அமெரிக்க கவிஞரும் விமர்சகருமான மெரியன்னா மூரின் (Marianne Moore) முதல் கவிதைத்தொகுப்பில் “கவிதை” என்ற தலைப்பில் ஒரு கவிதை இடம்பெற்றிருந்தது. கவிதை வாசிப்பில் எரிச்சலடைந்த வாசகன் ஆமோதிக்கக்கூடிய வகையில் இவ்வாறு தொடங்குகிறது கவிதை.
நானும் அதை விரும்பவில்லை: இந்த குழப்பமான
பிதற்றல்களைவிட முக்கியமான வேறு சில விஷயங்கள் உள்ளன.
ஆனால் ஒருவர் அதை மிக அலட்சியமாக வாசித்தாலும் ,
அதன் உண்மைத்தன்மையை கண்டடைய முடியும்.
1921 ல் வெளிவந்த இந்தக் கவிதை பல பத்திகள் கொண்டது. மூர் தன் வாழ்நாளில், பல்வேறு பதிப்புகளில் இக்கவிதையை சுருக்கி வெளியிட்டு வந்தார், இறுதியாக இந்த கவிதை மேலே குறிப்பிட்ட சில வரிகளை மட்டும் கொண்டதாக மாறிவிட்டது. இருப்பினும், அவரது வாழ்நாளின் இறுதியில் வெளிவந்த முழுத்தொகுப்பில் அடிக்குறிப்பாக கவிதையின் அசல் வடிவத்தையும் சேர்த்து வெளியிட்டார்.
Marianne Moore
இந்த கவிதையின் முழுமையான வடிவம் மேலும் ஆர்வமூட்டக்கூடியது. அதில் மெரியன்னா மூர் கவிதையில் உள்ள கூறுகள் பிரதானமாக ஆவதற்கு காரணம் ”அவற்றை சிறந்தமுறையில் விளக்க முடியும் என்பதால் அல்ல, அவை பயனுள்ளதாக இருப்பதால்தான்” என்கிறார். கூடுதலாக ” நம்மால் புரிந்துகொள்ள முடியாதவற்றை நம்மால் ரசிக்க முடிவதில்லை ” என்றும் சொல்கிறார்.
நம் கவிஞர்கள் இழிவுகளிலிருந்தும், அற்பத்தனத்திலிருந்தும் மேலெழுந்து ‘கற்பனை’ என்ற சொல் உத்தேசிக்கும் நேரடியான அர்த்தம் என்னவோ கிட்டத்தட்ட அதுவாகவே அவர்கள் மாற வேண்டும். “முழுக்க முழுக்க தன் கற்பனையால் உருவாக்கிய தோட்டத்தில் இருக்கும் உண்மையான தவளையை” வாசகனுக்கு காட்ட வேண்டும். அது நிகழாத வரை நாம் அசல் கவிதைகளை அடைய முடியாது என்று எழுதுகிறார்.
மூர் கவிதையை அழகிய கற்பனையான இடத்தில் நிகழும் நிஜ விஷயங்கள் (சில சமயம் நாம் சாதாரணமானதாக, அசிங்கமானதாக நினைக்கும் விஷயங்கள்) என்று உருவகிக்கிறார். இந்த உருவகம் மிகச் சரியானதாக எனக்கு தோன்றுகிறது. ஒரு கவிஞனாகவும், வாசகனாகவும் கவிதையின் சொற்களை அடையாளமாகவோ அல்லது குறியீடாகவோ ஆக்காமல், நேரடியாக அவை என்னவோ அப்படியே அதை எடுத்துக்கொள்ளும்போதுதான் கவிதையின் அசலான மர்மத்தை நம்மால் உணரமுடியும்.
மூர் சொல்லும் அந்த கற்பனையான தோட்டம் கவிதையால் உருவாக்கப்பட்ட உலகம். ஒரு வாசகனாக கற்பனையின் மூலம் செல்லக்கூடிய இடம். அந்த தோட்டம் சாதாரணமான இடமாக இருக்கலாம். அல்லது கூல்ரிட்ஜின் “குப்லா கான் (Kubla Khan)” கவிதையில் வரும் பிரமிக்க வைக்கக்கூடிய, நறுமணம் நிறைந்த மரங்கள் நிரம்பிய வேறொரு உலகமாகவும் இருக்கலாம். அல்லது ஒருவேளை நாம் அதை புரிந்து கொள்ள எந்த பௌதீக கூறுகளும் இல்லாமல் , வேறு விதமாக சிந்திக்கவும், கற்பனை செய்யவும் கூடிய அரூபமான இடமாக கூட இருக்கலாம். எப்படியாயினும், சொற்களை அதன் நேரடிப்பொருளில் வாசிப்பது வழியாகத்தான் நாம் அந்த உலகத்திற்குள் நுழைய முடியும். இதைத்தான் வாலஸ் ஸ்டீவன்ஸ் (Wallace Stevens) அந்த உலகில் நாம் நம்மை ” மிகமிக அசலாகவும், மிகமிக விசித்திரமாகவும்” உணர்கிறோம் என்கிறார்.
பள்ளியில் உங்களுக்கு சொல்லிக்கொடுக்கப்பட்டதற்கு நேர்மாறாக கவிஞர்கள் திட்டமிட்டு எந்த அர்த்தத்தையும் மறைத்து வைத்து எழுதுவதில்லை, அல்லது ஒன்றை எழுதி, வேறு எதையோ குறிப்பதும் இல்லை. ஆனால் நம்மில் பலர் கவிதையை அதன் சொற்களை அவை உண்மையில் சுட்டும் பொருளைவிட வேறு எதையோ அர்த்தப்படுத்திக்கொள்கிறோம், நமக்கு அப்படி கற்பிக்கப்பட்டிருக்கிறது.
