ஏ.வி.மணிகண்டன் புகைப்படத் தொகுப்பு (1)

எழுத்து : ஷங்கர்ராமசுப்ரமணியன், இசை, சபரிநாதன்

ஏ.வி.மணிகண்டன், பெங்களூரைச் சேர்ந்த ஒரு புகைப்பட கலைஞர். அவருடைய புகைப்படங்களுக்கு கவிஞர்கள் ஷங்கர்ராமசுப்ரமணியன், இசை, சபரிநாதன் ஆகியோர் எழுதிய குறிப்புகளின் தொகுப்பு கீழே”

“குட்டி குட்டி பஞ்சுப் பொதிகளையொத்த இந்தப் நாய்க் குட்டிகள், பாதுகாப்போ எதிர்காலமோ உத்திரவாதமோ ஏதுமற்ற இந்த உலகத்தின் ஒரு மூலையில், அடைக்கலத்தின் பரிபூரண மடியில், கால்நீட்டி உறங்கும் உணர்வு எனக்கு ஆறுதலையும் அதேவேளையில் இந்தக் கணம் பறிபோய்விடுமோ என்ற நிச்சயமற்ற நடுக்கத்தையும் ஒரே நேரத்தில் அளிக்கிறது. அபாயங்கள் நிறைந்த தெருவின் கீழ்தளத்தில் இந்த நாய்க்குட்டிகள் இல்லை என்பது இப்போதைக்கு ஆறுதல். அவை உறங்குவது மாடித்தளம் என்று தோன்றுகிறது. சட்டகத்தில் இடதுபுறத்தில் கொடியில் தொங்கும் சீலை அந்தக் குட்டிகளுக்கு அம்மா இருக்கிறாள் என்ற ஞாபகத்தை ஏற்படுத்துகின்றன. தாய்ப்பால் அருந்தும் குட்டிகளின் போஷாக்கு இன்னும் அக்குட்டிகளை நீங்கவில்லை. கால்களை ஏகாந்தமாக நீட்டி முகங்களை ஆகாயத்தில் பதித்து அவை வெவ்வேறு திசைகளில் படுத்திருக்கின்றன.மான், முயல், பூனை, ஆடு எல்லாவற்றின் குட்டி முகங்களும் அவற்றில் பிரதிபலிக்கின்றன.முன் வரிசையில் காமிராவைப் பார்ப்பது போல உறங்கும் நாய்க்குட்டிக்கு கிறிஸ்துவின் கையிலுள்ள ஆட்டின் முகம். பூக்குட்டிகளே, பூக்குட்டிகளே, பூக்குட்டிகளே! யாரை நம்பி இந்த உலகத்துக்கு வந்துகொண்டே இருக்கிறீர்கள்?”

ஷங்கர்ராமசுப்ரமணியன்
“இகவடை பரவடை”, “ஆயிரம் சந்தோசஷ இலைகள்”
உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்

000

“கொடிக்கம்பியில்  காயும் சில சீருடைகளுடன், அவ்வளவு அன்போடு துவைத்துக்  காய வைக்கப்பட்டிருக்கின்றன சில பொம்மைகள். ஒரு கவிதைக்கு தகுதியுடைய படம்.  சீருடைகளை வைத்து அவை ஒரு பெண் குழந்தையுடையது என்பதை  யூகிக்கலாம். ஆனால்  காய்ந்து கொண்டிருக்கிற அந்த “Micky mouse” பொம்மையை தனியாக படம் எடுத்திருந்தால் கூட அது ஒரு பெண் குழந்தையுடையதுதான்.  கடவுள் இந்த அளவிலேனும் இந்த வாழ்வை ஒரு ஒழுங்கில் வைத்திருப்பதற்கான காரணம்  பெண் குழந்தைகள் சிணுங்கி விடக்கூடாது  என்பதுதான் என்று எனக்குத் தோன்றுவதுண்டு. கடவுள் பெண் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது போலவே , பெண் குழந்தைகள்தான் கடவுளைப் பார்த்துக் கொள்வதும்.”

