
தார்கோவ்ஸ்கியின் ‘Sacrifice’ திரைப்படத்தில் அதன் நாயகன் அலெக்ஸாண்டர் ஓர் ஓவியப் புத்தகத்தை பார்த்துக்கொண்டிருப்பார். ரஸ்யாவின் கிறிஸ்துவ ஓவியங்கள் நிறைந்த பக்கங்களை திருப்பும்போது அத்தனை ஏக்கத்துடன் அவற்றை வருடிக்கொண்டே “பிரார்த்தனையை போல இருக்கின்றன. நாம் இவற்றை எல்லாம் இழந்துவிட்டோம். நம்மால் இப்போது பிரார்திக்கக்கூட முடிவதில்லை.” என்பார். கலை வரலாற்றின் இருண்டகாலம் என்றழைகைப்படும் மத்தியக் காலத்து பாணியை சேர்ந்த ஓவியங்கள் அவை. அக்காலகட்டத்துக்கு பிறகுதான் ஓவியக்கலையின் சாதனைகள் என்று குறிப்பிடப்படுபவை அனைத்தும் நிகழ்கின்றன. ஆனால், இன்றுகூட ஒருவரால் அந்த ஓவியங்களை மீண்டும் கண்டடைய முடிகிறது. அவற்றுடன் ஒத்திசைய முடிகிறது. அம்மாதிரியான ஒரு புரிதல் சாத்தியமாவதற்கு ஒருவருக்குள் சேகரமாகியிருக்கும் முன்முடிவுகளையும் நிலைப்பாடுகளையும் கடந்து கண்கள் காண வேண்டியிருக்கிறது. ஒருவகையில் மூளையை மட்டுப்படுத்தி கண்கள் கூர்மையுடன் செயல்படும்போதே அது நிகழ்கிறது. பரிணாமவளர்ச்சியில்கூட உயிர்கள் மூளைக்கு முன்பாக கண்களையே அடைந்தன. தான் ஏற்கனவே உருவாக்கியிருக்கும் வகைமாதிரிகளுடன் புதிதாக உள்நுழைபவற்றை ஒப்பிட்டு பொருத்திக்கொள்ளும் மூளையை நித்தம் சிமிட்டிகொண்டே இருக்கும் கண்கள் முந்திக்கொள்ளுதல் அவசியமாகிறது. ‘The Story of Art’ நூலில் கோம்பிரிட்ச்(E.H. Gombrich) செய்வது அதைத்தான், “நீங்கள் உங்கள் கண்களை திறப்பதற்கு நான் உதவிபுரிய விரும்புகிறேன்; நாவுகளை அவிழ்ப்பதற்கு அல்ல. கலையைப் பற்றி புத்திசாலித்தனமாக பேசுவது அத்தனை கடினமல்ல. ஏனெனில் விமர்சகர்கள் பிரயோகிக்கும் கலைச்சொற்கள் பல சூழல்களில் பயன்படுத்தப்பட்டு அவற்றின் துல்லியத்தை இழந்துவிட்டன. ஆனால் ஒரு ஓவியத்தைப் புதிய கண்களுடன் காண்பதும் அதை கண்டுணர முயல்வதும் கடினமான செயல். அதேநேரத்தில் அதிக பலன் தரக்கூடிய செயலும்கூட.” கலையை அணுகும்போது அறிந்தவற்றுக்கும் காண்பவற்றுக்கும் இடையிலாக நாம் ஊசலாடுவதை கோம்பிரிட்ச் பல இடங்களில் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் முன்தீர்மானங்களின் ரேகை பதியாத தூய பார்வை இன்று சாத்தியமா? நட்சத்திரங்களுக்கு மேலும் கீழும் உள்ள எல்லாவற்றையும் பற்றிய அறிமுகம் கிட்டத்தட்ட வலிந்து திணிக்கப்படும் காலகட்டத்தில் அறிந்தவற்றிலிருந்து காண்பவற்றுக்கு எவ்வாறு நகர்வது? உபரிகளுக்கு மத்தியில் நுண்ணுர்வை மங்காமல் காப்பற்ற இயலுமா?
