துவாரம் : க.கலாமோகன்

அதிகாலை ஐந்து மணிக்கே எங்களது குடிசைக்குள் ஒளி வந்துவிடும். அது லைட்டால் அல்ல. பல மாதங்களாக அது வந்துகொண்டுள்ளது. எமது கூரையில் உள்ள ஓர் ஓட்டில் ஒரு சிறிய துவாரம் வந்ததே காரணம்.

எங்கள் தூக்கத்திற்கு இந்த ஒளி சிக்கல்தான். மனைவியோ போர்வையால் மூடித் தூங்கிவிடுவாள். நான் மூடினாலும் ஒளி என்னைக் குத்துவது போல இருக்கும். தலையணையை எனது முகத்தில் வைத்தாலும் அது என்னைக் கிழிப்பதைப் போலவே உணர்வேன். எது எப்படியோ துவாரம் எமக்குள் தலையடியைத்தான் தந்தது.

சில தினங்களின் பின் எனது மனைவி ஓர் திட்டத்தைத் தந்தாள்.

“நீங்கள் குடிசையில் ஏறித் தூவாரத்தை எப்படியாவது மறைத்துவிட்டால் நல்லது.”

பயத்தை ஊட்டியது திட்டம். ஏறுவதில் எனக்குப் பயம் உள்ளது என்பதை எவருக்கும் காட்டாமலே நான் இப்போதும் வாழ்கின்றேன்.

அப்போது நாம் வறுமையில் இருந்தோம். எனக்கும் மனைவிக்கும் தொழில் இல்லை. உறவினர்தான் தமக்குள் உள்ள சிரமத்தைக் காட்டாமல் எமக்கு உதவினர். சில வேளைகளில் நான் ஒருவர் வீட்டில் விறகுகளை வெட்டியும், தேங்காய்களை உரித்தும் கொஞ்சம் சம்பாதிப்பேன். சம்பாதிப்பு சில மீன்கள் வாங்குவதற்கும் போதாதது.

எங்களிடம் சில பழைய ஓடுகள் இருந்தன. ஓடு திருத்துபவரைப் பிடித்தால் அவர் அதிகம் பணம் கேட்பார் என்பதால்தான் என்னை என் மனைவி குடிசையில் ஏறச் சொன்னாள்.

எனக்கு ஏறுவதில் பயம் என்பது இதுவரைக்கும் அவளுக்குத் தெரியாது. ஆனால் எனது பயத்தை எப்படிச் சொல்ல? சொன்னால் நான் ஓர் ஆணா என்று அவள் கேட்கமாட்டாளா?

அண்மையில் ஓர் ஆண் தன்னைச் சுழட்டுவதாகச் சொன்னபோது “யார் அவன்? காட்டு! அவனை முறி முறி என்று முறித்துவிடுவேன்.” என்று வீரம், ஓர் போலி வீரம் காட்டியவன்தான் நான்.

எனது பயத்தை எனது மனைவிக்கும், காட்டாதிருப்பது எப்படி? சில வேளைகளில் அவள் சிரிக்கும்போதும், நான் பொய்க் கோபத்துடன் கத்துவேன். பின்பு நான் தனியாக இருக்கும்போது எனது கத்தலிற்காக எனக்குள் வருத்தம் வரும்.

“உனக்கு ஓர் உண்மையைச் சொல்லலாமா? “ என அவளிடம் கேட்டேன்.

“ஏன்? நீ எனக்கு எப்போதும் பொய்களையே சொல்லிவந்தாயா?”

“நான் அதிகம் பொய்கள் சொல்வதில்லை. சில வேளைகளில் பொய்கள் இல்லாமலும் வாழ்வு உள்ளதா?”

“சரி, உண்மையைச் சொல்!” என்று சிறு துடிப்புடன் கேட்டாள்.

“எனக்குக் குடிசையில் ஏறப் பயம்.”

