“என் பெயர் சிவப்பு” நாவலில் ஒரு சித்திரம். துருக்கி தேசம், ஐரோப்பாவுக்கும் கிழக்கத்திய தேசங்களுக்கும் நடுவில் ஒரு சாளரமென திறந்திருக்கிறது. ஒட்டோமான் பேரரசின் வானிபத் தொடர்பு, துருக்கிக்குள் பிற தேசத்து கலைகளை கொண்டுவருகிறது. புதிதாக உள்நுழையும் கலை அழகியலால், அந்த தேசத்தின் மரபான கலைஞர்களின் தன்னிலை பிளவுப்படுவதையும் தத்தளிப்பை உருவாவதையும் ஓரான் பாமுக் விரிவாக பேசுகிறார். நாவலில் நுண்சித்திரக்காரர்கள் ஒருவரையொருவர் கொலை செய்கிறார்கள். ஐரோப்பாவின் மறுமலர்ச்சிகால ஓவியங்களின் தாக்கத்திலிருந்து தங்கள் நுண்சித்திர மரபை காப்பதற்காக போராடுகிறார்கள். நம் நாட்டிலும் கிட்டத்தட்ட இதே நிலை போன நூற்றாண்டில் இருந்துள்ளது.
இந்தியா மேல் நெடுங்காலமாக வெவ்வேறு கலாச்சாரங்கள் தொடர்ந்து படிந்து கலந்திருக்கின்றன. ஒரு நீண்ட பண்பாட்டு தொடர்ச்சியுடைய இந்தியா, காலனி ஆதிக்கத்தின் இறுதிக்கட்டத்தில் தனது சாரத்தை மீட்டெடுக்க முற்படும்போது அதே குழப்பம்தான் உருவாகிறது. வெவ்வேறு கேள்விகள் பிறக்கின்றன. எது இந்தியாவின் சாரம்? இந்தியாவின் அழகியல் எது? எந்த சாரத்தை மீட்டெடுக்க யார் யாரை கொல்வது?
காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு ஸ்வராஜ்யத்தையும் சுய அடையாளத்தையும் கண்டெடுக்க முற்பட்ட தேசிய இயக்கம், அரசியல் பொருளாதார தளத்தில் செயல்பட்ட அதே தீவிரத்துடன் கலையிலும் செயல்பட்டது. அந்நிய ஆடையை புறக்கணிப்பு, சுதேசி உற்பத்தி, சுதேசி நீராவிக் கப்பல் நிறுவம் ஆகிய செயல்பாடுகள் நிகழ்ந்த வேளையில்தான் ‘இந்தியத்தன்மை’ கொண்ட கலையை உருவாக்கும் முயற்சியும் அபனிந்திரநாத் தாகூர், ககனேந்திரநாத் தாகூர் போன்றவர்களால் தொடங்கப்படுகிறது. காலனி ஆதிக்கத்திற்கு பிறகான இந்தியக் கலை, தன்னை மறுவார்ப்பு செய்துகொள்ளும் என்ற கனவுடன் ஆனந்த குமாரசாமி, ஸ்ரீ அரவிந்தர் போன்றவர்கள் செயல்பட்டனர்.
கலைக்கல்லூரிகளில் பின்னை மனப்பதிவாத(Post-impressionist) பாணியில் தேர்ச்சி பெற்ற இந்திய ஓவியர்கள், இந்தியத்தன்மைக் கொண்ட பேசுபொருளையும் வடிவத்தையும் வெவ்வேறு திசைகளில், ஒர் உலுக்கலுடன் தேடத் துவங்குகிறார்கள். ரவி வர்மா மேலை கலை வெளிப்பாட்டு முறையை கொண்டு இந்திய பேசுபொருளை வெளிப்படுத்த முயற்சிக்கிறார். அதனால்தான் இத்தாலிய ஓவியர் போட்டிசெல்லியின் வீனஸையும், ரவிவர்மாவின் திருமகளையும் பார்த்தால், இருவரும் சகோதரிகள் போல தெரிகிறார்கள். நந்தலால் போஸ், அம்ரிதா ஷேர் கில் போன்றவர்கள் அஜந்தா, ராஜ்புத், ஓவியங்களை இந்தியாவின் சாரம் கொண்ட ஓவியமாக கண்டடைந்து, அவற்றின் தாக்கமுடைய ஓவியங்களை வரைகிறார்கள். மேலை நாட்டு பாணியில் வரைவது, இந்திய பாரம்பரிய வடிவங்களில் வரைவது என இரு போக்குகள் நிகழ்ந்த வேளையில்தான் ஜாமினி ராய், “மேலை ஓவிய முறையைக் கொண்டு நாம் வரைவது எப்படி அந்நியமானதோ, அது போல அஜந்தா ஓவிய முறையைக் கொண்டு வரைவதும் இந்தியாவின் பெரும்பான்மையினருக்கு அந்நியமானதே.” என குறிப்பிட்டார்.
