அகழ் : நூல் அறிமுகம்

விஷ்ணுபுரம் : மாயக் கம்பளம்

இருபது வருடங்களுக்கு முன் நான் விஷ்ணுபுரத்தை வாசித்த போது அது கொடுத்த பிரமிப்பு இன்னும் நினைவிலிருக்கிறது. இந்திய கோயில்களின் மரபின் ஒரு பெரிய உலகை அது திறந்து காட்டியது. இன்று யோசிக்கும் போது அந்த வயதில், விஷ்ணுபுரம் கொடுத்த பரவசம், புதிதாக அதில் கற்க நிறைய இருந்தது என்பதால் என படுகிறது. அதை புனைவாக வாசிக்கவில்லை. நான் வாழ்ந்து கொண்டிருந்த இடத்தின், நான் அறியாத உண்மைகளை எனக்கு காட்டித்தரும் நூலாகவே அதை படித்தேன். இப்போதைய வாசிப்பிலேயே அதை முதல் முறையாக நாவலாக வாசிக்கிறேன். காமத்தை, புராணத்தை, தத்துவத்தை, அதிகார உருவாக்கத்தை அது அணுகும்விதத்தை கவனிக்கிறேன்.

காமம் இந்திய மதங்களில் ஓர் முக்கியமான இடம் வகிக்கிறது. அனைத்து பெரு மதங்களும் முக்தியடைய காமத்தை ஒறுக்க சொல்கின்றன (பெளத்தம் , சமணம் ); அல்லது தத்துவபடுத்தி ஒருசட்டகத்திற்குள் முறைப்படுத்த முயற்சிக்கின்றன. அளவற்ற கற்பனையும் ஞான தேடலும் கொண்டவர்களுக்கு வரையறுக்கபட்ட தத்துவமும் மதமும் அளிக்கும்விடைகள் திருப்தியளிப்பதில்லை. விஷ்ணுபுரத்தின் ஶ்ரீபாதத்திலும், மணிமுடியிலும் காமம் ஓர் பேரிருப்பு. கெளஸ்துபத்திலும் மிருக நயனியின் பச்சை ஒளியாய் அது இருக்கவே செய்கிறது. லஷ்மி, சங்கர்ஷணன், பிங்கலன், திருவடி, ஆழ்வார் , பத்மன் என காமத்தால் ஆட்டுவிக்கபடும் மையக்கதாபாத்திரங்கள் அனேகம். பாண்டியனுக்கு காமத்தால் உடல் புண்ணாகி போகிறது. பிறருக்கு மனம்.
திருவடி காமம் ஆட்கொள்ளபட்டு பித்தாகி தெருக்களில் அலைகிறான். அக்காமம் கனிந்து முதிர்ந்து அறிய முடியாமையின் , அனந்தனின் மீதான பக்தியாக ஆகி காலத்தை தாண்டிநிற்கும் பெரும் கவிதைகளை படைக்க வைக்கிறது. பிங்கலன் காமத்தை அறிந்து அகல முயல, காமமோ துய்க்க துய்க்க பெருகுகிறது. அஜிதரின் மகாகால தரிசனத்தின் மையத்தை யோனியாகவும் சக்கரத்தை லிங்கமாகவும் மாற்றி மகாயோக தரிசனம் என ஒன்றை உருவாக்குகிறான். கட்டற்றகாமமும், காதலற்ற புணர்ச்சியும் தரும் குற்ற உணர்வில் இருந்து அவனை விடுவிக்க பயன்படுகிறது. லட்சுமி காமத்தால் தன்னையே இரண்டாக பகுத்து கொள்கிறாள். கணவன் ஒரு புறமும். கனவுலக நாயகன் மறுபுறமுமாக. பெருமாள் போல அவளும் புரண்டுபடுக்கிறாள். யுகத்திற்கு ஒரு முறையல்ல , தினமும். பின்னர் அவளே தன் மகன் வடிவில் உள்ள பிங்கலனைபுணர்ந்து இதிலிருந்து மீள்கிறாள்.