அறிந்தவற்றிலிருந்து ஒட்டுமொத்தமாக விடுபட முயல்வதைவிட மீண்டும் அடிப்படையை உற்றுநோக்கி அறியமுயல்வது பலன் அளிக்கும் என்று தோன்றுகிறது. கோம்பிரிட்ச் உத்தேசிப்பதும் அதுவாகவே இருக்கலாம். தத்துவத்தையும் கலைக் கோட்பாடுகளையும் கைக்கொள்ளாமல் அவர் கலையை அதன் அடிப்படை கூறாகிய படிமத்தின் ஊடாகவே அணுகுகிறார். படிமம் என்பது ஒரு காலகட்டத்தில் ஒரு சமூகம் கூட்டாக இணைந்து பகிர்ந்துகொள்ளக்கூடிய நம்பிக்கை. நாம் உருவாக்கிய மொழி இன்று நமது சிந்தனையையும் உணர்வுகளையும் கட்டுப்படுத்துவதுபோல, நம்மால் உருவாக்கப்பட்ட படிமங்களும் நமது அக அடுக்குகளை கட்டமைக்கின்றன. ஒரு படிமத்தை வாசிப்பதென்பது ஒரே நேரத்தில் அதை உருவாக்கிய காலகட்டத்தையும் அதனால் வடிவமைக்கப்பட்ட சமூகத்தையும் வாசிப்பதாகிறது. முதல் அத்தியாயத்திலேயே படிமங்களை வாசிப்பதன் மூலம் இந்நூல் எழுப்பும் சுவாரஸ்யமான ஒரு கேள்வி, ‘படிம உருவாக்கத்திற்கும் மனித இருப்புக்குமான தொடர்பு என்ன?’
உலகம் குழந்தையாக இருந்தபொழுது வரையப்பட்ட குகை ஓவியங்களைப் பற்றிய ‘Strange beginnings’ என்ற முதல் அத்தியாயத்திலிருந்து நூல் தொடங்குகிறது. இன்று கலையின் பயன்பாடும் பயன்பாடின்மையும் குழப்பமான பிராந்தியத்திற்குள் திகழ்கிறது, ஆதியில் கலை ஓர் அளவுக்கு நிச்சயிக்கப்பட்ட பயன்பாட்டுடனேயே இயங்கி இருக்கிறது. தொடக்க காலத்தில் படிமங்கள் பெரும்பாலும் மந்திர சடங்குகளுடன் தொடர்புகொண்டிருந்ததால் அதன் மாயத்தன்மை படிமங்களுக்கான இருப்பை உருவாக்குகிறது. குகைகளில் வரையப்படும் ஒரு காளையின் படிமம் தனித்த இருப்பு கொண்டதாகிறது. இன்னும் சரியாக சொல்லவேண்டுமெனில் புல்வெளியில் மேயும் காளைக்கும் குகைக்குள் கரியால் வரையப்படும் காளைக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை. மரத்தில் செதுக்கப்பட்ட யானை முகமூடியால் ஒருவருக்கு யானையின் இருப்பை அளித்துவிட முடிகிறது; படிமத்தால் ஒரு மனிதனின் இருப்பை வேறொன்றாக மாற்றமுடிகிறது. அவை படிமங்கள் மட்டுமின்றி மானுடத்தின் முதல் கனவுகளும் கூட. ஒரு கையிலிருந்து மற்றொரு கைக்கு மாறும் சிலும்பு மிதக்கவிடும் போதை என பகிரப்படும் படிமம் மனித இருப்பை கனவால் நிரைக்கிறது. அக்கனவுகளின் அந்நம்பிக்கைகளின் ஊடாகவே மனிதன் தனது இருப்பின் சாரத்தை உருவாக்க முயன்றிருக்கிறான். முதன்முதலில் தோன்றிய கனவுகள் சொற்களால் அல்லாமல் படிமங்களால் வெளிப்பட்டிருக்கின்றன. அப்போது சொல் அல்ல, ஆதியில் படிமம் இருந்திருக்கிறது.
அன்று தோன்றிய படிமங்கள் அர்த்தத்தை உருவாக்கும் ஒரு முயற்சியும்கூட. அது, தான் ஏற்கனவே ஒரு பகுதியாக இருக்கும் உலகத்தின் புலப்படாத விதிகளை விளங்கிக்கொள்ளும் மனிதனின் எத்தனிப்பு. முடிவிலாத ஆச்சரியங்களுக்கு மத்தியில் தவித்துக்கொண்டிருக்கும் தன்னுடைய இருப்பை பற்றிய முதல் கேள்வி.