அவள் பெரிதாகச் சிரித்ததை அப்போதுதான் கண்டேன். சிரிப்பு மிகவும் அழகியதாக இருந்தது. அவள் சிரிக்காது இருக்கும்போதும் மிக அழகுதான். தனது புன்னகையைக் காட்டாது இருந்த வேளையில்தான் எனக்கு அவள்மீது லவ் வந்தது என்பது ஓர் பழைய கதை.

“உங்களுக்கு ஏறப் பயம். ஏற ஓர் ஆளைத் தேடினால் அவருக்குத் தரும் பணம் எம்மிடம் இல்லை. அது சிறிய துவாரம். இலவசமாக ஒருவர் ஏறுவதற்குக் கிடைக்கும்வரை போர்வைதான் எமக்கு உதவி”

நான் “ஆம்.” என்றவுடன் அதிக மரங்களை வெட்டுதல், அதிக தேங்காய்களை உரித்தல் எனும் பேராசை எனக்கு வந்தது.

அது ஓர் சூடான தினம். அன்று நான் நிறையத் தேங்காய்களை உரித்தேன். காரணம் அதிக சம்பளம் தேவை. அது கிடைத்தால் ஏறுபவனைப் பிடித்துவிடலாம்.

அன்று கணவன் வீட்டில் இருக்கவில்லை. மனைவிதான் இருந்தாள்.

என் முன் வந்த அவளது ஓர் கையில் கட்டுப் போடப்பட்டு இருந்ததைக் கண்டேன்.

நான் கேட்கவில்லை. அவளாகவே சொன்னாள்.

“வெங்காயத்தை அவதியாக வெட்டியபோது, கையில் ஓர் வெட்டு.”

“ஐயையோ… “ என நான் சொல்லுமுன் “அவருக்குச் சம்பலில் உயிர். நீங்கள் இரண்டு தேங்காய்களைத் திருவித் தருவீர்களா?” எனக் கேட்டாள்.

“ஆம்! ஆம்!” என்று விருப்புடன் சொன்னேன்.

நான் ஒருபோதுமே தேங்காய்களைத் திருவியதில்லை. “ஆம்!” எனச் சொன்னபின் திருவத்தானே வேண்டும்.

குசினிக்குள் நானும் அவளும். ஓர் பெரிய கத்தியை அவள் என்னிடம் தந்தபோது எனக்குள் நடுக்கம் வந்தது.

“உங்களை யாரும் தாக்க வருகின்றார்களா?” எனக் கேட்டேன்.

சிரித்தாள்.

தேங்காயோ எனது கையில் பந்துபோல இருந்தது.

“உடையுங்கள்!” என அவள்.

நான் ஒருபோதுமே தேங்காயை உடைத்ததில்லை என்பதை அவளுக்குச் சொல்லாமல் கத்தியை வாங்கினேன். பாரம். அட… கை முறிந்துவிடும்போல இருந்தது. எப்படி ஓர் பெண்முன் நான் ஆண் இல்லை என்பதைக் காட்டாமல் இருப்பது?

தேங்காயை வீரத்துடன் உடைத்தேன். அது துண்டு துண்டாகக் குசினிக்குள் சிதறியது.

“உங்களுக்கு வெட்டத் தெரியாது!” என்று தனது காயம்பட்ட கையால் பறித்து வேறு ஓர் தேங்காயை எடுத்துத் தட்டினாள். இரண்டாக உடைந்தது.

“இப்போது திருகுங்கள்!”

நான் திருகியது தேங்காய் அல்ல. எனது கைதான்.

“ஐயையோ!” என அவள் கத்தியபின் ஓர் துண்டால் எனது துருவப்பட்ட கையைக் கட்டி, “நாளை, நீங்கள் தேங்காய் திருவ, மன்னிக்கவும்… உரிக்க வர வேண்டாம்.” என்றாள்.

அந்த வேலை அப்படித்தான் பறந்தது.

