லோகேஷ் ரகுராமன் : குறுங்கதைகள்

Witness

“அன்று கடும் மழை நாள். நான் என் ஊரில் இருந்து கிளம்பி கிடைத்த ரயிலில் வித்தவுட்டில் ஏறிவிட்டேன். கூட்ட நெரிசலில் ரயில் பெட்டியின் கழிவறைக்கு அருகே உள்ள இடத்தைப் பிடித்து கால் மூட்டுக்குள் முகத்தை பொதித்துக்கொண்டே பயணம் செய்தேன். உண்மையில் உள்ளுக்குள் குமைந்தபடியே இருந்தேன். ஈர்க்கால் தொட்டதும் மரவட்டை சுருண்டு கொண்டுவிடும் அல்லவா? அது போல. என்னை நிமிண்டும் அந்த ஈர்க்கைத் தான் நான் உண்மையில் வாழ்நாள் முழுக்க தேடிக்கொண்டே இருக்கிறேன். அதை ஒடித்துப் போட்டால் போதும். எனக்கு எவரையாவது கொலை செய்தால் தேவலாம் என்றிருந்தது. ஆம் எனக்கு வேண்டியது ஒரு கொலை. அவ்வப்போது அப்படித் தான் தோன்றும் எனக்கு. ரயில் மழைக்குள் மழைக்குள் என சென்று கொண்டிருந்தது. ஒன்றரை நாட்கள் பயணம் கழிந்து மேற்கு வங்கத்தில் எங்கோ சென்று கொண்டிருந்தது ரயில். ரயில் முழுக்கவே மழை ஈரத்தின் கவிச்சி மணம் வீசியது. எப்படியோ இதுவரை மாட்டிக்கொள்ளாமல் வந்து விட்டோம் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது அந்த ராத்திரியிலேயே எப்படியோ பிடிபட்டுவிட்டேன். ஏதோ ஒரு நிறுத்தத்தில் என்னை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிட்டார் டிக்கெட் செக்கர். தள்ளிவிட்டுவிட்டு என்னை ஃபுட்போர்டில் இருந்தபடிக்கே ஹிந்தியில் ஏசினார். அவரை கொலை செய்துவிடலாமா என்று கூட யோசித்தேன். ஒன்றும் வேண்டாம். அவர் கழுத்தில் மாட்டியிருந்த அடையாள அட்டை கயிற்றை அப்படியே பிடித்து இழுத்தால் போதும் நகரும் ரயில் பெட்டியில் இருந்து என் கையோடு வந்துவிடுவார். கை ஊன்றி எழுந்து கொண்டு என்னை கடந்து வேகமெடுத்தபடி நகரத் துவங்கியிருந்த ரயிலை ஒரு முறை ஓங்கிக் குத்தினேன். பிறகு அந்த ரயிலை ஒரு மரவட்டையாக கற்பனை செய்து பார்த்தேன். ஈர்க்கின் நுனி பட்டதும் சுருண்டு கொண்டுவிடும் மரவட்டையாக. அந்த ஈர்க்கை நான் வைத்திருப்பதாக ஆறுதல் பட்டுக்கொண்டேன்.