10,500 வருடங்களுக்கு முன்பான குகை ஓவியம் இருப்பை பற்றிய முதல் கேள்வியை பிரதிபலிக்கிறது. கைகளை பாறைகளில் பதித்து, எலும்புக் குழாயை பயன்படுத்தி கையைச் சுற்றி ஊதி இருக்கிறோம். சுற்றியிருக்கும் நிறமும் கையின் நிறமின்மையுமே கையாகிறது. நாம் அல்லாதவற்றை புரிந்துகொள்வதன் வழியாகத்தான் நமது இருப்பை புரிந்துகொள்ள முடியுமென்று நினைத்தோமா? காண்பவற்றைக் கொண்டுதான் நம்மை அறிய முயன்றிருக்கிறோமா?
பன்னாட்டு நிறுவனத்தின் நூறு கிளைகளுள் ஒரு கிளையின் இரண்டாயிர ஊழியர்களுள் ஒருவனாக, முன்னணி உற்பத்தி நிறுவனங்களின் கோடி நுகர்வோர்களுள் ஒருவனாக, பங்குச் சந்தையின் எண்ணற்ற முதலீட்டாளர்களுள் ஒருவனாக இருக்கும் எனது காலி இருப்பால் அன்று தோன்றிய இருப்பைப் பற்றிய கேள்வியை புரிந்துகொள்வது அத்தனை கடினம் அல்ல. ஆதியில் செய்தது போல இன்று கனவுகளால் இருப்பின் சாரத்தை உருவாக்க முடியுமா? சிறுவயதில் தோழனாக இருந்த மரப்பாச்சியை ‘பொம்மை’ என்று மட்டும் பாவிப்பது எனது முதிர்ச்சியின் ஒரு பகுதியாகி இருக்கிறது. முதிர்ச்சி என்பது ஒருவகையில் தீராத ஆர்வத்துடன் அர்த்தத்தை தேடும் கண்கள், பெரும் சலிப்புக்கு மத்தியில் அர்த்தத்திற்கு தவிக்கும் கண்களாக உருமாறுவதா? கனவு காண மறுக்கும் சமத்காரமும் படிமத்தின் தனித்த இருப்பை ஏற்றுக்கொள்ளாத எச்சரிக்கையுணர்வும் நாகரீக வளர்ச்சியின் உள்ளார்ந்த அம்சங்களா?
நாகரீகத்தின் முதல் சுவடுகள் என்று கருதப்படும் எகிப்து தேசத்தின் கலையை பற்றியது ‘Art for eternity’ என்ற அத்தியாயம். வேட்டையாடிகளாக இருந்த காலகட்டத்திலிருந்து பேரரசின் காலகட்டத்திற்குள் நுழைகையில் நமது நம்பிக்கைகளும் புரிதல்களும் திடப்பட்டு பெருமதங்களை நோக்கி நாம் நகர்கிறோம். அதேசமயத்தில் கலையின் நோக்கம் மேலும் உறுதியானதாகிறது. எகிப்திய கலையின் மையமாக இருப்பது மறுமை. இறந்த பிரேதத்தை பாதுகாப்பது மட்டுமே ஒரு ஆன்மாவை காலாதீதமாக வாழச்செய்வதில்லை என்ற நம்பிக்கை படிமத்தை உருவாக்க செய்கிறது. இகவாழ்வில் மரித்த அரசரை, அவரது சிலை மறுவாழ்வில் உயிர்ப்பிக்கிறது. எகிப்திய மொழியில் சிற்பிக்கான ஒரு சொல்லின் அர்த்தம் ‘உயிருடன் வைத்திருப்பவன்’. அதே நேரத்தில் ஓர் அரசரை இறந்தபின்பும் உயிருடன் வைத்திருக்கப்போகும் படிமம் ‘இலட்சியப் படிமமாக’ இருப்பதும் அவசியமாகிறது.