நம் கல்விமுறையில் கவிதைகள் என்பது குழப்பமான முறையில் சில செய்திகளை தொடர்புறுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கற்பிக்கப்படுகிறது. கவிதையில் உள்ள அனைத்தும் — படிமங்கள் , உவமைகள், சந்தம், வரிகள் அமைந்திருக்கும் விதம் — இவையெல்லாம் வெறும் அலங்காரத்திற்காகவே. கவிதையின் அர்த்தம் அதற்கடியில் எங்கோ ஒளிந்திருக்கிறது என்று கற்பிக்கிறார்கள்.
மாணவரின் வேலை அந்த அர்த்தத்தை கண்டுபிடித்து, மையக்கருத்தை அல்லது (சலிப்பூட்டும்) செய்தியை ஆசிரியரிடம் சொல்ல வேண்டும் அல்லது தேர்வில் அதை எழுத வேண்டும். கவிதையில் உள்ள உவமை, படிமம் போன்ற பிற அம்சங்கள் அதன் மையச்செய்தியை எப்படி மேம்படுத்துகின்றன என்பதை காண்பித்தால் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும். கவிதை ஏன் இந்த வகையில் எழுதப்பட்டிருக்கிறது, அதற்கான காரணம் என்ன? என்ற கேள்வியை நம் கல்விமுறை எதிர்கொள்வதே இல்லை. கவிதை பற்றிய, கவிதைமொழி பற்றிய இந்த கல்வித்துறை அணுகுமுறை பரவலாக உள்ளது.
சமீபத்தில் நான் ஸ்காட்லாந்து கவிஞர் லிஸ் லொக்ஹெட் எழுதியிருந்த குறிப்பை வாசித்தேன். “இன்று கவிதையை கற்பிக்கும் முறை மிகமிக மோசமானது . . . ஆசிரியர்கள் கவிதையை உவகையை அளிக்கக்கூடிய ஒன்று என்பதாக இல்லாமல் ஒரு புதிர்போல கற்பிக்கிறார்கள், இது வெட்கக்கேடானது. . . . ஆசிரியர்களே கவிதையை ஒரு குறியீடு என நினைக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. ஒருமுறை ஒரு மாணவன் என்னிடம் மின்னஞ்சலில்: ‘உங்களின் ஒரு கவிதையில் காளைமாடு வருகிறது, அது வழியாக நீங்கள் உத்தேசித்தது என்ன ?’ என்று கேட்கிறான். கவிதை என்பது ரகசிய குறியீடு வழியாக ஒரு செய்தியை வாசகனிடம் தெரிவிக்க முயற்சிக்கிறது என்ற தவறான புரிதலை நம் கல்விமுறை அந்த மாணவனுக்கு அளித்திருக்கிறது”
அரிதான சில சந்தர்ப்பங்களில் (எடுத்துக்காட்டாக அரசியல் அடக்குமுறை காலங்களில் எழுதப்பட்ட கவிதைகள் அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்தின் குறியீட்டு மரபுகளை ஏற்றுக்கொண்டு எழுதப்பட்ட கவிதைகள்) கவிதையின் சொற்கள் திட்டமிட்டே புதைக்கப்பட்டு அல்லது மறைக்கப்பட்டு அவை வேறு பொருளைக் குறிக்கலாம். ஆனால் அது விதிவிலக்குதான். கொஞ்சம் வரலாற்று புரிதலுடன், வழிகாட்டுதலுடன் இக்கவிதைகளை எளிதாக புரிந்துகொள்ள முடியும்.
கவிதை எவ்வளவு எளிமையாக இருந்தாலும், எவ்வளவு விசித்திரமானதாக இருந்தாலும், எவ்வளவு யதார்த்தமானதாக இருந்தாலும் அல்லது புரிந்துகொள்ளமுடியாத குறியீடுகளும், படிமங்களும் இருந்தாலும் நல்ல இலக்கிய அனுபவத்தைப் பெறுவதற்கு வாசகன் முதலில் மிகவும் கவனமாகவும் ஆழமாகவும் வாசிக்க வேண்டும், மேலும் கவிதையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சொற்களின் அர்த்தம் என்ன என்பதைப்பற்றி சிந்திக்க வேண்டும். ஒரு நல்ல அகராதி எப்பொழுதும் அவசியமானது.
நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை தெளிவாக்க விரும்புகிறேன். எல்லா நல்ல கவிதைகளும் எளிமையாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அதேபோல, கவிதைகள் சொல்வதன் அர்த்தம் வெறும் நேரடியான பொருள் மட்டுமே என்றும் நான் சொல்லவில்லை. கவிதையிலிருந்து கிடைக்கும் இலக்கிய அனுபவம் அதன் நேரடியான- மற்ற எந்த வகையான எழுத்தை வாசிப்பதைவிடவும் நேரடியான- முதல்வாசிப்பிலிருந்து தொடங்குகிறது என்பதைத்தான் நான் சொல்ல விழைகிறேன்.
நான் கவிதை வாசிப்பு பற்றி சொல்வது எளிமையானதாக, எந்த விளக்கமும் தேவையில்லாதபடி அவ்வளவு அப்பட்டமானதாக உங்களுக்கு தோன்றினால், என்னை நம்புங்கள், அது அவ்வளவு எளிமையானது அல்ல. ஆசிரியராகவும், கவிஞராகவும் நான் பலமுறை பார்த்திருக்கிறேன், சிறந்த வாசகர்கள் கூட, ஏன் பல கவிஞர்கள் கூட கவிதையை இப்படி வாசிப்பதில்லை.
