“என்ர மனுசி ஐயர் ஆக்கள். நான் வெள்ளாளன். நாங்கள் உதெல்லாம் சாப்பிடுறதில்லை.”இயல்பாக சொல்லியபடி, நான் வெட்டிக்கொடுத்திருந்த மாட்டிறைச்சியை கிறிலில் சூடாகிக்கொண்டிருந்தான். அவன் கூறியதைக் கேட்டதும் ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்குப் பிறகு எனக்குள் ஒரு சிறிய அதிர்வு எழுந்து அடங்கியது. என்ன இழவடா இது!, எங்கபோனாலும் முன்னால சனி போகுதென எனக்குள் சொல்லிக்கொண்டேன். செய்துகொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு நிமிர்ந்து அவனைப் பார்த்தேன். நான், தன்னைப் பார்ப்பதை உணர்ந்ததும் அவனில் ஒருவிதமான அசாதாரண உடல்மொழி வெளிப்பட்டு அடங்கியது.
உலகைமுடக்கிய கொரோனாவின் பின் நிரந்தரமானதொரு வேலை கிடைத்திருக்கவில்லை. அரச உதவிப்பணத்தோடு காலத்தைக் கடத்தவேண்டியிருந்தது. அவ்வப்போது கிடைத்த வேலைகளும் நேரம் அதிகமாகவும் சம்பளம் குறைவாகவும் இருந்தன. முதலில் வேலைசெய்த உணவகங்களின் முதலாளிகளுக்கு அழைப்பெடுத்து வேலைக்காக விண்ணப்பித்தும் பலனேதும் கிடைக்கவில்லை. சிலர் தங்களது உணவகங்களை வாடகைக்கு கொடுத்துவிட்டதாக கூறினார். சிலர் மகன்களிடம் கொடுத்துவிட்டதாகவோ அல்லது விற்றுவிட்டதாகவோ கூறினார்கள். இன்னும் சிலர் அழைப்பதாக கூறினாலும் அழைக்கவில்லை.
சீராக சென்றுகொண்டிருந்த நாள்களைக் கடந்து, சிறிய சேமிப்பை செய்து ஊரில் எதாவதொரு முதலீடுசெய்து தொழிலை ஆரம்பித்து விடவேண்டுமென்று எண்ணிய நாள்களில்தான் கொரோனா வந்து எல்லாவற்றையும் சிதைத்துத் தள்ளியது. சேமிப்பு எல்லாம் கரைந்து கடனில் நாள்களைக் கடத்தவேண்டியதாயிற்று. ஒருவாறு கொரானாவின் தாக்கம் குறைய ஆரம்பித்ததும், வேலைநிறுத்த போராட்டங்களும் மானியக்குறைப்புக்கு எதிரான விவசாயிகளின் போராட்டமும் ஆரம்பித்தது. மஞ்சள் ஆடையணிந்த பெருந்தொகை மக்கள் அரசுக்கும் நிறுவனங்களுக்கும் எதிராக வீதிகளில் இறங்கியிருந்தனர். பல தடவைகள் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளும் நடந்தன. வல்லரசு எனப் பெயர்கொண்ட, இன்னமும் காலனித்துவ அதிகாரத்தைப் பயன்படுத்தி சில நாடுகளை சுரண்டிக் கொண்டிருக்கிற இந்தத் தேசத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கடன் மற்றும் பொருளாதார இழப்பினால் தற்கொலை செய்துகொண்டிருந்தார்கள்.
இந்தத் தேசத்தின் குடியானவர்களாலேயே பொருளாதார சரிவை தாங்கமுடியாதபோது முப்பது வயதுகளின் தொடக்கத்தில், கையில் எதுவுமே இல்லாமல் அகதியாக, வந்தேறியாக ஆரம்பத்திலிருந்து வாழ்வைத் தொடங்கிய நானெல்லாம் எப்படி சமாளிப்பது. போதாக்குறைக்கு ரசியா – உக்ரைன் யுத்தம், பாலஸ்தீனிய இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு என விலைவாசியெல்லாம் உச்சத்தை தொட்ட இந்தநாள்களில் இவன் ஒருவனின் கதைக்காக, அலைந்துதேடிக் கிடைத்த வேலையை விட்டுவிட்டு செல்லவா முடியும்.
