அதோ உன் மகன் : சியாம்

துணிமணிகள்

நான் விளையாண்டு முடித்து திரும்பி வந்தேன்
அவள் துணிகளை மடித்துக் கொண்டிருந்தாள்
புதிய சீருடைகளைத் தைக்கத் கொடுத்த சந்தோஷத்தில் ஓடி வந்தேன்
அவள் மடித்து வைத்துக்கொண்டிருந்தாள்
நீண்ட இடைவெளிக்கு பின் கல்லூரி விடுமுறைக்கு வந்துசேர்ந்தேன்
அப்போதும் துணி மடித்துக் கொண்டிருந்தாள்
அவளுக்கு எப்போதும் மடித்து எடுத்து அடுக்கி வைக்க
ஏதாவது இருந்துகொண்டே இருந்தது
அப்படித்தான் அவள் அந்நியமாதலில் இருந்து தப்பித்தாள்
தத்துவ ஆசிரியர்களிடம் இருந்தும்
ஆன்மிக வறுமையில் இருந்தும் கூட.
நான் கசங்கிய சட்டையுடன் அவர்களோடு மல்லுக்கட்டுகையில்
அவள் யாரவது திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையில்
மெளனமாகத் துணிமடித்துக் கொண்டிருந்தாள்.
இந்நள்ளிரவில் திடுதிடுப்பென ஞாபகம் முட்ட
நான் எனது அலமாரியைத் திறந்து பார்க்கிறேன். அது
மேகங்கள் இல்லாத மூலி வானம் போல
உம்மென்றிருக்கிறது.

  • சபரிநாதன்

ரயிலின் இரும்புக்கூரையை பொருட்படுத்தாமல் வெயில் உள் நுழைந்திருந்தது. வெப்பத்தால் மட்டுமே அத்தனை நெரிசலுக்கிடையிலும் இடம் பிடிக்க முடிகிறது. அந்த முன்பதிவில்லாப் பெட்டி, கழிவறையின் வீச்சத்தை சகஜமாக்கிக்கொள்ளும் கட்டத்தை நெருங்கும் வரை காத்திருந்து மடிக்கணினியை திறந்தேன். புகைப்பட கண்காட்சிகளைப் பார்வையிட்டுத் திரும்பும்போது நான் செய்யும் சடங்காகவே இது சமீபகாலத்தில் மாறிற்று. தொடங்கப்பட்டதும், பாதியில் கைவிடப்பட்டதும், பிரசுரிக்க மறுக்கப்பட்டதுமான புகைப்பட நூல்களை ஒவ்வொன்றாக திறந்துப் பார்க்கத் துவங்கினேன். அவற்றின் நினைவுகள்கூட எழ அனுமதிக்காமல் மனம் அவசரப்படுத்தியது. பல கோப்புகளை ஒன்றாக கையாள முடியாமல் கணினி திணறுகையில் மேலும் வேகமாகப் பக்கங்களை நகர்த்தினேன். நான் எதை தேடுகிறேன் என்று என்னைப்போலவே அதனாலும் புரிந்துக்கொள்ளமுடியவில்லை. அதன் சூடான மூச்சிரைப்பு தொடைகளில் படர்கையில், சந்திரா மௌசியின் புகைப்படத்துடன் திரை உறைந்துநின்றது. அப்புகைப்படத்தில் சந்திரா மௌசி அவர் மட்டுமே சஞ்சரிக்கும் உலகத்தில் இருந்தபடி புத்தகம் வாசித்துக்கொண்டிருக்கிறார். ஒடுங்கலான அறையின் மங்கிய வெளிச்சத்தில் மௌசியின் கண்களில் மட்டும் விசேஷமான நீர்மை சேர்ந்திருக்கிறது. அந்தப் பூனை வழக்கமான சாவதானத்துடன் அவர் கால்களுக்கருகில் சுருண்டிருக்கிறது. புகைப்படத்தை பார்த்துக்கொண்டே இருந்தேன்; இடையில் ஓடிய இரண்டு வருடங்களை ஒரு மிட்டாயை கரைக்கும் பிரயாசத்தால் கரைத்துவிடலாம் என்பது போல.

