் மனதின் ஒடுக்கம்- ஆரம்பம் முதலாக  நாவல் இந்த முரண்பாட்டில் கவனம் கொண்டபடியுள்ளது. தன் சிறுவயதில் பூஜை அனுஷ்டானங்களை வெறுத்ததாக மகாலிங்கம் குறிப்பிடுகிறான். ஏனென்றால் அவை பலகாரங்கள் கிடைப்பதை தாமதப்படுத்துகின்றன.

காளி இரண்டு ரூபங்களில் காட்சியளித்து மகாலிங்கத்தை ஈர்க்க முயற்சிக்கும் பகுதி இந்த மைய மோதலின் உச்ச வெளிப்பாடாக அமைந்துள்ளது. அரியணை மீது வீற்றிருக்கும் அரசியாக ஒரு ரூபம். ஒப்பனைப் பூச்சு அணிந்து நவீன பெண்ணாக இன்னொரு ரூபம். முதல் ரூபத்தில் பக்தியில் தொடங்கி காதல் மொழிவரை பேசுகிறாள். இரண்டாவது ரூபத்தில் காமமே உயிரின் அசைவு என்றபடி அவனை நேரடியாக முயங்க அழைக்கிறாள். தன் உடை களைந்து உடலும் களைந்து -பருவடிவின் எல்லைகளை மயக்கி- வெறும் சக்தியாக இச்சையாக மாய நடனம் செய்கிறாள். அதற்கு மேல் எந்த விவரத்துள்ளும் நாவல் செல்லவில்லை. இப்படி பல இடங்களில் அது வெறும் படிமம் வழியாக மட்டுமே தொடர்புறுத்துகிறது. கனவு போல பித்து போல எழுதப்பட்டிருப்பதால் நாவலே படிமங்களின் வெளியாக மாறியிருக்கிறது. பிரக்ஞைமேல் கட்டுப்பாடு விலகும்போது படிமங்கள் தமக்குள் உரையாட ஆரம்பித்துவிடுகின்றன.

நாவலில் துர்நாற்றம் திரும்ப திரும்ப பேசப்படுகிறது. தொடக்கத்தில் மகாலிங்கத்தை ஒரு பெண் கட்டியணைக்கும்போது உடனடியாக அவன் உணர்வது துர்நாற்றத்தைத்தான். அது உண்மையிலேயே அவளிடமிருந்துதான் வருகிறதா என்றுகூட நமக்கு தெரியாது. போலவே கடைசியில் ராமனும் கறுப்பனும் மகாலிங்கத்தின் வாய்க்குள் இறங்குகிறார்கள். அங்கே எச்சில் நாற்றம் கேலியாக சுட்டப்படுகிறது.

உடல் வழியாகவே நாம் உலகின் அத்தனை இனிமைகளையும் துய்க்கிறோம். நாக்கில் ருசி அறிகிறோம். செவிகளில் இசை கேட்கிறோம். மூக்கில் இனிய வாசம் நுகர்கிறோம். அழகில் கண்கள் விரிக்கிறோம். ஸ்பரிசத்தை முத்தமிடுகிறோம். ஆனால் உதடுகளில்தான் துர்நாற்றமும் வருகிறது. காமத்தின் உச்ச இன்பத்தையும் உடலின் கழிவையும் ஒரே இடத்தில் அமைத்ததுதான் எவ்வளவு பெரிய மர்மம்? எம்.வி.வி எந்த தடையும் இல்லாமல் இந்த கேள்வியை எதிர்கொள்கிறார். அதற்கு சுவாதீனத்தையே விலையாக கொடுக்கிறார். ஒரு நவீன இலக்கியவாதி “நாற்றப் பாண்டம்” என்று சித்தன் ஆகமுடியுமோ இல்லையோ தெரியாது. ஆனால் நிச்சயம் பித்தன் ஆகிறான்.  