திரும்ப திரும்ப அவன் சொன்னதொனி மூளைக்கு உருவெற்றிக் கொண்டிருந்தது. கையில் மிகக் கூரியகத்தி. கொஞ்சம் கவனக்குறைவாக வேலையை செய்தாலும் கையைப் பதம் பார்த்துவிடக்கூடும். இரண்டு நாள்களுக்கு முன்னர்தான், சிறியவயதிலேயே இங்கு வந்துவிட்டதாகவும், ஊரில் யாருமில்லை. இன்றுவரை அங்கு போயிருக்கவுமில்லை. அந்த மண்ணின் நிறம்கூட மறந்துபோய்விட்டது என்று கூறியிருந்தான். ஒரு நிதானமான நடத்தை அவனில் தெரிந்திருந்தது. பரவாயில்லை. இவனுடன் சச்சரவில்லாமல் வேலைசெய்யலாமென எண்ணிக்கொண்டிருந்தேன். வார்த்தைகளை அளந்து பக்குவமாக பேசும் அவனைப்பற்றி நல்ல அபிப்பிராயம் வந்திருந்தது. அது வளர்ந்து விருட்சமாகுவதற்கிடையில் தனக்குள்ளும் ஒரு விசச்செடி இருக்கிறது என்பதனை மிக சாதாரணமாக எந்தவொரு தயக்கமுமில்லாமல் தான் யார் என்பதை வெளிப்படுத்தி தன்னை உணர்த்த முற்படுகிறான். இனி எப்படி இவனோடு நெருங்கி வேலை செய்வது. அதைவிட முகம் கொடுத்து ஒரு உரையாடலை செய்வது. எப்படியாவது இந்தப் பொழுதைக் கடத்தி விடவேண்டுமென்ற மனவூக்கத்துடன் வேலைத் தொடர்ந்து செய்யத்தொடங்கினேன்.
மனதுக்குள் எழுந்த பேரிரைச்சல், கிணற்றுக்குள் இறங்க இறங்க விளையும் அசாதாரண அமைதியைப்போல குறைந்துகொண்டிருந்தது. அதேவேளை அதற்குள் எழும் எதிரொலியைப்போல அவனது சொற்கள் என்னைச் சூழ்ந்து மோதிக்கொண்டிருந்தன. வெளிச்சத்தைக் கண்டதும் ஒளிந்துகொள்ளும் கரப்பான் பூச்சியைப்போல என்னை எங்காவது ஒளித்துவிட இயலாதா எனத் தவித்துக்கொண்டிருந்தேன். கைகளுக்கும் மனதிற்கும் இடையே ஒரு இடைவெளி எழுந்தது. கத்தியைப் பிடித்திருந்த கையின் இறுக்கம் தளர்வதுபோல இருந்தது. காலிலிருந்து ஒருவித சோர்வு மேலெழுவது போலத் தோன்றியது. அவன் சொன்னது எந்த விதத்திலாவது என்னைப் பாதித்துவிடக்கூடாது எனச் சொல்லிக்கொண்டேன். தாடைகளால் பற்களை இறுக்கிக்கொண்டேன்.
இது நிகழ்வது முதல் தடவையல்லத்தான். முன்னர் நிகழ்ந்த போதெல்லாம் தூசுபோலத் தட்டிவிடும் வல்லமை வாய்த்திருந்தது. அந்தச் சூழலும் காலமும் அதை வழங்கியிருந்தது. இப்போதைய சூழல், வாழ்வுத் தேவைகள் அவமானத்தை கண்டும் காணாமல் கடந்துபோகச்செய்கிறது. கத்தியை மெதுவாக வெட்டுப்பலகையில் வைத்தேன்.
