இரவு என்ன நிகழ்ந்திருக்கிறதென்று பார்ப்பதற்காகப் படுக்கையை விட்டு எழுந்தேன். எனக்கு அப்போது பதிமூன்று வயது. அரைகுறையாகப் பனிபடர்ந்த ஜன்னலினூடே பனிப்பொழிவைப் பார்த்தபடியே உறங்கிப் போயிருந்தேன்.
மூன்று நான்கு நாட்களுக்காவது தொடர்ந்து பனிபொழியும் என்ற நம்பியிருந்தேன். ஆனால் விழித்துப் பார்த்தபோது பனிப்புயல் விரைவிலேயே முடிந்து விட்டதைப் போலிருந்தது.
பனிப்பொழிவின் காரணமாக முன்னிரவு ஒரு வெண்ணிறக் காடாக வெடித்துக் கொண்டிருந்ததை நேற்று அரைத்தூக்கத்துடன் பார்த்ததை நினைவு கூர்ந்தேன். பனியிற் புதைந்த தெருக்களையும், வீடுகளையும் நேற்றிரவு கனவு கண்டிருந்தேன்.
வெறுங்கால்களுடன் ஜன்னலை நோக்கி விரைந்தேன். ஜன்னல் முழுக்கப் பனி கிறுக்கியிருந்ததால் என்னால் அதனூடாகப் பார்க்க இயலவில்லை. அறை குளிர்ந்து கிடந்தது. திறந்திருந்த ஜன்னலினூடாக வந்த பனியின் வாசனை ஜன்னல் மேலுள்ள கீற்றுத்துளையில் தலை சாய்த்த விலங்கொன்றின் ஈரப்பதம் மிகுந்த மூக்கிலிருந்து வரும் சுவாசத்தைப் போலிருந்தது.
அந்த வாசனையையும், ஜன்னலின் இருட்டையும் கொண்டு பார்க்கும்போது பனி இன்னும் பொழிந்து கொண்டிருப்பது தெரிந்தது. கண்ணாடிப் பரப்பைத் தேய்த்து பார்ப்பதற்கு வசதி செய்து கொண்டேன். இம்முறை பனி என்னை ஏமாற்றவில்லை என்பதைக் கண்டேன். வெண்ணிறத்தில், மௌனமாக, காற்றைக்கூட அசையவிடாமல் அடர்த்தியாகப் பொழிந்து கொண்டிருந்தது பனி. தெருக்களும், வீடுகளும் நான் கனவு கண்டிருந்ததைப் போலவே இருந்தன. நடுங்கிக் கொண்டும், மகிழ்ச்சியோடும் அவற்றைப் பார்த்தபடியே இருந்தேன். பிறகு அவசர அவசரமாக உடை மாற்றினேன். காலை உணவை முடித்துவிட்டு, பள்ளி துவங்க இரண்டு மணி நேரம் முன்னதாகவே புயலுக்குள் இறங்கி விட்டேன்.
உலகமே மாறியிருந்தது. வீடுகள், வேலிகள், மலட்டு மரங்கள் அனைத்தும் புதிய வடிவெடுத்திருந்தன. எல்லாமே வளைந்தும், வெண்ணிறமாகவும், அடையாளம் தெரியாமலும் இருந்தன.
நான் அந்தத் தெருக்களினூடே என் பயணத்தைத் துவங்கினேன். என்னைச் சுற்றிலும் நான் அறியாதவையே சூழ்ந்திருந்தன. அடர்த்தியாகப் பொழிந்து கொண்டிருக்கிற பனியின் ஊடே வீடுகளும், மரங்கள், வேலிகள் ஆகியனவும், இரவில் வானிலிருந்து மிதந்து இறங்கிய பிசாசு உருவங்களைப் போலிருந்தன. காலை வெளிச்சமற்று இருந்தது. பனிப்பொழிவு ஓர் அற்புத விளக்கைப் போல தெருக்களின் மீது தொங்கிக் கொண்டு அசைந்தபடி இருந்தது. என் தலைமேல் தொங்கிய பனித்திரள்கள் மர்மமாக மின்னின.
இந்தப் புதிய உலகம் எனக்குப் பிடித்தமானதாக இருந்தது. மறைந்திருந்த உலகை விட இந்த உலகே எனக்கு உரியதாக இருந்தது.
பனித்திரள்களுக்கு உள்ளும், புறமும் ஒரு சோம்பேறி முயலைப் போல் குதித்துக் கொண்டு பள்ளியை நோக்கிச் சென்றேன். பனித்திரள்களின் மென்மையான விளிம்புகளைச் சிதைப்பது தவறெனத் தோன்றியது. எனக்குப் பிறகு யாரும் இந்த வழியே கடக்க மாட்டார்கள் என்றே நம்பினேன். அந்த பட்சத்தில் பொழியும் அடர்த்தியான பனி சேதத்தைச் சரி செய்து விடும். இந்த நம்பிக்கையினால் உற்சாகம் கொண்டு ஒரு உல்லாசமான பயணியைப் போல என் வழியைத் தொடர்ந்தேன். என்னைப் போல் யாரும் இந்த மாதிரி அபாயத்தோடு விளையாட மாட்டார்கள் என்று தோன்றியது. பிறகு பனிப்புயலின் அற்புத சாத்தியங்களைப் பற்றி நான் உணர, உணர, ஒளிரும் இந்தப் புதுவுலகு சேதப்படுவது பற்றிய கவலையை நிறுத்தி விட்டேன். பிற பனிப்பொழிவுகள் உருகும்; அள்ளி எடுக்கப்பட்டு விடும். ஆனால் இந்தப் பனி என்றும் மறையாது. இனி சூரியன் எப்போதும் உதிக்கப்போவதில்லை போலிருந்தது. நான் குதித்துக் கொண்டு சென்று கொண்டிருக்கிற இந்தச் சிறு விஸ்கான்சின் நகரம் இனி சாகசங்களும், அபாயங்களும் நிறைந்த ஓர் ஆர்க்டிக் நிலப்பரப்பைப் போலாகி விடும் போலிருந்தது.