ஜாமினி ராய் கல்கத்தாவை சேர்ந்தவர். கல்கத்தா கலை கல்லூரிகளில் பயிலும் எல்லா மாணவர்களையும் போல ஜாமினி ராயும் மேலை ஓவிய மரபை தொட்டே ஓவியராகிறார். பிறகு அபனிந்திரநாத் தாகூருடன் ஏற்பட்ட தொடர்பால் இந்தியத்தன்மை நோக்கி நகர்பவர், வங்காள ஓவியப் பாணியில் ஈடுபடுகிறார். அஜந்தா, ராஜ்புத் ஓவிய மரபுகளால் தூண்டுதல் பெற்றவர். ஓர் எல்லை வரை சீனம் மற்றும் ஜப்பான் ஓவிய மரபுகளினாலும் தாக்கமுற்றிருக்கிறார். எனினும் ஆரம்பத்தில் வங்காள ஓவியப் பாணியைப் பின்பற்றி சில ஓவியங்களை வரைந்த ஜாமினியால், பிற்பாடு அதில் தரிக்க முடியவில்லை. இந்திய ஆலயங்களின் செவ்வியல் சிற்பங்களை தனது அகத் தூண்டுதலாக எடுத்துக்கொள்ளவதில் அவருக்கு விருப்பமில்லை. மாறாக, வங்காளத்தின் நாட்டுப்புற கலையான பட்ட சித்திர(Patta Chithra) மரபினால் அவர் ஈர்க்கப்படுகிறார். ஒரு கட்டத்தில் அவர், நவீன ஓவியர் என்றில்லாமல், தன்னை ஒரு சிறந்த பட்ட சித்திரக்காரராக(பட்டுவா) அடையாளப்படுத்திக்கொள்ளவே முனைகிறார். ஒட்டுமொத்தமாக இந்திய கலைஞர்கள் எல்லோரும் தத்தம் வேர்களை தேடிய காலம். அஜந்தா மரபையும் ராஜ்புத்தானிய மரபையும் மறு உருவாக்கம் செய்த காலம். அம்மரபுகள் யாவும் வேர்கள் அல்ல; மேலே வெளிப்படும் இனிய பழங்கள் மட்டுமே என்று ஜாமினி ராயுக்கு தோன்றியிருக்கலாம். அதனாலேயே அவற்றை மறுத்து இன்னும் காலத்தை அகழ்ந்துச் சென்றிருக்கலாம்.
காலனி ஆதிக்கத்திலிருந்து வெளியேறுவது என்பது ஒருவகையில் காலனிய பார்வைச் சட்டகங்களோடு பிணைந்த நவீன முறைமைகளினின்று வெளியேறுவதும் தான். அது கொண்டாடிய தர்க்கத்தைவிட்டு விலகுவதைப் போல அது தோற்றுவித்த நகரத்தைவிட்டும் விலகுவதுதான். அப்படியாகத்தான், சமூக அளவில் அந்நிய அடையாளத்தை களைந்து சொந்த அடையாளத்தை உருவாக்கும் தேசியவாத மறுமலர்ச்சி பயணம் தன்னியல்பாக இந்திய கிராமங்களை கண்டுகொள்கிறது. நகரத்திற்கு பதிலாக கிராமம்; தர்க்கத்திற்கு பதிலாக கள்ளமின்மை; நவீனயுகத்தின் சிக்கலுக்கு பதிலாக பாரம்பரியத்தின் எளிமை; இவை எல்லாம் கையிலெடுக்கப்படுகின்றன.
கிராமங்களை நோக்கி செல்வது ஒரே நேரத்தில் சுய அடையாளத்தை கண்டடைவதாகவும் மேற்கின் தொழில்மயமாக்கத்திலிருந்து தப்புவதாகவும் இருக்கிறது. கடகட இரைச்சலுடன் தன்னிச்சையாக ஓடும் இயந்திரங்களை விடுத்து மந்திர உச்சாடனம் நிறைந்த கை ராட்டைக்கு திரும்புவது போல. சாந்திநிகேதன், நகரத்திலிருந்து விலகி சந்தாலி பழங்குடி நிறைந்த பகுதியில் வேர்கொள்கிறது. ஹங்கேரியிலிருந்து இந்தியா திரும்பிய அம்ரிதா ஷேர் கில் கிராம மக்களை தனது சட்டகத்திற்குள் கொண்டுவருகிறார். காந்தி, “இந்தியா கல்கத்தாவோ பம்பாயோ அல்ல, அவள் தனது 7,00,000 கிராமங்களில் வாழ்கிறாள்” என்கிறார்.