“காதுகள்” நாவலுக்கு எந்த வடிவ ஒழுங்கும் இல்லை. கதையோட்டமும் சீரானதல்ல. கதாபாத்திரங்களின் இயல்பிலோ சம்பவங்களிலோ ஆசிரியருக்கு அக்கறை இல்லை. ஒரு சிசுவின் மரணத்தைக்கூட வேகவேகமாகத்தான் சொல்லி முடிக்கிறார். அதை மீண்டும் “பிள்ளைக் கறி தின்ற சிவன்” என்று இன்னொரு மொழிபாகத்தான் எதிர்கொள்கிறார். ஒரு யதார்த்தவாத எழுத்தாளர் இதே நாவலை மொத்தமாக வேறு மாதிரி எழுதக்கூடும். க.நா.சுவின் பொய்த்தேவு போல. அந்த கோணத்தில் அனுகினால் இந்நாவலை சரியாக மதிப்பிட முடியாமல் ஆகலாம். பின்-நவீனத்துவம் தனிமனித சுயம் எனும் கருதுகோளை விமர்சித்தது. எனவே மனப்பிளவு (Schizoprenia) கதைகளை ஒரு முக்கியமான அழகியல் வடிவமாக கண்டது. அவ்வகையில் “காதுகள்” தமிழின் ஆரம்பக்கட்ட பின்-நவீனத்துவ நாவல்களில் ஒன்று. ஒரு சாதனை எழுத்து.  

விஷால் ராஜா
“திருவருட்செல்வி” சிறுகதை நூலாசிரியர்

000

ஆக்டோபஸின் பேத்தி: மொழிபெயர்ப்பு கதைகள் – தமிழில் லதா அருணாச்சலம்

சிறுவயது துவங்கி இன்றுவரை நான் அன்றாடம் புரட்டி பார்த்து வாசிப்பு நோட்டம் செய்வது வரைபடங்களைத்தான், அதிலிருந்து தான் என் பயணமும், வாசிப்பும் துவங்குகிறது. இலக்கிய வாசகனுக்கு மொழிபெயர்ப்பு புத்தகங்கள் அட்லாஸ் போன்றவை, அந்த அடிப்படையில் “ஆக்டோபஸின் பேத்தி” சிறுகதை தொகுப்பும் ஆப்ரிக்க இலக்கிய பரப்பை அறிந்துகொள்ள ஓர் இலக்கிய வரைபட பனுவல்.

இந்த தொகுப்பில் உள்ள ஏழு கதைகளும் ஆப்ரிக்காவின் வெவ்வேறு எழுத்தாளர்களால் எழுதப்பட்ட, மாறுபட்ட களங்களை கையாளுபவை. இந்த தொகுப்பில் என்னை கவர்ந்த இரண்டு முக்கியமான கதைகளை பற்றி விரிவாக எழுதுகிறேன்.

அக்வைக்கே எமெஸியின் (Akwaeke Emezi) “கடவுளைப்போல் யார்” என்ற சிறுகதை பாலியல் அடையாளத்தை ஆராயும் கச்சி என்ற கதாபாத்திரத்தின் ஆழ்மனதின் தவிப்பாகவே வெளிப்படுகின்றது. கடவுள் தன்னுள் வசிக்கிறார் என நம்பும் கச்சிக்கு தன் பாலினத்தின் மீது கேள்விகள் இருப்பது போலவே கடவுளின் பாலினத்தின் மீதும் கேள்வி உள்ளது.

பாலியல் தேர்வு என்பது உடல் சார்ந்ததா, மனம் சார்ந்ததா அல்லது சமூகத்தின் வழிகாட்டுதல் படி மட்டுமே வரையறுக்கப்பட்ட ஒன்றா ? இது போன்ற என்றைக்குமான கேள்வி விடையை நோக்கி நகர்வதைவிட கேள்வியின் அடிப்படைகளை புரிந்துகொள்ளுவதே சிறந்தது என்பதை இக்கதையின் போக்கு முன்வைக்கிறது.

இந்த கதை குடும்ப உறவுகளுக்குள், இரத்த பந்தங்களுக்குள் இருக்கக்கூடிய அடையாள சிக்கல், காதல், காமம் அதன் வரையறை பற்றிய குழப்பங்கள், குறிப்பாக கதை சொல்பவருக்கும் அவர்களது சகோதரி யூரேக்கும் இடையே உள்ள பருவத்துக்குகே உரிய ஆகியவற்றின் ஊடே நகருகிறது . இத்தகைய களம் தமிழுக்கு அந்நியம் இல்லாத ஒன்றில்லை, ஆனால் இதில் விவரிக்கப்படும் எளிமையான உணர்வு பதிவுகள் ஆழமான கேள்விகளை நம் முன் வைக்கிறது.

