மாயாதீதம் : குற்றவுணர்வுற்ற மனத்தில் காலம் நிகழ்த்தும் மாய விளையாட்டு

நமது வாழ்வில் நன்மைக்கும் தீமைக்கும் நாமே பொறுப்பு என்ற கணியன் பூங்குன்றனாரின் ‘ தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்ற வரிகளின் படியே வாழ்வைப் பின்பற்றி வந்தாலும், பல சமயங்களில் நம் வாழ்வில் நடப்பவற்றை பிறரது ஊடாட்டங்களும் தீர்மானிக்கின்றன. இதற்குக் காரணமாக ‘ஊழ்’ என்கிற ஒரு கருத்தாக்கத்தினை காலந்தோறும் நியாயப்படுத்தியும், குற்றஞ்சாட்டியும் வருகிறோம். அந்த வகையில் சரியாக ஓர் உறவைத் தொடரமுடியாத ஒருவனுடைய கையறு நிலையையும், அதன்பால் பீடிக்கப்படும் குற்றவுணர்வுடைய மனத்தின் சாயல்களையும் கொண்டதே “மாயாதீதம்” நாவல்.

நாவலின் களம் கொங்கு நாட்டு கோட்டை மாரியம்மன் கோவிலில் தொடங்கி, இந்தியாவின் பிரம்மபுத்திராவின் காசிராங்கா வனப்பகுதியிலும், கவுகாத்தியிலும், மைசூரிலும், பம்பாயிலும் பயணித்துக் கோட்டை மாரியம்மன் கோவில் அருகில் அமரவாதி நதியருகே முடிவடைகிறது.

தமிழ் நிலப்பரப்பில் தொன்மங்களுக்கும், நம்பிக்கைகளுக்கும், சடங்குகளுக்கும் குறைவில்லை. குறிப்பாக நாட்டார் மரபு தொன்மங்கள். நாவலில் கொங்கு நாட்டுக் கோட்டை மாரியம்மன் சிறுதெய்வ வழிபாட்டு நம்பிக்கையின் ஊடாக கதாநாயகன் வேணுவின் கண்பார்வை கிட்டுவதற்கான ‘அமுதெடுத்தல்’ சடங்கு குறித்த விவரணைகள் சுவாரஸ்யமானவை.

அதே போல தேசாந்திரக்காரனின்’’நிழல் பிரார்த்தணை’, அய்யன் வைத்தியரின் ’கோவைப் பச்சிலைப் பண்டுவம்’ போன்ற நம்பிக்கைகள் பெருந்தெய்வ வழிபாட்டுக்கெதிரான அரசியலையும், நவீன அலோபதி மருத்துவம் தோல்வியடையும் இடத்தையும் காட்டுகின்றன.

அமராவதி ஆறும், அதிலுள்ள பாறையும், பாறையில் அமர்ந்தபடி பீடி கேட்கும் தேசாந்திரக்காரனும் கருப்பு நாயும் நாவலின் இயல்பான முக்கிய குறியீடுகள் தேசாந்திரக் காரனும் கருப்பு நாயும் எவற்றின் குறியீடுகள் என்பதை வாசகர்களே கண்டடைவார்கள்.

மனித உணர்வுக்குப் புலப்படாத விஷயங்களை,விளங்கிகொள்ள முடியாமல் ஏற்றுக்கொள்ளக் கூடிய விஷயங்களை மாயம் எனலாம்.வேணுவின் வாழ்வில் அவன் கண் பார்வை போவதும்,தந்தையினுடனான பிரிவும், கோட்டை மாரியம்மன் கோவில் விஸ்வரூப குதிரையின் துரத்தலும்,தேசாந்திரக்காரனின் வருகையும் மறைவும், கருப்பு நாயின் தோன்றுதலும் மறைதலும் ,சித்தப்பாவின் அக்கறையும் கோபமும் மன்னித்தலும்,சித்தியின் குணத்தால் தன் வாழ்வு திசை மாறிப்போவதும், பார்கவியுடனான உறவும் பிரிவும் என எல்லாமும் அவன் கண் முன்னே அவன் தீர்மானிக்க முடியாத விஷயங்களாக காலம் என்ற பிசாசின் மாய சூன்யத்தில் நிகழும் சாயல்களாக நிகழ்கின்றன.

‘நம்மளக் கொல்லற சாமி… எப்படி எங்கண்னை எப்பிடிக் கொணமாக்கும்”என்று வேணு கேட்கும் இடம் நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் இடயே நிகழ்கிற ஊசலாட்டத்தின் கேள்வியே இக்கேள்வியையே நாவலின் மையப்பொருளாகக் கருதுகிறேன். இங்கு கண்னைக் குணமாக்குதல் என்ற ஒற்றைக் கூறாக மட்டும் கருத முடியவில்லை. ஒட்டு மொத்த அவல வாழ்வின் மீதான வேணுவின் வெளிப்படாத பல் நூறு கேள்விகளாகவும் கருத இயலும்.

நாவலில் அபிராமி அந்தாதி, கொங்கன சித்தர், அழுகணிச் சித்தர் பாடல்கள் மற்றும் திருமந்திரத்தின் பாடல் கையாளப்பட்டிருப்பது, வாழ்வு குறித்து எழுப்பப்படும் விசாரனைகளைத் துயரம் நோய்மை அவற்றைக் களைய தெய்வத்திடம் முறையிடுதலும் இறுதியில் சூன்யமே மிஞ்சுதலும் போன்ற நிலைப்பாட்டுக்கு இட்டுச் செல்வதாகிறது.