3200 வருடங்களுக்கு முன்பான எகிப்திய ஓவியத்தில் அதற்கான ‘பாணி’ உருவாகியிருப்பதை கண்டுகொள்ளலாம். மார்பு நேராக, கால்களும் கைகளும் முகமும் பக்கவாட்டில் தெரியும் எகிப்தியர்கள் அவர்களது இலட்சிய படிமத்திலிருந்து முளைத்தவர்கள். இனி உடலின் ஒவ்வொரு உறுப்பும் எந்த கோணத்திலிருந்து வரையப்பட்டால் அவற்றின் ‘முழுமை’ புலப்படுமோ அந்த கோணத்தில்தான் வரையப்பட வேண்டும்; ஆண்களைவிட பெண்கள் குள்ளமாகவும் வெளுப்பாகவுமே இருக்க முடியும். அவர்களது அசைவுகளில் கூடியுள்ள திண்மை, அவர்கள் முடிவிலி வரை வாழ்பவர்கள் என்ற நம்பிக்கையிலிருந்து எழுந்து வருவது. மேலும், குகைகளில் கரி கையில் கிடைக்கும் எவரிடமிருந்தும் படிமம் உருவானபோது எகிப்தில் ஒரு படிமம் எங்கு எப்படி உருவாக்கப்பட வேண்டும் போன்ற விதிமுறைகள் தோன்றுகின்றன. ஒரு பேரரசு உருவாகும் சமயத்தில்தான் வரையறைகள் நெறிப்படுத்தப்பட்டு கலை செவ்வியல் கலையை நோக்கி செல்கிறது. குகைகளில் நாம் உருவாக்கிய கனவுகளுக்கு இப்போது கடிவாளங்கள் பூட்டப்படுகின்றன. ஒருமித்த கனவுகொண்ட மக்கள் ஒன்றாக திரள்வது அல்லது அனைவரையும் ஒரே கனவை காணச்செய்வது என்ற இரண்டு வழிகளில் ஒரு பேரரசு எதை தேர்ந்தெடுக்கிறது?
இலட்சிய படிமம் என்ற வரையறைக்கு அறிதலே அடிப்படையாக இருக்கிறது. படிமத்தில் வரும் கைகளுக்கு பின்னால் இலட்சிய கைகள் என்ற கருத்தாக்கமும், அக்கருத்தாக்கம் ஒரு சமூகத்திடம் அறிதலாக கடத்தப்படுவதும் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது. முன்பு தனித்த இருப்பும் உயிரும் கொண்டிருந்த படிமம் நமது இருப்புக்கான பதிலீடு என்று மட்டும் ஆகிறது. குகைகளில் பிழைத்திருக்கையில் நமது இருப்பை பற்றிய கேள்வியும் பதைப்பும் அரசுகளின் குடைக்கு கீழ் வாழ்கையில் சற்று தணிந்திருக்கின்றனவா? நம்மைப் பற்றி நாம் அறிவோம் என்ற நம்பிக்கை துளிர்விட துவங்குகிறதா? இதே சமயத்தில்தான் நாம் எழுத்துருக்களை கண்டடைகிறோம். எகிப்திய எழுத்துக்கள் என்பவை ஒருவகையில் படிமங்களே. ஒவ்வொருவரின் மனதிலும் ஒவ்வொரு கனவை எழுப்பிய படிமம், எழுத்துரு ஆகும்போது தரப்படுத்தப்படுகிறது. பழங்கதவின் கைப்பிடியென மொழி இத்தனை ஆயிரமாண்டுகள் நம் பழக்கத்தால் தேய்ந்திருக்கிறது. நாம் மொழியை கண்டடைந்ததிலிருந்து இன்றுவரை மொழியில் படிமத்தை உருவாக்கிக்கொண்டே இருக்கிறோம். படிமத்தைவிட மொழி உறுதியானது அல்லவா? இருப்பினும் நாம் ஏன் மொழியின் உறுதியில் படிமத்தின் புகைத்தன்மையை சேர்க்க விழைகிறோம்?
மேற்கத்திய கலையில் அறிந்தவற்றுக்கும் காண்பவற்றுக்கும் ஆன ஊசலாட்டம் தொடர்ந்து நிகழ்வதை கவனிக்கமுடிகிறது. எகிப்திய கலையிலிருந்தும் அஸிரிய கலையிலிருந்தும் ஊக்கமடையும் கிரேக்க கலை அவற்றிலிருந்து வடிவரீதியாக மாற்றமடைகிறது. கோம்பிரிட்ச், ‘எகிப்தியர்கள் தங்களது அறிவின் அடிப்படையில் கலையை உருவாக்கினார்கள். கிரேக்கர்கள் தங்கள் கண்களை பிரயோகிக்க தொடங்கினார்கள்.’ என்கிறார்.