இந்த தொகுப்பின் தலைப்பிலேயே உள்ள ரெமி என்காமிஜேயின் (Rémy Ngamije)”ஆக்டோபஸின் பேத்தி” மிக முக்கியமான சிறுகதை, ஜெயகாந்தனின் யுகசந்தி சிறுகதையின் ஆப்ரிக்க பிரதி. பெண்ணின் கற்பின் அந்தஸ்த்து ஒவ்வொரு தேசத்திற்கு எவ்வாறு வேறுபடுகிறது? நம்மூர்களில் தாத்தாவிற்கு இரண்டு குடும்பங்கள் இருந்து இரண்டு பாட்டிகளின் வாரிசுகள் தாத்தாவின் சொத்திற்கு பங்குக்கு வருவதை நாம் கேள்விப்பட்டிருப்போம், ஆப்ரிக்காவில் ஒரு பாட்டிக்கு எட்டு கணவன்மார்கள் இருந்து ஒவ்வருவனும் ஒவ்வொரு குணாதிசியம் கொண்டவனாக இருந்தால் எப்படி இருக்கும்? பாட்டியின் வாழ்வும் அவளை நேசிக்கும் அவளது பேத்தியின் அன்றாட வாழ்வும் எப்படி இருக்கும். பேத்தி காலத்தின் உறவு சிக்கல்களுக்கு பாட்டியால் தீர்வு சொல்லிவிட இயலுமா? அல்லது பேத்தியால் தான் பாட்டியின் வாழ்வை முழுமையாக உணர்ந்துகொள்ள இயலுமா.

ஆக்டோபஸ் என்ற உயிரின் உடலுறுப்பை கையென சொல்வதா அல்லது கால்கள் என சொல்வதா அதுபோன்றே குழப்பமானது பாட்டியின் வாழ்வும். ஆண் என்ற பாலினத்தை அவனின் குணாதிசயங்கள் கொண்டு எத்தனை வகையாக தரப்படுத்த இயலும் என்பதை இக்கதை கையாளும் விதம் சிறப்பானது. இந்த கதை எழுதப்பட்டுள்ள வடிவம் அசாத்தியமானது. ஆப்ரிக்க கண்டத்தின் நூறு தேசங்களுக்குமான ஒற்றை கதை இது என்ற எண்ணம் தோன்றுகிறது.

ஆப்ரிக்கா என்றாலே பூர்வகுடிகள் வாழும் வனப்பகுதி என்ற சித்திரம் கொண்ட எந்த ஒரு வாசகரும் முதலில் வாசிக்க வேண்டிய புத்தகம் “ஆக்டோபஸின் பேத்தி” அது ஒரு நிலப்பரப்பின் மீது வாசகருக்கு இருக்கும் முன் தீர்மானங்களை தகர்த்தெறியும். இந்த மொழியாக்கத்தை செய்த லதா அருணாச்சலத்தின் மொழியாக்கங்கள் இரண்டு விஷயங்களுக்காக கவனிக்கப்படவேண்டும். ஒன்று அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களம் அதிகம் வாசிக்கப்படாமலே புறம்தள்ளப்படும் கருக்களை கொண்டுள்ளது, இரண்டு ஆப்பிரிக்க வாழ்வவை தங்கு தடையின்றி வாசித்துணர அவரின் மொழியாக்கம் தடையாக இருக்கவில்லை, அவர் ஆப்ரிக்காவில் சில ஆண்டுகள் வாழ்ந்தவர் என்பதும் அவரது மொழியாக்க ஆளுமைக்கு பலம்.

அறியப்படாத மனிதர்களின் வாழ்வை எந்த வித சார்புமின்றி யதார்த்தமாய் பேசும் கதைகள் நிறைந்திருக்கும் குருத்தோலை பெட்டகம் இந்த புத்தகம்.