திருவடி போல கற்பனையில் ஆழ்தல், பிங்கலன் போல தத்துவ தரிசனத்தை அடைதல், லட்சுமி போல கற்பனையை கைவிட்டு உண்மையில் வாழ்ந்து மறைதல் என விஷ்ணுபுரம் மூன்றுவிதங்களில் காமத்தை அணுகுகிறது. மானுடம் இருக்கும்வரையிலும் இம்மூன்று விதங்களிலேயே மனித மனங்கள் காமத்தை அனுபவமாக அறிந்து கொண்டிருக்கும் என படுகிறது.

விஷ்ணுபுரத்தில் தத்துவங்கள் நோக்கி வருபவர்கள் மூன்று விதம். தன் ஞானத்தை பிறருக்கு சொல்ல அதை தத்துவபடுத்தி கொள்பவர்கள் . சுடுகாட்டு சித்தன் ஒரு உதாரணம். இவர்கள் உண்மையில் ஞானிகள். இரண்டாவதாக தத்துவங்களை பயின்று அதிலிருந்து முரண்பட்டு புதிய தத்துவத்திற்கு நகர்பவர்கள். ஞானத்தை விடஇவர்களுக்கு தத்துவமும் தர்க்கமும் முக்கியமாகி போகிறது. அஜிதர், பிங்கலன் போல. இவர்கள் தத்துவவாதிகள். மூன்றாவதாக தத்துவத்தை அதிகாரம் நோக்கி செல்வதற்கான கருவியாக பயன்படுத்துபவர்கள். இவ்வுலக பெறுமதிக்காக தத்துவத்தை அறுவடை செய்பவர்கள். சூரியதத்தர், பவதத்தர், சந்திரகீர்த்தி , டோர்ஜே றெக்பா போன்றோர். இவர்கள் மடாதிபதிகள் மற்றும் ஆட்சியாளர்கள்.

ஞானிகள் தத்துவ தர்க்கங்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. அவை வெறும் சொல் மலை. தர்க்கிகள்தான் இதில் அல்லல்படுகிறார்கள். அவர்களுடைய தர்க்கம் அமைதியை தருவதில்லை. நிறைவின்மையும், தனிமையும் படுத்தி எடுத்து ஒரு சாமானியனை விட மோசமான மரணத்தை தழுவுகிறார்கள். அத்தனை மண்டை விடைக்கும் விவாதங்களும் அவர்களுக்கு எதற்கும் பயன்படுவதில்லை. பெளத்த , இந்து மத தரிசனங்கள் கெளஸ்துப காண்ட விவாதங்களில் விரிவாகவே பதிவு செய்யபடுகிறது.

வாழ்க்வின் அர்த்தம் என்ன என்ற அடிப்படை கேள்வியில் தொடங்குகிறது ஞானதேடல். முக்கால்வாசி ஞான தாகிகள் அகங்காரத்தை வீங்கி பெருக்கச் செய்யும் தத்துவ தர்க்கங்கள் வழியாக தேடலை நிகழ்த்துகின்றனர். தேடல் முடியும் போது கண்டடையும் விடை எப்போதும் தன்னகங்காரத்தை நிறைவு செய்வதாக இருப்பதில்லை. துக்கம் நீக்க கற்ற தத்துவம், துக்கத்தை மேலும் பெருக்கி ஞானதாகிகளை நோகடித்து சாகடிக்கிறது.
விஷ்ணுபுரம் ஞானியாக காட்டும் சுடுகாட்டு சித்தன் அத்தனை நூல்களையும் எரிக்கிறான். ஞானம் தத்துவநூல்களில் இல்லை என்கிறான். விஷ்ணுபுர தனி மனிதன் தத்துவ நூல்களாலும் தர்க்கத்தாலும் ஞானத்தை அடைவதில்லை. தத்துவங்கள் அன்றாட தளத்திற்கு வரும் போது மானுட குலத்திற்கு அதனால் ஏதாவது நன்மை நிகழ்கிறதா என்றால் அதுவும் கேள்விகுறிதான். வைதிகத்தில் இருந்து பெளத்ததிற்கு மாறும் விஷ்ணுபுரத்தில் வறுமை அப்படியேதான் இருக்கிறது. அதிகாரம் மட்டும் ஒரு குழுவிடம் இருந்து (வைதிகர்) மற்றொரு குழுவிற்கு(வணிகர்) போய் சேருகிறது.