திடீரென உருவாகியிருந்த அமைதி அவனுக்கு எதையோ உணர்த்தியிருக்க வேண்டும். திரும்பிப் பார்த்தான். பின் இங்கு எதுவுமே நிகழவில்லை என்பதுபோலச் சாதாரணமாகவே கேட்டான்.
“என்ன கத்தியை கீழ வைச்சிட்டியள். வெட்டி முடியுங்க.
“கை வழுக்குது. கழுவிட்டு வெட்டுறன்” . நான் சொல்லிமுடிக்கவில்லை. அவனிடமிருந்து பதில் வந்தது.
“உங்களுக்கே கத்தி வழுக்குது எண்டால் என்ன கதை. இண்டைக்கு நேற்றே கத்தி பிடிச்சனிங்கள்.”
“இப்ப என்ன சொல்லுறியள்?”
எல்லாக்காலங்களிலும் நடந்த நிகழ்வுகளை ஒரே கணத்தில் முடிச்சுப்போட்ட மனது சட்டென குரலுக்குள் இறங்கியது. மனது குரலால் வெளிப்படுத்திய அயர்சியைப் பார்த்ததும் அவன்,
“இல்லை இங்கு வந்தகாலம் முதல் ரெஸ்ரோரண்டில தானே வேலை செய்கிறீர்கள் அதைச் சொன்னேன்” என்றான்.
எதுவும் சொல்லப் பிடிக்காமல் விலகிச்சென்று கையைக் கழுவினேன். பின் அந்தக் குளிர்ந்த நீரை கைகளில் ஏந்தி முகத்தில் ஏத்தினேன். முகத்தசைகளில் இருந்த இறுக்கம் குறைந்ததுபோல இருந்தது. மீண்டும் மீண்டும் குளிர்ந்த நீரை முகத்தில் ஏத்தினேன். எத்தனை தடவைகள், எத்தனை விதமாக குத்திப் பேசுகிறார்கள். தங்கள் எங்கெல்லாம் வசதிகளும் வாய்ப்புகளும் கிடைக்கின்றனவோ அங்கெல்லாம் தேவைப்படாத இடத்திலும் கூழைக்கும்பிடு போட்டு அவற்றை தக்கவைத்தும் கொள்கிறார்கள். அதையே மற்றவர்களிடமும் எதிர்பார்க்கிறார்கள்.
நிலம் மாறியும், மொழி மாறியும், நிறம் மாறியும், பழக்கவழக்கங்கள் கூட மாறியும், இந்தக்குணத்தில் மாத்திரம் எந்த மாற்றமுமில்லை. எங்காவது இது குறித்து கதைத்தால், இப்ப முந்தின மாதிரியெல்லாம் இல்லை. யாரும் யாரையும் ஒதுக்கி வைப்பதில்லை. வீடுகளுக்குள்ளும் கோயில்களுக்குள்ளும் போய்வர யாருமே மறிப்பதில்லை. எல்லாம் மாறிவிட்டது என்பார்கள். என்ன, கல்யாணத்தில் மட்டும்தான் கொஞ்சம் இருக்கு அதை விட்டுவிட ஏலாது தானேயென்று இன்னொரு விசித்திரத்தையும் கூடவே வெட்கமில்லாமல் சொல்லுவார்கள். இவர்களுக்கு எப்படி விளங்கப்படுத்துவது. அன்றைக்கு இருத்திக்கதைக்க முற்றத்து மணல்கும்பி. இன்றைக்கு விறாந்தையின் மெத்தைக்கதிரை. இந்த மாற்றத்தைவிட வேறு என்னதான் சொல்லமுடியும்.
