ஐசக் பாஷவிஸ் சிங்கர் நேர்காணல்- ரிச்சர்ட் பர்கின்

தமிழில்- டி.ஏ. பாரி

ரிச்சர்ட் பர்கின்(Richard Burgin) என்பவர் ஐசக் பாஷவிஸ் சிங்கரிடம் 1976 முதல் 1983 வரை பல்வேறு அமர்வுகளிலாக நடத்திய உரையாடல் Conversations with Isaac Bashevis Singer எனும் தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது. இலக்கியத்துடன் இணைந்து அவரது ஆர்வங்கள், நம்பிக்கைகள், வாழ்க்கைமுறை என ஒட்டுமொத்தமாக எழுத்தாளரின் வாழ்வை வெளிக்காட்டும் உரையாடல்களால் அமைந்த புத்தகம். அதிலிருந்து குழந்தைப்பருவ நினைவுகள் மற்றும் இலக்கியம் தொடர்பான சிறுபகுதி மட்டும் இங்கு மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

***********

சிங்கர்: ஒவ்வொரு வாழ்க்கையும் விசித்திரமானது. நான் ஏதோ காரணத்தால் விசித்திரமான நபர்களை ஈரப்பவனாக இருக்கிறேன். பெரும்பாலும் என் மீது ஆர்வம் கொண்டு என்னை பார்க்க வருபவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள், அவர்களின் கதைகளும் நம்பமுடியாத அளவுக்கு வினோதமானவை. ஆனால் அது அவர்களின் உண்மைக்கதையும் கூட.

பர்கின்: தங்கள் சொந்த வாழ்க்கை சார்ந்த கதைகளை உங்களிடம் பகிர்வதற்கான உந்துதல் அவர்களுக்கு எப்படி வருகிறது?

சிங்கர்: ஏனெனில் நான் அவர்களிடம் கேட்பேன், தொழில்முறையாக கேட்பதுபோல் அல்லாமல் இயல்பாக கேட்பேன்: என்ன செய்கிறீர்கள்? உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா, ஆகவில்லையென்றால் காதலனோ காதலியோ உண்டா? அவர்களை பேச அனுமதிப்பேன், தங்கள் கதைகளை சொல்வார்கள். இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் என் தனிவாழ்க்கை பற்றி அவர்கள் கேள்வி எழுப்பினால் நானும் ஆவலுடன் அவர்களிடம் பகிர்ந்துகொள்வேன். ஒரு அரைக்கிறுக்கன் போல் தோன்றக்கூடிய தீவிரமான ஆள் என்னிடம் வந்து விதவிதமான கதைகளை சொல்லிவிட்டு கடைசியில் “உங்கள் கதை என்ன?” என்று கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். உடனே “அது உங்களுக்கு தேவையில்லாத விஷயம்” என்று சொல்லிவிடமாட்டேன். அவரின் கதையை கேட்க எனக்கு விருப்பம் இருப்பதைப் போலவே என் கதையை கேட்க அவருக்கும் உரிமை உண்டு, என் வாழ்வில் நிகழ்ந்த ஆர்வமூட்டும் விஷயங்களை அவரிடம் சொல்வேன். தன் வாழ்வு ரகசியத்துடன் என்னை சந்திக்க வரும் இந்த நபர் எவ்வாறாகினும் இப்பிரபஞ்சத்தின் பகுதியே. நான் இதுவரை பதினைந்து மனைவிகளை விவாகரத்து செய்திருக்கிறேன் என்று ஒருவர் சொன்னால், அவரிடம் சொல்வதற்கு இருப்பதை கேட்கவே ஆசைப்படுவேன். இந்த கதையை அவர் சொல்லும் செயல்பாட்டின் வழியே மனிதர்கள் பற்றி நான் இதுவரை நான் அறிந்திராத புதிய அறிதல் ஒன்று நிச்சயம் நிகழும். அவரை நான் என் எழுத்திலும் பயன்படுத்தக்கூடும்.