பெரும்பாலானோர் கவிதையில் அர்த்தம் மறைக்கப்பட்டிருக்கும், அதைத் தேடி கண்டடையவேண்டும் என்று தவறாக எண்ணுகிறார்கள். ஆம், கவிதையை வாசிப்பது கடினம். அதற்கு கொஞ்சம் கவனமும், பொறுமையும் கொண்ட வாசிப்பு தேவையாகிறது, அது முன்பே பரிச்சயமில்லாத ஒன்றைப்பற்றி வாசிப்பதுபோலத்தான். ஆனால் கவிதையின் உண்மையான இடரும், அதன் வெகுமதியும் அது எழுதப்பட்டிருக்கும் பக்கத்தை கவனமாக வாசிப்பதிலும், அதிலிருக்கும் புதுமையை நம் கற்பனை ஏற்க இடமளிப்பதிலும் உள்ளது. கவிதையில் பல்வேறுவகையான ரகசியங்கள் உண்டு, அந்த ரகசியங்களை கண்டுபிடிப்பதைவிட அவற்றை ஏற்றுக்கொள்வதுதான் கடினமானது..
சொற்களின் நேரடியான அர்த்தத்திலிருந்துதான் கவிதையின் விசித்திரமான உலகின் வாசல் திறக்கிறது. ஒரு ஆசிரியராக, இலக்கியம் படிக்கும் மாணவர்கள் ஆரம்பத்தில் கவிதையை திறந்த மனதுடனோ அல்லது தங்களை முழுமையாக மூடிக்கொண்டோ எதிர்கொள்ளத்தொடங்கினாலும், கவிதையில் உள்ள சொற்களின் நேரடியான அர்த்தத்தை உணரும் இடத்தை நோக்கி நகரும்போது அவர்களின் வாசிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதை கண்டுள்ளேன். ஒட்டுமொத்தமாக ஒரு கவிதை எப்படி பொருள்படுகிறது என்பதுபற்றி பேசத்தொடங்கும் முன்பு, கவிதையில் உள்ள ஒவ்வொரு சொல்லையும் ஆய்வு செய்ய நூலகத்திற்குச் செல்லவும், அது சார்ந்து எவ்வளவுதூரம் முடியுமோ அவ்வளவுதூரம் அதை கண்டுபிடிக்கும்படியும் சொல்வேன். ஆங்கில அகராதி (Oxford English Dictionary) உட்பட அவர்களுக்கு கிடைக்கக்கூடிய எந்தவொரு ஆதாரத்தையும் பயன்படுத்தி, அந்தச் சொல் கவிஞரின் காலத்தில் என்ன பொருள் கொண்டிருக்கும் என்பதை கண்டுபிடிக்க சொல்வேன்.
அவர்கள் நிறைய சுவாரசியமான தகவல்களுடன் திரும்பி வருகிறார்கள், அவற்றில் சில கவிதையின் அர்த்தத்திற்கு தொடர்பே இல்லாதவையாக இருக்கும். ஆனால், சொற்களை முடிந்தவரை ஆழமாக புரிந்து கொள்ளும் பயிற்சி மூலம் ஒரு கவிதைக்குள் நுழைய இதுவே சரியான வழி என்பதை அவர்கள் உணர்கிறார்கள். கவிதையின் அர்த்த தளமும் அதன் வாசிப்பு சாத்தியங்களும் இந்த செயல்பாட்டிலிருந்துதான் உருவாகிறது, ஏற்கனவே கவிதைக்கு யாரோ அளித்த விளக்கத்தை அவர்கள் கண்டுபிடிப்பது (அது வழியாக நல்ல மதிப்பெண் பெற முயல்வது) கவிதை வாசிப்பின் வழிமுறையல்ல என்பதை அவர்கள் கண்டடைகிறார்கள். எனது மாணவர்கள் கவிதையுடன் நேரடியான, ஆழமான உறவை உணரத் தொடங்குகிறார்கள். கவிதைகள் தங்கள் மொழியில் எழுதப்படுகின்றன என்பதையும், நாம் ஒவ்வொருவரும் தங்கள் சொந்த வாழ்க்கையில் சுதந்திரமான வாசகர்களாக மாற முடியும் என்பதையும் அவர்கள் உணர்கிறார்கள்.
கவிதையின் ஆற்றலை அறிவதற்கான சிறந்த வழி அதில் உள்ள சொற்களின் வரையறைகளில், அதன் வேர்ச்சொற்களில் ஆழமான கவனம் செலுத்துவதுதான். இதனாலேயே, ஒரு பேராசிரியர் அல்லது இலக்கிய வழிகாட்டியை விட , கவிதை வாசிப்பதற்கு தேவை ஒரு நல்ல அகராதி.
“உச்சபட்ச தெளிவு ஒரு மர்மம்” என்கிறார் மஹ்மூத் தர்வீஷ்(Mahmoud Darwish). திட்டமிட்டு உருவாக்கப்படும் தெளிவின்மையும், கவிதையில் திரண்டுவரும் ஆழமான மர்மமும் முற்றிலும் வேறுவேறானவை. ஆனால், பல கவிஞர்கள் இந்த இரண்டையும் போட்டு குழப்புகிறார்கள். கவிதை இயல்பாகவே “கடினமானது” என்றும், ஒன்றை மறைத்துவைப்பது வழியாகத்தான் அது அர்த்தத்தை உருவாக்குகிறது என்றும் நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் நாம் புதிதாக கவிதை வாசிக்க தொடங்கும்போது, இயல்பாகவே நம் முதல் வாசிப்பை அந்த அடிப்படையில் நிகழ்த்துகிறோம்
நல்ல கவிஞர்கள், ஒரு வாசகனுக்கு புரிந்துகொள்ள கடினமாக இருக்கவேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே எதையும் சிக்கலாக்குவதில்லை. துரதிர்ஷ்டவசமாக, இளம் வாசகர்களும், இளம் கவிஞர்களும் இதைத்தான் கவிஞர்கள் செய்கிறார்கள் என்று நினைக்க கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த அம்சம் சமகால கவிதை எழுதுவதில் சில பழக்கங்களை உருவாக்கியுள்ளது. கவிதை பற்றிய இந்த பிழையான புரிதல் கொண்டவர்களிலிருந்து மோசமான கவிதைகள் வெளிப்படுகிறது, இது ஒரு வகையான கவித்துவமான தெளிவின்மையை நிலைநிறுத்தும் பின்னூட்ட வளையமாக மாறுகிறது.