நான் திக்கற்று என்ன செய்வதென்று தெரியாமல் அந்த நிலையத்திலேயே இருந்தேன். ஏதோ ஒரு சிற்றூர். பயணிகள் எவரும் இறங்கவில்லை. ரயில் எதற்காகவோ நின்றிருக்கிறது. மழை, இருட்டை இன்னும் இருட்டாக்கி விட்டிருந்தது. இருட்டுக்குள் இன்னொரு இருட்டு இருப்பதை மழை காட்டித் தருகிறது என்று எண்ணிக்கொண்டேன். நான் அந்த நடைமேடையில் இருந்த நிழல்குடையின் கீழ் ஒதுங்கி ஒரு கல் பெஞ்சில் ஈரத்துடன் அமர்ந்து கொண்டேன். நான் ஒதுங்கியதும் மழை சற்று விட ஆரம்பித்திருந்தது. மழையினால் கூடிப்போயிருந்த கருமை எல்லாம் விலகி எதிர்சாரியில் இருந்த நிலையத்துக் கட்டிடத்தின் விளக்கு வெளிச்சம் கண்ணுக்குத் தெரிந்தது. அருகில் என் கல் பெஞ்சுக்கு பின்பக்கமாக ஒரு நாய் எவரோ போட்டுவிட்டுப் போன கித்தான் சாக்கில் தன் சர்வத்தையும் ஒடுக்கிப் படுத்திருந்தது. நான் அதை விரட்டிவிட்டு அந்தக் கித்தான் சாக்கைப் பிடிங்கி போர்த்திக்கொண்டேன். அருகில் இருக்கும் அந்நாயைக் கொன்றுவிடலாமா என ஒரு கணம் யோசித்தேன். ஆனால் கண்கட்டிக்கொண்டு வந்து கல் பெஞ்சிலேயே சாய்ந்து நன்றாக உறங்கிப் போய்விட்டேன். மறுநாள் காக்கிச் சட்டைப் போட்ட மூவர் வந்து என்னைத் தட்டி எழுப்பியதும் தான் எழுந்து கொண்டேன். மழை முற்றிலுமாக நின்றிருந்தது. வெயில் மேக இடுக்குகள் வழியாக எட்டி பார்த்துக்கொண்டிருந்தது.
“ஜாகோ ஜாகோ”

நான் புரியாமல் விழித்தேன்.

“ஏகத்தி மேயே கூன் ஹாய்ச்சே. துமி தெகேச்சே?”

எனக்கு அவர்கள் கேட்பது புரியவில்லை. நான் தயங்கி தயங்கி உடைந்த ஆங்கிலத்தில் பேசினேன்.

இன்னொரு போலீஸ், “One girl. Murder. See there” என்று எதிர் பிளாட்பார்மை சுட்டினார். அங்கு ஒரு பெண் கழுத்தறுபட்டு தரையில் கிடந்தாள். அவளைச் சுற்றி வெள்ளைக் கோடு வரையப்பட்டிருந்தது. என்னருகில் படுத்திருந்த நாய் அந்த நடைமேடையில் திரிந்து கொண்டிருந்தது.

“You – eyewitness”

என்னை அவர்கள் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றார்கள். முதலில் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏன் என்னை இவர்கள் பிடித்துக்கொண்டு போகிறார்கள். நிலையத்தில் வேறு எவரும் இல்லையா? அவர்களுக்குத் தெரியாதா? எல்லாரும் ஓடிவிட்டார்களா?