எல்லா நேரமும் தன்னைத்தானே உள்நோக்கி பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவரால் இலக்கியம் செழுமை அடைவதில்லை, மாறாக பிற மனிதர்களை வேடிக்கை பார்க்கும் எழுத்தாளனே அதற்குத் தேவை. நீங்கள் எவ்வளவுதூரம் பிறரை உற்று நோக்குகிறீர்களோ அவ்வளவு தூரம் உங்களைப்பற்றி தெரிந்து கொள்வீர்கள். நவீனத்துவர்கள் செய்யும் பரிசோதனைகள் எல்லாம் வடிவம் சார்ந்தே இருக்கின்றன – கவிதையில நிறுத்தற்குறிகள் பயன்படுத்துவதா வேண்டாமா, கையெழுத்தை சிறிய எழுத்தில் இடுவதா அல்லது பெரிதாகவா – (இதைத்தான் அவர்கள் வடிவம் என்று சொல்கிறார்கள் எனில்) இதெல்லாம் அபத்தமானவை. இதற்கு எந்த மதிப்பும் இல்லை. இவர்கள் ஏன் அவர்களை சூழ்ந்து அலையடிக்கும் மனித வாழ்வை பார்ப்பதில்லை, அக்கடலில் கணந்தோறும் லட்சக்கணக்கில் கதைகளும் நாவல்களும் சேர்ந்தபடி இருக்கிறதே? என் பரிசோதனைகள் யாவும் அங்குதான் நடைபெறுகின்றன – மானுடத்தின் ஆய்வுக்கூடத்தில், வெற்றுத் தாளில் அல்ல.

பர்கின்: நீங்கள் இப்போதும் உங்கள் பால்யகால நினைவுகள் எனும் ஆய்வுக்கூடத்தை பயன்படுத்துவதுண்டா என்று அறிய எனக்கு ஆர்வமாக உள்ளது. அப்படி இல்லையென்றாலும் குழந்தைப்பருவ நினைவகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய அல்லது உள்ளதிலேயே ஆதி நினைவு என்றால் எதை சொல்வீர்கள்?

சிங்கர்: கலை பொதுவாக, அதிலும் குறிப்பாக இலக்கியம் நினைவுகளுடன் தொடர்புடையது. அசலான எழுத்தாளர்கள் அனைவருக்குமே நல்ல நினைவாற்றல் உண்டு, அவர்கள் தங்கள் குழந்தைப்பருவத்தை நினைவில் வைத்திருப்பார்கள். நீங்கள் டால்ஸ்டாயின் குழந்தைப்பருவ நினைவுகளை (Childhood) வாசித்தால் அவரது நினைவாற்றலை பார்த்து வியக்கக்கூடும். அவரின் மேதைமையுடன் என்னை ஒப்பிட முடியாது என்றாலும் எனக்கும் நல்ல நினைவாற்றல் உண்டு. மூன்று வயதில் எனக்கு நடந்த விஷயங்கள் நினைவில் இருக்கின்றன, சரியாக சொல்வதானால் இரண்டரை வயதில் நடந்த சம்பவங்கள் என் நினைவில் இருப்பதற்கான ஆதாரம் உள்ளது. லியோனின் எனும் சிற்றூரில் வாழ்ந்து வந்த நாங்கள் என் மூன்று வயதிற்குள்ளாகவே அந்த ஊரைவிட்டு வெளியேறி விட்டோம். ஒருமுறை என் அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கும்பொழுது அந்த இடங்களை விவரித்து அம்மனிதர்களின் பெயர்களையும் குறிப்பிட்டேன், அவரால் நம்பவே முடியவில்லை. நேற்று நடந்ததுப்போல என்னால் இவற்றையெல்லாம் பார்க்க முடிகிறது. எவ்வளவு நினைவாற்றல் இருந்தாலும் யாரும் பேசப்பட்ட ஒவ்வொரு சொல்லையும் நினைவில் வைத்திருக்க முடியாது இல்லையா?  உதாரணமாக In My Father’s Court நாவலை எழுதியபோது அதிலிருக்கும் உரையாடல்கள் யாவும் நான் எழுதியபடி அப்படியே நிகழ்ந்தது என்று சொல்ல முடியாது. நான் பல விஷயங்களை மறக்கிறேன், ஆனால் பலருக்கு குழந்தைப்பருவ நினைவுகள் இல்லாதிருக்கும் நிலையில் என் பிரதான ஆண்டுகளை விடவும் குழந்தைப்பருவம் நன்றாகவே நினைவில் உள்ளது. சம்பவங்கள், பெயர்கள் மட்டுமல்ல காட்சிகளாகவும் அவை நினைவில் எழும், கூடவே முகங்கள், மனிதர்கள் பேசும் முறை போன்றவை. அவர்களின் பேச்சை நான் எழுத்தில் கொண்டு வரும்போது, அதே சொற்களாக இல்லாவிட்டாலும் அவர்கள் பேசும் முறை அதில் வெளிப்படும்.

பர்கின்: இந்தக் காட்சிகள் எப்படி உங்களுக்கு வருகின்றன? நீங்கள் முதலில் அதை காட்சிப்பூர்வமாக உணர்வீர்களா?

