ஜென் கவிதைகள் : க.நா.சு மொழிபெயர்ப்பு

தேர்வு : ஶ்ரீநிவாச கோபாலன்

தமிழில் ஜென் கவிதை மொழிபெயர்ப்பு நூல்கள் ஏராளமாக வந்துள்ளன. பாரதியாரின் ஜென் கவிதை மொழிபெயர்ப்பு அனைவரும் அறிந்ததே. புகழ்பெற்ற நெடுங்கவிதைகளை எழுதிய சி. மணியும் அளவில் சிறிய ஜென் கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறார்.யுவன் சந்திரசேகரின் மொழிபெயர்ப்பில் வெளியான ‘பெயரற்ற யாத்ரீகன்’ (2003) என்ற தொகுப்பு பிரபலமானது.

தமிழில் புதுக்கவிதை இயக்கம் தோன்றிய காலந்தொட்டு கவிதையியல் குறித்து எழுதிவந்த க.நா.சு.வும் தனது ‘இலக்கிய வட்டம்’ இதழின் வாசகர்களுக்கு ஜப்பானிய ஜென் கவிதைகளை அறிமுகம் செய்துவைத்தார்.

அமெரிக்க, ஐரோப்பிய இலக்கியத்தைப் போலவே ஜப்பானிய இலக்கியத்திலும் (ரஷ்ய இலக்கியத்திலும்தான்) ஈடுபாடு கொண்டிருந்தவர் க.நா.சுப்ரமணியம். தனது ‘இலக்கிய வட்டம்’ பத்திரிகையில் ஜப்பானிய இலக்கியம் குறித்து மதிப்புரைகள், அறிமுகக் குறிப்புகள் எழுதியுள்ளார். ‘சுதந்திரத்துக்குப் பிறகு மொழிபெயர்ப்புகள்’ (சுடர், 1972) என்ற கட்டுரையில் ‘சில இளங்கவிஞர்கள் மொழிபெயர்த்து வெளியிட்ட’ அமெரிக்க, ஜப்பானிய கவிதைத் தொகுப்பைப் பாராட்டுகிறார். இறுதிக்காலத்தில் ‘டெக்கான் கிரானிக்கிள்’ நாளிதழில் எழுதிய தொடரில் ‘Zen and its ways’ என்ற அருமையான பத்தியை எழுதியிருக்கிறார். க.நா.சு.வின் ‘உலக இலக்கிய சிகரங்கள்’ என்ற பட்டியலிலும் ஜப்பானிய ஜென் கவிதைகளைப் பரிந்துரைக்கிறார்.

ஜப்பானிய இலக்கியத்தில் அவரை மிகவும் கவர்ந்த ஜென் கவிதைகளை ‘இலக்கிய வட்டம்’ இதழ்களில் தொடர்ந்து மொழியாக்கம் செய்து வெளியிட்டார். பிறகு ‘கசடதபற’ ஜனவரி 1971 இதழில் மூன்று கவிதைகள் வெளிவந்துள்ளன.

இந்த மொழிபெயர்ப்புகள் உலக இலக்கியம் தொடர்பில் க.நா.சு. கொண்டிருந்த பல அக்கறைகளில் ஒன்றைச் சுட்டுகின்றன. இதுவரை ஒருசேரத் தொகுக்கப்படாதிருந்த இம்மொழிபெயர்ப்புகள் விரைவில் நூலுருவம் பெறவுள்ளன. அவற்றிலிருந்து சில கவிதைகளை ‘அகழ்’ வெளியிடுகிறது.

-ஶ்ரீநிவாச கோபாலன்

1.

என் வீடு பற்றி எரிந்து போய்விட்டது.
வானத்துச் சந்திரனை என்னிடமிருந்து
மறைக்க இப்போது எதுவுமில்லை

மஸா ஹிடே (1657-1723)

2.

எல்லாப் பாட்டுக்கும் ஆதாரம்
விவசாயி நாற்றை நடும்போது
தனக்குள் முனகுவது தான்.

பாஷோ

3.

மணிகள் அடித்து ஓய்ந்தன;
அதன்பின் மலர்கள்
வாசம் அடித்தன.

பாஷோ

4.

இலையற்ற மரக்கிளையிலே
ஜாக்கிரதையாகத் துளிர்க்கிறது
மாலைச் சூரியனைக் காணும் ஒரு காகம்.