ஜாமினி ராய் பட்ட சித்திர கலைமரபை தூண்டுதலாக கொள்வது என்பது கல்கத்தாவை அதன் கிராமங்களை நோக்கி இட்டுச் செல்வதே. அவர் தனது ஓவியங்களில் எடுத்தாளும் வாதுமை கண்களும், உணர்ச்சியற்ற முகங்களும், அடிப்படை நிறங்களும் பட்ட சித்திர மரபின் எளிமையை வெளிப்படுத்துகின்றன. வடிவமைப்பு, நிறம், பரிமாணம், ஒளி-நிழல் அமைப்பு(chiaroscuro) என்று எதிலும் சிக்கலை மறுத்து தனது ஓவியத்தில் எளிமையையே நோக்காக கொள்கிறார்.
அவர் பட்ட சித்திர மரபை பின்பற்றுவது என்பது வெறும் உள்ளடக்கத்தையும் வடிவத்தையும் எடுத்தாள்வதாக இல்லை. உருவாக்க முறையே அங்கு பிரதானமானது. உருவாக்க முறையை பின்பற்றாமல் தன் ஓவியம் நிறைவடையவில்லை என்பது அவரது எண்ணம். ஓவியங்களுக்கான வண்ணங்களை அவரே பாரம்பரிய பட்ட சித்திரக்காரர்களைப் போல கரியிலிருந்தும் மண்ணிலிருந்தும் கல்லிலிருந்தும் மலர்களிலிருந்தும் தயாரித்துள்ளார். கைராட்டை சுற்றுவதை காந்தி எப்படி வெறும் உற்பத்திச் செயல் என்பதைக் கடந்து தியானமெனவும் அப்யாசமெனவும் மாற்றுகிறாரோ, அப்படியே ஜாமினி ராயும் தனது ஓவியத்தை உருமாற்றுகிறார். தனிமனித எளிமையையும் தற்சார்பையும் தன்னிறைவையும் நோக்கி காந்தி மேற்கொண்ட அதே பயணத்தை ஜாமினி ஓவியத்தின் வழியே மேற்கொண்டார்.
நாட்டுப்புற கலையின் அம்சங்களான கூறியது கூறலும், கலைஞனின் தன்னடையாளத்தை மறுப்பதும் ஜாமினியின் படைப்புலகத்திலும் வெளிப்படுகின்றன. ஜாமினி, ஒரு பட்டறை அளவிற்கே அதிக எண்ணிக்கையில் ஓவியங்களை வரைந்திருக்கிறார். அவர் வாழ்நாளில் 20,000 ஓவியங்கள் வரைந்ததாக சொல்லப்படுகிறது. ஒரு ஓவியத்திற்கு ஒரே நேரத்தில் பல நகல்களை வரைவது, சிறு வேறுபாட்டுடன் மீள மீள ஒரே ஓவியத்தை வரைவது, தான் வரைந்து பிறரை வண்ணமிட வைப்பது, தனது ஓவியத்தில் பிறரது கையொப்பம் இடுவது போன்ற செயல்களில் அவர் ஈடுபட்டிருக்கிறார். அதன் மூலம் நவீன காலகட்டம் உருவாக்கிய “தனிபட்ட கலைஞன்” (an individual) என்ற ஆளுமையிலிருந்து தன்னை விலக்கிக்கொள்கிறார்.