வறட்டு வாதங்களிலும், தத்துவநூல்களிலும், காவியங்களிலும், விண் முட்ட எழுந்து நிற்கும் மானுட கலைப்படைப்புகளிலும் இருப்பது மனித அகங்காரம் , அவன் அடைந்த ஞானம் அல்ல. அது இவற்றுக்கு வெளியே ஆடம்பரமின்றி எந்த பாசாங்கும்இன்றி ஒரு எளிய இருப்பாக இருக்கிறது. அந்த எளிய இருப்பை அடைவதற்குதான் நாம் பெரும் பாடு படவேண்டியிருக்கிறது என விஷ்ணுபுரம் சொல்வதாக நான் நினைக்கிறேன். அனைத்தையும் பெற்றல்ல அனைத்தையும் நேதி நேதி என விலக்கியே இந்த எளிமையை அருகனைக முடிகிறது சுடுகாட்டு சித்தனை போல.

இன்னொரு கோணத்தில், தத்துவம் அதிகாரத்தை தீர்மானிப்பதில்லை. அதிகாரமே தனக்கேற்ற தத்துவத்தை உருவாக்கி நிலைநாட்டுகிறது என்றும் சொல்ல முடிகிறது. அக்னிதத்தனையும், அஜித பிக்குவையும் அதன் பிறகு சாரஸபட்டரையும் விஷ்ணுபுரத்திற்கு அனுப்பி வைப்பவன்பாண்டியன். திருவடி மடம் அதிகாரம் பெறுவதும் மதுரையை ஆளும் முகமதிய ஆட்சியின் ஆசியோடுதான். விஷ்ணுபுரம் நிறுவனபடுத்தபட்ட மத விவகாரங்களில் மார்க்ஸீயம் பயன்படுத்தும் அளவு கோல்களை பயன்படுத்துகிறது எனபுரிந்து கொள்ளலாம். நிறுவன படுத்தபடாத சுடுகாட்டு சித்தனையும் , நீலியையும் இந்த அளவுகோல்கள் தொடுவதில்லை.

விஷ்ணுபுரம் முக்கிய கொடி வழிகளின் குருதியை எஞ்ச விட்டு மற்றதை முற்றழித்து முடிகிறது. நீலி, வேததத்தனின் குருதி வழியில் மீண்டும் இச்சக்கரம் சுழன்று வரும் என கொள்ளலாம். வாழ்வை இப்படி எதற்கும் அர்த்தமில்லாமல் முடிவில்லாத சக்கரமாய் பார்த்தால் பெரும் சலிப்பும் வெறுமையுமே மனதில் நிறைகிறது. போரும் அமைதியும் , வெண்முரசு போன்ற பெரு நாவல்கள் முடிக்கும் போது ஓர் வெறுமை உணர்ச்சியைகொடுத்தாலும் வாழ்வின் மேல் ஒரு நம்பிக்கையையும் நமக்கு கொடுக்கிறது. விஷ்ணுபுரத்தில் இது ஒரு பெரும் குறையே.