பெரும்பாலும் கவிஞர்களுக்கு இதை கைவிட நீண்ட காலம் எடுக்கும். சிலர் எப்போதைக்கும் கைவிடுவதில்லை. மர்மமாக இருப்பதற்கான குறுக்கு வழி என்பதால், அவர்கள் வேண்டுமென்றே தெளிவற்றதாகவும் பூடகமாகவும் எழுதுகிறார்கள். விளைவாக அந்த வகையான கவிதைகள் வாசகர்களுக்கு மிக அந்நியமானதாக, திட்டமிட்டே மறைத்துவைக்கப்பட்ட அர்த்தங்களை நம்பி இயங்குகின்றன.
இளம் கவிஞர்கள் தங்கள் கவிதையில் அர்த்தத்தை மறைத்து வைத்திருக்க வேண்டும் என்ற உந்துதலுக்கு முக்கியமான காரணம் அவர்களின் படைப்புச் செயல்பாட்டையே அழிக்கக்கூடிய தவறான வழிகாட்டுதல்கள் தான். ஆனால் அதற்கும் அப்பால் அந்த உந்துதலுக்கு உளவியல்ரீதியான காரணமும் உண்டு என்பதை நான் கண்டுகொண்டேன்.
சிலர் தங்கள் பிம்பம் உடைபடுவதை அஞ்சுகிறார்கள். சிலர் தாங்கள் மிகமிக சாதாரணமானவர்களாக, அழகியல்பாணியை பிரதி எடுப்பவர்களாக, சுவாரஸியமே அற்றவர்களாக, அபத்தமானவர்களாக பார்க்கப்படுவோம் என்று பயப்படுகிறார்கள். இது வயது வித்தியாசமின்றி அனைத்து எழுத்தாளர்களுக்கும் உள்ள அச்சம்தான். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதுபவர்கள் இறுதியில் எதை கண்டடைகிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் சிந்தனைகளில் புதியது என எதுவுமே இல்லை, அதே பழைய சிந்தனைகள்தான் இருக்கின்றன என்பதை கவிஞர்கள் எப்படியோ கண்டுகொள்கிறார்கள். மேலும் கவிதையை நேசிக்கும் யாரும் தாங்கள் சபாஷ் சொல்ல வேண்டும் என்பதற்காக வாசிப்பதில்லை, மாறாக கவிதை வழியாக மட்டுமே சாத்தியமாகும் அனுபவத்தை, புரிதலை அடைவதற்காக வாசிக்கிறார்கள்.
தங்கள் கருத்துகளை மறைத்துக்கொள்ளவேண்டும் என இளம் கவிஞர்கள் விழைவதை பார்த்தால் எனக்கு பரிதாபமாக இருக்கிறது. ஒரு கவிஞனாக நான் எழுதத்தொடங்கிய நாட்களில், நேரடியாக வெளிப்படுவதில் சிரமம் இருந்தது. தெளிவாக, எளிமையாக மொழியை பயன்படுத்திய கவிஞர்கள் மீது நான் ஆழமான ஈர்ப்பை அடைந்தேன். ஆனால் எளிமையாகவும் நேரடியாகவும் சொல்வது, சின்ன கதை சொல்வது அல்லது சம்பவங்கள் வழியாக, விவரணைகளால் சொல்வது “உண்மையில்” கவிதையெழுத்து அல்ல என்பதை எப்படியோ உணர்ந்தேன். ஆரம்பத்தில் நான் எழுதும் கவிதையின் ஒவ்வொரு வரியிலும் என் திறன்களையும், என் கலாப்பூர்வமான ஆற்றல்களையும் காட்டவேண்டும் என்று எண்ணும் அளவுக்கு அதிக தன்னுணர்வு கொண்டவனாக இருந்தேன். இந்த உணர்வை நான் கடந்துசெல்ல அதிக காலம் தேவைப்பட்டது, ஆனால் நான் அதை கடந்துசென்ற பிறகே நல்ல கவிதைகளை எழுதத் தொடங்கினேன்.
ஒரு கவிஞனாக நான் யாராக இருந்தேனோ, அந்த அடையாளத்தில் வெளிப்படுவதற்கு பயந்தேன். எங்கே என் மேல் தவறான முத்திரை குத்தி விடுவார்களோ என்ற பயம் இருந்தது. ஒருவேளை, கவிஞனாக நான் யார் என்பதைப் பற்றி வெளிப்படையாக இருந்து , அது வாசகர்களால் ரசிக்க படவில்லை எனில் ? நான் திறமையற்றவன் என்றோ, என்னுடைய கலைவடிவம் கவிதை அல்ல என்றோ மக்கள் தவறாக நினைத்துவிட்டால்? இது போன்ற அச்சங்கள் பல இளம் கலைஞர்களிடம் இயல்பாகவே வலுவாக இருக்கும். இதனாலேயே சிக்கலான, அறிவார்ந்த சவாலான கலையை உருவாக்குகிறார்கள். இது ஒரு வகையான சுய பாதுகாப்பு.
என் மாணவர்களின் கவிதைகளில் இதனை நிறையவே காண்கிறேன். அவர்கள் கவிஞர்கள் என்பதை நிரூபிக்க, பெரும்பாலும் தங்களை அறியாமலேயே, கவிதையின் தொடக்கத்தில் எதையாவது செய்வார்கள்.