பாஷோ

5.

பழைய குட்டை அது;
ஒரு தவளை அதில் தத்துகிறது.
—சள சள.

பாஷோ

6.

காற்றையும் ஓவியமாக்கிக்
காட்டுகிறது நாணல்—
வேறு தூரிகை தேவையில்லை.

ஸர்யூ

7.

கிழட்டுத்தனம்
வருகிறது என்று
தெரியும்போது
வீட்டுக் கதவைச்
சாத்திவிட்டு
வேலைக்காரனைக்கொண்டு
“யஜமான் வீட்டிலில்லை”
என்று சொல்லித்
திருப்பியடிக்க
இயலுமானால்
எவ்வளவு
நன்றாக இருக்கும்?

கோகின்ஷு கவிதைத் திரட்டு
ஜப்பான் 10-வது நூற்றாண்டு

8.

பண்டைக் காலத்திலிருந்தே
இவ்வுலகம் இவ்வளவு
சோகம் நிறைந்தா உளது
—அல்லது எனக்காக மட்டுமே
இத்துயர வேஷம்
தரித்துள்ளதா?

கோகின்ஷு கவிதைத் திரட்டு
ஜப்பான் 10-வது நூற்றாண்டு

9.

என்ன ஆனந்தம்! (1)

நூறு நாட்கள்
வியர்த்தமாக
வார்த்தைகளை
முறுக்கி எடுத்து
கொட்டி அளந்து
ஓய்ந்துபோன சமயத்தில்—
ஒரு கவிதை
அமைந்துவிட்டது.

டச்சிபானா அகேமி
(1812-1868)

10.

என்ன ஆனந்தம்! (2)

என்றோ
பொழுது போகாமல்
எடுத்துப் புரட்டிய
புஸ்தகத்திலே
ஒருவனைக் கண்டேன்—
எல்லா விதங்களிலும்
என்னைப் போன்றவன் அவன்!

டச்சிபானா அகேமி
(1812-1868)


11.

என்ன ஆனந்தம்! (3)

காலை எழுந்து
உலாவி வருகையில்
நேற்று அங்கு
இல்லாத புஷ்பம்
பூத்திருப்பதைக்
கண்டேன்.

டச்சிபானா அகேமி (1812-1868)

12.

வஸந்தத்தில் என் குடிசை
அதில் ஒன்றுமில்லைதான்
ஆனால் அதில் இல்லாதது என்ன?

ஸோடோ (1642-1716)

13.

மலைகளையும் பள்ளத்தாக்குகளையும்
பனி திருடிக் கொண்டது—
எதையும் விட்டு வைக்கவில்லை.

ஜோஸோ (1661-1704)

14.

பாம்பு புல்லுக்குள் மறைந்து விட்டது.
ஆனால் அதன் கண்கள்
அதே இடத்தில் இருக்கின்றன!

தாகஹாமா க்யொஷி (பி. 1874)

15.

மலைச் சரிவிலே உருண்டுவரும்
கல்லாக நான் ‘இன்று’
என்னும் இடத்தை எட்டிவிட்டேன்

இஷிகாவா டாகுபோடு
(1885-1912)


16.

நடவு நடும் பெண்கள்
பாடும் பாட்டுகளிலே மட்டும்தான்
சேறு பட்டிருக்கவில்லை.

கொனிஷ் ரெய்ஸான்

க.நா.சுப்ரமணியம்

க.நா.சுப்ரமணியம் (ஜனவரி 31, 1912 - டிசம்பர் 16, 1988) நாவலாசிரியர், இலக்கிய விமர்சகர், கவிஞர், மொழி பெயர்ப்பாளர், இதழாளர். நவீன தமிழிலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர்.

தமிழ் விக்கியில் 

ஸ்ரீநிவாச கோபாலன்

ஶ்ரீநிவாச கோபாலன் பதிப்பாளர். ‘அழிசி’ (Azhisi eBooks) என்ற மின்னூல் பதிப்பகத்தை தொடங்கி நடத்திவருகிறார். நாட்டுடைமையான நூல்களையும் அச்சில் இல்லாத முக்கியமான நூல்களையும் தேடிக் கண்டடைந்து மின்புத்தகமாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

1 Comment

  1. மிகவும் சிறப்பா கவிதை மொழிபெயர்ப்பும்,,வாழ்த்துகள்

உரையாடலுக்கு

Your email address will not be published.