பனியில் முழுக்க நனைந்து பள்ளியை அடைந்த போது, அங்கு ஏற்கனவே பனி சூழ்ந்த பல உருவங்களைக் கண்டேன். பெண்கள் பள்ளிக்குள்ளேயே தங்கியிருக்க, பையன்கள் பனிப்புயலில் நின்றிருந்தனர். பனித்திரள்களின் உள்ளும், புறமும் குதித்துக் கொண்டும், பள்ளியின் முன்புறம் சேகரமாயிருக்கிற பனிவயல்களின் மீது உருண்டு கொண்டுமிருந்தனர்.
ஒலியொடுங்கிய கத்தல்கள் தெருக்களை நிரப்பின. பனிப்பொழிவில் நம் குரல் மிகுந்த தொலைவு வரை கேட்கிறதென்று யாரோ கண்டுபிடித்திருந்தார்கள். இதனால் அங்கு எல்லாரும் அலற ஆரம்பித்தோம். ஒரு பத்து நிமிடம் கத்தியிருப்போம். இதற்கு மேலும் எங்கள் குரல்கள் வெகுதொலைவு பயணிக்காது என்றும், எங்கள் உடல்கள் பனியில் கிட்ட்த்தட்ட விரைத்து விட்டன என்றும் அறிந்ததும் நிம்மதியடைந்தோம்.
இரண்டு மணிநேர குதித்தலுக்குப் பிறகு, பனியில் உறைந்த முகங்களோடு, விலகிச் செல்ல இயலாத ஒரு விளையாட்டைப் போலப் பொழியும் பனியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு பள்ளி மணி ஒலிப்பதற்காகக் காத்துக்கொண்டிருந்த என் போன்ற பையன்களோடு இணைந்து கொண்டேன்.
வகுப்புக்குள் சென்று அமர்ந்த பிறகும் ஜன்னல் வழியாகப் பனிப்பொழிவைப் பார்ப்பதைத் தொடர்ந்தோம். எதிர்பார்த்திருந்த படியே காலை இருண்டு கொண்டே வந்தது. அறையில் மின் விளக்குகளைப் போட்டுக் கொள்வது அவசியமாயிற்று. ஜன்னலுக்கு வெளியே மிதந்து கொண்டிருக்கிற வெளிர் புயலைப் போலவே மின் விளக்குகளின் ஒளியும் ஒரு சாகசமெனத் தோன்றிற்று.
விளக்கின் மஞ்சள் வெளிச்சத்தில் பள்ளி மறைந்து, எங்கள் முன் ஒரு சுற்றுலாத்தளம் விரிவதைப் போல் தோன்றியது. ஆசிரியர்கள் கூட மாற்றம் கொண்டு தோன்றினார்கள். அவர்களது கண்கள் அடிக்கடி ஜன்னல்களை நோக்கித் திரும்பிக் கொண்டும், மேசைக்குப் பின்னால் அமர்ந்திருக்கிற எங்களைப் பார்த்துக் கொண்டுமிருந்தன. நாங்கள் மிகுந்த கிளர்ச்சியடைந்திருந்தோம். புவியியல் மற்றும் கணிதபாடங்களிலிருந்து வரும் வாக்கியங்கள் கூட எங்களைக் கிளர்ச்சியடையச் செய்து கொண்டிருந்தன.
இடைவேளையின்போது தாழ்வாரங்களினூடே நடந்தபடி, பனிப்புயலைப் பற்றி முணுமுணுத்துக் கொண்டோம். இந்நேரம் பனி எந்த ஆழத்துக்குப் பொழிந்திருக்கும் என்று பேசிக் கொண்டோம். எங்கள் ரகசிய முணுமுணுப்புகளுக்கிடையில், வகுப்பறை வாயிலில் நிற்கும் ஆசிரியர்களைப் பதற்றத்தோடு பார்த்துக் கொண்டோம்.
இந்த ஆசிரியர்களை நினைத்து எனக்கு வருத்தமாக இருந்தது. குறிப்பாகப் பல வருடங்களுக்கு முன்பு நான் ஐந்தாம் வகுப்பிலிருந்தபோது எனக்குக் கற்பித்த ஆசிரியையை நினைத்து. அவள் அறையைக் கடக்கையில் திறந்த கதவினூடாக அவளைப் பார்த்தேன். அவள் பிற ஆசிரியர்களை விடவும் இளமையாக இருந்தாள். தலையைச் சுற்றிச் செல்லும் இரு கருஞ்சடைகளும், வெண்ணிறத்தில் கஞ்சி போட்ட சட்டையும், என்னை எப்போதும் கருணையோடு பார்க்கும் கண்களும் கொண்டிருந்தாள். இப்போது அவள் பெரிய மேஜைக்குப் பின் அமர்ந்தபடி ஜன்னலுக்கு வெளியே அவளது வகுப்பு நின்று கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மாணவர்களின் முணுமுணுப்புக்கோ, கெக்கலிப்புக்கோ அவள் கவனம் கொடுத்தமாதிரி தெரியவில்லை.
என் தற்போதைய ஆசிரியை மெலிந்து, உயரமான, ஆண்முகம் கொண்ட ஒரு பெண்மணி. மதியத்துக்குள் அவள் குரல் கேட்க இயலாத அளவுக்கு நான் மகிழ்ச்சியாயிருந்தேன். அவள் தலைக்கு மேல் இருந்த கடிகாரத்தைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தேன். பள்ளிக்கு வரும்போது, இனி வெளிச்சமே வராதென்றும், பனி பொழிந்து கொண்டே இருக்குமென்றும் நான் கொண்டிருந்த உணர்வு வலுப்பட்டுக் கொண்டே வந்து இப்போது உறுதியாகி விட்டது. காற்றும், இருளும், நிலைத்த பனியும் நிறைந்த உலகிற்குச் செல்ல வேண்டுமென்ற என் ஆவல் அடிக்கடி என்னை இருக்கையிலிருந்து எழுப்பிக் கொண்டிருந்தது.
மூன்று மணிபோல் நாங்கள் புயலுக்குள் விரைந்தோம். பள்ளி வாயிலை அடைந்தவுடன் எங்கள் கூப்பாடு நின்றது. நாங்கள் பார்த்த காட்சி எங்களை அமைதியாக்கி விட்டது. இருண்ட வானின் கீழ் தெருவில் பனி மலைபோலக் குவிந்து கிடந்தது. மேலே பனிப்பொழிவு அடர்த்தியான மேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. பனியைத் தவிர எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. மற்ற எல்லாம் மறைந்து விட்டிருந்தது. வானம் கூடத் தொலைந்து போயிருந்தது.