“மயக்கமோ குழப்பமோ அற்ற வெளிச்சமான இன்னொரு படம். கடல் என்கிற பிரமாண்டத்தோடு விளையாடும் ஒரு  சின்னஞ்சிறிய உயிர். அதிலும் சிறுமி. கடல் தீரவே தீராத ஒரு படிமம். ஞானிகள், கவிகள் ஓயாது தியானிக்கும் ஒரு வெளி. முழு மூடனையும் அவனது அன்றாடத்திலிருந்து ஸ்தம்பிக்க  வைப்பது அது. அதன் முன் குதூகலித்திருக்கிறாள் ஒரு சிறுமி. இப்போது அவள் சிறுமி . ஆகவே அவளுக்கு கடல் என்பது அகன்று பெருகிய நீர்ப்பரப்பு. நிறைந்து நிற்கிற நீலம்.  அவள் இன்னும் எவ்வளவு காலம் இப்படி விளையாடுவாள் என்று தோன்றியது.

அவள் கடலாகாத வரை.”

-இசை
“உடைந்து எழும் நறுமணம்”, “நாயகன் வில்லன் மற்றும் குணச்சித்திரன்”
உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்

000

“நீர் இன்றி நிலம் இல்லை. வான் இன்றி நீர் இல்லை. வான் இருக்கிறது. நீரும் நிலமும் இருக்கிறது. கூடவே மரங்களும் மீன்களும் நானும் நீயும் அவனும் அவளும். உன்னால் இதை அளக்கமுடியாது, காண முடியும்; புரிந்துகொள்ள முடியாது, வாழ முடியும்.

வாழ்வு நிகழ்கிறது. இதில் சேதி எதுவுமில்லை; உயிர் இருக்கிறது, சகல துயர்களோடும் அழகுகளோடும். உயிர் இல்லாத இடத்தில் அழுக்கு இல்லை. ஆயிரம் அடுக்குகள் ஆயிரமாயிரம் உலகங்கள். இன்னும் எத்தனை அலைகள் மீதமுள்ளன நீரிடம். இன்னும் எத்தனை விதைகள் மண்ணிடம்.

இருவேறு இயல்புகள் சந்திக்கும் கரை, நமது அனைத்து மயக்கங்களும் மேன்மைகளும் தொடங்கிய இடம். மனிதர்கள் தண்ணீரில் இறங்குகின்றனர். இறங்குதல் மட்டுமே சாத்தியம் இதில். தண்ணீர் நாம் உயிரோடிருப்பதை நினைவூட்டுகிறது. எங்கிருந்தோ வரவழைக்கிறது விளையாட்டையும் சிரிப்பையும். உடை களைகிறது. குனியச்சொல்கிறது. நாம் இறங்குகிறோம் உலகில் இருந்து பூமிக்கு.

வழிவிடுங்கள். அந்த பையன் புறப்பட்டுவிட்டான் வெற்றுடம்புடன் வெறுங்காலில் இங்குள்ள குப்பைகளையும் கூளங்களையும் மிதித்து தாண்டி நடந்து புதிய உலகைப் படைக்க. அவனது லட்சியங்கள் ஈடேறட்டும். என்றாவது ஒருநாள் அவன் தனது கதைகளையும் கண்டுபிடிப்புகளையும் பகிரவேண்டி திரும்பிவருவான் இன்றிந்த பரிசல் வந்தடைந்ததை போல. அப்போது எங்கும் செல்லவேண்டி இருக்காது. இங்கு இருக்கலாம் எப்போதும் தயாராக.

அவர் சொல்கிறார் இவையெல்லாம் வெறும் தோற்றங்கள் என்று. நான் நம்பவில்லை, அப்படி இருக்காது(குறைந்தபட்சம் இத்தருணத்தில்). அப்படியே இருந்தால் கூட இவை எல்லாவற்றையும் நான் உனக்கு பரிசாக அளிக்க விரும்புகிறேன் மகளே.”

-சபரிநாதன்
“துஆ”,”வால்” உள்ளிட்ட
நூல்களின் ஆசிரியர்

000

ஏ.வி.மணிகண்டன் புகைப்படத் தொகுப்பு (1)
ஏ.வி.மணிகண்டன் புகைப்படத் தொகுப்பு (2)
ஏ.வி.மணிகண்டன் புகைப்படத் தொகுப்பு (3)

ஏ.வி.மணிகண்டனுடைய புகைப்பட நூல்களை இங்கே காணலாம். https://www.manikandanav.com/

உரையாடலுக்கு

Your email address will not be published.