நெடுநேரத்திற்கு பின் மடிக்கணினியிலிருந்து கண்களை விலக்கிப் ஜன்னலை பார்க்கையில், ரயில் விஜயவாடாவைக் கடந்து கிராமபுறத்தில் சென்றுகொண்டிருந்தது. செம்மண் நிலப்பரப்பில் கொம்புகள் ஊன்றப்பட்டு ஆந்திராவுக்கே உரித்தான வெள்ளை, மஞ்சள், பச்சை, வெளிர் சிகப்பு துணிகள் கயிற்றில் படபடக்கவிடப்பட்டிருந்தன. இங்கிருந்தே வெயிலில் காய்ந்த அவற்றின் முறுக்கத்தை உணரமுடிந்தது. உப்பியும் வற்றியும் கொண்டிருக்கும் துணிகளுக்கிடையில் வெயில் நுழைந்து வருவது இவ்வுலகத்தில் உள்ள எல்லாவற்றின் உள்ளும் வெயில் ஊடுருவி வருவதாக தோன்றச்செய்தது. இவ்வுலகத்தில் எல்லாமே கண்காணிக்கப்படுவதாக கவனித்துக்கொள்ளப்படுவதாக எல்லாவற்றின் மீதும் சம அளவு அன்பும் கண்டிப்பும் செலுத்தப்படுவதாக தோன்றச்செய்தது. அம்மாதான் இதுபோன்ற கிறுக்குத்தனங்களை என்னுள் விட்டுச்சென்றவள். என் நினைவின் விதானங்களில் பதினாறு பாதங்களுடன் நடமாடுபவள். நான் அவளை எடுத்த பல நூறு படங்களில் ஒன்றில் கூட அவள் இருப்பதாக தோன்றவில்லை. யாரோ ஒருவர் எடுத்த அந்தப் படமாக மட்டுமே அவள் என்னுள் எஞ்சுகிறாள். அப்படத்தில், சாய்ந்து இறங்கும் சூரிய ஒளியில் அம்மா ஒரு புத்தகம் வாசித்துக்கொண்டிருக்கிறாள். நான் அவளுடன் இருப்பதன் சாட்சியாக குட்டிச் சட்டைகள் மட்டும் கட்டிலின் ஓரத்தில் மடித்து வைக்கப்பட்டிருக்கின்றன.

அவள் அன்று வாசித்தது ஏதோ ஒரு ராஜேஷ்குமார் நாவலாக இருக்கலாம். வியர்வை வழியும் சீருடையுடன் நான் வீடு திரும்புகையில் எனக்கு சொல்ல அவளிடம் ஒரு ராஜேஷ்குமார் கதை நிச்சயம் இருக்கும். அக்கதைகளில், ஆணும் பெண்ணும் சிநேகத்துடன் பேசிக்கொண்டார்கள்; ஜோடியாக கடற்கரையில் நடந்து சென்றார்கள்; நாயகன் திறமையுடன் துப்புத்துலக்கி நாயகியை கண்டுபிடித்த பின்பு இருவரும் சந்தோசமாக கைகோர்த்துக்கொண்டார்கள். அம்மா இந்த கதைகளையெல்லாம் என்னில் பதியச் செய்து நீங்கிய பிறகே நான் அவளது அலமாரியிலிருந்து அந்த சாம்பல் நிற புத்தகங்களை எடுத்து வாசிக்கத் துவங்கினேன். முதல் பக்கத்திலேயே நாயகிகள் வன்புணர்வு செய்யப்பட்டனர்; காதலர்களின் பின்னந்தலைகளை துப்பாக்கிகள் சதா குறிபார்த்தபடியே இருந்தன; மரணத்தின் காலடிகள் எல்லா பக்கங்களிலும் ஒளிந்துக்கொண்டிருந்தன. வன்மத்தை காதலாக்கும் அவளது ரசவாதம் நான் அவளை எடுத்த எந்தப் புகைப்படத்திலும் மங்கலாககூட வெளிப்படவில்லை. என்னிடம் புனைந்து சொல்வதற்கு மௌசியிடம் சில கதைகள் இருந்திருக்கும். அவற்றில் ஒன்றாவது புகைப்படநூலில் ஒலிக்கிறதா என்று இன்றுவரை கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.

சத்ராப்பூர் நிலையத்தில் ரயிலைவிட்டு இறங்குகையில் என்னை கலவரப்படுத்தும் சென்னையின் வெதுவெதுப்பான அந்திதான் அங்கும் கவிழ்ந்திருந்தது. அதைத்தவிர பரிச்சயத்தின் சிறு ரேகையை கூட அங்கு உணரமுடியவில்லை. ஒடிசாவின் நினைவுகளாக என்னுள் எஞ்சுவதெல்லாம் நான் புகைப்படம் எடுத்திருந்த புராணபந்தம் கடற்கரையும் சந்திரா மௌசியும் மட்டுமே. சென்றமுறை ஒடிசா வந்திருந்தபோது ஆதித்யா என்னை ஆற்றுப்படுத்திய இடம் சந்திரா மௌசியின் வீடு. கீழ் நடுத்தர வர்க்கம் நிரம்பிய ஒடிசாவின் அரைநகர பகுதிகளில் உள்ள பிரபலமான வழக்கம் வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விடுவது. முன்பு எப்போதோ ஜமீன்தாரொருவர் ஓய்வு மாளிகையாக பயன்படுத்திய கட்டிடத்தில் வசிக்கும் பதினெட்டு குடும்பங்களில் சந்திரா மௌசியுடையதும் ஒன்று, மௌசியையும் அவரது கணவர் விஜய்குமார் ஜாவையும் அந்த ஊமைப் பூனையையும் குடும்பமாக கருதும்பட்சத்தில். நதியா சற்று பருத்து கண்களுக்கடியில் கருவளையங்களுடன் இருப்பது போன்றவர் மௌசி. பின்பு உடைந்த இந்தியிலும் சைகையிலும் இதை அவரிடம் சொன்னபோது என் செல்போனில் நதியாவின் புகைப்படத்தை தேடச்சொல்லி, அதை நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தார்.