அந்த இடத்திலிருந்து கொஞ்ச நேரமென்றாலும் விலகியிருக்க வேண்டும்போலத் தோன்றியது. வேலை செய்த இடத்தை துடைத்துவிட்டு அவனிடம் எதுவும் சொல்லாமல் வெளியேறினேன். ஓய்வு அறைக்கு சென்று அங்கிருந்த நாற்காலியில் அமைதியாக இருந்தேன். ஒளிர்ந்துகொண்டிருந்த மின்குமிழை சுற்றியோடும் பூச்சி கண்ணில் பட்டது. இன்றைய பொருளாதார நிலைதான் மின்குமிழ். நான் தான் அந்தப் பூச்சி. யார் என்ன செய்தாலும் வெளிச்சத்தைவிட்டு விலகமுடியாத நிலை. கைகளால் மெதுவாக அந்தப் பூச்சியை தள்ளிக்கொண்டு மேசையின் விளிம்பில் விட்டேன். ஒருகணம் ஸ்தம்பித்து நின்றது. பின் சுதாரித்து வெளிச்சத்தை நோக்கி ஒடத்தொடங்கியது. தொலைபேசியை எடுத்து பூச்சியை வீடியோவாக பதிவு செய்தேன்.
தன்னிச்சையாக கைகள் தொலைபேசியிலிருந்த வங்கிக்கணக்கை திறந்தது. அந்த மாதத்தின் பில்கள் ஒவ்வொன்றாக கழிந்திருந்தன. முதலாம் திகதி வரவாக இரண்டாயிரம் யூரோக்களையும் பதினைந்தாம் திகதி மிகுதியாக இருநூறு யூரோக்களையும் பச்சை நிறமாக காட்டியது. பச்சை நிறத்தை பார்த்ததும் ஒரு திருப்தி உண்டானது. மீண்டும் ஒருதடவை கணக்கை மாதத் தொடக்கத்திலிருந்து ஆராய்ந்தேன். வீட்டுவாடகை, தொலைபேசி, இன்சூரன்ஸ் என முக்கியமானவை எல்லாம் கழிந்திருந்தன. இந்தமுறை இளையவளுக்கு சப்பாத்து எடுத்துவிடவேண்டும். சப்பாத்து கிழிந்திருப்பதை போனமாதமே காட்டியிருந்தாள். இளையவளுக்கு எடுத்தால் மூத்தவளுக்கும் எடுக்கவேண்டும். சரி இந்தமாதமும் ஓடியிலதான் போகப்போகுது. தொலைபேசியை வைத்துவிட்டு பூச்சியைத் தேடினேன். மின்குமிழின் அடியில் இருளும் வெளிச்சமும் கலக்குமிடத்தில் அசைவில்லாமல் இருந்தது. அதை கண்டதும் வேலையை செய்துமுடிக்க வேண்டுமேயென்ற நினைவு வந்தது.
தொலைபேசியில் நேரத்தைப் பார்த்தேன். இதற்கு மேலும் இருந்தால் இன்று செய்யவேண்டிய வேலையை செய்து முடிக்கவியலாது போய்விடும் எனத் தோன்றியது. எழுந்து வேலைசெய்யுமிடத்திற்குள் சென்றேன். அந்த இடமெல்லாம் இருளின் குரலால் நிறைந்திருப்பதைப்போல தோன்றியது. முதன் முதலாக அப்படியானதொரு அனுபவம் பாடசாலையில் ஏற்பட்டிருந்தது.