நூல்வனம் வெளியீடு

– இளம்பரிதி
‘வழி’ இணைய இதழின் ஆசிரியர்
.

000

தொடுதிரை – மலையாளக் கவிதைகள் : கல்பட்டா நாராயணன் (ஆசிரியர்), ஜெயமோகன் (தமிழில்)

பொதுவாக கவிதை தொகுப்புகள் முன்னுரையுடன் வருவது குறைவு. அப்படியே வந்தாலும் அது பெரும்பாலும் சம்பிரதாயமான முன்னுரையாகவே இருக்கும். விதி விலக்காக சில கவிதை தொகுப்புகளின் முன்னுரைகள் இளங்கவிகளுக்கு புதிய வாசல்களை திறந்துவிடும் பாடமென மிகச் சிறப்பாக இருப்பதுண்டு. யுவன் சந்திரசேகர் தன் கவிதை தொகுப்புகளுக்கு எழுதும் முன்னுரைகளை உதாரணமாகச் சொல்லலாம். தொடுதிரை கவிதை தொகுப்பில் கவிதைகளுக்கு இணையாகவே மின்னுகிறது கல்பற்றா எழுதியிருக்கும் முன்னுரை.

‘வசீகரிக்கும் வசனங்களில் இருந்தே நான் என் கவிதையின் மர்மத்தைக் கற்றுக் கொண்டேன். மொழிகளை பழமொழிகளாக்கும் ஆற்றலை தேடிக் கொண்டிருக்கிறேன்’. ( “என் கவிதைக்கான மாயங்களை பழமொழிகளில் இருந்தே நான் எடுக்கிறேன்” என்று ஒரு முறை திரு தேவதச்சன் கூறியதை இங்கே நினைவுகூறத் தோன்றுகிறது). ‘கவிதை தீராத வாசிப்புக்குரியதாக இருப்பது அது அதிலேயே நிறைவுற்று இருப்பதனால் அல்ல. (Thing in itself).   முன்பு கிடைக்காத சில பொருட்கள் அதற்கு வாசிக்க வாசிக்க வந்தமைகின்றன என்பதால் தான்.’

இச்சொற்றொடர்கள் கவிதையின் மர்மத்தை திறந்து பார்க்க விழையும் எவருக்கும் சில திறப்புகளை நிகழ்த்தக் கூடும். இந்திய மொழிகளில் நவீன இலக்கியம் உருவாகி வளர்ந்த காலக்கட்டத்தில் நவீன கவிதைக்கான கவித்துவ இலக்கணமாக கருதி வந்த படிமங்கள், உருவக மொழி, இறுக்கமான வடிவ ஒழுங்கு, மற்றும் மலையாள நவீன கவிதைகளுக்கு கூடுதலாக இருந்த  ‘இசைத் தன்மை’ ஆகியவற்றை எல்லாம் முற்றிலும் கைவிட்டு, களைந்துவிட்டு நேரடியான கவிதை அழகியலை (plain poetry) தொடங்கி வைத்த முன்னோடிக் கவிஞர் திரு கல்பற்றா நாராயணன்.

கலபற்றாவின் கவிதைகள் எவ்விதம் தனக்கான தனித்தன்மையை கொண்டிருக்கின்றன?

கல்பற்றாவின் கவிதைகள் எளிய மொழியும் எளிய வடிவமும் கொண்டிருக்கின்றன. அவர் கவிதைகளில் எவரும் தயக்கமின்றி லகுவில் உள்ளே நுழையலாம். தன் கவிதை மாளிகையின் வாசலை எல்லோருக்கும் திறந்தே வைத்திருக்கிறார். கல்பற்றாவின் கவிதைகளில் திகழும் குன்றாத வாசிப்புத் தன்மை. எந்த கவிதையிலும் கொஞ்சமும் சலிப்பு என்பதே இல்லை. கவிதை வாசிப்பை ஒரு கொண்டாட்டமாக ஆக்குகின்றன இவரது கவிதைகள். இதற்கு காரணமாய் கல்பற்றாவின் கவிதைகளில் இருக்கும் அங்கதம், பகடித்தன்மை, நகைமுரண், எதையுமே தீவிரமாய் எடுத்துக் கொள்ளாமல், லகுவாய் எடுத்துக் கொள்ளும் ஜென் தன்மை ஆகியவற்றைச் சொல்லலாம்.