வீடு வந்து மனைவியிடம் சொன்னபோது “அந்தச் சம்பளத்துக்கு அந்த வேலையைச் செய்யவேண்டுமா?” எனக் கத்தியபடி “இனிமேல் நீங்கள் தேங்காய்களைத் தொட வேண்டாம்.” என்றும் சட்டம் வைத்தாள்.

தொழில்போனதையிட்டு எனக்குக் கவலை இல்லை. நான் செய்ததைத் தொழில் என்பதும் தவறுதான். பல ஆண்டுகள் எனக்குத் தொழில் இல்லை, நான் செத்தவனும் இல்லை.
காரணம் எமது குடிசைக்கு முன்பே காடு போன்ற தோட்டம் உள்ளது. அங்கு சென்றால் சில பழங்களையும், சில மரக்கறிகளையும் இலவசமாக எடுத்துவரலாம்.

நான் அங்கு சென்ற ஒரு தினத்தில் ஓர் கோழியைக் கண்டேன். பல ஆண்டுகள் நாம் கோழி சாப்பிட்டு. ஆனால் எப்படி அதனைப் பிடிப்பது? நான் அதன் பின் ஓடினேன். அதுவும் என்னிடமிருந்து தப்ப ஓடியது. வழியில் கிடந்த கல்லைத் தூக்கி அதன்மீது எறிந்தேன். அது துடித்துச் சாய்ந்தது.

நான் கோழியுடன் வந்தபோது எனது மனைவி மகிழ்ந்து “எங்கு கிடைத்தது?” எனக் கேட்டாள்.

“ஓர் வயோதிபர் தந்தது” என்றேன்.

சில நாள்களின் பின் எங்களை அதிர வைத்தது ஓர் விபத்து. அது நடந்தது எங்களது குடிசையின் அருகில்தான். பலர் கத்தும் சத்தம் கேட்டது. நாம் வெளியே வந்தோம். ஓர் குடிசை எரிந்துகொண்டிருந்தது. அங்கு வாழ்ந்த கிழவனும் கிழவியும் கத்திக்கொண்டிருந்தனர். குடிசை முழுதும் எரிந்தது.

கிழவனையும் கிழவியையும் நாம் எமது வீட்டுக்கு அழைத்து வந்தோம்.

“எங்கள் வாழ்வே போய்விட்டது!” என அழுதாள் கிழவி.

“உங்கள் உயிர் போகவில்லை. அதுதான் முக்கியம்.” என நான் அவளுக்குச் சொன்னேன்.

அப்போதுதான் எனது அம்மா ஓர் பாணுடன் வந்தாள்.

அதில் ஓர் துண்டை நீட்டி “சாப்பிடுங்கள்.” என எனது மனைவி அவர்களிடம் கேட்டபோது “பசிக்கவில்லை, நாம் பல வேளைகளில் பசியை மறந்துவிடுவோம்” எனக் கிழவன் சொன்னார்.

“இவர்களைக் கவனி” என்று சொல்லிவிட்டு இரவில்தான் அம்மா வெளியே சென்றாள்.

“சில தினங்கள் இருவரும் இங்கு இருப்பதுதான் நல்லது.” என நான் மனைவியிடம் சொன்னேன்.

“உண்மை, இந்தச் சூழலில் இவர்களுக்கு உதவி செய்வதுதான் முக்கியம்.”

“எங்கே தூங்க விடுவது?”

“எமது கட்டிலில்தான்.”

“நாம்?”

“வெளியே, பாயில்.”

“துவாரம்?”

“அவர்கள் வயது போனவர்கள். கண்களை மூடினால் அவர்களுக்கு ஒளியே தெரியாது”

அந்த இரவில் அவர்கள் உள்ளே மெத்தையிலும் நாம் பாயிலும்.

தொடக்கத்தில் பாயிலேதான் நாம் கிடந்து, பின்பு எமக்கு ஓர் மெத்தை இலவசமாகக் கிடைத்தது. அது ஓர் பழைய மெத்தை. கிழிந்து இருந்தது. அவைகளில் எனது மனைவி அழகான தையல்களைச் செய்தாள். அதிலே இப்போது கிழவனும் கிழவியும்.