ஆசிரியர்கள் வெளியே வந்து முகம் சுளித்தபடித் தங்களைச் சுற்றிலும் பார்ப்பதைக் கண்டேன். சிறிய வகுப்புகளைச் சேர்ந்த குழந்தைகள் ஆசிரியர்களின் அருகில் பயத்துடன் நின்றபடி பேசிக்கொண்டிருந்தனர். நான் இரு கருஞ்சடைகள் கொண்ட ஆசிரியை செல்வி வீலர் என்னைப் பார்க்கும் வரை காத்திருந்தேன். பிறகு மென்மையான குரலில் ஒலித்த அவளது எச்சரிக்கையையும் கவனிக்காமல் புயலுக்குள் பாய்ந்தேன். மிகுந்த வீரமாக உணர்ந்த போதிலும், பனிப்புயலில் துணிச்சலோடு மறைந்தபோது, இனி செல்வி வீலரால் என்னைக் காண இயலாது என்று எண்ணி வருந்தினேன். அவள் இன்னும் என்னைப் பற்றித்தான் எண்ணிக்கொண்டிருக்கிறாள் என்றும், என் பாதுகாப்பு குறித்து கவலை கொண்டிருக்கிறாள் என்பதிலும் நான் உறுதியாக இருந்தேன். இந்த எண்ணம் பனிபுயலால் எனக்கு ஏற்பட்ட கிளர்ச்சியை மேலும் அதிகரித்தது.
ஒருமணி நேரத்துக்குப் பின் நான் தனியனாய் இருந்தேன். குதித்துக் குதித்து என் கால்கள் களைத்திருந்தன. என் முகம் எரிந்தது. இருள் இன்னமும் கூடியிருந்தது. புயலுக்கிருந்த நட்புணர்வு போய்விட்ட மாதிரி தெரிந்தது. காற்று கூர்மையான முனையால் என்னை அறுத்தது. நான் வீட்டை நோக்கித் திரும்பினேன்.
பனிக்குவியலைப் போலத் தோன்றிய என் வீட்டை அடைந்தேன். பனியைத் தோண்டியபடியே முன் கதவை நோக்கிச் சென்றேன். இதயம் பலமாக அடித்துக் கொண்டது. புயலைக் கடைசியாக ஒரு முறை பார்ப்பதற்காக நின்றேன். அதை விட்டுச் செல்வது கடினமான காரியமாக இருந்தது. ஆனால் வாழ்வில் முதல் முறையாக வயது வந்தவர்களின் தருக்கம் என்னை வழிநடத்தியது. நாளை இன்னும் அதிகமாகப் பனி பொழியும். தற்போது இந்தக் காற்றிலும், பனி நிறைந்த இருளிலும், அற்புதமாகப் புதையுண்டிருக்கிற இந்தத் தெருவிலும் விளையாட்டுத்தன்மை நிச்சயம் இல்லை.
* * *
சாப்பிடுவதற்கு ஏதாவது வேண்டுமென்று அறிவித்தபடியே வீட்டுக்குள் நுழைந்தேன். கோட்டைக் கழற்றி, என்னை உலுக்கிச் சுத்தம் செய்து கொண்ட உடனேயே ஜன்னல் பக்கம் சென்று விட்டேன். இப்படிப் புயல் தொடர்ந்து வீசிக் கொண்டிருப்பது நம்பக் கடினமாக இருந்தது.
உணவருந்தும் மேஜையில் மிகுந்த கிளர்ச்சியுடனிருந்தேன். என்னை சுற்றிலும் என்ன பேசப்படுகிறது என்று கேட்க இயலாது நடுங்கிக் கொண்டிருந்தேன். வெளியிலிருக்கிற இரவையும், என் முகத்தில் இன்னும் ஊதிக் கொண்டிருக்கும் புயலையும் இந்த அறையிலிருந்து கொண்டே உணர முடிந்தது. நான் இன்னும் தெருவிலேயே இருப்பதாகப் பட்டது. என் கண்கள் பனியைப் பார்த்த வண்ணமும், என் மூக்கு அதைச் சுவாசித்த வண்ணமும் இருந்தன. சாப்பாட்டு அறையும், அதிலிருந்தவர்களும் நெடுந்தொலைவு சென்று விட்டனர். வெண்ணெய் தடவிய ரொட்டித்துண்டு ஒன்றை எடுத்துக் கொண்டு மாடியிலிருக்கிற என்னறைக்குச் சென்றேன்.
செய்வதற்கு நிறைய காரியங்கள் இருந்தன. தோலாலான என் காலணிகளின் மீது பன்றிக் கொழுப்பு தேய்த்து அவற்றை நீர்புகாத வண்ணம் மாற்றுதல்; என் தபால் வில்லைத் தொகுப்பை ஒழுங்கு செய்தல்; சமீபத்தில் எனக்குக் கிடைத்த மான் குளம்புக் கத்தியை சாணை பிடித்தல்; என் புதிய ஹாக்கி மட்டைக்கு நாடா சுற்றுதல; என் சென்ற பிறந்த நாள் பணத்தில் வாங்கிய அரை டஜன் புதிய புத்தகங்களிலொன்றைப் படித்தல், அல்லது நான் அப்போது செய்ய நினைத்திருந்த ஐஸ் படகுக்கான திட்டத்தைத் திரும்ப வரைதல். இதில் எந்தச் செயலும் சாத்தியமற்று இருந்தது. ஜன்னலுக்கு அருகில் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டேன். சிந்திக்க இயலாத நிலையில் இருந்தேன். இரவில் வெளிர் புயல் சுழன்று கொண்டிருந்தது. ஜன்னல் மீதிருந்த பனியைத் துடைத்தபடி, ஒரு மணிநேரம் பனிப்பொழிவைப் பார்த்தபடியிருந்தேன். பிறகு தூக்கம் வந்ததால் படுக்கைக்குச் சென்றேன். இன்று பனிப்புயலில் விரைந்த என்னைக் கண்ட செல்வி வீலர் திங்களன்று மீண்டும் உயிரோடு பார்த்தால் எவ்வளவு மகிழ்ச்சியுறுவாள் என்று உறக்க மயக்கத்துடன் எண்ணிப் பார்த்தேன்.