கல்பற்றா கவிதைகளின் பேசு பொருள், நாம் காணும் அன்றாடங்களின் சாதாரண நிகழ்வுகள் தான். அரிய நிகழ்வுகளோ உச்சக் கட்ட உணர்வு நிலைகளோ அல்ல. அன்றாடங்களின் சாதாரண நிகழ்வுகளில் இதுவரை நாம் காணாத ஒன்றினை தன் கவித்துவப் பார்வையால் கண்டெடுத்து, அவைகளை மிக அரிய தரிசனங்களாய் மாற்றிக் காட்டி, நம்மை வாயடைக்கச் செய்கிறார். கவிதானுபவ பரவசத்தை ஒவ்வொரு கவிதையிலும் உறுதி செய்கிறார். மனிதர்களுக்கு கவிதை ஏன் தேவையாகிறது? ஓயாது இயங்கும் நம் மனத்தின் எண்ண ஓட்டத்தினை ஓர் இமைக்கணம் ஊடறுத்து நிறுத்திவிடும் அனுபவத்திற்கு. நம் மனத்திலிருந்து ஓர் இமைக்கணம் நாம் வெளியேறிவிடும் அந்த நொடி நேர தியான அனுவத்திற்கு. அந்நொடிக்கு பிறகு அலையலையாய் விரியும் கற்பனை பயணங்களுக்கு. இதனையே கவிதானுபவம் என்கிறோம். கல்பற்றாவின் எல்லா கவிதைகளும் இந்த தேவையை மிகச் சரியாக நிறைவு செய்கின்றன.

கடும் சலிப்பும் சோர்வும் கசப்பும் இருண்மையும் நிறைந்த நவீன கவிதைகளுக்கு நடுவே, கல்பற்றாவின் கவிதைகள் மிக சுவாரஸ்யமாகவும், ஒரு திருவிழா கொண்டாட்டத்தின் அனுபவத்தை தருவதாயும் இருக்கின்றன.  போர் கருவிகளுக்கு நடுவே ஊதி வைக்கப்பட்ட ஒரு வண்ண பலூனைப் போல.

வந்து ரொம்ப நேரம் ஆகவில்லை
கைக்குழந்தைகள் கொட்டாவி விடுவது
எனக்குப் பிடிக்கும்
‘ஒரு ருசியுமில்லை இவ்வுலகுக்கு’
அதன்பின் அவர்கள்
பெரிய சலிப்புடன்
உலகுக்கு முதுகைக் காட்டி
திரும்பிப் படுக்கிறார்கள்

நீங்கள் ஒவ்வொரு நாளும் புதிதாகப் பிறந்தால், யாருக்கு முதுகைக் காட்டி திரும்பி படுப்பீர்கள்? மரணத்தின் பேரழகினை கல்பற்றா மிக அற்புதமாய் வரைந்து காட்டுகிறார் பல கவிதைகளில்.

கல்பற்றாவின் தெரிவு செய்யப்பட்ட இத்தொகுப்பினை வாசித்து முடிக்கையில், அவருடைய ‘ஒழிஞ்ஞ விருக்‌ஷசாயயில், சமயப்பிரபு, ஒரு முடந்தன்றே சுவிசேஷம், கறுத்த பால், ஓர்க்காபுறங்கள்’ எனும்  ஐந்து கவிதை தொகுப்புகளையும் மொத்தமாக வாசித்துவிட வேண்டுமெனும் பெரும் பசி ஒரு கவிதை வாசகனுக்கு எழும் என்பது உறுதி. இத்தொகுப்பின் முன்னுரையின் இறுதி வரி, ஓர் மந்திர சொற்றொடர்:

‘வெளிச்சம் மறைக்கிறது’ என யாரோ சொல்லக் கேட்கிறேன். விலகிக் கொள்கிறேன்.’

விஷ்ணுபுரம் வெளியீடு

வ.அதியமான்
“குடைக்காவல்” கவிதை தொகுப்பின் ஆசிரியர்

உரையாடலுக்கு

Your email address will not be published.