காவல் நிலையத்தில் நான் எனக்கு தெரிந்ததைச் சொன்னேன். நான் ரயில் ஏறியதில் இருந்து இறக்கிவிடப்பட்டு கல் பெஞ்சில் சாய்ந்தது வரை. பிறகு ஆற்றின் ஒழுக்கில் அடித்துச் செல்லப்படும் இலை போல அதை மீறியும் சொல்லிச் சென்றேன். அவர்களிடம் சொல்வதற்கு இன்னும் நிறைய இருப்பதையே அப்போது தான் நான் உணர்ந்தேன்.
“அதன் பிறகு என்னைக் கடந்து சென்ற எந்த ஒரு ரயிலும் அந்நிலையத்தில் நிற்கவே இல்லை. எந்த ஒரு பயணியரையும் நான் பார்க்கவில்லை. பிறகு எப்போதோ ஓரே ஒரு சரக்கு ரயில் அந்த நிலையத்துக்கு வந்து நின்றது. பதினைந்து நிமிடம் அங்கு நின்றது. பிறகு கிளம்பிச் சென்று விட்டது. அதன் பிறகு தான் அந்தப் பெண்ணை பார்த்தேன். அந்த சரக்கு ரயிலில் இருந்து தான் அப்பெண் குதித்து இறங்கி இருக்க வேண்டும். அவளுடன் இன்னொரு ஆடவனும் நின்றிருந்தான். நல்ல வாட்ட சாட்டமாக இருந்தான். அவன் அவளை அங்கேயே நிற்க வைத்துவிட்டு எங்கோ சென்று விட்டான். தண்டவாள மறைவில் இருந்து நான்கு பேர் நடைமேடையில் சட்டென ஏறி அந்தப் பெண்ணை பின்பக்கத்தில் இருந்தபடி பிடித்து, கழுத்தறுத்துப் போட்டு மீண்டும் தண்டவாள மறைவிலேயே குதித்து இறங்கி ஓடிவிட்டனர்.” என்று சொல்லிச் சென்றேன். சொல்லிக் கொண்டிருக்கும் போதே உரைத்தது. எப்படி கண்ணால் பார்த்தது போல நான் இவற்றை அவ்வளவு நிச்சயமாகச் சொல்லிச் செல்கிறேன்? ஒருவேளை பொய் சொல்கிறேனா? நாம் தான் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தோமே? நான் இரண்டு நாட்கள் காவல் நிலைய உபசரிப்பிலேயே தங்க வைக்கப்பட்டேன். இரண்டாம் நாள் மாலை, அவர்கள் அந்தப் பெண்ணுடன் வந்த ஆடவனை பிடித்துக் கூட்டி வந்து என் கண் முன் நிறுத்தி “இவன் தானா?” என்றனர். நான் “ஆம்” என்றேன். பிறகு சில மணி நேரத்தில் அந்தக் கூலிப்படை ஆட்களையும் பிடித்துக் கூட்டி வந்து விட்டனர். அவர்களை எல்லாம் பார்த்தது எனக்கு நன்றாக நினைவில் பதிந்திருந்தது. ஆனால் அவர்கள் தான் “இவன் எப்படி?” என்று குழம்பி நின்றார்கள்.

பிறகு அலைந்து திரிந்து மீண்டும் ஊர் வந்து சேர்ந்தேன். கொலை செய்ய தூண்டல் பெற்று ஒரு கொலையைப் பார்த்து சாட்சி சொல்லிவிட்டு திரும்பியிருக்கிறேன். அந்த சாட்சி சொல்வதற்கென்ற இங்கிருந்து வித்தவுட்டில் ஏறிப்போனதாக தோன்றுகிறது. அதுவும் கண்ணால் பார்க்காத கொலைக்கு சாட்சியாக. ஒன்றும் புரியவில்லை. இப்போது நினைத்தாலும் என்னால் நம்பமுடியவில்லை. இன்னொன்றையும் ஒத்துக்கொள்ள வேண்டும். நான் அன்றைக்கு தூங்கியது போல இப்போது வரையிலும் தூங்கியது இல்லை. அப்படி ஒரு உறக்கம். எதுவோ என்னை ஏமாற்றுகிறது. தலையணையை அடுக்கி போர்த்தி ஓர் ஆள் படுத்திருப்பது போல ஒரு ஏற்பாடு செய்துவிட்டு வெளியே போய் பார்த்துவிட்டு மீண்டும் போர்வைக்குள் புகுந்து கொண்டது போலவே தோன்றுகிறது. ஆனால் எனக்குள் அந்த கொலைவெறி அடங்கவில்லை. இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் நிறைவேற்றிவிடும் நிலையில் தான் அது என்னை வைத்திருக்கிறது.
விட்டால் உங்களையுமே கூட கொலை செய்யத் துணிந்துவிடுவேன் என்று தான் நினைக்கிறேன். எப்போதும் கொலைக்கு தொண்ணூற்றி ஒன்பதாம் படியிலேயே தூக்கி நிற்கவைக்கப்படுகிறேன்”

நான் அமர்ந்திருந்த இருக்கையைச் சுற்றி சுற்றி வந்து நான் சொல்வதை எல்லாம் அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.

பிறகு, “கண்களால் மட்டும் தான் பார்க்க முடியுமா என்ன?”

“இல்லை புரியவில்லை.”