கவிதையின் தொடக்கத்தில் தங்கள் திறமைகளை (உரிமைகளை?) காண்பிப்பதுபோல இருக்கும். எடுத்துக்காட்டாக, சிலர் மிகவும் வினோதமாக, சீர்குலைக்கும் வகையில் கவிதையின் வரி அமைப்பையும், சந்தத்தையும் மாற்றுகிறார்கள். சிலரின் கவிதைகளை வாசிக்கும்போது அது அடிப்படையாக எதை விவரிக்கிறது என்பதை நாம் அறிவதற்கு முன்பே நிறைய படிமங்களையும் உருவகங்களையும் நிறைத்துவிடுகிறார்கள். என்ன நடக்கிறது, நாம் எங்கு இருக்கிறோம், யார் பேசுகிறார்கள் போன்ற அடிப்படை தகவல்களை கவிதையில் அளிப்பதில்லை. கவிஞர்கள் பிடிவாதமாக, ஒருவகையான எதிர்ப்புபோல இதை செய்கிறார்கள். அப்படி செய்தால் கவிதையின் கவித்துவம் “கெட்டுவிடும்” என நினைக்கிறார்கள். ஆனால் அவ்வகையான மேலோட்டமான குழப்பமான அறிமுகம், நல்ல கவிதைகளை உருவாக்குவதில்லை, நல்ல கவிதைகள் தொடக்கூடிய அடிப்படைசிக்கல்களுக்கு நெருக்கமாகக் கொண்டு வருவதும் இல்லை.
நான் கவிதை என்பது ரகசியமான குறியீடு அல்ல என்றும் அது வேண்டுமென்றே புதிராகவும், தெளிவற்றதாகவும் எழுதப்படுவதில்லை என்றும் விளக்கிவிட்டேன். அடுத்து, அப்படியென்றால் நவீன கவிதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? என கேள்வி எழுப்பப்படும்.
1922 – ம் ஆண்டு டி எஸ் எலியட்டின் நீண்ட , சிதறுண்ட , நிறைய உட்குறிப்புகளுடன் ‘பாழ்நிலம் (தி வேஸ்ட் லேண்ட்)’ கவிதை வெளியானது , நவீன கவிதையின் சிக்கலை எடுத்துக்காட்டுவதற்கு பொதுவாக குறிப்பிடப்படும் முக்கிய உதாரணம் இக்கவிதை. சுரங்கம்போல வரலாற்று, கலாச்சார உட்குறிப்புகள் நிறைந்த அந்த கவிதைக்குள் லத்தீன், பிரஞ்சு என பல மொழிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கூடவே எந்தவகையான சட்டகத்திலும் பொருத்திக்கொள்ளமுடியாத, குழப்பக்கூடிய பல அடுக்குகள் கொண்ட விவரணைகள். அந்த கவிதையை நம்மில் பெரும்பாலானவர்கள் ஒருவிதமான மிரட்சியுடன்தான் எதிர்கொண்டிருப்போம். பொருத்தமான சட்டகமோ(context), வழிகாட்டுதலோ இல்லாமல் நாம் புரிந்துகொள்ள சிரமமான கவிதை.
டி.எஸ். எலியட்டும் அவரது சக நவீனத்துவர்கள் பலரும் அறிவார்ந்த வாசிப்பிற்கு மிக உயர்ந்த தரத்தை அமைக்க வேண்டும் என்று நம்பினர், வீழ்ச்சியடைந்து வரும் கலாச்சாரத்தின் பாதுகாவலர்களாகவும் மீட்பவர்களாகவும் தங்களை எண்ணிக்கொண்டனர். அதனால், அவர்கள் வேண்டுமென்றே கடினமான, தொகுத்துக்கொள்ளமுடியாத, உட்குறிப்புகள் நிறைந்த பாணியில் எழுதினர். எலியட்டின் சமகாலத்தவரான வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் இந்த வகையான கவிதை கொண்டிருக்கும் ஆபத்தான கவர்ச்சியை முன்கூட்டியே உணர்ந்து, எலியட்டின் கவிதை “நமது இலக்கியத்தின் மிகப்பெரிய பேரழிவு … அவருடைய மேதமையின் பெருவெடிப்பு, கவிதையை மீண்டும் கல்வியாளர்களிடம் ஒப்படைத்துவிட்டோம்” என்கிறார். சில ஆசிரியர்கள் உயர் நவீனத்துவ கவிதைகளை நோக்கி ஈர்க்கப்படுவதையும், அந்த கவிதைகளை பயன்படுத்தி தங்களை புனிதர்களைப்போல, பூடகமான அறிதல்களின் காப்பவர்களாக தங்களை நிறுவிக்கொள்வதையும் அவர் கண்டார்.
பாழ்நிலம் (The Waste Land) போன்ற நவீன கவிதையின் பிரச்சனை அதன் பேசுபொருளின் சிக்கல் அல்ல. அது சிக்கல்களை எவ்வாறு வெளிப்படுத்துகிறது என்பது பற்றித்தான். அந்த கவிதையில் தெளிவற்ற வரலாற்று நிகழ்வுகளும், இலக்கியப் படைப்புகளும், தொன்மங்களும் நிறைந்திருக்கிறது. கூடவே எந்த குறிப்பும் இல்லாத வேற்றுமொழி மேற்கோள்கள், அபத்தமான சொற்றொடர் அமைப்பு, மறைஞானச்சொல் போன்ற தொனிகொண்ட சொற்கள். இவையெல்லாம் சேர்ந்து முழுக்கவிதையையும் சுற்றி கற்பனையான சிரமத்தையும் புதிரையும் உருவாக்குகிறது. இந்த சிக்கல் கவிதையில் உள்ள எளிய, நேரடியான சொற்றொடர்களில்கூட நிழல்போல படர்கிறது. கவிதை முழுக்கவே நமக்கு சிரமமாக தோன்றுகிறது. எதுவும் எளிமையாக இருக்க முடியாது என நாம் நினைக்க ஆரம்பிக்கிறோம். பள்ளியில் நவீன கவிதைகளை எதிர்கொண்ட பல வாசகர்களுக்கு, வில்லியம்ஸ் எச்சரித்ததைப் போலவே, இந்த சிரமத்தின் நிழல் அனைத்து கவிதைகளுக்கும் பரவுகிறது.