தன்ராஜ் மணி – எழுத்தாளர்

௦௦௦

அயலான் – அல்பெர் கமுய்

“மகிழ்ச்சி என்பது என்ன என்று தேடிக் கொண்டிருந்தால் நீ ஒருபோதும் மகிழ்ச்சியாயிருக்க போவதில்லை. வாழ்க்கையின் அர்த்தத்தை தேடிக்கொண்டிருந்தால் ஒரு போதும் வாழப்போவதில்ல” : அல்பெர் கமுய்

1942ம் ஆண்டு வெளியான நாவல் 75 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு இன்றும் படிப்பதற்கு புதிய நாவலை போலவே இருப்பது சிறப்பு. 123 பக்கங்களில் சொல்லப்பட்டுள்ள சிறிய  நாவல் அல்பெர் கமுய் நோபல் பரிசு பெற்றவர். மனிதனின் சிந்திக்கும் முறையை  துல்லியமாக விவரித்திருப்பது அவரின் அறிவு முதிர்ச்சியை நிருபிக்கிறது. (அயலான் – காலச்சுவடு பதிப்பகம்.. 2024)மனித வாழ்வின் பரிணாம வளர்ச்சியில முக்கிய பங்கான மனம் என்னும் ஆறாம் அறிவு விரிந்து பரந்து சிந்தனை, தத்துவ ஆராய்சியால் மேம்பட்டிருந்தாலும் மதம் உள்ளே நுழைந்து குழப்பி வைத்தது. தனி மனித தேவையையும் சமூகத்தின் கட்டமைப்பும் கடவுளின் இருப்பு தேவையா? இல்லையா? என்ற கேள்வியில் எழுகிறது இந்நாவலின் முடிவு.

வாழ்வின் எல்லா இன்பங்களை அனுபவிக்கவே நாம் பிறந்தோம் என்ற அனுமானம் தோல்வியடைவது , நினைத்தது , வேண்டியது கிடைக்காத போது மனம் கொள்ளும் வேதனை உடலை வருத்தி அழிவுக்கு கொண்டு செல்வதைப் போல கடவுள் இருப்பும் கேள்விக் குறியதே.? ஒரு இளைஞன் தந்தையற்றவன் தந்தை முகத்தை பார்க்காதவன்  தாயின் வளர்ப்பில் வளர்ந்து கடவுளின் சிந்தனை இன்றி கடவுளின் இருப்பை நம்பாமலும் தாயின் இறுதிக் காலத்தில் தாயை பராமரிக்க அவரின் தனிமையை போக்க முடியாமல் முதியோர் இல்லத்தில் சேர்த்த மூன்றாண்டுகளில் இறப்பிலிருந்து இந்நாவல் துவங்குகிறது.

உங்கள் அம்மா இறந்து விட்டார் என்ற தந்தி வந்திருந்ததை பார்த்து இறந்தது நேற்றா ? இன்றா? என்ற கேள்வியில் பற்றின்மை தெரிகிறது. தாயின் சவ அடக்கத்திற்கு சென்று அழாமல் எப்பொழுதும்   இருப்பது போலவே இருப்பது தாயின் முகத்தை பார்க்க விரும்பினால் பார்க்கலாம் என்ற கேள்விக்கு வேண்டாம் என்ற பதிலால் அதிர்ச்சியுரும் இல்ல காப்பாளர் முதியோர் இல்லத்தில் தாயின் புதிய நண்பர் பெரோஸ் அளவுக்கு கூட அழாமலும் வருத்தபடாமலிருப்பதும் , நல்ல காபி வாங்கி குடிப்பதும் எந்தவித குழப்பமில்லாமல் சடங்குகள் முடிந்ததும் தற்போது வாழும் ஆல்ஜிரியாவின்  தலைநகரமான அல்ஜியர்ஸ் நகருக்கு பயணமாகி மறுநாளே  மரி என்ற பெண் நண்பருடன் கூடுவதும். புதிய செய்தியாக  இப்படியும் நடக்குமா என்ற கேள்வி எழுவதை தவிர்க முடியாது.