“உங்கள் ஆழ்மனமும் பார்த்துக்கொண்டிருக்கும்”

“உங்கள் கண்கள் ஒன்றை நேர்நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கும்போது உங்கள் ஆழ்மனம் சுற்றி அனைத்து திசைகளையும் நோக்குகிறது. அறிகிறது. வேவு பார்க்கிறது. ஆனால் அவற்றை உங்களை அறியவிடாமல் தடுத்துவிடுகிறது. அதனால் உங்களுக்கு அது தெரிவதில்லை. அப்படி அது தடுப்பதும் நம் நல்லதுக்காகத் தான். இல்லையென்றால் ஒவ்வொன்றுக்கும் குழம்பி நிலையழிந்துவிடுவோம். கண்களாவது விழிப்புக்கு அவ்வப்போது விடுப்பு கொடுத்துவிடும். ஆனால் ஆழ்மனம் அப்படியில்லை. எப்போதுமே விழித்துக்கொண்டிருக்கும்”

“ஆனால்… உங்களுடைய பிரச்சினை வேறு”

நான் யதேச்சையாக திரும்பிப் பார்த்த போது, அவர் என்னை வேகமாக கத்தியால் குத்த வந்தார். மயிரிழையில் கத்தி வைத்திருந்த அவர் கையை சட்டென பிடித்து தடுத்தி நிறுத்திவிட்டேன். இல்லையென்றால் இந்நேரம் என் வலது தோள்பட்டைக்
குழியிலேயே இறக்கியிருப்பார். பழம் நறுக்க வைத்திருந்த கத்தியை எங்கிருந்தோ எடுத்து என்னைத் தாக்க வந்திருக்கிறார். நான் தற்காத்துக்கொள்ள அவரைப் பிடித்து கீழே தள்ளினேன். கத்தி அவர் பிடியில் இருந்து அகன்று கீழே விழுந்தது. என் கையில் ஒரு கிழி கிழித்து ரத்தம் சொட்டியது. அவர் சிரித்தபடி எழுந்து கொண்டார். பிறகு தான் வைத்திருந்த கர்சீப்பை இரண்டாகக் கிழித்து ரத்தம் வழிந்த என் கையை இறுக்கமாகக் கட்டிவிட்டார்.

“எப்படி சரியாக இப்போது உங்களை தற்காத்துக்கொண்டீர்கள்?”
“நான் யதேச்சையாகத் தான் திரும்பிப் பார்த்தேன். நீங்கள் அப்படி கத்தியோடு வந்து கொண்டிருந்தீர்கள்”

“யதேச்சையாகவா?”

“ஆம்”

அவர் மீண்டும் சிரித்தார். “அது அப்படித் தான் தோண வைக்கிறது பாருங்கள்”

“நீங்கள் முன்னே பார்த்து பேசிக்கொண்டிருந்த போது உங்கள் ஆழ்மனம் என்னைப் பார்த்தபடி சுழன்று கொண்டிருந்திருக்கிறது. ஆனால் அதை உங்களிடம் அது தொடற்புறுத்தவில்லை. ஆனால் ஒரு கொலை பாதகச் செயலால் அதன் தாழ் திறந்துகொண்டுவிட்டது. நீங்கள் என்னைப் பார்த்துவிட்டீர்கள். சுதாரித்துக்கொண்டுவிட்டீர்கள். உங்களை அது பார்க்க வைத்திருக்கிறது. அதாவது மற்றொரு முறை உங்கள் கண்களால். ஆனால் நீங்கள் அதை தற்செயல் என்று நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் விழிப்பில் இருக்கும் போது உடனடியாக சேதி வந்து சேர்ந்துவிட்டது. அன்று நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது உங்களிடம் அச்சேதி பொறுமையாக பின்னர் வந்து சேர்ந்திருக்கிறது. அதான் விஷயமே.”

“இப்போதாவது நீங்கள் எதில் சிக்கிக்கொண்டிருக்கிறீர்கள் புரிகிறதா?”

௦௦௦

நுண்மரம்

“எனக்கு என்ன பிரச்சனை? பைக் ஓட்டும் போது மட்டும் எதனால இப்படி ஏற்படுது?”