சிங்கர்: ஆம் காட்சிபூர்வமாக. எனக்கு என் குழந்தைப்பருவம் தொடர்பான கனவுகள் வரும், இருந்தாலும் இதில் சில பகுதிகளை நினைவில் மீட்ட முடியாமல் போய்விடுவது உண்மைதான். நான் விழித்தெழுந்ததும் முதலில் கனவுகளை நினைவுகூர்வேன், ஆனால் காட்சிகள் கரைந்தபடி இருக்கும். எழுந்தவுடன் அப்போதே என்னால் எழுத முடிந்தால் அதில் கொஞ்சத்தை தக்கவைக்க முடியும். என் குழந்தைப்பருவ கனவுகளில் எப்போதோ இறந்துவிட்ட மனிதர்களையெல்லாம் சந்திப்பேன். கனவுகளில் விதவிதமான சூழ்நிலைகளுக்கு ஆட்படுவேன், அதிகமும் இடர்மிகுந்த சந்தர்ப்பங்கள். என் கனவுகள் ஏன் இத்தனை எதிர்மறையாக இருக்கின்றன என சிலசமயம் வியந்ததுண்டு. இப்போது நான் ஓரளவு வசதியாக வாழ்ந்தாலும் கனவுகளில் எப்போதும் ஏழையாக இருக்கிறேன். அல்லது என்னால் நிறைவு செய்ய இயலாத ஒரு நாவலை எழுதுகிறேன் அல்லது நான் எழுதும் கதை தொலைந்துவிடுகிறது. கனவுகளின் ஆற்றல் என்னை ஏன் இம்மாதிரி இக்கட்டுக்களில் நிற்க வைக்கிறது என யோசித்திருக்கிறேன். ஒருவேளை கனவுகளின் அதிபதி எனக்கு முன்னெச்சரிக்கை அளிப்பதாக எண்ணிக் கொள்வேன்: “உனக்கு இப்படியெல்லாம் நடந்தது நினைவிருக்கிறது அல்லவா? அது மீண்டும் நடக்கலாம், எனவே கவனமாக இரு.”

பர்கின்: உங்கள் கனவுகள் பகலிலும் தொடர்வதாக நினைக்கிறேன்.

சிங்கர்: ஆம், நான் பகற்கனவு காண்பவன். குழந்தை முதலே அப்படித்தான் இருந்துவருகிறேன், இப்போதுவரை அதில் எந்த மாற்றமும் இல்லை. ஏழெட்டு வயதில் எப்படி கேலிக்குரிய கனவுகள் கண்டேனோ அதே வகையில்தான் இப்போதும் காண்கிறேன். ஒருவகையில் எனது சில கதைகள் இந்த கனவுகளிலிருந்து வளர்ந்தவையே. இரவில் நான் காணும் கனவுகளை மறந்துவிடும் நிலையில் பகற்கனவுகளை ஓரளவு நினைவில் இருக்கும். அவை மீண்டும் மீண்டும் நிகழ்வதாலும், அதிலொரு இயங்குமுறை இருப்பதாலும்.

உண்மையில் இலக்கியம் என்பது பகற்கனவின் ஒரு வடிவம்தான், கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் அல்லது ஒரு நோக்கத்துடன் செய்யப்படும் பகற்கனவு. செய்தியுடன் அல்ல, நோக்கத்துடன்.

பர்கின்: உங்கள் தந்தை உங்களுக்கு சில அறிவுரைகள் சொல்லியிருக்கிறார் இல்லையா, In My Father’s Court நாவலில் அது இடம்பெறுகிறது என நினைக்கிறேன். அதில் எழுத்தில் நேர்மையாக இருக்கவும் அறிவை பயன்படுத்தி அறச்சிக்கலை எளிமைப்படுத்துவது, “எழுத்தை கொடுமைபடுத்தி சிதைப்பதுஆகியவற்றை தவிர்க்கவும் சொல்லியிருக்கிறார். இதன் பாதிப்பு உங்களிடம் உண்டா?