குடியிருப்பில் நாயுடன் நடைபயிற்சிக்கு போகும் சாலமானா தினமும் உணவருந்தும் உணவகத்தின் உரிமையாளர் செலெஸ்த் , பெண் நண்பி மரி,புதிய நண்பர் ரெமான் , ரெமானின் அரபுகாதலி, காதலியின் அரபு சகோதரன். ரொமான் நண்பன் மசோன், மசோன் மனைவி, போன்ற கதாபாத்திரங்களோடும், விடுமுறை நாளை அல்ஜியர்ஸ் புறநகர் கடற்கரையில் கழிக்கும் போது ஏற்படும் எதிர்பராத சம்பவங்களால் சிறை செல்ல நேரிடுகிறது. சிறைக்கு பிறகு விசாரணை, கதநாயகன் மெர்சோவின் பார்வையில் வழக்குரைஞர்களின் வாதம். நீதிபதிகளின் கேள்விகள். தன்னை பற்றிய தீர்மானமான முடிவுக்கு வந்தது குறித்த விரிவான அலசல்கள் அற்புதமானவை.

வெங்கட சுப்புராய நாயர் சிறந்த மொழி பெயர்ப்பை பிரஞ்சிலிருந்து தந்திருக்கிறார் . நாவலில் வரும் காதாபாத்திரங்களையும் , வர்ணனைகளையும்,  நகரின் விவரனைகளையும் , நீதிமன்றத்தின் நிகழ்வுகளையும் மிகச் சிறப்பான , சரியான முறையில் செய்திருக்கிறார் அவருக்கு எனது வணக்கங்கள்.

கதாநாயகன் மெர்சோ சமுதாய கட்டமைப்பில் வாழ்ந்தாலும் அமைதியான, எதற்க்கும் உணர்ச்சி வசப்படாத , நடப்பதை அப்படியே ஏற்றுக் கொண்டு மாறுபட்டு சிந்திப்பதால் அவர் சமூகத்திற்கு  “அயலான் ” தான். சாதாரண மனிதனாக வாழ்வதை விட தீர்மானமான முடிவில் சிந்தித்து கடவுளுக்கும் மனித வாழ்விற்கும் சம்பந்தமில்லை என்ற தன் குறிக்கோளை நிறுவ கதாசிரியர் அல்பெர்கமுய்  முயன்று மெர்சோ மூலம்  வெற்றி பெறுகிறார்.

கலித்தேவன் (கலிய பெருமாள்) – கட்டுரையாளர்

௦௦௦

இடபம்

மனிதனின் அகச்சிக்கல்களை, உறவுப்பிறழ்வுகளை, வாழ்வின் பாடுகளை கண்ணீரும் , கம்பலையுமாய் கைக்கடங்கா டிஸ்யூ பேப்பர்களில் மூக்கு சிந்திக்கொண்டிருக்கும் தமிழ் நாவல்களுக்கிடையே எழுத்தாளர் பா.கண்மணியின் “இடபம்” மரத்திலிருந்த்து நேராக கைகளில் விழுந்த ஓர் ஆப்பிள் கனி போல் கிடைத்தது. அவ்வளவு fresh அவ்வளவு sweet.

கனடா தமிழ் இலக்கியத்தோட்டம் விருது பெற்ற இந்த நாவல் எவ்வித கவனத்தையும் பெறாமல் போனது இதன் துரதிர்ஷ்டம் அல்லது நல்ல வாசிப்பாளரின் துரதிர்ஷ்டம் எனக்கொள்ளலாம்.

இந்த நாவலைப் படிக்கும் முன் ஒரு தமிழ் நாவல் இத்தகைய சாத்தியங்களுடன் வரும் என் நம்புவதற்கான முகாந்திரம் ஏதுமில்லை. ஷேர்மார்க்கெட்டை அதன் வாழ்வியல் தர்க்கங்களுடன் , தன் வாழ்க்கையை தானே நிர்ணயித்துக் கொள்ளும் ஓர் அபூர்வப் பெண்ணின் கதையுடன் ஒரு பட்டுக்கம்பளம் போல் நெய்துள்ளார்.