மீண்டும் எழுந்தபோது ஜன்னல் வழியே பார்க்க இயலாதபடி இருந்தது. என் வீட்டில் ஏழுமணிக்குப் பிறகு அடுப்பு எரிவதில்லை. ஏழுமணிக்கு முன்பு வரை வீடு குளிரால் நடுங்கிக் கொண்டிருக்கும். ஜன்னல்கள் அடர்த்தியான ஐஸ் படலத்தால் மூடப்பட்டிருக்கும். ஆனால் உடையணிந்து கொண்டிருந்தபோது பனிப்பொழிவு முடிந்து விட்டது என்பதை அறிந்தேன். வெளியில் அளவுக்கதிகமான காற்று வீசிக் கொண்டிருந்தது. ஜன்னல் துளைகளினூடே வரும் காற்று முன் போல அவ்வளவு புத்தியல்போடு இல்லை.
இன்னும் இருண்டுதான் இருந்தது. வறண்டு கூதல் கொண்ட காலை உருகும் மெழுகுவர்த்தியைப் போல பனியின் மீது படுத்துக் கிடந்த்து. வானம் பனிப்பொழிவை நிறுத்தியிருந்தது. காற்று பனிக்குவியல்களை மேலெழுப்பியதில் கூரைகளில் குட்டிப் பனிப்புயல்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன.
வெளியில் சென்று வெளிப்புறத்தை ஒரு பத்து நிமிடங்களுக்கு ஆராய்ந்தேன். வெளியில் சென்று விளையாடக் கூடாது என்று என்னை யாரும் எச்சரிக்க வேண்டிய அவசியமிருக்கவில்லை. வெளியில் நிற்கமுடியாத அளவுக்கு காற்று வீசி என் தோல் கிட்டத்தட்ட உறைந்து போயிருந்தது. காலையுணவை முடித்துக் கொண்டபின், கணப்படுப்புக்கு முன்னால் ஒரு கைதியைப் போல அமர்ந்து கொண்டேன். பிறகு குப்புறப் படுத்தபடி தாந்தேயின் இன்ஃபெர்னோ பக்கங்களைப் புரட்டினேன். அது டொரேயின் பயங்கர ஓவியங்களால் நிறைந்திருந்தது.
வீடு சமையல் வேலையிலும், தூய்மைப்படுத்தலிலும் சுறுசுறுப்பாக இருந்தது. இவையெல்லாம் பெரியவர்களின் மந்தமான செயற்பாடுகள். மிகவும் தனியனாய் உணர்ந்தேன். குளிரில் விரைத்துப் போய்விடாதிருக்க, கணப்படுப்பின் தீ அணைந்து விடாமல் பார்த்துக் கொண்டேன். காலை முழுக்க நிலவறையிலிருந்து விறகுகளைக் கொண்டு வந்த வண்ணம் இருந்தேன். கணப்புக்கல் மீது சாய்ந்து கிடந்ததில், உடல் வியர்த்தும், சூடேறிக் கொப்பளித்தும் கிடந்தேன். ஒவ்வோர் அரைமணி நேரத்துக்கும் பனியைப் பார்ப்பதற்காக ஜன்னல் அருகில் சென்றேன். சுழலும் பனித்திரள்களின் காட்சியும், இரக்கமற்ற காற்று வீடுகளின் மீது மோதும் ஒலியும், என்னை மீண்டும் கணப்பருகில் செல்லத் தூண்டிற்று.
பின்மதியம் வரை இப்படியே பொழுதைக் கழித்தேன். சீக்கிரமே இருள ஆரம்பித்து விட்டது. பனி ஈய நிறத்துக்கு மாறிவிட்டது. காற்று நின்றுவிட்டது. இறந்துவிட்ட புயல் தெருவில் இன்னும் படுத்துக் கிடந்தது. ஜன்னல் வழியே பார்த்த போது உலகில் மக்கள் யாருமே இல்லாதது போலத் தோன்றியது. இருண்ட பனி வெறுமையாக இருந்தது. நான் நடுங்கியபடி கணப்பை நோக்கிச் சென்றேன்.
அரைமணி நேரம் கழித்து வாயிலில் அழைப்பு மணி ஒலித்தது. இரவுணவுக்கு விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள். எட்டு மைல்களுக்கு அப்பாலிருக்கிற கார்லிஸ் என்ற குறுநகரத்தில் வாழும் ஜோனஸ்களே அவர்கள். அவர்கள் தங்கள் மகள் அன்னாவையும் அழைத்து வந்திருந்தார்கள்.
வீட்டுக்குள் விளக்குகள் எரிய ஆரம்பித்தன. நெருப்பின் வெப்பத்தில் வெந்தும், கிறங்கியும் கிடந்த அவர்களை வரவேற்பறையில் சந்தித்தேன். புயல் விளைவித்த சேதங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள் அவர்கள். பறந்துவிட்ட கடை ஜன்னல்கள், கூரைகள் பற்றி, சாய்க்கப்பட்ட திசைகாட்டிகள் பற்றி, பனிக்குவியலில் கைவிடப்பட்ட வாகனங்கள் பற்றிய செய்திகளைப் பரிமாறிக்கொண்டார்கள். நான் மகிழ்ச்சியோடு கேட்டபடியிருந்தேன். பிறகு பேச்சு வேறு மந்தமான விஷயங்களுக்கு மாறிய போதுதான் நான் அன்னாவின் இருப்பை உணர்ந்தேன்.