Discobolus என்னும் கிரேக்க சிற்பம் எகிப்திய பாணியிலிருந்து நெடுந்தூரம் விலகிவந்துவிட்டதாக தெரிந்தாலும் கூட, இச்சிற்பத்திலும் ஒவ்வொரு அங்கமும் எந்த கோணத்திலிருந்து பார்த்தால் அதன் முழுமை வெளிப்படுமோ அந்த கோணத்திலேயே செதுக்கப்பட்டுள்ளது. மார்பு நேராக, கைகளும் கால்களும் பக்கவாட்டில் தெரிவதற்காகவே இந்தக் குறிப்பிட்ட வடிவம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. அறிந்தவற்றை முழுதும் கைவிடமுடியாமல் அதே சமயத்தில் கண்களை விழித்துப்பார்க்கும் தருணங்களை நாம் எப்போதும் சந்தித்துக் கொண்டுதானே இருக்கிறோம். அறிந்தவற்றை சதா சந்தேகித்தப்படியே காண்பவற்றை அறிதலாக்க துடிக்கும் அந்த ஆதாரப் பதற்றம்தான் நம்மை முன் நகர்த்திக்கொண்டு இருக்கிறதா? கிரேக்க கலை அதற்கான இலட்சிய வரையறைகளை கொண்டிருந்தாலும் அது கண்களை நம்பத் துணிகிறது. கண்கள் ஓரளவேனும் உண்மையைச் சொல்வதாக ஏற்றுக்கொள்கிறது. கிரேக்க கலை, அரசர் ஒரு இலட்சிய மனிதர் என்பதை அறிந்திருப்பினும் அவர் இடதுபுறம் திரும்பி நிற்கையில் வலது கையை புலப்படுத்தாத கண்களை பின்தொடர்கிறது. ஆனால் அதே நேரத்தில் அது ஒரு ‘அரசரின்’ படிமத்தைதான் உருவாக்குகிறதே தவிர அரசராக இருக்கும் தனிநபரின் படிமத்தை அல்ல. அரசரின் கோணலான மூக்கு அவரது படிமத்தில் சீராக்கப்பட வேண்டும். கிரேக்க கலை இயற்கையை நகலெடுக்க முயல்வதுபோல் தோன்றினாலும், இயற்கை குறைபாடுடையது எனும் போதம் அதன் உள்ளே உறைகிறது. இயற்கையில் நம்மால் காணமுடியாத சீர்மையையும்(Symmetry) ஒத்திசைவையும்(Harmony) கலைஞர்கள் உருவாக்குகிறார்கள். இயற்கையை நகலெடுப்பது அல்ல, இயற்கையை வெல்வதே கிரேக்க கலையின் அடிநாதமாக இருந்திருக்கிறது. காண்பவற்றை நாம் உண்மை என்று ஏற்றுக்கொண்ட பிறகும் அறிதலால் அவற்றை மாற்றியமைத்துக்கொண்டே இருக்கிறோம். அப்போது உண்மைக்கும் மேலான ஒன்று நமக்குத் தேவைப்படுகிறதா? அதைதான் அழகு என்கிறோமா? காண்பவற்றுக்கும் அறிந்தவற்றுக்குமான போராட்டம் ஒருவகையில் உண்மைக்கும் அழகுக்குமான இடைவெளியால் நடப்பதா? அப்போது கலைக்கு உண்மை மட்டும் போதுமானதில்லை எனில் கலையால் உண்மையை அடைந்திட முடியுமா?