“இதலாம் நார்மல் தான். தேவை இல்லாம ரொம்ப குழப்பிக்காதீங்க. பைக் ஓட்டும் போது எனக்கே சில சமயம் இப்படி ஏற்படுவதுண்டு”

“ஒவ்வொரு நரம்பு செல்லும் குட்டி குட்டி மரம். ஒரு மரத்தோட வேர் இன்னொரு மரத்தோட கிளைய தொட்டுகிட்டிருக்கு. அப்படியே நூல் பிடிச்சா மாதிரி. வெளில தான் மரங்கள், போட்டோவுக்கு போஸ் குடுக்கறது போல ஒன்னு பக்கத்துல ஒன்னுன்னு நிக்கிதுங்க. ஆனா நம்ம உடம்புக்குள்ள ஒரு மரத்தோட கழுத்துல இன்னொரு மரம் நிக்குது. அதாவது ஒன்னு மேல ஒன்னு. அப்படி ஒன்னு இன்னொன்னத் தொத்தித் தொத்தி ஒரு தொடர்ச்சிய உண்டு பண்ணிடுது. நூல்ன்னு சொன்னேன் இல்லையா? அது அந்து போனா மாதிரி ஆனா இப்படி நமக்கு ஆகும். அந்துன்னா புடிங்கிகிட்டு வந்துடறதில்லை. அது அங்கே தான் இருக்கும். ஆனா தன்னை விறைப்பா நிறுத்து வச்சிக்கும். ஒவ்வொரு குட்டி மரத்தோட வேரும் கிளையும் விறைச்சுப் போய் நின்னா இப்படி ஆகிடும். கவலை படவேணாம். கொஞ்சம் ஸ்டாட்டிக்கா ஒரே எடத்துல எந்த அசைவும் இல்லாம பிடிச்சிட்டு வண்டி ஓட்டுறோம் இல்லையா. நம்ம மூளை வண்டிய பிடிச்சுக்கோ பிடிச்சுக்கோ அதுங்கள கண்ட்ரோல் பண்ணுது. ஆனா அதுங்க ப்ரீயா இருக்கணும்ன்னு அடம் பண்ணுதுங்க. வேற ஒன்னும் இல்லை. எப்பலாம் இப்படி ஆகுதோ வண்டிலேந்து கீழ இறங்கி கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க” என்றார் அவர்.

“எவ்ளோ நாள் இந்த பிரச்சினையை பீல் பண்றீங்க?”

சட்டென எனக்கு நினைவு வரவில்லை.

“தெரில அப்பப்ப இப்போலாம் அப்படி ஆகுற மாதிரி இருக்கு”

நேற்று நான் என் டூவிலரில் அலுவலகம் சென்று கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் எப்பவாவது தான் என் டூவிலரை எடுக்கிறேன். கோரோனா, ஊரடங்கு, வீட்டிலிருந்தே வேலை என்று ஆன பிறகு அதன் பிரயோகம் குறைந்துவிட்டது. நேற்று கலாமந்திரில் வலப்பக்கம் எடுத்து யூ டர்ன் அடித்துவிட்டு வந்து மாரத்தஹள்ளி பிரிட்ஜின் மேல் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தேன். 120 நொடிகள் வரை தாக்குப்பிடிக்கமுடியாமல் என் வண்டி சட்டென ஆஃபாகிவிட்டது. சட்டென விளக்கு பச்சைக்கு மாறிவிட்டது. நான் வண்டியை பட்டன் ஸ்டார்ட் செய்தேன். வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. மேலும் காலால் கிக்கடித்துப் பார்த்தேன். அதற்கும் பலனில்லை. பிறகு தான் உணர்ந்தேன். என் விரல்கள் ஸ்டார்ட் பட்டனை அழுத்தியிருக்கவில்லை. என் கால் கிக்கரை எட்டியிருக்கவில்லை. பிறகு தான் புரிந்தது என் கைகால்கள் எல்லாமே செயலற்று போயிருந்ததை. என் மூளையின் ஆணையை என் உடல் மறுதலித்து நின்றது. வண்டியோடு சேர்ந்து நானும் ஆஃபாகிவிட்டேன் போல. பின்னால் தொடர்ந்து எழுந்த ஹாங்க்குகளின் சத்தம் என் பதட்டத்தைக் கூட்டியது. ஆனால் என்ன? மூளை மட்டும் தான் அப்பதட்டத்தை அறிகிறது. உடலுக்கு அதை என்னால கடத்த முடியவில்லை. நான் தட்டுத் தடுமாறி வண்டியை விட்டு கீழே இறங்கினேன். இறங்கும்போதே கொடிக்கயிற்றில் இருந்த துணி நழுவி துவண்டு கீழே விழுவது மாதிரி தான் இறங்கினேன். எதிரே சீழ்க்கை காட்டிக்கொண்டிருந்த டிராபிக் கான்ஸ்டபிள் வந்துவிட்டார். என்னை முதலில் பார்த்ததும் திட்டிவிட்டு பிறகு என் நெளிந்த முகத்தைப் பார்த்துவிட்டு அவர் என் வண்டியைத் தள்ளி ஓரங்கட்ட உதவினார். நான் அங்கு ஒரு பத்து பதினைந்து நிமிடம் நின்றுவிட்டு சீர்ப்படுத்திக்கொண்டு மறுபடியும் வண்டியைக் கிளப்பினேன்.