ஒரு மூலையில் அமர்ந்து என்னை கவனித்துக் கொண்டிருந்தாள். செம்பட்டை முடி கொண்டவள்; என்னை விட இரு வயது மூத்தவள்; உயர்நிலைப் பள்ளிக்குச் செல்கிறவள். அவளை எனக்கு நீண்ட காலமாகவே தெரியும். நான் அவளை எப்போதும் விரும்பியதில்லை. எப்போதும் அமைதியாகவே இருப்பாள்; சிரிப்பதோ, ஓடியாடுவதோ கிடையாது; எல்லாரையும் எப்போது ஒரு சோகச்சிரிப்போடோ அல்லது மனதில் ஏதோ முக்கியமான விஷயம் இருப்பதைப் போன்ற பார்வையோடோ எதிர்கொள்வாள். ஆனால் தற்போது அவள் என்னைப் பார்த்த பார்வையில் அவள் மீது ஆர்வமானேன். அவள் என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருப்பாள் என்றும், எது அவளை என்னை நோக்கி அரைச் சோகத்துடன் புன்னகைக்க வைத்தது என்று யோசித்தேன்.
மேஜையில் அவளுக்கருகில் அமர்ந்து அவளை ஓரக்கண்ணால் பலமுறை பார்த்து, அவளும் என்னை அப்படியே பார்க்கிறாளென்று அறிந்து கொண்ட பிறகு என் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. உண்ணுவதில் ஆர்வமிழந்தேன். நான் அவளோடு தனித்திருக்க விரும்பினேன்.
இரவுணவிற்குப் பிறகு இரு குடும்பங்களும் எங்களை மாடி மேலிருக்கிற அறைக்குச் செல்ல எந்தக் கேள்வியுமின்றி அனுமதித்தன. அங்குதான் என்னுடைய பெரும்பாலான உடமைகளை வைத்திருந்தேன். துளைகளுடன் கூடிய கிரிப்பேஜ் சீட்டாட்ட பலகையை எடுத்து வைத்து, ஒரு கட்டு சீட்டையும் எடுத்தேன். மேஜைக்கு அடியில் எங்கள் இருவரது முழங்கால்களும் தொட்டன.
கிரிப்பேஜ் ஆட்டத்தை அவள் என்னைவிட நன்றாக ஆடினாள். நான் தோற்கையிலெல்லாம் என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். எனக்கோ ஆட்ட்த்தின் மீது பாதி கவனம்தான் இருந்தது. பேச இயலாது அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவளது முழங்கால்கள் தந்த மெல்லிய அழுத்தம் கூட என்னை பலவீனமாக உணரச் செய்தது. நாங்கள் விளையாட, விளையாட அவள் முகத்தின் அழகும், ஒளியும் மேலும் கூடியது. அவள் கண்களைச் சுற்றிலும் ஒரு படலம் தோன்றியது. அவளது புன்னகை என்னை நோக்கி நெருக்கமாக இருந்ததில் நடுங்க ஆரம்பித்தேன். என் முகம் சிவந்திருப்பதையும், நாக்கு கட்டப்பட்டிருப்பதையும் எண்ணி வெட்கினேன். இருப்பினும் அச்சமுற்றும், ஆனந்தமாயும், எதையும் பொருட்படுத்தாததொரு நிலையில் – அன்னாவைக்கூட –விளையாடிக் கொண்டிருந்தேன்.
நாங்கள் அபூர்வமாகத்தான் பேசிக்கொண்டோம். நான் பதற்றமாயிருந்தால் விளையாட்டை நிறுத்த விரும்பினேன். ஆனால் விளையாட்டை நிறுத்தி விட்டால் இப்படி முழங்கால்கள் தொட்டபடி நாங்கள் அமர்ந்திருக்க இயலாது. சில கணங்கள் அவள் தன் தொடுகையைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும்போது நான் நடுங்கியபடி காத்திருப்பேன். இறுதியாக அவளது முழங்கால்கள் என்னை வந்தடையும் போது என் சுவாசம் சீராகும். சீட்டுகளில் முழுக்கவனம் செலுத்துபவனைப் போல முகம் நெறித்து அவற்றையே பார்த்துக் கொண்டிருப்பேன்.
நேரம் செல்லச் செல்ல, என் முகம் வீங்கி, ஏறுமாறானதைப் போல் உணர்ந்தேன். என் அங்க அடையாளங்கள் அசிங்கமாகி விட்டதைப் போல் தோன்றியது. வாயைத் திருகியும், கண்களைச் சுழற்றியும், கன்னத்தைக் குவித்து ஓசை எழுப்பியும் இந்த நிகழ்விலிருந்து அன்னாவின் கவனத்தைத் திருப்ப முயற்சித்தேன். ஆனால் இப்போது ஒரு புதிய அச்சம் தோன்றியது. அன்னா எங்கள் முழங்கால்கள் தொட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்து அவற்றை விலக்கிக் கொள்வாளோ என்று அஞ்சினேன். எனவே ஆட்டத்தில் ஆர்வம் கொண்டவனைப் போல் நடந்து கொள்ள ஆரம்பித்தேன். என் துரதிர்ஷ்டத்தைக் குறைகூறிக் கொண்டும், அழுகுணி ஆட்டம் ஆடுவதற்காக அவளைக் கண்டித்த வண்ணமுமிருந்தேன். எப்படியாவது அவளை ஆட்டத்தில் ஆர்வம் கொள்ளச் செய்ய வேண்டுமென்பதில் உறுதி கொண்டிருந்தேன். அவள் ஆட்டத்தில் ஆர்வமுற்று இருந்தால் எங்கள் முழங்கால்கள் உரசிக்கொண்டிருப்பதை அவள் அறியாதிருக்க முடியும் என்று நம்பினேன்.
கடைசியாக அன்னா இந்த விளையாட்டு சலிப்பையேற்படுத்துகிறது என்றாள். கிரிப்பேஜ் பலகையை நகர்த்தினாள். அவளது முழங்கால்களை விலக்கிக் கொள்வதற்காக மூச்சைப் பிடித்துக் கொண்டு காத்திருந்தேன். அவளைப் பார்க்காதிருக்க முயற்சித்தும் கூட பயத்தால் அவளையே உற்றுப் பார்க்கத் துவங்கினேன். அவள் என் மீது கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. நாற்காலியில் பின் சாய்ந்து கண்களைப் பாதி மூடியிருந்தாள். முகத்தில் புன்னகையில்லை. எதையோ சிந்தித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்தேன். என் தொண்டை கேள்விகளால் நிரம்பிக் கிடந்தது. முழுங்கால்களின் ரகசியத் தழுவலை முறிக்க மனமின்றி எதுவும் பேசாதிருந்தேன்.