அந்த ஆசிரியையை எனக்கு நிறையப் பிடிக்கும். அவர்தான் எங்களுக்கு வகுப்பு ஆசிரியருமாக இருந்தார். என்னை வகுப்புத்தலைவனாக நியமித்துமிருந்தார். அதனாலோ என்னவோ மற்றைய எல்லா ஆசிரியர்களையும் விட ஒருபடி நெருக்கமாக நினைத்துக்கொண்டிருந்தேன். எழுதுகின்ற சோக்கட்டி முடிந்தாலோ, டஸ்ரர் தேவைப்பட்டாலோ, வருகைப்பதிவேடு எடுத்து வருவதென்றாலோ அல்லது என்ன தேவையென்றாலும் என்னைப் பெயரை சொல்லி அழைப்பார். தேவையை கூறுவார். நானும் சிட்டாக பறந்துபோய் அந்தத் தேவை நிறைவேற்றுவேன். அதில் ஒரு பெரிய மகிழ்வு எனக்கு. சிலநாள்களில் தண்ணீர் போத்தலையோ, உணவினையோ அல்லது தனது உடல் தேவைக்களுக்கான மருந்துவகைகள் எதனையாவதோ ஆசிரியர்கள் அறையில் மறந்து வைத்துவிட்டு வந்திருந்தால் அதனை எடுத்தவர என்னை அழைப்பதில்லை. அதற்கு மட்டும் வேறு ஒரு மாணவனை அனுப்பி எடுப்பிப்பார். முதலில் அது எனக்கு பெரிதாக தோன்றவில்லை. வகுப்பறை தலைவன் நான் என்பதால் வகுப்பறை சார்ந்த குறிப்பிட்ட வேலைகளை எனக்கு தருகிறார் என நினைத்துக்கொண்டேன். நாளாக நாளாக சின்ன உறுத்தல் உருவாகியிருந்தது. அது அவருக்கு நான் மட்டும் நெருக்கமான மாணவனாக இருக்கவேண்டுமென்ற சிறுவயது அலாதி. அதனைக் கேட்டுவிட வேண்டும் என்று தீர்மானித்தேன். சந்தர்ப்பம் வாய்த்தபொழுதில் கேட்டும்விட்டேன்.
தீர்க்கமான பார்வையொன்றின் பின் அவரது சொற்கள் வெளிப்பட்டன. அவ்வப்போது பாடசாலையில் கல்வி சார்ந்து சில சந்தர்ப்பங்களில் கேள்விப்பட்டு உளைச்சலுக்குள்ளான பலசொற்கள் அதில் விரவிக்கிடந்தன. எப்போதுமில்லாமல் “அவரவரை அந்தந்த இடத்திலதான் வைக்கிறது. பதினெட்டுப்புத்தியோட கேள்வி கேளாதே” என்று அவர் இறுதியாக சொன்னதுமட்டும் தெளிவாக கேட்டது. மறுநாள் எனது ஊரவரான உடற்கல்வி ஆசிரியரையும் அழைத்துக்கொண்டு அதிபரிடம் சென்று வகுப்பறையை மாற்றிக்கேட்டேன். உடற்கல்வி ஆசிரியர் நிகழந்தவற்றை அதிபரிடம் எடுத்துக்கூறி வகுப்பினை மாற்றிக்கொள்ள உதவினார். சிலநாள்களில் பாடசாலை முழுவதற்கும் இந்தக்கதை பரவியிருந்தது. மரநிழல்கள் கதிரைகள் கரும்பலகைகள் தும்புத்தடிகள் எல்லாவற்றுக்கும் வாய் முளைத்தன. பிடிவாதமாக பாடசாலை சென்றேன். சிலர் நண்பர்களானார்கள். சில நண்பர்கள் ஒதுங்கிக்கொண்டனர். அந்தக் காலத்திலேயே என்னை விழுங்கிவிடும் கருமையென ஒரு இருள் எனக்குள் உருவாகியிருந்து. அது என்னோடேயே வளரவும் தொடங்கியது. இருளின் குரல் சில இடங்களில் வழிகாட்டியது. சில இடங்களில் என்னை மூழ்கடித்தும் கொண்டது. சில இடங்களில் எதிரொலிகளை தின்று செமித்தது. சில இடங்களில் காறி உமிழ்ந்தது. நீண்ட காலத்தின் பின் மீண்டும் அந்த இருளின் குரல் என்னை மீறி ஒலிக்கத்தொடங்கியிருந்தது.
