
பார்த்தேன். மீன் ஆவியைத் தராமல் தட்டிலே இருந்தது. விழிகள் மிகவும் பொரிக்கப்பட்டு இருந்தன.
“உனது முகத்தைப் பார்த்ததால் நான் மீனை மறந்து விட்டேன்….” என்றபடி அதனைக் கையால் எடுத்துக் கடித்தேன். குளிர் நாவை நுள்ளியது குளிர்.
“இது சுவையானது. ஆபிரிக்கக் கடலில் வளர்ந்த மீன். எனக்கும் சிறு துண்டு தருவாயா? தலைதான் எனக்கு விருப்பம்”
“ஆம், மிகவும் சுவையானது.” என்று அவளிடம் தலையைக் கொடுத்தேன்.
ஹாஸ்டல் உணவகச் சேவையாளனை சூடாக்கித் தரும்படி எனது தலையை வைத்துக் கொடுத்தாள். விரைவிலேயே தட்டு எம்முன் வந்தது.
அவள் சாப்பிடும்போது பல கலைத்துவங்கள் அவளது முகத்தில் வெளியாகின. அவைகளை எனது இதயத்தில் படமாக்கிக் கொண்டேன். நான் அவளைப் பார்ப்பது எப்படி அவளுக்குத் தெரியும்? அவள் மீன் தலைச் சுவையில் மயங்கி இருந்தாள். நான் அவளை வெறித்தேன். இனித்தலே வெறிதலில் உள்ளது என்பது எனது அகராதியில்.
நியூமா என் அறையில் இருந்தால் நான் என்ன செய்வேன்? முதலில் அவளது அழகிய சப்பாத்துக்களை முத்தமிடுவேன்… பின் அவைகளைக் கழட்டி ‘உனது பாதங்களை நான் முத்தமிடலாமா?’ என எனது உதடுகள் கேட்கும்.
“அணை!” கத்தினாள்.
ஏன் அவள் இப்படிச் சொன்னாள் என்பது எனக்கு விரும்பவில்லை.
அணைக்கத் தொடங்கியபோது எனது நினைவு அவளது குரலால் உடைந்தது.
“மீன் தலைக்கு மிகவும் நன்றி. ஆனால் ஆட்டுத்தலை இதைவிடவும் ருசியானது.”
“ஒவ்வொரு நாளும் நாம் இங்கு வருவோம்… “ எனச் சொன்னேன்.
வெளியே போகும்போகும் அவளது கறுப்புத் தொடைகள் எனது விழிகளைக் கடித்தன.
“எனது வீட்டுக்குப் போவோம்….” என நான் சொன்னபோது …. “மன்னிக்கவும்… இன்று நான் எனது அம்மாவின் வீட்டுக்குப் போகவேண்டும்…. “
எனது தலை வெடித்தது.
“நாளை சந்திப்போமா?”
“ஆம்!”
அவள் தந்த போன் இலக்கத்தைத் தெளிவாக எழுதிய பின் இந்த அழகிய மெல்லிய கறுப்பி தனது வீட்டுக்குப் போக பஸ் எடுத்ததைக் கவலையுடன் பார்த்து அழுதேன்.
விபச்சாரிகளுடன் காதல் சில நிமிடங்களிலேயே தொடங்கும், அது ஓர் நிமிடங்களது காதலே. நியூமா ஓர் விபச்சாரியல்ல என்பதை ஏன் நினைத்தேன் என்பது எனக்குத் தெரியாது…. இந்தக் கணத்தில் ஓர் விபச்சாரியுடன் எனக்கு ஓர் நிமிடக் காதல் அல்ல, ஓர் உண்மையான காதல் தொடங்கியது இப்போது நினைவுக்கு வருகின்றது.