அவள் கண்களிலிருந்த பனிப்படலம் அவள் கூந்தலுக்கும், முகத்துக்கும் பரவியதைப் போலிருந்தது. எங்கு நோக்கினும் அதே ஒளி வெள்ளம் அவளைச் சூழ்ந்திருந்தது. அவள் கை பலகை மீது கிடந்ததைக் கவனித்தேன். அந்தக் கையைத் தொடுவதற்கு ஆவல் கொண்டேன். பியானோ வாசிப்பதைப் போல் அவளது விரல்கள் மேஜை மீது தட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். அவளது முழங்கால்களுக்குத் தொடர்பற்ற முறையில் அவள் கரம் வித்தியாசமாக இருந்ததைக் கண்டேன்.
சில நிமிடங்கள் மௌனத்தில் கழிந்தன. பிறகு கீழிருந்து அன்னாவின் தாய் அவளை அழைத்தாள்.
‘அவர்கள் வீட்டிற்கு கிளம்பி விட்டார்களென்று நினைக்கிறேன்,’ என்றேன். அன்னா ஆமென்று தலையாட்டினாள். பிறகு என்னை நெருங்கி உரசினாள். இதை வேண்டுமென்றே செய்தாளா அல்லது எழுந்து செல்வதற்கான முயற்சியில் தற்செயலாக நிகழ்ந்ததா என்று கண்டறிய முடியவில்லை.
‘ நீயும் ஏன் எங்களோடு வரக்கூடாது?’ என்றாள். பலகையின் மீது என்னை நோக்கிக் குனிந்தாள். ‘எங்கள் சறுக்கு வண்டியில் நிறைய இடமிருக்கிறது.’
நான் பதிலளிக்குமுன் எழுந்து விட்டாள். என் முழங்கால்கள் உறைந்தன. விளையாட்டுப் பலகையைத் தரையில் சாய்த்தேன். மிகுந்த சோகமாகவும், அவமானகரமாகவும் உணர்ந்தேன். அன்னா என்னைத் திரும்பிப் பார்க்காமலேயே கீழிறங்கிச் சென்று விட்டிருந்தாள். அவள் பின்னால் ஓடிவிடாதிருக்க என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். ‘ இவன் ஒரு பெரிய முட்டாள். இவன் ஒரு பெரிய முட்டாள்’ என்று என்னைப் பற்றிச் சொல்லிச் சிரித்துக் கொண்டிருப்பாளென்று உறுதியாகத் தெரிந்தது.
கீழிறங்கி வந்தபோது ஜோனஸ்கள் கிளம்பத் தயாராகி விட்டார்கள். அன்னாவின் தாய் என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
‘ நீ ஏன் ஞாயிற்றுக்கிழமை வந்து எங்களோடு தங்கக்கூடாது? இங்கிருப்பதை விட கார்லிஸில் அதிகப் பனி உண்டு,’ என்றாள்.
‘நீ குச்சியை விட்டு ஆட்ட முடியாத அளவுக்குப் பனி உண்டு,’ என்றார் ஜோனஸ் குடும்பத்தின் மற்றொரு உறுப்பினர். எல்லாரும் சிரித்தனர். அவர்கள் சிரித்துக் கொண்டிருக்கையில் என் தாய் எனது உடைகளை அணிந்து வருமாறு அவசரப்படுத்தினாள். எங்கள் வீட்டு வாயிலில் நிற்கிற, குதிரைகள் மாட்டிய சறுக்கு வண்டியில் நான் ஜோனஸ் குடும்பத்துடன் செல்ல வேண்டுமாம்.
எல்லாரும் பிரியாவிடை பெற்றுக் கொண்டிருக்கையில் நான் எனது தோற்காலணிகள், கம்பளி ஆடை, மேலங்கி ஆகியவற்றை அணிந்தேன். அன்னாவின் கவனத்தை ஈர்க்க முயற்சித்தேன். அவளோ நான் அங்கிருப்பதை கவனியாதவளாக இருந்தது சோகமூட்டியது. கார்லிஸுக்குச் செல்ல வேண்டுமென்ற ஆர்வம் மெதுவாக அகன்றது. மாறாக மாடியிலுள்ள என்னறைக்குச் சென்று எல்லா ஜோனஸ்களின் முகத்திலும் கதவை அறைந்து சாத்த விரும்பினேன். மாடியில் எதுவுமே நடந்திராதைப் போல அன்னா மகிழ்ச்சியுடன் எல்லாருடன் பிரியாவிடை பெற்றுக்கொண்டும், சிரித்துக் கொண்டும், முத்தமிட்டுக் கொண்டுமிருப்பதைப் பார்த்தபோது எனக்கு துயரம் மிகுந்தது. நான் கைவிடப்பட்டவனாகவும், மறக்கப்பட்டவனாகவும் உணர்ந்தேன்.
இறுதியாக தொப்பியை அணிந்து கொண்டு முகச்சுளிப்புடன் நின்றேன்.என் குடும்பம் நான் நடந்து கொள்ள வேண்டிய விதம் பற்றி அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருந்தது. நான் எதற்கும் செவி சாய்க்கவில்லை. பயணத்தின் போதும், கார்லிஸை அடைந்த பின்னும் என்ன செய்ய வேண்டும் என்பதையே மனதில் சிந்தித்தபடியிருந்தேன். முக்கியமாக அன்னாவை அலட்சியப்படுத்த வேண்டும். அவளுடன் பேசுவதோ, அவள் பக்கம் பார்வையைச் செலுத்துவதோ கூடாது.
இந்தத் தருணத்தில்தான், எல்லாரிடமும் பலமுறை பிரியாவிடை பெற்று முடித்த அன்னா, எதிர்பாராத விதமாக என் கையைப் பிடித்து, காதில் கிசுகிசுத்தாள்.
‘சீக்கிரம் வா. நல்ல இடமாகப் பார்த்துப் பிடிக்க வேண்டும்.’