இந்த வேலையை விட்டு விலகிவிடவேண்டும். எதற்காக விலகவேண்டும். இந்த மனஅழுத்தத்துடன் எப்படி வேலைசெய்வது. செய்துதான் ஆகவேண்டும். நாளைக்கும் இப்படியொரு கதையை சொன்னால். சொன்னால் என்ன சொல்லிவிட்டுப்போகட்டும். காசுக்காக எல்லாவற்றையும் பொறுக்க வேண்டுமா. நாளைக்கு வீட்டு வாடகைக்கு, இதர செலவுகளுக்கு என்ன செய்வது. மனம் இரண்டு பட்டுகொண்டது.
அரசியல்காரணங்களால் அகதியாக வந்திருந்தாலும், காலநீட்சி பொருளாதார அகதியாக்கிவிட்டது. வேலையில்லை என்றால் ஒன்றும் செய்யவியலாது. நான் தனியன் இல்லை. பிள்ளைகளுக்காக, அவர்கள் படித்து நல்ல வேலையொன்றில் அமர்வதற்காக, ஏன் நானின்று அடைகின்ற அவமானத்தையும் இழிவையும் அவர்கள் அடைந்துவிடாமல் இருப்பதற்காக வேலைத்தளத்தில் நிகழ்பவற்றை மறந்து வேலை செய்யத்தான் வேண்டும். மனது தனக்கு இனக்கமான ஒரு இடத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. அது தற்காலிகமாக இருந்தாலும் பரவாயில்லை. இல்லை இந்த இணக்கம் தான் அவர்களை இன்னும் இப்படியெல்லாம் பேசவைக்கிறது தூக்கி முகத்துக்கு நேரேயே எறிந்துவிட்டு போனால் மற்றவர்களுடன் இப்படி பேசவோ நடக்கவோ முனையமாட்டார்கள். எரிச்சலுடனும் கையேலாத் தனத்துடனும் உள்ளே நுழைந்தபோது அவன் இல்லை. புகைப்பிடிக்கப் போயிருப்பான் என நினைத்துக்கொண்டு எனது வேலையை ஆரம்பித்தேன்.
மனது தனியாக வெளிப்பட்டு எனக்குள் முரண்டு பிடித்தது. “யாரும் எங்களுக்கு படியளக்கப் போவதில்லை. எங்களின் கைதான் படியளக்கும்.” அப்பர் நெடுக சொல்லும் வசனம் நினைவுக்கு வந்தது. அப்பாவின் நினைவு தோன்றியது அந்தநேரத்தில் பெரும் நெகிழ்வாக இருந்தது. உழைப்பின் வண்ணம் என்ன என்று கேட்டால், எந்தப்பொழுதிலும் அப்பாவின் வியர்வை படிந்த உடலின் நிறம்தான் தோன்றும். முதன்முதலாக அப்பாவில் சிறிய வருத்தம் உண்டான நாளொன்றும் இருந்தது. அது சிறுவயதின் அறியாமை. அது எனது பத்தாவது வயதில் நிகழந்தது.
அப்பாவின் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது நாகைய்யா கடையைக் கண்டதும் இனிப்பு வாங்கித்தரும்படி அடம்பிடித்துக் கேட்டேன். சைக்கிளை நிறுத்திவிட்டு இனிப்பு வாங்குவதற்காக சென்றார். அப்போது ஒருவன், தனது வீட்டு வாசலுக்கு நேரே நிறுத்திவிட்டதாக சொல்லி சைக்கிளை தள்ளி விழுத்திவிட்டு உனக்கெல்லாம் எவ்வளவு திமிர். இதில் சைக்கிளை நிறுத்துகிறாய் என சண்டைக்கு வந்தான். அப்பா அவனது வயதையும் பொருட்படுத்தாமல் மன்னிப்பு கேட்டுவிட்டு விலகிவந்தார். எனக்கு மனதுக்குள் ஒரு நெருடல். அப்பா ஏன் அவனுக்கு அடிக்கவில்லை.