இந்தியாவில் நாட்டுப்புற கலைகள் மட்டுமின்றி, செவ்வியல் கலைகளிலும் ஒரு தனிப்பட்ட கலைஞனுக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. மாமல்லை மகிஷாசுரமர்தினியை செதுக்கிய சிற்பியின் பெயர் நமக்கு தெரியாது. அங்கே இருப்பது தனிப்பட்ட கலைஞன் அல்ல. இந்திய சிற்ப மரபும். ஆன்மீக மரபுமே. காலனி ஆதிக்கத்தால் நம்மிடையே வந்த நவீன காலகட்டத்தின் “தனிநபர்க் கலை” என்ற அளவீட்டிலிருந்தே ஜாமினி விலகிச் செல்கிறார். அவர் “ஜாமினி ராய்” என்ற ஒரு தனிநபர்க் கலைஞனை முன்நிறுத்தவில்லை. அவரே சொல்வது போல, “பட்டச் சித்திரக்காரத் தொகையுள் ஒரு நவீன கலைஞன்” என்றே தன்னை முன்வைக்கிறார். அப்படியென்றால் தன்னை தன் நாட்டின் வேரில் பொருத்திக்கொள்ள நினைக்கும் ஒரு கலைஞன், அதை அடையும்போது வேரெனவே தானும் வெளித்தெரியாமல் போகிறானா?
ஜாமினியின் ஓவியத்தில் உணர்ச்சிகரம் இல்லை என்பது ஒரு விமர்சனமாக சொல்லப்படுகிறது. ஜாமினி உணர்ச்சிகளை வெளிப்படுத்த முயலவில்லை. அவர் தனது ஓவியங்களை குறியீட்டின் பொருள் விரிவின் மேலேயே கட்டமைக்கிறார். அவர் வரையும் கிருஷ்ணனும் கோபிகைகளும் உணர்வற்றே இருக்கின்றனர். இன்னும் சரியாக சொல்லவேண்டுமெனில் முகமூடிகள் அணிந்தாற் போன்று இருக்கின்றனர். அவர் வரைவது ஒரு தெருக்கூத்திற்கான முகமூடிகளைதான்; கூத்தை நம் மனதிற்குள் நிகழ்த்தக் கூடிய முகமூடிகளை. தியானத்தை தொட்டெழுப்பும் ஓர் அட்சர பீஜம் போன்றவை அவை. அந்த முகமூடிகள் போன்ற முகங்களினாலேயே ஜாமினி பொதுப்பண்பினை தொட முயல்கிறார். பிரெஞ்சுக் குகை ஓவியத்தின் குச்சி மனிதர்களுக்கும் ஆஸ்திரேலியக் குகை ஓவியத்தின் குச்சி மனிதர்களுக்கும் இடையே நாம் உணர்கிற பொதுப் பண்பு.
ஜாமினி ராயின் பிற்கால ஓவியங்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன. அவரைப் பற்றிய ஓர் ஆவணப்படத்தில் தனது இறுதிக்காலத்தில் கைகள் நடுங்க செதில் செதிலான வடிவில் அவர் ஓவியம் வரையும் காட்சி வருகிறது. ஏற்கனவே வரைந்த பாணியில் இப்புதிய முயற்சியை செய்துகொண்டிருந்தார். அதுவரை அவர் பாணியை இந்தியாவின் மிகச் சிறந்த கலை வடிவம் என்று பாராட்டியவர்களே அம்முயற்சியை வருத்தத்துடன் விமர்சித்தனர். அமெரிக்க ஓவியர் ஜாக்சன் பொலாக் தனது தனித்துவமான வடிவை கண்டடைந்து அதில் பல ஓவியங்களை வரைந்த பின்னர் அடுத்த பாய்ச்சலை நிகழ்த்த முடியாமல் பல மாதங்கள் சுவரை வெறித்துக்கொண்டு தவித்திருக்கிறார். அந்த தவிப்பு ஜாமினியின் நடுங்கும் முதிய கைகளிலும் இருந்திருக்கலாம்.
இந்தியாவின் வேரை அடைவது குழப்பமானதாக தோன்றுகிறது. இந்தியா மரமெங்கும் வேர் நிறைந்த ஆலம் என்றே நினைக்கிறேன். இன்று புல்லாங்குழலின் துவாரங்களில் வழிந்து பரவும் மோகனத்தின் முதல் ஸ்வரம், முன்பு சுடலையில் எரிந்தடங்கிய எலும்பிலிருந்து வெளி குதித்திருக்கலாம். ஜாமினி இசைப்பதற்கு கையில் எடுப்பது அந்த எலும்பையே. காந்தி, தாகூர், ஸ்ரீ அரவிந்தர், ஆனந்த குமாரசாமி என்று பலருடைய கண்களில் கனத்த கனவு ஜாமினி ராயின் கண்களிலும் இருந்திருக்கிறது. அது, வேரில் மலர்வது.
***
சியாம்
சியாம். சென்னையில் தனியார் நிறுவனத்தில் இயந்திர வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். இலக்கியத்துடன் கர்நாடக இசையிலும் ஆர்வம் உள்ளவர்.