ஒரு வார்த்தையும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியே விரைந்தேன். பனிமூடிய படிகளில் வழுக்கியபடியும், பனிக்குவியலில் தடுக்கியபடியும் சென்றேன். சறுக்கு வண்டிக்குள் அன்னாவைப் பின்பற்றித் தொற்றி ஏறினேன். விவசாயத்துக்கு உபயோகப்படுத்தப்படும் வண்டி அது. கனமான மரப்பாளங்கள் மீது வைக்கோற்போரும், குதிரைப் போர்வைகளும் போட்டிருந்தது. இருக்கையில் ஒருவருக்கு மட்டுமே இடமிருந்தது. நான் உட்பட மிச்ச ஏழுபேரும் அங்கிகள் மூடிய வைக்கோலின் மீதுதான் படுத்துக்கொள்ள வேண்டும்.
அன்னா வைக்கோலுக்குள் பாதி புதைந்தபடி ஒரு போர்வையைப் போர்த்திக் கொண்டிருந்தாள். அவள் என்னிடம் ஆடையிலிருந்த பனியை உதறுமாறும், முழுக்கப் போர்வையால் மூடிக் கொள்ளுமாறும், வண்டி மலை மீது ஏறும்போது கீழிறங்கிக் குதிரைகளோடு நடக்க வேண்டாமென்றும் கட்டளைகள் இட்டுக் கொண்டிருந்தாள்.
‘நீ இறங்கி விடுவதால் எதுவும் ஆகப் போவதில்லை,’ என்றாள். நீ உள்ளேயே இருந்தாலும் வண்டி அதே விசையோடுதான் இழுக்கும். மேலும் நீ எதற்காகவும் வெளியே செல்வது எனக்குப் பிடிக்கவில்லை.’
மற்ற ஜோனஸ்களும் வெளியே வந்து வண்டிக்குள் எங்களைச் சூழ்ந்து கொண்டார்கள். அன்னாவின் தந்தை ஓட்டுனரின் இருக்கையை எடுத்துக் கொண்டார். தலையில் சால்வையோடு வெளிவந்த என் தாயாரிடம் கார்லிஸுக்கு அப்பாலும் நகரப் பணியாளர்கள் சாலையைத் துப்புரவு செய்து விட்டதால் அபாயம் ஏதும் இல்லை என்றார். நான் எங்கே இருக்கிறேன் என்று என் தாய் விசாரித்ததைக் கேட்டேன். நான் வைக்கோல் போருக்குள் எங்கேனும் ஒளிந்திருக்கக் கூடும் திருமதி ஜோனஸ் பதிலிறுத்தார். எதுவும் பேச வேண்டாம் என்று அன்னா என் காதில் முணுமுணுத்தாள். நான் அவளுக்குக் கீழ்படிந்தேன்.
வண்டி கிளம்பியது. குதிரைகள் பனியை மிதித்து நகர்வதையும், சேணத்தின் மணிகள் சீரான ஒலியுடன் குலுங்குவதையும் கேட்டேன். மல்லாந்து படுத்து இரவை நோக்கினேன். வானத்தை நட்சத்திரங்கள் நிரப்பின. வீட்டுக் கூரைகளின் ஒரு வெண்ணிறப் பரப்பு தொங்கியது. தெரு அமைதியாக இருந்தது. பனி போர்த்திய வீடுகளை இப்போது பார்க்க இயலவில்லை. பனியின் புதிய வாசனையும், வைக்கோல்போர் மற்றும் குதிரைச் சேணத்தின் வாசனையும் மூக்கை முட்டின. சேணமணிகளின் ஒலியையும், வண்டிக்குக் கீழே பனி நொறுங்கும் ஓசையையும் கேட்ட வண்ணமிருந்தேன்.
மூன்று நாட்களாக வெறி கொண்டிருந்த புயலின் தீவிரத்தைப் போலவே இந்த இரவின் அசைவின்மையும் தீவிரத்தோடு இருந்தது. பனியும், காற்றும் வீசித் தீர்ந்து விட்டன போலும்! படுத்துக் கொண்டு வசியம் செய்யப்பட்டதைப் போல இந்த வெறுமையை உற்று நோக்கியபடியிருந்தேன். பனிப்பொழிவைப் போலவே இந்த அசைவின்மையும் ஒடிச் சென்று ஐக்கியமாக வேண்டிய விஷயமாக இருந்தது. சில நிமிடங்கள் முன்பு பிரம்மாண்டமாகத் தெரிந்த நட்சத்திரம் நிறைந்த வானம் இப்போது அவ்வளவு பிரம்மாண்டமாக இல்லை.
அன்னாவை மறந்தே விட்டிருந்தேன். சட்டென்று எனக்குப் பரிச்சயமான கதகதப்பு என்னை அழுத்திக் கொண்டிருந்தது. சறுக்கு வண்டியால் குலுக்கப்பட்டு அவள் என்னருகில் நெருங்கி வந்திருந்தாள். என்னை விலகுமாறும், அவளுக்கு இடம் விடுமாறும் அவள் கட்டளையிடுவதற்காகக் காத்திருந்தேன். ஆனால் அவள் அமைதியாக இருந்தாள்.
பக்கவாட்டிலிருந்த என் கரம் அவள் விரல்களில் பட்டது. நான் இப்போது வானத்தையும், அதில் மெல்லிய பனிப்பொழிவைப் போல் சிதறிக் கிடக்கிற நட்சத்திரங்களையும் மறந்து விட்டேன். இரவும், பனியும், வெளிச்சமும், சேணமணிகளின் குலுங்கலும் மறைந்து விட்டன. என் விரல்கள் மட்டுமே உயிர் பெற்றிருந்தன. விளையாட்டுப் பலகை மீது அவளது விரல்கள் தாளமிட்டதைப் பார்த்தபோது, அவற்றைத் தொடமுடியும் என்ற எண்ணம் மயக்கம் தருவதாக இருந்தது. ஆனால் இப்போது இந்தக் கரம் மேலும் உயிர் கொண்டதாகவும், மர்மமானதாகவும், அவளது அங்கங்களிலேயே பரிச்சயமுள்ளதாகவும் தோன்றியது. எங்கள் விரல் நுனிகள் தொட்டுக் கொண்டிருந்தன. நான் அதற்குமேலும் நகர இயலாதபடி படுத்துக் கிடந்தேன். அவள் கரங்களை நெருங்க விரும்பியதில் கிறக்கம் கொண்டேன். ஆனால் நெருங்கவியலாது சக்தியற்றவனாகவும் இருந்தேன்.