மைக்கலேஞ்சலோ வரைந்த டெல்பிக் சிபிலின் ஓவியம், 1508-12; வாத்திக்கன் நகரின் சிஸ்டைன் சர்ச்.
“The Waste Land” கவிதை தொடங்குவதற்கு முன் லத்தீன், கிரேக்க மொழிகளில் சிறிய ஆரம்ப உரை உள்ளது, இது பண்டைய கிரேக்க தீர்க்கதரிசியான சிபிலைப் பற்றிய மேற்கோள், பேட்ரோனியஸின் “The Satyricon” நூலில் இருந்து பெறப்பட்டதாகும். ஒரு கவிதையை வாசிக்க அதன் பேசுபொருள் சார்ந்த விஷேஷமான அறிதல்களை பெற்றிருக்கவேண்டிய அவசியம் பற்றி அறிஞர்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் ஒரு கவிதையிலிருந்து நல்ல வாசகனுக்கு கிடைக்கும் அதிகபட்சமான வாசிப்பனுபவம் அந்த விஷேஷமான அறிதல்களை சார்ந்தது அல்ல, அவற்றை உடனடியாக தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.ஆனாலும், கவிதை வாசிப்பிற்கு அந்த விஷேஷமான அறிதல் தேவை என்ற பதற்றம் சூழலால் உருவாக்கப்பட்டு நாம் அச்சுறுத்தப்படுகிறோம், ஆழமான நம்பிக்கையிழப்பை அடைகிறோம். அது கவிதை வாசிப்பில் ஒருவகையான மனநிலையை உருவாக்குகிறது. “The Waste Land” கவிதையின் ஆரம்பத்தில் யாராலும் வாசிக்க சாத்தியமான, எளிய ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் வரிகளைக்கூட நாம் கவனமாக, நேரடியாக வாசிக்க தவறுவோம்.
ஏப்ரல்மாதம் குரூரமானது,
லிலாக் மலர்களை உயிரற்ற நிலத்தில் பூக்கச்செய்கிறது,
நினைவுகளையும் விழைவையும் கலக்கிறது,
வாடிய வேர்களை வசந்தகால மழையால்
உயிர்பெறச்செய்கிறது.
குளிர்காலம் எங்களை வெம்மையுடன் வைத்திருந்தது,
பூமியை பனியின் மறதியால் மூடியது, இந்த மிகச்சிறிய
வாழ்க்கையை காய்ந்த கிழங்குகளால் புரந்தது.
இந்தக் கூறுகளை நூலாசிரியர் சாதாரண உரை வடிவில் எழுதினால் எப்படி இருக்கும் என்று ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள். உங்களுக்கு இது குழப்பமாக இருக்குமா? ஒருவேளை கொஞ்சம் எளிதில் புரியாததாக தோன்றலாம் — இதையெல்லாம் ஏன் அவர் சொல்கிறார், இதன் முக்கிய பொருள் என்ன? — ஆனால் முற்றிலும் மர்மமானதாக இல்லை. இந்த பகுதியில் ஒரு கடினமான சொல்கூட இல்லை.
கவிதை வித்தியாசமான, ஒருவகையான சுயபிரகடனம் போல தொடங்குகிறது: “ஏப்ரல் மாதம் குரூரமானது”. ஏனெனில் வாழ்க்கை மீண்டும் உயிர்ப்போடு எழுந்து வரத் தொடங்குகிறது. குளிர்காலத்தில் நமது எதிர்பார்ப்புகள் மிகக்குறைவு: வெறும் உயிர் பிழைப்பதற்காகவே முயற்சிக்கிறோம். ஆனால் வசந்த காலத்தில் பெரிய விஷயங்கள் நிகழத் தொடங்குகின்றன — “நினைவுகளும் விழைவுகளும்”. வசந்தகால மழையால் “வாடிய வேர்கள்” மீண்டும் உயிர் பெற தொடங்குகிறது. இந்த கவிதை ஏப்ரல் மாதத்துடன் ஒரு மனிதனிடம் என்பதுபோல பேசுகிறது. ” இறந்த நிலத்திலிருந்து லிலாக் மலர்கள் பூத்ததற்கு காரணம் நீதான்” என்று ஏப்ரல் மாதம் மீது குற்றம்சுமத்துகிறது. காலத்தின் கூறுகளான — ஏப்ரல் மாதமும், குளிர் காலமும் மனிதனைப்போல உருவகிக்கப்படுகின்றன. மேலும் அவற்றின் இயல்புகள் தலைகீழாக்கப்படுகின்றன. இந்த கவிதையில் வசந்தகாலமான ஏப்ரல் மாதம் குரூரமானதாக, அச்சுறுத்தக்கூடியதாக ஆகிவிடுகிறது. ஏனென்றால் அது நாம் மறந்துவிட்ட சில விஷயங்களை — நினைவுகளையும், விழைவுகளையும்— மீண்டும் நினைவூட்டத் ஆரம்பிக்கிறது.
மேலே நான் காட்டிய சுருக்கமான, கவிதையில் எழுதப்பட்டதற்கு நெருக்கமான வாசிப்புக்கு வேறெந்த விஷேஷமான அறிவும் தேவைப்படவில்லை, கவனம் மட்டுமே தேவைப்பட்டது. கவிதையின் அர்த்தம் பக்கத்திலே உள்ளது, அது கவனமுள்ள வாசகருக்கு கிடைக்கிறது.