அவளது பெயர் அக்கூஸ். பாரிஸினது ஓர் பிரபல விபச்சார வீதியில் அவளைக் கண்டு உண்மையான காதல் கொண்டேன். நான் அவளுடன் அறைக்குள் நுழைந்தபோதும் செக்ஸ் செய்வதை விரும்பவில்லை. பணத்தைக் கொடுத்தபின்னர் அவள் தன்னை நிர்வாணமாகியபோது “வேண்டாம்” என்றேன். வேண்டிய பணத்தை என்முன் நீட்டினாள்.
“வேண்டாம், நான் உன்னை விரும்புகின்றேன்.”
“எனக்கும் உன்னில் விருப்பம்.”
“இந்தத் தொழிலை விட்டு நாம் ஒன்றாக வாழ்வோம்.”
“எனது விருப்பமும் இது….”
அவள் இலக்கம் தந்தாள். பல தடவைகள் நான் அவளுடன் எனது மோசமான ஆங்கிலத்தால் பேசினேன். எனது வதிவிடத்திற்கு வந்தபின் அவளுக்குப் போன் தொடர்பு கொண்டேன். அவளது தொலைபேசி வேலை செய்யவே இல்லை. விபச்சார வீதிக்கு அவளைத் தேடிச் சென்றேன். பிடிபடவே இல்லை.. அவளுடன் அருகில் நின்ற சில விபச்சாரிகளிடம் கேட்டேன். ஓர் விபரமும் கிடைக்கவேயில்லை.
அன்று, ஓர் விஸ்கிப் போத்தலை வெறுமையாக்கியபின் Saint Lazare ரயில் நிலையத்தின் முன்னர் மயங்கிய நிலையில் இருந்து அழுதேன். பல தடவைகள், பாரிஸ் வீதிகளில் தேடிய அக்கூஸ் எனக்குக் கிடைக்கவில்லை. இப்போதும் அவள் எங்கே எனக் கேட்டுக்கொண்டிருக்கின்றேன்.
எமது அனைத்து வீதிகளிலும் காதலின் பாதங்கள் உள்ளன எனச் சொல்லுவது என் விருப்பு. எனது நடை பதுமமானது, இந்த அழகிய பாதங்களை உடைக்காமல் இருப்பதற்காக. காலையில் இந்த வீதிகளில் நடந்தால் காதல் கவிதைளைக் கேட்க முடியும்.
இரவில் எனக்கு நியூமாவின் முகமே என் முன் வந்தது. இந்த முகத்தில் எனக்குத் தெரிந்தது கவிதையும் காதலும் காமமுமே. பகல்களிலே எனக்கு ஒருபோதுமே விருப்பம் இல்லை. இரவுகள்தாம் எனது சுவையான கவிதைகள். இந்த இரவுகள்தாம் எமது பகல் கண்ணீர்களை நீக்குவனவோ.
காலையில் நான் ஓர் பியர் குடிக்கவில்லை, காப்பி குடித்தேன். நேரம் காலை 6 மணியாக இருந்தது. இந்த நேரத்தில் அவளுக்குப் போன் பண்ணுவதா? ஏன் இந்த நேரத்தில் எழும்பினேன் என்பது எனக்குத் தெரியாது. குறைவான விஸ்கியை தோடம்பழச் சாறில் கலந்து குடித்தேன். நியூமாவின் முகம் பல வடிவங்களில் எனது முகத்தின் முன்னே தெரிந்தது. மீண்டும் விஸ்கியை அதனது போத்தலில் இருந்து குடித்தேன்.
எழுந்தபோது எனது உடல் நடுங்கியது. 12 மணி. ஆனால் இரவு 12 மணியல்ல. போதை எனது உடலைச் சுழட்டியபோதும் அவளது முகம் என் முன்.
போன் பண்ணினேன் அவளது கவர்ச்சிகரமான குரலைக் கேட்க.
“வணக்கம் நியூமா?”
“மன்னிக்கவும் நான் மூஸா.”
“நியூமா உங்கள் தங்கையா? அல்லது உறவினரான?”
“எனக்கு இந்தப் பெண்ணைத் தெரியாது.”
“அவள்தான் இந்த இலக்கத்தை என்னிடம் தந்தாள்.”