நிமிடங்கள் நகர்ந்தன. இரண்டு ஜோனஸ்கள் பாட ஆரம்பித்தனர். குதிரைகளின் குளம்பொலியும், மணிகளின் குலுங்கலும், பனி நொறுங்கும் ஓசையும் அவர்களது மென்மையான பாடலில் ஒரு பகுதியாகத் தோன்றின. நானும் பாட விரும்பினேன். இந்த அமைதியான இரவில் வழுக்கிச் செல்லுகிற சறுக்கு வண்டிக்குள் சட்டென்று எழுந்து நின்று அலற விரும்பினேன்.
அப்பொழுது அவளது விரல்கள் போர்வைக்கு அடியில் கதகதப்பான வைக்கோல் போரில் என்னை நோக்கி நகர்ந்தன. அவை என் கரம் வரை வந்து அதை மூடிக் கொண்டன. என் உள்ளங்கைகளில் அவற்றின் அழுத்தத்தை உணர்ந்தேன். இரவு ஒரு கனவாக மாறியது. கண்களைத் திறந்து சிதறிக் கிடந்த நட்சத்திரங்களைப் பார்த்தேன். அவற்றின் மீது ஒரு படலம் படர்ந்திருப்பதைப் போலிருந்தது. பனி படர்ந்த மலைகள் அந்தப் படலத்தின் பின்னே மின்னிக் கொண்டிருந்தன. இரவு தன் நேரத்தை இழந்தது. பனி மீது நகர்ந்து கொண்டிருக்கிற இந்த சறுக்கு வண்டியைப் போலல்லாமல், மாறாததும், நகராததுமான நட்சத்திரங்கள் நிறைந்த குளிர்கால இரவாக அது நீண்டிருந்தது.
அன்னாவின் அருகில் படுத்தபடி, அவள் கரத்தை என் கரத்துக்குள் வைத்தபடி, வெண்மலையின் கீழ் பனிச்சுழலில் பறந்து செல்லும் இந்த சறுக்கு வண்டியிலிருந்தபடி, இந்த இரவு முடியவே முடியாது என்று எண்ணிக் கொண்டேன்.
000
Snowfall in Childhood என்ற இந்தச் சிறுகதையை A world of great stories என்ற தொகுப்பில் வாசித்தேன். கதையின் எளிமையும், மாயத்தன்மையும் என்னைக் கவர்ந்தன. இத்தொகுப்பு உலகின் பல்வேறு நிலப்பகுதிகளில் எழுதப்பட்ட மிகச் சிறந்த கதைகளை உள்ளடக்கியுள்ளது. ஹிராம் ஹேடனும், ஜான் குர்னோசும் தொகுத்துள்ளார்கள். சிறுகதைகள் அமெரிக்க, ஆங்கிலேயப் பகுதி, ஜெர்மானிக் மற்றும் ஸ்காண்டினேவியப் பகுதி, ரஷிய மற்றும் கிழக்கு ஐரோப்பியப் பகுதி, கீழைப் பகுதி, லத்தீன் அமெரிக்கப் பகுதி என்று வகைப்படுத்தி வழங்கப்பட்டுள்ளன. நூற்றிப் பதினைந்து சிறுகதைகள் இத்தொகுப்பில் உள்ளன. ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்ட், ஜான் ஸ்டெய்ன்பெக், அன்டோல் ஃபிரான்ஸ், ரொமைன் ரோலண்ட், ஆல்பெர் காம்யு, செல்மா லாகெர்லெவ், ஆன்டன்செகாவ், ஃப்ரான்ஸ் காஃப்கா போன்ற மேதைகளின் சிறந்த கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. நாம் அறியாத பல எழுத்தாளர்களின் பல கதைகளும் ரத்தினங்களாய் மிளிர்கின்றன. இந்தியப் பகுதியில் தாகூரின் என் எஜமானன், என் குழந்தையும், ராஜரத்தினத்தின் பஞ்சமும் கொடுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கதையும் ஒரு புதிய அனுபவத்தை வழங்குகிறது. மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறது. இத்தொகுப்பை என் பள்ளி நூலகத்தில் கண்டறிந்தேன். மிகவும் நைந்து போயிருந்த பிரதி. ஒரு கட்டத்தில் தூக்கி வீசுவதற்கே முடிவெடுத்து விட்டார்கள். “நீங்கள் தூக்கி வீசுகையில் எனக்குத் தெரிவியுங்கள். நான் வந்து பிடித்துக் கொள்கிறேன்” என்று சொல்லியிருந்தேன். நூலகக் கட்டடத்தை மாற்றியதில் கொஞ்ச நாள் தொலைந்து போயிருந்தது. பிறகு நான் பட்ட அவஸ்தையை கவனித்து அவர்களே பிரதியைக் கண்டுபிடித்து என்னிடம் கொடுத்தார்கள். அது கையில் கிடைத்தவுடன் நான் முதலில் வாசிக்க விரும்பிய கதை குழந்தைப் பருவத்தில் பனிப்பொழிவு.
– ஜெகதீஷ் குமார்
நல்ல கதை ஜெகதீஷ். ஜாய்ஸின் அரபி யை நினைவூட்டியது. சரளமான மொழிபெயர்ப்பு. எழுத்துப்பணி தொடர வாழ்த்துகள்! 💐
எந்த கதையாக இருந்தாலும் தாங்கள் மொழிபெயர்ப்பு நன்றாக உள்ளது! தாங்கள் தேர்ந்தெடுக்கும் கதைகள் அனைத்தும் வெற்றி பெறக்கூடியது! தங்களின் எழுத்து பணி உலகமெல்லாம் சிறக்க வாழ்த்துகிறேன் தரணிகேசவன் லீலாகேசவன் தமிழ்நாடு
Exquisite literary masterpiece! Your adept translation has breathed life into the narrative, expertly conveying the original essence. As one delves into the story, the vivid descriptions and masterful storytelling evoke a profound sense of immersion, transporting the reader on a captivating journey. Your skillful craftsmanship is truly commendable!
இது மிக அற்புதமான கதை. மொழிபெயர்ப்பு கட்சிதமாக இருக்கிறது. மேலும் இது போன்ற கதைகளை மொழிபெயர்க்க வாழ்த்துக்கள்.