ஒரு மைதிலி பிராமணர் என்பதைக் கடந்து விஜய்குமார் ஜா என் மனதில் வேறு எந்த அடையாளத்தோடும் பதியவில்லை. மௌசி கட்டாயப்படுத்த, விஜயகுமாருக்கு தெரியாமல் நான் அவரை எடுத்த புகைப்படத்திலும் அவர் அப்படித்தான் இருந்தார். மகனை சிறுவயதிலேயே இழந்திருந்த அவர்களுக்கு அதற்கு மேல் பேசிக்கொள்ள ஏதுமில்லை. இரண்டு பற்சக்கரங்கள் இணைப்பு விடுபட்டு தன்னிச்சையாக சுற்றிக் கொள்வது போன்றது அவர்களது அன்றாடம். ஆனால் எல்லா நாட்களும் அர்த்தத்தோடும் அர்த்தமின்றியும் தனித்தனியாக செய்வதற்கான வேலைகளால் நிறைந்திருந்தன. சர்வநிச்சயமாக சொல்லமுடியும் மௌசி இவ்வேளையில் அந்த நெரிசலான பங்களாவின் முற்றத்தில் கொசுக்களை விரட்ட சுரத்தின்றி நிற்கும் பசுவுக்கு தீவனம் கொடுத்துக்கொண்டிருப்பார். அந்த ஊமைப் பூனை அவருக்காக காத்துக்கொண்டு வாசலில் படுத்துக்கொண்டிருக்கும். அவரது வாழ்வின் எல்லா பொழுதுகளும் பின்மதியத்தின் நிதானத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவை. எந்த அதிசயமும் அசம்பாவிதமும் நிகழ முடியாத அவரது அன்றாடத்திற்கு பதிலளிக்க அவரிடம் ஒரு நிரந்தரமான முகபாவம் இருந்தது. துயரா நிறைவா ஏமாற்றமா ஏற்பா என்று உய்த்துணர முடியாத பாவம். ‘மோனலிசா போல’ என்று ஒருமுறை அவரிடம் சொன்னேன். அவருக்கு மோனாலிசாவை தெரிந்திருந்தது.

அக்கறையின்மைக்கும் நிபுணத்துவத்திற்கும் இடையில் ஊசலாடியபடி மௌசி செய்யும் அன்றாட வேலைகளைதான் முதலில் புகைப்படம் எடுக்கத் துவங்கினேன். அவரது புகைப்படங்களே கிட்டத்தட்ட ஐநூறு எம்.பி இடத்தை எடுத்துக்கொண்ட சமயத்தில் அவரது முகபாவம் சிறிது தெளிந்துவரத் தொடங்கியது. வரவேற்பறை என்று அழைக்கப்படும் இடமும் அதனுடன் இணைந்த சமையலறையும் இரு சிறிய அறையும் கொண்ட சந்திரா மௌசியின் வீட்டில் ஒரு அறையில்தான் நான் வாடகைக்கு தங்கி இருந்தேன். தவறுதலாக கூட விஜயகுமார் நுழைந்திடாத அறை அது. ஒன்றுக்கொன்று தொடர்பற்று அறையெங்கும் இறைந்து கிடைக்கும் பொருட்களுக்கு மத்தியில் அவர் செய்வதெற்கென்று ஒன்றுமில்லை.

முழுவதும் களைத்துப்போய் மெல்லிய தூறலில் அறைக்கு திரும்பி வந்த அந்த மதியவேளை இப்போதும் நினைவிருக்கிறது. வாசலைக் கடந்துவிடாத சன்னமான குரலில் மௌசி நாட்டுப்புற மெட்டிலமைந்த ஓர் ஒடியா பாடலை பாடிக்கொண்டிருந்தார். நினைவேக்கத்தையும் கையாலாகாத்தனத்தையும் ஒருங்கே ஒலிக்கும் த்வனி அது. அப்பாடலுடன் சடசடத்தவாறு தையல் மிஷின் ஒரு செந்நிற ஃபிரில் ஜாக்கட்டை தைத்துக்கொண்டிருந்தது. அவரது முகபாவத்திற்கு பல மைல் தூரம் பின்னாலிருந்து முதன்முறையாக ஓர் கீற்று தோன்றிமறைந்தது. நெடுநேரம் தடுமாறி நான் அதற்கு நிராதரவு என்று பெயரிட்டிருந்தேன். அதன் பிறகே வெளியுலகிற்காக போர்த்திக்கொண்டுள்ள சாவதானத்தை விலக்கி அவர் வெளிவரும் தருணங்களை நானும் கேமராவும் கண்டுணர்ந்தோம். கழுத்தில் எண்ணெய் கறை படிந்திருக்கும் விதவிதமான ஊறுகாய் ஜாடிகள், எம்ப்ராய்டரி நூல் கண்டுகள், அலமாரியில் ஒளிந்துகொண்டிருக்கும் ஓரிகாமி கொக்குகள், பருத்தி நூல் பாதி சுற்றப்பட்டிருக்கும் தக்ளி, புல்லாங்குழல் என்று என் அறையில் இருக்கும் எல்லா அசேதனத்துடனும் அவர் கலந்திருந்தார். யாராவது அந்தப் பொருட்களை தேய்த்தால் ஒரு ஜீனியைப் போல மௌசி வெளிவருவார் என்று தோன்றியது. ஒரு அலாவுதீனாக மாறத்தான் இன்றுவரை முயன்றுகொண்டிருக்கிறேனே?