மேலே கூறப்பட்ட பத்தியின் சில கூறுகளில் குறியீட்டு முக்கியத்துவம் இருக்க முடியுமா? ஆமாம், நிச்சயமாக. கவிதையைப் புரிந்து கொள்ள ஏப்ரல், லிலாக்ஸ், வாடிய வேர்கள், வசந்தகால மழை போன்றவற்றைப் பற்றி ஆராய வேண்டுமா? எனக்கு அதற்கான அவசியமே இல்லை என்று தோன்றுகிறது. இத்தகைய மேலதிக ஆராய்ச்சி செய்வதால், எலியட் அவற்றை குறிப்பாக ஏன் தேர்வு செய்தார் ? அவர் என்ன சிந்தித்திருக்கலாம் ? என்பதை நம்மால் ஊகிக்க முடியும். இத்தகைய ஊகங்கள் நம் ஆரம்ப வாசிப்பை ஆழமாகவும் சில சமயங்களில் சிக்கலானதாகவும் மாற்றலாம். ஆனால், இது கடினமான கவிதையாக இருந்தாலும்கூட இதன் முக்கியமான மைய தரிசனம், நம் சொந்த வாசிப்பு அன்றாட மொழியை சந்திப்பதில்தான் தொடங்குகிறது.
ஒரு கவிதை வாசகனாக எனது அனுபவங்களிலிருந்து, என் வாசிப்பை நிதானமாக்கி கொள்ளவும், ஒவ்வொரு சொல்லிலும் கவனமாக இருக்கவும் கற்றுக்கொண்டேன். இது எனக்கு சவாலாக இருந்தது, இப்பவும் அப்படித்தான். நான் எப்போதும் வேகமாக செயல்பட விரும்புகிறவன், நேரடியாக விஷயத்திற்கு அல்லது முடிவிற்கு சென்று , கொலைகாரர் யார் ? அல்லது முக்கிய புள்ளிகள் என்ன? என்பதை அறிய விரும்புவேன். ஆனால் கவிதையை அப்படி வாசிக்க முடியாது. கவிதை வாசிப்பு என்பது என் வாழ்வின் மற்ற தேவைகளைவிட வேறுபட்ட வேகத்தில் வாசிக்கவும் , சிந்திக்கவும் என்னை கட்டாயப் படுத்தும் பயனுள்ள விளைவைக் கொண்டுள்ளது.
சில நேரங்களில், கடினமாக தோன்றும் கவிதைகளைப் படிக்கும் போது, அவை குறியீட்டுப் பொருளில் எழுதப்பட்டதாகக் கருதுகிறோம். ஆனால் கவிதைகளின் சொற்கள் பெரும்பாலும் இசைத்தன்மையையும், உள்ளுணர்வையும் சார்ந்து இருந்தாலும், எப்போதும் சொற்களின் நேரடி அர்த்தமே கவிதையின் தாக்கத்திற்கு முக்கிய பங்குவகிக்கிறது. கவிதையின் முழு சக்தியும், அதன் விவரிக்க முடியாத மர்மமும், சொற்களின் நேரடி அர்த்தங்களையே முற்றிலும் சார்ந்துள்ளது.
பிரஞ்சு சர்ரியலிச கவிஞர் பால் எல்யூர்டின் (Paul Eluard) துல்லியமாக மொழிபெயர்க்க முடியாத கவிதை “La terre est bleue” (“பூமி நீலமாக உள்ளது”). அந்த கவிதையை நான் பிரெஞ்சிலிருந்து நேரடியாக மொழிபெயர்திருக்கிறேன். அதன் தொடக்க வரிகள்:
பூமி ஆரஞ்சு போல நீலமானது
எந்தவகையிலும் பிழையாக ஆகாத சொற்கள் பொய் சொல்லாதவை
அவை இனி உங்களை பாட அனுமதிக்காது
இனி முத்தங்களின் முறை, அவை ஒன்றையொன்று கேட்டுக்கொள்ளட்டும்.
எப்படி ஆரஞ்சை போல நீலமாக இருக்க முடியும்? ஒரு ஆரஞ்சுப்பழம் , அதன் நிறத்துடன் எந்தத்தொடர்பும் இல்லாத, வேறு வகையான அரூபமான நீலத்தன்மையை கொண்டிருக்கிறதா ? அந்த பண்பு எப்படியோ முழுபூமியும் நீலநிறத்தில் இருப்பதை பிரதிபலிக்கிறதா? இப்படி யோசிப்பது கொஞ்சம் பைத்தியக்காரத்தனமானது, அதேசமயம் உற்சாகமூட்டக்கூடியதும்கூட.
பூமி ஆரஞ்சு போல நீலமானது என்பது எவ்வளவு அழகான வரி, ஆனால் எவ்வளவு பொருத்தமற்றது! இந்த வரி ஏற்படுத்தும் பாதிப்பை மிக தீவிரமாக எடுத்துக்கொள்வது வழியாகத்தான் இந்த சர்ரியலிஸ கவிதை கவிதையனுபவத்தை ஏற்படுத்துகிறது. எந்தவகையிலும் பிழையாக ஆகாத சொற்கள் பொய் சொல்லாதவை/ அவை இனி உங்களை பாட அனுமதிக்காது. சொற்கள் பொய்யாகும்போது, அவை பிழைகள் செய்யும்போது மட்டுமே அவை உங்களை பாட அனுமதிக்கின்றன என்று எல்யூர்ட் சொல்வதுபோல் தெரிகிறது. இந்த வரிகளில் உள்ள சொற்கள் பொய்யானவை அல்ல என்ற நம்பிக்கையுடன் கவனமாக வாசிக்கும் வாசகரால்தான் அதன் சாரத்தை உணர்ந்துகொள்ள முடியும்., ஒருவேளை அடிப்படையான பிழையோ, பொய்யோ கருத்தியல் சார்ந்ததாக, பூமியின் நிறம் பற்றிய கவிஞரின் கூற்றுடன் தொடர்புடையதாக இருக்கலாம். அது ஒருவகை அசல்பொய் அல்லது மிகக்கச்சிதமான பிழையாக இருக்கக்கூடும்.