காண்பவற்றை அறிதலாக்கிய ஒரு காலகட்டத்தின் அறிதலை, தனது கண்களால் கேள்விகேட்கும் அடுத்த காலகட்டங்களின் சங்கிலித் தொடராக மேலை கலையின் வரலாற்றை வாசிப்பது சுவாரஸ்யமானது. கிரேக்க கலையிலிருந்து உத்வேகம் அடையும் மறுமலர்ச்சி காலகட்டக் கலை தான் காணும் புறஉலகத்தை தத்ரூபமாக மீட்டுருவாக்கம் செய்ய எத்தனிக்கிறது. கலைஞர்கள் ஓவியத்தை இயற்கையின் மீதான ஜன்னலாக கருதுகின்றனர். காண்பவற்றை வரைவதற்கு sfumato, chiaroscuro, cangiante என்ற தொழில்நுட்பங்கள் தோன்றுகின்றன. உண்மையிலேயே ஓவியத்தை ஒரு ஜன்னலாக மாற்றிய பார்வைக்கோணம்(Perspective) கண்டுபிடிக்கப்படுகிறது. ஒத்திசைவு சீர்மை பற்றிய புதிய கண்டடைதல்கள் தோன்றுகின்றன. இவற்றை கொண்டு மறுமலர்ச்சிகாலம் புதிய அழகை கட்டமைக்கிறது. அது, நாம் காணும் புறவுலகை ஒத்திருக்கும் கலையே அழகு என்கிறது. அந்த அழகை உருவாக்குவதற்குதான் இத்தனை அறிதல்கள் அவசியமாகின்றன. என்றோ வாழ்ந்த கிறிஸ்துவின் படிமம் ஏன் புறவுலகை ஒத்திருப்பதாக இருக்கவேண்டும்? அப்போது நமது கண்களால் காண்பவற்றை மட்டுமே உண்மை என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை அடைந்துவிட்டோமா? ஆனால் காரவாஜியோ புனிதர்களின் பாதங்களை புழுதியுடன் வரைந்தபோது நம்மால் அதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
கலை, இயற்கை மீதான ஜன்னல் என்று பறைசாற்றும்போது கூட இலட்சியங்களின் தணிக்கை நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. மறுமலர்ச்சி காலத்தின் முதற் கட்டத்தில் காண்பவற்றை வரையவேண்டும் எனும் எரியும் விழைவு படிப்படியாக அறிதலாக குளிரத் துவங்குகையில் காரவாஜியோவின் கண்கள் புழுதியின் வழியாக கேள்வி கேட்கிறது. ஒரே நேரத்தில் கலை இயற்கையை ஒத்ததாகவும் இலட்சிய கருத்தாக்கத்தின் வெளிப்பாடாகவும் இருக்கவேண்டும் என்ற இரட்டை மனநிலையை புரிந்துகொள்வது இன்றுகூட கடினமாகத்தான் உள்ளது.
நமது இருப்பை பற்றித்தான் ஆதியிலிருந்தே படிமங்கள் பேசிக்கொண்டிருக்கின்றன. நமது தலைக்கு மேல் வானம் இருக்கையில் துரிதமான தீற்றல்கள் படிமமாகின. நமது தலைக்கு மேல் கூரையும் மாடமும் மேற் தளங்களும் வருகையில் நமது இருப்பை பலவற்றுடன் இணைத்து சிக்கலாக்கிகொள்கிறோம். அச்சிக்கலான இருப்பை பற்றி பேசுகையில்தான் இத்தனை சிக்கலான தொழில்நுட்பங்கள் அவசியமாகின்றனவா? மறுமலர்ச்சி காலகட்டத்தின் அடிப்படையை அமைத்த ’பார்வைக்கோணம்’ ஒரு பார்வையாளரை ஒரு இடத்தில் திடமாக பொருத்துகிறது. அவர் ஒரு ஓவியத்தை காண்பதற்கான தீர்மானமான இடத்தை அளிக்கிறது. அதன் வடிவமைப்பு(composition) கண்களுக்கு வழிகாட்டியபடி ஓவியத்தை வாசிக்கச்செய்கிறது. நம்மை ஒரு உறுதியான இடத்தில் பொருத்திக்கொள்ளத்தான் இத்தனைச் சிக்கலான அறிதல் தேவைப்படுகிறதா?