ஆதித்யா தோளை தொடும் வரை யோசித்துக்கொண்டே நின்றிருந்தேன். பைக்கில் செல்கையில் அவன் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தான்; இரண்டு ஆண்டுகள் சில நேரங்களில் யுகங்களாகவும் நிமிடங்களாகவும் தோன்றுவது பற்றி, அவன் முன்னெடுத்த போராட்டம் பற்றி, அதில் கலந்து கொண்ட குட்டை சிகை பெண்ணை பற்றி, அவளிடம் பேசப்போவது பற்றி, அதற்கு நான் உதவப்போவதை பற்றி. சுவாரஸ்யங்கள் குறுக்கிடாத எனது இரண்டு வருடங்களை பற்றி அவனிடம் சொல்லவதற்கென ஏதுமில்லை. சென்றமுறை இதே போல அவனுடன் பைக்கில் செல்லும்போது இருவருமே எல்லைகளை கண்டுணர தடுமாறி சம்பிரதாயமாக பேசிக்கொண்டிருந்தோம். தவளைகள் முழங்கும் நாணல் வெளியில் சென்றுகொண்டிருக்கும் ஏதோ ஒரு கணத்திலிருந்து புராணபந்தம் கடற்கரையை அடையும்வரை தன்னிச்சையாக பேச்சை நிறுத்தி இருந்தோம். நேராக கடற்கரைக்கே போகலாமா இல்லை ஓய்வு எடுக்கிறாயா என்று கேட்டதற்கு எந்த பதிலிலும் சேராத விதத்தில் தலையாட்டினேன். ஒரு டார்ச் லைட்டை என்னிடம் கொடுத்துவிட்டு முன்னால் நடந்து சென்றான். கடற்கரை மணல் பரப்பெங்கும் சிறிய ட்ராக்டர்கள் குறுக்கும் மறுக்கும் ஓடியது போன்ற தடங்கள் பதிந்திருந்தன. என் நகர்வுகளில் ஜாக்கிரதை கூடாததை கண்ட ஆதித்யா ஓரிடத்தை சுட்டிக்காட்டினான். அதில் சிறிய அசைவு சேராதவரை அது என்ன என்று என்னால் உள்வாங்க முடியவில்லை.

அது, நான் பார்ப்பதற்காக அத்தனை தூரம் பயணித்து வந்திருந்த ஆலிவ் ரிட்லி ஆமை. டார்ச் ஒளிபட்டதும் சில நொடிகள் தயங்கி பின்பு இலகுவாகி அதன் நடை தொடர்ந்தது. நீரின் நெகிழ்வு கூடிய அசைவுகள். நான்கு சிறகுகளை கொண்டும் மணலை விலக்கிக்கொண்டே இருந்தது. காற்றில் தெறிக்கும் மணல், ஈரத்தினால் அதன் மேலேயே ஒட்டிக்கொண்டது, தன்னை தானே புதைத்துக்கொள்வது போல. அத்தனை மூர்க்கத்துடன் மணலை அறையும் அதன் குரல் எப்படி இருக்கும் என்று கற்பனையே செய்ய முடியவில்லை. புகார்களே சொல்லாத அதன் குரல் எப்படி இருக்கும்? ஒரு கழுதையைப் போலவா? அல்லது ஒரு ஆந்தையைப் போல? நெடுநேர போராட்டத்திற்கு பிறகு சட்டென அதன் உடலில் நிச்சலனம் கூடிற்று. நீண்ட கழுத்து பக்கவாட்டில் சாய்ந்து இமைகள் மூடிக்கொண்டன. அது யுகங்களின் பாரத்துக்கடியில் அழுந்தி பூமிக்குள் புதைந்துக்கொண்டிருந்தது. நான் அதை நோக்கி ஒரு காலடி எடுத்துவைத்தபோது ஆதித்யா என்னை தடுத்து டார்ச்சையும் அணைத்தான். அதன் ஓட்டிலிருந்து மணல் பொந்திற்குள் ஒரு முட்டை வழுக்கிக்கொண்டு விழுந்தது. முழுதாக சூழ்ந்திருக்கும் இருளில் ஒரு மாயக்கரத்திலிருந்து நீர்மையுடன் அவை நழுவிக்கொண்டே இருந்தன. ஒன்று, இரண்டு, மூன்று……..எழுபத்தி எட்டு.