“அவளது தேசம் செனெகல்…”
“எனது தேசம் மாலி.”
தொடர்பு அறுந்தது.
மூஸா எனக்குப் பொய் சொல்கின்றானா ? என்னுள் எழுந்த முதலாவது கேள்வி. சில வேளையில் மூஸா அவளுடன் களவாகக் கிடக்கின்றான் என நான் நினைக்கலாமா? கிடப்பு தத்துவத்தில் நிறையப் பொறாமைகள் இருக்கும். எனக்கு மனைவி இருந்தால் அவள் என்னைச் சந்தேகப்படுவதுபோல நான் அவளைச் சந்தேகப்படுவேன். இவைகள் மறைவாகவே இருக்கும். வெளியில் வந்தால் விவாகரத்து எனும் கதைகள் தொடங்குவதை நான் பல வேளைகளில் கண்டுள்ளேன்.
சில நிமிடங்களில் நான் போன் செய்தபோது ஓர் இலக்கத்தை மாறி அமத்தினேனா எனும் கேள்வி வந்தது. மீண்டும் இலக்கங்களை எனது மயங்கும் விழிகளால் பார்த்தேன். சில ஆடின. 6 ஒரு வேளையில் 9 ஆகவும், பின் 9 என்பது 6 ஆகவும். மூஸாவை தப்பாக நினைத்தது கொடூரமாகப் பட்டது.
பல நிமிடங்களில் இலக்கங்கள் என்னைப்போல ஆடியதால் நான் நியூமாவுக்காக அழுதேன். அவளே எனது காதலி என உரத்துக் கத்தியது எவருக்கும் கேட்காது என்பது என் நினைப்பு. மீண்டும் கத்தினேன்.
எனது கதவு தட்டப்பட்டது.
தட்டுவது யார்?
ஒருவேளை நியூமாவா?
எனது இடம் நிச்சயமாக அவளுக்குத் தெரியாது, அவளது இடத்தையும் நான் கண்டதில்லை. நண்பர்களாக இருக்கமுடியாது. எனக்கு அவர்கள் குறைவிலும் குறைவே. பெண்களில் ஒருவராக இருக்கமுடியும். ஆனால் எந்தப் பெண்? நிச்சயமாக இப்போது என் நினைவில் கத்தியாகக் குத்தி நிற்பது நியூமா. ஆனால் கதவு மிகவும் பலமாகத் தட்டப்பட்டது.
காது வெடிக்குமோ எனும் அச்சத்தால் கதவைத் திறந்தேன்.
ஓர் கிழவர் கொடூரமான கோப முகத்தோடு நின்றார்.
“ஏன் கதவைத் தட்டினீர்கள்? எனக்கு உங்களைத் தெரியாதே?”
“எனது மனைவி உனது வீட்டுக்குள் உள்ளாள். அவளை வெளியால் விடு.”
அவருக்கு 80 வயது போல இருந்தது. அவரது மனைவிக்கு? சரி, அவரது மனைவி கிழவி என நான் எப்படிக் கருதமுடியும்? பல கிழவர்கள் இளம் பெண்களுடன் வாழும் உலகம் அல்லவா இது.
“உங்களை எனக்குத் தெரியாது, உங்கள் மனைவி எனது வீட்டுக்கு வரவில்லை. நான் தனிமையிலேயே வாழ்பவன்.”
“நீ பொய் சொல்கின்றாய்? அவள் உனது வீட்டுக்குள்தான் உள்ளாள்.”
“சரி அவளது வயது என்ன?”
“எனது வயதைக் காட்டிலும் 10 வயது அதிகம்.”
“எனது அம்மம்மாவைப் போல….”
“அவளுக்கு வயது கூடியபோதும் அவள் கிழ்வியல்லள்.”
“எனது ரூமுக்குள் நீங்கள் வந்து பார்த்தால் உண்மை தெரியும்…….” என அவரை எனது விழிகளால் அழைத்தேன்.