நவீன காலகட்டத்தை சேர்ந்த மதீஸ் உடைய ஓவியம் அதற்கு முன்பு இருந்த அறிதல்களை கைவிடுகிறது. கேன்வாஸில் முப்பரிமாணத்தை கொண்டுவருவதற்கு ஓவியர்கள் செய்த எல்லா பிரயத்தனங்களையும் ஓவியத்திற்கு தொடர்பற்ற இலக்குகள் என்று ஒதுக்கிவைக்கிறது. அது கேன்வாஸ் தட்டையானது என்று ஏற்றுக்கொள்கிறது. நாம் நமது இருப்பையும் அவ்வாறுதான் கண்டுகொள்கிறோமா? அத்தனை காலம் நாம் மேற்கொண்ட பல தேடல்களும் கனவுகண்ட இலக்குகளும் நமது இருப்புக்கு தொடர்பற்றவை என்று உணர்ந்தோமா? மதீஸ்ஸின் மனிதர்கள் அவ்வுணர்வுடன்தான் சுழல்கிறார்கள்; காலமும் இடமும் அற்ற வெளியில். மதீஸ் நவீன ஓவியத்தை குகை ஓவியத்திற்கு அருகில் எடுத்துச் செல்கிறார். ஒருவகையில் நவீன காலகட்டத்தில் நமது இருப்பையும் அங்கு எடுத்துச் செல்கிறோமா? குகை மனிதனாக நின்று மீண்டும் இருப்பை பற்றிய நமது முதல் கேள்வியை கேட்கிறோமா? அதுவரை நமது தலைக்கு மேல் இருந்த மதம், மீபொருண்மை போன்ற விதானங்கள் நவீன காலகட்டத்தில் இடிந்து விழுந்தன. அருமருந்தென கருதப்பட்ட அறிவியல் மீதான நம்பிக்கைகூட உலக யுத்தங்களால் இற்றுப்போனது. ‘நான் மனிதன்’ என்ற மறுமலர்ச்சி காலகட்டத்து அகங்காரமும் பேரியற்கையை கண்டு வியக்கும் கற்பனாவாத உன்னதமும் சென்ற நூற்றாண்டில் நமது கைவசம் இல்லை. எதனுடனும் நமது இருப்பை முடிச்சிட இயலாதபோதுதான் நாம் கலையிலும் சிக்கலான அறிதல்களை கைவிடுகிறோம். நவீனக் கலையை ஒருவிதத்தில் கேள்விகள் மட்டுமாகவே வாசித்துவிட முடியும்; முந்தைய அறிதல்களை நோக்கி கண்கள் கேட்கும் கேள்விகளாக. ஒவ்வொரு இஸங்களும் அவற்றின் ஆழத்துள் கேள்விகளையே விதையென வைத்திருக்கின்றன. இவ்வோவியத்தில் மதீஸ் பழங்குடிகளின் படிமங்களுக்கு திரும்புகையில் ஒரு மணற் கடிகையென நமது இருப்பையும் திருப்பிவைக்கிறார். மானுட வாழ்வென்பது மணற் கடிகையை கவிழ்ப்பது மட்டும்தானா? இன்மையை உணர்ந்து எழும் தவிப்பு, மண்துகள்கள் கொட்ட கொட்ட மெல்ல ஆசுவாசமாகிறது. காலப்போக்கில் அதீத எடை கழுத்தை உடைக்கையில் கடிகையை மீண்டும் கவிழ்த்து இன்மையின் தவிப்பை அரவணைக்கிறோம். ஆசுவாசத்திற்கும் அழுத்தத்திற்கும் இடையிலான ஊடாட்டமாக மானுட வரலாற்றை வாசிக்க இயலுமா?
நவீன கலை முந்தைய தொழில்நுட்பங்களையும் அறிதல்களையும் கைவிடும்போது வேறொன்றையும் ஒத்துக்கொள்கிறது. காண்பதும் அறிவதும் அத்தனை வேறுபாடுகள் கொண்ட வெவ்வேறான செயல்கள் அல்ல. அது, காண்பதை அறிதலாக்கும் முயற்சியையும் அறிதலை காட்சியாக்கும் செயலையும் கடந்து செல்கிறது. காட்சியாலும் அறிதலாலும் இருப்பை வெளிப்படுத்தவோ புரிந்துகொள்ளவோ இயலாது என்ற புள்ளியை எட்டுகிறது. படிமங்களை கைவிட்டு அருவ ஓவியங்களை உருவாக்கிய பால் க்ளீ, கண்டின்ஸ்கி, ஜாக்சன் பொலாக், ராத்கோ போன்ற கலைஞர்களின் காலகட்டம் ஓவியக்கலையின் இறுதி காலமாகவும் இருக்கிறது. படிமங்கள் இருப்பை வெளிப்படுத்தக் கூடியவை என்ற நம்பிக்கையை நாம் இழந்துவிட்டோமா? அல்லது இருப்பை பற்றிய கேள்வியை சௌகர்யமாக மறக்க முயல்கிறோமா?