சிங்கர்: என் தந்தை குறிப்பிட்டது மதரீதியான இலக்கியத்தைப் பற்றி, ஆனால் அது என்னுடைய தனிப்பட்ட எழுத்திலும் அதிக பாதிப்பை செலுத்தியது. நான் யதார்த்தவாதி அல்ல, அதே சமயம் வேண்டுமென்றே சிதைப்பதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. இப்போது பல எழுத்தாளர்கள் அப்படி நினைக்கிறார்கள், யதார்த்தத்தை சிதைத்துவிட்டால் அதன் சக்தி கூடிவிடுவதாக நம்புகிறார்கள். சிதைவு இலக்கியத்தின் உன்னத நிலை அல்ல, ஏனென்றால் ஒவ்வொரு எழுத்தாளரும் ஆழத்தில் உண்மையை எழுதவே விழைகிறார். அவர் ஒருவகையில் உண்மையை கடத்துபவர், அதை தனக்கே உரிய முறையில் தன் உணர்ச்சிகளுக்கு ஏற்றவாறு கடத்துபவர். வேண்டுமென்றே அமர்ந்து மனம்போன போக்கில் யதார்த்தத்தை சிதைப்பவர் இலக்கிய கண்ணோட்டத்தில் ஒருபோதும் வெற்றிபெற மாட்டார். நீங்கள் டால்ஸ்டாயை வாசிக்கையில் அவர் கனவு காண்பதை உங்களால் உணர முடியும், இருப்பினும் அக்கனவை நம்பகமாக முன்வைக்க எவ்வளவு தூரம் மெனக்கெடுகிறார் என்பதை பார்க்கலாம். இப்போது இலக்கியத்தில் விஷயங்களின் ஒழுங்கை சிதைப்பதில் ஒரு ஆர்வம் இருக்கும் போக்கை பார்க்கிறேன், மேலான கலையை உருவாக்கும் நோக்கத்துடன் அல்ல, சிதைவின் மூலம் “தனித்துவமான/ அசலான” படைப்பை உருவாக்குவதாக எண்ணி அப்படி செய்கிறார்கள். சிதைவும் அசல்தன்மையும் ஒரே பொருளுடையதாக ஆகிவிட்டிருக்கிறது, உண்மையில் இரண்டுக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது.

பர்கின்: ஆரம்பத்தில் உங்கள் தந்தையின் அறிவுரை உங்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே நினைத்திருந்தேன், ஆனால் பிந்தைய வருடங்களில் நீங்கள் அதிகமும் அதை நோக்கி நகர்ந்ததாக தெரிகிறது.

சிங்கர்: அப்படியில்லை, அது என்னிடம் உடனடியாக தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் நேர்மையான நேரடியான மனிதர் என்பதை அப்போதே உணர்ந்தேன். அவர் இறைநம்பிக்கை உடையவர், நானோ தல்மூதில் எழுதப்பட்ட ஒவ்வொரு சொல்லும் சினாய் மலையில் அருளப்பட்டது என்பதை நம்புபவன் அல்ல. இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், எழுத்தை பொறுத்தமட்டில் ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு தர்க்கம் உள்ளதை காண்பித்தார். மனிதனால் தர்க்கத்தை மீற முடியாது. பெரும் கலைஞர்கள் அனைவரும் பெரும் தர்க்கவாதிகளே. “எட்கர் ஆலன் போவின் எழுத்தில் என்ன மாதிரியான தர்க்கம் உள்ளது?” என்று நீங்கள் கேட்கலாம். மேலான தர்க்கம் என்று சொல்வேன். அவர் பிசாசுகளிலும் அற்புதங்களிலும் நம்பிக்கை கொண்டிருந்தார் என்பது உண்மைதான், ஆனால் இந்த முதற்கோள் சொல்லப்பட்டவுடன் அதன்மீது தர்க்க ஒழுங்குடன் கதையை கட்டமைக்கப்பட்டிருப்பதை காணலாம். ஆனால் யதார்த்தத்தை சிதைக்கும் எழுத்தாளர்களோ கதைக்கான தர்க்க ஒழுங்கையும் சிதைக்கிறார்கள்.

பர்கின்: இவ்விஷயத்தில் ஏதேனும் ஒரு எழுத்தாளரை குறிப்பிட முடியுமா?

சிங்கர்: காஃப்காவை நகல் செய்ய முயற்சிப்பவர்களை சொல்வேன், அதேசமயம் காஃப்காவை அப்படி சொல்லமாட்டேன். ஜாய்ஸை (James Joyce) நகல் செய்ய முயற்சிப்பவர்களையும் இதில் குறிப்பிடலாம். பிண்டர் (Harold Pinter) அப்படி செய்கிறார் என்று சொல்வேன். அவர் மேலான கலையை உருவாக்குவதற்காக அல்லாமல் அசலானவராக தோற்றமளிக்கும் பொருட்டு யதார்த்தத்தை சிதைப்பார். ஸ்பினோசா தன் அறவியல் (Ethics) புத்தகத்தில் சிந்தனைகளின் ஒழுங்கிற்கும் புறவுலக ஒழுங்கிற்கும் தொடர்பிருப்பதாக குறிப்பிடுகிறார். இலக்கியத்திற்கும் ஓவியத்திற்கும் தத்துவத்திற்கும் கூட தொடர்பிருக்கிறது, ஏன் மேலோட்டமாக தோன்றினாலும் அறிவியலுக்கும் கூட தொடர்பிருக்கிறது. மேதைகளின் படைப்புகள் அனைத்திலும் உள்ளார்ந்த தர்க்கம் வேலை செய்யவே செய்கிறது. கனவுகளிலும் கூட நாம் புரிந்து கொள்ள இயலாத ஒருவித தர்க்க ஒழுங்கு உள்ளது …  மறைமுக ஒழுங்கு.