ஏறத்தாழ ஒரு மணிநேரம் கழித்து உயிர்த்தெழல்போல அது முதல் அசைவை நிகழ்த்தியது. மணலை துழாவி பொந்தை மூடிவிட்டு, நீந்துவது போலவே ஓய்ந்த சிறகுகளால் நிலத்தை உந்தி கடலை நோக்கி நகர்ந்தது. அதன் பிறகே முழு கடற்கரையையும் பார்த்தேன். எறும்புகளென கரையெங்கும் ஆமைகள் மொய்த்துக்கொண்டிருந்தன. அவை சிறகுகளால் மண்ணில் துடுப்பிட்டு வருவதே அந்த டயர் தடங்கள். “ சென்ற வருடம் ஆறு லட்சம் ஆலிவ் ரிட்லி ஆமைகள் வந்தன. இந்த வருடம் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறோம். இங்கு முட்டையிடுவதற்கு பெண் ஆமைகள் பல ஆயிர கிலோமீட்டர்கள் நீந்தி வருகின்றன. அவற்றுக்கு குறைந்தது பதினைந்து வயதாவது இருக்கும். இதை ஸ்பானிய மொழியில் அரிபாடா என்கிறார்கள்; வந்தடைதல் என்ற அர்த்தத்தில். இது உண்மையிலேயே வந்தடைதல்தான். இந்தக் கடற்கரையில் பிறக்கும் பெண் ஆமைகள் கடலுக்கு சென்று வளர்ந்து பல வருடங்கள் கழித்து இதே கடற்கரைக்கு முட்டையிட வருகின்றன. அந்த முட்டைகளிலிருந்து வரும் குட்டிப் பெண் ஆமைகள் வளர்ந்து மீண்டும் முட்டையிட இங்கேயே வரும். ஒரு தொடர் சுழற்சி. இப்போது இந்த முட்டைகளிலிருந்து வெளிவரும் ஆமைகள் இங்கு திரும்பி வரும்போது நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் மீண்டும் அவற்றை பார்க்கலாம். உலகம் அழிந்துகொண்டிருக்கும் வேகத்தில் பதினைந்து வருடம் என்பது பெரிய காலம் நண்பா.” ஆதித்யா நான் கேட்கவேண்டும் என்பதற்காக இதையெல்லாம் சொன்னதுபோல தோன்றவில்லை. இரவு முழுக்க ஆமைகள் அலைந்துகொண்டே இருந்தன. ஆயிர பெண்களின் சாந்நித்யத்தால் நிறைந்திருந்தது அன்றைய கடற்கரை. உலகெலாம் சூழ்ந்திருக்கிறது கடல்; முடிவே இல்லாத வண்ணங்களோடும் ஆச்சரியங்களோடும். ஆனால் இவற்றுக்கு சிறிய பாலை
மணற்திட்டு தேவைப்படுகிறது. மணல் இவற்றின் மௌனமான ரகசியங்களை சுவீகரிக்கிறது, இதமளிக்கிறது; ரகசியங்களுக்கு குட்டி ஆமைகளென உருவளிக்கிறது.

விடியத் தொடங்கியதிலிருந்து கடல் வசீகரத்தை இழந்து வெறும் நீரென மாறிக்கொண்டிருந்தது. ஆமைகள் நீங்கிய கரை அவற்றின் தடங்களால் மட்டும் நிறைந்திருந்தது. அதுவரை மணலில் இருந்த ஈற்றறையின் வாசம் கூட அப்போது இல்லை. வெயில் படாமல் முட்டைகள் மண்ணுக்கடியில் தூங்கிக்கொண்டிருந்தன. இமைகள் தன்னிச்சையாக மூடிக்கொள்ள நேர்ந்தபோது நான் ஆதித்யாவிடம் கேட்டேன், “ஆதி, முட்டைகளிலிருந்து வெளிவரும் ஆண் ஆமைகள் திரும்பி வருவதே இல்லையா?” அவன் சோர்வாக சிரித்துவிட்டு பைக்கை நோக்கிச் சென்றான்.

ஆதித்யா அந்த குட்டை சிகை பெண்ணை பற்றி பேசிக் கொண்டு இருந்திருக்க வேண்டும். நான் பதிலளிக்காதலால் “சார், இவ்வளவு ஆழமாக என்ன யோசிக்கிறீர்கள்” என்றான்.