உள்ளே வந்தார். இரண்டு அறைகள். படுக்கும் அறைக்குள் போனார். கட்டிலின் கீழ் அவரது விழிகள் ஓடின. மறு அறை சாப்பாட்டு அறையாகவும் சமையல் அறையாகவும். படுக்கும் அறைக்குள் அருகில் இருந்த டொய்லட்டுக்குள் போனார்.
இருபது நிமிடங்கள். வெளியே வரவேயில்லை. சரி வயது போனவர் அவர் என்பதால் நேரம் அதிகம் என நினைத்துக்கொண்டேன். ஆனால் நியூமாவைத் தொடர்பு கொள்ளும் வெறி எனக்குள்.
33 நிமிடங்கள். சரி, கொஞ்சம் காத்திருப்போம்.
58 நிமிடங்கள்.
அவர் எந்த நிலையில் இருப்பார் என எனக்குள் நடுக்கம் வந்தது. ஓர் வேளை அவர் மரணமானால் நிச்சயமாக நானே கொலையாளி எனப் போலீசார் முதலில் சந்தேகிப்பர். நான் ஒருபோதும் ஓர் இலையானையே கொல்லவில்லை என்பது அவர்களுக்குத் தெரியுமா? மீண்டும் எனது வலது காதினை கதவுக்கு மிகவும் அருகில் நெருக்கினேன். ஓர் சத்தமும் இல்லை.
தட்டினேன்.
கத்தியபடி வெளியே வந்தார்.
“நான் சிந்தித்துக்கொண்டிருந்தேன். உனக்கு சிந்தனையில் விருப்பம் இல்லையா?”
“உங்களது மனைவி இங்கே இல்லை. நீங்கள் மிகவும் விரைவாக வெளியே போவது நல்லது.”
“சரி, உங்களது மனைவி எங்கே?”
நான் கதவைத் திறந்தேன். என்னைக் கோபத்தோடு பார்த்துவிட்டு வெளியே போனார்.
நேரம் 13 மணியாக இருந்தது.
இப்போது விஸ்கியைப் பச்சையாகக் குடித்துவிட்டு நியூமாவினது இலக்கங்களைத் தட்டினேன்.
“வணக்கம்.” என்று ஓர் பெண் குரல் கேட்டது.
“நியூமா, பிந்திப் போன் செய்வதற்காக மன்னிக்கவும்…. “
“மன்னிக்கவும் நான் நியூமா இல்லை…”
“நீங்கள் செனெகல் நாட்டின் பெண் இல்லையா? “
“இல்லை, எனது நாடு கமெரூன். எனது வயது 21…”
“மன்னிக்கவும்… “
“ஏன் மன்னிப்பு? உங்களது இனம் எது?”
“இலங்கை.”
“நான் ஒருபோதுமே ஓர் இலங்கையருடன் கிடந்ததில்லை… இன்று மாலை என் வீடு வருவீர்களா?”
கமெரூன். ஆபிரிக்க நாடு. 21 வயது. ஏன் இல்லை என்பது?
“வருவேன்.”
“நன்றி… ஒரு மணித்தியாலத்துக்கு 200 ஈரோ. 3 மணித்தியாலங்களுக்கு 500. “
தொடர்பு நின்றது.
நான் எனது போத்தலோடு வெளியால் இறங்கினேன். எனக்கு முன் எனது அனைத்துப் பெண்களும் வந்தனர்.
மயங்கி விழுந்தேன்.
விழித்தபோது கருகிய ஆட்டுத் தலை எனது முன் இருந்தது.
2025

க. கலாமோகன்
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து பிரான்சில் வசித்து வரும் தமிழ் எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்புகளில் தொடர்ந்து இயங்குகி வருகிறார். சிதறுண்ட தன்னிலைக் கூறில், எங்கேயும் தன்னைச் சரியாக பொருத்திக்கொள்ளாத இயல்பில் தத்தளிக்கும் மனங்களை கதைகளாக்கி வருகிறார்
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.