பர்கின்: உங்கள் ஆரம்ப நாட்களை எடுத்துக் கொண்டால், உங்கள் குழந்தைப்பருவத்திலிருந்து எந்த மாதிரியான விஷயங்களை அதிகம் இழந்திருப்பதாக நினைக்கிறீர்கள்?

சிங்கர்: நான் வளர்ந்து வந்த உலகில் ஒருவித நம்பிக்கை இருந்தது, இவ்வுலகை உருவாக்கியதும் தோராவை அளித்ததும் கடவுள் என்றும் தோரா நாம் வாழ்வை வழிநடத்தும் என்றும். இவை உண்மையாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் இதை ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் மக்களுக்கு அவர்களுக்கென்று கடைபிடிக்க ஒரு வாழ்க்கைமுறை இருந்தது. நான் நன்மை தீமைகளின் பாகுபாடுகள் நிறைந்த காலகட்டத்தில் வளர்க்கப்பட்டேன். அப்போது நன்மை தீமையற்ற நடுநிலை என ஒன்று இல்லை. நீங்கள் ஒன்று நன்மை செய்யலாம் அல்லது தீமை செய்யலாம். தற்போது இவ்வகை சிந்தனையே கிட்டத்தட்ட மறைந்துவிட்டது. இந்தப் போக்கு மக்களின் அறம் சார்ந்த விஷயங்களிலும் மட்டுமில்லாமல் பல்வேறு தளங்களிலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைக்கு குழந்தைகள் நன்மை தீமை என ஏதுமில்லை என்றும் எல்லாமே அவரவர் பார்வை சார்ந்தது என்று நினைக்கும்படி வளர்க்கப்படுகிறார்கள். ஆனால் மனிதனால் முற்றிலும் சார்பற்ற சிந்தனைப்போக்கைக்கொண்டு செயல்படவோ வளரவோ முடியாது. அறச்சார்பற்ற மனிதன் ஒரு கோரமான விலங்கு மட்டுமே.

பர்கின்: In My Father’s Court நாவலில் பல்வேறு விமர்சகர்களால் குறிப்பிடப்படும் பரவலாக அறியப்பட்ட சம்பவம் ஒன்று வருகிறது, பலரும் அதை சுட்டிக்காட்ட காரணம் அது நீங்கள் உங்கள் பெற்றோர் மீது கொண்டிருக்கும் பார்வையை காட்டுகிறது என்பதுதான். இறந்த பின்பும் சத்தமிடும் வாத்துகளை பற்றி சொல்லப்படும் அப்பகுதியில் உங்கள் அப்பா இதை ஒரு அற்புதமாக பார்க்க உங்கள் அம்மாவோ அதன் மூச்சுக்குழாய்களை அகற்றுவதன் மூலம் விஷயத்தை முடித்து வைக்கிறார். அம்மாவும் அப்பாவும் உங்கள் உலக நோக்கை தீர்மானிப்பதில் எந்த அளவு பாதிப்பை செலுத்தியுள்ளனர் என்பதை அறிய ஆவலாக உள்ளது.

சிங்கர்: உண்மையை சொல்ல வேண்டுமெனில் என் தந்தை அதிகாரத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார். அவரை பொறுத்தமட்டில் ஒருவர் புனிதராக இருந்தால் அவர் சொல்வது அனைத்தும் சரியானதே. ஆனால் அம்மாவுக்கு ஒருவர் அபத்தமாக பேசினால் பேசியது யாராக இருந்தாலும் அது அபத்தம்தான். இவ்விஷயத்தில் நான் என் அம்மாவை போன்றவன். நீங்கள் இப்போது கலையை குறித்து நான் தவறென்று நினைக்கும் ஒரு கருத்தை ஷேக்ஸ்பியர் ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார் என்று சொன்னால், அக்கருத்தை அப்போதும் என்னால் ஏற்க முடியவில்லை என்றே சொல்வேன்.

பர்கின்: குடும்பத்தைப் பற்றி மேலும் கொஞ்சம் கேட்க விரும்புகிறேன். உங்கள் அண்ணன் மீது அதிக மரியாதை வைத்திருந்தீர்கள் என அறிகிறேன்.