அன்று, அவனிடம் அப்பா எதற்காக அவ்வளவு கண்ணியத்துடன் நடந்துகொண்டார். ஏன் சைக்கிளை தள்ளிவிழுத்தினாய் என்று கேட்கவில்லை என்று கேட்டதற்கு, எங்களிலும் பிழை இருக்குதானே அப்பன். அதைவிட கேட்டு சண்டை பிடிக்கிறதால என்ன பலன். அவங்களுக்கு வசதி வாய்ப்பு பணம் எல்லாம் இருக்கு. நாங்கள் அப்படியில்லைத்தானே. அப்பா நாளைக்கு வேலைக்கு போனால்தான் உங்களை நன்றாக படிக்கவைக்க முடியும். நீங்கள் படித்து பெரியாளாக வந்தால் காணும். இப்படியெல்லாம் நடக்காமல் இருக்கும் என்றார். அத்தோடு மறந்துபோன அந்த நிகழ்வின் உண்மையான பக்கம் ஓரளவு அறிவு வந்த போதுதான் புரிந்தது. அபபாவின் மீது இருந்த வருத்தம் மறைந்து பெரும் ஆசுவாசம் உண்டாகியது. பின் எங்களுக்காக, எங்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக எபபடியெல்லாம் தன் கோபத்தை அடக்கிக்கொண்டாரென்று உணர்ந்த நாள்களிலெல்லாம் அவர் குறித்து உருவாகிய பெருமிதம் எள்ளளவேனிலும் குறைந்ததில்லை. நான் இதையெல்லாம் அனுபவித்த பொழுதுகளில் அப்பா எவ்வளவு வலிய சீவன் என்று எண்ணிக்கொள்வேன். எனக்கு கிடைத்த வலிமை அப்பாவிடமிருந்து கிடைத்தது போல, அப்பாவுக்கு அவரின் அப்பாவிடமிருந்து கிடைத்திருக்கும். தலைமுறைகளாக வலி மட்டுமல்ல வலிமையும்தான் தொடர்கிறது. வலி மட்டும் என்னோடு நின்றுவிடவேண்டும் என்று தீர்மானித்ததும், அப்பாவும் அவ்வாறுதான் நினைத்திருப்பார் என்று எண்ணியதும் நினைவுக்கு வந்தது. கூடவே தமிழ் பள்ளிக்கூடத்தில் “உங்களிடம் ஒன்றும் வாங்கிச் சாப்பிடக் கூடாது என அம்மா சொன்னவ” என்று மகளிடம் யாரோ ஒரு சகமாணவி சொன்னதாக இளையமகள் கூறியதும்.
காலடிச் சத்தம் கேட்க திரும்பிப் பார்த்தேன். கையில் இரண்டு கஃபேகளுடன் வந்துகொண்டிருந்தான். என்னருகில் வந்து கஃபே ஒன்றையும், சீனி பைக்கற்றுக்கள் இரண்டையும் வைத்துவிட்டு சென்றான்.நெருக்கமாக வந்து கஃபேயை வைத்துச்சென்றதும், முழு உடலும் பதற்றமடையத் தொடங்கியது. ஏதாவது செய்யென மன இருளுக்குள்ளிருந்து ஒருகுரல் ஒலிக்கத் தொடங்கியது. என்னிடம் அப்பாவின் கண்ணியமோ பொறுமையோ இல்லை என்பதை உணர்ந்தேன். ஒன்றும் சொல்லாமல் கஃபேயை எடுத்து மேல் தட்டில் கண்ணில் படும்படியான இடத்தில் வைத்தேன். அந்தக் கஃபே கண்ணில் படவேண்டும். அது என்னை இன்னும் குற்றவுணர்க்குள் தள்ளி வருத்தப்பட வைக்கவேண்டுமென எண்ணிக்கொண்டேன்.