இதற்கு முன் பலமுறை கவனப் பிசகால் வண்டியை எங்கோ எதிலோ மோதி கீழே விழுவது எல்லாம் நிகழ்ந்திருக்கிறது தான். ஆனால் இம்முறை இதில் என் கவனப்பிசகு என்று எதுவுமே இல்லை. வேறெதோ பிசகியிருக்கிறது. கவனப்பிசகு என்று தெரியவரும் போது என்ன பிசகு என்பதும் கூடவே தெரியவருகிறது. அதனால் சமாதானப்பட்டுக்கொள்ள முடிகிறது. ஆனால் அதீத கவனத்தோடு இருக்கும் போதும் இப்படி ஏதாவது நேரிட்டால் எது பிசகு என்று தெரியாமலேயே படபடப்பு உண்டாகிவிடுகிறது. ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டுவிடுமோ என்று உளம் குமைகிறது. இந்தச் சம்பவம் ஏற்படுத்திய படப்படப்பில் ஒரு நரம்பியலாளரைச் சந்தித்து ஆலோசனை கேட்டுக்கொண்டேன்.

அதற்குள்ளேயே என் மனம் அதன் பாட்டில் இயங்க ஆரம்பித்து, இதற்கு முன் நாம் வண்டியை எதில் எதில் எல்லாம் விட்டிருக்கிறோம் என்பதை நினைவு கூர ஆரம்பித்து விட்டது.

எனக்கு நேர்ந்த முதல் விபத்து என்று நான் நினைவு வைத்திருப்பது இது தான். அன்று நாங்கள் கள்ளக்குறிச்சியை அடுத்த கச்சிராயபாளையத்தில் இருந்தோம். எங்களுக்கு கச்சிராயபாளையத்தில் வீடு. அப்பா அப்போது அங்கிருந்த சுகர் மில்லில் அலுவலராக வேலைப் பார்த்துக்கொண்டிருந்தார். அம்மா காலில் அடிப்பட்டு கள்ளக்குறிச்சி டவுனில் ஒரு மருத்துவமனையில் ஒரு வாரம் அட்மிட்டாகியிருந்தாள். அது ஒரு உச்சிப் பொழுது. அம்மாவுக்காக மதிய உணவை வீட்டில் இருந்து தயாரித்து, கொண்டு போய் கொடுக்க பைக்கில் நான் மட்டும் சென்று கொண்டிருந்தேன். அப்பா அம்மாவோடு மருத்துவமனையில் இருந்தார். என் வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு வண்டியில் செல்ல ஒரு 45 நிமிடம் பிடிக்கும். தார் மெழுகிய நல்ல அகண்ட சாலை. இருமருங்கிலும் கருப்பிலும் வெள்ளையிலுமாக பட்டையிடப்பட்ட ஹைவே புளியமரங்கள். மேலே அப்புளியமரங்களின் பச்சை குடை விரிப்புகள். Canopy என்பார்கள். கீழே சாலையில் உச்சிப்பொழுதில் பயணிக்கும் போதும் வெயிலே தெரியாது.