இருப்பை பற்றிய விசாரம் இன்று எந்த அளவிற்கு சாத்தியமாகிறது? அடியும் முடியும் அறியமுடியாத அலுவலக பணியின் ஒரு மீச்சிறு பகுதியை எந்த விளக்கங்களும் கோராமல்(அது யாருக்கும் முழுதாக தெரியாது என்பதனால்) பத்துமணிநேரம் செய்துவிட்டு மின்தூக்கியில் இறங்குகையில் அதில் பீத்தோவனின் Fur Elise ஒலிக்கிறது. இப்போது Fur Elise கேட்கும்போது அது எனக்குள் மூச்சுத் திணறடிக்கும் மின்தூக்கியினுடைய அலுவலகத்தினுடைய நினைவுத் தழும்பாகவே பதிந்திருப்பதை உணர்கிறேன். உபரியால் நிரப்பப்பட்ட நமது வாழ்வில் இணைய இணைப்பு வேலைசெய்யாத மின்தூக்கியில்தான் கண நேர இன்மை சூழ்கிறது. நமது ஒட்டுமொத்த வாழ்விலும் பீத்தோவனின் இடம் அந்த மின்தூக்கியாக மட்டுமே இருக்கிறது. நமது இன்மையை நாம் உணர்ந்துகொள்ளா வண்ணம் இன்றைய உலகம் மினுமினுப்புகளால் நம்மை திகட்டச்செய்கிறது. நகைமுரணாக அந்த மினுமினுப்புகளும் படிமங்கள்தான். இன்றும் ஒவ்வொரு நொடியும் எல்லா திசைகளிலிருந்தும் நம்மை படிமங்கள் தாக்குகின்றன, கட்டுப்படுத்துகின்றன. இன்று எவர் நினைத்தாலும் எந்தவிதமான படிமங்களையும் உருவாக்கிவிட முடியும். ஆனால் அக்காரணத்தினாலேயே படிமங்களுக்கும் நமது இருப்புக்குமான தூரமும் அதிகரித்துள்ளது. எந்த படிமத்தின் உண்மைத்தன்மையும் கண்டறிய முடியாத காலத்தில் நமது இருப்பின் உண்மைத்தன்மையை மட்டும் விசாரித்துவிட இயலுமா? அந்த மின்தூக்கியில் ஒலிக்கும் Fur Elise-ஐ இன்னும் சற்று உற்றுக் கேட்டால் அதில் மண்துகள் சரிந்து விழும் ஒலியும் கலந்திருப்பதை கேட்க முடிகிறது. ஒவ்வொரு நாளும் நான் இறங்குகையில் துகள் துகளாக கொட்டி மின்தூக்கியை நிறைக்கிறது. அழுத்தத்தை ஆசுவாசமாக்கும் தூக்க மருந்துகள் சிலருக்கு மட்டும் அளிக்கப்படுவதில்லையா?
‘The Story of Art’ மேலை கலை அறிமுக நூல் என்றில்லாமல் நம்முள் பல கேள்விகளை உண்டுபண்ணக்கூடியதாக, நமது கலை அணுகுமுறையை தொடர் பரிசீலனைக்கு உட்படுத்திக்கொள்வதற்கான தொடக்கப்புள்ளியாக இருக்கிறது. கலையை பற்றிய கேள்வி நம்மைப் பற்றிய கேள்வியும் கூடத்தான். கோம்பிரிட்ச் இந்நூலின் வழி செய்ய முயல்வதை அதன் முதல் வரி சொல்லிவிடுகிறது, “உண்மையில் கலை என்று ஏதும் இல்லை. இருப்பது கலைஞர்கள் மட்டுமே.” இருப்பது கலைஞர்கள் கூட அல்ல. கேள்விகள் மட்டுமே என்று தோன்றுகிறது.
*****

சியாம்
சியாம். சென்னையில் தனியார் நிறுவனத்தில் இயந்திர வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். இலக்கியத்துடன் கர்நாடக இசையிலும் ஆர்வம் உள்ளவர்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.

மிக அருமையான கட்டுரை. கட்டுரை ஆசிரியருக்கு நன்றி(கள்).
– தமிழ்மொழி சக்திவேல், கோபிசெட்டிபாளையம்