இருளின் ஓரங்களில் வேலை ஏறி அமர்ந்துகொண்டது. இரண்டுபட்ட மனநிலையில் வேலையை தொடர்ந்து செய்துகொண்டே இருந்தேன். எந்தவொரு தேவையில்லாத உரையாடல்களிலும் ஈடுபாடு காட்ட விரும்பவில்லை என்பதை அவனுக்கு உணர்த்திவிடும் வகையில் முரட்டுத்தனமாக வேலையை செய்துகொண்டிருந்தேன். அந்தநேரத்தில் அவ்வாறு வேலை செய்வது மனதிற்கு அமைதியை தருவதுபோல் இருந்ததால் அவனை புறக்கணித்துவிட்டு முழு உடல் உழைப்பால் இயங்கத் தொடங்கினேன். என்னவேலை, எவ்வளவு வேலையென்றெல்லாம் கவனிக்கவில்லை. என்றுமில்லாத சோர்வும் அசதியும் ஏற்பட நேரத்தைப்பார்த்தேன். எனது வேலை நேரம் முடிவுக்கு வந்திருந்தது. கஃபே வைத்த இடத்தைப்பார்த்தேன். அது ஆறிப்போய் அதன்மேல் மெல்லிய வெள்ளைப் படலம் படிந்திருந்தது. மனதின் இருளுக்குள் மெல்லியதாக ஒரு வெள்ளையொளி.
வேலையறையில் இருந்து வெளியேறினேன். ஓய்வறைக்கு சென்று ஆடைகளை மாற்றிவிட்டு முதலில் வெளியால் போகவேண்டும் என மனது உந்திக்கொண்டிருந்து. வழமையை விட துரிதமாக ஓய்வறையை நோக்கி சென்றேன். ஓய்வறைக்கதவைத் திறந்ததும் மேசையில், வெளிச்சமும் இருளும் கலந்திருந்த இடத்தில் இன்னமும் அந்தப்பூச்சி அமைதியாக இருந்தது. அருகில் இருந்த கனமான மட்டையை எடுத்து ஓங்கி அந்தபூச்சி மீது அடித்தேன். மட்டையை அப்படியே போட்டுவிட்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக ஆடையை மாற்றிக்கொண்டு அங்கிருந்து வெளியேறினேன்.
000
நெற்கொழுதாசன்
பிரான்சில் புலம்பெயர்ந்து வசித்து வரும் நெற்கொழுதாசன் கவிதைகள், சிறுகதைகள், விமர்சனங்கள் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். ரகசியத்தின் நாக்குகள் என்ற கவிதைத் தொகுதி வெளியாகியிருக்கின்றது.
சமூகப்பண்பாட்டுச் சூழலின் எதிர்மறை அழுத்தங்களை எளிதாக விளக்குவதோடு கடந்தும் சென்றுவிடுகின்றன ‘அரசியல் கோட்பாடுகள்’. அன்றாடமும், தனிமனிதனும் அவற்றைக் கடப்பது அவ்வளவு சுலபமில்லை.
கண்ணியமோ,பொறுமையோ இல்லை என்றாலும்.. ’அந்தபூச்சியை’ மட்டுமே அடித்துத் திருப்தி கொள்ள வேண்டியதுதான் ‘அன்றாட மனிதன்’.
– தமிழ்மொழி சக்திவேல்
கோபிசெட்டிபாளையம்.
. புலம்பெயர் நாட்டில் வாழ்வதால் இக்கதையின் உண்மைத்தன்மையை ஏற்றுக் கொள்ள முடிகிறது. இந்த சமூக ஏற்றத்தாழ்வு இன்றும் கடந்தப்படுவது வேதனை. அரசியல் அதிகளாகத்தான் வந்தோம் ஆனால் காலநீட்சி பொருளாதார அகதியாகவும் நம்மை மாற்றிவிட்டதென்ற வார்த்தையில் ஒரு நிமிடம் மெளனமானேன். காரணம் இந்த இரண்டு கையறுநிலை மட்டுமல்ல, சமூக ஏற்றத்தாழ்வு அகதியென்ற மற்றொரு கையறுநிலையும் நம்மிடம் வளர்ந்துவிட்டது.