“எனக்கு இவ்வளவு போதுமென்று நிர்ணயிக்க இந்த மயிரான் யார்?        ஊழியனாக வாழ்ந்து ஊழியனாகவே சாகப்போகும் பிரதீப் எனக்கு அறிவுறுத்தினான்.” இரண்டே வரிகளில் கதையின் நாயகியின் அறிமுகம். Greed and Aversion towards employment.

அறிவு, திறமை, உழைப்பு, மூலதனம் இவை எல்லாவற்றையும் விட                     யோகமிருக்கும் முட்டாள்களே முன்னேறுகிறார்கள். நரகலையும் , குப்பையையும் அடித்துக்கொண்டு வரு இந்த வாழ்க்கைப் புனலை உற்று நோக்காத அவர்கள் தயக்கமின்றி நீந்திக் கரைசேர்ந்து விடுகிறார்கள்.     பாரடைஸ் பில்டர்ஸ்- சொர்க்கத்தைக் கட்டித் தருபவர்கள். சொர்க்கத்திற்குப் போனதாக கருதப்படும் உத்தமர்கள் யாரும் திரும்பி வந்து அதைப்பற்றிச் சொன்னதில்லை.

சேட்டுகள் காதலில்லாமல் வாழ்ந்து விடுவார்கள். ஆனால், பணமில்லாமல் வாழமுடியாது. லிஸ்டிங் நாளின் பங்குவிலை போல எல்லாம் இனிதே முடிந்தது. கலவியை  Novel content க்கு  relevant-ஆக யாரும் சொல்லிப் படித்ததில்லை. எதையுமே பரிசீலிப்பதை விட நம்புவது எளிதாக இருக்கிறது. இந்த சோம்பேறித்தனத்தால் தான், நம் மனம் புலன் கடந்த ஆற்றலுடையவர்களாக பிரம்மை ஏற்படுத்தும் திரைபட தாநாயகர்களை,சாமியார்களை,குருமார்களை நாடுகிறது. அறியாமைதான் செல்வம். பேபீஸ் டே அவுட் குழந்தையப் போல சந்தையின் வீதியில் காயப்படாமல் கஜலட்சுமி தவழ்ந்து கொண்டிருந்தார்.

பங்குசந்தை யாருடைய பிரிக்கும் அகப்படாத ஒரு மாயநதி. இல்லாத காதலையும், நிபந்தனையற்ற அன்பையும் இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு உறவுகளில் தொக்கிக்கொண்டுதான் எல்லோரும் வாழ்கிறார்கள். புனிதமான மெத்து மெத்தென்ற அந்தரங்க வெளியில் சமூகம் தன்னுடைய அசுத்தப் பாதுகையால் நடந்து நாசம் செய்கிறது. சம்சாரிகள் இப்படித்தான் பரிதாபம் வரும்படி நடிப்பார்களாம்.

“நான் நெருக்கமாக உணர்வது தாராளமாக மன்னிக்கும் குணம் கொண்ட சிவபெருமானிடம்தான். கிருஷ்ணரிடம் நியாயமற்ற கோரிக்கைகளை வைத்தால், ‘சிந்தித்து செயல் படுங்கள்’ எனப் புன்னகைத்து நழுவி விடுவார்.”

“எங்கள் முதல் சந்திப்பில் பொதுத்துறை வங்கிப் பங்கு போள இளைத்திருந்த மிருணாள், சுற்று சுற்றாகப் பெருத்து இப்போது தனியார் வங்கிப் பங்கு போலக் கொழுத்திருந்தாள்.”

“தம் பெரிய உடல்களில் வைரங்களைச் சுமந்து கொண்டு அலம்பல் செய்யும் செழுமையான வி.ஐ.பி.ஆண்ட்டிகள். தூக்கலாக வாசனைத் திரவியமடித்து கோட் அணிந்த வழுக்கை அங்க்கிள்கள். இளம் பெண்கள் கிடைக்காவிட்டால் அடுத்த ஆண்ட்டியிடம் வழிந்தனர்.”- இது  ஒரு 2கே கிட் எழுத வேண்டியது.