ஒரு சாராம்சமான, அடிப்படை உண்மை. அது ஒரு கணத்தில் வெளிப்பட்டு மறைந்துவிட்டது. ஒரே ஒரு கணம்தான், ஆனால் எல்யூர்ட் அந்த உண்மையை உணர்ந்துகொண்டார். தான் உணர்ந்துவிட்டதை அவர் அறிவார். இப்போது “பூமி ஆரஞ்சு போல நீலமானது” என்ற வரி மட்டும்தான் எஞ்சியிருக்கிறது. தனக்குள்ளேயே முரண்படும் அந்த வரிக்கு எதிர்வினையாற்றுவது மட்டும்தான் இனி அவரால் செய்யக்கூடுவது: இல்லை, இப்படி சொல்வது பிழையில்லை, சொற்கள் பொய் சொல்லாது, நான் உறுதியாக சொல்கிறேன், பூமி உண்மையில் ஆரஞ்சு போல நீலமானது. அடுத்து கவிதையின் மூன்றாவது வரியை நான் எப்படி வாசிக்கிறேன் என்பதை சொல்கிறேன். பூமி ஆரஞ்சு போல நீலமானது என்ற கூற்றை ஐயப்படும் வாசகனிடம் ஆசிரியர் வெளிப்படுத்தும் ஒருவகையான கண்டனம் என்று என் வாசிப்பில் தோன்றுகிறது (சொற்கள் பொய் சொல்வதில்லை, அவை உன்னை இனி பாட அனுமதிக்காது, ஏனெனில் சொற்களை நீ அனுமதிக்கவில்லை). ஒருவேளை அது எல்யூர்டின் சுயகண்டனமாகக்கூட இருக்கலாம், ஒரு கணம் மட்டுமே வெளிப்பட்டு மறைந்துவிட்ட அந்த தரிசனத்தை இழந்துவிட்டதற்காக.
1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி, பூமியை சுற்றிய முதல் மனிதரான விண்வெளி வீரர் யூரி ககாரின் வானொலி வழியாக சொன்ன முதல் வாக்கியம் “பூமி நீலமாக உள்ளது… எவ்வளவு அற்புதம்! என்னால் நம்ப முடியவில்லை!”. எல்யூர்டின் கவிதை எழுதப்பட்டது 1929ல். அதாவது முப்பது ஆண்டுகளுக்கு பின் முதன்முதலாக விண்வெளியிலிருந்து பூமியை பார்க்கும் அனுபவத்தை தீர்க்கதரிசனம்போல இந்த கவிதை முன்னரே வெளிப்படுத்தியிருக்கிறது. ஆங்கில கவிஞர் ஷெல்லி “A Defence of Poetry” என்ற கட்டுரையில் (1821 இல் எழுதப்பட்டது)” கவிஞர்கள் தீர்க்கதரிசிகள் போல , எதிர்காலத்தின் பிரம்மாண்டமான நிழல் நிகழ்காலத்தில் விழுகிறது , கவிஞன் அந்த நிழலை பிரதிபலிக்கும் கண்ணாடி” என்ற எண்ணத்தை எல்யூர்டின் கவிதை நினைவூட்டுகிறது.
“பூமி ஆரஞ்சு போல நீலமாக உள்ளது,” என்பது நம்முள்ளே தாக்கத்தை உருவாக்குவதற்காக எழுதப்பட்ட வரி, தகவல் பரிமாற்றத்திற்காக அல்ல. ஆனால் அந்த தாக்கத்தை உருவாக்குவது முழுமையாக அந்த வரியின் உள்ள சொற்கள் —“பூமி,” “நீலம்,” “போல்,” “ஆரஞ்சு”— இந்த சொற்களை வைத்து, அவற்றின் அர்த்தங்களை புரிந்துகொண்டு, அந்த சொற்களின் புதிய சேர்க்கைகள் எவ்வாறு நம் உணர்வுகளை மறுசீரமைக்கின்றன என்பதை உணர்வதில்தான் உள்ளது.
நவீன் சங்கு
சொந்த ஊர் சிவகங்கை. தற்போது கோவையில் மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார். இலக்கியம் தவிர தத்துவத்திலும், நுண்கலைகளிலும் ஆர்வம் உண்டு.
அருமை
தமிழ் கவிதை இரண்டாயிரம் ஆண்டுகள் மரபுகொண்டதாக இருந்தாலும் கவிதையை எப்படி வாசிப்பது என்பது தேர்ந்த இலக்கியவாதிகளுக்கே இன்னமும் சிக்கலாகத் தான் உள்ளது. இப்பின்னணியில் தமிழ் பொது வாசகர்களையும் பிற துறை அறிஞர்களையும் நாம் எப்படிக் குற்றம்சொல்ல இயலும். அந்த அடிப்படையில் மேத்யூ ஸேப்ருடனின் கட்டுரைகளை அடிப்படைப் பாடமாகவே வைக்கலாம். மொழிபெயர்ப்பாளர் நவீன் சங்குவின் தொடர் பணிக்கு சலாம்.
– ஷங்கர்ராமசுப்ரமணியன்
கவிதை வாசித்தல் (மேடையில் அல்ல) பற்றிய புரிதலுக்கான நல்ல கட்டுரை. .கவிஞர்கள் தீர்க்கதரிசிகள்தான் .நவீன சங்குவுக்கும் அகழ் ஆன்லைனுக்கும் நன்றி .