“சென்ற முறை இங்கு வந்ததைப் பற்றி. அந்த ஆமைகளைப் பற்றி. சந்திரா மௌசி பற்றியும் கூட.” என்றேன்.

“இம்முறையும் ஆமைகள் ஆங்காங்கே வரத்துவங்கிவிட்டன. மாத இறுதியில் படையாக வந்துவிடும். மீனவர்களிடம் இரண்டு நாட்களுக்கு முன்பே பேசி உதவி கேட்டாயிற்று. கலெக்டரிடமிருந்தும் அறிவிப்பு வந்துவிட்டது. ஆமைகளுக்காக காத்திருக்க வேண்டும் அவ்வளவுதான். ஆனால் சந்திரா மௌசியை பார்க்கமுடியும் எனத் தோன்றவில்லை.”

“ஏன்?”

“அவர் இருந்த கட்டிடத்தின் நிலை தெரியும்தானே? அதை இன்னும் கொஞ்ச நாட்கள் விட்டிருந்தால் தானாகேவ விழுந்திருக்கும். அதற்கு சரியான உரிமையாளர் என்றும் யாரும் இல்லை. யாரோ ஒரு வெளிநாட்டுக்காரர் அதை வாங்கி இடித்துவிட்டார். நான் மூன்று மாதங்கள் நதி மாசுபடுதலுக்கு எதிரான போராட்டத்திற்காக வங்காளத்தில் தங்கவேண்டி இருந்தது. அப்போதுதான் இது எல்லாம் நடந்திருக்கிறது. மௌசியைத் தேடிப் பார்க்கையில் யாருக்கும் எந்த தகவலும் தெரியவில்லை. நெடுநாட்கள் கழித்து அந்த தெருவழியாக செல்கையில் அந்த ஊமைப் பூனையைப் பார்த்தேன். முகத்தில் கீறல்களுடன் ஒரு முரடனை போல சுற்றிக்கொண்டிருந்தது.”

இருவருமே மேலும் அதை பற்றி பேச விரும்பவில்லை. கண்டுபிடிக்க முடியாத நெரிசலில் மௌசி எங்கோ தொலைந்துவிட்டார். எங்காவது வேறொரு ஒழுகும் கட்டிடத்தில் வாழ்ந்துகொண்டிருப்பார். அங்கும் அவரது தையல் மிஷினையும் ஊறுகாய் ஜாடிகளையும் காகிதக் கொக்குகளையும் வைக்க தனி அறை இருக்கும்தானே? விஜயகுமார் ஜா நுழைந்திடாத அறை? அதில் என்னை போல யாராவது தற்காலிகமாக தங்குவார்களா?