வாழ்நாள் முழுக்க ஒருத்தரையே நேசிக்க முடியுமா என்ன? சலித்துபோய் விடாது?

புடவையைப் போன்றதோர் விரசமான உடை கிடையாது.

ஆயிரமாண்டு பழமையான இந்த திருமண ஏற்பாட்டில் , காலமாற்றத்திற்கு தகுந்த அளவிற்கு மாற்றங்கள் கொண்டுவரப்படவில்லை. ஒரு பைசா செலவில்லாமல் நடக்கூடிய இந்த சமாச்சாரத்திற்கு லட்சக் கணக்கில் சேமிப்பை கரைத்து, கடனை வாங்கி, ஊரைக்கூட்டித் திருமணம் செய்வது அவசியந்தானா?

நம் நாட்டில் மூத்த உறவுகளை உன்னதப்படுத்தி விடுகிறார்கள். அவர்கள் தம்முடைய தோல்வியின் சரித்திரத்தை அடுத்த தலைமுறைக்கு கட்டாயப் பாடமாக்குகிறார்கள்.

தலால் ஸ்ட்ரீட் பத்திரிக்கையை புரட்டிய படி காமெடி செண்ட்ரலில் ‘ஃப்ரெண்ட்ஸ்’ தொடர் பார்த்தேன்.

பணமுதலைகளின் செல்வத்தைப் பெருக்கும் கருவிகளான இந்திரா லூயியையும், சுந்தர் பிச்சையையும் ஆதர்சங்களாகப் பார்க்குமளவிற்குத் தாழ்ந்து விட்டோம்.

தீபாவளி- நரகாசுரனின் கருமாதிக்குப் போகாவிட்டால் தான் என்ன? பட்சணம், ஆடை எடுத்தல். நகை வாங்கும் பணத்தில் டைட்டன், ஆடை வாங்கும் காசில் ரேமண்ட், செருப்பு வாங்கும் காசில் பேட்டா, ஃபேஷியல் செய்யது சேர்த்தக் காசில் ட்ரெண்ட்ம்.

மற்ற உயிர்களெல்லாம் வாழும் திறன் அற்றுப் போகையில் மரணத்தைக் கண்டு பயப்படாமல் ஏற்கின்றன. நாம் மட்டும் மரணம் நேரில் வரும்போது பயப்படும் கோழைகளாக.

இரண்டு பெரிய இறகுகளை எடுத்துக் கொண்டேன். அவைகள் தான் என் புக் மார்க்.

வர்ற சம்பளத்தையெல்லம் வீணா ஷேர்ல போடாம ஒரு ஃபிளாட் வாங்கி ஈ.எம்.ஐ. கட்ற வழியப்பாரு. காக்காகுருவி கூட சொந்தமா கூடு கட்டுது. காக்கா குருவிக்கெல்லாம் வாடகைக்கு கூடு கெடைக்காதில்லே. அதனாலே அதுங்க கட்டியே ஆகணும்..

காஃபி டேக்குப் போனேன். காப்பி மணத்தை மீறி மரணத்தின் வாடையை உணர்ந்தேன்.

ஐ ஜஸ்ட் வாண்ட் டு லிவ்; நாட் டு  இமிடேட் லிவிங்க்.

இவ்வளவு வலியோடு தன்னை ஆண்களூக்கான விருப்பப்பண்டமாக சமைத்துக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை என்பேன். எப்போதும் பசித்திருக்கும் ஆண்கள், எப்படியிருந்தாலும் புசித்து விடுவார்கள்.

புதிய களத்தில், புதிய தளத்தில் பேசும் சில அபூர்வ தமிழ் நாவல் வரிசையில்  இந்த இடபத்திற்கான இடம் முக்கியமானது.

தேஜூ சிவன் – எழுத்தாளர்

உரையாடலுக்கு

Your email address will not be published.