சிங்கர்: ஓ, எனக்கு அவர் மீது அதிக மரியாதையும் அன்பும் உண்டு.

பர்கின்: உங்கள் தந்தையை விடவா?

சிங்கர்: இல்லை, அப்படி சொல்லமாட்டேன். ஆனால் அவர் மீது எனக்கு மதிப்பு இருந்தது – நல்ல மனிதனாக, அற்புதமான பத்திரிகையாளராக மேலும் மிகச்சிறந்த எழுத்தாளராக. அவர் எனக்கு வழிகாட்டினார். அவர் சொன்ன பல விஷயங்களை நான் இன்றளவும் கடைபிடிக்கிறேன்.

பர்கின்: உதாரணமாக?

சிங்கர்: ஒரு எழுத்தாளன் விளக்கமளிப்பவனாக இருக்கக் கூடாது, அவன் வாழ்வின் உண்மைகளை விளக்க முற்படக் கூடாது. அதை அவன் விவரிக்க மட்டுமே வேண்டும், முடிந்தவரை அதை உயிரோட்டமாக அளிக்க வேண்டும்.

பர்கின்: எதிலெல்லாம் அவரிடம் முரண்பட்டீர்கள்?

சிங்கர்: இயற்கைக்கு அப்பாற்பட்ட அமானுஷ்யங்களில் அவருக்கு என்னைவிட நம்பிக்கை குறைவாகவே இருந்தது. சில வருடங்கள் அவர் சரியான பகுத்தறிவுவாதியாக இருந்தார். நான் அவரிடம் அடிக்கடி சொல்வதுண்டு, “நாம் இன்னும் இயற்கையை அறியவில்லை,” என்னை பொறுத்தமட்டில் அனைத்துமே இயற்கைதான். இயற்கைக்கு அப்பாற்பட்டதும் சேர்ந்தே இயற்கை. என்னால் இன்னமும் ஆன்மா உள்ளது என்றும் பேய்கள் இருக்கலாம் என்றும் நம்பமுடிகிறது. முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு நுண்ணுயிரிகள் பற்றி மக்களுக்கு ஒன்றுமே தெரியாது, இப்போதோ அதன் இருப்பை அனைவரும அறிவார்கள். வெளிப்படையான உண்மைகளை பொறுத்தமட்டில் தர்க்கத்தை கொண்டு ஒன்றும் செய்ய முடியாது – அங்கு நீங்கள் சொந்த அனுபவத்தை பயன்படுத்தியே சரிபார்க்க வேண்டும்.

பர்கின்: உங்களிடம் நிரந்தரமான செல்வாக்கை ஏற்படுத்திய குழந்தைப்பருவ நினைவுகள் என்று எதை சொல்வீர்கள்?

சிங்கர்: நான் வார்சாவில் இருந்த காலமே எனது முக்கிய வருடங்கள்.

பர்கின்: அங்கு எப்போது இருந்தீர்கள்?

சிங்கர்: 1908 முதல் 1917 வரை. எண் 10, குரோச்மால்னா வீதிக்கு எழுத்துவழியாக மீண்டும் மீண்டும் போகிறேன். அவ்வீதியின் ஒவ்வொரு சந்தையும் அதன் ஒவ்வொரு மனிதரையும் காண முடிகிறது. என் இலக்கிய தங்க சுரங்கம் என்பது இந்த வீதிதான். நான் கண்டெடுக்காத புதையல்கள் இன்னும் மிச்சமிருக்கும் உணர்வுடன் அங்கு போய்க்கொண்டே இருக்கிறேன். எனக்கு முன்பு பல எழுத்தாளர்கள் இதை செய்துள்ளனர். நட் ஹம்சன் கிட்டத்தட்ட தன் அனைத்து படைப்புகளிலும் ஒரே மக்களிடம் செல்வதை பார்க்கலாம். நான் என் பிந்தைய வருடங்கள் பற்றி, அமெரிக்க வாழ்க்கை பற்றியெல்லாம் எழுதியிருக்கிறேன் என்பது உண்மைதான். ஆனால் வேறெந்த காலத்தை விடவும் வார்சாவின் நாட்களுக்கு திரும்பி செல்வதே எனக்கு எளிதாக உள்ளது. எனக்கு அது மனித கதாபாத்திரங்களின் மொத்த தொகுப்பு.. அங்கிருக்கும் நிழல் உலகையும் நான் எழுதியிருக்கிறேன். நான் பொதுவாக குற்றவாளிகளை வெறுப்பவன், ஆனால் இளமையில் வளர்ந்து வந்த சூழலுடன் அவர்களை நான் பார்த்து வந்ததால் எப்படியோ அவர்களை என்னால் மன்னிக்க முடிகிறது. இன்றைய குற்றவாளிகளை விடவும் கடந்தகால குற்றவாளிகளை சகிப்புத்தன்மையுடன் பார்ப்பது கொஞ்சம் எளிதாக தோன்றுகிறது.