மௌசியையும் ஆலிவ் ரிட்லி ஆமைகளையும் மையச் சரடாக கொண்டு ஒரு புகைப்பட நூலை உருவாக்கும் எண்ணம் தோன்றிய நாளை அவ்வப்போது நினைத்துக்கொள்வேன். சிறிய பயணமாக நான் எண்ணியிருந்த ஒடிசா, இரண்டு மாதமாக நீண்டிருந்தது. அது ஆமைகள் கூட்டில் முட்டையை புதைத்துவிட்டு நீங்கிய டிசம்பர் மாத ஞாயிற்று கிழமையின் விடியல்பொழுது. நானும் ஆதித்யாவும் பதனமாக நடந்துகொண்டிருந்தோம். சர்ச்சிலிருந்து நம்பிக்கை பொதிந்த குரல் கேட்டுக்கொண்டிருந்தது. முதல் முறையாக தமிழிலும் ஆங்கிலத்திலும் அல்லாமல் வேறொரு மொழியில் விவிலியத்தை கேட்பதன் துணுக்குறல்.
“ஆதி, இயேசு மேரியை அம்மா என்று அழைக்கவே இல்லை தெரியுமா?” அவன் பொதுவாக தலையாட்டினான்.
“ஸ்திரீ என்றே அழைக்கிறார். மொழிபெயர்ப்பு பிரச்சனையாக இருக்கலாம். ஆனால் எல்லா மொழியிலும் அம்மா என்பதற்கே உரித்தான தனி வார்த்தையொன்று இருக்கும் தானே?”
அவன் குழப்பத்துடன் மௌனமாகவே இருந்தான். நான் ஸ்திரீ ஸ்திரீ என்று மனதிற்குள் சொல்லிகொண்டே நெடுந்தூரம் நடந்திருந்தேன். ஆதித்யா ஒரு மணல் பொந்தை குனிந்து பார்த்துக்கொண்டிருந்தான். “முட்டைகள் ஏதும் இல்லை. நண்பர்கள் எடுத்து பத்திரப்படுத்தி இருப்பார்கள்.” என்று மணலால் பொந்தை மூடிவிட்டு நகர்கையில் மணலில் லேசாக அசைவு தெரிந்தது. அவன் வேகமாக மணலை விலக்கி பார்க்கையில் ஒரு சிறிய ஆமை குட்டிச் சிறகுகளால் மணலை அலைந்துக்கொண்டிருந்தது. வளர்ந்த ஆலிவ் ரிட்லி ஆமைகளிடம் இருக்கும் பச்சையின் ரேகை படியாத தூயக் கறுப்பு. நான் அதுவரை முட்டைகளை மட்டுமே பார்த்திருந்தேன், அதுவே நான் புராணபந்தத்தில் பார்த்த முதல் குட்டி ஆமை. நான் நினைத்ததுபோல கையில் ஏந்திக்கொண்டதும் அது ஓட்டுக்குள் ஒளிந்துகொள்ளவில்லை. மழைக்கால சருகுகளென பிசிசுபிசுக்கும் சிறகுகளை கைவிரல்களுக்கிடையில் நுழைத்து பற்றிக்கொண்டது. புதிதாக உலகத்திற்கு வரும் எல்லா உயிரிடமும் காரணமின்றி வெளிப்படும் அவசரம் அதனிடமும் இருந்தது. கடலை நோக்கிப் பாய அதன் உடலே துடித்துக்கொண்டிருந்தது. ஆதித்யா அதற்கு ஒரு பெயர் சூட்ட சொன்னான். செல்லப் பிராணிகளுக்கான பெயர் ஏதும் அதற்கு ஏதுவாக இல்லை. ஐம்பது வருடங்கள் வாழும் உயிரை ஜிம்மி என்று அழைப்பது அசூயையாக தோன்றியது. அதன் பாலடையாளமும் தெரியவில்லை. ஆதித்யா மிக உறுதியாக, “அது கண்டிப்பாக ஆணாகத்தான் இருக்கும். கூடு இத்தனை ஆழமாக இருந்திருக்கிறது. வெப்பம்தான் ஆமைகளின் பாலை தீர்மானிக்கிறது. குளிர் முட்டையை ஆணாகவும், வெப்பம் பெண்ணாகவும் மாற்றுகிறது.” என்றான். சந்தேகத்துடன் முழித்துகொண்டிருக்கையில் “தீயிலிருந்தே பாஞ்சாலி பிறக்க முடியும் நண்பா.” என்று கண்ணடித்தான். நான் அதற்கு ஜான் என்று பெயரிட்டேன். நிலத்தில்விட்டதும் சுறுசுறுப்பாக கடலிடம் ஓடியது; எந்த வழிதவறுதலும் இல்லாமல். ஆமை குட்டிகளை கொத்திச்செல்லும் பறவைகள் இன்றி வானம் மிக அமைதியாக இருந்தது. அந்த குட்டி ஜான் கடலின் வெண் நுரையில் ஏறி மிதந்து சென்றான். கடலிடம் ஓடிச் சென்று சொல்ல வேண்டும் போல இருந்தது, “ஸ்திரீயே! அதோ உன் மகன்.”

அன்று மாலை வீட்டிற்கு திரும்புகையில் மௌசி எனது அறையில் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தார்; துர்கா போன்றதொரு ராகம். விஸ்தரிப்பின் மூலம் தனது வாழ்வின் ஒவ்வொரு பருவங்களையும் கட்டவிழ்த்துக்கொண்டே பின்னோக்கிச் சென்றார். அவரது நினைவுகளின், ரகசியங்களின் ரேகை பதிந்த இசை அவ்வறையை சுற்றிக்கொண்டிருந்தது. மிகச்சிக்கலான கமகங்களுடன் தொடங்கி ஒரு கட்டத்தில் நிசப்தம் என்றே மாறியிருந்தது. அவர் வாசித்து முடிக்கும் வரை காத்திருந்த பூனை எல்லாவற்றையும் புரிந்துகொண்ட பாவனையில் மடியில் ஏறி சுருண்டுகொண்டது. ஜன்னல் இடுக்குகளில் நொய்மையான அந்தி ஒளி நுழைய மௌசி நெடுநேரம் அப்படியே அமர்ந்திருந்தார். அதுதான் நான் மௌசியை எடுத்த கடைசி புகைப்படம். இசைக்கு பின்பான மாயாதீத மௌனம் அதில் உறைவதாக நான் இன்றுவரை நம்பிக்கொண்டிருக்கிறேன்.

அன்று இரவு ஜுரத்தில் உடல் காய்ந்துக்கொண்டிருந்தது. இடி சத்தத்திற்கும் ஜன்னல் பட படப்பிற்கும் மத்தியிலான அரைத் தூக்கம். மௌசி, விஜயகுமார், ஆதித்யா, ஆலிவ் ரிட்லி ஆமைகள், கடல், இடி, பூனை, புல்லாங்குழல், தையல் மிஷின், மணல், முட்டை, மௌசி, ஆமை என்று சுழன்றுகொண்டே இருந்தேன். மழைத் துமிகள் முகத்தில் படிய விழிக்கும்போது வெண்ணலைகளில் குட்டி சிறகுகளை உந்தி கரைநோக்கி வரும் ஆமை மட்டும் நினைவில் இருந்தது. காரணமேயின்றி அது ஜான் என்று நம்பினேன். இன்றும் என் மடிக்கணினியில் உறங்கிக்கொண்டிருக்கும் புகைப்பட நூலுக்கு அப்போதுதான் பெயர் தோன்றியது, “Woman, behold your son!”