வேணுவின் ஓவியத்திறமையை வாசிக்கையில் எனக்கு சி. மோகனின் “விந்தைக் கலைஞனின் உருவச்சித்திரம்” நாவலின் ராமானுஜம் நினைவுக்கு வருகிறார். வேணுவின் தந்தை ஓவியராக இருந்து அவரின் மரபு வழியே ஓவியத்தைக் கற்றுக் கொண்டு நீண்ட காலம் ஓவியத்தோடு தொடர்பற்று இருந்தவனை பீமன் மடை பாறைகள் ஓவியனாகத்த் தத்தெடுத்துகொள்ளும் காட்சிகள் கலைத்துவமானவை.அங்கு தயாரிக்கப்படும் தாவரப் பச்சிலைக் கொழுந்தின் சாந்து ஓவியம் வரையப்ப பயன்படுவது ஒருவகையான ஃபேண்டஸி தன்மையைத் தருகிறது.

எழுத்தாளர் என்.ஸ்ரீராம்

பார்கவியின் சித்திரம் வழக்கமான யதார்த்த நாவல்களில் சித்தரிக்கப்படுவது போல் உள்ளது.குறிப்பாக எதிர் மீன் பிடிக்க செல்லும் பார்கவியின் பின்புறமிருந்து பிதற்றுவது,ராமபாணப் பூவின் வாசம், வேணுவுக்காகக் காத்திருக்கும் பாணியிலான ஓவியமும், அதன் பின்னனியிலான சம்பவங்களிலும், பார்வதி பிரதியில் இல்லாமலேயே பிரதியினூடே தொடர்கிறாள்.

இருப்பினும் நாக மடு ஓடையில், எதிர் மீன் பிடிப்பதில் கை தேந்தவளாகக் காட்டப்பட்ட பார்கவி, வாழ்க்கை என்னும் நெடும் ஓடையில் தனக்கான துணையைத் தேர்ந்தெடுத்தலில் தடுமாறியதற்கான நியாயமான காரணங்கள் சொல்லப்படவில்லை. அடுத்ததொரு நல் வாய்ப்பு வரும் போது கூட பார்கவி குலுங்கி அழுதபடி உள்ளறைக்குள் ஓடி தாழிட்டுக் கோள்கிறாள். காலை வரை தேம்பி தேம்பி அழுத பார்கவியின் குரல் இப்போதும் கேட்கிறது.

தாயைப்போல் ஒர் அன்பு குணவதியை இவ்வுலகம் பார்த்திராது.அன்பின் காரணமாகத் தாயைப்போல் குரூரமான சுயநலவாதியையும் இவ்வுலகம் பார்த்திராது என்பதைச் சித்தி நிறைவு செய்கிறார். மனிதர்கள் அந்தந்த நேரத்து நியாங்களால் கட்டமைக்கப்பட்டவர்கள்தானே. இருப்பினும் மனதில் என்றும் நிலைத்து நிற்பவர் வேணுவின் சித்தப்பா பாத்திரம்.

நாவலின் சொல்முறை தன்னிலைச் சொல்முறை.நடை யதார்த்தவாதமும் குறிப்பிட்ட இடங்களில் மாய யாதார்த்தமும் கலந்த நடை.பிரதியில் மாய யதார்த்தக் கூறுகள் நாட்டுப்புறத் தொன்மம் சார்ந்து கோவில் மடம்,தேசாந்திரக் காரனின் பல இட இருப்பு ,கருப்பு நாயின் ஊளை தேசாந்திரக்காரனின் பாடலாகக் கேட்டல் எனப் பல இடங்களில் நேர்த்தியாக வெளிப்பட்டுள்ளன. உரையாடல்களில் கொங்கு சொல் வழக்காறுகள் இயல்பாக இருக்கின்றன.இயற்கை சார்ந்த பொருள்களின்(குடைச் சீத்தை மரங்கள் , பறவைகள், மீன்கள் ,நட்சத்திரங்கள் போன்றவை) மீ-வர்ணனையற்ற மொழி நடை வாசிப்பின் மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது. திருகலற்ற மொழி நடை.

‘காலத்தின் மாய விளையாட்டு என்பதே இறுதியான பதிலாக இருந்தது’ என ஒன்பதாவது அத்தியாத்தில் Authorial voice வருகிறது. அங்கே கூட நாவலை முடித்திருக்கலாம். ஆனால், குற்ற உணர்வு கொண்ட மனத்தின் மாய விளையாட்டு நாவலை பத்தாவது அத்தியாயத்திற்கு அழைத்துச் செல்கிறது. முதல் அத்தியாத்தின் முதல் வரி’உச்சி வானில் எரிவிண்மீன்கள் அடுத்து அடுத்து எரிந்து விழுந்தன’எனத் தொடங்கி கடைசி அத்தியாயத்தின் கடைசி வரியில் “குறும்பனைக் கருக்குத் தடத்திற்கப்பால் கீழ் வானில் விடியல் ஒளி படர்ந்திருந்தது”. என முடிகிறது.

இவற்றுக்கு இடையில் தான் என்.ஸ்ரீராமின் மாயாதீதம் நிகழ்ந்திருக்கிறது.

000

தாமரை பாரதி

கவிஞர். கவிதை விமர்சகர். தபுதாராவின் புன்னகை (2019), உவர்மணல் சிறுநெருஞ்சி (2021), காசினிக் காடு (2023) ஆகிய மூன்று கவிதை தொகுப்புகள் வெளியாகியுள்ளன.

1 Comment

  1. ஐயா வணக்கம் எனக்குள் எவ்வளவு வேலை சுமை இருந்தாலும். அறிவு கலைஞர் மதிப்பிற்குரிய ஐயா இறையன்பு அவர்களுக்குப் பின்பு. உங்களுடைய நாவலை தான். வாசிக்கிறேன் ஆழ்ந்து படித்தால் அருமையாக புரிகிறது நன்றி சார்

உரையாடலுக்கு

Your email address will not be published.