பர்கின்: நீங்கள் ஒருமுறை கூறியிருக்கிறீர்கள்நம் கனவுகளை போன்றே, இலக்கியத்தில் மரணம் என ஒன்றில்லை.”

சிங்கர்: இதைப்பற்றி எந்த சந்தேகமும் இல்லை. உதாரணமாக அன்னா கரினீனாவை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தப் புத்தகம் எழுதப்பட்டு நூறாண்டுகளுக்கு மேல் ஆகிறது ஆனால் ‘மறைந்த அன்னா கரினீனா’ என்றோ அல்லது ‘மறைந்த மேடம் போவரி’ என்றோ யாரும் சொல்வதில்லை. அவர்கள் உயிருடன் இருக்கின்றனர். உயிரோட்டத்துடன் படைத்துவிட முடிந்தால் அவர்களோடு சேர்ந்து எழுத்தாளனும் எப்போதைக்குமாக வாழ்கிறார். “ஏன் அழிந்துவிட்ட உலகைப் பற்றி எழுதுகிறீர்கள்?” என்று மக்கள் என்னிடம் கேட்பதுண்டு. என் பதில், “ஒரு நாயகன் இன்று உயிருடன் இருக்கிறானா, இருபது வருடத்தில் இறந்துவிடுவானா, இருபது வருடங்கள் அல்லது இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு இறந்தவனா, எதுவும் ஒரு பொருட்டல்ல. எழுத்தாளன் உயிரூட்டிவிட்டால் அவனோ அல்லது அவளோ ஒட்டுமொத்த மனித பிரக்ஞையின் பகுதியாக ஆகி விடுகின்றனர்.”

பர்கின்: நினைவறிந்த நாள்முதல் எழுத்தாளனாக ஆக ஆசைப்பட்டீர்களா..?

சிங்கர்: பதினாறு வயதுமுதல் என்று சொல்வேன்.

பர்கின்: அதற்கு முன்பு?

சிங்கர்: நான் அறிஞராக ஆக ஆசைப்பட்ட காலம் ஒன்றுண்டு.

பர்கின்: மத அறிஞராகவா?

சிங்கர்: இல்லை. நான் மருத்துவராக விரும்பினேன், ஒரு விஞ்ஞானியாக அல்லது தத்துவவாதியாகயேனும்.

பர்கின்: உங்கள் தந்தை, அவரது தந்தை என அனைவரும் ரப்பிகளாக (யூதகுரு) இருந்தும் நீங்கள் ஏன் ஒருபோதும் அந்த வாழ்வை மேற்கொள்வது பற்றி யோசிக்கவில்லை?

சிங்கர்: ஏனெனில் என் பார்வையில் ஒரு ரப்பியின் வாழ்வென்பது மிகவும் பரிதாபமானது. முதலாவதாக ரப்பிதான் போதிக்கும் விஷயங்களை வாழ்நாள் முழுக்க நம்பி கடைப்பிடிப்பதோடு மட்டுமில்லாமல் பிறரையும் நம்பவைக்க முயற்சிக்க வேண்டும். மத விஷயங்களில் நான் நம்பிக்கைவாதி அல்ல என்பதால், அதை பிறருக்கு போதிப்பதை முற்றிலும் தவறான செயலாக நினைத்தேன். அதுபோக ரப்பி என்பவர் அவரது சபையால் எப்போதும் கண்காணிக்கப்படுபவர். அவருக்கு நிறைய போட்டியாளர்கள் உண்டு என்பதால், எது நடந்தாலும் எவ்வாறேனும் அவர் விமர்சிக்கப்படுவார். நான் நிறைய ரப்பிக்களிடம் பேசியிருக்கிறேன், அவர்களிடம் அதிகம் எதிர்பார்க்கப்படாத இந்நாட்டிலும் கூட நிலைமை அப்படித்தான் இருக்கிறது. ரப்பியின் வாழ்வு பொறாமைப்படக்கூடியது அல்ல, உண்மையில் அவரது வாழ்வில் அமைதி என்பதே கிடையாது. அமெரிக்காவில் ரப்பியின் மகன் ரப்பியாவது அதிகம் நடப்பதில்லை.. ஆனால் போலந்தில் இது ஒரு விதியாகவே இருந்தது. மகன்கள் தந்தையின் பாதையில் நடக்க கட்டாயப்படுத்தப்பட்டார்கள். போலந்தில் நீங்கள் காணும் ஒவ்வொரு மூன்றாவது நபரும் ரப்பியாக இருப்பார். என் உளப்பதிவு அப்படித்தான் இருக்கிறது..