ஆதித்யா தலையை திருப்பி பார்த்துக்கொண்டே வந்தபோதுதான் பைக் கடற்கரை சாலையில் சென்றுகொண்டிருப்பதை கவனித்தேன். அவன், இருளில் நீர் வசீகரமடைகிறது என்பான். அதற்கு மேல் அவனால் சொல்ல முடிந்ததில்லை. ஒரு ஆமை மணலை தோண்டிக்கொண்டிருப்பது சாலையிலிருந்தே தெரிந்தது. மங்கிய மின்விளக்கினாலும் தெருவோர ஜிலேபி பானிபூரி கடைகளாலும் அவ்விடம் ஒளியூட்டப்பட்டிருந்தது. அதை ஆதித்யாதான் முதலில் கவனித்து வண்டியை நிறுத்தினான். புழுதிபடிந்து தார்ச்சாலையில் கிடந்த அதை என்னால் அடையாளம் காண முடியவில்லை. ஆதித்யா “ஒரு காகிதம் எடுத்துவா.” என்று சொன்னபோதுதான் அது துலங்கிவந்தது; ஓடு நொறுங்கி இறந்திருந்த ஆமை. அந்த ஆமையை சாலையிலிருந்து பிரித்தெடுப்பதே கடினமாக இருந்தது. இரண்டு சிறகுகள் தனியாக துண்டாகி இருந்தன. நான் கொண்டுவந்த செய்தித்தாளில் அதை பொதிந்து எடுத்துக்கொண்டோம். கடற்கரை நோக்கி செல்கையில் ஆதித்யா, “மிகவும் இளையது. இரண்டு வயதாக இருக்கலாம். சிறிய ஆமையை ஓட்டுடன் நசுக்க ஒரு ஸ்விப்ட் கார் போதும். ஆனால் இந்த ஆமை இங்கு ஏன் வந்தது என்று புரியவில்லை. ஆலிவ் ரிட்லி முட்டையிட பதினைந்து வயதாவது ஆகும். கரையிலிருந்து இத்தனை தூரம் தத்தித் தத்தி வந்திருக்கும்.” என்றான். அவன் குழி தோண்டிக்கொண்டே, “நீ பார்க்கும் முதல் ஆமையின் இறப்பு அல்லவா? என்று கேட்டான். காகிதத்திலிருந்து அந்த ஆமையை எடுத்து சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தவன் “ஆண்” என்றான்.

“வாய்ப்பே இல்லை.”

“ஆமாம். ஆனால் உண்மை அதுதான். ஒரு ஆண் ஆலிவ் ரிட்லி.” என்று ஒவ்வொரு வார்த்தையாக அழுத்தி நிதானமாகச் சொன்னான்.

முகத்தில் நீரை ஊற்றிக்கொண்டு மின்விளக்குக்கு கீழ் அமர்ந்துவிட்டேன். கால்கள் நடுங்கிக்கொண்டே இருந்தன. ஆதித்யா குழியை மூடிவிட்டு கைகளை கழுவ கடலை நோக்கிச் சென்றான். செய்தித்தாள் மாமிச நெடியுடன் கையில் படபடத்துக்கொண்டே இருந்தது. துண்டு துண்டுகளாக கிழித்து தூக்கியெறிய பிரிக்கும்போது, அதில் ஒரு மூலையில் வெள்ளையும் கருப்புமாய் சந்திரா மௌசியின் புகைப்படம் இருந்தது; புரியாத ஒரியா சொற்களுடன். ஆதித்யாவை நோக்கி ஓடும் பாதி வழியிலேயே கண்ணீர் கன்னத்தில் வழிந்து சொட்டத்துவங்கியது. ஏதோ ஒரு குழியில் கால் இடறி முகம் அறைபட மணலில் விழுந்தேன். மிக அருகில் ஒரு ஆமையின் முகம் தெரிந்தது.

௦௦௦

(நன்றி: வினோத் பாலுச்சாமியின் ‘யாத்ரீகனின் பாதை’ என்ற ஒளிப்பட பயண நூலிலிருந்து தூண்டுதல் பெற்றக் கதை. மேரியையும் அம்மாவையும் ஆழப் பதியச் செய்த வயலட்டின் ‘இதோ நம் தாய்’ நாவல்)

சியாம்

சியாம். சென்னையில் தனியார் நிறுவனத்தில் இயந்திர வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். இலக்கியத்துடன் கர்நாடக இசையிலும் ஆர்வம் உள்ளவர்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

கடந்தவை

Go toTop

Don't Miss