அந்தச் சாலையில் ஓரிடத்தில் மட்டும் வெட்டவெளியும் வெயிலும் பட்டவர்த்தனமாகப் பளிச்சிடும். அப்போதெனப் பார்த்து என்ன ஆனதோ எனக்கு தெரியவில்லை. எல்லாம் இருண்டு வந்தது போல இருந்தது. சட்டென அருகில் இருந்த ஒரு புளியமரத்தின் மேல் கொண்டு போய் என் வண்டியை விட்டேன். மரத்தின் மீது சக்கரம் ஏறிச் சீறி பின்னர் சில தப்படிகளில் போய் விழுந்திருந்தது வண்டி. நான் அருகில் இருந்த வாய்க்காலில் எறியப்பட்டிருந்தேன். கைகால்களில் எல்லாம் ஒரே சிராய்ப்புக்கள். ரத்தத் தீற்றல்கள். ஆனால் பெரிதாக எதுவும் ஆகிவிடவில்லை. நான் விந்தி விந்தி வரப்பில் கைவைத்து தவழ்ந்து எழுந்துகொண்டேன். காற்றில் ஏதோ முறியும் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. அருகில் ஆளரவம் இல்லை. பொட்டல் வெளி. காற்றில் துளி அசைவில்லை. தூரத்தில் ஒரு கூக்குரல் கேட்டது. எவரோ கையில் மேய்ச்சலுக்கு வைத்திருந்த துரட்டிக் கழியுடன் தோள் மாட்டுத் துண்டை அசைத்துக் காட்டி என்னை நோக்கிக் கூக்குரலிட்டு ஓடி வந்து கொண்டிருந்தார்.

“தம்பீ, தம்பீ வெலகிப் போங்க. வெலகிப்போங்க”

நான் என் வேகத்தை கொஞ்சம் கூட்டி ஹாண்ட்பேரும் முகப்பு கார்டும் நெளிந்துபோன என் வண்டியை நிமிர்த்தி எடுத்துக்கொண்டு கெந்திக் கெந்தித் தள்ளி அந்த இடத்தைவிட்டு நீங்கினேன். அவர் மேலும் மேலும் அப்படியே கத்திக்கொண்டு வந்தார். அவர் கத்தக் கத்த நான் இன்னும் இன்னும் என்று விபத்தான இடத்தில் இருந்து ஒரு நூறு அடிக்கு நகர்ந்து வந்துவிட்டிருந்தேன்.

நானும் என் வண்டியும் நெளிந்த எங்கள் முகங்களை தத்தம் பார்த்து கொண்டிருந்தபடி நின்றிருந்தோம். நான் என் சிராய்ப்புக்களை தடவிக்கொண்டிருந்தேன். அவர் மூச்சடக்கியபடி ஓடி வந்து எங்களை அடைந்தார். “பரவாயில்லையா தம்பீ இப்போ. தூரத்தில் இருந்து பாத்தேன். நல்லவேளை நல்லா விலகி வந்துட்டீங்க”

“ஏன் என்னாச்சி? நீங்க ஏன் இப்படி கத்திட்டு ஓடி வறீங்க?”

“தம்பி அந்த மரம் கீழ விழப்போவுது” என்றார்.

நான் அம்மரத்தைப் பார்த்தேன். வெற்று கிளைகள் கொண்டு வானைக் கீறி நின்றிருந்தது அது. வெறும் பட்ட மரம். உயிரரவம் என்று எதுவும் அதில் தென்படவில்லை. நான் மோதியா அது கீழே விழும்?