பர்கின்: நீங்களும் உங்கள் அண்ணனும் எழுத்தாளர்களாக ஆனது குறித்து உங்கள் தந்தை ஏமாற்றமடைந்தாரா?

சிங்கர்: நாங்கள் ரப்பியாக ஆக விரும்பாதது மட்டுமல்ல, அவரது பார்வையில் நாங்கள் மதத்தையே துறந்துவிட்டதாக நினைத்தார். எனக்கு கடவுள் நம்பிக்கை இருந்தாலும் என் தந்தையின் பார்வையில் நான் ஒரு நாத்திகவாதி. அவர் அதிகம் எதிர்பார்த்தார். தலைமுறை தலைமுறையாக ரப்பிக்கள் உண்டாக்கிய ஒவ்வொரு சிறு நம்பிக்கைகளையும் உபவிதிகளையும் நான் நம்பியாக வேண்டும். அவை அனைத்தும் மோசே (Moses) அவர்களுக்கு சினாய் மலையில் அருளப்பட்டதாக நம்ப வேண்டும். ஆனால் இந்த விதிகள் எல்லாம் மனிதனால் உருவாக்கப்பட்டவை என்பதை என்னால் காண முடிந்தது. உதாரணமாக பைபிளில் இருக்கும் ஒரு விதி மிஷ்னாவில் பதினெட்டு விதிகளாகவும் ஜெமாராவில் எழுபது விதிகளாகவும் மாறியிருக்கும். இதெல்லாம் அவர்களின் கண்டுபிடிப்புகளே. அவர்கள் ஒரு மதப்பற்றுள்ள யூதரின் வாழ்வை மிகவும் கடினமாக்கினார்கள், மதம் தவிர வேறு எதற்கும் நேரம் இல்லாதபடி ஆனது. மிக இளமையிலேயே என்னால் இதை உணர முடிந்தது. இப்படியான மதம் என்பது, விளக்கங்கள் அதன்மீதான விளக்கங்கள என தொடர்ந்து செல்லும் வெற்றுநெறிகள் அன்றி வேறல்ல என்பதை இளம் வயதிலேயே உணர்ந்திருந்தேன்.

பர்கின்: இளவயது குறித்து அழுத்தமான நினைவுகள் இருப்பதால் உங்கள் குழந்தைப்பருவ கனவுகளில் ஏதேனும் ஒன்றை நினைவுகூர முடியுமா?

சிங்கர்: சிறுவனாக எனக்கு மீண்டும் மீண்டும் வரும் கனவு ஒன்றுண்டு. நான் எங்கோ ஒரு நூலகத்திற்கோ அல்லது யூத வாசிப்பறைக்கோ செல்கிறேன், ஒரு பழைய புத்தகத்தை கண்டெடுக்கிறேன், மிகச்சிறிய எழுத்துக்களில் எழுதப்பட்ட புத்தகம், ஒரே சமயம் அது என்னால் எழுதப்பட்டதாகவும் வேறு ஒருவரால் எழுதப்பட்டதாகவும் தோன்றுகிறது, வாசித்தால் முழுவதும் அற்புதமான கதைகளால் நிறைந்திருக்கிறது. வாசிக்கும் போதே அதை நூலகத்தில் இருந்து வீட்டுக்கு இரவல் வாங்கிக் கொண்டு போக எண்ணி சிலசமயம் வீட்டுக்கும் கொண்டு போகிறேன். நான் இதுவரை எழுதிடாத ஆனால் எழுத வேண்டும் என நினைக்கும் புத்தகமாக அது எப்போதும் இருக்கிறது. இப்போதும் கனவுகளில் அந்தப் புத்தகத்தை காண்கிறேன், புதுமையும் அற்புதமும் நிறைந்த கதைகள். என்றேனும் ஒருநாள் அப்புத்தகத்தை கண்டெடுக்கவும் அதை எழுதிவிடவும் இன்னும் நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.

டி.ஏ. பாரி

டி.ஏ.பாரிஇலக்கிய வாசகர், மொழிபெயர்ப்பாளர். ஈரோட்டில் வசிக்கிறார். ஆங்கில சிறுகதைகளை, பிரதானமாக ஐசக் பாஷாவிஸ் சிங்கரின் கதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

கடந்தவை

Go toTop

Don't Miss