ச.அர்ஜூன்ராச் கவிதைகள்

அம்மா
நிமித்தமின்மையின் நிமித்தம்…

———————————————-

ஒரு தலை இலை
சில காலமாகத் தயங்கி தயங்கி தன் தருவில் தங்கியிருப்பதுபோல
அம்மா வீட்டை உணர ஆரம்பித்திருந்ததை
யாரும் கவனித்தோமில்லை.

***

அம்மாவின் முதுமை முதுகுக்குப் பின் எல்லோரும் சொன்னோம்

அம்மா
மகிழ்ச்சிக்குக் காத்திருக்கிறாள்

அன்புக்கு ஏங்குகிறாள்

ஓய்வையும்
சொஸ்தத்தையும் விரும்புகிறாள்

அவள் நித்தம் நித்தம்  வேண்டிக்கொண்டிருந்திருக்கலாம்
எங்கள் நாக்கில் நரம்பு தட்டுப்பட
மேலுமது
அழுகாமலிருக்க.

***

அம்மா என்றால்
எப்போதும் கொஞ்சம் மட்டம்தான்

திடீரென
வீட்டில் அம்மா இல்லை

வீடு தன்னை காலி செய்துகொண்டு எங்கேயோ போய்விட்டது

நாங்கள் ஊர் ஊராகத் தேடியதைவிட
வீட்டில் அதிகமாகத் தேடிக்கொண்டிருக்கின்றன

இடங்கள்
எறும்புகள்
பூச்சிகள்
நிமித்தங்கள்

***

அம்மா இல்லாத வீட்டில்
இப்போதெல்லாம் அமைதிதான் அம்மா.

***
கடைசியாக
அம்மாவை  நல்லபடியாகப் பார்த்துக்கொண்டது  அவள் பாசத்தின் தீராத நோய்தான்.

***

அம்மா:
எப்போதுமவள்
நிமித்தமின்மையின் நிமித்தம்…


OOO

2

நாளின்  கடைசியில்
ஒரே ஒரு சிறிய வெற்றி
———————————————-

பகல் நன்று ஆறிவந்த வேளை
மோட்டார் சைக்கிளில்
கி.மீ. 25ல்
ஒரு படுதோல்வியோடு போய்க்கொண்டிருந்தேன்

நான் போகும் வேகத்தை இருமடங்கு விஞ்சி
இளம்பிராயம் கொப்பளிக்க
ஜோடியொன்று என்னை சடாய்த்தபடி
பறந்தினர்

கடைசி காலத்தில்
ஒரு கடைசி வெற்றியை ஈட்டிவிட துடிக்கும் வயதுக்கு
வேகமானியில் கணிதத்தை அதிகரிக்கவிட்டேன்

ஜோடி அசந்த நேரம் 
முந்தினேன்

ஆயினும்
இனிதானுள்ளது திறமையென

மனஞ் சமநிலை குலையாது
திரும்பி பாராது
ஒரே முகமாய்.

OOO

3

கவனிப்பு
—————–

அதிகாரத்தொனிக்கெல்லாம் குறைக்கவே குறைக்காத ஒரு நாயை
தன்னுள் பராமரித்து வரும் ஓர் ஆமாஞ்சாமி 

அன்றாடத்திலிருந்தும் அலுவலகத்திலிருந்தும் முதன் முறை
நேரம் முந்தி கிளம்பினான்

வழக்கமற்று
விரைவு இரயில்கள் மரியாதை புரியாத
ஒரு நிறுத்தத்தில் வந்தமர்ந்தான்

சிடுசிடுவென சீறி பாய்ந்துகொண்டிருந்த
இரயிலொன்று
பெயர் தெரியா தாவரங்களை
தன்பால் மண்டையை மண்டையை மட்டும் ஆட்டிவித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தான்

சற்றைக்கெல்லாம் அவை
“அவ்வளவுதான் விஷயம்” என்பதுபோல்
பண்பட்ட தனதியல்புக்குத்திரும்பியதை

காற்றில் வரும் தன் விருப்பப்பாடலை
அருந்தியருந்திகொண்டிருந்ததை

தன்னுடலே ஒரு பாடலின் துடிப்பென
இலயித்துக்கொண்டிருந்ததை
மேலும்
கண்கொட்டாமல் கவனித்துக்கொண்டிருந்தான்.

OOO

4

நம்பகம்
———————————————-

தூக்கம்  கண்ணாற
வளர்ந்துகொண்டிருந்த சமயம்.

நாள் முழுக்க,
சப்தமின்றி,
பின்தொடர்ந்துகொண்டிருந்த
ஏதோ ஒரு சப்தம் நெருங்க

ஒரு கணம்
தூங்குவதுபோல் நடித்துவிட்டேன்.

பின்னர்
கேட்கும் ஒலியெல்லாம்
காலத்துளிகள்

நீளும்  இரவோ
நம்பகமான  மடி

என்ன செய்வதென்பது
வடிந்து வடிந்து வர
உடலில் மெல்ல  ஏறியது உடலின்மை.

OOO

5

பிரமைகள்
———————————————-

சிலபோது
காதுகளின் துவாரத்தில்
ஒலிக்கருவிகள்
இருப்பதுபோலவும் இல்லாதது போலும்
பிரமை

தொட்டுப்பார்ப்பேன்
இருக்காது

சட்டை ஜேபியில் கைபேசியை,
கால்சராய் ஜேபியில் பைக் சாவியை
உறுதி பார்ப்பேன்
இருந்திடாது

சில தருணங்களில்
காமம் மேலிட
ஆணுறுப்பைத் துழாவிப்பார்ப்பேன்
அது அங்கேயே தானிருக்கும்

சில தருணம்
காதல் மேலிட
ஆணுறுப்பைத் தடவிப்பார்ப்பேன்
அது அங்கேயே தான்
இருக்கும்.


OOO

6

வீடு திறந்தாள் தயாழினி
———————————————–

வெளியில் சென்று  திரும்பிகொண்டிருந்தோம்

வழக்கம்போல்
“வீட்டை நான்தான் திறப்பேன்” என
வழியெல்லாம் குதிகுதித்து வந்தவள்
திடுமென குதிகுதிப்பை மறந்ததாகப்பட்டது

வழக்கம்போல்  நானே கதவைத்திறந்தேன்

பூனைக்குட்டி போல்
எங்களுக்கு முன் பாய்ந்தவளை
பழகிய இருள் பைய்ய அள்ளிக்கொண்டது

நடந்தெல்லாம் சில நொடிக்குள் தாம்

சிறிய மேசை
அதில் கொஞ்சம் பெரிய உருவம் எடுத்தெழுந்தவள்
சரியாக ரெண்டாவது பொத்தானை
சொடுக்கி வெளிச்சத்தைப்போட்டாள்

பழக்கப்பட்டக் காட்சியிலிருந்து
எப்போதாவது
கண்கொள்ளா காட்சியொன்று
திறப்பது போல
இன்று வீடு திறந்தாள் தயாழினி.

_OOO_

ச.அர்ஜூன்ராச்

சமகாலத்தில் பல்வேறு இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. "ராஜ Single " கவிதை தொகுப்பின் ஆசிரியர்.

உரையாடலுக்கு

Your email address will not be published.