“பட்டு காஞ்சு போன மரம் தம்பி. இன்னிக்கோ நாளைக்கோன்னு கிடந்தது. உள்ள ஒன்னும் இல்ல. வெறும் போலாத் தான் இவ்ளோ நாள் நின்னுக்கிட்டு கிடந்தது. நாதியத்த வெறும் பூஞ்சான் உடம்பு”

அவர் சொன்னதும் ஒரு கணம் எனக்கு இப்படித் தோன்றியது. நான் சென்று மோதியது ஒரு அட்டை மரத்தின் மீதா? சினிமா செட்டுக்காக போடப்பட்ட மரமா அது?

“இன்னிக்கு கீழ விழுந்திடணும்ன்னு அதுக்கு இருக்கோ என்னவோ. இந்த மரத்தை அப்புறப்படுத்தச் சொல்லி குதிரைச்சந்தல் உள்ளூர் பிரசிடெண்டுகிட்ட எப்பவோ எழுதிக் கொடுத்தாச்சு. பத்து மாசமா இழுத்தடிக்கிறாங்க. கேட்டா நெடுஞ்சாலைத்துறை ஆட்கள் கேட்டுக்க மாட்டேன்கிறாங்களாம்.”

“சும்மா வெட்டியா வெறைச்சு நின்னு என்ன பிரயோசனம்? பூச்சிப் பொட்டு, காக்கா குருவி , காடை கவுதாரின்னு ஒன்னும் தங்காது அந்த மரத்துல. ஒரு கூடோ பொந்தோ எதுவும் போட முடியாது. பட்ட மரம்ன்னா நல்லாவே பட்டது. மரம் தன் பச்சைய இழக்கும் போது மொதல்மொதலா படுது. மிச்ச எந்த உயிரினத்தையும் தன்கிட்ட அண்டவிடாத போது மொத்தமா பட்டுப்போவுது. இனி அது இருந்து எதுக்கும் ஆகப்போறதில்லை”

நான் அவர் சொல்லச் சொல்ல அந்த மரம் சரிவதைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
வேர்ப்பிடி கூட அகன்று மரத்தோடு வெளிவந்துவிட்டது. மண்ணில் அந்த மரத்தினுடையது என்று எதுவும் எஞ்சுவதற்கில்லை. விறைப்பாக இருந்த அதன் வேருடனும் கிளையுடனும் தன்னை மொத்தமாக கவிழ்த்திக்கொண்டது அம்மரம். ஒரு கணம் தான். ஒரே கணம் தான். அம்மரம் பேரோசையுடன் என் கண் முன் சரிந்தது. மொத்த மரமும் நிலத்தில் மோதி, பொடிந்துப் போய் உதிர்ந்து கீழே விழுந்தது. அதன் எச்சம் என்று எதுவும் இல்லை. சாலைக்கு குறுக்கே வெறும் மணல் கோடாய் கிடந்தது அம்மரம்.

“இனி இந்த மரத்தை கொண்டு போகணுமானா அள்ளி எடுத்துகிட்டு தான் கொண்டு போகணும் இல்லையா?”

“ம்ம்ம். கொண்டுபோறத்துக்கு கூட இப்ப தேவை இருக்காது. இனி இத அப்புறபடுத்த எந்த மனுஷனும் எந்த அரசாங்கமும் தேவையில்ல”

“காத்து பாத்துக்கும். அது கொண்டு போய் சேர்த்துரும் இதை”

அருகில் இருந்தவர் சொல்லிக்கொண்டிருந்ததை அப்போது நான் வெறுமனே கேட்டுக்கொண்டிருந்தேன். நான் என் சிந்தனையை உடனடியாக அன்றைய தினத்தில் இருந்து துண்டித்துக் கொண்டேன். போதும், சனியன் இனி ஒவ்வொரு முறையும் இப்படி கைகால் மரத்துப் போகும் போது எனக்கு அந்த மரத்தின் ஞாபகம் தான் வந்து தொலைக்கும்.

௦௦௦

லோகேஷ் ரகுராமன்

சிறுகதையாசிரியர். "விஷ்ணு வந்தார்" சிறுகதை நூல் வெளியாகியிருக்கிறது. இணைய இதழ்களில் தொடர்ச்சியாக சிறுகதைகள் எழுதிவருகிறார்

உரையாடலுக்கு

Your email address will not be published.