அன்று லாவகமான குளிர் எமது உடல்களைக் கடித்தபோதும் எங்கள் முற்றத்தில் இருந்த மல்லிகைகள் தமது வாசத்தால் எம்மைத் தழுவின.

போர்வை இல்லாமல். அது கிழவனுக்கும் கிழவிக்கும்.

“உனக்குப் போர்வை தேவையா?”

“இல்லை, நீதான் என் போர்வை.” என்றபடி மனைவியைத் தழுவினேன்.

அன்று எங்களது நிர்வாண உலகை உடைக்க வானத்திற்குத் தடை போட முடியாமல் இருந்தது. அது பார்த்தால் என்ன?

காலையில் நாம் முதலில் எழுந்துவிட்டோம். கிழவனதும் கிழவியினதும் சிரிப்புகள் எமது காதுகளில் விழுந்தன. அவர்களது துயரம் அந்த இரவில் நீங்கியது எனச் சந்தோசப்பட்ட வேளையில் எம்முன் வந்தனர்.

“மன்னிக்கவும்… உங்களிடம் ஓர் கேள்வி கேட்கலாமா?” என அவர்களிடம் கூச்சமாகக் கேட்டேன்.

“கேள்!”

“எங்களது கூரையில் உள்ள துவாரம் உங்கள் தூக்கத்துக்குச் சிரமம் தந்ததா?”

அவர்கள் பலமாகச் சிரித்தனர்.

“ஏன் அது சிரமம் தர வேண்டும்?”

“அதனால் இருந்து வந்த ஒளி உங்களது தூக்கத்தைச் சிரமம் செய்யவில்லையா?”

“எமக்கு ஒளியில் விருப்பம். இரவில் நிலாவைக் கண்டு தூங்குவதில் கிடைப்பதே பேரின்பம்.”

“அவர் சொல்லுவது சரிதான்.” எனக் கிழவி சொல்லிவிட்டு “எங்கள் எரிந்த குடிசையில் இருந்த பல ஓடுகளை இவர் கழட்டி விட்டார்… எமக்கு இரவில் நிலா தேவை.” என்றாள்.

“எனது மனைவியே எனது நிலா. எம்மைத் துவாரம் இடையூறு செய்கின்றது.” என்றேன் நான்.

“சரி, உங்களது நிலா உள்ளே, எங்களது நிலா வெளியே. உங்களுக்கு ஓர் உதவி செய்யலாமா?”

“எந்த உதவி?”

“உங்களுக்குச் சிரமம் தரும் துவாரத்தை அடைக்கலாமா?”

“ஆம், ஆனால் உங்கள் வயதில் நீங்கள் ஏறுவீர்களா?”

“வயது வயதாம், எனக்கு ஏறத்தெரியும். ஓர் ஓடு உள்ளதா?”

சில ஓடுகளைக் காட்டினேன்.

அவர் அதிலொன்றுடன் ஏறியபோது…

“இறங்குங்கள்!” என எனது மனைவி சொன்னாள்.

“ஏன்?”

“உங்களது குடிசை திருத்தப்படுமுன் நீங்கள் இங்குதான் இருக்க வேண்டும். துவாரம்… நீங்கள் இங்கு இருக்கும்வரை துவாரம் இருக்கலாம்.”

புன்னகைத்தபடி அமைதியாக அவர் ஓர் ஒளியோடு இறங்கினார்.

000

க. கலாமோகன்

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து பிரான்சில் வசித்து வரும் தமிழ் எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்புகளில் தொடர்ந்து இயங்குகி வருகிறார். சிதறுண்ட தன்னிலைக் கூறில், எங்கேயும் தன்னைச் சரியாக பொருத்திக்கொள்ளாத இயல்பில் தத்தளிக்கும் மனங்களை கதைகளாக்கி வருகிறார்

உரையாடலுக்கு

Your email address will not be published.